வங்கதேசத்தில் தேர்தல்
சில சமயங்களில் சிறிய நாடுகள் மற்ற பல பெரிய நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருப்பது உண்டு. வங்கதேசம் ஒருவகையில் இவ்விதம் வழிகாட்டுகிறது. அதாவது அந்நாட்டில் ஆட்சியில் உள்ள அரசின் பதவிக்காலம் முடிந்தவுடன் அந்த அரசு ராஜிநாமா செய்து விடுகிறது. உடனே தாற்காலிக அடிப்படையில் நடுநிலை அரசு அமைக்கப்படுகிறது. அந்த நடுநிலை அரசின் கீழ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. பதவியில் உள்ள அரசு மறுபடி ஆட்சியைப் பிடிக்கத் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டதாகப் புகார் எழும் வாய்ப்பு இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில் வருகிற ஜனவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை பேகம் காலிதா ஜியா தலைமையில் இருந்த அரசு வங்கதேச அரசியல் சட்டப்படி பதவி விலகிவிட்டது. புதிதாக நடுநிலை அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் யார் தலைமையில் நடுநிலை அரசு அமைய வேண்டும் என்பதில் ஆளுங்கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக, கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டு, கட்சி ஊழியர்களிடையே மோதல்கள் மூண்டன. இதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். இறுதியில் வங்கதேச அதிபர் தலைமையில் நடுநிலை அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா தலைமையிலான எதிர்க்கட்சிக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லைதான். இதுவரை ஆண்டு வந்த வங்கதேச தேசியக் கட்சி இந்த ஏற்பாட்டை வரவேற்றுள்ளது. வங்கதேசத்தில் “நடுநிலை’ அரசின்கீழ் தேர்தல் நடப்பதென்பது இது நான்காவது தடவை.
வங்கதேசத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த இடங்கள் 300. அவையில் பெண்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு தனி ஏற்பாடு பின்பற்றப்படுகிறது. அதாவது தேர்தல் முடிந்த பின்னர் 45 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். தேர்தலில் வென்ற கட்சிகள் தங்களது கட்சி பலத்துக்கு ஏற்ப பெண் உறுப்பினர்களை நியமிக்கின்றனர். பெண் பிரதமர்களே மாறி மாறி ஆண்டு வருகின்ற நாட்டில் இதுகூடச் செய்யப்படவில்லை என்றால் எப்படி?
வருகிற தேர்தலில் பேகம் ஜியா தலைமையிலான வங்கதேச தேசியக் கட்சிக்கும் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கும்தான் பிரதான போட்டி. முன்னாள் அதிபர் எர்சாத் தலைமையிலான ஜாதியக் கட்சிக்கு மக்களிடையே அவ்வளவாக ஆதரவு கிடையாது. 1991 தேர்தலிலும் 2001 தேர்தலிலும் பேகம் ஜியா கட்சி வென்றது. 1996 தேர்தலில் ஷேக் ஹசீனா கட்சி வென்றது.
வங்கதேசத்தில் முன்னர் ஜெனரல் ஜியா தலைமையிலும் பின்னர் ஜெனரல் எர்சாத் தலைமையிலும் ராணுவ ஆட்சி நடந்தது. ஆனாலும் கடந்த 15 ஆண்டுகளாக அந்நாட்டில் ஜனநாயக சக்திகள் நன்கு வேரூன்றி உள்ளதாகச் சொல்லலாம். கடந்த மூன்று தேர்தல்கள் இதற்குச் சான்று. வங்கதேசத்தில் மக்கள்தொகை 14 கோடி. நிலப்பரப்புடன் ஒப்பிட்டால் மக்கள்தொகை அதிகமே.
ஒருசமயம் இது மிக ஏழ்மையான நாடு என்று கருதப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக மெச்சத்தக்க வகையில் பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது. அந்நாட்டில் மிக அதிக அளவுக்கு எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயுவை இந்தியாவுக்கு விற்க வங்கதேசம் முற்பட்டால் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். ஆனால் குறுகிய நோக்குக் கொண்ட இந்திய எதிர்ப்பு சக்திகளின் நிர்பந்தம் காரணமாக இதுவரை ஆண்டு வந்த பேகம் ஜியா அரசு இதற்கு உடன்படவில்லை. தேர்தலுக்குப் பிறகு ஏற்படும் அரசு இது விஷயத்தில் கொள்கையை மாற்றிக் கொண்டால் இரு நாடுகளும் நல்ல பயன் பெற முடியும்.