திசைமாறும் போராட்டம்
மம்தா பானர்ஜி 11 வது நாளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் சிங்குர் என்ற இடத்தில் டாடா நிறுவனம் தொடங்கவுள்ள சிறு கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளை மாநில அரசு கட்டாயப்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்துகிறது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அக்கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் 12,000 விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி 1000 ஏக்கர் நிலத்தை வாங்குவது நியாயமா? என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேள்வி.
இதனை மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ய மறுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விரிவான “கட்டுரை-பதில்’ கொடுத்துள்ளார். “”மம்தாவின் குற்றச்சாட்டு உண்மையல்ல. அனைவரும் நிலத்தை விற்க ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். சுமார் 9000 விவசாயிகள் ரூ.131 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த நிலம் ஒரு போகம் விளையும் பூமிதான். சிங்குரில் விவசாய நிலங்கள் விற்கப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டில் 572 பேர், 300 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள். சிங்குரில் நிலத்தை விற்க யாரும் விரும்பவில்லை, நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது பொய்” என்று விரிவான ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் பதில் கொடுத்துள்ளார். இனி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அனுமதிக்கப் போகும் மாநிலங்கள், பிருந்தா காரத்தின் பதில்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் ஆச்சரியமில்லை.
மாநில அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து இப்போது பிரச்சினை வர்த்தக திசைக்குப் பாய்ந்துள்ளது. டாடா பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார் மம்தா.
விவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனத்துக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது யாரும் எதிர்பார்க்காதது. இந்த போராட்டத்துக்கு முன்பே, நிருபர்களிடம் பேட்டி அளித்த மம்தா, தாங்கள் டாடா நிறுவனத்தையோ தொழில்மயமாக்கலையோ எதிர்க்கவில்லை என்றார்.
டாடா நிறுவன பொருள்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு டாடா கார் தொழிற்சாலையின் பங்குகளைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
சிங்குர் பகுதியில் நிலத்தை இழப்போர், வேலையிழக்கும் விவசாயத் தொழிலாளர்கள் என சுமார் 35000 பேர் வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடும். விவசாயத்தை மட்டுமே அறிந்த, வேறு தொழில் தெரியாத இந்த ஏழை மக்களின் கைகளில் இழப்பீட்டுத் தொகை வெகுசீக்கிரத்தில் கரைந்துவிடும். மீண்டும் வறுமையில் வாடுவார்கள்.
டாடா நிறுவனம் பல தொழில்களில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனம். இரும்புத் தொழிலை உலக அளவில் விரிவு செய்யவுள்ளது. நிலத்தை விற்கும் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையில் 75 சதவீதத்தை சம-பங்குகளாக டாடா நிறுவனம் வழங்க வலியுறுத்தினால், அது உண்ணாவிரதம், புறக்கணிப்பு இவற்றைவிட உண்மையான காந்தியமாக அமையும்.
1000 ஏக்கரில் சிங்குர் கார் தொழிற்சாலை நில குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம்
கோல்கத்தா, மார்ச் 10: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், ரூ. 1 லட்சம் சிறிய கார் தொழிற்சாலை அமைப்பதற்கான 997 ஏக்கர் நில குத்தகை ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.
ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் (நிதி) ஆர்.எஸ். தாக்குர், மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷன் சார்பில் மாநில தொழில்துறைச் செயலர் சபியாசச்சி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நிலக்குத்தகை ஒப்பந்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இந்தக் கார் தொழிற்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பயிர் செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 25 நாள்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
உண்ணாவிரதத்தை மம்தா பானர்ஜி ஜனவரி 25-ம் தேதி கைவிட்ட ஒரு வாரத்தில், கார் தொழிற்சாலை அமைக்க நிலத்தை சமன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் டாடா நிறுவனத்தை மேற்கு வங்க அரசு அனுமதித்தது.
திரிணமூல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் போராட்டம் படிப்படியாக வலுவிழந்த நிலையில், நில குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்பட்ட 997.11 ஏக்கர் நிலத்துக்காக ரூ. 120 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மத்தியில் ரூ. 1 லட்சம் கார் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.