Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 14th, 2006

Sunil Dutt’s home in illegal occupation list

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பதவி போன பிறகும் அரசு வீட்டை காலி செய்ய மறுக்கும் “மாஜி’க்கள்: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

புதுதில்லி, டிச. 15: முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு ஒதுக்கப்பட்டவற்றில் 298 வீடுகள் இன்னும் காலி செய்யப்படாமல் இருக்கின்றன.

இறப்பு அல்லது பதவிக்காலம் முடிந்த பிறகு அரசு வீட்டில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்போர் பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. இதில்

  • முன்னாள் மத்திய அமைச்சர் சுனில் தத்,
  • அமைச்சராக இருந்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் கே. சந்திர சேகர் ராவ் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சுனில் தத் இறந்த பிறகும் அவருக்கு வழங்கப்பட்ட வீடு சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்திர சேகர் ராவ் பதவியில் இருந்து விலகிய பிறகும் அவரது அரசு வீடு காலி செய்யப்படவில்லை.

இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் அஜய் மகான் பேசியது:

சட்ட விரோதமாக அரசு வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து இதுவரை 9 புகார்கள் அரசுக்கு வந்திருக்கின்றன. இவ்வீடுகளை விரைவில் காலி செய்யுமாறு அவற்றில் குடியிருப்போரைக் கேட்டுள்ளோம். சட்டவிரோதமாக குடியிருப்போரை வெளியேற்றும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு சட்டத்தில் வழியிருப்பதால் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க முடியவில்லை என்றார் அமைச்சர்.

Posted in Ajay Maken, Cabinet, Directorate of Estates, encroachment, Eviction of Unauthorised Occupants, Government, Indian MPs, K Chandra Shekhar Rao, MP, Public Premises, Sunil Dutt, Tamil, TRS, Tughlak Road, Union Minister, Urban Development | Leave a Comment »

Trade union strike shuts down three communist-ruled states

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பொது வேலைநிறுத்தத்துக்கு நாடு முழுவதும் ஓரளவு ஆதரவு: மேற்கு வங்கம், கேரளத்தில் முழு வெற்றி – ரூ.2000 கோடி இழப்பு: “அசோசெம்’ தகவல்

புது தில்லி, டிச. 15: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பொருளாதார மற்றும் தொழிற் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதித்தது.

குறிப்பாக இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றது.

அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரிவான சட்டம் இயற்றுவது, அரசுப் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் நிறைவேற்றுவதைத் தடை செய்வது, லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்துக்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்தன.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் ரயில், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதேபோல் மருந்து தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் மற்றும் சிறு வணிகர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

நாட்டின் சில இடங்களில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வணிகர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாநிலத்தில் தொழில் நகரங்களான பாரக்பூர், துர்காபூர் மற்றும் ஹூக்ளியில் தொழிற்சாலைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. விவசாயிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். நிலக்கரி சுரங்கங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தேயிலைத் தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்த வேலைநிறுத்தத்தில் அனைத்துத் தரப்பினரும் தாங்களாகவே முன்வந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது என்று சிஐடியு.வின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஷியாமளா சக்கரவர்த்தி தெரிவித்தார். அதேசமயம் மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வித பாதிப்புமின்றி வழக்கம்போல் இயங்கின.

கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றதால் ரூ.2000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை கூட்டமைப்பான “அசோசெம்’ தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 39 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் மற்றும் தபால்துறைப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் அமைப்பு ரீதியிலான தொழிலாளர்கள் 30 லட்சம் பேர் பங்கேற்றனர். மாநிலத்தில் தடையுத்தரவை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

பொது வேலைநிறுத்தம்: திருப்பூரில் ரூ.30 கோடி உற்பத்தி பாதிப்பு

திருப்பூர், டிச. 15: மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக திருப்பூரில் 60 சதத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்படாததால் சுமார் ரூ.30 கோடி மதிப்பிற்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த பொது வேலைநிறுத்தத்தால் திருப்பூரில் 60% பனியன் நிறுவனங்கள், சார்பு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. நகரில் நடந்த பொது வேலைநிறுத்தத்திற்கு சிஐடியூ, ஏஐடியூசி ஆகிய 2 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

எம்எல்எப், ஏடிபி, ஐஎன்டியூசி, எல்பிஎப் ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.

பொது வேலைநிறுத்தத்தினால், பனியன் நிறுவனங்களில் சுமார் ரூ.30 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கிகள் முழுஅளவில் செயல்படாததால், அன்னியச் செலாவணி பரிமாற்றமும் தடைப்பட்டது.
பொது வேலைநிறுத்தம்: 38 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

சென்னை, டிச. 15: தமிழகம் முழுவதும் நடந்த பொதுவேலை நிறுத்தம் தொடர்பான மறியல் போராட்டத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் 4,417 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின. மாநில அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் வழக்கம் போல் இயங்கின.

ஆனால் வங்கி, இன்சூரன்ஸ் அலுவலங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

மாநிலம் முழுவதும்: மாநிலம் முழுவதும் 340 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. 13 இடங்களில் ரயில் மறியல் நடந்தது. இதுதொடர்பாக, 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் சிவபுண்ணியம், உலகநாதன், ராஜசேகரன் ஆகியோர் கைதாகினர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சென்னையில் அண்ணா சாலை, அண்ணா சிலை, தி.நகர், பாரிமுனை, குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் மேற்கொண்டனர்.

Posted in Activists, AITUC, Arrest, Banks, Chennai, CITU, Communism, Communist parties, Communists, CPI, CPI(M), Disruption, Economy, Factory, Finance, Imapct, India, Insurance, Kerala, Kolkata, Labor, Labour, Law, Left, Madras, Mraxist Communist, Order, Orissa, Police, PSU, SBI, Strike, Tamil, Tiruppur, trade unions, Tripura, unemployment, UPA, WB, West Bengal, Worker | Leave a Comment »

LTTE ideologue Anton Balasingham passes away due to bile duct cancer (cholangiocarcinoma)

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

அன்டன் பாலசிங்கம் காலமானார்

அன்டன் பாலசிங்கம்
அன்டன் பாலசிங்கம்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் இன்று இலண்டன் நகரில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.

இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கும் மேலாக விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றியதாகக் கருதப்படும் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள், இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில், விடுதலைப் புலிகள் குழுவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் அவர் இருந்திருக்கிறார்.

பல ஆண்டு காலமாக இலண்டன் நகரில் வசித்து வரும் ஆண்டன் பாலசிங்கம் சில மாதங்களாகவே கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் இரங்கல்

தமிழீழத்தின் ராஜகுருவாக திகழ்ந்த அன்டன் பாலசிங்கத்தை பிரிந்து தமிழ் இனம், ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது என்று அன்டன் பாலசிங்கத்தின் இல்லத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்டன் பாலசிங்கம் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் முழ்கியுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

விமர்சகர் கருத்து

பாலசிங்கத்தின் மறைவு விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் என்று கனடாவில் இருக்கும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.

 பாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது

 

விடுதலைப் புலிகள்

முதலில் இடது சாரி சிந்தனையாளராக இருந்த பாலசிங்கம், பிறகு தமிழ் தேசிய சிந்தனையாளராக மாறியதாகக் குறிப்பிட்ட டி பி எஸ் ஜெயராஜ், போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு சிக்கல்கள் வரும்போதெல்லாம், அந்த சிக்கலில் இருந்து புலிகளை அரசியல் ரீதியாக மீட்க பாலசிங்கம் பாடுபட்டார் என்றார்.

ஆனால் அதே சமயம், ஆயுதப் போராட்டத்தை அரசியல்ரீதியாக வழிநடத்துவதற்கு பதிலாக, ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டதாகவும் டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.

Posted in Adele Ann, Anton Balasingham, Australia, bloodshed, British High Commission, cancer, cholangiocarcinoma, Colombo, diabetes, Eelam, Eezham, insulin, IPKF, Jaffna, journalist, London, LTTE, Marxism, moderate, Negotiator, Norway, Peace, Prabhakaran, Psychology, Rajiv Gandhi, Sri lanka, Stanislaus, strategist, Tamil Eelam, Tamil nationalism, Viduthalai Puli, Viduthalai Puligal | 2 Comments »

Haniya cuts short Arab tour amid Hamas-Fatah tension

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பாலத்தீனப் பிரதமர் காசா செல்வதை தடுத்தது இஸ்ரேல்

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா
பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா

மத்திய கிழக்கில் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலுள்ள ரஃபாஹ் பாதையை ஹமாஸ் தீவிரவாதிகள் தகர்த்துள்ளார்கள்.

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா காசாவிற்கு திரும்புவதை தடுப்பதற்காக இஸ்ரேல் அந்த எல்லைப்புறப் பாதையை மூடியது.

அந்த எல்லையின் பாலத்தீனப் பகுதியில் உள்ள நிலையை தகர்த்து சென்ற ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்கள் தற்போது அதனை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள்.

காசா பகுதிக்குள் 30 மில்லியன் டாலர் பணத்தை இஸ்மாயில் ஹனியா எடுத்துச் செல்வதை தவிர்க்கும் முகமாகத்தான் இந்த எல்லை மூடப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ஹமாஸ் தலைமையிலான பாலத்தீன நிர்வாகம் தனது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது.

————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜூன், 2007 – பிரசுர நேரம் 16:40 ஜிஎம்டி

காசா மோதல்கள் மேற்குக்கரைக்கும் பரவியுள்ளன

காசாவில் நடக்கும் கடுமையான மோதல்கள் இப்போது மேற்குக்கரை நகரான நப்லஸுக்கும் பரவியுள்ளன.

அங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும், பத்தா அமைப்புக்கு ஆதரவான அல் அக்ஸா பிரிகேட் உறுப்பினர்களுக்கும் இடையில் மோசமான துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதை பிபிசி செய்தியாளர் பார்த்திருக்கிறார்.

காசாவில், பிராந்தியம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடைகள், தான் அந்த ஸ்தம்பித நிலையில் இருந்து தப்பிவருவதற்கு தடையாக இருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவில் பத்தா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சேவையின் கட்டிடம் ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெடிவைத்துத் தகர்த்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மீது, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்குக்கான மூத்த இணைப்பாளர் மைக்கல் வில்லியம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


சண்டைகளை நிறுத்துமாறு பல தரப்பினரும் கோரிக்கை

 

காசாவில் தற்போது இடம்பெறுகின்ற, குறைந்தது 60 பேர் பலியாகக் காரணமான சண்டைகளை, மூடத்தனமான சண்டை என்று வர்ணித்துள்ள பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், சண்டையில் ஈடுபடும் தரப்பினரை மோதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

பத்தா அமைப்புக்குத் தலைமை தாங்கும் அப்பாஸ் அவர்கள், இந்த வன்செயல்கள் காசாவை ஒரு வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இந்தச் சண்டைகள் பாலத்தீனர்களின் லட்சியத்துக்கு ஒரு அழிவாக அமையும் என்று அரபு லீக்கின் தலைவரான அம்ர் மௌஸா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா ஆகியவையும் மோதல் நிறுத்தம் தேவை என்று கோரியுள்ளன.

காசாவில் தமது பாலத்தீன நிவாரணப் பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தமது நிவாரணப் பணிகளை இடைநிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.


இஸ்ரேலிய அதிபரானார் ஷிமொன் பெரஸ்

பெரஸ்
பெரஸ்

இஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான ஷிமோன் பெரஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல் சுற்றில் பெரஸ் அவர்களுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்ததன் காரணமாக, அவரை எதிர்த்து நின்ற இரண்டு வேட்பாள்களும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியதன் பிறகு, தற்போதைய இஸ்ரேலிய ஐனாதிபதி மோஷே கட்சவ், பணிக்கு செல்லாமல் விடுப்பில் உள்ளார்.

7 ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் கதீமா கட்சியைச் சேர்ந்த பியர்ஸ், காட்சவ்விடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஜூன், 2007 – பிரசுர நேரம் 15:02 ஜிஎம்டி

பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர் ஃபத்தா அமைப்பினர்

மேற்குக்கரை நகரான ரமல்லாவில் உள்ள பாலத்தீன நாடாளுமன்ற கட்டிடத்தில் ஃபத்தா பிரிவைச் சேர்ந்த ஆயுதபாணிகள் அதிரடியாக நுழைந்தனர்.

அந்தக் கட்டிடத்தில் தமது கொடியை ஏற்ற முனைந்த பத்தா ஆதரவாளர்களைத் தான் தடுக்க முனைந்த போது, தன்னை அவர்கள் அடித்துத் தாக்கியதாக ஒரு சுயேச்சையான துணை சபாநாயகர் பிபிசி க்கு கூறியுள்ளார்.

அந்தக் கட்டிடத்தில் இருந்த கல்வி அமைச்சு உட்பட ஹமாஸுடன் தொடர்புடைய அதிகாரபூர்வ கட்டிடங்களையும் மற்றும் நப்லஸில் உள்ள நகரக் கவுன்ஸில் கட்டிடத்தையும் ஃபத்தா போராளிகள் துவம்சம் செய்தனர்.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட காசாவில், தற்போது அமைதி நிலவுகிறது, ஆனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.


Posted in Arab, Arms, Avital, Award, Blast, Bombs, Britain, Colette, Colette Avital, Crisis, dead, Erez, Escalation, Fata, Fatah, Fatha, Fathah, Freedom, Galilee, Gaza, Hamas, Haniya, Independence, Ismail Haniyeh, Israel, Jerusalem, Jimmy Carter, Kadima, Katsav, Knesset, Labor, Labour, Leader, Likud, Mid-east, Middle East, Moshe, Moshe Katsav, Negev, Nobel, Nuclear, Palestine, Palestine: Peace Not Apartheid, Party, Peace, Peres, Perez, PM, Poland, President, Prez, Prime Minister, Prize, Rafah, Reuven, Reuven Rivlin, Rivlin, Shimon, Simon, Simone, UK, Violence, War, Weapons, WWII | 1 Comment »

Small Business Administration: SSI Financial Analysis

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

யாருக்காக சட்டம்?

கோ. கிருஷ்ணமூர்த்தி

அக்டோபர் 2 – அன்னியர் ஆதிக்கத்திலிருந்து இந்தியத் திருநாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள். நடப்பாண்டில் அன்றுதான் புதிதாக இயற்றப்பட்ட குறுந்தொழில், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி சட்டம் அமலுக்கு வந்த நாள்.

இதன்மூலம், முதன்முறையாக குறுந்தொழில் மற்றும் சிறுதொழிலுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்த வகையில் மகிழ்ச்சியே. ஆனால் சட்டம் முழுமையாக நன்மையைத் தருவதற்குப் பதிலாக ஏமாற்றத்தையும் சேர்த்துத் தந்துள்ளது. இந்தியப் பொருளாதார அரங்கில் புதிதாக உருவான சேவைத் துறை நிறுவனங்களுக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையே முடிச்சுப் போட்டு ஒரே சட்டத்தின் ஆளுகையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் எதிர்காலத்தைக் காலம்தான் கணிக்க வேண்டும்.

மத்திய அரசின் கலால்வரியைப் பொறுத்தமட்டில், மொத்தம் ரூ. 4 கோடிக்கு மிகாத விற்றுவரவு உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே கலால்வரிச் சலுகை உண்டு. ஆனால், இந்தப் புதிய சட்டம், அகில இந்திய அளவில் உள்ள சிறுதொழில் சங்கங்கள் பல கோரிய போதிலும் தொழிலாளர் எண்ணிக்கை, விற்றுவரவு ஆகிய அடிப்படைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு மூலதனத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில் என இலக்கணம் வகுத்துள்ளது.

இதுவரை குறுந்தொழில் என்பது ரூ. 25 லட்சத்திற்குக் கீழ் இயந்திரங்களின் மூலதன மதிப்பு என்றும், சிறுதொழில் என்பது ரூ. 25 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலும் இருந்து வந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் சிறுதொழில் என்பது ஒரு கோடி அதிகபட்ச எல்லை என்பதை ரூ. 5 கோடியாக உயர்த்தியுள்ளார்கள். இதில் நிலம், கட்டடம், பரிசோதனைக் கூடம் (Laboratory), ஆய்வு உபகரணங்கள் (Inspection Equipments), டூல்ஸ், டை, அலுவலகப் பொருள்கள், மின்உற்பத்தி /மின்மாற்றி உபகரணங்கள், பொருளைக் கையாளும் கருவிகள் (Material Handling Equipments) போன்றவைகளின் மதிப்பு சேராது. அதாவது 5 கோடி ரூபாய் இயந்திரங்கள் மூலதனம் என்றால் மொத்த மதிப்பு ரூ. 10 கோடியையும் தாண்டும்.

இந்தப் புதிய சட்டத்தின் மூலம் நேற்று வரை நடுத்தரத் தொழில்களாக இருந்தவை சிறிய தொழில்களாக மாறிவிட்டன. குறுந்தொழில், சிறுதொழில் முதலியன நடுத்தரத் தொழிலாக உயர்வதற்குப் பதிலாக நடுத்தரத் தொழில் சிறிய தொழிலாகிவிட்டது. அதாவது கல்லூரி மாணவர்களை உயர்நிலைப்பள்ளி மாணவர்களாக்கிவிட்டனர். இது பரிணாம வளர்ச்சி ஆகாது. மாறாக, முரண்பாடுகளைக் கொண்ட மூன்று தொழிற்பிரிவுகளைச் சலுகைகள் அளிப்பதற்காக ஒரு சட்டத்தின்கீழ் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதன் விளைவு என்னவாக இருக்கும்? இந்த மூன்றில் யார் வலியவரோ அவர் மெலிந்தவர்போல வேஷமிட்டு அனைத்து சலுகைகளையும் சுருட்டிக் கொள்வார். இதைத் தவிர்க்கவே, குரங்குகளுக்கு தீனிபோடும் பொழுது மொத்தமாக ஓரிடத்தில் தீனியை வைக்க மாட்டார்கள். தீனியை வைத்தால் வலிமையான பெரிய குரங்குகள் சிறிய குரங்குகளை அண்டவிடாது. அதனால் தீனியை விசிறி எறிவார்கள். இது நமது முன்னோர் பங்கீட்டு நீதி. ஆனால், இப்பொழுது நடைமுறையில் உள்ள குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி சட்டம் நமது முன்னோர்களின் பங்கீட்டு நீதிக்கு முரணாக இருக்கின்றது.

இத்தகைய விநியோக நீதி இட ஒதுக்கீட்டைப் பொறுத்தமட்டில் காலங்காலமாகச் செழுமைப்படுத்தப்பட்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலில் ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தொடங்கிய இட ஒதுக்கீடு, பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனியாக வழங்கப்பட்டது. இப்பொழுது சமூகத்தின் முற்பட்ட வகுப்பினருக்கும் சிறுபான்மை வகுப்பினர்களுக்கும் பொருளாதார அடிப்படையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட நலிந்த பிரிவினருக்கு ஒட்டுமொத்தமாக உள்ஒதுக்கீடுகள் இல்லாமல் சலுகைகள் அளிக்கப்பட்டால் வலியவர் கைக்குத்தான் சலுகைகள் போகும் என்பதற்கு இட ஒதுக்கீடு சிறந்த எடுத்துக்காட்டு.

யாருக்கு லாபம்?

இந்தச் சட்டத்தின் காரணமாக யாருக்கு லாபம்? இந்தச் சட்டத்தினால் முதலில் பலன் பெறுபவை. நடுத்தரத் தொழில்கள்தான். வங்கிகளைப் பொறுத்தமட்டில் குறுந்தொழில்களுக்கும், சிறுதொழில்களுக்கும் முக்கி முனகிக் கொண்டே கடன் கொடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. முதலீட்டு அடிப்படையில் நேற்றைய நடுத்தரத் தொழில்கள் இன்றைய சிறுதொழில்களாக சட்டபூர்வமாக மாறி விடுகின்றன. அவற்றுக்குக் கொடுக்கப்படும் வங்கிக்கடனும் முன்னுரிமைக் கடனாக மாறி விடுகிறது. வங்கிகளுக்குப் பிரச்சினை இல்லை. அதனால் அவைகளுக்கும் மறைமுக லாபம்தான்.

சுமார் ரூ. 2 கோடி மூலதன இயந்திரங்களைக் கொண்டு ரூ. 200 கோடி விற்பனையை எட்டும் சிறிய தொழிற்சாலைகள் நடைமுறை மூலதனக் கடனாக ரூ. 40 கோடி வரை வாங்கலாம். இந்த ஒரு கடன் மனுவைப் பரிசீலனை செய்து கடன் வழங்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான குறுந்தொழில், சிறிய தொழில் மனுக்களை ஏறெடுத்தும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. குறுந்தொழில் மற்றும் சிறுதொழிலுக்கு வழங்கப்படும் முன்னுரிமை வங்கிக்கடன் கடந்த சில ஆண்டுகளில் 18%ல் இருந்து 8% ஆக குறைந்துவிட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் வரும் ஆண்டுகளில் கணிசமான அளவு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தச் சட்டத்தால் குறுந்தொழில், சிறுதொழில்களின் நிதிப் பிரச்சினை தீரப்போவது இல்லை. பழைய நிலையே தொடரும்.

இதற்கெல்லாம் முடிவாக வளர்ந்துவிட்ட அமெரிக்காவிலே நல்ல கொள்கை வகுத்துள்ளார்கள். அங்குள்ள (Small Business Administration) சிறுதொழில்களை வரையறை செய்யும்பொழுது, “”500 தொழிலாளர்கள் அல்லது ஆண்டுக்கு 6 மில்லியன் டாலர்கள் (ரூ. 28 கோடி) விற்பனை, இதில் எது பொருந்துமோ அவைகள்தான் சிறியவை” என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய அணுகுமுறையை நாம் பின்பற்றாத காரணத்தால் ரூ. 500 கோடி விற்றுவரவு என்றாலும் அவையும் சிறுதொழில் என்று கூறி அவர்களுக்கும் சலுகைகள் வழங்கத் தயாராகிவிட்டோம்.

வலிமையானவர்கள் மட்டுமே வாழ முடியும் (law of the Jungle) என்பது கொடிய விலங்குகள் வாழ்கின்ற காட்டுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் மக்களாட்சிக்கு ஒத்துவராது. 98% உள்ள குறுந்தொழில், சிறுதொழிலுக்குச் சட்டம் என்ற பெயரால் சுமார் 2000 முதல் 3000 வலுவான தொழிற்சாலைகளுக்குப் பலன் தரும் ஒரு சட்டம் இயற்றப்படுவது வேடிக்கை. நாளடைவில், நடுத்தரத் தொழிலே மிஞ்சும். சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் நசிந்து விடும்.

இந்த நிலைமையை மாற்றுவது எப்படி?

சட்டத்திற்கான விதிகளை வகுக்கும்பொழுது, ஆண்டு விற்பனை குறுந்தொழிலுக்கு ரூ. 3 கோடி என்றும், சிறுதொழிலுக்கு ரூ. 30 கோடி என்றும், நடுத்தரத் தொழிலுக்கு ரூ. 300 கோடி என்றும் வரையறை செய்யலாம். இதன்மூலம் உண்மையான சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவலாம். இல்லையென்றால் இது பெரிய தொழிற்சாலைகள் நாளடைவில் சிறிய தொழிற்சாலைகளாக மாறுவதற்கு வழிவகுக்கும்.

(கட்டுரையாளர்: சிட்கோ மின்னணு வளாக உரிமையாளர்கள் சங்கத் தலைவர்.)

Posted in Analysis, Business, Economy, employees, Factory, Finance, Growth, Industry, Labor, Law, Loans, Manufacturing, Op-Ed, Operations, Production, Small Business Administration Act, Small Scale Industries, SSIs, Subsidy, Thoughts, workers | Leave a Comment »

Importance of Agriculture : Farming Economics & Impact

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

வேளாண்மையின் இறக்கம்

ஆர்.எஸ். நாராயணன்

அன்றைய இந்தியா கிராமங்களில் வாழ்ந்தது. இன்றைய இந்தியா நகரங்களில் மட்டுமே வாழ்கிறது. நெல், கோதுமை, சோளம், கம்பு, வரகு, தினை எல்லாம் ஏகபோகமாக விளைந்தன. உண்டி கொடுத்து மக்களை வாழ வைத்த விவசாயிகளை மன்னன் வாழ வைத்தான். ஆட்சிக்கு வருமானமே நிலவரிதான். இதனால் விவசாயிகளுக்கு மரியாதை இருந்தது. இன்றைய இந்தியாவில் ஆட்சியின் வருமானம் நிலவரி இல்லை. வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, விற்பனை வரி என்று வேறு தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. அன்று தேவதானம், பிரம்மதேசம் என்று மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இன்று மானியங்கள் விவசாயிகளுக்கு இல்லை. விவசாய மானியம் என்ற பெயரில் ரசாயன உரக் கம்பெனிக்கும், பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும், டிராக்டர் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது. அன்று விவசாயம் செய்பவனே வளமாக வாழ்கிறான் என்று நிலம் உள்ளவனுக்குப் பெண் கொடுத்தார்கள். இன்று விவசாயிகளுக்குப் பெண் கொடுப்பாரில்லை. மாதச் சம்பளம் பெறும் கடைநிலை ஊழியராக இருந்தாலும் பரவாயில்லை, விவசாயி மாப்பிள்ளை வேண்டாம் என்று பெண்ணைப் பெற்றவர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். விவசாயம் என்பது அன்று சுகஜீவனம். இன்று துன்பஜீவனம். ஏன் இந்த அவலம்?

பொருளியல் அடிப்படையில் யோசித்தால் உண்மை புரியும். ஒரு விவசாயி எந்த அளவில் ஏமாளியாக வாழ்கிறான் என்பதும் எந்த அளவில் சுரண்டப்படுகிறான் என்பதும் புரியும்.

பொருளாதாரத்திற்கு அடிப்படை ஒரு பண்டத்தின் நிலையான மதிப்பு. அதை நெல் மதிப்பு என்றுகூடச் சொல்லலாம். பணமதிப்பு குறைந்தால் நெல் மதிப்பு அந்த அளவில் உயர வேண்டும். 1960 – 70 விலைவாசியை வைத்து இன்றைய நிலையை அளவிட்டால் வேளாண்மையின் இறக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

அன்று நெல் விலை ரூ. 50. ஒரு மூட்டை 75 கிலோ நெல். 400 மூட்டை நெல் விற்றால் 35 ஏட டிராக்டர் ரூ. 20,000-க்கு வாங்கலாம். 20 மூட்டை நெல் விற்றால் 1 ஜோடி மாடு ரூ. 1000 வாங்கலாம். 7 மூட்டை நெல்லுக்கு 1 பவுன் தங்கம். இன்று நெல்விலை ரூ. 350. டிராக்டர் விலை 5 லட்சம் ஜோடி மாடு 20,000. பவுன் 8,000. 1 டிராக்டர் வாங்க 1000 மூட்டை நெல் விற்க வேண்டும். ஒரு விவசாயி இழப்பது 600 மூட்டை நெல். நெல் விலைக்குக் கட்டுப்பாடு உண்டு. டிராக்டர் விலைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இழந்து வரும் பணமதிப்புக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

கடந்த 30 ஆண்டுகளில் தொழிற்சாலைப் பொருள்கள் விலை 40 மடங்கு உயர்ந்துவிட்டது. அரசு அலுவலர்களின் ஊதியம் 50 மடங்கு உயர்ந்துவிட்டது. ரூ. 250 சம்பளம் வாங்கிய எம்.எல்.ஏ. இன்று லட்ச ரூபாய் வாங்குகிறார். மாத வருமானம் இல்லாத ஒரு விவசாயி தான் விளைவித்த பொருளை விற்று ஜீவனம் செய்கிறார். விலைவாசி ஏறுவதற்கு ஏற்ப அகவிலைப்படி பெற அவர் தகுதியற்றவர். கடந்த 30 ஆண்டுகளில் நெல், கோதுமை விலை 8 மடங்குதான் உயர்ந்துள்ளது.

உணவு உற்பத்தி கூடிய நிலையில் உணவுக் கட்டுப்பாடு ஏன்? இதன் உள்நோக்கம் என்ன? வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு உணவுப்பங்கீட்டால் கிடைக்கும் மானியம் ரூ. 534 என்று புள்ளிவிவரம் கூறுகிறது. உணவுப் பங்கீட்டையும் கட்டுப்பாட்டையும் ரத்து செய்து விட்டு உணவுக்கூப்பன் அட்டை வழங்கி ரூ. 1000 ரொக்கம் வறுமைக்கோட்டு ஏழைகளுக்கு வழங்கலாமே. ஒருவரை வாழவிடாமல் அடித்து ஏழைக்கு வழங்குவது அரசாங்கத்தின் திருட்டுக்குணம் ஆகாதா? ராபின்ஹுட் கூட பணக்காரனிடம் திருடி ஏழைக்கு வழங்கினான். “”தகுதி என வொன்று நன்றே பகுதியார் பாற்பட்டு ஒழுகப்பெறின்” என்ற நடுநிலை தவறுவது ஏன்? அரசுப் பொருளாதாரம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பாமல் விவசாயிகளின் வயிற்றிலடிப்பது மன்னர் காலத்துக் கொடுங்கோன்மையைவிட மோசமானதல்லவா? இதனால் பாதிக்கப்படுபவன் ஒரு விவசாயி என்று யாருக்கும் புரிவதில்லை.

50 ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஐந்து ஊதியக்கமிஷன் அமைத்து ஊதியத்தை உயர்த்திவிட்டனர். “”உண்டி கொடுத்தோன் உயிர் கொடுத்தோன்’ இந்த ஊனும் உயிரும் வாழ வழி செய்து வரும் விவசாயிகளுக்கு அகவிலைப்படி கொடுத்தோமா? இல்லை. ஒரு முழக்கயிறு கொடுத்தோம். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைப் பார்வையிட்ட பாரதப் பிரதமர், விவசாயிகளின் கடனுக்கு உண்டான வட்டியை ரத்து செய்தார்.

மேலும் கடன் பெற வழிசெய்து விட்டார். பேராசைக்கு ஒரு தூண்டுதல். மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் வழி அல்லவா கடன். விவசாயம் ஆசையை நிறைவேற்றும் தொழில் இல்லை. அடிப்படை ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளபோது பேராசையை நிறைவேற்ற முடியுமா?

ஆகவே, விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் ஒரு முழக்கயிறு வேண்டாம். பசுமைப்புரட்சி வரும் முன்பு நமது முன்னோர்கள் எந்த விதைகளைக் கொண்டு எந்த முறையில் எந்த நீரைக் கொண்டு யாருக்காக விவசாயம் செய்தார்கள் என்பதை உணர்ந்து வெளியிலிருந்து எந்த இடுபொருளும் கொண்டு வராமல், நிலத்திற்கு ஓய்வும் கொடுத்து உடலுழைப்போடு அத் தொழிலைச் செய்யுங்கள். கிடைப்பதைக் கொண்டு வாழுங்கள். கடன் வாங்காதீர்கள். “”விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்” என்ற பட்டுக்கோட்டையார் பாடல்தான், விவசாயிகளின் வேதம்.

Posted in Agriculture, Economy, Farmers, Government, Grants, Politics, RS Narayanan | Leave a Comment »

Panaji: International Film Festival Concludes – “Nirontor” bags Silver Peacock

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

வங்கதேச திரைப்படத்துக்கு முதன்முறையாக சர்வதேச விருது

புது தில்லி, டிச.14: கோவாவிலுள்ள பனாஜியில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்ற “நிராந்தோர்‘ என்ற வங்கதேசப் படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை இயக்கியவர் அபு சயீத் (43). இவர் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் இது. வங்கதேசம் சார்பாக ஒரு திரைப்படம் சர்வதேச அளவில் விருது பெறுவது இதுவே முதன்முறையாகும்.

இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு “ஆகமி‘ என்ற வங்கதேச படம் குறும்பட பிரிவில் விருது பெற்றதே சாதனையாக இருந்தது.

வேலைவாய்ப்பின்மை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக ஓர் இளம் பெண் பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும், அதைத் தொடர்ந்து அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் உளவியல் ரீதியாக அணுகியிருப்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்துக்காக இயக்குநர் அபு சயீத்துக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகையைத் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு செலவுகளுக்குப் பயன்படுத்தவுள்ளதாக அபு சயீத் கூறியுள்ளார்.

Posted in 2006, Abu Sayeed, Asian Movies, Awards, Goa International Film Festival, Humayun Ahmed, IFFI, Jonon Jopnom, Nirontor, Prizes, Silver Peacock | Leave a Comment »