சென்னையில் பரவுகிறது சின்னம்மை
சென்னை, மார்ச் 12: சென்னையில் சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’), தட்டம்மை (“மீஸில்ஸ்’) பரவத் தொடங்கியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் சின்னம்மை – தட்டம்மையால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்னம்மை – தட்டம்மை பரவுவதற்கான காரணம், பாதிக்கப்படும் நிலையில் சிகிச்சை, உணவு முறை, தடுத்துக் கொள்வது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
அறிகுறிகள் என்ன? “”பருவ மாற்றம் (கோடை) காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸôல் சின்னம்மை பரவுகிறது. லேசான காய்ச்சல், உடலில் பொதுவாக மார்பகத்தில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். முன்புபோல் இல்லாமல் அலோபதி மருத்துவத்தில் தற்போது அம்மை நோயைக் குணப்படுத்த நல்ல மருந்து உள்ளது.
“ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் அம்மை நோய் குணமாகும். இந்த மாத்திரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. அம்மையின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 5 வேளைகள் வீதம் தொடர்ந்து 5 நாள்களுக்கு இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் அம்மை மறையும். இத்துடன் வைட்டமின் ஏ சத்து மாத்திரையும் தரப்படும்.
சுய மருத்துவம் கூடாது: அம்மை குறித்துச் சந்தேகம் எழும் நிலையில் சுயமாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அம்மை காரணமாக நிமோனியா காய்ச்சல், மூளைக் காய்ச்சலால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அம்மையுடன் மூச்சுத் திணறலோ அல்லது நினைவிழத்தலோ ஏற்பட்டால் நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
உணவு முறை: அம்மையால் பாதிக்கப்படும் நிலையில் காரம் – மசாலா இல்லாத உணவைச் சாப்பிட வேண்டும். தயிர் சாதம் நல்லது. கீரை, கேரட் உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்லது. அரிப்பு ஏற்படும் நிலையில் கொப்புளங்களை கிள்ளுவது கூடாது. இருமினால், தும்மினால்கூட காற்றின் மூலம் அம்மை வைரஸ் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவரை வீட்டில் தனிமையில் வைத்துப் பராமரிப்பது நல்லது. நல்ல காற்றோட்டமான இடத்தில் நோயாளி ஓய்வு எடுக்க வேண்டும்.
தடுப்பூசி உண்டு: ஒருவருக்கு சின்னம்மை வந்துவிட்ட நிலையில், மற்றவர்கள் அம்மை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள மிக அவசியம் ஏற்படும் நிலையில் சின்னம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் இதன் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து வசதி இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
========================================================
அம்மையை விரட்டும் சிறுங்கி பற்பம்
சென்னை, மார்ச் 12: சின்னம்மை உள்பட எல்லாவித அம்மையையும் போக்கும் ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உண்டு என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.
“”அம்மையால் பாதிக்கப்பட்டு உறுதியாகிவிட்ட நிலையில், நோயாளியை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமலேயே சித்த மருந்துக் கடைகளில் உறவினர்கள் சிறுங்கி பற்பத்தை (வெண்மையான பவுடர்) வாங்கி நோயாளிக்குக் கொடுக்கலாம். இந்த பற்பத்தை இரண்டு சிட்டிகை அளவு, காலை-மாலை இரு வேளை பாலில் கலந்து நோயாளிக்கு ஒரு வாரம் கொடுத்தால் அம்மை மறையும். நோய் வராமல் தடுத்துக் கொள்ள மற்றவர்களும் இந்த பற்பத்தைச் சாப்பிடலாம்.
அலோபதி மருந்துகள் சாப்பிட்டாலும்கூட இந்த பற்பத்தைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஏனெனில் அம்மை காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள உள் சூட்டை இந்த பற்பம் குணப்படுத்தும். வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் வேப்ப இலையைப் பரப்பி நோயாளி படுப்பது நல்லது.
அம்மை பரவாமல் தடுக்கும் ஆற்றலும் வேம்புக்கு உண்டு’ என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.
=============================================
சின்னம்மை நோய் தாக்கிய மாணவர்கள் தனியாக அமர்ந்து தேர்வு எழுதலாம்
சென்னை, மார்ச் 12: சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
“”பிளஸ் டூ தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் யாராவது திடீரென்று சின்னம்மையால் பாதிக்கப்பட்டு, தேர்வு எழுதும் நிலையில் இருந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அவர்களுக்காகத் தனி அறை, மேசை, நாற்காலி அளிக்கப்படும். தனியாக அவருக்கென்று ஒரு மேற்பார்வையாளரும் இருப்பார்” என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் வெள்ளிக்கிழமை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
“”நன்றாகப் படிக்கும் மாணவர் இந்நோய் காரணமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படா விட்டால், அவருக்கு ஓராண்டு வீணாகிவிடும். எனவே, மனிதாபிமான அடிப்படையில் அவர் தேர்வு எழுதலாம். மருத்துவர்கள் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோயுற்றவரை நேரில் கண்டறிந்து தேர்வுக்கூட மேற்பார்வையாளரே தெரிவித்து அதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம் என்றும், எனினும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க இயலாத நிலையில் உள்ளவர் யாரும் தேர்வு எழுத முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
===================================================
சின்னம்மை: சென்னையில் 410 பேர் பாதிப்பு
சென்னை, மார்ச் 16: சென்னையில் சின்னம்மை நோயினால் 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப் பகுதிகளில் 133 பேர் பாதிக்கப்பட்டு சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இது குறித்து அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
“”சின்னம்மை நோய் 15 வயதுக்குள்பட்டவர்களை அதிகமாகத் தாக்கும் தன்மை உடையதால் குழந்தைகள் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
சின்னம்மை நோய் தாக்கியவர்களுக்கு “ஏசைக்ளோவீர்’ எனப்படும் மருந்துகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் கிடைக்கிறது. மருத்துவர் மேற்பார்வையில் 5 நாள்களுக்கு இம் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் 1.36 லட்சம் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நோய் தாக்கியவர்களுக்கு உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தியினால் அவர்களுக்கு மீண்டும் இந்நோய் வரவே வராது. பள்ளிகளில் சிறுவர்களை தினசரி பரிசோதித்து, தோலில் சிவந்த தடிப்புகளோ, கொப்புளங்களோ காணப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு ஒருவாரம் விடுப்பு அளித்து அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
=====================================================
யாருக்கு சின்னம்மை வராது?
சென்னை, மார்ச் 26: குழந்தைப் பருவத்திலேயே சின்னம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் சின்னம்மை வராது. ஏனெனில் ஒரு முறை சின்னம்மை வந்து குணமானவுடன், நோய் எதிர்ப்புப் பொருள் உடலில் உருவாகி ஆயுள் முழுவதும் சின்னம்மை வராமல் தடுத்து விடும்.
இதேபோன்று இளம் வயதிலேயே தட்டம்மை ஏற்படும் நிலையில், வளரும் நிலையில் தட்டம்மை மீண்டும் வராது. மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையிலேயே தட்டம்மை தடுப்பூசி இடம்பெற்றுள்ளதால், தட்டம்மையால் பாதிக்கப்படுவோர் மிக மிகக் குறைவு.
சின்னம்மை தடுப்பூசி நல்லது: சின்னம்மை வராமல் தடுத்துக் கொள்ள தடுப்பூசி உள்ளது; ஆனால் சின்னம்மை வந்த பிறகு இந்தத் தடுப்பூசி பலன் தராது. சின்னம்மை தடுப்பூசி மருந்தின் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
கர்ப்பிணிகளே உஷார்…: சின்னம்மையால் பாதிக்கப்பட்டவருக்கு தனியே அறை, தட்டு, துண்டு, தலையணை, போர்வை அளிப்பது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு சின்னம்மை பரவாமல் தடுக்க முடியும். மேலும் பாதிக்கப்பட்டவர் காற்றோட்டமான அறையில் முழுமையாக ஓய்வு எடுப்பது அவசியம்.
வீட்டில் யாருக்காவது சின்னம்மை ஏற்படும் நிலையில், கருக் குழந்தைக்கு உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாத கால கர்ப்பிணிகள் உஷாராக இருந்து அம்மை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு அம்மை ஏற்பட்டால், வைரஸ் காரணமாக கருக் குழந்தைக்குப் பரவி, பிறவி ஊனம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
====================================================================================
15 மாவட்டங்களில் சின்னம்மை நோய்: அரசு தீவிர தடுப்பு நடவடிக்கை
சென்னை, மார்ச் 26: சென்னையிலிருந்து காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’) பரவியுள்ளது.
கோடை காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸ் மூலம் 10 தினங்களுக்கு முன்பு சின்னம்மை சென்னையில் பரவத் தொடங்கியது. சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மட்டும் இதுவரை 535 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும்…: ஆரம்ப சுகாதார மைய பதிவேடுகளின் அடிப்படையில் வேலூர், மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மேற்சொன்ன மாவட்டங்களில் தலா 25 பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு வருகிறது.
மாத்திரை இலவசம்: “ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் 5 நாள்களில் சின்னம்மை குணமாகும். அனைத்து 1,417 ஆரம்ப சுகாதார மையங்களிலும் இந்த மாத்திரையை இலவசமாக விநியோகிக்க அரசின் பொது சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
ஒரு நோயாளிக்கு ரூ.1000 செலவு: மருந்துக் கடைகளில் ஒரு “ஏசைக்ளோவீர்’ மாத்திரையின் விலை ரூ.8.56. சின்னம்மை வந்துவிட்டால் 5 நாள்களுக்குத் தொடர்ந்து மூன்று வேளை மாத்திரை சாப்பிட வேண்டும்; இதனால் ரூ.1,000 அளவுக்கு மருத்துவச் செலவு ஆகும். ஆக, ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் ஒரு நோயாளிக்கு ரூ.1,000 மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
விழிப்புணர்வு பிரசுரங்கள்: சின்னம்மை நோய் மேலும் பரவாமல் தடுக்க நோயின் அறிகுறிகள், நோயாளியைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியம், இலவச மாத்திரை, கேரட் உள்பட வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவு ஆகியவற்றை விளக்கி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.
மூச்சுத் திணறல், நினைவிழத்தல் ஏற்படும் நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது அவசியம் என்றார் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் பி. பத்மநாபன்.