குடியின் அலட்சியம், கோலின் ஆணவம்
அ.கி. வேங்கட சுப்ரமணியன்
“”மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்; தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை” என்ற தலைப்பில் 25-11-2006 தினமணியில் முதல் பக்கத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்ட கட்டடங்களை அங்கீகரிக்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த போது உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுரைதான் இது. உச்ச நீதிமன்றம் மேலும் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.
“”சட்டத்தை மீறிச் செயல்படுவதற்கு அனுமதியளித்து, சென்னை நகரின் அழகையே கெடுத்து விட்டீர்கள். மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். நாடு வாழட்டும். கொஞ்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முன்பு இருந்த நிலையையும், இப்பொழுது இருப்பதையும் பாருங்கள். நகரமே இப்பொழுது வாழ முடியாதபடி ஆகிவிட்டது. சட்டத்தை அமல்படுத்தாத நிலையில், கட்டட விதிகளுக்கும், நகரத் திட்டமிடலுக்கும் என்ன அவசியம் வேண்டியிருக்கிறது?”
உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள நிலை ஒரு நாளில் ஏற்பட்டதல்ல. ஒரு தலைமுறை காலத்தில் ஏற்பட்ட நிலை இது.
1971ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புறத் திட்டமிடல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தின் 113-வது பிரிவின் கீழ் அரசுக்கு எந்த நிலத்திற்கோ, கட்டடங்களுக்கோ சட்டத்தின் எல்லா பிரிவுகளில் இருந்தும் விதிவிலக்கு அளிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொடுக்கப்பட்ட அதிகாரம் “”எந்த நெறிமுறையும் இல்லாமல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரிவைச் செல்லாததாக்க வேண்டும்” என்று கோரி சென்னையில் உள்ள நுகர்வோர் நடவடிக்கைக் குழு (Consumer Action Group) உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. தனது வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் 1-7-87க்கும் 29-1-1988க்கும் இடையில், 62 அரசாணைகள் மூலம், பல கட்டடங்களுக்குச் சட்டத்தின் நோக்கத்திற்குப் புறம்பாக விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்ததையும் குழு சுட்டிக்காட்டியது. குறிப்பாக 31-12-1987 அன்று மட்டும் 73 ஆணைகள் இவ்வாறு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி அதில் 36 ஆணைகளை உச்ச நீதிமன்றத்தில் குழு தாக்கல் செய்தது. குழு தாக்கல் செய்த அரசாணைகளைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம் “”ஒவ்வோர் ஆணையும் சட்டமும் குறிப்பிட்ட வரையறைகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு உரிய கவனம் செலுத்தப்படாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளன” (Each of these orders reveals non application of mind by giving total go-by to the rules…) என்று கண்டனம் தெரிவித்து, அந்த 62 ஆணைகளையும் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுதே தமிழக அரசு 1998ல் 113அ என்ற ஒரு புதுப்பிரிவைக் கொண்டு வந்தது. இந்தப் பிரிவின்படி சதுரமீட்டருக்கு ரூ. 20,000 வரை செலுத்தி சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குமுறை செய்ய முடியும். இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் அரசால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. “”சுமார் 3 லட்சம் கட்டடங்கள் (கட்டப்பட்ட கட்டடங்களில் ஏறக்குறைய 50 சதவிகிதம்) விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருக்கின்றன. இவை இடிக்கப்பட வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகளுக்குள் நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். நிர்வாகக் காரணங்களினால் இவற்றை இடிக்க முடியாது. எனவே, இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பாக, அதாவது 28-2-1999க்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களை உரிய கட்டணம் வசூலித்து ஒழுங்குபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.”
இந்தக் காரணங்கள் நிர்வாகத் தோல்வி (Administrative Failure), கட்டுப்படுத்துவதில் திறமையின்மை (Regulatory inefficiency), கண்டிப்பில்லாத போக்கு (Laxity) ஆகியவற்றையே சுட்டிக்காட்டுகின்றன என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இவ்வாறு விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை ஒரே ஒரு முறை ஒழுங்கு செய்யலாம் (One time Measure) என்றும் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் 18-8-2000 அன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் எந்தச் சலசலப்பையோ, விவாதத்தையோ உருவாக்கவில்லை. அரசும் சட்டத்தை முறையாக அமல்படுத்த எந்த ஒரு திட்டத்தையும் தீட்டவில்லை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, அரசு 2000 ஆண்டில், 31-8-2000 வரை, விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களையும் ஒழுங்குபடுத்தலாம் என ஓர் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டம் கொண்டு வந்ததற்கான காரணம்: ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலக்கெடுவான 28-2-1999க்குள் கட்டப்பட்ட கட்டடங்களில் உரிய காலத்திற்குள் 5474 விண்ணப்பங்களே பெறப்பட்டன என்பதும், ஒழுங்குபடுத்துவதற்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது என்பதுமாகும். இந்தக் கட்டணமும் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
அதன்பின் மீண்டும் ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் இந்தக் காலக்கெடு 31-7-2001 வரை நீட்டப்பட்டது. மீண்டும் இன்னொரு சட்டத்திருத்தத்தின் மூலம் இந்தக் காலக்கெடு 31-3-2002 வரை நீட்டப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து காலக்கெடுவை நீட்டிப்பதை எதிர்த்து நுகர்வோர் நடவடிக்கைக் குழு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதைப் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு 2000, 2001, 2002 ஆண்டுகளில் பிறப்பித்த சட்டத்திருத்தங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்றும், அவை விலை கொடுத்தால் விதிகளை மீறலாம் (Priced amnesty) என்ற நிலையை உருவாக்கியுள்ளன என்றும் போதுமான விண்ணப்பங்கள் வராவிட்டால் விண்ணப்பங்களை அளிக்கக் காலக்கெடுவை நீட்டலாமே ஒழிய விதிகளை மீறிக் கட்டிய கட்டடங்களின் காலக்கெடுவை நீட்டிப்பது முறையல்ல என்றும் கூறி 28-2-1999க்குப் பிறகு கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குபடுத்தி பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துத்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
நுகர்வோர் நடவடிக்கைக் குழு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் “”இந்த மனு மூலம், விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களுக்குத் தனது நிர்வாக அதிகாரத்தைத் தாறுமாறாகப் பயன்படுத்தி (indiscriminately) விதிவிலக்கு அளித்தாலும் தனக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்ற ஆணவப் போக்குடன் (impunity) அரசு செயல்படுவதை மனுதாரர் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
தான் என்ன செய்தாலும் தனக்கு அதனால் எந்தப் பாதிப்பும் வராது, யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஓர் ஆணவப் போக்கு ஓர் அரசுக்கு எவ்வாறு வருகிறது? அரசு தவறு செய்தால் அதைத் தட்டிக் கேட்பது, சட்டமன்றமும் நீதிமன்றமும். இந்த நிகழ்வில் சட்டமன்றம்தான் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்திருத்தங்கள் தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சிகளின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளன.
நீதிமன்றமும் தட்டிக் கேட்க முடியும். ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு வர நெடுங்காலமும் ஆகும். 1987 இறுதியில் நடந்த முறைகேடான விதிவிலக்கு ஆணைகள் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2000 ஆண்டு ஆகஸ்டில்தான் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் தீர்ப்பை முடக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வரும் அரசியல் கலாசாரமும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
அரசைத் தட்டிக் கேட்கும் பொறுப்பும், உரிமையும் குடிமக்களாகிய நமக்குத்தான் அதிகம். 2000 ஆண்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகும், குடிமக்கள் குரல் எழுப்பவில்லை. முறைகேடாக, பொதுநலத்திற்கு மாறாக, விதிகளை மீறிக் கட்டிய கட்டடங்களுக்கு விதிவிலக்கு அளித்தது பற்றி தட்டிக் கேட்கவில்லை. எனவே, அதே ஆண்டிலும், அடுத்த இரண்டு ஆண்டிலும், இந்த விதிமீறலுக்கு விலை வைத்து விதிவிலக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டது. அப்பொழுதும் குடிமக்கள் அலட்சியமாக இருந்தார்கள். இதனால் தனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற அரசின் ஆணவப் போக்கு அதிகரித்தது. குடியின் அலட்சியமே கோலின் ஆணவமாக உருமாறும்.