Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Vairamuthu: “Today’s cinema songwriters write with their beer’

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

வைரமுத்து சொன்னது சரியா?
– கடுகடுக்கும் கவிஞர்கள்

Kalki 25.03.2007

அது ஒரு விழா மேடை.

‘இன்றைய இளம் பாடலாசிரியர்கள் பாட்டிலுடன் கவிதை எழுதுகிறார்கள். எனவே அந்தப் பாடல் அவர்களுக்குச் சொந்தமானதல்ல’

என்கிற ரீதியில் பேசுகிறார் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து. இது மறுநாள் தினசரிகளில் வந்துவிட, அங்கே இங்கே என்று சலசலப்புகள் ஆரம்பித்துவிட்டன. வைரமுத்து சொன்னது சரியா? இளம் பாடலாசிரியர்களிடம் கேட்டோம்.

விவேகா: ஒட்டுமொத்த கவிஞர்களையும் குறை கூறுவது ஏற்க முடியாத செயல். மது பக்கமே போகாத என்னைப் போன்றவர்களை இப் பேச்சு அவமானப்படுத்துவதாக உள்ளது. யார், யார் மது அருந்துகிறார்கள் என்கிற ஆய்வு தேவையற்றது. இளம் கவிஞர்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கியிருக்கலாம். இப்படிக் குற்றம் சாட்டுவது சரியான அணுகுமுறையாக எனக்குப் படவில்லை.

சிநேகன்: சென்ற தலைமுறை கவிஞர்களைவிட, இன்றைய தலைமுறை கவிஞர்கள் திறமையானவர்கள்; உழைக்கத் தெரிந்தவர்கள்; பிழைக்கத் தெரிந்தவர்கள். எல்லாக் கவிஞர்களையும் குற்றம் சாட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

குகை மா. புகழேந்தி: சரக்குள்ள பாடல்கள் பலவற்றை எழுதுகிற இன்றைய இளங்கவிஞர்களை, சரக்குப் பாட்டில் இருந்தால்தான் எழுதவே ஆரம்பிக்கிறார்கள் என்று வைரமுத்து பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டமானது.

வேறு ஏதோ ஒரு கோபம் அவர் பேச்சு மூலம் வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். எந்த இளைய தலைமுறைக் கவிஞனும் அவரை விமர்சிக்க, குற்றஞ்சாட்டத் தயாராக இல்லாதபோது, விஷம் தெளிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார். புத்திமதி என்றுகூட எங்களால் இதை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், தன் மகன் மீது குறையிருந்தால், அதைத் திருத்த எந்தத் தகப்பனும் மேடை போட்டுச் சொல்ல மாட்டான். வைரமுத்து யாரையும் பாராட்ட மாட்டார். இந்த ஆராவாரத் தூற்றல் எங்களை எரிச்சல் படவே வைக்கிறது!

கபிலன்: எப்போதாவது சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது இவற்றால், எந்தக் கவிஞனும் கெட்டுப் போகப் போவதில்லை. தண்ணியடித்தால் என்ன… பாடல்கள் தள்ளாடாமல் இருந்தால் சரி!

யுகபாரதி: அவர் மது அருந்துகிறவர்களைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். நான் மது அருந்துவதில்லை. எனவே, அந்தச் செய்திக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அறிவுமதி: கவிஞர்களிடையே ஒற்றுமை இருக்கவேண்டும் என விரும்புபவன் நான். அந்த ஒற்றுமை குலைய வேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே மேற்கொண்டு பேச விரும்பவில்லை.

ஆண்டாள் பிரியதர்ஷினி: இளைய தலைமுறை மீது அக்கறை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கவிஞரை தனிப்பட்ட முறையில் கனிவாகக் கண்டிக்க வைரமுத்துவுக்கு உரிமை உண்டு. ஆனால், விழா மேடையில் ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தைப் பொதுமையாக்கிப் பேசுவது தேவையில்லாதது. இப்படிப் பொதுவாகப் பேசுவது தொழில்போட்டியில் வரும் பொறாமையுணர்வுப்பேச்சோ என்ற யூகத்துக்கு வழி வகுத்துவிடும்.

எம்.ஜி.கன்னியப்பன்: ‘இன்றைய கவிஞர்கள் குடித்துவிட்டுப் பாடல் எழுதுகிறார்கள், குடிக்காமல் எழுதுகிறார்கள்’ என்பது வைரமுத்துவுக்கு ஒரு பிரச்னையே இல்லை. ‘ஒரு படத்துக்கான ஒட்டுமொத்த பாடல்களையும் எனக்கே கொடுங்கள்’ என்று கேட்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என அவர் எண்ணிக் கொண்டிருக்கையில், இன்னொரு கவிஞரும் அப்படிக் கேட்பதை அவரால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? அந்தக் கோபத்தை நேரடியாகப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல், ஒட்டுமொத்த இளம் கவிஞர்களைச் சாடினால், போய்ச் சேர வேண்டிய கவிஞனை சேருமே என்பதற்காகத்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.

தனக்கென ஓர் எல்லையை நிர்ணயித்துக்கொண்டு, ‘எல்லை தாண்டி வந்தாயென்றால் பார்’ என்று எச்சரிக்கை விடுவது என்பது நாடுகளிடையே வேண்டுமானால் இருக்கலாம், பாடலாசிரியர்களிடையே இருக்கக்கூடாது.

நா.முத்துக்குமார்: இதைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை.

தாமரை: படைப்பாளியாக இருந்தால் மட்டும் என்ன? யாராக இருப்பினும் வாழ்நாளில் தவிர்க்க வேண்டிய, எதிர்க்க வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மது.

இதைப் பற்றி மூத்த தலைமுறைக் கவிஞரான மு.மேத்தா என்ன சொல்கிறார்?

‘‘யாரோ ஒருவரை மனத்தில் வைத்துக் கொண்டு எல்லோரையும் பொத்தாம் பொதுவாக இழிவாகப் பேசுவதென்பது தவறான காரியம். வளர்ந்து வருகிற இளங் கவிஞர்களை வாழ்த்தும் ஸ்தானத்தில், தங்களை வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வைரிகளாகக் கருதுகிற மனோபாவம் குரூரமானது!’’

கவிஞர் வைரமுத்துவின் கருத்தறிய அவரைத் தொடர்பு கொண்டபோது அவருடைய உதவியாளர், ‘‘நீங்கள் கேட்பதற்கு, கவிஞர் ஈரோட்டு லயன்ஸ் கிளப்பில் பேசிய அந்த ஆடியோ கேசட்தான் பதில். அதையே பதிலாகப் போட்டுக் கொள்ளுங்கள். திரித்து வெளியிடும் பத்திரிகைகளின் செய்தியினை வைத்துக் கொண்டு கேட்காதீர்கள். இது குறித்து கவிஞர் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தருவதற்கு ஒன்றுமில்லை’’ என்றவர், ஈரோட்டு தொலைபேசி எண்ணைத் தந்தார். நமது தொடர்ந்த அழைப்புக்கு ஈரோட்டிலிருந்து பதிலில்லை என்ற விஷயத்தை மறுபடியும் கவிஞரின் உதவியாளரிடம் கூறினோம். ஆனால் அவர் மூலம் ஆடியோ கேசட்டோ, கவிஞரின் மறுப்போ இந்த இதழ் அச்சாகும்வரை கிடைக்கவில்லை.

– சுமதி, அருணாஸ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: