கடும் தேர்தல் விதிமுறைகள்
சி. வையாபுரி
இரண்டு கட்டமாய் நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் அரங்கேறிய உறவுகள், உறவு முறிவுகள் கட்சித் தாவல்கள் முதல் நடமாடும் கஜானாக்களாக மாறிய வேட்பாளர் பட்டாளங்கள், வேட்பு மனுத் தாக்கல் என்கிற முளைப்பாரி சடங்குகளோடு தள்ளுமுள்ளு வெட்டுக் குத்து ரத்தக்களரி வரையிலும் நிம்மதி கெடச் செய்த மிருகச் சண்டைகள் நம்மைத் தலை குனிய வைத்துள்ளன.
இன்று
- 246 வாக்காளர்களைக் கொண்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் தலா ரூ. 50 ஆயிரம் வரையிலும்,
- 2850 பேர்களைக் கொண்ட தலைவர் தேர்தலில் தலா ரூ. 6 லட்சம் வரையும் செலவழித்ததாகத் தகவல்கள் வருகின்றன. ஏன் இவ்வளவு பணத்தைக் கொட்டி விரயமாக்குகிறார்கள்?
இந்தக் கேள்விக்கு விடையாக ஒரு வேட்பாளர் சொன்னார்:
“”ஐந்து ஆண்டுகளில் உள்ளாட்சித் திட்டங்களுக்காக அரசாங்கப் பணம் குறைந்தது ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலும் ஒதுக்கீடுகள் வரும் போது 10 சதவீத பர்சன்டேஜ் கிடைத்தால் ரூ. 5 முதல் 10 லட்சம் வருகிறதல்லவா?
இதைத் தவிர வேறு எந்த விதத்திலும் லஞ்ச ஊழல் செய்ய மாட்டேன்” என்று சத்தியப் பிரமாணமும் செய்தார்.
அதாவது, 10 சத “பர்சன்டேஜ்’ என்பது லஞ்ச ஊழல் என்கிற குற்றத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வருவாயாகவே கருதப்பட்டு சகல கட்சியினராலும் அங்கீகாரமும் பெற்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இப்படிப்பட்டவர்களால் அவர்களது தொகுதிகள் அடிப்படை வசதிகளைப் பெற்று தன்னிறைவடைந்து விடும் என்று எப்படி நம்ப முடியும்?
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடையும் சம்பா நடவும் மட்டுமன்றி, தாமிரபரணி, ஈரோடு, காலிங்கராயன் ஆயக்கட்டுகளில் விவசாயப் பணிகள் தீவிரமாய் இயங்கிய நேரத்தில் வந்த உள்ளாட்சித் தேர்தல், உழவுப் பணிகளை முடக்கி வைத்தது. ஆள் பற்றாக்குறையினால் விவசாயிகள் அல்லாடிப் போனார்கள்.
ஊராட்சி நிர்வாகங்களெல்லாம் விவசாயம், நெசவு, கிராம சிறு தொழில் புரிகின்ற மேன்மக்களிடமிருந்து தடிக் கொம்பு பேர்வழிகளுக்கு எப்போது கைமாறத் தொடங்கியதோ அப்போதே துளித் துளியாய் இருந்த ஊழல், அருவியாய் பெருகி விட்டது. நம் கிராமங்கள் எப்படி உருப்படும்?
ஐ.நா. சபையின் உலக மக்கள்தொகைக் கண்காணிப்புக் குழு அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. 2008-ம் ஆண்டு இறுதியில் கிராமங்களில் தற்போது 60 சதமாய் இருக்கின்ற மக்கள்தொகை 50 சதமாகச் சுருங்கி நகரங்களில் தற்போது 40 சதமாக உள்ளது 50 சதமாக உயரும் என்று அது எச்சரிக்கை செய்துள்ளது.
வழிகாட்டுதல்களும் சமூக சகோதர வாழ்வும் விவசாயம் மற்றும் கிராமத் தொழில்கள் புத்துயிர் பெறுவதும் கிராமங்களில் தெளிவில்லாமல் உள்ளன. தரமான கல்வி, நம்பகமான சுகாதார மருத்துவ வசதி, தொடர்ந்த வேலைவாய்ப்புகள் இவையும் இங்கு அரிதாகி வருவதுமே கிராமங்களிலிருந்து மக்கள் சாரைசாரையாய் நகரங்களை முற்றுகையிடக் காரணமாகின்றன என்றும் அந்த அறிக்கை விவரிக்கின்றது.
இப்படித் தொடரும் இந்த அவலங்களுக்கு இனி ஒரு தீர்வு வேண்டும். நாட்டில் 60 லட்சம் டன் கோதுமையும் 30 லட்சம் டன் பருப்பு வகைகளும் இறக்குமதியாகியுள்ளன. சென்ற ஆண்டு ஏற்றுமதியில் முதல்நிலை வகித்த இந்தியா இந்த ஆண்டு இறக்குமதியில் முன்னிலை வகிக்கின்றது.
ஆகவே, அடுத்த தேர்தல்களில் வேட்பாளர்கள் வேட்பு மனு செய்வதிலும் ஊரைச் சுற்றுவதிலும் மந்தை மந்தையாய் மக்களைத் திரட்டி கிராமத் தன்னிறைவுக்கான உற்பத்திகள் அனைத்தையும் கூசாமல் முடமாக்கி வெட்டித்தனமாய் காலத்தை விரயமாக்குவதையும் கட்டுப்படுத்த நடத்தை விதிகள் கடினமாக்கப்பட வேண்டும்.
குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரங்களை அரசாங்கமே ஏற்க வேண்டும். எவரும் தனித்தனியாகத் தனி மேடை அமைத்து ஏறி இறங்க அனுமதிக்கக் கூடாது. ஒரே ஊர்க்காரர்கள்தானே? ஒன்றாக ஒரே மேடையில் நின்று தங்களது கொள்கை, வேலைத் திட்டங்களைப் பிரகடனம் செய்வதோடு பிரசாரம் முடிவடைய வேண்டும்.
வாக்குச் சீட்டின் மாதிரிகளை அரசாங்கமே அச்சிட்டு பெரிய அளவில் ஊரில் முக்கியப் பகுதிகளில் விளம்பரம் செய்து விட்டு நேராக வாக்குப் பதிவை முடித்து விட வேண்டும்.
இந்தவிதமான தேர்தல் நடத்தை நெறிகள் மற்றும் விதிகள் யாவும் மாநகரம் வரைக்கும் பொருந்துவதாய் இருத்தல் வேண்டும்.
நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தல் மாபெரும் ஒரு ஜனநாயகத்தின் அடையாளம். ஆமாம்! அப்படித்தான் நாம் எண்ண வேண்டும். ஆனால், நடைபெற்ற விதங்களை எண்ணும்போது நாம் நாகரிகமடைந்த ஒரு சமூக மக்களா அல்லது காட்டு விலங்குகளா என்கிற வருத்தமான கேள்வி மனத்தைக் கோரப்படுத்துகிறது.
இப்படி ஒரு தேர்தல் மறுபடியும் வருமானால், எல்லாமே பாழ்பட்டு அமைதி, நிம்மதி, கலாசாரம் என்பதன் அடையாளங்கள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டுவிடும்.