Thiruvengimalai Saravanan – Soolamangalam Sisters (Rajalakshmi): Notable Women Series in Kumudam
Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007
‘‘சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’’
நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் கந்த சஷ்டிகவசத்தை அதிகாலையில் கேட்கும்போது அந்த முருகனே நம்மை நேரில் வந்து தட்டி எழுப்புவது போன்று ஒரு சிலிர்ப்பான உணர்வு ஏற்படும். வரிகள் மட்டுமல்ல, கவசத்தை உச்சரிக்கும் அந்தத் தேன் குரல்களும் நம்மை இனம்புரியாத ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்வது நிஜம்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் காதுகளில் ஒலிக்கும் அமுதகீதம் அது. பாடலைக் கேட்கும்போதே சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமியும், ராஜலட்சுமியும் மின்னலாக நம் நினைவிற்கு வருவார்கள். சமயத்தில் அது இரண்டு குரலா அல்லது ஒரே குரலா என்ற சந்தேகம் கூட ஏற்படும். அத்தனை ஸ்ருதி சுத்தம். அத்தனை புரிந்துகொள்ளுதல்! அது கர்நாடக சங்கீதமாக இருந்தாலும் சரி, மெல்லிசை பக்திப் பாடல்களாக இருந்தாலும் சரி இவர்கள் குரலில் ஒரு தெய்வீகத் தன்மை இருக்கும்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் சூலமங்கலம்! அந்த ஊர் கர்ணம் ராமசாமி ஐயர் _ ஜானகி தம்பதிக்குப் பிறந்த சகோதரிகள்தான் ராஜலட்சுமியும், ஜெயலட்சுமியும். மூத்தவர் ஜெயலட்சுமி. இளையவர் மறைந்த ராஜலட்சுமி. சகோதரிகளில் கடைக்குட்டி சரஸ்வதி! தங்கள் சங்கீத வாழ்க்கையில் இவர்கள் குடும்பம் சந்தித்த கடுமையான போராட்டங்களும், சோகமான நெருக்கடிகளும் ஏராளம்! ஆனால், எந்தக் கட்டத்திலும் அவர்கள் தாங்கள் நேசித்த சங்கீதத்தை விட்டுவிடவில்லை. எட்டு வயதில் குடும்பச் சுமையை சுமக்கப் போகிறோம் என்பது சின்னப் பெண் ராஜலட்சுமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!
மாயவரம் பக்கத்திலுள்ள திருச்செம்பொன்பள்ளி மாரியம்மன் இவர்கள் குலதெய்வம். அங்கு சின்ன வயதில் ராஜலட்சுமி கூட்டத்தில் காணாமல் போய்விட்டாராம். உறவினர்கள் அனைவரும் ஆளுக்கொரு மூலையில் தேடியபோது, ஒரு கிராமத்தின் வயல் பரப்பில் ஒரு பெண், குழந்தை ராஜலட்சுமியை கையில் பிடித்து கொண்டிருந்தாராம். ஓடி குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டபோது அந்த அம்மாளைக் காணவில்லை. மாரியம்மனே தன் குழந்தையைக் காப்பாற்றியதாக உணர்ந்த அவர்கள், குழந்தை ராஜலட்சுமியை ‘மகமாயி பிச்சை’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
சூலமங்கலம் கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை ராதா கல்யாண உற்சவம் பத்து நாட்கள் அமர்க்களமாக நடக்கும். இந்த விழாவில் பாட, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரிய பெரிய சங்கீத மேதைகள் வருவார்கள். இவர்களது கச்சேரிகளைக் குழந்தைகள் ஜெயலட்சுமியும், ராஜலட்சுமியும் தனது பெற்றோருடன் சென்று கேட்பது வழக்கம். இதனால் இவர்கள் சின்ன வயதிலேயே இசையால் ஈர்க்கப்பட்டார்கள். பெற்றோர் குழந்தைகளின் இசை ஆர்வத்தைப் பார்த்து கிராமத்தில் இருந்த வைத்தியநாத பாகவதரிடம் சங்கீதம் கற்க அனுப்பி வைத்தார்கள்.
குட்டிப் பெண் ராஜலட்சுமியின் இசை ஞானத்தை அப்போதே பலர் பிரமிப்புடன் பார்த்தனர். ஏழு வயதிலேயே மேடை ஏறி கச்சேரி செய்தார். சுற்று வட்டாரங்களில் குழந்தையின் பாடலைக் கேட்க பலர் ஆர்வத்தோடு வந்தார்கள். எட்டு வயது இருக்கும்போது ராஜலட்சுமியின் தந்தை மரணம் அடைந்தபோது, அந்தக் குடும்பம் நிலை குலைந்துபோனது. வீட்டில் எல்லாருமே சின்னஞ்சிறுசுகள்! ராஜலட்சுமியின் தங்கை சரஸ்வதிக்கு ஆறு வயது. தம்பி சேதுராமனுக்கு மூன்று வயது. நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு, என்ன செய்வதென்று புரியாமல் ராஜலட்சுமியின் தாயார் ஜானகிஅம்மாள் தவித்துப் போனார். அந்த நேரம் அவருடைய சகோதரர் ராணுவத்தில் உயர்பதவியில் இருந்தார். குழந்தைகளை வைத்துக்கொண்டு தனது சகோதரி தடுமாறுவதைப் பார்த்து சகோதரர் தனது வேலையை ராஜினாமா செய்தார். உடனே சூலமங்கலத்திலுள்ள வீடு, நிலங்களை விற்று தன் சகோதரி குடும்பத்தாரை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். சென்னை மைலாப்பூரிலுள்ள நாட்டு சுப்புராய முதலி தெருவில் குடியேறினார்கள்.
இதனால் ராஜலட்சுமிக்கு ஸ்கூல் படிப்பு பாதியோடு நின்றது. சென்னையில் வைத்தியநாத அய்யர், நாரதர் ஸ்ரீனிவாசராவ் ஆகிய இருவரும் அந்தக் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்தனர். சகோதரிகள் இருவரையும் பத்தமடை கிருஷ்ணனிடம் (பாரதியார் மருமகன்.) முறைப்படி சங்கீதம் கற்க வைத்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கற்றுக்கொண்டனர். மாலை நேரங்களில் சின்னச் சின்ன கோயில்களில் ராஜலட்சுமியின் கச்சேரி நடக்கும். கூடவே அக்காள் ஜெயலட்சுமியும் சேர்ந்து பாடுவார். சிறுமி ராஜலட்சுமி பாடியது அனைவரையும் கவர்ந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கச்சேரிகளில்கூட பாடும் வாய்ப்புக் கிட்டியது. கச்சேரிகள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றினார்கள். கூடவே கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் புகழ் பரவ ஆரம்பித்தது. குழந்தைகளின் பாட்டைக் கேட்டு பாராட்டாதவர்களே இல்லை.
ஒருமுறை நாரதர் சீனிவாசராவ் நடத்திய கண்காட்சியில் சூலமங்கலம் சகோதரிகள் பாடினார்கள். அப்போதுதான் சிறையிலிருந்து வெளியே வந்திருந்த தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் இவர்களின் கச்சேரியைக் கேட்க வந்திருந்தார்கள். சகோதரிகள் பாடும் திறமையைக் கண்டு அசந்து போய்விட்டார்களாம். பாகவதர், சிறுமி ராஜலட்சுமியை அழைத்து பல தீட்சிதர் கிருதிகளைப் பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்தப்பட்டார். பி.யூ.சின்னப்பா தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகளின்போது சிறுமி ராஜலட்சுமியை அழைத்து, அவரைப் பாடச்சொல்லி, தான் கஞ்சிரா வாசிப்பது வழக்கமாகவே ஆகிவிட்டது.
லேனா செட்டியார் தயாரித்த ‘கிருஷ்ணபக்தி’ (1948) படத்தில் வரும் ‘கடவுளைக் கண்டேன், கண்ணன் மேல் காதல் கொண்டேன்’ என்ற பாடல்தான் ராஜலட்சுமி பாடிய முதல் சினிமா பாடல். அப்போது அவருக்கு வயது பன்னிரண்டு. அந்த வயதில் அவருக்கிருந்த ஞானமும் மனோதைரியமும் பலரைக் கவர்ந்தது. இதைத் தொடர்ந்து பல பாடல்களுக்குப் பாடும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன.
‘கொஞ்சும் சலங்கை’யில் ‘காணக் கண் கோடி வேண்டும்’, ‘படிக்காத மேதை’யில் ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா…’ ‘குங்குமம்’ படத்தில் ‘குங்குமம், மங்கள மங்கையர் குங்குமம்..’ என்று நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி தமிழ்த் திரை இசை உலகிற்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தார்.
1957_ல் ராஜலட்சுமிக்குத் திருமணம் நடந்தது. அப்போது சினிமா துறையில் உதவி இயக்குநராக இருந்த பாலகிருஷ்ணனைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அடுத்த ஆண்டே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையனின் பெயர் முரளி.
பழனியில் பங்குனி உத்திரம் தங்கத்தேர் அன்று இவர்கள் கச்சேரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ‘பழனி என்னும் ஊரிலே பழனி என்னும் பேரிலே, பவனி வந்தான் தேரிலே, பலனும் கண்டான் நேரிலே…’ என்று பாடும்போது தங்கத்தேரில் சரியாக முருகன் உலா வருவாராம். பக்தர்கள் இவர்கள் பாடலையும் முருகனையும் ஒரு சேர தரிசிப்பதைப் பாக்கியமாகக் கருதினார்கள்.
‘முருகனுக்கொரு நாள் திருநாள்’ உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தன் சகோதரியோடு பாடியிருக்கிறார் ராஜலட்சுமி. ‘தேவரின் தெய்வம்’ படத்தில் ‘வருவான்டி, தருவான்டி’ பாடல்தான் ராஜலட்சுமி பாடிய கடைசி சினிமா பாடல்.
கந்தசஷ்டி கவசத்தை ராஜலட்சுமி, தன் சகோதரி ஜெயலட்சுமியுடன் பாடிப் பதிவு செய்து வெளியிடவேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால், பல கிராமபோன் ரிக்கார்டு கம்பெனிகள் முதலில் மறுத்தன. ‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் வீண் முயற்சி’’ என்றார்கள். ஆனால் ராஜலட்சுமி விடவில்லை. அக்கா ஜெயலட்சுமியுடன் சேர்ந்து இந்த கந்தசஷ்டி கவசத்திற்கு எப்படி டியூன் போட்டுப் பாடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்து முதலில் ‘ஆபேரி’ அடுத்து ‘சுப பந்துவராளி’. அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’. இப்படி நான்கு ராகத்தில் பாடல் பாடப்பட்டு 1970_ல் ரிக்கார்டு செய்யப்பட்டது. முதலில் 500 எல்.பி. ரிக்கார்டுதான் போடப்பட்டது. பிறகு, அதுவே ரிக்கார்டு விற்பனையில் மிகப் பெரிய சாதனையாக மாறிவிட்டது.
1992_ல் ஜூன் மாதம் மஞ்சள் காமாலை நோய் வந்து சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ராஜலட்சுமி. சிகிச்சை பலனளிக்காமல் தனது 54 வயதில் ராஜலட்சுமி மரணம் அடைந்தார்.
மந்தைவெளியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில்தான் இன்றைக்கும் ராஜலட்சுமியின் அக்காள் ஜெயலட்சுமியும், தங்கை சரஸ்வதியும் வாழ்கிறார்கள். ‘‘தங்கை ராஜலட்சுமி இறந்தபிறகு நான் பாடுவதையே நிறுத்திவிட்டேன். சின்ன வயசிலிருந்தே அவளுக்கு அவ்வளவு இசைஞானம். சகோதரிகளுக்குள் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை. அவள் அடிக்கடி என்னைப் பார்த்துச் சொல்லுவாள், ‘நீ இராமனாக நடந்துகொண்டு இருக்கிறே… நான் சீதையாகப் பின் தொடர்வேன்’ என்பாள். இப்போது எனக்கு முன்னால் சென்றுவிட்டாள்’’ என்றபோது குரல் கரகரத்தது. ‘‘கந்த குரு கவசம்’ ரிக்கார்டு செய்து கொண்டு இருந்தோம். இது கேசட்டில் கந்த சஷ்டி கவசத்திற்கு அடுத்த பக்கம் வருவது. இருவரும் ஒரு பத்து பன்னிரண்டு வரி பாடியிருப்போம். திடீரென்று ராஜலட்சுமிக்கு வீரஆவேசம் வந்துவிட்டது. தனியாகவே பாட ஆரம்பித்தாள். நான் பாடுவதை நிறுத்திக்கொண்டேன். இறுதியில் முடிக்கும்போது சேர்ந்தே பாடிமுடித்தோம்’’ என்று பழைய நினைவலைகளில் மூழ்கிவிட்டார் ஜெயலட்சுமி.
ஜெயலட்சுமிக்கும் சரஸ்வதிக்கும் குழந்தை பிராப்தம் இல்லை. ராஜலட்சுமியின் மகன் முரளியைத்தான் தங்கள் மகனாக நினைக்கிறார்கள். முரளி_ வசந்தி தம்பதியருக்கு ஒரே பையன் விஷால். இன்ஜினீயரிங் படிக்கிறார்.
நாம் விடைபெறும் நேரம் ஜெயலட்சுமியிடம், ‘‘ராஜலட்சுமியுடன் சேர்ந்து பாடிய திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடலை எங்களுக்காகப் பாடுங்களேன்’’ என்றபோது சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாடினார். பல்லவியை முடித்துவிட்டு, அனுபல்லவியில் ‘‘பழனியிலே இருக்கும் கந்தப்பழம்! உன் பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்!’’ என்கிறபோது அவர் குரல் உடைகிறது. ‘‘ராஜலட்சுமி இந்த இடத்தில் என்னமாய் பாடுவா!’’ என்று சொல்லும்போது, ஜெயலட்சுமியின் கண்களில் நீர் முட்டுகிறது. அதற்குமேல் அவரால் பாட முடியவில்லை. அவர்கள் மட்டுமே உணரக்கூடிய பாசம் அது.
mohan said
i want this piece.
பத்மா அர்விந்த் said
இந்த தளத்தை அதிகம் அறிந்திருக்கவில்லை. நன்று. மருத்துவ பதிவுகளை நிதானமாக படிக்க வேண்டும். மருத்துவ பதிவுகளை ஏன் snapjudge.wordpress இல ஏன் பதியவில்லை? பலருக்கும் படிக்க வசதியாக இருக்கும்.
bsubra said
பத்மா நன்றி 🙂
இந்தத் தளம் முழுக்க முழுக்க காபி… கன்வர்ட் டு ஒருங்குறி… பேஸ்ட் என்னும் தகவல்கள் நிறைந்தவை. பெரும்பாலும் ஒருங்குறியில் இயங்காத வலையகங்களில் இருந்து விஷயங்கள் சுடப்படுகிறது. தினமணி, மாலைமலர், குமுதம், தமிழன் எக்ஸ்பிரஸ், விகடன் போன்றவைதான் அதிகம் கை கொடுக்கிறது.
பெரும்பாலானவை ரெஃபரன்ஸ் போல் பிற்காலத்தில் பயன்படுவதற்காக சேமிப்பவை. அரசியல் நிகழ்வுகள், வாழ்க்கை குறிப்புகள், பேட்டிகள், சிறப்புக் கட்டுரைகள், பிபிசி தமிழில் வெளியாகும் உலக செய்திகள் இங்கு கிடைக்கும். எதுவும் நான் எழுதியது கிடையாது. பல நறுக்குகளை நான் முழுக்க படிப்பது கூட கிடையாது 😀
மக்களை வரவழைக்க ஸ்ரீகாந்த்-வந்தனா; பிரசாந்த் போன்ற ஜனரஞ்சகமான வம்புகளும் தொகுக்கக்கப்படும் 😉
என்றாவது, காப்புரிமை பிரச்சினை விஸ்வரூபமானால், இந்தத் தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் எளிதில் உறைந்து, மறைந்து போக வைப்பதற்காக தனியே சேமித்து வருகிறேன்.
padma Arvind said
பாலா
நீங்கள் சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகள் விவரம் தருவதால், காப்புரிமை பிரச்சினை வரும் என்று தோன்றவில்லை. இப்போதெல்லாம் பலரும் திரட்டியில் இருந்து விலகுவதால் தனிப்பட்ட கூகிள் ரீடர் போன்றவற்றிற்கு அவசியம் அதிகமாகிறது. நான் பல பத்திரிக்ககளை படிப்பதில்லை என்பதால் உங்கள் இந்த தளம் எனக்கு பிடித்திருக்கிறது. செலவிடும் நேரத்திற்கும் அக்கறைக்கும் நன்றி.