கல்வி ஆயுதத்துடன் வாழ்க்கையை வெல்லும் அகதிகள்

சென்னையில் திங்கள்கிழமை தேர்வு எழுதும் இலங்கை அகதி மாணவிக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்குகிறார் பள்ளிக் கல்விச் செயலர் குற்றாலிங்கம். உடன் (இடமிருந்து) இலங்கைத் துணைத் தூதர் பி.எம். அம்ஸô, இலங்கைத் தேர்வு ஆணையர் சனத் பூஜித, ஈழ ஏதிலியர் கழகப் பொருளாளர் சந்திரஹாசன். (வலது படம்) தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள்.
சென்னை, டிச. 10: குண்டு சத்தம். இலங்கை ராணுவத் தாக்குதல், போராளிகளுடன் இலங்கைப் படைகள் மோதல், ரணகளம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கைகளில் பிடித்துக் கொண்டு நகர்ந்த பள்ளி மாணவர்கள் புதிய போர்க்களத்தில் இறங்குகிறார்கள். அங்கே ஆயுதமாக இருப்பது பேனா.
களமாக இருப்பது தேர்வுக் களம்.
உள்நாட்டுப் போரினால், படிப்பும் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி தமிழகம் வந்துள்ள அந்த மாணவர்கள் சென்னையில் இருந்தபடியே “ஓ’ லெவல் எனப்படும் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதப் போகிறார்கள்.
சாந்தோம் ரோசரி சர்ச் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் குற்றாலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் சனிக்கிழமை வழங்கினார்.
இலங்கை மாணவர்கள் தங்களது நாட்டுப் பொதுத் தேர்வை வெளிநாட்டில் எழுதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள 98 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
இலங்கையில் நடைபெறும் மோதல் காரணமாக அங்குள்ள மாணவர்களால் பள்ளிப் படிப்பை முடிக்க இயலவில்லை. பொதுத் தேர்வும் எழுத இயலாது.
இந்நிலையில், அவர்களுக்குக் கை கொடுக்க முன்வந்தது எஸ்.சி. சந்திரஹாசன் தலைமையிலான ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்.
தமிழகத்தில் உள்ள அகதிகள் தேர்வு எழுத அனுமதிக்கும்படி சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் பி.எம். அம்ஸô அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சயவிடம் அனுமதி கேட்டுப் பெற்றார்.
அதையடுத்து, அந்நாட்டிலிருந்து 6 ஆசிரியர்கள் தமிழகம் வந்தனர். அவர்களுடன் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத் தொண்டர்களும் இணைந்து பயிற்சி அளித்தனர். 24 ஆசிரியர்கள் இங்கு அவர்கள் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளை 45 நாளில் நடத்தி முடித்தனர். இத் தேர்வுக்கான புத்தகங்களை இலங்கை அரசு அனுப்பியுள்ளது.
இவர்களுக்கான தேர்வு டிசம்பர் 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், சமூகவியலும் வரலாறும் ஆகிய முக்கிய பாடங்களும் சுகாதாரம், சமயங்கள், கலைப் பாடங்கள், சுருக்கெழுத்து ஆகிய விருப்பப் பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
“”தேர்வுக்கு நன்றாகத் தயாராகியுள்ளதால், தேர்ச்சி பெறுவேன்” என்றார் ஒரு மாணவி. அடுத்த கட்டமாக “ஏ லெவல்’ (12-ம்) வகுப்புத் தேர்வையும் முடித்துவிட்டு, உயர்கல்வியைத் தொடர விருப்பம் என்று தெரிவித்தார் சுரேஷினி என்ற மாணவி.
இலங்கைத் தேர்வு ஆணையர்
“”இலங்கையில் பள்ளி இறுதிப் பொதுத் தேர்வுகள் டிசம்பர் மாதம்தான் நடைபெறும். இத்தேர்வு ஒரே சமயத்தில் நடைபெறும். இந்த ஆண்டு 5,25,000 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.
இவர்களில் சென்னையில் 98 பேர் எழுதுகிறார்கள்.
அவர்களில் 63 பேர் மாணவிகள்.
இத் தேர்வுக்கான முடிவு 3 மாதத்தில் வெளியாகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 சதவீதம் ஆகும். தேர்வு விடைத்தாளை மறுமதிப்பீடு, மறு ஆய்வு செய்வதற்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்றார் இலங்கை தேர்வு ஆணையர் பி.சனத் பூஜித.
இத் தேர்வை முடிப்பவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வை இலங்கையில் தொடரலாம்.
இலங்கை திரிகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பல்வேறு இடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இத் தேர்வை எழுதுகிறார்கள்.
“”இலங்கை அகதிகள் தமிழகத்தில் மாநில அரசுக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து படிக்க அனைத்து ஏற்பாடுகளும் எளிமையாக உள்ளன. தாங்கள் அகதிகள் என்று சொன்னால் உடனடியாக அவர்களைப் பள்ளியில் சேர்த்து, படிப்புச் சொல்லித் தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் குற்றாலிங்கம் தெரிவித்தார்.