உள்ளாட்சித் தேர்தல்-கொசு ஒழிப்பு
சி. மகேந்திரன்
சிக்குன் குனியா, டெங்கு ஆகிய இரண்டு கொடிய காய்ச்சல்களுக்கு அடிப்படைக் காரணம் கொசுதான் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நாட்டின் முன்னேற்றம் அனைத்திற்கும் தடையாக இருப்பதில் முக்கியக் காரணம் வகிப்பது லஞ்சம்தான் என்பதை நாம் உணர்ந்தும் அதனை ஒழிப்பதற்கு முயற்சி எதுவும் எடுக்காமல் இருப்பதைப் போலத்தான் கொசு ஒழிப்பதிலும் நம் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எந்த ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியும் இவ்வாறாகத்தான் தொடங்குகிறது.
எய்ட்ஸ் கொடிய நோய்தான். இதன் பரவல் கட்டுப்பாடற்ற பாலுணர்வு வாழ்க்கையிலிருந்துதான் பெருகியிருக்கிறது. மானுட நெடும்பரப்பின் அனுபவம் எது நன்மை பயக்கும்? எது தீமை பயக்கும் என்ற பாதையைத் தெளிவாக உருவாக்கித்தான் வைத்திருக்கிறது. காடு, மேடு, மலையின் உச்சி, பள்ளத்தாக்குகளின் பாதாளம் என்று ஓடித் திரிந்த வாழ்க்கையில் மனிதன் அனுபவத்தின் அடிப்படையில் கண்டறிந்ததுதான் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கை முறை சிதைந்ததால்தான் எய்ட்ஸ் வந்ததா? அல்லது ஆணுறை இன்மையால் நோய் வந்ததா என்ற கேள்வி நம்மைப் பெரிதும் வெட்கமுற வைக்கிறது. இன்று வியாபாரத் தந்திரங்களிலிருந்து, எந்தவொரு நாடும் தப்பிக்க இயலவில்லை. ஒருபுறம் வியாபாரமாகிப் போன உலகில், ஆண், பெண் உறவிலுள்ள தார்மிகத்தை வெகுவாக இழந்து விட்டோம். மறுபுறம் ஆணுறை நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தைக் குவித்துக் கொண்டிருக்கின்றன. கொசு ஒழிப்பு நடவடிக்கையும் இதே பாதையில்தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
கொசுக்களை ஒழிக்கப் புறப்பட்ட ஆயுதங்களில் எத்தனை வகைகள் இருக்கின்றன. நெருப்பைப் பொருத்தி எழுப்பும் புகையாகவும், மின்சாரத்தில் பொருத்தி உருவாக்கும் ஆவியாகவும், உடல்களில் பூசிக் கொள்ளும் பசைகளாகவும் எத்தனை வகைகளில் இவை! இந்த நடவடிக்கைகளின் தகுதி, திறன் பற்றி ஊடகங்கள் செய்த விளம்பரங்கள் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கொசுவை ஒழிக்க முடியவில்லை? இச் செயல்முறைகள் மறைமுகமாகக் கொசுவை வளர்த்தனவா என்ற சந்தேகம் கூட இப்பொழுது எழத் தொடங்கிவிட்டது. வியாபாரத் தந்திரங்களை யார் அறிவார்?
கொசுவும், கொசு மூலம் பரவும் நோய்களும் ஆதிகாலம் முதல் இருந்திருக்கத்தான் வேண்டும். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் மக்கள் கண்டறிந்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பதும் மறக்க முடியாத உண்மையாகும். நமது தொன்மையான முறைகள் எதுவும் வியாபாரம் சார்ந்ததல்ல. “வியாபாரம் சாராத’ மக்கள் நலம் சார்ந்த நடவடிக்கைதான் இன்று அவசியமாகிறது.
உள்ளாட்சிகளின் செயல்பாடுகள் மக்கள் சார்ந்தவை. மக்கள் அனைவரையும் பங்கேற்க வைக்கும் பங்கேற்பு ஜனநாயகமாக உள்ளாட்சித் தேர்தல் அமைந்துள்ளது. ஆனால் இது அதிகாரத்தின் மூலம் மக்களின் பணத்தை மறைமுகமாகக் கொள்ளையிடுவதற்கான வழிமுறையாக இன்று மாறி வருகிறது. இதை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் சேவை மையமாக மாற்ற வேண்டும்.
மக்கள் நடவடிக்கை குறித்த அனுபவங்களுக்கு வியட்நாம், கியூபா செயல்திட்டங்களைக் கூர்ந்து கவனிப்பது அவசியமானது என்று தோன்றுகிறது. வியட்நாமின் சில தகவல்கள் நம்மை வியப்புற வைக்கின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் எங்காவது நீர் தேங்கி அதில் கொசு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டால், உடன் வாழ்விடத்தின் சுகாதார நடவடிக்கைக் குழுக்கள் அல்லது பெற்றோர் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்கள். குழந்தைகளின் இந்தப் பொறுப்புணர்வு அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? சமூகம் அந்தக் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்த ஆரம்பக்கல்வி. ஒரு முழு சமூகத்தின் ஆரோக்கியத்தைக் குழந்தைகளிடம்தான் பார்க்க முடிகிறது. இதைப் போன்றுதான் புயல்போல் வேகமெடுத்துப் பரவிய டெங்கு காய்ச்சலை கியூபாவில் மக்கள் நடவடிக்கையால் கட்டுப்படுத்த முடிந்தது. 1981-ஆம் ஆண்டு 3 லட்சத்து 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நான்கு மாதங்களில் அங்கு இந்த நோய் முற்றாக ஒழிக்கப்பட்டது.
மக்கள் நடவடிக்கையின் மூலம் கொசுக்களை ஒழிப்பதில் முதலில் கவனம் கொள்ள வேண்டியது, சுற்றுச்சூழல் பாதிப்பற்ற திட்டங்களில்தான்! கொசுவை ஒழிக்கும் முயற்சியில் நீர், நிலம், காற்று ஆகியவற்றிலும் விஷத்தைக் கலந்து விடுகிறோம். இதனால் இயற்கைக்கும், இயற்கையைச் சார்ந்து வாழும் மனிதனுக்கும் ஏற்படும் துயரங்களை வார்த்தைகளால் விவரித்துவிட இயலாது. இன்று பெருகி வரும் நெஞ்சக நோய்கள் உள்ளிட்ட பலவற்றிற்கு கொசுக்களை அழிக்கப் பயன்படுத்திய டி.டி.டி. போன்ற மருந்துகள்தான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
சூழலுக்குப் பாதிப்பற்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் உலகில் பல நாடுகளில் வகுக்கப்பட்டுள்ளன. இதில் நியூஜிலாந்தின் நடவடிக்கை மிகவும் யோசித்துப் பார்க்கத் தகுந்தது. இங்கு ஆண் கொசுக்களை மலடாக்குவதன் மூலம் கொசுக்களின் இனப்பெருக்கத்தை முற்றாக நிறுத்தி விட்டார்கள். இதில் கதிர் வீச்சுகளைப் பயன்படுத்தும் முறைகளும், மரபு அடிப்படையிலான முறைகளும் இருக்கின்றன.
கம்பூச்சியா நாட்டில் ஒருவகை மீன், கொசுவை மிக வேகமாக ஒழித்து விடுகிறது. இதைப்போலவே மிசோ – சைக்கோளப் என்னும் மற்றோர் உயிரினம் டெங்கு, சிக்குன் குனியா முதலிய நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழித்து விடுகிறது. கொசுக்கள் பெரும்பாலும் நீரில் தங்கித்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. தேங்கியுள்ள நீர் நிலைகளில் இந்த மீன்களையும் சில உயிரினங்களையும் வளர்ப்பதன் மூலம் கொசுக்களை அழிக்கும் நுட்பத்தை அங்கு வளர்த்தெடுக்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு இதனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.
இத்தகைய சூழல் பாதிப்பற்ற நடவடிக்கைகள் உலகில் பல நாடுகளில் செயல்வடிவம் பெற்றுள்ளன. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் ஏமாற்று வேலைகள் என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்க மூலதன நிறுவனங்கள் பல்வேறு சதித்திட்டங்களை உருவாக்கி வருகின்றன. இதனால்தான் கியூபா போன்ற நாடுகளின் புகழ்மிக்க விவசாயத் தீர்வுகளை, உலகத்திற்கே தெரியவிடாமல் சூழ்ச்சி செய்து மறைத்து விட்டார்கள்.
உள்ளாட்சிகளில் சூழல் பாதுகாப்புடன் கூடிய கொசு ஒழிப்பிற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஊராட்சி மன்றங்கள் முதல் எல்லா நிலைகளிலும் இதற்காகத் தனித்தனியான திட்டங்கள் வகுத்து மக்களை ஈடுபடுத்த வேண்டும்.
கொசு ஒழிப்புத் திட்டம் வலிமையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமெனின், சுகாதாரத்திற்கான அரசாங்கத்தின் நிதியைக் கூடுதலாக்குவது அவசியம். பல நாடுகள் தங்கள் தேசிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை சுகாதாரத்திற்கு ஒதுக்குகின்றன. இந்தியா தனது தேசிய வருமானத்தில் 0.9 சதவீதத்தை மட்டும் ஒதுக்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் கூட 2 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக வரவு – செலவுத் திட்டத்தில் 30 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கருத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பரிசீலனை செய்து பொருத்தமுடைய ஒதுக்கீட்டிற்குத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இந்தத் தொகையில் குறிப்பிடத்தக்க அளவை, கொசு ஒழிப்புக்கென்று செலவிடுவது அவசியம்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் வாக்களிக்கும் மக்களும் கொசு ஒழிப்பதற்கான திட்டங்கள் குறித்து இந்த நேரத்தில் யோசிப்பது முக்கியமாகும். இதைத் தவிர்த்து, சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல்கள் பரவுவதற்கு, ஆளும் கட்சி காரணமா? எதிர்க்கட்சி காரணமா என்ற சொற்போர் நிகழ்த்திக் கொண்டிருப்பதால் யாருக்கும் பலன் கிடைக்கப் போவதில்லை.