1993 மும்பை குண்டு வெடிப்பை பற்றிய சினிமாவை வெளியிட நீதிமன்றம் அனுமதி
புது தில்லி, அக். 1: மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “பிளாக் ஃபிரைடே’ (கறுப்பு வெள்ளி) என்னும் திரைப்படத்தைத் திரையிடுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், “”மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுவருகிறது. அத் தீர்ப்பு முழுவதும் அளிக்கப்பட்ட பிறகுதான் அத் திரைப்படத்தை வெளியிட வேண்டும். எனினும், குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் அறிவிக்கும் வரையில் காத்திருக்கத் தேவையில்லை” என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
மும்பை வெடிகுண்டுச் சம்பவத்தைக் கருவாகக் கொண்டு எஸ். ஹுசைன் ஜைதி என்பவர் ஒரு புத்தகத்தை எழுதினார். அந் நூலைத் தழுவி, “கறுப்பு வெள்ளி’ (“பிளாக் ஃபிரைடே’) என்ற திரைப்படத்தை “மிட் டே மல்டிமீடியா’ என்ற நிறுவனம் தயாரித்தது.
ஆனால், அத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மும்பை வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முஸ்தபா மூஸா தாரனி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
“”மும்பை வெடிகுண்டு வழக்கு விசாரணையில் இருக்கும்போது அத் திரைப்படத்தை வெளியிட அனுமதித்தால், அந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதியின் கருத்தை அது பாதிக்கக்கூடும். அதனால் எனக்கு பாதகம் ஏற்படக்கூடும். எனவே, அதை வெளியிட அனுமதிக்கக் கூடாது” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
அதையடுத்து, அவ் வழக்கு முடியும் வரையில் அத் திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் படத்தைத் தயாரித்த நிறுவனம் மேல் முறையீடு செய்தது. அதை நீதிபதிகள் பீ.பி. சிங், அல்தமஸ் கபீர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. படத்தைத் திரையிட அனுமதி அளித்த அதே நேரத்தில், மேற்சொன்ன நிபந்தனைகளையும் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
படத்தை வெளியிடத் தடை கோரி வழக்கு தொடர்ந்த முஸ்தபா மூஸô குற்றவாளி என்று மும்பை தடா நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத் தக்கது