நிலைமையை மேலும் மோசமாக்கும் எந்த செயலையும் செய்ய வேண்டாம் என்று வடகொரியாவிற்கு, சீனாவும், பிரான்ஸும் எச்சரிக்கை
வடகொரியாவின் அண்மைய அணுச் சோதனையை அடுத்து, நிலைமையை மேலும் மோசமடையச் செய்யக் கூடிய எதனையும் வடகொரியா செய்யக் கூடாது என்று, சீனத் தலைநகர் பீஜிங்கில் அடுத்த வாரம் சந்திக்கவுள்ள சீனாவும், பிரான்ஸும் எச்சரித்துள்ளன.
வடகொரியா மேலும் ஏதாவது தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபட்டால், அந்த நாட்டுக்கு எண்ணெய் மற்றும் தானியங்களை வழங்குவதை தான் நிறுத்தலாம் என்று சீனா கூறியுள்ளது.
வடகொரியாவால் செய்யப்படக் கூடிய இரண்டாவது அணுச் சோதனை, ஒரு அதீத பொறுப்பற்ற செயலாக இருக்கும் என்றும், அதன் மூலம் அந்த கம்யூனிஸ நாட்டுக்கு எதிராக மேலும் சர்வதேச நடவடிக்கைக்கு அது வழி செய்யும் என்றும் பிரான்ஸ் கூறுகிறது.
தன் மீதான ஐக்கிய நாடுகள் சபையினால் விதிக்கப்பட்ட தடையை, ஒரு போர் அறிவிப்புக்கு நிகரானது என்று வடகொரியா வர்ணித்துள்ளது.
அத்துடன், தற்போது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நிலையில் தான் இனி விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் அது கூறியுள்ளது.