டிஜிட்டல் வடிவம் பெறும் பழந்தமிழ் ஓலைச் சுவடிகள்
பா.கிருஷ்ணன்
சென்னை, ஜன. 29: பண்டைக்கால தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் டிஜிட்டல் வடிவில் இணையத்தில் பதிவு செய்கிறது.
இப்பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்று தமிழ் இணையப் பல்கலைக் கழக இயக்குநர் ப.அர. நக்கீரன் தெரிவித்தார்.
“தினமணி’க்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உ.வே. சாமிநாதய்யர் போன்றோர் தேடிக் கண்டுபிடித்த சுவடிகள் திருவான்மியூர், உ.வே. சுவாமிநாத ஐயரின் நூல் நிலையத்தில் உள்ளன.
அச்சுவடிகள் படம் பிடிக்கப்பட்டு குறுந்தகடு (சி.டி.) வடிவில் தயாரிக்கப்படும். பின்னர், அவை இணையதளத்தில் இடம்பெறும். அத்துடன் முக்கிய இலக்கிய, கலாசார ஆவணங்கள், பிரமுகர்களின் கையெழுத்துப் பிரதிகளும் மின்னணு வடிவில் மாற்றப்படும்.
திருக்கோயில்கள்: தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள், தேவாலயங்கள், தர்காக்கள் ஆகியன ஒலி -ஒளி வடிவில் படமாக்கப்பட்டு, இணையதளத்தில் ஏற்றவும் இணையப் பல்கலை. உத்தேசித்துள்ளது.
இதுவரை 350 கோயில்கள் ஆவணப் படங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, புதிதாகவும் கோயில்கள் குறித்த தகவல்கள் கொண்ட ஆவணப் படங்களும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்கள் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் மின் நூலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
உ.வே.சா. வாழ்க்கை வரலாற்று நூல் “என் சரிதம்’ நூலும் இந்த மின் நூலகத்தில் இடம்பெறும்.
இந்த மின் நூலகத்தில் எந்தெந்த புத்தகங்கள் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரை செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு புதிதாக 450 நூல்களை இடம்பெறச் செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதுவரை 370 நூல்கள் இடம்பெற்றுவிட்டன. மீதமுள்ள நூல்களில் பல அச்சில் கிடைக்கவில்லை. வேறு சில இதுவரை கிடைக்கப் பெறாததால், தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொன்விழி சாஃப்ட்வேர்: பொன்விழி எனப்படும் இந்த சாஃப்ட்வேர் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதைக் கணினியில் பதிவிறக்கம் செய்துவிட்டால், ஓ.சி.ஆர். என்ற முறையில் வாசகங்களைப் படிக்கலாம். அவற்றில் தேவையான மாற்றங்களையும் மேற்கொள்ளலாம் என்றார் நக்கீரன்.