காங்கிரஸில் காத்திருக்கும் இளந்தலைவர்கள்
நீரஜா சௌத்ரி
தமிழில்: லியோ ரொட்ரிகோ
காங்கிரஸ் கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பதவிகளைப் பெறுவதற்கு முன், இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும்; இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்; இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார் அக் கட்சித் தலைவர் சோனியா காந்தி.
ஆனால் 2004-ல் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த இளைஞர் படையைச் சரியான முறையில் கட்சி பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதைப் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளை ஏற்க புதிய தலைமுறை தயாராகிவிட்டதாகக் கூறப்பட்டபோதிலும், எதிர்பார்த்தபடி கட்சி அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
- ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட்,
- முரளி தேவ்ராவின் மகன் மிலிந்த் தேவ்ரா,
- ஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாத்,
- ஜிண்டாலின் மகன் நவீன் ஜிண்டால்,
- ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்,
- ஹரியாணா முதல்வர் பி.எஸ். ஹுடாவின் மகன் ரந்தீப் ஹுடா,
- ஜோதிர் ஆதித்ய சிந்தியா… என பலரும் மூத்த தலைவர்களின் வாரிசுகளாகவே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தகுதியும் திறமையும் உடையவர்களாகவே கருதப்படுகின்றனர்.
மூத்த தலைவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் தலைமுறையின் கையில் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்று வாதிடப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இளைய தலைமுறையினருக்கு இடம் அளிக்கப்படவில்லை என்று பத்திரிகைகள் விமர்சித்தபோது, ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர்களைக் கருத்தில் கொண்டே அவை குறிப்பிடப்பட்டன.
இப்போதைய மத்திய அமைச்சரவையின் சராசரி வயது 64 ஆக இருக்கக்கூடும். ஆனால் நாட்டு மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் 35 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்கும்போது, அதை அரசு பிரதிபலிக்க வேண்டாமா என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அனுபவசாலிகளோடு இளம் தலைமுறையினரையும் கொண்டதாக அமைச்சரவை இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இளைஞர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினால், “பிரச்சினைகளைக் கையாள்வதற்கான பக்குவம்’ அவர்களுக்கு இருக்காது என்று எதிர்ப்புக் குரல்கள் எழக்கூடும். கட்சியில் அனுபவம் மிக்க தலைவர்கள் பலர் இருக்கும்போது அவர்களது அனுபவத்தை ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது?
முதல் முறையாக எம்.பி. ஆகியிருப்பவர்களுக்கோ, 30 வயதுகளில் இருப்போருக்கோ அமைச்சர் பதவி கொடுக்காததைப் பெரும் தவறு என்று கூற முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பொழுதே, ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தார் மன்மோகன் சிங். ஆனால், துதிபாடிகளைக் கொண்ட ஒரு கட்சியில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது சரியான நடவடிக்கைதான். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால், அது அரசு நிர்வாகத்தில் போட்டி அதிகார மையத்தை உருவாக்குவதில் போய் முடிந்திருக்கும்.
இளம் எம்.பி.க்கள் பகிரங்கமாக என்ன பேசினாலும், உள்ளூர அவர்களுக்கு வருத்தம்தான். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சில கேள்விகளை அவர்கள் எழுப்புகின்றனர். மிகுந்த தயக்கம் காட்டிய பிரணப் முகர்ஜியை பாதுகாப்புத் துறையிலிருந்து வெளியுறவுத் துறைக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? காங்கிரஸ் வசமிருந்த கேரளம் கைநழுவிப் போய்விட்டது; அதற்குப் “பரிசா’க ஏ.கே. அந்தோனிக்கு அமைச்சர் பதவியா என்று அவர்கள் கேட்கின்றனர். ராணுவத்துக்குப் பலநூறு கோடி மதிப்புக்குத் தளவாடங்கள் வாங்கவிருக்கும் நிலையில், கை சுத்தமானவர் என்பதால் பாதுகாப்புத் துறை அந்தோனியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினால், 40-க்கு மேற்பட்ட அமைச்சர்கள் குழுவுக்குத் தலைமை வகித்துவருபவரான பிரணப் முகர்ஜிக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும் அது.
வட இந்திய மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் வரவிருக்கும் நேரத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த மூவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டிருப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை.
2004-லேயே அந்த இளம் எம்.பி.க்களை உத்தரப் பிரதேசத்தில் களம் இறக்கி, கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு, தமது திறமையை நிரூபிக்குமாறு அவர்களைப் பணித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அது காங்கிரஸýக்கு பலன் அளிப்பதாக இருந்திருக்கும். 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இப்போதுகூட அவர்களைக் களத்தில் இறக்கலாம்.
அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் அளிக்காவிட்டாலும்கூட, கட்சிப் பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தி இருக்கலாம். ஹிந்தி பேசும் மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தவில்லையெனில், அடுத்து வரும் தேர்தலில் முக்கிய இடத்தை காங்கிரஸ் பிடிக்க முடியாது என்பது திண்ணம்.
தமிழில்: லியோ ரொட்ரிகோ