மராட் கலவரம் குறித்த விசாரணை தாமதம்: சட்டத்துறையிடம் விளக்கம் கோரவுள்ளது கேரள அரசு
திருவனந்தபுரம், அக். 28: கேரளத்தில் 2002-ம் ஆண்டில் மராட் கடற்கரையில் நடந்த முதல் கலவரம் குறித்த விசாரணை தாமதமாகத் தொடங்கியது ஏன்? என்று மாநில சட்டத்துறையிடம் விளக்கம் கோரவுள்ளது, முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி கேரள அரசு.
மராட் கலவரம் குறித்த ஜோசப் பி. தாமஸ் விசாரணைக் கமிஷன் அறிக்கை தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடந்த சிறப்பு விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசியபோது இதைத் தெரிவித்தார் மாநில போலீஸ் துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன்.
2002 மராட் கலவரத்தின்போது போலீஸôர் சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் ஓராண்டுக்குப் பிறகு அங்கு மீண்டும் கலவரம் வெடித்தது என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தமது பதிலுரையில் அமைச்சர் கூறினார். மராட் கலவரத்தின்போது ஆட்சியில் இருந்த அப்போதைய முதல்வர் ஏ.கே. அந்தோனி அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாதது மர்மமாக உள்ளது என்ற கமிஷனின் கருத்தை குறைகூறிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி, சிபிஐ விசாரணைக்கு பாஜக தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் எதிர்ப்புத் தெரிவித்தன என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மராட் பகுதியில் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கலவரம் மூள்வதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசுக்கு எச்சரிக்கை அறிக்கை அனுப்ப புலனாய்வுத் துறை தவறி விட்டது என்றும் உம்மன் சாண்டி கூறினார்.
2002 மராட் கலவரத்துக்குக் காரணமான குற்றவாளிகளிடம் துரிதமாக விசாரணை நடத்தத் தவறியதே, அங்கு மீண்டும் கலவரத்தில் ஈடுபடும் அளவுக்குக் குற்றவாளிகளுக்குத் தைரியத்தைக் கொடுத்தது. கலவரம் மீண்டும் மூண்டதற்கு ஏ.கே. அந்தோனி அரசு சரியான நடவடிக்கை எடுக்காததே முக்கியக் காரணம் என்று அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள யோசனைகளை கேரள அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், மராட் கலவரத்தில் ஆர்எஸ்எஸ்ஸின் பங்கை விசாரணைக் கமிஷன் கண்டுகொள்ளவே இல்லை.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அதன் மூலம் கலவரம் ஏற்பட்டதற்கான சதித்திட்டம் முழுமையாக வெளியாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விசாரணை அறிக்கை குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரி நோட்டீஸ் கொடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரியதன் முகமது, 2003 மராட் கலவரத்தின்போது ஏ.கே. அந்தோனி அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசினார்.