லண்டன் டைரி: ஈஸ்ட் ஹாம் கடைவீதியும்… மாம்பலம் ரங்கநாதன் தெருவும்!
இரா. முருகன்
சுரங்கப்பாதை கும்மிருட்டு வழியாக இரண்டு ஸ்டேஷன், அப்புறம் மேலே தரைக்கு வந்து, வெய்யில் காய்ந்து கொண்டிருக்கிற அடுத்த ஸ்டேஷன், திரும்ப சுரங்கம் என்று குஷியாகக் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு லண்டன் டிஸ்ட்ரிக்ட் லைனில் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரயில் பெட்டியில் நான். மற்றும், போன ஸ்டேஷனில் குழந்தையோடு ஏறிய ஒரு பெண்.
குழந்தையைத் தோளில் சார்த்தியபடி, அந்தப் பெண் கையில் காகிதக் காப்பிக் கோப்பையோடு என்னை நோக்கிப் புன்னகையுடன் நடந்து வருகிறாள். பக்கத்தில் வந்து கோப்பையைக் குலுக்கியபடி, “”சில்லறை இருந்தா போடு, ப்ளீஸ்” என்கிறாள். போலந்து தேசத்திலிருந்து வந்திருக்கிறாளாம். சிநேகிதன் கைவிட்டுவிட்டு ஒரு சீனப் பெண்ணோடு போய்விட்டானாம். தடுமாறும் ஆங்கிலத்தில் அவள் சொல்லும்போது குழந்தை விழித்துக்கொண்டு அழ ஆரம்பிக்கிறது. நான் சட்டைப் பையில் தேடிப் பார்த்து ஒரு பவுண்ட் நாணயத்தைக் குவளையில் போடுகிறேன். அடுத்த ஸ்டேஷன் வரும்போது குவளை கைப்பையில் மறைய, குழந்தையைச் சமாதானம் செய்தபடி அவள் இறங்குகிறாள்.
ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையத்துக்கு வெளியே வருகிறேன். லண்டனின் புறநகர்ப் பகுதி இது. ஐம்பது அறுபது வருடம் முன்னால் கிட்டத்தட்ட கிராமம் தான். அப்போது வெறும் ஆறாயிரம் பேர்தான் மொத்த ஜனத்தொகையே. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜெர்மன்காரர்கள் வெறியோடு இங்கே குண்டு வீசித் தாக்கி விளைவித்த சேதம் கணிசமானது. ஆனாலும் இப்போதைய ஈஸ்ட் ஹாமில் ஜனத்தொகை பழையதைவிடக் கிட்டத்தட்டப் பத்து மடங்கு அதிகம். இதில் பெரும்பகுதி சுறுசுறுப்பான தமிழர்கள்.
ஈஸ்ட் ஹாம் கடைவீதி கொஞ்சம் விஸ்தாரமான, அதிகம் கூட்டமில்லாத மாம்பலம் ரங்கநாதன் தெரு போல் விரிந்து கிடக்கிறது. தமிழில் பெயர் எழுதிய ஜவுளிக் கடை வாசல் கண்ணாடிக் கூண்டில் சிக்கென்று புடவை கட்டிய விளம்பரப் பொம்மைப் பெண் கை கூப்பித் திரும்பத் திரும்ப வணங்குகிறாள். அசல் தங்க நகை (சேதாரம், செய்கூலி என்ன ஆச்சு?) விற்கிற கடை. சீடை முறுக்கு, சாம்பார்ப்பொடி, ரசப்பொடிக் கடை. தெருவிலிருந்து கொஞ்சம் விலகி மகாலட்சுமி அம்மன் கோயில். அங்கே இன்றைக்கு ராத்திரி “ருக்மிணி கல்யாணம்’ பக்திப் பேருரை என்று அறிவிக்கும் நோட்டீசு ஒட்டிய சுவரில் பக்கத்திலேயே பாப் மியூசிக் நிகழ்ச்சிக்கான சுவரொட்டி.
வீடியோ, ஆடியோ காசெட் விற்கிற கடையில் “அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் ஓட்டல் அல்வா’ என்று என்னத்துக்காகவோ ஆக்ரோஷமும் அவசரமுமாக ஒலிக்கிற சினிமாப் பாட்டின் அடுத்த வரியை எதிர்பார்த்தபடி பத்திரிகைக் கடையில் நுழைகிறேன். கொஞ்சம் ஆறிப்போன சரக்குகள். அதாவது போன வாரத்திய தமிழ் வாரப் பத்திரிகைகள், முந்தா நாளைய சென்னைப் பதிப்பு, தினசரிகள். ஆச்சரியகரமாக, இலக்கியச் சிற்றிதழ் ஒன்று. “”மூணு பவுண்ட் சார்”. கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ரூபாய். சென்னையில் இருக்கும்போது அந்தப் பத்திரிகை ஆசிரியர் “ஆண்டு சந்தாவைப் புதுப்பிக்க நூற்றிருபது ரூபாய் அனுப்பவும்’ என்று அவ்வப்போது அனுப்பிய தபால் அட்டைகளைக் கண்டுகொள்ளாமல் விட்ட குற்றத்துக்குத் தண்டனையாக மூன்று பவுண்ட் கொடுத்து, ஓரத்தில் பழுப்பேறிய ஒரு பிரதியை வாங்குகிறேன். “”பஞ்சாங்கம் வேணுமா சார்?”. எடுத்துப் புரட்டிப் பார்க்கிறேன். லண்டன் அட்சரேகை தீர்க்கரேகைக்குப் பிரத்தியேகமான திருக்கணிதப் பஞ்சாங்கம். இலங்கை மட்டுவில் பகுதியில் கணித்து வெளியிடப்பட்டது. ஈழத் தமிழர்களை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
ரங்கநாதன் தெரு பிரமையை இன்னும் கொஞ்சம் அசலாக்குகிறதுபோல, பக்கத்திலேயே “சரவண பவன்’ ஓட்டல். லண்டன் கிளை. ஜவுளிக் கடையில் ஷிபான் சாரி. மேட்சிங் பிளவுஸ் பீஸ், மல்வேட்டி வாங்கிவிட்டு, நகைக்கடையில் அட்டிகை விலை விசாரித்துவிட்டு, பாத்திரச் சீட்டுக் கட்டிய பிறகு, சரவண பவனில் படியேறி மசால் தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிற ஒரு கூட்டம் உள்ளே நிரம்பியிருக்கும் என்பது நிச்சயம். அங்கே மட்டுமில்லாமல், கொஞ்ச தூரத்தில் “சென்னை தோசா’, இன்னும் தெருவோடு நடந்தால் இரண்டு சாப்பாட்டுக் கடைகள் என்று ஈஸ்ட் ஹாம் முழுக்க சாம்பார் வாடை கமகமக்கிறது.
லண்டனில் இந்தியச் சாப்பாடுக்கு நிறைய வரவேற்பு. “டாமரிண்ட்’, “இம்லி’ என்று பெயரிலேயே புளி அடைத்த இந்திய ஓட்டல்கள் மதிய நேரங்களில் லண்டன் அலுவலகங்களுக்குச் சுடச்சுட டிபன் பாக்ஸில் சாப்பாடு அனுப்பி வைக்கிற பிசினஸ் சக்கைப்போடு போடுகிறதாம். இன்டர்நெட்டில் தோசை ஆர்டர் செய்தால் வீடு தேடிவந்து டெலிவரி செய்ய தோசைக்கடைக்காரர்கள் ஏற்பாடு செய்வதாகக் கேள்வி.
இனிப்பு, இரண்டு இட்லி, பொங்கல், தோசை, வடை, காப்பி எல்லாம் சேர்த்து காலைச் சாப்பாடு ஐந்து பவுண்ட் மட்டும் என்று தகவல் தரும் ஓட்டலில் நுழைகிறேன். கேபிள் டிவி தமிழ் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளில் மாறிமாறி விவேக்கும் வடிவேலுவும். நடுவில் ஐந்து நிமிடத்துக்கு பழைய படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் உதை வாங்கிவிட்டு ஓடுகிறார். “கேபிள் டிவி சந்தாவைப் புதுப்பித்தால் எம்.பி த்ரீ பிளேயர் இலவசம்’ என்ற அறிவிப்பு திரையின் கீழே ஓடியபடி இருக்கிறது. ஓட்டல் கல்லாவில் விநாயகர் படம், லட்சுமி படம். தமிழ் நாட்காட்டி, ஊதுபத்திப் புகை. சாப்பிட்டவர்கள் பணத்தோடு கொடுத்துவிட்டுப் போகிற பில்லைக் குத்தி வைக்கிற கழுமரம் மாதிரியான இரும்புக் கம்பி ஒன்று இருந்தால் அபாரமாக இருக்கும் எப்படி மறந்தார்கள் என்று தெரியவில்லை.
“”டாடி, எதுக்கு இங்கே வந்து சாப்பிடணும்னு அடம் பிடிக்கறே? வீட்டிலே இருந்து ஃபோன் செஞ்சா, கொண்டு வந்து கொடுத்திட மாட்டாங்களா?” மேசை மேசையாகக் கையில் எடுத்துச் சாப்பிட்டபடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்தபடி லேசான முகச் சுளிப்போடு அடுத்த டேபிளில் ஒரு சிறுமி முனகுகிறாள். தோசையைக் கத்தியால் குத்தி முள் கரண்டியால் பிய்த்து சாம்பாரில் தோய்க்க முயன்று தோற்றுப் போனவள், அப்பா வற்புறுத்தியபடிக்கு அப்புறம் கையால் சாப்பிட ஆரம்பிக்கிறாள்.
“”ரேபு சிரஞ்சீவி பிலிம். வெங்கடராவ் டிவிடி இச்சாரு”. எதிர் டேபிள் ஆந்திர இளைஞர்கள் முகத்தில் தீர்க்கமான மகிழ்ச்சி. அது இட்லியைத் தொட்டுக்கொண்டு கார சட்னி சாப்பிடுகிற சந்தோஷமா, ரகசியமா டிவிடி கிடைத்து லேடஸ்ட் தெலுங்குப் படம் பார்க்கப் போகும் மகிழ்ச்சியா என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.
“”எதுக்குய்யா பாங்குலே போய்ப் பணம் அனுப்பறே. நான் சொல்ற இடத்துலே கட்டு. கம்மி சார்ஜ். உத்தரவாதமா, நாளைக்கு சாயந்திரம் மண்ணடியிலேருந்து உங்க வீட்டுக்குப் போய்ச் சேந்திடும்.” அடுத்த மேஜையில் டிபன் சாப்பிட்டபடி ஒருத்தர் சிநேகிதரிடம் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறார். “ஹவாலா வேணாம்’ என்று சர்வர் கொண்டு வந்த ஹல்வாவை ஒதுக்கிவிட்டு இட்லியோடு யுத்தம் புரிய ஆரம்பிக்கிறேன்.