Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 18th, 2006

Bharati in Puthiya Kalacharam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 18, 2006

ஜூனியர் விகடனில் ரவிக்குமார் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து நீங்கள் (ஹரியண்ணா) எழுதியிருந்ததைப் படித்தேன். ரவிக்குமார் கட்டுரையை படிக்க வில்லை, ஆதலால் என்னவென்று புரியவில்லை. இதோ ‘புதிய கலாச்சாரம்’ இதழில் வந்திருக்கும் ஒரு கட்டுரை

அன்புடன்
சாபு
துபாய்
—————-
கட்டபொம்மனைப் பாடாத பாரதி

பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமர்சிக்கும் போதெல்லாம், ‘பாரதியை அவனது வரலாற்றுப் பின்புலத்தில் ¨¨த்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்” என்று கூறி விமர்சிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.

சரி வரலற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசிலிப்போம். பாரதி சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக்கிறான், கோகலே தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதிராய் போன்ற வட இந்திய தலைவர்களப் பற்றி பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம்,ரசிய்யா வைப்பற்றி எல்லாம் பாடியிருக்கிறார். காக்கை,குயில்,கிளி மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்..

ஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலக்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனை பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை.சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்று இலக்கிய அறிவோ,உலக ஞானமோ இல்லாத அப்பகுதி மக்கள் கட்ட பொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங்களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் பாடதது ஏன்?

ஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.

“எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து எட்டப்பனின் வாரிசான மண்ணுக்குத் தோழனாக இருந்து அவனை அண்டிப்பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம்மனைப் பற்றி எப்படி எழுத முடியும்? என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக் கூடும்.

“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி, அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்” அடேயப்பா ஈட்டி போல் பாயும் சொற்கள் பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய நேர்மைத் திறத்தைப் பற்றி பாரதி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலியினர் தம்முடைய ஆய்வுக்ளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருகிறார்களா?

வே.மணிக்கம் எழுதிய ‘தானபதிப்பிள்ளை வரலாறு” என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

“கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைபற்றியோ பாஞ்சாலக்குறிச்சிப் பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியிலிருந்து மீண்டு மிகுந்த நலிவுற்று பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1909 ல் ஓலைத்தூக்கும் சீட்டுக்கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில் ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய “விம்சமணி தீபிகை'(1878) நூலை செம்மைபடுத்தி தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கட்டபொம்மனைப்பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்

அதாவது எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வெங்கடாசலபதி.அத்தகைய தீயூழிலிருந்து பரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்.

புதிய கலாச்சாரம்
நவம்பர் 2006
ஆசிரியர் வி. வல்லபேசன்
puthiyakalacharam@rediffmail.com

————————————————————————————————-
முழுமையான சுதந்திரக் கவி

கா. செல்லப்பன்

“சுதந்திரம் நமது பிறப்புரிமை; அதை நாம் அடைந்தே தீருவோம்’ என்று சூளுரைத்தார் பாலகங்காதர திலகர். அதை அடைந்துவிட்டதாகவே, அன்றே ஆனந்தகூத்தாடியவர் தீர்க்கதரிசனக் கவி பாரதியார். “சுதந்திரத்தை மற்றவர்கள் தந்து பெற்றுக் கொள்ளப் போவதில்லை. அதை எப்போது வேண்டுமோ அப்போது நானே எடுத்துக் கொள்வேன்’ என்று ஓர் ஐரிஷ் விடுதலைப் போராட்ட வீரர் கூறினார்.

ஒவ்வொரு மனிதனும் சுதந்திரத்தைத் தன் ஆத்மாவின் உண்மையான நிலை என உணரும்போது, “விட்டு விடுதலையாகி’ விடுகிறோம் என்று பாரதியார் கருதினார். அதேபோல, ஒரு தேசம் தன்னை உணர்ந்து கொள்ளும்போது, அது அகவிழிப்பு பெற்று ஆற்றலுடன் எழுச்சி பெறும்போது, உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்குகிறது. அந்த விழிப்பையும் எழுச்சியையும் மக்களின் மொழியிலேயே அற்புதக் கவிதையாக்கியவர்தான் மகாகவி பாரதியார்.

சுதந்திர பூமியைக் கவிஞன் வலம் வந்து, வணங்கி வாயார வாழ்த்தும்போது அதைத் தன் சொற்களால் சொந்தமாக்கிக் கொள்கிறான். “வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம், மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்று தனது பிரம்மாண்ட தேசத்தில் கம்பீரமாக உலவுவதாகவும், மலையையும் கடலையும் மனித ஆற்றலால் வெல்வதாகவும் கவிஞர் கூறுகிறார்.

ஆனால் ஒரு தேசம் பிறப்பது, வெறும் பூகோளம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; அது மனித பந்தங்களாலும் வரலாற்றுச் சொந்தங்களாலும் உருவாவது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்ததுமிந்நாடே; அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே’ என்று தன்னை ஒரு வரலாற்றுச் சங்கிலியோடு இணைத்து, அதனை “வந்தே மாதரம்’ என்ற புதிய மந்திரத்தால் வணங்குகிறார்.

தன் மூதாதையர்களை, அர்ஜுனனை, இராமனை, சகுந்தலையின் மகன் பரதனை நினைவுகூர்ந்து, பாரதத்தை ஒரு புதிய தொன்மமாகப் படைக்கிறார். தொன்மங்கள்தான் (ஙஹ்ற்ட்ள்) ஒரு சமூகத்தைப் பிணைக்கும், சமுதாயத்தின் கனவுகள். பாரதி ஒரு புதிய தேசியத் தொன்மத்தை உருவாக்குகிறார். இந்தத் தொன்மம், பழங்கதையல்ல; ஒரு சமுதாயத்தின் உயிர்ப்பாற்றல். பாரத மாதாவுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடி, சமயக் குறியீடுகளுக்குச் சமூக அர்த்தங்களைத் தந்தவர் பாரதி.

பாரதி, இந்த மண்ணின், மக்களின் ஆற்றலைப் பாரத சக்தியாகவும் பராசக்தியாகவும் உருவகித்தார். பாரதியின் பராசக்தி வழிபாடு, மக்களின் அடிமன ஆற்றலை வெளிப்படுத்தும் வீரவழிபாடாகவே தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, அவர் பெண் கடவுள்களைப் போற்றியது, இந்த மண்ணும் பெண்ணும் விலங்கொடிந்து விடுதலை பெற விழைந்ததால்தான். அவர் பாஞ்சாலி சபதம் இயற்றியதும் பெண்ணடிமையையும் மண்ணடிமையையும் போக்குவதற்கே. இந்த இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாரதி உணர்ந்தார்.

வீட்டிலே பெண்களைப் பூட்டி வைத்த சமுதாயம், அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. பாண்டவர்கள் பாஞ்சாலியைப் பணயம் வைத்திழந்தபோது, தங்களது மண்ணை மட்டுமல்ல, உள்ளாற்றலையும் இழந்தனர். “தன்னை இழந்த தருமன், என்னை இழப்பதற்கு உரிமை இல்லை’ என்று பாஞ்சாலி வாதாடும்போது, பாரதத் தாயின் குரலை, இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக அடக்கப்பட்டிருந்த பெண்மையின் வீர முழக்கத்தைக் கேட்கிறோம்.

பெண் விலங்கறுத்து வீறுபெற்று எழுந்தால்தான், இந்த மண் மாண்பு பெறும் என பாரதி பாடினார். எனவேதான் “பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்’ – பாரினில் வந்ததாகப் பெண்களே பேசுவதாக மகாகவி அன்றே கூறினார்.

பாரதியின் சுதந்திரம், பாரத சமுதாயத்தின் முழுமைக்குமான பொதுவுடைமை. இங்கு வாழும் அத்தனை பேருக்கும் – மறவருக்கும் – பறையருக்கும் – புலையருக்கும் விடுதலை, விடுதலை என வீர முழக்கமிட்டார். சுதந்திரத்தின் இன்னொரு கூறாகச் சமத்துவத்தைக் கண்டார். எனவேதான், “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’ என்று கூறினார். நாம் “எல்லோரும் ஓர்குலம்; எல்லோரும் ஓர் விலை, ஓர் நிறை’ என உறுதிபடக் கூறினார்.

சுதந்திரத்தை உலக நாடுகள் அனைத்தும் அனுபவிக்க வேண்டும் என பாரதி விழைந்தார். அதனால்தான் பெல்ஜியத்துக்கு வாழ்த்து பாடினார். புரட்சியை மாகாளி பராசக்தியாக உருவகித்த கவிஞர், ரஷியாவில் ஜார் மன்னன் வீழ்ந்ததை, “”ஆகாவென எழுந்தது பார் யுகப் புரட்சி, அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன்’ என்று ஆர்ப்பரித்துப் பாடினார். “தனியொருவனுக்கு உணவிலை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சூளுரைத்தபோது அவரது சர்வதேசச் சமத்துவச் சிந்தனை வெளிப்பட்டது.

பாரதி, இந்த மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மட்டுமன்றி, விண்ணில் பறக்கும் பறவைகளுக்கும் சுதந்திர கீதம் பாடிய கவிஞன். “”காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்” என்று பிரபஞ்சத்தில் எங்கும், எதிலும் தன்னையே தன் கூட்டத்தையே கண்டு, அத்வைதத்தை ஓர் அகன்ற ஏகத்துவமாக விளக்கிக் காட்டினார். குருவி, விடுதலையுணர்வுக்கும் காக்கை, சமத்துவ உணர்வுக்கும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியும் வலுவும் அதன் எல்லாப் பகுதிகளும் ஏற்றத்தாழ்வின்றி, இணைந்து வாழ்வதைப் பொருத்தது என அவர் கருதினார். “கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’ என்று புதிய பண்டமாற்றுத் தத்துவம் பேசுகிறார். அனைத்துக்கும் மேலாக, மாநிலங்களிடையே நீர்ப் பங்கீடு தேவை என அன்றே உணர்ந்த கவிஞர், “வங்கத்தின் ஓடிவரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’ என்று பாடினார். இந்த ஒற்றுமையுணர்வு இன்னும் வராதது, சுதந்திரத்தின் பலன்களை முழுமையாக நுகர்வதற்குத் தடையாக உள்ளது.

இறுதியாக, இன்றைய உலகமயச் சூழலில், எந்த நாடும் தனித்தியங்க இயலாது. அதேநேரத்தில் நாம் மற்ற நாடுகளோடு கொள்ளும் உறவுகளும் செய்யும் ஒப்பந்தங்களும் நம்முடைய சுதந்திரத்துக்கு எள்ளளவும் பாதகமாக அமையக் கூடாது. கண்ணீரும் செந்நீரும் விட்டு வளர்த்த சுதந்திரத்தை, கண்ணின் மணிபோல காப்பது நம் கடன்.

சுதந்திரமில்லாமல், சொர்க்க பூமியில் வாழ்வதைவிட, சுகங்களேயில்லாத சுதந்திர பூமியில் வாழ்வது மேல். இதுதான், “விதந்தரு கோடியின்னல் விளைந்தெனை யழித்திட்டாலும், சுதந்திர தேவி, நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்று பாடிய மகாகவியின் நிரந்தரச் செய்தி.

(இன்று பாரதியார் நினைவுநாள்) (கட்டுரையாளர்: பேராசிரியர்)

Posted in Aa Raa Venkatachalapathy, AR Venakatachalapathi, Award, Barathi, Bharathiyaar, Bharathy, British, Females, Feminism, Fighter, Freedom, French, Harikrishnan, Independence, India, Integration, Kattabomman, Kavithai, Liberation, Literature, Mahakavi, Nationalism, Panchali, Panjali, Poems, Poet, Pondicherry, Prize, Puthiya Kalacharam, Puthucherry, Ravi kumar, Ravikkumar, Saabu, Spirit, Tamil-Ulagam, V Vallabesan, Women | Leave a Comment »