கேரளத்தில் 62 பேருக்கு சிக்குன் குன்யா
திருவனந்தபுரம், மே 30: கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 62 பேர் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் 5 உறுப்பினர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் பி.கே. ஸ்ரீமதி இது குறித்து கூறியது:
சிக்குன் குன்யா நோய்க்கு எவரும் பலியாகவில்லை. பதனம்திட்டா மாவட்டம் சித்தூரில் அதிக அளவாக 49 பேர் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடுக்கி, கோட்டயம், பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.
—————————————————————————————————————–
தமிழகத்தில் மீண்டும் சிக்குன் குனியா?
சென்னை, ஜூன். 3: தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சனிக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:
கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டங்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. சித்த மருந்துகளும் இப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ராமச்சந்திரன்.
——————————————————————————-
கேரளாவில் சிக்குன்குனியாவால் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது
திருவனந்தபுரம், ஜுன்.12-
கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோட்டயம், பத்தினம்திட்டை, இடுக்கி, ஆலப்புழை, கொல்லம் ஆகிய மாவட்டங் களில் தான் சிக்குன்குனியா தாக்கம் அதிகமாக உள்ளது.
இம்மாவட்டங்களில் மட்டும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் 10, 319 பேரும், இடுக்கி ஆஸ்பத்திரியில் 3073 பேரும், ஆலப்புழை மாவட்டத்தில் 1515 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிக்குன்குனியாவுக்கு பலி யானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. நேற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குட்டப்பன் (வயது56), அன்னம்மா (59), வேலாயுதன் (67), அய்யப்பன் (60), தோமஸ் (76), லீலா (56), பொன்னன்குட்டி (78) ஆகிய 7 பேர் பலியாகி உள்ளனர்.
இதன் மூலம் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது.
சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இவருக்கும் உஷாகுமாரி என்ற மனைவியும், ஆதிரா, அஞ்சு, ஆரியா என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
அனில்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி உஷாகுமாரி மற்றும் 3 குழந்தைகளும் கதறி அழுதது நெஞ்சை உறுக்குவதாக இருந்தது. இனிமேல் இந்த 3 குழந்தைகளும் நான் எப்படி காப்பாற்றுவேன் என உஷாகுமாரி கதறி அழுதார்.
சிக்குன்குனியா காய்ச்சலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ராணுவ டாக்டர்கள் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கோட்டயம், திருவனந்தபுரம் அம்பூரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவ டாக்டர்கள் அமைத்துள்ள தற்காலிக முகாமில் தினமும் ஆயிரக்கணக் காணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.