Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 19th, 2006

Vidharbha Farmers Suicides – Plight of Indian Agriculture

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது

வியர்வை சிந்தும் இந்திய விவசாயிகள்
வியர்வை சிந்தும் இந்திய விவசாயிகள்

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவின் மத்திய மற்றும் தென் மாநிலங்களில் உள்ள பருத்தி விவசாயிகள் பலர் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பஞ்சம், விவசாயத்துக்கான அரசின் மானியம் குறைக்கப்பட்டது, சந்தை பொருளாதார கொள்கைகள் காரணமாக இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் விவசாயிகளின் பொருளாதாரப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.

வேளான் இடுபொருட்களை வாங்க பல விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் இது விவசாயிகளை கடன் சுமையில் வீழ்த்திவிடுகிறது. சிலர் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியாரை நாடுகின்றனர். இவர்கள் அதிக அளவு வட்டி வசூலித்து விவசாயிகளை பெரும் கடன் சுமையில் ஆழ்த்திவிடுகின்றனர்.

Posted in Agriculture, bank, Commerce, Cotton, Economy, Farmers, India, Loans, peasant, SNEHA, Status, subsidies, Suicide, Vidharbha | 1 Comment »

Indian Economic Growth : Analysis by S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

வளமையே, வா!

எஸ்.கோபாலகிருஷ்ணன்

அறிஞர் எட்வர்டு லூசி (Edward Luce்) தனது சமீபத்திய புத்தகத்தில் (Inspite of the Gods) இரு கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

ஒன்று, “”இந்தியர்கள் பொதுவாக வெற்றிக்கனியை எட்டிப் பிடிப்பதற்கு முன்னரே, வெற்றி விழா கொண்டாட முற்படுவார்கள்.”

இரண்டு, “”இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தானாக இயங்குவதும் (automatic) அல்ல; அதே நேரம், உத்தரவாதம் கொண்டதும் அல்ல!”

அவரது கூற்றை மறுப்பதற்கில்லை. எனினும், ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக நிகழும் பொருளாதார முன்னேற்றங்கள், நிச்சயமாக நமக்கு மனநிறைவு அளிக்கக்கூடியவையே.

நமது தொழில் உற்பத்தி, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 12.4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. முதல் முறையாக இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. இதுவரை சேவைத் துறை வளர்ச்சியின் பயனாகவே, ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 8 சதவீதத்தைத் தொட்டது. இப்போது, சேவைத்துறை மட்டுமல்லாமல் தொழில் உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சி இரண்டு மடங்காக உயருவதும் சாத்தியமே.

இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்; இந்த இரட்டை இலக்க தொழில் உற்பத்தி வளர்ச்சியில், தகவல் தொழில் நுட்பத் துறையோ, பி.பி.ஓ. எனப்படும் கணினி சார்ந்த சேவையோ சேர்க்கப்படவில்லை. அவை முழுக்க, முழுக்க சேவைத்துறையின்கீழ் வருகின்றன.

இங்கு குறிப்பிடப்படும் தொழில் உற்பத்தி வளர்ச்சி என்பது மூலதனப் பொருள்கள், கட்டமைப்புத் துறை, கார், டிரக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள், உருக்கு, சிமெண்ட், ஜவுளி, மருந்துப் பொருள்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சர்க்கரை, சோப்பு என எண்ணற்றப் பொருள்களின் உற்பத்தியை அடிப்படையாக கொண்டுள்ளது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில் ஜவுளி. கோட்டா முறை கடந்த ஆண்டு ரத்து ஆன பின், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அபரிமித வளர்ச்சி தொடரும் என்பது மட்டுமல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயரும் என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

சிறிய கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகன ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், நலிந்த நிலையில் இருந்த காகிதம் மற்றும் காகிதப் பொருள்கள் உலக அளவில் போட்டியை எதிர்கொண்டு, சந்தையை பிடிக்கும் வகையில் நவீனமடைந்துள்ளன; வலுவடைந்துள்ளன. நம் நாட்டு மின் விசிறிகள், சீன மின் விசிறிகளைப் பின்னுக்குத் தள்ளி, அதே விலையில், “வால்-மார்ட்’க்கு விற்பனை ஆகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

டாடா ஸ்டீல் தங்கள் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. ஆனால், அவர்களது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது என்பது தனிக்கதை. சுரங்கம், மின் உற்பத்தித் துறைகள் 13 சதவீதத்துக்கு மேல் முன்னேற்றம் அடைந்துள்ளன.

ஏற்றுமதியும், உள் நாட்டுத் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளன. ஏற்கெனவே, பிரபலமாக உள்ள நிறுவனங்கள், மற்றும் தொடர்ந்து வெற்றிக் கதைகள் படைக்கும் நிறுவனங்களைப் பற்றி மட்டும் நாம் இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, கடந்த காலங்களில் தள்ளாடிக் கொண்டிருந்த, சற்றே நலிவடைந்திருந்த தொழில் நிறுவனங்களும் தலை நிமிரத் தொடங்கி உள்ளன என்பதுதான் கவனிக்கத்தக்கது. அடிப்படை ரசாயனப் பொருள்கள், மருந்துகள், பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி 27.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பிட்ட கால கட்டத்தில், வங்கிகளின் கடனுதவி தொழில்துறைக்கு 31 சதவீதம் உயர்ந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையும் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. நாட்டின் தனி நபர் சேமிப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்துடன், இதில் நடுத்தர மக்களின் பங்களிப்பு பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.

இன்றைய சூழலில், பொருளாதார வளர்ச்சியின் பயனாக, வேலை வாய்ப்பு அதிகரிப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. உதாரணமாக, வங்கி மற்றும் நிதித்துறை சேவை அமைப்புகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் என்னதான் வளர்ந்தாலும், இத்துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. மாறாக, தொழில்நுட்ப மேம்பாட்டின் விளைவாக 1.31 லட்சம் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், அதே ஆய்வு தரும் இன்னொரு செய்தி ஆறுதல் அளிக்கக்கூடியது. கட்டுமானத்துறை, தகவல் தொடர்பு, போக்குவரத்து, தொழில்கூட உற்பத்தி, மின்சாரம், மற்றும் இதர சேவைத்துறைகளில் வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும். மொத்தத்தில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேற்கூறிய துறைகளில் 10 லட்சம் புதிய வேலைகள் உருவாகும் என்பது ஆய்வறிக்கையின் சாரம். ஆனால், ஆண்டுதோறும் 86 லட்சம் புதிய பட்டதாரிகள் வேலை தேடி சந்தையில் நுழைகிறார்கள் என்பதுதான் சோகம்.

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி இவ்விதம் இருக்க, தனி நபர்களின் முயற்சியின் பயனாக விளையும் பொருளாதார வளர்ச்சி, உலக அளவில் தனி நபர்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுப்பதாக அமைந்துள்ளது. பன்னாட்டுத் தர நிர்ணய அமைப்புகளின் ஆய்வுப்படி, இந்தியாவில் தனி நபர் கோடீஸ்வரர்களின் (நான்கு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளவர்கள்) எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது!

உலக அளவில் பிரபலமாக “கார்டியன்’ நாளேட்டின் பொருளாதார ஆசிரியர் Larry Elliot தனது சமீபத்திய கட்டுரையில், அமெரிக்க டாலரின் மதிப்பு எப்படி இறங்குமுகத்தில் உள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். அவர் மேலும் கூறுகிறார்: “”19-வது நூற்றாண்டில் பிரிட்டன் ஒரு மாபெரும் பொருளாதார சக்தியாகத் திகழ்ந்தது. அப்போது அதன் நாணயமான ஸ்டெர்லிங் உச்சத்தில் இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. அதேபோல், அமெரிக்கா தன் சக்திக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க நிலை இப்படியே நீடிக்குமானால், 2050-ம் ஆண்டுக்குள், நிச்சயமாக சீனாவும் அனேகமாக இந்தியாவும், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாகத் திகழக்கூடும்’.

இந்தச் செய்தியை பார்த்துவிட்டு எட்வர்ட் லூசி கூறுவதுபோல் உடனே இந்தியர்கள் வெற்றி கொண்டாடப் போவதில்லை. ஆனால், அவரே ஒப்புக் கொள்வதுபோல், இந்தியப் பொருளாதார முன்னேற்றம் தானாக இயங்குவதோ  அல்லது, நிச்சயம் நிகழும் (guaranteed) என்றோ சொல்லுவதற்கில்லை. இடையே எத்தனையோ தடைக்கற்கள் உள்ளன. தொழில் சுழற்சியில் மேலே ஏறும்போது, கீழே இறங்குவதும் இயல்பே. கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இத்திசையில் ஆற்றிட வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. நமது துறைமுகங்களில், விமானக் கூடங்களில் கிடைக்கும் வசதிகள் மேலும் மேம்பட வேண்டியது அவசியம். நெடுஞ்சாலைகள், பாலங்கள், மின்சாரம் என பல கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

இதையே இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். இத்தனை குறைபாடுகள் இருந்தும், இந்த வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. தடைக் கற்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டால், வளர்ச்சியின் வேகம் மேலும் அதிகரிக்கும் அல்லவா? இந்த உணர்வுடன் செயல்படுவது, வெற்றிக்கனியைப் பறிப்பதற்கு முன்பே கொண்டாடுகிறோம் என்றாகாது. இன்னும் கொஞ்சம் “தம்’ பிடித்து “எம்பினால்’ புதிய உயரங்களைத் தொட்டு விடலாம் என்ற தன்னம்பிக்கையோடு நூறு கோடி மக்கள் செயல்படுவது நல்லதுதானே?

Posted in Agriculture, Analysis, Automobile, BPO, Commerce, Dinamani, Economy, Edward Luce, Employment, Exports, Finance, GDP, Handlooms, Imports, Industrial Growth, Inspite of the Gods, Loans, Op-Ed, Outsourcing, S Gopalakrishnan, Service sector | Leave a Comment »

DMK Government’s undemocratic collusion with election commission

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

தீதும் நன்றும் பிறர் தர வாரா

தமிழகத்தில் மிகவும் பரபரப்புடன் நடந்து முடிந்த மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று, தன் மணிமகுடத்தில் மீண்டும் அந்த வைரத்தைப் பதித்துக்கொண்டது.

சுமார் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது மட்டுமன்றி, முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இப்போது சுமார் 7 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆறு மாதங்களுக்கு முன் 35 ஆயிரம் வாக்குகள் பெற்ற அதிமுக இத்தேர்தலில் 19,909 வாக்குகளே பெற முடிந்துள்ளது. ஆனால், தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. கடந்த தேர்தலைவிட சுமார் 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று, மொத்தம் 17 ஆயிரம் வாக்குகளுடன் அதிமுகவை மிக நெருங்கி, 3-வது இடத்தில் வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இதே நிலைதான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளிலும் தொடர்கிறது.

மதுரை மாநகரின் வெற்றி திமுகவுக்குப் பெருமை சேர்த்தாலும், சென்னை மாநகராட்சித் தேர்தலில் வாக்குப் பதிவை நிறுத்தி வைக்கும் அளவுக்கு நடந்த வன்முறை, அதன் பெருமையைக் குறைப்பதாய் அமைந்துவிட்டது.

உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளுங்கட்சி விரும்பாத சம்பவங்களை சில அதிகாரிகள் பூசிமெழுகுவது வழக்கமான ஒன்றுதான். இது வாக்குச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜெண்ட்டுகள் என்ற அளவில் முடிந்து போகும்.

2001-ல் அதிமுக ஆட்சியில் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலிலும் கள்ளவோட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது தகராறு என பல சம்பவங்கள் இருந்தன. இருப்பினும் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினரும், எந்தக் கூட்டணியிலும் இல்லாத பாஜக, தேமுதிகவினரும் ஒட்டுமொத்தமாகத் திமுகவைக் குற்றம் சாட்டியதைப் போன்ற சம்பவம் இதுவே முதல்முறை.

சென்னை மாநகர முந்தைய மேயரும் இன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அப்பதவியிலிருந்து விலக அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மீதான கோபத்தின் வெளிப்பாடுதான்-ஓர் இடத்தில் கூட அதிமுக வந்துவிடக்கூடாது என்ற தீவிரமும், அதைத் தொடர்ந்த வன்முறையும் எனக் கருதப்படுகிறது. திமுகவின் கோபம் நியாயமானதாக இருக்கலாம். அதற்காக வன்முறையை நியாயப்படுத்த முடியாது.

வன்முறைகள் தலைகாட்டியவுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். “முரசு சின்னத்தை முடக்கிவிட்டீர்கள்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதும் உடனே எச்சரிக்கை விடுப்பதில் காட்டிய ஆர்வத்தை, வன்முறை நடந்த அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மறுதேர்தலுக்கு உத்தரவிட்டிருந்தால் இன்று நீதிமன்றத்தில் குட்டுப்படும் நிலைமை ஏற்பட்டிருக்காது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக, அதிமுக இரு தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்: “தீதும் நன்றும் பிறர் தர வாரா.’

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தன. அதேபோன்ற நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் செய்யத்தவறி விட்டது. மக்களுக்கு, குறிப்பாக ஊரக மக்களுக்கு, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இதுபோன்ற செயல்களால் குறைந்து போகும்.

தமிழகத்தில் நடந்த பிரசாரங்களில் மத்தியில், மாநிலத்தில், உள்ளாட்சியில் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் முழுமையாகத் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. இதுவே ஒரு பொதுவான ஜனநாயகத்தன்மைக்கு விரோதமானது. இது எதிர்மறை அரசியலாகும். யார் ஆட்சி செய்தாலும் அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையான நோக்கம்.

Posted in anti-people, autocrat, Chennai, Chief Minister, civic poll, Democracy, Dinamani, DMK, Editorial, election commission, Elections, Karunanidhi, Local Body, Madras, Madurai, MK Stalin, Polls, Tamil Nadu, Violence | Leave a Comment »

Nobel prize for Yunus hailed as anti-poverty boost

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

சுய உதவிக் குழுக்களின் தந்தை

இரா.நாறும்பூநாதன்

கடைசியில், சகலவிதத்திலும் தகுதி பெற்ற இந்த மனிதருக்கு உலகின் உயரிய விருது அளிக்கப்பட்டிருப்பதை எண்ணி இந்தியர்களாகிய நாமும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். “சுய உதவிக் குழுக்களின் தந்தை’யாகக் கருதப்படக்கூடிய முகம்மது யூனுஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதை இந்தியாவின் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்கள் பரவசத்துடன் வரவேற்பதைப் பார்க்கும்போது இப்படிக் கூறுவதே சரியாக இருக்க முடியும்.

1976-ல் பங்களாதேஷில் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, மிகக் குறுகிய காலத்தில் 1986-களுக்குப் பின்பாக இந்தியாவில் படிப்படியாகத் துவங்கி உலகிலேயே அதிக சுய உதவிக் குழுக்களைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது, அந்தப் பொருளாதார நிபுணரின் தொலைநோக்குப் பார்வை நுட்பமாகவும், சரியானதாகவும் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

சிட்டகாங் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த முகம்மது யூனுஸுக்கு 1974-ல் ஏற்பட்ட வங்கப்பஞ்சம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள், குறிப்பாக பெண்களின் அவல நிலை, கந்துவட்டிக் கொடுமைகளில் சிக்கித்தவிக்கும் நிலையை நேரில் பார்த்தார். மருந்தின்றி நோயில் அவஸ்தைப்படும் ஒரு வயதான மூதாட்டியைக் காப்பாற்றக்கூட அருகில் உள்ளவர்கள் முயலாத இயலா நிலையைப் பார்க்க நேரிட்டது.

அந்தத் தெருவில் வசித்த பெண்களிடம் மிகச் சொற்பமான தொகையை வசூல் செய்து, அந்த மூதாட்டியை உயிர் பிழைக்க வைத்து அந்தப் பெண்கள் சுயமாகத் தொழில் துவங்க சிறிய தொகையைக் கடனாகக் கொடுத்தார் யூனுஸ். தங்களின் சிறிய பங்களிப்பில் ஓர் உயிரைக் காப்பாற்ற முடிந்ததையும், தங்களுக்கு அளிக்கப்பட்ட சிறிய பொருளாதார உதவியைப் பற்றிக் கொண்டு அந்தக் கடனை சிறிது சிறிதாக அடைக்க இயலும் என்ற நம்பிக்கையையும் இந்தச் சிறிய நிகழ்ச்சி அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில், ரொம்ப நேர்மையாக அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்திய விதம் யூனுஸுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்களுக்கு கடனுதவி அளிக்க அரசு வங்கிகள் மறுத்த நிலையில், 1976-ல் கிராமிய வங்கியை பெண்களுக்காகவே துவக்கினார். பெண்களின் சுய உதவிக் குழுக்களை நிறுவி, அவர்களது வாராந்திர சேமிப்பை வங்கியில் செலுத்தச் செய்து, அதன் அடிப்படையில் கடன் வழங்க ஏற்பாடு செய்தார். பங்களாதேஷ் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உருவாக்கப்பட்ட பின்னணியில், யுனெஸ்கோ மூலம் சுய உதவிக் குழுக்கள் பற்றிய மதிப்பீடு உலக அளவில் எடுத்துச் செல்லப்பட்டு, கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இவை செயல்படும் என்பதைக் கண்டறிந்து ஆசிய, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கும் இந்த சிந்தனை பரவியது.

1986களுக்குப் பின்பு இந்தியாவில் சுய உதவிக் குழுக்கள் உருவாகத் தொடங்கின. ஆரம்பத்தில் எந்த அரசியல் கட்சியும் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இதன் அபரிதமான வளர்ச்சி, பெண்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், ஒரே மாதிரியாக சீருடையில் 20 பேர், 30 பேர் உள்ளூர் பிரச்சினைகளை, நகராட்சிகளில், மாநகராட்சிகளில் மொத்தமாக முறையிட்டபோது, அவசர அவசரமாகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தனர். கடைசியாக, சுய உதவிக் குழுக்களை யார் ஆரம்பித்தார்கள் என்ற போட்டி தமிழகத்தில் முக்கிய இரு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டதில் போய் முடிந்தது. எது எப்படி என்றாலும் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள், சுய உதவிக் குழுக்களை ஆதரித்தன. இந்தியாவில் இன்றைக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் என்றால் அவற்றில் உத்தேசமாக 5 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் வங்கிகளில் கடனை வாங்கி மிகவும் நேர்மையாகத் திருப்பிச் செலுத்துவதை அறிந்து, பெரும்பாலான வங்கிகள் இவர்களுக்கு கடன் தருவதையே விரும்புகின்றன. “வாராக் கடன்கள்’ பட்டியலில் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் இல்லையென்றே கூறலாம்.

மனித சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காண எத்தனையோ தத்துவங்களும், மதங்களும் அவ்வப்போது தோன்றத்தான் செய்கின்றன. ஆனாலும் மனித வாழ்வு நைந்து போய்த்தான் கிடக்கிறது. ஆயினும் ஓரளவு சாத்தியப்பாடுடன் கூடிய ஓர் அமைதியான இயக்கத்தை – பெண்களின் விழிப்புணர்வை, நம்பிக்கையைப் பெறுவதில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார் முகம்மது யூனுஸ் என்றே கூறலாம்.

சுயதொழில் மூலம் சம்பாத்தியம் செய்யும் இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள், சமூகத்தில் ஒரு கௌரவமான அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் பெண்கள் தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். “நம்ம ஆளுக்குத்தான் நோபல் பிரைஸ் கொடுத்திருக்காகளாம்…’ என்று மகிழ்ச்சியுடன் சில பெண்கள், பத்திரிகை படித்துச் சொல்லும்போது, ஓரு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரைப் பற்றி ஒரு நாட்டின் லட்சக்கணக்கான பெண்கள் நினைவு கூர்வதுகூட இதுவே முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Posted in Bangladesh, Banks, Commerce, Economics, Grameen, India, Innovation, Loans, Micro-credit, Mohammad Younus, Nobel, Peace, Poverty, Prize, South Asia, Yunus | Leave a Comment »

Election Results – Karunanidhi’s Kavithai

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

தேர்தல் வெற்றி: கருணாநிதி கவிதை

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கவிதை வருமாறு:-

எங்குற்றார் எமது நண்பர்
பொங்குற்றுப் புயல் போல வீசுவாரே
பொல்லாத வார்த்தைகளால் ஏசுவாரே – எதிர்
நில்லாமல் போனதெங்கே; இப்போதுப

வெற்றி பெற்ற வீராப்பில்
வெகுண்டெழுந்து கேட்க மாட்டேன்.
அண்ணா கற்றுத் தந்த அரசியல் பண்பாடு;
அணுப் பொழுதும் மறக்க மாட்டேன்-

ஆனால் அவர்கள் மட்டும் இனியேனும்
அட்டியின்றி ஒன்றைக் கற்க வேண்டும்-
அறுபதாண்டுக்கு மேல் பொது வாழ்வு கண்டவனாயிற்Ú
அகவையும் எண்பதைக் கடந்தவனாயிற்றே-

ஏனோதானோ வென்றும்-எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும்
எதற்காகப் பேசி எழுதி அவன் இதயத்தைக் குடைய வேண்டும்;
என்றொருக் கணம் எண்ணிப் பார்த்திடின்; பகை
வென்றிடக் களம் வந்த பார்த்திபன்-

வேண்டாம் போர் என்று வில் அம்பைக்கீழே
போட்டது போல் இல்லாமல்-பின்னர் அவன்
துரோணராம் குருவினை வணங்கி விட்டுத்
தொடங்கினானே யுத்தத்தை; அந்த மரியாதைப் பண்பாடு

அரசியல் போரிலும் இரு தரப்பிடை இருக்குமானால்;
அமர்க்களத்தில் வெற்றியோ தோல்வியோ;
அவரவர்க்குரிய `புகழ்ப்பூ’ குடையாய் விரிந்து
அகலாத மணம் வீசிக் கொண்டேயிருக்கும்; வரலாற்றில்!

தனக்கு வேண்டும் தக்க மரியாதை எனத்
தலைவன் விரும்புகின்றான் என எண்ணாதீர்; உடன் பிறப்புக்காள்!
தமிழகம் பரம்பரையாய்க் காத்திட்ட பண்பாடும் மரபும்
தவறாது பாதுகாக்கப்பட வேண்டுமே பட்டுப் போகாமல்
என்பதற்கே இந்தப் பாடல்!

Posted in Campaign, Election, Karunanidhy, Kavithai, Letters, MK, Mu Karunanidhi, Results, Thamizh, Victory | 1 Comment »

Tamil Nadu Civic & Local Body Election Results – DMK’s Victories

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

தி.மு.க. கூட்டணி கைப்பற்றிய நகராட்சிகள்

திருச்சி, அக். 19-

தமிழ்நாட்டில் 102 நகராட்சி கள் மற்றும் 50 மூன்றாம் நிலை நகராட்சிகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான பதவிகளில் தி.மு.க. கூட் டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

தி.மு.க. 120 நகராட்சிகளை கைப்பற்றி உள்ளது. அ.தி. மு.க. 13 நகராட்சிகளை பிடித்துள் ளது. மற்ற இடங்களில் சம பலத்துடனும், சுயேச்சைகள் ஆதிக்கத்துடனும் உள்ளன.

மாவட்ட வாரியாக கட்சிகள் கைப்பற்றியுள்ள நகரசபைகள் விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம்
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- மணப்பாறை, துவாக்குடி, துறைïர்,
(அ.தி. மு.க. ஒரு நகரசபையில் கூட வெற்றி பெறவில்லை).

பெரம்பலூர்
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- பெரம் பலூர், அரியலூர், ஜெயங்கொண் டம்.
(அ.தி.மு.க.வுக்கு ஒரு நகரசபை கூட கிடைக்க வில்லை).

கரூர்
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- கரூர்.
இங்கு குளித்தலை, தாந் தோணி நகரசபைகளில் சுயேச் சைகள் ஆதரவுடன் தலை வர் பதவியை தி.மு.க. கைப் பற்றுகிறது.

புதுக்கோட்டை
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- புதுக்கோட்டை, அறந்தாங்கி.
(அ.தி.மு.க.வுக்கு ஒரு நகர சபையும் கிடைக்க வில்லை).

தஞ்சை
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- தஞ்சை, கும்ப கோணம், பட்டுக்கோட்டை.
(அ.தி.மு.க.வுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.)

திருவாரூர்
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- திருவா ரூர், மன்னார்குடி, திருத்துறைப் பூண்டி, கூத்தாநல்லூர்.
(அ.தி. மு.க.வுக்கு ஒரு நகரசபை கூட கிடைக்க வில்லை.)

நாகை
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- நாகை, மயிலாடு துறை, வேதாரண்யம், சீர் காழி.
(அ.தி.மு.க.வுக்கு ஒரு நகரசபை கூட கிடைக்க வில்லை).

குமரி மாவட்டம்
தி.மு.க. கூட்டணி கைப்பற் றிய நகரசபைகள்:- நாகர் கோவில், குழித்துறை.
இங்கு குளச்சல், பத்மநாப புரம் நகரசபைகளை சுயேட்சை கைப்பற்றி உள்ளனர்.
(அ.தி.மு.க.வுக்கு ஒரு நகரசபை கூட கிடைக்க வில்லை)

கடலூர்
தி.மு.க. கைப்பற்றிய நக ராட்சிகள்:- கடலூர், சிதம் பரம், விருத்தாசலம், நெல்லிக் குப்பம்.
அ.தி.மு.க.-பண்ருட்டி

விழுப்புரம்
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, (3-ம் நிலை நகராட்சி)
அ.தி.மு.க.-ஒன்றும் இல்லை.

திருவண்ணாமலை
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- ஆரணி, செய் யாறு, வந்தவாசி, திருவண்ணா மலை.
அ.தி.மு.க.- ஒன்றும் இல்லை.

மதுரை
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- திருப்பறங்குன்றம், அவணியாபுரம், மேலூர், உசிலம்பட்டி, (ஆணை ïரில் இழுபறி).
அ.தி.மு.க.- திருமங்கலம்.

திண்டுக்கல்
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- திண்டுக்கல், கொடைக்கானல், பழனி.
அ.தி.மு.க.-ஒன்றும் இல்லை.

தேனி
தி.மு.க.கைப்பற்றிய நகர சபைகள்:- சின்ன மனூர், போடி, கம்பம் (தேனி யில் இழுபறி)
அ.தி.மு.க. -பெரிய குளம், கூடலூர்,

ராமநாதபுரம்
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- ராமநாதபுரம், கீìழக்கரை.
அ.தி.மு.க.- ராமேசுவரம், பரமக்குடி

விருதுநகர்
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- விருதுநகர், சிவ காசி, ராஜபாளையம், ஸ்ரீவில் லிபுத்தூர், அருப்புக் கோட்டை,
சாத்தூர்.அ.தி.மு.க.-திருத்தங்கல்

சிவகங்கை
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- காரைக்குடி, தேவகோட்டை.
அ.தி.மு.க.- ஒன்றும் இல்லை.

வேலூர்
தி.மு.க. கைப்பற்றிய நகரசபைகள்:- வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆற்காடு, திருப்பத்தூர், வாலாஜா, அரக்கோணம், ராணிப்பேட்டை, பேரணாம் பட்டு, சத்துவாச்சேரி, ஜோலார் பேட்டை, தாராபடவேடு, மேல்விசாரம்.
அ.தி.மு.க.- குடியாத்தம்

நெல்லை

தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- செங்கோட்டை, அம்பாசமுத்திரம், விக்கரம சிங்கபுரம், (சங்கரன்கோவில் இழுபறி).
அ.தி.மு.க.- ஒன்றும் இல்லை.
சுயேட்சைகள்-தென்காசி, புளியங்குடி, கடையநல்லூர்.

தூத்துக்குடி
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- தூத்துக்குடி, கோவில்பட்டி,
சுயேச்சை- காயல்பட்டி னம்.
அ.தி.மு.க.-ஒன்றும் இல்லை.

ஈரோடு
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:-ஈரோடு, தாரா புரம், கோபி, (பவானி, சத்திய மங்கலம்-இழுபறி)
அ.தி.மு.க.- ஒன்றும் இல்லை.

சேலம்
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்ë:- ஆத்தூர், இடைப்பாடி, மேட்டூர்.
அ.தி.மு.க.-நரசிங்கபுரம்.

நாமக்கல்
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், ராசிபுரம் (குமாரபாளையம்-இழுபறி),
அ.தி.மு.க.-நாமக்கல்

தர்மபுரி
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- தர்மபுரி.
அ.தி.மு.க.- ஒன்றும் இல்லை.

கிருஷ்ணகிரி
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:-கிருஷ்ணகிரி, சேலம்.
அ.தி.மு.க.-ஒன்றும் இல்லை.

கோவை
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- திருப் பூர், பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம் 3-ம் நிலை நகராட்சிகள்: நல்லூர், பல் லடம், வால்பாறை, 15 வேலம் பாளையம்.
அ.தி.மு.க. – கவுண்டம் பாளையம்.

நீலகிரி
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- ஊட்டி, குன் னூர்.
அ.தி.மு.க.-ஒன்றும் இல்லை.

காஞ்சீபுரம்
தி.மு.க. கைப்பற்றிய நக ராட்சிகள்:- காஞ்சீபுரம், தாம் பரம், ஆலந்தூர், பல்லாவரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், அனகாபுத்தூர், பம்மல் (மறை மலை நகர்-இழுபறி)
அ.தி.மு.க.-உள்ளகரம்-புழுதிவாக்கம்.

திருவள்ளூர்
தி.மு.க. கைப்பற்றிய நகர சபைகள்:- ஆவடி, அம்பத்தூர், திருவொற்றிïர், திருவள்ளூர், கத்திவாக்கம். 3-ம் நிலை நகராட்சிகள்:- பூந்தமல்லி, வளசரவாக்கம், திருத்தணி, மதுரவாயல்,
அ.தி.மு.க.- திருவேற்காடு மணலி (3-ம் நிலை நகராட்சிகள்).

Posted in ADMK, Civic, DMDK, DMK, Election, Local Body, PMK, Polls, Results, Tamil Nadu, TN | Leave a Comment »

Desiya Murpokku Dravida Kazhagam’s Impact on Elections & Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

உள்ளாட்சி தேர்தல் புதிய சக்தியாக வலுப்பெறும் விஜயகாந்த் கட்சி- அ.தி.மு.க. ஓட்டுகளை பிரித்தது

சென்னை, அக். 19-

“ஊழலை ஒழிப்பேன், மக்களுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன்” என்ற வாக்குறுதியுடன் அரசியலில் கடந்த ஆண்டு விஜயகாந்த் காலடி எடுத்து வைத்தார். தனது எண்ணத்தை அடித்தட்டு மக்களிடம் எதிரொலிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அவர் ஊர், ஊராக சென்று பேசினார். அப்போதே அவரது அணுகுமுறை மக்களுக்கு பிடித்துப்போய் விட்டது.

இதையடுத்து கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் அவர் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அந்த தேர்தலில் 234 தொகுதிகளில் 232 வேட்பாளர்களை விஜயகாந்த் நிறுத்தினார். இதில் விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.

223 தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் “டெபாசிட்” இழந்தனர். எனினும் தே.மு.தி.க.வுக்கு தமிழகம் முழுவதும் 27 லட்சத்து 64 ஆயிரத்து 223 வாக்குகள் கிடைத்தது. பதிவான மொத்த வாக்குகளில் இது 8.38 சதவீதம் ஆகும்.

மிக குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் மனதில் இடம்பிடித்த தே.மு.தி.க. தன் வளர்ச்சி காரணமாக, இயல்பாகவே பெரிய கட்சிகளின் வெற்றி தோல்விக்கு வழி வகுத்தது. சுமார் 50 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பை இழக்க தே.மு.தி.க. காரணமாக இருந்தது. இது தமிழக அரசியலில் புதிய மாற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாக உள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தே.மு.தி.க.வின் வலுவை நிரூபிக்கும் அடுத்த வாய்ப்பாக சமீபத்தில் நடந்த மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் அமைந்தது. பொதுத்தேர்தலில் 12038 ஓட்டுக்களைப் பெற்ற தே.மு.தி.க. இடைத்தேர்தலில் 17394 ஓட்டுகள் பெற்று 3-வதுஇடத்தைப்பெற்றது. அதாவது 5 மாத இடைவெளியில் தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக 5300 ஓட்டுகள் கிடைத்தது.

இது தே.மு.தி.க. மக்களிடம் வளர்ந்துவரும் கட்சி என்பதை நிரூபித்தது அது மட்டுமின்றி அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் உள்ள ஓட்டு வித்தியாசம் 2500தான். இதன் மூலம் அ.தி.மு.க. அனுதாபிகளின் ஓட்டுகளில் கணிசமானவற்றை தே.மு.தி.க. கைப்பற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

இதையடுத்து 3-வது முறையாக தன் வளர்ச்சி ஆற்றலை தற்போது உள்ளாட்சித் தேர்தல் மூலம் தே.மு.தி.க. நிரூபித்துள்ளது. தனிப்பட்ட முறையில் எந்த நகராட்சி, பேரூராட்சியையும் தே.மு.தி.க. தன் ஆதிக்கத்துக் குள் கொண்டுவர இயலா விட்டாலும் கூட கணிசமான அளவுக்கு கவுன்சிலர்களையும், வார்டு உறுப்பினர்களையும் அந்த கட்சி பெற்றுள்ளது.

இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் 3-வது சக்தி யாக தே.மு.தி.க. உருவெடுத்து இருப்பது மீண்டும் ஒருதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, சட்டசபைத் தேர்தல் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் ஏராளமான இடங்களில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி- தோல்வியை தே.மு.தி.க. பிரித்த ஓட்டுகள் நிர்ணயிப்பதாக அமைந்துவிட்டன.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அ.தி.மு.க., தி.மு.க.வின் கணிசமான ஓட்டுக்களை காந்தம் போல விஜயகாந்தின் தே.மு.தி.க. மெல்ல மெல்ல ஓசையின்றி ஈர்த்து வருகிறது. கிராம பஞ்சாயத்துகளிலும் கணிசமான தே.மு.தி.க.வினர் வென்றுள்ளனர். இது உள்ளாட்சி அமைப்பில் தே.மு.தி.க. வலுவான நிலைக்கு வந்து இருப்பதை காட்டுகிறது.

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தில் உயர்ந்து இருக்கும் தே.மு.தி.க., உண்மையில் மக்களிடையே நம்பர் ஒன் இடத்தில் இருப்பதாக அந்த கட்சி அவைத்தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் சொல்கிறார். உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டுகளை பலமின்றி தனித்தனியாக கணக்கிட்டால், அ.தி.மு.க., தி.மு.க.வை விட தே.மு.தி.க.வுக்குத்தான் அதிக ஓட்டு உள்ளது என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார்.

தொடரும் தேர்தல் முடிவுகளால் தன் வலிமையை தே.மு.தி.க. வெளிப்படுத்தினாலும் கூட அந்த கட்சியால் தேர்தல் கமிஷனில் உரிய அங்கீகாரம் பெற இயலவில்லை. அரசியல் கட்சியாக பதிவு பெற 2 எம்.எல்.ஏ.க்கள் வேண்டும் என்ற விதி காரணமாக தே.மு.தி.க.வுக்கு இன்னும் அந்த அங்கீகாரம் மட்டும் கிடைக்கவில்லை.

Posted in ADMK, Desiya Murpokku Dravida Kazhagam, DMDK, DMK, Elections, panruti ramachandran, Tamil Nadu, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »