வேத சூத்ரப்படி மின்சார உற்பத்தி; “நாசா’ சொந்தம் கொண்டாடுகிறது
பெங்களூர், அக். 30: “நாசா’ ஆய்வு மையம் நமது பாரம்பரிய ஆய்வுகளைக் கடத்தி உரிமை கொண்டாடுகிறது என்று அக்ரகாமி இயற்கை மின் உற்பத்தி முறை அமைப்பின் தலைவர் சதிஷ் சந்திரா தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 20 வருடங்களாக மின் உற்பத்தி சம்பந்தமான ஆய்வுகளைச் செய்துவருகிறேன்.
நமது வேதங்களில் உள்ள சூத்திரங்களை ஆய்வு செய்து, அதில் குறிப்பிட்டுள்ள முறைகளில் சோதனை செய்து, வானவெளியில் இருந்து பெறப்படும் சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தேன்.
இதனை விஞ்ஞானிகளிடமும் செய்து காட்டினேன். இதுகுறித்த தகவலை குடியரசுத் தலைவருக்கும் தெரிவித்தேன். அவர் இஸ்ரோவின் அப்போதைய தலைவர் கஸ்தூரிரங்கனுக்கு தெரிவிக்கும்படி என்னை அனுப்பினார்.
நானும் பலருக்கு அனுப்பியும் என் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவின் நாசா பிரதிநிதி இதே திட்டத்தைச் சிறிதும் மாற்றம் இல்லாமல் மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கல்பனா சாவ்லா விபத்தில் இறந்தபோது அந்த விபத்துக்கான காரணம் என்ன என்று நான் நாசாவிற்குக் கடிதம் எழுதினேன். அதில் என் கண்டுபிடிப்பு குறித்தும், விபத்துக்கான காரணம் அதில் தொடர்புள்ளதாகவும் எழுதியிருந்தேன்.
ஆனால் இன்று அவர்கள் தாங்கள் கண்டுபிடித்ததாக அறிவிக்கிறார்கள். இது நமது பாரம்பரிய சொத்து. நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைக் கண்டுபிடித்து தெரிவித்துள்ளனர். இந்த இயற்கை மின் உற்பத்தி குறித்து வேதத்தில் 12 சுலோகத்தில் 650 அட்சரங்களில் தகவல்கள் உள்ளன.
டெக்ஸôஸ் பல்கலைக் கழகத்திலிருந்து வந்த துணைவேந்தர் என்னுடைய தொழில்நுட்பத்தைப் பார்த்து “இன்னும் உங்கள் அரசு இதை அங்கீகரிக்கவில்லையா, எங்கள் நாட்டுக்கு வந்துவிடுங்கள்’ என்று கூறினார்.
ஆனால் என் மூத்தோரின் கண்டுபிடிப்புகள் இந்த நாட்டுக்கே பயன்படவேண்டும்; எனவே என்னுடைய ஆய்வை எந்த பலாபலனும் இல்லாமல் அரசுக்குக் கொடுத்துவிடுகிறேன்.
1,028 தொழில் நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளேன். அனைத்தும் வேதங்களில் உள்ள சூத்திரங்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டவை.
இவற்றை அமெரிக்கா தனது சொந்த கண்டுபிடிப்புகள் என்று நமது சூத்திரங்களை கடத்துகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்தார்.