Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 15th, 2006

Mosquito Menace – Rajapalayam Ku Ganesan : Public Sanity Projects & Environment

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006

கொசுக்களுடன் ஒரு பனிப்போர்

ராஜபாளையம் கு. கணேசன்

“சிங்கத்தைக் கூட அதன் குகைக்கே சென்று சந்திக்கும் ஆற்றல் உள்ள மனிதன், சிறு கொசுவுக்குப் பயந்து பதுங்கிக் கொள்கிறான் ஒரு கொசுவலைக்குள்’ என்று ஒரு புதுக்கவிதை உண்டு. இன்று இது நடைமுறை உண்மையாகி வருகிறது. இந்தியாவில் கொசுக்களை ஒழிக்கும் முறையான திட்டங்கள் தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. என்றாலும், இன்றளவும் கொசுக்கள் ஒழிந்தபாடில்லை. இதற்குக் காரணம், கொடிய நோய்கள் மக்களைப் பாதிக்கும்போது கொசுக்களை ஒழிக்கும் களப்பணிகள் தீவிரமடைவதும், இந்த நோய்கள் குறைந்து வரும்போது, கொசு ஒழிப்பின் மீதான அரசின் அக்கறையும் மக்களின் கவனமும் குறைந்து விடுவதும் வழக்கமாகி விட்டது.

கொசுக்களை ஒழிக்கவும் நோய்களைத் தடுக்கவும் தங்களுக்குத் தெரிந்த “ஆயுதங்’களை, மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் கொசு ஒழிப்புத் திட்டங்களை உற்றுக் கவனித்தால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது – உலகளவில் ஏற்பட்டிருக்கும் நவீன அறிவியல் வளர்ச்சியாலும், புதுப்புது மருத்துவக் கண்டுபிடிப்புகளினாலும் இந்தக் கொசு ஒழிப்பு ஆயுதங்கள்தான் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கின்றனவே ஒழிய, கொசுக்களை மட்டும் நம்மால் ஒழிக்க முடியவில்லை.

1950களில் இந்தியாவில் மலேரியா தீவிரமாகப் பரவி ஏராளமான மரணங்கள் நிகழ்ந்தபோது, “தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத்திட்டம்’ எனும் பெயரில் கொசுக்களுக்கு எதிராக ஒரு போர் 1953-ல் தொடங்கியது. அப்போது நம்மிடம் இருந்த ஒரே ஆயுதம் “டி.டி.டி.’ ( DDT) என்னும் மருந்து மட்டுமே. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இதைச் செயல்படுத்தியதில் இந்தியாவில் மலேரியா பரவுவது வேகமாகக் குறைந்தது; கொசுக்களும் ஓரளவிற்கு ஒழிந்தன. என்றாலும் காலப்போக்கில் இந்தியக் கொசுக்களின் மரபணுக்களில் ஏற்பட்ட “தடாலடி’ மாற்றங்களால் இந்த “டி.டி.டி.’ மருந்தையே எதிர்க்கிற ஆற்றல் அவற்றுக்கு வந்துவிட்டது. இதனால் “தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம்’ எனும் பெயரில் இந்தப் போராட்டத் திட்டங்களை 1958லும் 1977லும் சற்று மாற்றி அமைத்தார்கள். இதன்படி டி.டி.டி. மருந்து பலன் தராத இடங்களில் “லின்டேன்’, “மாலத்தியான்’ போன்ற மருந்துகளைத் தெளித்தார்கள். இதுவும் சில ஆண்டுகளுக்குப் பலன் தந்துவிட்டு மீண்டும் “படுத்து’க் கொண்டது.

காரணம், கொசுக்கள் வாழும் திறந்தவெளிச் சாக்கடைகள், தண்ணீர்த் தொட்டிகள், நீர்சேமிப்புப் பாத்திரங்கள் போன்றவற்றிலிருந்து கொசுக்கள் மீண்டும் மீண்டும் பெருக்கமடைந்து வீடுகளுக்குள் வந்து விடுகின்றன. இந்த “வழிகளை’ அடைக்க வேண்டுமென்றால் “சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேண வேண்டும்; தேங்கும் நீர்நிலைகளில் கொசுக்கள் பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற சுகாதார விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டியது அவசியம்.

என்றாலும் இந்த வழிகளை அடைப்பதற்கு இரண்டு புதிய மருத்துவ ஆயுதங்களும் தயாராயின. ஒன்று, “பைரெத்ரின்’ என்னும் கொசு ஒழிப்புப் புகைமருந்து. மற்றொன்று, கொசுவின் லார்வாக்களை அழிக்கும் “அபேட்’ எனும் நுண்ணுயிரி மருந்து. இவற்றில் “கொசு ஒழிப்புப் புகைமருந்து’ தெருக்களில் புகையாகத் தெளிக்கப்படுவது. இது கொசுக்களின் நரம்புகளைப் பாதித்து அவற்றை உடனடியாகக் கொன்று விடுகிறது. இந்த மருந்தை உட்கொண்ட லார்வாக்களின் உணவுப்பாதை கிழிபட்டு அழியும். அதனால் கொசுப்புழுக்கள் 100% அழிக்கப்படும். என்றாலும் இதற்கு ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்றவற்றின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சிமன்றங்கள் கொசு ஒழிப்பிற்கு என ஒதுக்கும் நிதி மிகக் குறைவு என்பதால் இந்த “ஆயுத’ங்களும் சரியாகச் செயல்படவில்லை.

அதேநேரத்தில், கொசுக்களை ஒழிப்பதற்காக இதுவரை நாம் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகளின் வேதிப்பொருள்கள் அனைத்துமே நீர், நிலம், காற்று இம் மூன்றிலும் நச்சுக்களைக் கலந்து, சுற்றுச்சூழலைப் பாதிக்கத் தொடங்கின; இதை உறுதி செய்யும் விதத்தில், “இந்தியாவில் பெருகிவரும் ஆஸ்துமா போன்ற நெஞ்சக நோய்களுக்கு கொசுக்களை அழிக்கப் பயன்படுத்திய டி.டி.டி. மருந்துதான் காரணம்’ என்று ஓர் ஆய்வு தெரிவித்தது. எனவே, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத விதத்தில், உலக அளவில் கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தப்படும் வேறு “ஆயுத’ங்களைப் பயன்படுத்தலாமா என இந்தியச் சுகாதாரத்துறை யோசித்தது.

நியூசிலாந்தில் ஆண் கொசுக்களின் மரபணுக்களை மாற்றி வைத்து, அவற்றை மலடாக்கி, கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள்.

கொசுக்கடியிலிருந்து தப்பித்தாலே மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்றவற்றிலிருந்தும் தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்குக் கொசுவலைகள் மற்றும் கொசுவிரட்டி வில்லைகளை “ஆயுத’ங்களாகப் பயன்படுத்தலாம் என யோசனை கூறப்பட்டது.

இந்தக் கொசுவிரட்டிகளில் பல வகைகள் உள்ளன. “டைஎதில் டாலுவாமைடு’ அல்லது “டைஎதில் பென்சாமைடு’ எனும் மருந்து உள்ள களிம்பைப் பகல் நேரத்தில் உடலில் பூசிக்கொண்டால் தாற்காலிகமாகக் கொசு கடிப்பதிலிருந்து தப்பிக்கலாம். என்றாலும் இதனால் சிலருக்குத் தோல் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.

அடுத்ததாக, நெருப்பில் புகையும் கொசு ஒழிப்புச் சுருள்கள், மணிக்கட்டில் கட்டப்படும் மருந்துப் பட்டைகள் மற்றும் மின்சாரத்தில் ஆவியாகும் திரவ மருந்துகளும் கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இவற்றில் உள்ள அல்லெத்ரின், பிராலெத்ரின், இன்டலோன், டைமெதில் தாலேட், டைமெதில் கார்பேட் போன்ற வேதிப்பொருள்கள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இவை குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த “ஆயுத’ங்களைச் சந்தையில் விற்பதற்கு ஊடகங்கள் செய்யும் விளம்பரங்களோடு ஒப்பிட்டால் இவற்றின் தகுதி மற்றும் திறன் பற்றி ஐயங்கள் எழுகின்றன.

இவை உண்மையிலேயே செயல்பட்டிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் கொசுக்களே இருக்கக் கூடாது. நிலைமை அப்படி இருக்கிறதா? யோசிக்க வேண்டியதிருக்கிறது.

ஆகவே, இனி மீதமிருக்கும் ஒரே “ஆயுதம்’ கொசுவலைதான். இதனால் நமக்கு அதிகச் செலவில்லை. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை. பயன்படுத்துவது மிக எளிது. பக்கவிளைவுகள் இல்லாதது. அதேநேரத்தில் இதை நாம் சரியாகப் பயன்படுத்தினால்தான் கொசுக்கடியிலிருந்து முழுவதுமாகத் தப்பிக்க முடியும்.

குறிப்பாக, படுக்கப் போகும்போது கொசுவலையைக் கட்டிப் பலனில்லை. ஏனென்றால், வழக்கமாக இருட்டத் தொடங்கும் நேரத்தில்தான் கொசுக்கள் தெருக்களிலிருந்து வீட்டின் மூலை முடுக்குகள், படுக்கைகள் போன்றவற்றை வந்தடையும். ஆகவே அவை வீட்டிற்குள் வருவதற்கு முன்பே – மாலை 5 மணி அளவில் – படுக்கையில் கொசுவலையைக் கட்டிவிட வேண்டும். அப்போதுதான் கொசு நம்மைக் கடிக்காது. சரி, கூட்டுக்குடும்பங்களுக்கு இது சரிப்படும். வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் என்ன செய்வது? காலையில் அலுவலகம் கிளம்பும்போதே கொசுவலையைக் கட்டிவிட வேண்டியதுதான். வேறு வழி?

Posted in airborne, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chickenkunya, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, DDT, Dengue, Dichloro-diphenyl-trichloroethane, Disease, Environment, Health, Infection, Mosquito, Outbreak, Sanity, Tamil, Waterborne | 1 Comment »

Mamata’s hunger strike enters eleventh day over TATA car project Singur issue

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006

திசைமாறும் போராட்டம்

மம்தா பானர்ஜி 11 வது நாளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் சிங்குர் என்ற இடத்தில் டாடா நிறுவனம் தொடங்கவுள்ள சிறு கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளை மாநில அரசு கட்டாயப்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்துகிறது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அக்கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் 12,000 விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி 1000 ஏக்கர் நிலத்தை வாங்குவது நியாயமா? என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேள்வி.

இதனை மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ய மறுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விரிவான “கட்டுரை-பதில்’ கொடுத்துள்ளார். “”மம்தாவின் குற்றச்சாட்டு உண்மையல்ல. அனைவரும் நிலத்தை விற்க ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். சுமார் 9000 விவசாயிகள் ரூ.131 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த நிலம் ஒரு போகம் விளையும் பூமிதான். சிங்குரில் விவசாய நிலங்கள் விற்கப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டில் 572 பேர், 300 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள். சிங்குரில் நிலத்தை விற்க யாரும் விரும்பவில்லை, நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது பொய்” என்று விரிவான ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் பதில் கொடுத்துள்ளார். இனி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அனுமதிக்கப் போகும் மாநிலங்கள், பிருந்தா காரத்தின் பதில்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் ஆச்சரியமில்லை.

மாநில அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து இப்போது பிரச்சினை வர்த்தக திசைக்குப் பாய்ந்துள்ளது. டாடா பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார் மம்தா.

விவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனத்துக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது யாரும் எதிர்பார்க்காதது. இந்த போராட்டத்துக்கு முன்பே, நிருபர்களிடம் பேட்டி அளித்த மம்தா, தாங்கள் டாடா நிறுவனத்தையோ தொழில்மயமாக்கலையோ எதிர்க்கவில்லை என்றார்.

டாடா நிறுவன பொருள்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு டாடா கார் தொழிற்சாலையின் பங்குகளைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

சிங்குர் பகுதியில் நிலத்தை இழப்போர், வேலையிழக்கும் விவசாயத் தொழிலாளர்கள் என சுமார் 35000 பேர் வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடும். விவசாயத்தை மட்டுமே அறிந்த, வேறு தொழில் தெரியாத இந்த ஏழை மக்களின் கைகளில் இழப்பீட்டுத் தொகை வெகுசீக்கிரத்தில் கரைந்துவிடும். மீண்டும் வறுமையில் வாடுவார்கள்.

டாடா நிறுவனம் பல தொழில்களில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனம். இரும்புத் தொழிலை உலக அளவில் விரிவு செய்யவுள்ளது. நிலத்தை விற்கும் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையில் 75 சதவீதத்தை சம-பங்குகளாக டாடா நிறுவனம் வழங்க வலியுறுத்தினால், அது உண்ணாவிரதம், புறக்கணிப்பு இவற்றைவிட உண்மையான காந்தியமாக அமையும்.

1000 ஏக்கரில் சிங்குர் கார் தொழிற்சாலை நில குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம்

கோல்கத்தா, மார்ச் 10: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், ரூ. 1 லட்சம் சிறிய கார் தொழிற்சாலை அமைப்பதற்கான 997 ஏக்கர் நில குத்தகை ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.

ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் (நிதி) ஆர்.எஸ். தாக்குர், மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷன் சார்பில் மாநில தொழில்துறைச் செயலர் சபியாசச்சி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நிலக்குத்தகை ஒப்பந்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்தக் கார் தொழிற்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பயிர் செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 25 நாள்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

உண்ணாவிரதத்தை மம்தா பானர்ஜி ஜனவரி 25-ம் தேதி கைவிட்ட ஒரு வாரத்தில், கார் தொழிற்சாலை அமைக்க நிலத்தை சமன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் டாடா நிறுவனத்தை மேற்கு வங்க அரசு அனுமதித்தது.

திரிணமூல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் போராட்டம் படிப்படியாக வலுவிழந்த நிலையில், நில குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட 997.11 ஏக்கர் நிலத்துக்காக ரூ. 120 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மத்தியில் ரூ. 1 லட்சம் கார் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in Agriculture, Communism, Communists, CPI, CPI (M), deal, Displaced, Economy, Factory, Farmers, Farming, Industrialization, Kolkata, Mamata Banerjee, Mamtha, Marxist, Marxist Communist, Medha Patkar, peasants, Pozhichaloor, Protest, residents, Singur, Strikes, Tamil, TATA, TMC, Trinamool Congress, Trinamul, WB, West Bengal, workers | 1 Comment »

Fourth Chennai International Film Festival from Dec 15 to 22

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006

சென்னையில் இன்று முதல் சர்வதேச திரைப்பட விழா: 40 நாடுகளைச் சேர்ந்த 102 படங்கள் திரையிடப்படுகின்றன

சென்னை, டிச.15:சென்னையில் டிச.15 முதல் 22 வரை நான்காவது சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 40 நாடுகளைச் சேர்ந்த 102 படங்கள் திரையிடப்படுகின்றன.

இவ்விழாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெள்ளிக்கிழமை (டிச.15) மாலை 6 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் தொடங்கி வைக்கிறார். மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஐசிஏஎஃப் தலைவர் எஸ்.சி.நாயக், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.

இவ்விழா உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்குகளிலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கிலும் நடைபெறுகிறது.

இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ஐசிஏஎஃப்), தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் இணைந்து இத்திரைப்பட விழாவை நடத்துகின்றன. பல நாடுகளைச் சேர்ந்த பிரபல இயக்குநர்களின் சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன. அந்தப் படங்களில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் இவ்விழாவுக்காக சென்னை வந்துள்ளனர்.

இந்தியா சார்பாக

  • “சிருங்காரம்’,
  • “ஜோமதி’,
  • “பாங் கனெக்ஷன்’,
  • “மை டாட்டர்’ போன்ற படங்கள் திரையிடப்படுகின்றன.

Posted in Bong Connection, Chennai, China, Cine Appreciation, Cinema, Dayanidhi maran, December, IFFI, Indian Films, Indo-Korean, International Film Festival, Jomathy, Madras, Movies, My Daughter, Pedro Almodovar, South Korea, Spanish, Srungaram, Sudhish Kamath, Tamil, That four letter word, Volver | Leave a Comment »

Sanjay Subramanian gets Sangeetha Kalasarathy Award from Sri Parthasarathy Sabha

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006

சஞ்சய் சுப்ரமணியத்துக்கு சங்கீத கலாசாரதி விருது

சென்னை, டிச. 15: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபையின் சார்பில் “சங்கீத கலாசாரதி விருது’ சஞ்சய் சுப்ரமணியத்துக்கு சனிக்கிழமை (டிச.16) வழங்கப்படுகிறது. நல்லி குப்புசாமி தலைமையில் இந்த விருது வழங்கும் விழா மயிலாப்பூரில் உள்ள வித்யா பாரதி அரங்கில் நடைபெறுகிறது. பார்த்தசாரதி சுவாமி சபையின் இசைத் திருவிழா டிசம்பர் 16 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Posted in Awards, Functions, Kutchery, Margazhi, music, Nalli Kuppusamy, Sangeetha Kalasarathy, Sanjay Subramanian, Season, Singer, Sri Parthasarathy Sabha, Tamil, Vidya Bharathy | Leave a Comment »