Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 20th, 2006

Organic Farming, Farmer Suicides, Second Green Revolution

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

இரண்டாவது பசுமைப்புரட்சி

சுசி.திருஞானம்

இரண்டாவது பசுமைப்புரட்சிக்குத் தயார் ஆகுங்கள் என்று இந்திய விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். இந்திய வேளாண்மைத் துறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் தேக்கத்தை உடைத்து, விவசாயிகளின் வாழ்வை மலரச் செய்ய வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் விடப்பட்ட அழைப்பு இது.

இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு நமது உழவர்கள் அனைவரும் தயாராக வேண்டுமெனில், முதலாவது பசுமைப் புரட்சியின் அனுபவங்களைத் தொகுத்துக் கொள்வது அவசியம்.

உற்பத்தி பெருகியது: 1960-களின் தொடக்கத்தில் ஆரம்பித்த முதலாவது பசுமைப்புரட்சியின் முக்கிய உத்திகளாக கருதப்பட்டவை இறக்குமதி செய்யப்பட்ட விதைகள், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி நஞ்சுகள், டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் போன்றவை ஆகும்.

அணைக்கட்டுகள், பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள், நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவை நமது விவசாயக் கட்டமைப்பைத் தரம் உயர்த்தியிருந்த காலகட்டம் அது. கட்டமைப்பு மாற்றமும், புதிய உத்திகளும் இணைந்தபோது விவசாய விளைச்சல் மடங்குகளில் பெருகியது.

1950-ம் ஆண்டில் 50.8 மில்லியன் டன்னாக இருந்த நமது நாட்டின் உணவுப் பொருள் உற்பத்தி 1990-ல் 176 மில்லியன் டன்னாக உயர்ந்தது.

எதிர் விளைவுகள்: பசுமைப்புரட்சியில் பின்பற்றப்பட்ட சில தவறான உத்திகள் 1990-களின் தொடக்கத்திலிருந்தே எதிர் விளைவுகளைக் காட்டின.

இந்திய மண்ணின் மீதும், பயிர்கள் மீதும் ஆண்டுதோறும் 8 கோடி கிலோ நஞ்சு கொட்டப்பட்டதால் மண் மலடாகிப் போனது. மண்புழுக்களும், நுண்ணுயிர்களும் கொல்லப்பட்டதால் மண்ணின் உயிர்ப்புத்தன்மை வீழ்ச்சியடைந்தது. பயிர்களின் தாயான மண்ணின் உற்பத்தித் திறன் தாழ்ந்து போனது.

இதனால் 1997-ம் ஆண்டிலிருந்து (191 மில்லியன் டன்) 2005-ம் ஆண்டு வரை (204 மில்லியன் டன்) நமது நாட்டின் உணவுப் பொருள் உற்பத்தி சுமார் 200 மில்லியன் டன் என்ற அளவில் தேங்கிப் போய்விட்டது. கடந்த சில மாதங்களாக நமது நாடு பல லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யும் அவல நிலையும் உருவாகிவிட்டது.

உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்ட அதே வேளையில், செயற்கை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி நஞ்சுகள் ஆகியவற்றின் விலை மடங்குகளில் உயர்ந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கடனாளிகள் ஆகிவிட்டனர். சிறிய விவசாயிகள் சிறிய கடனாளிகள் – பெரிய விவசாயிகள் பெரிய கடனாளிகள் – இதுதான் இன்றைய இந்திய விவசாயத்தின் யதார்த்த நிலை.

தொடரும் தற்கொலைகள்: கடன் சுமை நெருக்கியதால், பயிருக்குத் தெளிப்பதற்காக வாங்கிய பூச்சிக்கொல்லி நஞ்சுகளைத் தாங்களே உட்கொண்டு பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

அதிகரிக்கும் இடுபொருள் செலவு, இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்ற விதைகள் போன்றவை தரும் நெருக்கடிகளால் மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை இன்னமும் தொடர்கிறது.

முதலாவது பசுமைப்புரட்சியின் முன்னோடி மாநிலமாகச் செயல்பட்டது பஞ்சாப். கோதுமை உற்பத்தியிலும், நெல் உற்பத்தியிலும் 1970-களில் பெரும் சாதனை படைத்த பஞ்சாப், இந்தியாவின் “ரொட்டிக்கூடை’ என்று அழைக்கப்பட்டது.

ஆனால் 1990-களில் பஞ்சாப் விவசாயிகள் பலரும் நொடித்துப் போயினர். “எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்’ என்று ஹரிகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விளம்பரப் பலகை மாட்டப்பட்டது. கடன் தொல்லையால் பஞ்சாப் விவசாயி தற்கொலை என்ற செய்திகளும் வெளிவரத் தொடங்கின.

விவசாயிகள் கடன் சுமையில் தள்ளப்பட்டதன் வரலாற்றுச் சூழலை தமிழக அரசு நன்கு உணர்ந்துள்ளது. “விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் அறவே ரத்து’ என்ற தேர்தல் முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த புதிய அரசு, 6866 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து, அவர்களின் சுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

மேலும், கிலோ அரிசி 2 ரூபாய், ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் போன்ற பல துணிச்சலான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது பற்றி சர்ச்சைகள் எழுந்த போதும், அடித்தட்டு மக்களின் சிரமங்கள் குறைக்கப்பட்டிருப்பது உண்மை.

வழிகாட்டும் முன்னோடி: விவசாயிகளை கடனில் வீழ்த்தும் ரசாயன விவசாயத்துக்கு மாற்றாக அறிவியல்பூர்வ இயற்கை விவசாயத்தை உயர்த்திப் பிடிப்பதில் தமிழக அரசு முன்னோடியாகத் திகழ்கிறது. ரசாயன உப்புகளால் நமது மண்வளம் குன்றிப்போனது குறித்து கவலை தெரிவித்துள்ள தமிழக வேளாண்மைத் துறையின் கொள்கை அறிக்கை இயற்கை விவசாய உத்திகளைப் பின்பற்றுவதன் அவசர அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமும் பஞ்சகவ்யம், மூலிகைப் பூச்சிவிரட்டி போன்ற இயற்கை விவசாய உத்திகளின் அறிவியல் அம்சங்களை ஆய்வு செய்து, அங்கீகரித்து மாநிலமெங்கும் பரப்பிட முன் வந்துள்ளது. செயற்கை விவசாயமுறைக்கு இணையாக அறிவியல் பூர்வமான இயற்கை விவசாய முறை பரவ வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாயிகளின் முன் முயற்சி: ஈரோடு, கரூர், நெல்லை போன்ற மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயப் பண்ணைகளைப் பார்க்கும்போது, தமிழக வேளாண்மை தலைநிமிரப் போகிறது என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

பல பயிர் உரம், மண்புழு உரம், பஞ்சகவ்யம், நுண்ணுயிர் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி போன்ற இயற்கை விவசாய உத்திகளைப் பயன்படுத்தும் இயற்கை விவசாய முன்னோடிகள், வியக்கவைக்கும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். கரும்பு, நெல்லி, எலுமிச்சை போன்ற பல பயிர்களில் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் பார்க்கும் பல இயற்கை விவசாயிகளைப் பட்டியலிட்டுக் கூற முடியும்.

ரசாயன நஞ்சு கலக்காத அரிசி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை தேடிச்சென்று வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தமிழக இயற்கை விவசாயிகளை உற்சாகப் படுத்தியுள்ளது.

திருப்புமுனை இங்குதான்: தமிழக அரசு விவசாயிகள் மீது கொண்டிருக்கும் நேர்மையான அக்கறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் இயற்கையோடு இயைந்த அறிவியல் முனைப்பு, இயற்கை விவசாய முன்னோடிகளின் துடிப்பான முன்முயற்சி இவை மூன்றும் ஒரே புள்ளியில் இணையத் தொடங்கியிருப்பது இந்திய வேளாண்மையின் திருப்புமுனை இங்குதான் ஏற்படப் போகிறது என்பதன் அறிகுறியே ஆகும்.

உணவை நஞ்சுபடுத்தாத விவசாயப் புரட்சி – விவசாயக் குடும்பங்களை கடனில் வீழ்த்தாத விவசாயப் புரட்சி – நமது உழவர்களை மீண்டும் தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும் இரண்டாவது பசுமைப்புரட்சி நெருங்கிவிட்டது. தமிழகம், அதற்கான முதலாவது முரசு கொட்டி, தலைமை தாங்கி வழிநடத்தும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

Posted in Agriculture, Farmer, Farming, Grains, Green Revolution, History, Incentives, Insecticides, Irrigation, Loans, Op-Ed, organic, Output, pesticides, Production, Punjab, rice, Su Si Thirunjaanam, Suicides, Swaminathan, Tamil Nadu, Tractors, Vidharbha | Leave a Comment »

CS Kuppuraj – Mullai Periyar imbroglio :: History, Currents

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

முல்லை பெரியாறு அணை – சிக்கல்

சி.எஸ்.குப்புராஜ்

1886}ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் நாள் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அது திருவாங்கூர் மன்னருக்கும் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே பெரியாற்றில் ஓர் அணை கட்டவும், அதில் தேங்கும் நீரினை ஒரு குகை மூலமாகத் திருப்பி, சென்னை மாகாணத்தில் இருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் வறண்ட நிலங்களில் பாசனம் செய்யவும் வகை செய்தது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது.

அதன்படி 1895-ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அறுபது ஆண்டுகள் எவ்வித சிக்கலும் இன்றி பாசனம் நடந்து வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அங்கே கேரள அரசு உதயமானது. இங்கே தமிழ்நாடு அரசு ஏற்பட்டது.

1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது.

அதற்காக ஒரு புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்று முடிவாகி 1970-ம் ஆண்டு மே மாதம் 29-ம் நாள் கேரள அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே, பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. முதல் ஒப்பந்தத்தில் அணை கட்டுவதால் நீரில் முழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கு வாடகையாக ஆண்டுதோறும் ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாய் பிரிட்டிஷ் நாணயமாக சென்னை அரசாங்கம் திருவாங்கூர் மன்னருக்குத் தர வேண்டும் என்று இருந்தது (திருவாங்கூர் சமஸ்தானத்தில் அப்போது சக்கரம் என்ற பெயரில் வேறு நாணயம் புழங்கி வந்ததால் பிரிட்டிஷ் நாணயம் என்று குறிக்கப்பட்டது).

மின் உற்பத்திக்காக போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில், மூழ்கடிக்கப்பட்ட நிலம் 8000 ஏக்கருக்கு வாடகை 30 ரூபாய் என உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாய் ஆண்டுதோறும் கேரள அரசுக்குத் தமிழ்நாடு அரசு செலுத்தி வருகிறது.

கடந்த 27 ஆண்டுகளாக பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டு விட்டதால், நீரில் மூழ்கும் நிலம் 8000 ஏக்கராக இல்லாமல் 4677 ஏக்கராகக் குறைந்துவிட்டது. இவ்வாறு வெளிப்பட்ட நிலங்களில் கேரள அரசு பலவிதமான சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு 8000 ஏக்கருக்கான வாடகைப் பணத்தினை தவறாமல் செலுத்தி வருகிறது.

முழு நீர்மட்டம் 16 அடி குறைக்கப்பட்டதால் (152 அடியிலிருந்து 136 அடிக்கு) நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 10.4 டி.எம்.சி.யிலிருந்து 6.4 டி.எம்.சி.யாகக் குறைந்துள்ளது. அதனால் பாசனப் பகுதி 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது; 140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின் நிலையத்தில் 40 சதவீதம் உற்பத்திக் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு இந்த நஷ்டத்தினை தாங்கி வருகிறது. முழு நீர்மட்டம் குறைந்ததனால் அணையில் இருந்து வழிந்து போகும் நீர் அதே ஆற்றில் கட்டப்பட்டுள்ள இடுக்கி அணையில் போய்ச் சேருகிறது. அங்கு உற்பத்தியாகும் மின்சக்தி மீண்டும் தமிழ்நாட்டிற்கே விற்கப்படுகிறது.

தமிழ்நாடு தண்ணீர் இழப்பினால் ஏற்படும் நஷ்டத்தோடு, அத் தண்ணீரைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியினை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

இதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ்நாடுதான் ஏதோ குற்றம் செய்துவிட்டதாக கேரள அரசு பேசி வருகிறது. அதற்கும் யாரும் பதில் சொல்லவில்லை.

முழு நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு கொடுத்த பின்பும், கேரள அரசு பணிய மறுக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம் என்கிறது. பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை பயனற்றுப் போனதால்தான், தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தினை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பின்பும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றது. காலம் கடத்துவதற்கான தந்திரமே தவிர வேறில்லை. தமிழ்நாடு அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இவ்வளவு சிக்கலுக்குப் பின்னரும், நம்மால் கட்டப்பட்ட அணை, நமக்குப் பயன்தரும் அணை, கேரள அரசின் பாதுகாவலில் உள்ளது. கேரள காவல்துறையினர்தான் பாதுகாத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது விரும்பத்தக்கத்தல்ல. தமிழ்நாட்டு காவல்துறையினரும் அங்கே இருக்க வேண்டும். இதுவும் உடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

Posted in Agriculture, Dam, Electricity, Farming, hydro-electric, Idukki Dam, Irrigation, Kerala, Madurai, Mullai Periyar, Periyar River, Ramanathapuram, Tamil Nadu, TN, Tourism, Travancore, Tunnel, Water | 5 Comments »

Reynolds Roadside pens sale – Rs. 5 to 5000

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

பேனா விற்பனைக்கு நாடு முழுவதும் “ரெனால்ட்ஸ் ரைட்சைட்’ அங்காடிகள்: விலை ரூ.5 முதல் ரூ.5 ஆயிரம் வரை

சென்னை, அக். 21: பேனா உள்ளிட்ட எழுதுபொருள்கள் விற்பனைக்கென பிரத்யேகமாக, சென்னை உள்பட நாடு முழுவதும் “ரெனால்ட்ஸ் ரைட்சைட்’ சங்கிலித் தொடர் அங்காடிகளைத் திறந்து புதுமை படைத்துள்ளது ஜி.எம்.பென்ஸ் நிறுவனம்.

நாட்டிலேயே முதல் முறையாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த அங்காடிகளில் ரூ.5 முதல் ரூ.5 ஆயிரம் வரை பல ரகப் பேனாக்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம், உள்நாட்டு பேனாக்கள் மட்டுமன்றி வெளிநாட்டுப் பேனாக்களையும் ஒரே இடத்தில் பார்வையிட்டு வாங்கிக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஜி.எம்.பென்ஸ்.

தற்போது,

  • சென்னை,
  • தில்லி,
  • ஹைதராபாத்,
  • இந்தூர்,
  • அகமதாபாத் மற்றும்
  • கொச்சி

ஆகிய இடங்களில் ரெனால்ட்ஸ் ரைட்சைட் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.

  • சண்டீகர்,
  • நொய்டா,
  • ஆக்ரா மற்றும்
  • நாக்பூர் ஆகிய இடங்களில் வரும் மாதங்களில் தொடங்கப்படும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ரெனால்ட்ஸ் ரக பேனாக்கள், புகழ்பெற்ற வெளிநாட்டுப் பேனா ரகங்களான

  • பெரோல்,
  • ரோட்ரிங்,
  • அல்பினோ,
  • கலரிஃபிக் போன்ற பிராண்டுகளும் இங்கு கிடைக்கும் என ஜி.எம்.பென்ஸ் துணைத் தலைவர் விஸ்வதீப் குய்லா கூறியுள்ளார்.

Posted in Foreign Pens, GM pens, Marketing, pens, Reynolds, Reynolds Roadside, sales | Leave a Comment »

Delhi HC imposes cost on MCD for violating RTI Act

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மீறிய தில்லி மாநகராட்சிக்கு அபராதம்

புதுதில்லி, அக். 21: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறிய தில்லி மாநகராட்சிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம்.

ராம் அவதார் யாதவ், தில்லி மாநகராட்சி குடிசை மேம்பாட்டுத் துறையிடம், சாத்ரா பகுதியில் அமைந்துள்ள சட்ட விரோத கட்டடம் பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தருமாறு கோரினார். மாநகராட்சி அதிகாரிகள் உரிய தகவலைத் தருவதற்குப் பதிலாக தில்லி மேம்பாட்டு ஆணையத்தை அணுகுமாறு கூறினார்.

தில்லி மேம்பாட்டு ஆணையத்தை அணுகியும் உரிய தகவலைப் பெற முடியாமல் போகவே ராம் அவதார் யாதவ் தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திர பகத், 6 வாரங்களுக்குள் மனுதாரருக்கு தில்லி மாநாகராட்சி ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Posted in DDA, Delhi, Delhi Development Authority, Delhi Municipality, HC, High Court, MCD, New Delhi, Right To Information, RTI, Shahdara | Leave a Comment »

Internal Affairs Ministry’s cars are stolen in New Delhi

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

தில்லியில் உள்துறை அமைச்சகத்தின் 2 கார்கள் திருட்டு

புதுதில்லி, அக். 21: மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான 2 கார்கள் தில்லியில் கடந்த 2 நாள்களில் காணாமல் போயுள்ளன.

இந்த 2 கார்களிலும் உள்துறை அமைச்சகத்தின் எம்எச்ஏ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதால், தீபாவளி மற்றும் ரம்ஜான் பண்டிகையின் போது அவற்றைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் திருடியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதையடுத்து, தில்லி போலீஸôர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் லோதி கார்டனுக்கு வெளியில் வியாழக்கிழமை காலை மாருதி காரை (எண்: டிஎல்-4சிஜி-4911) விட்டு விட்டு வாக்கிங் சென்றார். அப்போது அந்தக் கார் திருடப்பட்டுள்ளது.

அதேபோல் தெற்கு தில்லியில் கோட்லா முபாரக்பூர் பகுதியில் அதிகாரியின் டிரைவர் வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா பொலீரோ காரும் (எண்: டிஎல்-2சிஎம்-7361) வியாழக்கிழமை திருடுபோயுள்ளது.

இது தொடர்பாக போலீஸôர் திருட்டு வழக்குப் பதிவு செய்து தில்லியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் இந்தக் கார்கள் அதிகபட்ச பாதுகாப்பு உள்ள பகுதிகளுக்கும் எளிதில் சென்று விட முடியும் என்பதால் போலீஸôர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Posted in Crime, HMA, Home Ministry, Internal Affairs Ministry, Investigation, New Delhi, Steal, Tamil, Terrorism, Thief | Leave a Comment »

‘SC Opinion on Creamy Layer is unfortunate’ – CPI(M)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

இட ஒதுக்கீட்டில் “கிரீமி லேயர்’: உச்ச நீதிமன்ற ஆணை பிற்போக்கானது -இந்திய கம்யூனிஸ்ட்

புதுதில்லி, அக். 21: தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு (கிரீமி லேயர்) இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மிகவும் பிற்போக்குத்தனமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதை மாற்றுவதற்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு;

நமது சமுதாயத்தில் உள்ள மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீது நீதித்துறை தொடுத்துள்ள தாக்குதல் இது.

இதை மாற்றவில்லை என்றால், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற லட்சியத்தையே இது தகர்த்துவிடும்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையையும், அதன் அமலாக்கத்தையும் மறுவரையறை செய்திருப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் அத்துமீறி பிரவேசித்துள்ளது.

இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டும் என்பதை, பாரபட்சமற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியது நாட்டின் கொள்கை வகுப்பாளர்களே தவிர, உச்ச நீதிமன்றம் அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு: எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது சரியான நடவடிக்கை அல்ல; இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தில்லியில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறினார்.

Posted in Affluent, AP, Chandrababu Naidu, Communist, CPI(M), Creamy Layer, Judgement, Marxist, Oppression, Reservations, Rich, SC/ST, scheduled castes, scheduled tribes, Second generation, Supreme Court, Telugu, Telugu Desam | Leave a Comment »

‘BJP should have selected Narendra Modi as their leader’ – VHP

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

பாஜகவுக்கு மோடியை தலைவராக்கி இருக்க வேண்டும்: விஎச்பி கருத்து

புது தில்லி, அக். 21: பாரதீய ஜனதா கட்சிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தலைவராக்கி இருக்க வேண்டும்; கட்சித் தலைவராக இருக்கும் ராஜ்நாத் சிங்கை விட அவரே சிறந்த தலைவர் என்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் விஷ்ணு ஹரி டால்மியா கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங்குக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு தெரிவித்த போதிலும், அவரைவிட நம்பிக்கைக்கு உரிய தலைவர் மோடிதான் என்று கூறியிருக்கிறார் டால்மியா.

இந்தி வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் டால்மியா கூறியிருப்பதாவது:

ஆட்சியில் இருக்கும் பொழுது கூட்டணிக் கட்சிகளிடம் அத்வானி சரணடைந்துவிட்டார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் அப்போதைய பாஜ கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; கூட்டணிக் கட்சிகள் எதனிடமிருந்தும் எதிர்ப்பு ஏதும் இல்லாதிருந்தபோதிலும், கோயில் கட்ட ஆர்வம் காட்டவில்லை.

அனைவரும் பதவி சுகத்தை அனுபவிப்பதிலேயே கவனமாக இருந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை விசுவ இந்து பரிஷத் ஆதரிக்காது. அவர்களால் ஏற்கெனவே எங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.

இனிமேலும் எங்களது நம்பகத்தன்மையை இழக்க நாங்கள் தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார் விஷ்ணு ஹரி டால்மியா.

Posted in Advani, Eelctions, Gujarat, Hindutva, Narendra Modi, Rajnath Singh, RSS, support, Uttar Pradesh, VHP, Vishnu Hari Dalmiya | Leave a Comment »

Twenty-five EU leaders talk energy, rights with Putin

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிபொருள் பாதுகாப்பு தொடர்பாக மாநாடு

ஐரோப்பிய ஒன்றியத்தின் 25 நாடுகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் எரிபொருளை உறுதிப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக 25 நாடுகளின் தலைவர்களும் பின்லாந்தில் கூடியிருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளுக்கு தேவையான எரிபொருளையும், எண்ணெயையும், கொடுக்கும் ரஷ்ய நாட்டின் தலைவர் விளாதிமிர் புதின் இவர்களுடன் இன்று இணைந்து கொள்கிறார்.

இன்றைய மகாநாடு ஆரம்பிக்கும் முன் பிரித்தானிய மற்றும் நெதர்லாந்து பிரதமர்கள் கருத்து வெளியிடும் போது, எரிபொருள் தேவை பற்றிய விஷயத்தில் புதிய போக்கு கடைப்பிடிக்கபட வேண்டும் என்றும், கரியமில வாயுவை மிகக்குறைவாக வெளியேற்றும் பொருளாதார திட்டத்தினை ஐரோப்பிய ஒன்றியம் கடைப்பிடித்தால் எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த முடியூம் என்றும், பொருளாதார வளர்ச்சியை நிச்சயமாக அடைய முடியும் என்றும் தெரிவித்தார்கள்.

இது பேரழிவினை ஏற்படுத்த கூடிய காலநிலை மாற்றத்தினை தடுப்பதற்கு உதவும் என்றும் கூறினார்கள். மேலும் பேரழிவு ஏற்பட கூடிய காலநிலையினை இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டு காலத்தில் எட்டி விடுவோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

Posted in Economy, energy, EU, European Union, Fuel, Gas, Imports, oil, Putin | Leave a Comment »

Medecins Sans Frontieres (Doctors without Borders) withdraws from Eezham

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

யாழ் குடாவில் இருந்து வெளியேறியது மருத்துவ தொண்டு நிறுவனம்

யாழ்ப்பாணம் மருத்துவமனை
யாழ்ப்பாணம் மருத்துவமனை

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பையேற்று யாழ் குடாநாட்டில் பருத்தித்துறை அரச வைத்தியசாலையில் மனிதாபிமான பணியாற்றி வந்த மெடிக்கல் சான்ஸ் ஃபிராண்டியர்ஸ் என்ற பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த மனிதாபிமான மருத்துவ தொண்டு நிறுவனம் தனது பணியாளர்களை அங்கிருந்து விலக்கிக்கொண்டதாக அறிவித்துள்ளது.

உள்ளுர் ஊடகங்களில் தமது நிறுவனம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், தனது பணியாளர்களின் விசாக்கள் அரசினால் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் நிறுவனப் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே இந்த முடிவை தாங்கள் எடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகராகிய பாரிஸ் நகரத்தின் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இருவர் இலங்கைக்கு வருகை தந்து நிலைமைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தியதையடுத்து. தமது பணியாளர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு அவர்கள் தொடர்பான புலன் விசாரணைகள் நடைபெறுவதாக அரசு அறிவித்திருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையில் சண்டைகள் தொடரும் பகுதிகளில் அவசியமாகத் தேவைப்படுகின்ற மனிதாபிமான பணிகளை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருக்கின்ற போதிலும் பொய்க்குற்றச்சாட்டுக்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ளதனால் தமது பணிகளை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in doctors, Doctors without Borders, Eezham, France, French, French humanitarian organization, Help, humanitarian, LTTE, Medecins Sans Frontieres, Medicine, NGO, restrictions, Sri lanka, support, Terrorism, Treatment, Violence, Visa | Leave a Comment »

54 Years of family Rule in Aalangudi comes to an end – TN Civic Polls

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

54 ஆண்டுகால வரலாறு மாறியது

ஆலங்குடி, அக்.20: ஆலங்குடி அருகே வடகாடு ஊராட்சியில் 54 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தின் வசமிருந்த ஊராட்சித் தலைவர் பதவி இடம் மாறியது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த வடகாடு ஊராட்சியில், ஊராட்சி ஆரம்பித்த காலமாகிய 1952 முதல் 1972 வரை 20 ஆண்டுகள் எஸ். தங்கவேல் என்பவர் ஊராட்சித் தலைவராக இருந்தார். அவருக்குப்பின் அவரது மகன் த. புஷ்பராஜ் 1972 முதல் 1996 வரையும், பின்னர் அவரது மனைவி 1996 முதல் 2006 வரையும் ஊராட்சித் தலைவராக இருந்தனர்.

மொத்தம் 54 ஆண்டுகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தலைவர் பதவி வகித்து வந்துள்ளனர்.

நடைபெற்ற தேர்தலில் அதே குடும்பத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் தம்பி மகன் தங்கவேல் அதே ஊரைச் சேர்ந்த லெ. சின்னுவை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில் லெ. சின்னு 807 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழரசி புஷ்பராஜை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி கண்டவர்.

Posted in Aalangudi, Chinnu, Civic Polls, dynasty, Elections, family, Local Body, pudhukottai, Pushparaj, Puthukottai, Tamil Nadu, Thamizharasi, Thangavel, TN, vadagadu | 1 Comment »

Chennai Distribution Rights for Vallavan given to Simbu as part of Compensation package

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

“வல்லவன்’ படம் என்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தும்: சிம்பு

சென்னை, அக்.20: “வல்லவன்’ படம் என்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு இயக்கி நடிக்கும் “வல்லவன்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த சூழ்நிலையில் தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

படத்தை நீண்ட நாள்கள் இழுத்து எனக்கு அதிக செலவை ஏற்படுத்திவிட்டார் என்று தயாரிப்பாளரும், பேசியபடி எனக்கு சம்பளம் தரவில்லை என்று சிம்புவும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தனர். பின்னர் சமாதானம் செய்யப்பட்டு படம் வெளிவருவது உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து நடிகர் சிம்பு வியாழக்கிழமை கூறியதாவது:

“வல்லவன்’ படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக சிறிது கால தாமதம் எடுத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் இந்த காலகட்டத்தில் நான் வேறு படங்களில் நடித்திருந்தால் இன்னும் நிறைய சம்பாதித்திருக்க முடியும்.

இந்தப் படத்துக்காக நான், என்னுடைய சம்பளத்தில் பாதிதான் கேட்டேன்.

இயக்குநர் சம்பளமாக படம் வியாபாரமாகும் தொகையில் 15 சதவிகிதமும், மற்ற படங்களில் நடிக்காததால் ஏற்பட்ட இழப்புக்கு சென்னை விநியோக உரிமையும் கேட்டிருந்தேன்.

இதற்கெல்லாம் சம்மதித்த தயாரிப்பாளர் இப்போது நஷ்டம் என்கிறார். படம் நல்ல விலைக்கு வியாபாரமாகியிருக்கிறது. எப்படி பார்த்தாலும் எனக்கு ஒரு கோடி சம்பளம் தர வேண்டும்.

படம் வெளிவர வேண்டும் என்பதற்காக இயக்குநர் சம்பளம் ஒரு கோடி, நடிகர் சம்பள பாக்கி 60 லட்சம் இவை இரண்டையும் வேண்டாம் என்று சொல்லி சென்னை விநியோக உரிமையை மட்டும் பெற்றுக்கொண்டேன். இதுதான் நடந்தது.

நான் விட்டுக்கொடுத்ததற்குக் காரணம் என்னால் இதை விட அதிகம் சம்பாதிக்க முடியும். ஒரு படத்தை இயக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்கும் அளவுக்கு “வல்லவன்’ படம் என்னை உயர்த்தும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.

தயாரிப்பாளர் தேனப்பன் மீது எனக்கு வருத்தமோ, கோபமோ கிடையாது என்றார் சிம்பு.

Posted in Actor salary, Cinema, Compensation, deal, Deepavali Movies, Director, Distribution, Distributor, Diwali Cinema, Nayan Thara, release, rights, Silambarasan, Simbu, Tamil Movies, Thamizh Film, Thenappan, Vallavan | Leave a Comment »

US Visa process in Chennai expedited – Waiting Time to be reduced

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தோரின் காத்திருப்புக் காலம் குறையும்

சென்னை, அக். 20: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்ல விசா கோரி விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் தொடர்பான காத்திருப்பு காலம் குறைய வாய்ப்பு உருவாகியுள்ளதாக தில்லியில் உள்ள அமெரிக்க தூதரக விசா பிரிவு தலைமை அதிகாரி பீட்டர் கெய்ஸ்னர் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:

வரும் டிசம்பருக்குள் மேலும் 30,000 பேருக்கு விசா பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.

இதன் மூலம் ஏற்கெனவே, காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருப்போர் தாமதம் இல்லாமல் முன்னதாகவே தங்களது நேர்காணல் தேதியைப் பெற வாய்ப்பு உருவாகும்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உயர் கல்வி, தொழில் வணிகத்துக்காக தென்னிந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல விசா கோரி ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

எனவே, புதுதில்லி மற்றும் உலகின் பல்வேறு நகரங்களில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலர்கள் சென்னைக்கு அனுப்பப்படுகின்றனர்.

விசா கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து, விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்காவுக்குச் செல்ல விசா பெற வேண்டும் எனில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

தற்போது விண்ணப்பித்த ஒரே வாரத்திலோ அல்லது அதிகபட்சமாக 2 வாரங்களிலே விசா வழங்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விசா பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்க இணை தூதரக அலுவலகத்துக்கு தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், புதுச்சேரி மற்றும் லட்சத் தீவுகளைச் சேர்ந்தவர்கள் விசா கோரி விண்ணப்பிக்கலாம்.

சென்னை அலுவலகம் மூலம் இந்த ஆண்டு 1.43 லட்சம் விண்ணப்பங்களை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் 2006-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை 19 சதவீதம் கூடுதலாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதே கால கட்டத்தில் சென்னை அலுவலகம் மூலம் 12,000 தென்னிந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்க-இந்திய கல்வி வளர்ச்சி, பரிமாற்றத்துக்கு தென்னிந்திய மாணவர்கள் வித்திட்டுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் 80,000 இந்திய மாணவர்கள் உள்ளனர். இதன் மூலம் இருநாடுகளும் மாணவர்களின் கல்வி சார் மையங்களாக மேலும் வலுப்பெற்றுள்ளன.

நடப்பு ஆண்டில் சென்னை அலுவலகம் மூலம் 73,950 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது நடப்பு ஆண்டில் உலக அளவில் அமெரிக்கா வழங்கிய மொத்த விசாக்களின் எண்ணிக்கையில் 20 சதவீதம் ஆகும்.

செப்-11-ல் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட பின் அமெரிக்காவுக்குச் செல்ல விசா வழங்குவதற்கான நடைமுறைகள், விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

போலி கல்விச் சான்றுகள், வங்கி ஆவணங்களைச் சமர்ப்பிப்போரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இதே போல பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் ஏதும் இல்லை என்றார் பீட்டர் கெய்ஸ்னர்.

அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் டேவிட் டி ஹாப்பர் உடனிருந்தார்.

Posted in America, American Visa, Business Visa, Chennai, H-1B, L-1, Madras Consulate, Student Visa, USA, Visa | Leave a Comment »

IAF suffers another jolt as MiG-27 crashes (Sixth for this Year)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது: பைலட் தப்பினார்

சிலிகுரி (மேற்கு வங்கம்), அக். 20: இந்திய விமானப்படையின் மிக் 27 ரக போர் விமானம் ஜல்பைகுரி மாவட்டத்தில் வயல் ஒன்றில் வியாழக்கிழமை விழுந்து நொறுங்கியது. எனினும் பைலட் உயிர் தப்பினார்.

இந்த ஆண்டில் விபத்துக்குள்ளாகும் 6-வது போர் விமானம் இது. உயிர்தப்பிக்க விமானத்திலிருந்து வெளியேறியபோது பைலட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் ஹசிமாரா விமான தள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வயலில் விழுந்த உடனேயே அந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானம் விழுந்ததால் அந்த பகுதி வீடுகள் ஏதாவது சேதம் அடைந்தனவா அல்லது யாராவது உயிரிழந்தனரா என்பது பற்றி உடனடியாக தகவல் இல்லை.

Posted in Aamir Khan, Air Force, crash, Defense, IAF, India, maadhavan, MiG-27, Military, Rang de basanthi, West Bengal | Leave a Comment »

‘DMK Alliance victory is Asurargal’s victory’ – Thol Thirumavalavan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

விடுதலை சிறுத்தைகள் இணைந்ததால் தி.மு.க. கூட்டணியின் வலிமை கூடியிருப்பது நிரூபணம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை, அக்.20-

விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலிலும் 31 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இது கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பது அவருடைய பெருந்தன்மையான – முதிர்ச்சியான தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.

கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் அவரது இயல்பான அணுகுமுறைகளே தி.மு.க. கூட்டணியின் இந்த அமோக வெற்றிக்கு அடிப்படையாகும். விடுதலை சிறுத்தைகளின் வரவால் தி.மு.க. கூட்டணியின் வலிமை மேலும் கூடியிருக்கிறது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக அறிவித்தது, இந்த அமோக வெற்றியின் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்து வரவால் விடுதலை சிறுத்தைகளுக்கு பெரிதும் பயனில்லை என்றாலும், போட்டியிட்ட குறைவான இடங்களில் கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.

குறிப்பாக

  • கடலூர் மாவட்டத்தில் 3 நகராட்சி கவுன்சிலர்கள், 4 பேரூராட்சி கவுன்சிலர்கள்,
  • விழுப்புரம் மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒரு ஊராட்சி மன்ற தலைவர்,
  • தர்மபுரி மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 3 பேரூராட்சி கவுன்சிலர்கள், 5 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர்,
  • பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு பேரூராட்சி கவுன்சிலர்,
  • வேலூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி கவுன்சிலர், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், 8 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒரு ஒன்றிய கவுன்சிலர்,
  • சேலம் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

அத்துடன், தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு மிகப்பெருமளவில் பயன்பட்டிருக்கிறோம் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த தீபாவளி நரகாசுரனை கொன்றதற்காக அல்ல; நரகாசுரனும், நரகாசுரனின் வாரிசுகளும் வென்றதற்காக கொண்டாடப்படும் தீபாவளி ஆகும். தி.மு.க. கூட்டணியின் தேர்தல் வெற்றி அசுரர்களின் வெற்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Posted in Alliance, Asurar, civic elections, Dalit Panthers, DMK, Local Body Polls, Tamil Nadu, Thirumavalavan, Thol Thirumaa, Thol Thirumavalavan, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | Leave a Comment »

Aedes aegypti mosquito – Chikun Kunya & Dengue may be subsided by Rain?

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

சிக்குன் குனியா-டெங்குவை பரப்பும் `ஏடிஸ்’ கொசுக்கள் மழை- குளிரால் அழியும்

புதுடெல்லி,அக்.20-

டெல்லி, தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பல மாநிலங் களில் டெங்கு,சிக்குன் குனியா நோய் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 116 பேர் பலியாகிவிட்டனர்.

6423 பேர்இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்குன் குனியாவால்1663 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகஆஸ்பத்திரியில் ஏராளமானோர் அனுமதிக் பட்டுள்ளனர்.

இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் மத்திய அரசு இதற்காக ரூ.22 கோடியை ஒதுக்கி இருக்கிறது. இந்த நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் டெங்கு மற்றும் சிக்குன் குனியா நோய் கிருமிகள் (வைரஸ்)பரப்பும் `ஏடிஸ்’ கொசுக்களை ஒழிக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டன.

இந்த ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதில் இயற்கையும் ஓரளவுக்கு பங்காற்றுகிறது. இது பற்றி தேசிய நோய் தடுப்புத்துறை இயக்குனர் பி.எல்.ஜோஷி கூறிய தாவது:-

இந்த இரு நோய்களையும் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மழை மற்றும் குளிருக்கு தாக்கு பிடிக்காது. லேசான மழை பெய்தால் கூட இந்த கொசுக்கள் இறந்துவிடும். தொடர்ந்து வெப்பநிலை குறைந்து குளிர் அடித்தாலும் இந்த கொசுக்கள் இறந்துவிடும். இந்த கொசுக்கள் நோய் கிருமிகளை பரப்புவதிலும் கணிசமான அளவுக்கு குறைந்துவிடும்.

ஏடிஸ் கொசுக்களுக்கு 20டிகிரி செல்சியஸ் முதல் 30செல்சியஸ் வெப்ப நிலையில்தான் உயிர் வாழ்கின்றன. அதன் இனப்பெருக்கத்துக்கும் நோய் கிருமிகள் பரப்புவதற்கும் இந்த வெப்ப நிலைதான் தேவை. இதற்கு குறைவான வெப்ப நிலையில் அவை அழிந்து விடும்.

கொசு ஒழிப்பு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிதாக இந்த நோய்களால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Aedes, Aedes aegypti, AIIMS, Chicken Kunya, chiken kunya, Chikun Kunya, Dengue, Health, Healthcare, Mosquito, Outbreak, Rain | Leave a Comment »