எய்ட்ஸ், போலியோ விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பிச்சைக்காரர்களை பயன்படுத்த பிகார் அரசின் நலத்துறை திட்டம்
பாட்னா, அக். 31: எய்ட்ஸ், போலியோ விழிப்புணர்வு பிரசாரத்தில் நன்றாகப் பாடவும், நடனமாடவும் தெரிந்த பிச்சைக்காரர்களைப் பயன்படுத்த பிகார் அரசு திட்டமிட்டுள்ளது.
“பச்சன்‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதுமையான திட்டம் பிகார் மாநில நலத்துறைச் செயலர் விஜய் பிரகாஷின் சிந்தனையில் உருவானது. இதுகுறித்து விஜய் பிரகாஷ், திங்கள்கிழமை கூறியது:
இதன் மூலம் பிகாரில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை உள்ள பிச்சைக்காரர்களின் வாழ்வு ஒளிமயமாகும். அதோடு அவர்கள் வாயிலாக எய்ட்ஸ், போலியோ தடுப்புத் திட்டப் பிரசாரமும் மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்குச் சென்றடையும். இத்திட்டத்துக்காக நன்றாகப் பாடவும், ஆடவும் தெரிந்த பிச்சைக்காரர்களைத் தெரிந்தெடுக்கும் பணி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பிச்சைக்காரர்களுக்கு அவர்களுக்குள் புதைந்துள்ள திறமைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு அதில் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் சில பிச்சைக்காரர்கள்
- வீடுகளுக்கு நாளேடுகளைப் போடும் பணி,
- பால் விநியோகம் ஆகிய பணிகளிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊனமுற்றோருக்கு சைக்கிள் அல்லது 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட உள்ளது.