Mosquito Menace – Rajapalayam Ku Ganesan : Public Sanity Projects & Environment
Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006
கொசுக்களுடன் ஒரு பனிப்போர்
ராஜபாளையம் கு. கணேசன்
“சிங்கத்தைக் கூட அதன் குகைக்கே சென்று சந்திக்கும் ஆற்றல் உள்ள மனிதன், சிறு கொசுவுக்குப் பயந்து பதுங்கிக் கொள்கிறான் ஒரு கொசுவலைக்குள்’ என்று ஒரு புதுக்கவிதை உண்டு. இன்று இது நடைமுறை உண்மையாகி வருகிறது. இந்தியாவில் கொசுக்களை ஒழிக்கும் முறையான திட்டங்கள் தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. என்றாலும், இன்றளவும் கொசுக்கள் ஒழிந்தபாடில்லை. இதற்குக் காரணம், கொடிய நோய்கள் மக்களைப் பாதிக்கும்போது கொசுக்களை ஒழிக்கும் களப்பணிகள் தீவிரமடைவதும், இந்த நோய்கள் குறைந்து வரும்போது, கொசு ஒழிப்பின் மீதான அரசின் அக்கறையும் மக்களின் கவனமும் குறைந்து விடுவதும் வழக்கமாகி விட்டது.
கொசுக்களை ஒழிக்கவும் நோய்களைத் தடுக்கவும் தங்களுக்குத் தெரிந்த “ஆயுதங்’களை, மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் கொசு ஒழிப்புத் திட்டங்களை உற்றுக் கவனித்தால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது – உலகளவில் ஏற்பட்டிருக்கும் நவீன அறிவியல் வளர்ச்சியாலும், புதுப்புது மருத்துவக் கண்டுபிடிப்புகளினாலும் இந்தக் கொசு ஒழிப்பு ஆயுதங்கள்தான் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கின்றனவே ஒழிய, கொசுக்களை மட்டும் நம்மால் ஒழிக்க முடியவில்லை.
1950களில் இந்தியாவில் மலேரியா தீவிரமாகப் பரவி ஏராளமான மரணங்கள் நிகழ்ந்தபோது, “தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத்திட்டம்’ எனும் பெயரில் கொசுக்களுக்கு எதிராக ஒரு போர் 1953-ல் தொடங்கியது. அப்போது நம்மிடம் இருந்த ஒரே ஆயுதம் “டி.டி.டி.’ ( DDT) என்னும் மருந்து மட்டுமே. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இதைச் செயல்படுத்தியதில் இந்தியாவில் மலேரியா பரவுவது வேகமாகக் குறைந்தது; கொசுக்களும் ஓரளவிற்கு ஒழிந்தன. என்றாலும் காலப்போக்கில் இந்தியக் கொசுக்களின் மரபணுக்களில் ஏற்பட்ட “தடாலடி’ மாற்றங்களால் இந்த “டி.டி.டி.’ மருந்தையே எதிர்க்கிற ஆற்றல் அவற்றுக்கு வந்துவிட்டது. இதனால் “தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம்’ எனும் பெயரில் இந்தப் போராட்டத் திட்டங்களை 1958லும் 1977லும் சற்று மாற்றி அமைத்தார்கள். இதன்படி டி.டி.டி. மருந்து பலன் தராத இடங்களில் “லின்டேன்’, “மாலத்தியான்’ போன்ற மருந்துகளைத் தெளித்தார்கள். இதுவும் சில ஆண்டுகளுக்குப் பலன் தந்துவிட்டு மீண்டும் “படுத்து’க் கொண்டது.
காரணம், கொசுக்கள் வாழும் திறந்தவெளிச் சாக்கடைகள், தண்ணீர்த் தொட்டிகள், நீர்சேமிப்புப் பாத்திரங்கள் போன்றவற்றிலிருந்து கொசுக்கள் மீண்டும் மீண்டும் பெருக்கமடைந்து வீடுகளுக்குள் வந்து விடுகின்றன. இந்த “வழிகளை’ அடைக்க வேண்டுமென்றால் “சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேண வேண்டும்; தேங்கும் நீர்நிலைகளில் கொசுக்கள் பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற சுகாதார விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டியது அவசியம்.
என்றாலும் இந்த வழிகளை அடைப்பதற்கு இரண்டு புதிய மருத்துவ ஆயுதங்களும் தயாராயின. ஒன்று, “பைரெத்ரின்’ என்னும் கொசு ஒழிப்புப் புகைமருந்து. மற்றொன்று, கொசுவின் லார்வாக்களை அழிக்கும் “அபேட்’ எனும் நுண்ணுயிரி மருந்து. இவற்றில் “கொசு ஒழிப்புப் புகைமருந்து’ தெருக்களில் புகையாகத் தெளிக்கப்படுவது. இது கொசுக்களின் நரம்புகளைப் பாதித்து அவற்றை உடனடியாகக் கொன்று விடுகிறது. இந்த மருந்தை உட்கொண்ட லார்வாக்களின் உணவுப்பாதை கிழிபட்டு அழியும். அதனால் கொசுப்புழுக்கள் 100% அழிக்கப்படும். என்றாலும் இதற்கு ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்றவற்றின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சிமன்றங்கள் கொசு ஒழிப்பிற்கு என ஒதுக்கும் நிதி மிகக் குறைவு என்பதால் இந்த “ஆயுத’ங்களும் சரியாகச் செயல்படவில்லை.
அதேநேரத்தில், கொசுக்களை ஒழிப்பதற்காக இதுவரை நாம் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகளின் வேதிப்பொருள்கள் அனைத்துமே நீர், நிலம், காற்று இம் மூன்றிலும் நச்சுக்களைக் கலந்து, சுற்றுச்சூழலைப் பாதிக்கத் தொடங்கின; இதை உறுதி செய்யும் விதத்தில், “இந்தியாவில் பெருகிவரும் ஆஸ்துமா போன்ற நெஞ்சக நோய்களுக்கு கொசுக்களை அழிக்கப் பயன்படுத்திய டி.டி.டி. மருந்துதான் காரணம்’ என்று ஓர் ஆய்வு தெரிவித்தது. எனவே, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத விதத்தில், உலக அளவில் கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தப்படும் வேறு “ஆயுத’ங்களைப் பயன்படுத்தலாமா என இந்தியச் சுகாதாரத்துறை யோசித்தது.
நியூசிலாந்தில் ஆண் கொசுக்களின் மரபணுக்களை மாற்றி வைத்து, அவற்றை மலடாக்கி, கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள்.
கொசுக்கடியிலிருந்து தப்பித்தாலே மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்றவற்றிலிருந்தும் தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்குக் கொசுவலைகள் மற்றும் கொசுவிரட்டி வில்லைகளை “ஆயுத’ங்களாகப் பயன்படுத்தலாம் என யோசனை கூறப்பட்டது.
இந்தக் கொசுவிரட்டிகளில் பல வகைகள் உள்ளன. “டைஎதில் டாலுவாமைடு’ அல்லது “டைஎதில் பென்சாமைடு’ எனும் மருந்து உள்ள களிம்பைப் பகல் நேரத்தில் உடலில் பூசிக்கொண்டால் தாற்காலிகமாகக் கொசு கடிப்பதிலிருந்து தப்பிக்கலாம். என்றாலும் இதனால் சிலருக்குத் தோல் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.
அடுத்ததாக, நெருப்பில் புகையும் கொசு ஒழிப்புச் சுருள்கள், மணிக்கட்டில் கட்டப்படும் மருந்துப் பட்டைகள் மற்றும் மின்சாரத்தில் ஆவியாகும் திரவ மருந்துகளும் கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இவற்றில் உள்ள அல்லெத்ரின், பிராலெத்ரின், இன்டலோன், டைமெதில் தாலேட், டைமெதில் கார்பேட் போன்ற வேதிப்பொருள்கள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இவை குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த “ஆயுத’ங்களைச் சந்தையில் விற்பதற்கு ஊடகங்கள் செய்யும் விளம்பரங்களோடு ஒப்பிட்டால் இவற்றின் தகுதி மற்றும் திறன் பற்றி ஐயங்கள் எழுகின்றன.
இவை உண்மையிலேயே செயல்பட்டிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் கொசுக்களே இருக்கக் கூடாது. நிலைமை அப்படி இருக்கிறதா? யோசிக்க வேண்டியதிருக்கிறது.
ஆகவே, இனி மீதமிருக்கும் ஒரே “ஆயுதம்’ கொசுவலைதான். இதனால் நமக்கு அதிகச் செலவில்லை. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை. பயன்படுத்துவது மிக எளிது. பக்கவிளைவுகள் இல்லாதது. அதேநேரத்தில் இதை நாம் சரியாகப் பயன்படுத்தினால்தான் கொசுக்கடியிலிருந்து முழுவதுமாகத் தப்பிக்க முடியும்.
குறிப்பாக, படுக்கப் போகும்போது கொசுவலையைக் கட்டிப் பலனில்லை. ஏனென்றால், வழக்கமாக இருட்டத் தொடங்கும் நேரத்தில்தான் கொசுக்கள் தெருக்களிலிருந்து வீட்டின் மூலை முடுக்குகள், படுக்கைகள் போன்றவற்றை வந்தடையும். ஆகவே அவை வீட்டிற்குள் வருவதற்கு முன்பே – மாலை 5 மணி அளவில் – படுக்கையில் கொசுவலையைக் கட்டிவிட வேண்டும். அப்போதுதான் கொசு நம்மைக் கடிக்காது. சரி, கூட்டுக்குடும்பங்களுக்கு இது சரிப்படும். வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் என்ன செய்வது? காலையில் அலுவலகம் கிளம்பும்போதே கொசுவலையைக் கட்டிவிட வேண்டியதுதான். வேறு வழி?
bsubra said
யாழ்குடா நாட்டில் சிக்குன் குன்யா ஒயவில்லை
இலங்கையின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சிக்குன் குன்யா காய்ச்சலினால் யாழ் குடாநாட்டில் மாத்திரம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது அங்கு நிலவுகின்ற நெருக்கடி மிக்க சூழ்நிலையில் இந்த நோய்த்தாக்கம் அங்குள்ள மக்களை மோசமாக வாட்டி வதைப்பதாக பலரும் தெரிவிக்கின்றார்கள்.
சிக்குன் குன்யா நோய் காரணமாக கடந்த சில வாரங்களில் பத்துக்கும் மேற்பட்ட வயோதிபர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிக்குன் குன்யா நோயினால் பாதிக்கப்பட்ட பலர் கிராமப்பகுதிகளில் இருந்து தாமதமாகவே யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருவதாகவும், இதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை சிலருக்குப் பயனளிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சிக்குன் குன்யா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய்வாய்ப்பட்டுள்ள வேளையில் வழங்கப்படுகின்ற பானங்கள், உணவுகளைத் தற்போதைய யாழ்ப்பாணச் சூழலில் தங்களால் வழங்க முடியாதிருப்பதாகவும் பலரும் தெரிவிக்கின்றார்கள்.
டெங்கு எனப்படுகின்ற உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நோயைப் பரப்புகின்ற ஒருவகை கொசுக்களாலேயே சிக்குன் குன்யா காய்ச்சல் பரப்பப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், எலும்புகளைப் பாதித்து அளவற்ற வலியை ஏற்படுத்தி, உடலைக் கூனிக் குறுகச் செய்யும் சிக்குன் குன்யா உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய நோயல்ல என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.