உலகம் பேரழிவைச் சந்திக்க இன்னும் பத்தே ஆண்டுகள்தான்!
கே.என். ராமசந்திரன்
ஒரு பரிசலை கொஞ்சமாகச் சாய்த்தால் அது தானாக நேராகி விடும். அதை ஓரளவுக்கு மேல் சாய்த்தால் கவிழ்ந்து விடும். அத்தகைய ஒரு கவிழ் வரம்பை (tipping point்) உலகம் வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் பயமுறுத்தியிருக்கிறார்கள். ஜேம்ஸ் லவ்லாக் (James Lovelock) என்ற விஞ்ஞானி Gaia என்று ஒரு கொள்கையை வெளியிட்டுப் பூமி தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளும் திறமையுள்ள ஓர் உயிரி என்று வர்ணித்தார். அவரே இப்போது நாம் மீள முடியாத வரம்புகளைத் தாண்டிப் போய் விட்டோம் என்கிறார். இதுவரை விஞ்ஞானிகள் தென் துருவத்திலும் வட துருவத்திலும் 2 முதல் 3 கிலோமீட்டர் வரை தடிமனுள்ள நிரந்தரப் பனிப்பாளங்கள் உலகளாவிய வெப்பநிலை உயர்வு காரணமாக மெல்ல மெல்லத்தான் உருகும் என்றும் அவை முழுவதுமாக உருகப் பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகும் என்றும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிரந்தரப் பனிப்பாளத்தில் பல விரிசல்கள் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பனிப்பாளங்களின் மேல்பரப்பில் உருகும் நீர், விரிசல்களில் இறங்கிப் பத்தே விநாடிகளுக்குள் பனிப்பாளங்களுக்கடியில் உள்ள தரைப்பரப்பை எட்டி விடுகிறது. பனிப்பாளம் தரையை விட்டு நீரில் மிதக்கத் தொடங்கி வேகமாகக் கடலை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. கிரீன்லாந்தின் பனியாறுகள் இந்த விதமாகக் கடலை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டன. அட்லாண்டிக் கடலுக்குள் விழும் பனியாறுகளின் பருமம் 1996-ஆம் ஆண்டிலிருந்த ஆண்டுக்கு 100 கன கிலோமீட்டர் என்ற அளவிலிருந்து 2005-இல் 220 கன கிலோமீட்டராக உயர்ந்திருக்கிறது. சைபீரியாவின் வட பகுதியிலும் பனியாறுகள் அதிக அளவில் உருகத் தொடங்கியுள்ளன. இங்கிலாந்திலுள்ள வனவிலங்குகள் வளிமண்டல வெப்பநிலை உயர்வு காரணமாக வடக்கு நோக்கிக் குடிபெயர்ந்து கொண்டிருக்கின்றன. வழக்கமாக உறைந்து போகும் பல காயல்களில் கப்பல் போக்குவரத்து சாத்தியமாகும் அளவுக்கு நீர் நிறைந்திருக்கிறது. துருவப் பனிமலைகள் கண்ணெதிரே காணாமற் போய்க் கொண்டிருக்கின்றன.
துருவப் பனிப்படலங்கள் தம் மீது விழும் சூரிய வெப்பத்தில் 80 சதவீதம் வரை வானில் திருப்பியனுப்பி விடுகின்றன. கடல் நீர் 7 சதவீத வெப்பத்தைத்தான் பிரதிபலிக்கிறது. பனிப்படலங்கள் பரப்பு குறைவதும் கடல்களின் பரப்பு அதிகமாவதும் இவ்வாறு திருப்பியனுப்பப்படும் வெப்பத்தைக் குறைத்து உலகளாவிய வெப்பநிலையை அதிகமாக்கும்.
துருவப்பகுதிகளின் நிரந்தரப் பனிப்பாளங்களில் சுமார் 450 பில்லியன் டன் அளவுக்குக் கரிம வாயுக்கள் சிக்கியுள்ளன. வட சைபீரியாவின் பனிப்பாலைகளில் மீதேன் விரைவாக வெளியே கசிந்து வருவதாக அலாஸ்கா பல்கலையைச் சேர்ந்த கேட்டிவால்டர் (Katey Walter) கண்டுபிடித்திருக்கிறார். கரிம வாயுக்கள் பசுமைக்குடில் வாயுக்கள். அவை உலகளாவிய வெப்பநிலையை அதிகமாக்கும்.
மண்ணிலும் கிருமிகள் மீதேன் வாயுவை உற்பத்தி செய்கின்றன. தரை வெப்பநிலை உயர்ந்தால் அவ்வாறு உருவாகும் மீதேனின் அளவும் அதிகமாகும். பனிமலைகள் உருகினால் அவற்றிலிருந்து ஏராளமான பசுமைக்குடில் வாயுக்கள் வெளிப்பட்டுப் பூமியின் சராசரி வெப்பநிலையை மேலும் உயர்த்தும். இது ஒரு நச்சுச் சூழலாக மாறி விடும்.
உலகளாவிய வெப்பநிலை 3 செல்சியஸ் டிகிரி உயர்ந்தால் உலகிலுள்ள காடுகளில் பாதிக்கு மேல் அழிந்து சிதைந்து கரிம வாயுக்களை வெளியிடத் தொடங்கும். இன்றிலிருந்து உடனடியாகப் பசுமைக்குடில் வாயுக்களை வெளிப்படாமல் தடுத்து நிறுத்தினால்கூட வளிமண்டல வெப்ப நிலையில் 2 செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பட்டு வரும் வெள்ளம், வறட்சி போன்ற உற்பாதங்கள் பத்தாண்டுகளுக்கொரு முறை நிகழத் தொடங்கும். இந்த நிலை நீடித்தால் துருவங்களில் முதலைகளும் நீர் யானைகளும் வசிக்கத் தொடங்கி விடும். பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் கொதித்து ஆவியாகிக் கொண்டிருக்கும். 135 கோடியாண்டுகளுக்கு முன் பூமியின் நிலை அப்படித்தான் இருந்தது. இன்று வெள்ளிக்கிரகத்தில் அதேபோன்ற நிலை நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் மீதேனும் கரியமில வாயுவும்தான். அவை ஓரளவுக்குச் சூரிய வெப்பத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு உலகம் ஒரேயடியாகக் குளிர்ந்து போய்விடாமல் செய்கின்றன என்றாலும் அதுவே அளவுக்கு மீறும் போது ஆபத்தாகி விடுகிறது.
1765-ஆம் ஆண்டில் ஜேம்ஸ்வாட் நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்துத் தொழிற்புரட்சியைத் தொடங்கி வைத்தது முதல் கரியையும் எண்ணெயையும் எரித்து மனித இனம் வளி மண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களைப் பரப்பத் தொடங்கிவிட்டது. பீட்டர் காக்ஸ் (Peter Cox்) என்ற ஆங்கிலேய வானிலை வல்லுநர் ஊர்திகளும் விமானங்களும் மின்னுற்பத்தி நிலையங்களும் வெளியிடும் கரியமில வாயுவை வளிமண்டலம் சமாளிக்க முடியாமல் போகிற நிலை இன்னும் பத்தே ஆண்டுகளுக்குள் வந்துவிடலாம் என்கிறார். தற்போது மனித நடவடிக்கைகளால் உருவாக்கப்படும் கரிம வாயுக்களில் கிட்டத்தட்டப் பாதியளவைத் தரையும் தாவரங்களும் கடலும் உட்கவர்ந்து கொள்கின்றன. வெப்பநிலை உயர்ந்தால் அவை அந்த வாயுக்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிடும். சில விநாடிகளில் பல பில்லியன் டன் கரிம வாயுக்கள் கடலிலிருந்து பொங்கி வெளிப்பட்டு வளி மண்டலத்தில் கலந்து விட முடியும். இதேபோன்ற ஒரு சம்பவம் 5.5 கோடியாண்டுகளுக்கு முன் நிகழ்ந்து பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முற்றாய் அழிந்து போயின.
இந்த நிலைமைச் சீரழிவைத் தடுக்கப் பலரும் பல வழிகளைப் பரிந்துரைக்கிறார்கள். வானில் பல கோடி டன் அளவுக்குக் கந்தக டையாக்சைடைப் பரப்பினால் அது சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்துத் திருப்பியனுப்பி விடும் என்று சிலர் யோசனை கூறியிருக்கிறார்கள். பலூன்கள் மூலம் அவ்வாறு பரப்பலாம். ஆனால் அது பெரும் செலவு பிடிக்கிற விஷயம். அத்துடன் அது ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தி விடக் கூடும்.
விண்வெளியில் சூரியனுடைய நிறையீர்ப்பும் பூமியின் நிறையீர்ப்பும் சமமாக உள்ள இடத்தில் இரண்டடி அகலமுள்ள லென்சுகளைக் கோடிக்கணக்கில் பரப்பிச் சூரிய வெப்பத்தில் ஒரு பகுதி பூமிக்கு வராமல் திசைதிருப்பி விடலாம் என ஒரு யோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இது தொழில்நுட்பச் சிக்கல்கள் நிறைந்த நடவடிக்கை.
வானில் கடல்நீரைப் பீய்ச்சி ஆவியாக்கி நிறைய மேகங்கள் உருவாகும்படி செய்தால் அவை அதிக அளவில் சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்துத் திருப்பியனுப்பி விடும் என்று ஒரு கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தகைய மேகங்கள் சில நாட்களே நீடிக்கும். கடல்நீரைத் தொடர்ந்து வானத்தில் பீய்ச்சிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்.
கடலிலும் தரையிலும் ஏராளமான பிரதிபலிப்புப் பொருள்களைப் பொருத்தி ஓரளவு வெப்பத்தைத் திருப்பியனுப்பலாம். வெள்ளையான பிளாஸ்டிக் நுரைப்பலகைகளைக் கடல்களிலும் பாலைவனங்களிலும் பரப்பி வைக்கலாம் என்று சிலர் யோசனை சொல்லுகிறார்கள். ஆனால் அவற்றின் வெள்ளை நிறம் அதிக காலம் நீடிக்காது. அவற்றின் செயல்திறன் குறைந்துவிடும்.
கடல்களில் இரும்புச் சத்தைக் கலந்தால் பைட்டோபிளாங்டன்கள் என்ற நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகிக் கரியமில வாயுவை உட்கவர்ந்து கொள்ளும். அவை இறந்ததும் கடலடித் தரையில் போய்க் குவிந்துவிடும். அதனால் கரியமில வாயு பல நூற்றாண்டுகளுக்கு அங்கேயே தங்கியிருக்கும் என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அதை நம்ப முடியாது.
நமது வாழ்க்கை நடவடிக்கைகளை உடனடியாக மாற்றிக்கொண்டு பசுமைக்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதைத் தடுக்க வேண்டும். அப்படிச் செய்யத் தயங்கினால் உலகம் இன்னும் பத்தே ஆண்டுகளில் பேரழிவைச் சந்திக்கும். ஏழை நாடுகளுக்குப் பணம் கொடுத்து அவற்றிலுள்ள காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தப் பணக்கார நாடுகள் முன்வர வேண்டும் என காக்ஸ் கூறுகிறார்.