மார்ச் 28 முதல் வங்கிகள் ஸ்டிரைக்: 6 நாள் சேவை இல்லை
சென்னை, மார்ச் 21: ஏற்கெனவே அறிவித்தபடி நாடு முழுவதும் உள்ள 9 லட்சம் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரும் 28-ம் தேதி முதல் மூன்று நாள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
இதனால் ஸ்டிரைக், விடுமுறை நாள்கள், நிதியாண்டு கணக்கு முடிப்பு நாள் காரணமாக தொடர்ந்து ஆறு தினங்கள் பொது மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஏப். 3-ம் தேதிதான் (செவ்வாய்க்கிழமை) பொது மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கும்.
பிரதமர் மன்மோகன் சிங்குடன் தில்லியில் திங்கள்கிழமை நடந்த பேச்சுவார்த்தை, வங்கிகளின் நிர்வாகத் தரப்பு அமைப்பான இந்திய வங்கிகள் சங்கத்தின் உயர் அதிகாரிகள் குழுவுடன் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் பலன் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து திட்டமிட்டபடி மார்ச் 28, 29, 30 ஆகிய மூன்று தினங்கள் பாரத ஸ்டேட் வங்கி உள்பட அனைத்து வங்கிகளையும் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச் செயலர் ஏ. ரங்கராஜன் தெரிவித்தார்.
மார்ச் 31 (சனிக்கிழமை) மகாவீர் ஜயந்தி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது; ஏப்.1 ஞாயிற்றுக்கிழமை. நிதி ஆண்டு கணக்கு முடிப்பு தினம் ஏப்.2-ம் தேதி (திங்கள்கிழமை) பொது மக்களுக்கு வங்கிகளின் சேவை கிடைக்காது.
வங்கிகளில் உள்ள ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும், பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வங்கி ஊழியர் இறக்கும் நிலையில் மனைவிக்கு அல்லது வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை, வங்கிப் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்கக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.