ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு
 |
 |
உடைக்கப்பட்ட சிலை |
தமிழ்நாட்டில் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கோவிலுக்கு முன் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை இன்று வியாழக்கிழமை காலை இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுபவர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
இன்று விடியற்காலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத்தினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்திற்கு அருகே ராமர் படத்தை பகிரங்கமாக அடித்து சேதப்படுத்தியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1976ம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுரத்திலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் சாலை ஓரம் பெரியார் சிலையை நிறுவ திராவிடர் கழகம் முடிவு செய்தது. இதற்கு அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் முறையாக அனுமதி அளித்திருந்த நிலையிலும், இந்த சிலை கடந்த 30 ஆண்டுகளாக அங்கே நிறுவப்படவில்லை.
சமீபத்தில் இந்த சிலையை அங்கே நிறுவும் முயற்சியை திராவிடர் கழகம் வேகப்படுத்தியதோடு கடந்த சில நாட்களுக்கு முன் பெரியார் சிலையை அதற்கான பீடத்தில் நிறுவியது. இன்னும் சில நாட்களில் சிலையின் திறப்பு விழா நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.
பெரியாரின் சிலையை ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்திற்கு அருகே நிறுவுவதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
கடவுள், மத நம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நாத்திகரான பெரியாரின் சிலையை, இந்துக்களின் தொன்மையான கோவில்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன் 100 அடி தூரத்தில் நிறுவுவது, இந்த கோவிலுக்கு வழிபாட்டுக்காக வரும் ஆயிரக்கணக்கான இந்து மத பக்தர்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் செயல் என்று இந்த அமைப்புகள் கருத்து தெரிவித்து வந்தன.
 |
சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலைக்கு பதில் புதிய வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டு டிசம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படும்

திராவிடர் கழகம்
|
பெரியாரின் சிலையை இந்த இடத்தில் நிறுவுவதற்கு தடை விதிக்கும்படி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 பேர் சிலையை சுத்தியலால் உடைத்ததில் சிலையின் கழுத்து பகுதி துண்டானது. சிலை உடைக்கும் சத்தம் கேட்டதும் அருகில் இருந்த காவல்நிலையத்தில் இருந்து காவலர்கள் இதில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
அதேசமயம் சிலைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்கள் நான்குபேர் சிலை உடைப்பை தடுக்காமல் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலைக்கு பதில் புதிய வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டு டிசம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு: புதிய வெண்கல சிலை நள்ளிரவில் நிறுவப்பட்டது
திருச்சி, டி.ச8-
திருச்சி ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் முன்பு 100 அடி தூரத்தில் நிறுவப்பட்ட 8 அடி உயர பெரியார் சிலையை நேற்று இந்துமக்கள் கட்சியை சேர்ந்த 5 பேர் உடைத்தனர். இது தொடர்பாக கோவை மாவட்ட இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மாணிக்கம், சுஜித், ராஜேந்திரன் ஸ்ரீரங்கம் ராகவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியார் சிலை உடைக் கப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகம் தி.மு.க., புரட்சிகர மாணவர் இளைஞர் அணி, மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சாலை மறியல், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். துணை போலீஸ் கமிஷனர் ராஜசேகரன் தலைமையில் போலீஸ் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந் தனர். இன்றும் 2-வது நாள் பாதுகாப்பு நீடிக்கிறது.
இந்த நிலையில் உடைக்கப்பட்ட சிமெண்டு சிலைக்கு பதிலாக அதே இடத்தில் புதிய பெரியார் சிலையை அமைக்க திராவிட கழகம் முடிவு செய்தது. இதற்காக நேற்று சென்னையில் இருந்து புதிய வெண்கல பெரியார் சிலையை உடனே கொண்டு வந்தனர்.
பீடத்தில் பாதி உடைந்த நிலையில் இருந்த சிமெண்டு சிலையை உடைத்து எடுத்தனர். அதன் பிறகு அந்த இடத்தில் புதிய சிலையை வைத்தனர். இரவு 11 மணிக்கு தொடங்கிய பணி அதிகாலை 4 மணி வரை நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் செந்தமிழ் இனியன் மற்றும் திராவிட கழகத்தினர் பணிகளை பார்வையிட்டனர்.
புதிதாக வைக்கப்பட்டுள்ள வெண்கல பெரியார்சிலை 550 கிலோ எடை உள்ளது. பெரியார் உட்கார்ந்து படிப்பதுபோல் அமைக்கப்பட்டு உள்ளது.
4 அடி உயரம் உடையது. சென்னை மவுண்டு ரோட்டில் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்த பெரியார் சிலையை போன்றே இந்த சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை வடிவமைக்க ரூ.3.24 லட்சம் செலவு செய்யப்பட்டு உள் ளது.
புதிய பெரியார் சிலை வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அமைச்சர் நேரு தலைமை தாங்குகிறார். அமைச்சர் செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார்.
திராவிட கழக தலைவர் வீரமணி திறந்து வைக்கிறார். புதிய சிலை சுற்றி தற்போது தகரத்தால் ஆன தடுப்பு போடப்பட்டு உள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலை மையில் 4 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே இந்து மக்கள் கடசி போலீஸ் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து உள்ளது. இதனால் ஸ்ரீரங்கத்தில் இன்றும் பதட்டம் நிலவுகிறது. சிலை திறப்பு விழா நாளன்றும் உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பதட்டம் இன்னும் ஒயவில்லை.
போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சங்கர் ஜிவால், துணை கமிஷனர் ராஜசேகரன் மற்றும் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.