உலக அளவில் 10 ஆண்டுகளில் வேலையின்மைப் பிரச்சினை 15% அதிகரிப்பு
புது தில்லி, அக். 31: கடந்த 10 ஆண்டுகளில், உலக அளவில், 15-லிருந்து 24 வயது வரையான இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. தெற்கு ஆசியப் பகுதியில் இது 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவிலும் பிராந்திய அளவிலும் நிலவும் வேலையின்மைப் பிரச்சினை குறித்த அறிக்கையை சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:
1995-லிருந்து 2005-வது ஆண்டுக்குள், வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை 7 கோடியே 40 லட்சத்திலிருந்து 8 கோடியே 50 லட்சமாக அதிகரித்துவிட்டது. உலகம் முழுவதும் 30 கோடி இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு 2 டாலர்கள்கூட (ரூ.90) ஊதியம் கிடைக்காத வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றனர். இது வறுமைக்கோடு என்ற வரம்புக்குக் கீழான நிலையாகும். உலகம் முழுவதும் உள்ள மொத்த இளைஞர்களின் எண்ணிக்கையில் இது 25 சதவீதமாகும். இன்றைய இளைஞர்களின் உற்பத்தித் திறன் முழுவதையும் பயன்படுத்த வேண்டுமானால், புதிதாக 40 கோடி கெüரவமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
வளர்ந்த பணக்கார நாடுகளைவிட ஏழை நாடுகளின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அங்கு இளைஞர்களிடையிலான வேலையின்மைப் பிரச்சினையும் தீவிரமாக உள்ளது.
இளம் வயதிலேயே தொழில்நுட்பத் திறனற்ற வேலையில் சேரும் இளைஞர்களுக்கு எதிர்காலத்திலும் சரியான வேலைவாய்ப்புகள் கிடைக்காமலே போய்விடுகின்றன. எனவே, இளம் வயதிலேயே தொழில் திறமையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உலக அளவில் 1995-லிருந்து 2005 வரை, இளைஞர்களின் தொகை 13.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் 3.8 சதவீதம்தான் அதிகரித்துள்ளன. இளைஞர்கள், வயதானவர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள வேலையில்லாதோர் தொகையில், வேலையில்லா இளைஞர்களின் விகிதம் 44% ஆகும்.