லண்டன் டைரி: லண்டன் டவர் ஒற்றைக் கட்டடமில்லை!
இரா. முருகன்
கி.மு முன்னூற்றுச் சொச்சம், கி.பி. எண்ணூற்று முப்பத்தேழு என்று யாராவது மூக்குக் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு வரலாற்றுப் பாடம் ஆரம்பித்தால் உடனடியாக ஜகா வாங்கி தலை தெறிக்க ஓடுகிறவரா நீங்கள்? உங்களோடு கூட, அல்லது பத்து அடி இன்னும் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறவன் என்ற தகுதியோடு சொல்கிறேன் -லண்டன் கோபுரத்துக்குள் நுழைவதாக இருந்தால் கொஞ்சம் யோசித்துவிட்டுக் காலை எடுத்து வையுங்கள், மீறிப் போனால், “”வேண்டாம், வேண்டாம்” என்று நீங்கள் கையைக் காலை உதைத்து அடம் பிடித்தாலும் கிடத்திப் போட்டுச் சரித்திரத்தைக் கரைத்துப் புகட்டிவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள்.
பிரிட்டீஷ் அரசாங்கமே இதற்காக மெனக்கெட்டு செலவு செய்து யோமன் காவல்காரர்கள் என்று மாஜி ராணுவ வீரர்களின் ஒரு படையையே வேலைக்கு அமர்த்தி இருக்கிறது. பீஃப் ஈட்டர்ஸ், அதாவது, “மாட்டு மாமிசம் சாப்பிடுகிறவர்கள்’ என்று இவர்களுக்குச் செல்லப் பெயர்.
டவர் ஹில் பாதாள ரயில் ஸ்டேஷனில் இறங்கி, கையில் பிடித்த காமிரா, பாப் கார்ன் பொட்டலம், புஷ்டியான கேர்ள் ப்ரண்ட் என்று சுறுசுறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிற கூட்டத்தில் கலக்கிறேன். முன்னால் ஏழெட்டு பிரம்மாண்டமான அலுமினிய டிபன் காரியரை அடுத்தடுத்து நிறுத்திய மாதிரி கோட்டை, கொத்தளம். தூர்ந்து போன அகழி என்று தேம்ஸ் நதிக்கரையில் லண்டன் கோபுர வளாகம் கம்பீரமாக நிற்கிறது. “தனிக்கட்டை ஆசாமிகளுக்கு பதினைந்து பவுன் டிக்கெட். குடும்பமாக வந்தால் நாற்பத்தைந்து பவுன் மட்டும்தான்’ என்று அறிவிப்புப் பலகை கண்டிப்பாகச் சொல்கிறது… ரொம்ப வயதான ஒரு கொரிய தம்பதி, ரொம்ப ரொம்ப வயதான ஜெர்மானிய ஜோடி. வால்தனமான நாலு குழந்தைகளைக் கட்டி இழுத்துக்கொண்டு ஓர் அமெரிக்க அம்மா -அப்பா, நிமிடத்துக்கு நாற்பத்தேழு தடவை கிச்சுக்கிச்சு மூட்டியது மாதிரி சிரிக்கிற சீன நர்சுகளின் கூட்டம் ஒன்று. கூட நிற்கிற இவர்களில் யாரையும் சத்தியப் பிரமாணம் செய்து “என்னோட குடும்பம்’ என்று கூடவே அழைத்துப் போய் குடும்ப டிக்கெட் எடுத்துக் காசை மிச்சப்படுத்த முடியாது என்று நிச்சயமாகத் தெரிய, மனசே இல்லாமல் பதினைந்து பவுனை அழுது ஒரு டிக்கெட் வாங்குகிறேன்.
அழுத்தமான கறுப்பில் சிவப்புக் கோடு இழுத்த நர்சரி பள்ளிக்கூட பின்-அப்-பார்ம் சீருடை அணிந்து கொண்டு தாடி வைத்த வயதான ஒரு பீஃப் ஈட்டர் எனக்காகக் காத்திருக்கிறார். எதிரில் முன்னால் சொல்லப்பட்ட சுற்றமும் நட்பும்.
“”வெள்ளைக் கோபுரத்தோடு பயணத்தைத் தொடங்கலாமா… எனக்கு நீங்கள் காசு பணம்னு எதுவும் தரத் தேவையில்லை. ராணுவ பென்ஷன். இந்தக் காவல் உத்தியோகத்துக்குக் காசு, தங்கியிருக்க கோட்டைக்குள்ளேயே வீடு இப்படி அரசாங்கமே எல்லாம் கொடுக்குது.”
“சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி எல்லாம் ரொம்பத் திருப்திகரமா இருக்கு’ என்று கூட்டம் கூட்டிச் சொல்கிற சர்க்கார் ஊழியரை வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்த்த ஆச்சரியத்தைப் பகிர்ந்துகொள்ளத் திரும்பிப் பார்த்தால், சீன நர்சுகள் கெக்கெக் என்று சிரிக்கிறார்கள். அவர்கள் நாட்டில் எல்லோருமே எப்போதுமே சந்தோஷமாக இருப்பார்கள். இல்லாத பட்சத்தில் நாலு மாசம் ஜெயிலில் தள்ளிச் சந்தோஷப்படுத்தி அனுப்பிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.
“”லண்டன் டவர்னு சொல்றது ஒத்தைக் கட்டடம் இல்லை. சின்னதும் பெரிசுமா இருபது கோட்டைகள், கோபுரம், அகழி எல்லாம் சேர்ந்த இந்த இடம் முழுக்கவே லண்டன் டவர்தான். வெள்ளைக் கோபுரம், செங்கல் கோபுரம், மணிக் கோபுரம், ரத்தக் கோபுரம். தொட்டில் கோபுரம், நடுக் கோபுரம், உப்புக் கோபுரம், கிணற்றுக் கோபுரம் இப்படி இருபது கோட்டைகள். முதன்முதலாக் கட்டினது வெள்ளைக் கோபுரம். அது கி.பி 1078ல்.” அவர் பின்னால் விரிந்து கிடக்கிற கட்டடங்களை இரண்டு கையையும் விரித்துச் சுழற்றிக் காட்டியபடி தொடர்கிறார். பழைய ஜேம்ஸ்பாண்ட் சினிமா ஹீரோ ஷான் கானரி போல கம்பீரமான குரல்.
“”ஆயிரத்து எழுபத்தெட்டிலா?” நம்ப முடியாத விஷயத்தைக் கேட்டதுபோல் ஜெர்மானியப் பெருந்தாத்தா தலையாட்டி, பாட்டி காதில் ஏதோ சொல்கிறார். “”நமக்குக் கல்யாணம் ஆனதுக்கு அடுத்த வருஷம்” என்று நான் மொழிபெயர்த்துக் கொள்கிறேன்.
இங்கிலாந்தை ஆயிரம் வருடம் முன்னால் ஆக்கிரமித்த வில்லியம் மன்னன் வெள்ளைக் கோபுரத்தைக் கட்டியதற்கு முக்கியக் காரணம் பயம்தான் என்று தெரிகிறது. பகை அரசர்களின் படையெடுப்பிலிருந்து தற்காப்பு நடவடிக்கை என்று வெளியே சொன்னாலும், லண்டன் பட்டணத்து ஜனங்களிடமிருந்து ஜாக்கிரதையாகத் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ளத்தான் மேற்படி வில்லியம் இதைக் கட்டியிருக்கிறான். கருங்கல், சுண்ணாம்பு, ஜல்லி வகையறாக்களுக்குக் கூட லண்டன்காரர்களை நம்பாமல், ஒரு கல் விடாமல் பிரான்சிலிருந்து வரவழைத்திருக்கிறான் இந்தப் பேர்வழி.
வெள்ளைக் கோபுரத்துக்குள் நுழைகிறேன். சரித்திரத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார் காவலாளி. “”வில்லியம் ராஜாவிலே தொடங்கி அப்புறம் வந்த ராஜாக்களும் ராணிகளும் இங்கே அடுத்தடுத்து கட்டடம் கட்டியிருக்காங்க. இல்லேன்னா அவங்க கழுத்தை அறுத்துக் கொன்று போட்டு மத்தவங்க அழகான சமாதி கட்டியிருக்காங்க. அதுக்கு முன்னாடி அவங்களை அடைச்சு வைக்க ஏற்கனவே இருந்த கோபுரங்களைச் சித்திரவதைச் சாலை, சிறைக்கூடம்னு மாற்றி அமைச்சிருக்காங்க. ஆக, கட்டட கான்ட்ராக்டர்களுக்கு எப்போவும் எக்கச்சக்க டிமான்ட்.”
அமெரிக்க அம்மையார் சரித்திரத்தில் பொறுமையில்லாமல் நாலு குட்டிக் குழந்தைகளையும் பீஃப் ஈட்டருக்கு முன்னால் தள்ளிவிட்டு அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் காமிராவில் கோணம் சரிபார்க்கிறார். மேலிட அனுமதி வாங்கிவிட்டு, வீட்டுக்காரரும் ஃபோட்டோவில் இடம்பெற ஓடுகிறார். “”கோபுரத்தை மறைக்கறீங்களே தரையிலே உட்காருங்க”. வீட்டம்மா கட்டளைப்படி காவல்காரரின் காலடியில் சமர்த்தாக மண்டிபோட்டு உட்கார்ந்து அட்டகாசமாக போஸ் கொடுக்கிறார். சீன நர்சுகளின் சிரிப்பை எதிர்பார்க்கிறேன். அவர்கள் பாப்கார்ன் மென்றுகொண்டு மொபைல் தொலைபேசிகளை தோள்பட்டையில் உரசித் துடைத்தபடி அதில் இருக்கும் காமிராவால் சுட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த விநாடி, பெய்ஜிங்கில் அவர்கள் வீடுகளில் மொபைல் தொலைபேசி ஒலிக்க, வெள்ளைக் கோபுரமும், தாடி வைத்த காவல்காரரும், இந்த நர்சுகளும், ஒரு நறுக்கு இங்கிலாந்து சரித்திரம் உடனடி ஏற்றுமதியாக அங்கே ஒளிபரப்பாகும். “”லண்டன்லே இருந்து எங்க யுங் யான் அனுப்பியிருக்கா. அங்கே அரண்மனை வாசல். அந்தத் தாடிக்காரக் கிழவன் யார்னு தெரியலை. சே, சே பாய் பிரண்ட் எல்லாம் இல்லை” பந்துமித்திரர்களோடு இன்னும் ஒருவாரம் தகவல் பகிர்ந்துகொள்ளப்படும்.
“”கி.பி 1536லே ஆன்போலின் அரசியை, அவங்க புருஷன் எட்டாம் எட்வர்ட் சிரச்சேதம் செய்த இடம் இது”. எனக்கு முன்னால் பச்சை விரிந்து கிடக்கும் இடத்தைப் பார்க்கிறேன். “”பட்டப்பகலில் படுகொலை. ராணி ஸ்தலத்திலேயே மரணம்” மனதுக்குள் யாரோ தலைப்புச் செய்தி படிக்கிறார்கள்.