வங்கதேச தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் ராஜினாமா
![]() |
![]() |
வங்கதேசம் |
வங்காளதேசத்தில் பிரதான அரசியல் கூட்டணிகளில் ஒன்றின் பல மாத கால அழுத்தத்திற்குப் பிறகு அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களும் தங்களது பதவியினை ராஜினாமா செய்து விட்டார்கள்.
இந்த ஐந்து பேரும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக இருக்கும் வரை தாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதான கூட்டணி ஒன்றின் தலைவியும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இன்றைய ராஜினாமாக்கள், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு தேர்தல் ஆணையத்தின் கீழ் பொதுத் தேர்தல்கள் நடைபெற வழி வகை செய்யும். வாக்குப் பதிவில் மோசடி செய்தனர் என்கின்ற குற்றச்சாட்டை இந்த ஐந்து ஆணையர்களும் எதிர்நோக்கியிருந்த நிலையில், ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காளதேசத்துக்கு தேர்தல் ஜனநாயகம் பொருந்தாது என்கிறார் அந்த நாட்டு இராணுவத் தளபதி
![]() |
![]() |
வங்காளதேசத்தை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கம் இல்லை என்கிறது இராணுவம் |
வங்காளதேசத்தில் மோசமான நிர்வாகத்தைச் சமாளிப்பதற்கு புதிய பாணியிலான ஜனநாயகம் ஒன்று தேவை என்று அந்த நாட்டின் இராணுவத் தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் மூயின் அஹ்மட் கூறியுள்ளார்.
தேர்தல் மாதிரியிலான ஜனநாயகத்தில் ஊழல் பரவி, அதனால் ஆட்சி பாதிக்கப்படும் என்று கூறிய அவர் அப்படியான ஒன்றை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இராணுவ ஆதரவிலான இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், அங்கு ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குறித்த கால எல்லை குறித்துக் கருத்துக் கூற அவர் மறுத்துவிட்டார்.