Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Faith’ Category

Book Review Ki Veeramani: Sarvam Stalin Mayam by Kizhakku Publications

Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008

தொண்டறத்தின் முன்னே கடமையா? காதலா?

புத்தகப் பிரியன்: : “சர்வம் ‘ஸ்டாலின்’ மயம்”

சென்னையிலும், வெளியூர்களிலும் என்னைச் சந்திக்கும் நண்பர்கள் சிலர் பூச்செண்டு கொடுத்து அன்பு செலுத்தும் முறைக்குப் பதிலாக நல்ல புதிய அல்லது கிடைத்தற்கரிய பழைய புத்தகங்களைக் கொடுத்து மகிழ்விப்பது உண்டு.
இதைவிட அறிவுக்கு உணவு அளிக்கும் கருத்து விருந்தோம்பல் வேறு ஏது?
கடந்த 21.12.2007 கோவையில் ஓர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வசந்தம் கு. இராமச்சந்திரன் ஒரு பழைய நூல் – ஆங்கில நூலை தந்தார்.
அதுபோலவே, எப்போதும் புதிய புத்தகங்களைத் தரும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் கோவை மாவட்டச் செயலாளரும், சீரிய பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு கு. கண்ணன் அவர்கள் திரு. மருதன் எழுதிய சர்வம் ஸ்டாலின் மயம் என்ற புத்தகத்தைத் தந்தார்.
திரும்பி வந்த தொடர்வண்டி வழியில், மின்சார கம்பி வடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை வரவேண்டிய எல்லா வண்டிகளும் தாமதமாகவே (பல மணிநேரங்கள்) வந்தன. வழியில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு, தடைபட்டே பயணம் தொடர்ந்த நிலை அன்று இருந்தது. காலை 7.30 மணிக்கு வந்து சேரவேண்டிய வண்டி, காலை 10.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்த நிலை!
அந்தப் பயணக் களைப்பினை – அயர்வினைத் தெரியாது செய்த வழித்துணை நண்பனாக இந்நூல் பெரிதும் பயன்பட்டது.
செய்தி அறிந்து அரக்கோணம் மாவட்டக் கழகச் செயலாளர் ஜீவன்தாசு, மாவட்ட கழகத் துணைத் தலைவர் எல்லப்பன் அவர்களும் காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வந்து கொடுத்து அன்புடன் உபசரித்தனர்.
எனவே, பசியும் தீர்ந்தது – நூலை விடாமல் படிக்க சுவையாகவும் இருந்தது!
ஸ்டாலின்பற்றி அந்த ஆசிரியர் மருதன் (அது கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு) மிகவும் விறுவிறுப்பு நடையில் எழுதியுள்ளார்!
ஸ்டாலின் சோவியத் ரஷ்யாவை வல்லரசாக்கி, முதலாளித்துவ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமான பொதுவுடைமை வீரர்!
தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின்மூலம், மதவாதத்தினை விரட்டி மகத்தான சோவியத் சோஷியலிசக் குடியரசுகளின் கூட்டாட்சியை வெற்றிகரமாக நடத்தியவர். புரட்சியாளர் லெனினால் சரியாக அடையாளம் காட்டப்பட்டவர்!
அவர் பற்றிய அரிய தகவல்கள் மிகச் சிறப்புடன் தரப்பட்டுள்ளன ஆசிரியரால்!
அதன் கடைசி அத்தியாயத்தைப் படித்தபோது, பொது வாழ்வில் உள்ள தலைவர்களின் பிள்ளைகளது உணர்வு, அத்தலைவர்களின் கடமை உணர்வின் முன் எப்படி தோற்றுப் போகும் காதலாகி விடுகிறது என்பது என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது!
குடும்பம் என்பது அத்தகைய தன்னல மறுப்பாளர்களுக்கு ஒரு குறுகிய வட்டமல்ல – நாடே ஏன் உலகமேகூடத்தான்.

ஸ்டாலின் மகள் ஸ்வெத்லானாபற்றியச் செய்திகள் – உணர்வுகளை அந்நூல் கூறுவதை இதோ படியுங்கள்:

அமைதி திரும்பி விட்டது என்று எல்லோரையும்போல் ஸ்வெத்லானாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.
எப்படி முடியும்? தந்தையை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை. எப்படிப் பார்க்க முடியும்? அவர் வீட்டுக்கு வந்தால்தானே! போர், பிரச்சினை, சிக்கல்கள். ஒன்று முடிந்தால் மற்றொன்று. அது முடிந்தால் இன்னொன்று.
எங்கோ இருக்கும் சர்ச்சிலை வீட்டுக்கு அழைத்து வந்து பேசுவதற்கு நேரம் இருக்கிறது. கட்சி, பொதுக்கூட்டங்கள் என்றால் நேரம் இருக்கிறது. ஆனால், வீட்டில் இருந்தபடி சிறிது நேரம் மனம்விட்டுப் பேசலாம் என்றால், அதற்கு மட்டும் நேரமில்லை.
சமீப காலமாக இன்னமும் மோசம். போர். போர். போர். வாயைத் திறந்தால் இதைப்பற்றித்தான் பேச்சு. ஜெர்மனி, ஹிட்லர், நேச படைகள், கூட்டு நாடுகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தம், லெனின்கிராட், மாஸ்கோ, சோவியத்.
ஆனாலும், ஸ்வெத்லானா தனது தந்தையைப்பற்றி நன்றாக அறிந்திருந்தாள். அதனால்தான் ஒவ்வொரு முறை அவருடன் கோபித்துக் கொள்ளும்போதும், அது பொய்ச் சண்டையாக மாறிவிடுகிறது.
அலுவலகத்தில் அவர் ஏதோ ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தபோது (அமெரிக்கப் பிரதிநிதி ஹாப்கின்ஸிம் உரையாடிக் கொண்டிருந்த சமயம் அது) ஸ்வெத்லானா தன் தந்தையை தொலைபேசியில் அழைத்தார்.
அப்பா, நான் டிப்ளமோ பட்டம் பெற்றுவிட்டேன்.
அப்படியா? சந்தோஷம். மகிழ்ச்சி. உன்னை இப்போதே பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.
நான் அங்கு கிளம்பி வரவா?
சரி, வாயேன்.

ஸ்வெத்லானாவிடம் நீண்ட நேரம் பேசினார் ஸ்டாலின்.

அடுத்து என்ன படிக்கப் போகிறாய்?
பல்கலைக் கழகம் போகவேண்டும். மேற்படிப்பு படிக்கவேண்டும்.
என்ன படிக்கப் போகிறாய்?
கவிதைகள், கதைகள், கட்டுரைகள். இலக்கியம் படிக்கப் போகிறேன்!
வேண்டாம் ஸ்வெத்லானா. இலக்கியம் படிப்பது வீண்.
அப்படியானால் நான் என்னதான் படிப்பது?

ஸ்வெத்லானாவின் தலையை புன்னகையுடன் கோதி விட்டார் ஸ்டாலின்.

வரலாறு படி. வரலாறு பல புதிய விஷயங்களை உனக்குக் கற்றுக் கொடுக்கும்!

தனது மூத்த மகன் யாகோப் விஷயத்தில் தந்தை காட்டிய அணுகுமுறை ஸ்வெத்லானாவை மிகுதியாகக் கவர்ந்தது.

விஷயம் இதுதான்.

1935-இல் ராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 ஆவது படைப் பிரிவில் அவன் ஒரு லெஃப்டினெண்ட்.

பைலோரஷ்யப் போர் தொடங்கி மறுநாளே யாகோப் போர்களத்துக்குச் சென்று விட்டான். பிற கைதிகளுடன் சேர்த்து ஜெர்மனி, யாகோபையும் கைது செய்துவிட்டது. பின்னர், விசாரணையின்போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டையை என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

ஸ்டாலினுடன் ஜெர்மனி பேரம் பேசியது.

உங்கள் மகன் யாகோப் இப்போது எங்கள் கையில்! வில்லன் பாணியில் சொன்னது ஜெர்மனி.

இதயமே நின்றுவிடும்போல் இருந்தது ஸ்டாலினுக்கு. ஆனால், அடுத்த விநாடியே அவர் சுதாரித்துக் கொண்டார்.
சரி, சொல்லுங்கள்.
யாகோப்பை உங்களிடம் திருப்பி அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒரு நிபந்தனை. அதற்கு ஈடாக நீங்கள் சிறை வைத்திருக்கும் கைதிகளை விடுவித்துவிட வேண்டும். சம்மதமா?
மன்னிக்கவும். எனக்குப் பேரம் பேசி பழக்கமில்லை.
தொலைபேசியைத் துண்டித்துவிட்டார் ஸ்டாலின்.
தன் மகள் ஸ்வெத்லானாவிடம் பின்னர் இதுபற்றி பேசினார்.
நான் செய்தது தவறு இல்லைதானே?
இல்லை அப்பா.
**********
தன் தந்தையை ஒரு அறுபத்தைந்து வயது தாத்தாவாக ஸ்வெத்லானாவால் பார்க்க முடியவில்லை. ஆனால், உடல் தளர்ந்து படுக்கையில் அவர் சாயும்போதெல்லாம் அறுபத்தைந்து எனும் எண், அவள் நினைவுகளை அரிக்க ஆரம்பிக்கும்.
தேவைக்கும் அதிகமாகவே உழைத்துவிட்டார். இனி, அவர் நிச்சயம் ஓய்வெடுக்கவேண்டும் என்று கிரெம்ளின் மருத்துவர்கள் கறாராகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர் கேட்பதாக இல்லை. எத்தனையோ முறை சொல்லி விட்டாள், பலன் இல்லை.
**********
தன் தந்தை ஒரு கண்டிப்பான மனிதரும்கூட என்று ஸ்வெத்லானாவுக்கு நன்றாகவே தெரியும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவர் தன்னைக் கடிந்து கொண்டதையும் அவள் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வாள்.
உடலோடு ஒட்டிக்கொள்ளும்படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொதொளப்பான ஆடைகளை அணிய பழகிக் கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்!
தன்னடக்கம் போதாது. நீ இன்னமும் நிறைய வளர வேண்டியிருக்கிறது!
பல சமயம் நீ திமிருடன் பேசுகிறாய், நடந்துகொள்கிறாய். தவறு!
தன் முதல் கணவரை இறுதிவரை அவள் தந்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது ஒரு உறுத்தல்தான். அதேபோல், ஸ்வெத்லானாவின் இரண்டாவது திருமணத்தையும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் என்ன? அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே ஆயிரத்தெட்டு மன விரோதங்கள் இருக்கும். ஆயிரத்தெட்டு சண்டைகள் மலரும். இதென்ன உலகப் போரா அடித்து வீழ்த்துவதற்கு? சண்டை போடுவார். ஆனால், விரைவில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்வாரா? மாட்டாரா? அதுதானே முக்கியம்.

– இப்படி முடிகிறது அந்நூல்!

Posted in abuse, Affection, Autocracy, Badri, Blind, Books, CCP, Churchill, Citizens, Culture, Dictators, Dictatorship, Dress, Dresscode, Faith, Germany, Kilakku, Kings, Kizakku, Kizhakku, Love, massacre, people, Power, publications, Religion, Reviews, Rulers, Russia, Stalin, USSR, Veeramani, Wars, WWII | Leave a Comment »

Fr Jegath Gasper Raj & Tamil Mayyam’s December Music Celebrations: Festival of Love

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

அன்பின் திருவிழா!

கிருஸ்து பிறந்த தினத்தையொட்டி டிச.20 முதல் 28 வரையான எட்டு தினங்களை “அன்பின் காலம்’ என்று கொண்டாடுகிறது தமிழ் மையம் அமைப்பு. இந்தத் திருநாளின் மைய அம்சம் கிருஸ்து பிறந்த நாளாக இருந்தாலும் இதை ஒரு தமிழ்த் திருவிழாவாக- எல்லோருக்குமான விழாவாகக் கொண்டாடுவதுதான் இதில் சிறப்பம்சம்.

அட என்று ஆச்சர்யப்படுகிறவர்களுக்கு இதோ மேலும் ஆச்சர்யங்கள்…

“”சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த அன்பின் திருவிழாவில் முதல் நாள் விழாவில் இறைவாழ்த்தாக அங்கு இசைக்க இருப்பது திருவள்ளுவரின் “அகரமுதல எழுத்தெல்லாம்’.

இரண்டாவது, மண் வாழ்த்து. உலகுக்கே முதலில் ஒற்றுமையை வலியுறுத்திய “யாதும் ஊரே யாவரும் கேளிர்’. அடுத்தது உழைப்பவர் வாழ்த்து… கம்பர் எழுதிய ஏரெழுபது பாடல்.. மார்கழி மாதம் என்பதால் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் அரங்கேறுகிறது” என்கிறார் விழா ஒருங்கிணைப்பாளர் ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ்.

பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக் பாடிய பிரத்யேக ஆடியோ சி.டி. ஒன்றும் வெளியிடப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய “ப்ரே ஃபார் மீ, பிரதர்’, 100 கிருஸ்துமஸ் தாத்தாக்கள் தமிழகம் முழக்கச் சென்று பரிசுப் பொருட்கள் வழங்குகிறார்கள். பதிலாக நாம் பரிசுப் பொருட்கள் வழங்கினாலும் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று செய்தி வெளியாகியிருந்தது. அதை என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டோம் காஸ்பர் ராஜிடம்.

“”அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு வழங்குகிறோம். இதைத் தவிர கட்டடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கான திட்டம் ஒன்றும் இந்த விழாவுடன் சேர்ந்து செயல்பட இருக்கிறது. கட்டடத் தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. இடம் மாறிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்குக் கல்வி பயில வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது. அதனால் அவர்களைப் பள்ளிக்கு அழைப்பதைவிட அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஆசிரியரை அனுப்பிப் பாடம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு அந்தந்த கட்ட உரிமையாளர்கள், பில்டர்களின் தயவு தேவை. அவர்கள் கட்டடம் கட்டும் இடத்திலேயே சற்று இடம் ஒதுக்கித் தந்தால் நாங்களே ஆசிரியர் அனுப்பி பாடம் நடத்தத் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் ஓரளவுக்குக் கல்வி கிடைக்க வசதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.”

“”இது தவிர வேறு திட்டங்கள் உண்டா?” என்றோம்.

“”சென்னை நகரத்தில் வீடடற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமப்புரத்தில் இருந்து வாழ்வாதாரம் இழந்து நாள்தோறும் சென்னைக்கு வந்த வண்ணமிருக்கிறார்கள். சாலையோரங்களில், நகரத்துச் சேரிகளில் வாழும் அவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறும் காஸ்பர், கணக்கெடுப்பு முடிந்த பின்னர் இது சம்பந்தமாக என்ன செய்ய முடியும் என்று அரசாங்க ரீதியாக கோரிக்கை வைப்பது சமூக ரீதியாக ஆதரவு திரட்டுவது என செயல்படுவோம் என்கிறார்.

திருவிழா நடைபெறும் இந்த எட்டு தினங்களும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நாட்டுப்புற கலைகள் பயிற்சிப் பட்டறை ஒன்றும் நடத்தப்பட இருக்கிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கம்புச் சண்டை, சிலம்பு ஆகியவை அங்கு பயிற்றுவிக்கப்பட இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாகவே பயிற்றுவிக்கப்படும் என்பதுதான் இதன் சுவாரஸ்ய அம்சம்.

இது தவிர 70 அடி உயர கிருஸ்துமஸ் மரம், 100 மீட்டர் நீளமுள்ள கேக், 100 கிருஸ்மஸ் தாத்தாக்கள் என்று விழாவைக் கலகலக்க வைக்கும் அம்சங்கள் ஏராளமிருக்கிறது இந்த நிகழ்ச்சியில்.

தமிழ்மகன்

Posted in Andaal, ARR, Arts, Birthday, Bombay Jayashree, Carnatic, Casper, Casperraj, Celebrations, Christ, Christian, Christianity, Christmas, Classical, Culture, December, Faith, Folk, Fr Jegath Gasper Raj, Gasper, Gasper Raj, Gasperraj, Heritage, Homeless, Jayashree, Jayashri, Jayasri, Jegath, Jegath Gasper Raj, Jesus, Jeyashree, Jeyashri, Kanimoli, Kanimozhi, Kanimozi, Labor, Labour, Labourers, music, Orphans, Performance, Rahman, Rehman, Religion, Sangam, Sangamam, Santa, Shows, Stage, Thiruppaavai, Thiruppavai, Thiruvembavai, Thiruvempavai, Trees, workers, Xmas | Leave a Comment »

Pasumpon Muthuramalinga Thevar – Biosketch, History

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

நூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்!

தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.

தொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

ஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.

ஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.

1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.

08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.

நேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.

1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.

இவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.

ஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.

பஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு

Posted in Arms, Assassin, Assassination, Assassinations, Belief, Biosketch, Bloc, Brahmins, Caste, Chandrabose, Community, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Convict, Correctional, Courts, Dalit, dead, Emmanuel, employees, Faces, Faith, FB, FC, Forward Bloc, Forward Block, Freedom, Gandhi, Harijans, Hinduism, Hindutva, History, Immanuel, Independence, Jail, Jameen, Judge, Justice, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthik, Law, Madurai, Muthuramalinga, Muthuramalingam, Nethaji, Oppression, Order, people, Prisons, Rajaji, Religion, Sathiamoorthy, Sathiamurthy, Sathiyamoorthy, Sathiyamurthy, Shubash, Subash, Temple, Thevar, War, Weapons, workers | 142 Comments »

Statue Politics, idol Worship, Religious Followers: Op-ed

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 11, 2007

தமிழரின் சிலை மோகம்

க.ப. அறவாணன்

தமிழர்கள் பலவற்றில் மோகிகளாக உள்ளனர். திரைப்படப் பைத்தியம், கிரிக்கெட்டை வேடிக்கை பார்த்தல், வெற்றிலை போடுதல், சுவரொட்டி ஒட்டுதல், லாட்டரிச்சீட்டு வாங்குதல், அயல்நாட்டுப் பொருள்களில் ஆர்வம், திரை நடிகர், அரசியல் தலைவர்களைக் கிட்டத்தட்ட தெய்வமாக வணங்குதல், பல கட்சிக் கொடியேற்றுதல் இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மேற்கண்ட பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய இன்னொரு மோகம் சிலை வைக்கும் வேகம். சிலை வைத்தல் என்பதன் பன்முக விரிவாக்கமே கட் – அவுட் படம் வைத்தல், சுவர்ப்படம் வரைதல் முதலான இன்ன பிற. இவை காளான் போலத் தோன்றிக் காட்சி தந்து சில நாளில் அழிபவை. ஆனால் சிலை வைப்போ, குறைந்த அளவு அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும் வரை கவனிக்கப்படுபவை.

எனவே, சிலை வைப்பின் நோக்கம், பயன், மோகத்திற்கு உரிய காரணங்கள் ஆகியவற்றை ஆராயத் தோன்றியது. சென்னை, புதுவை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களை மையமாக வைத்து ஆராயத் திட்டமிடப் பெற்றது.

இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு சிலையின் வைப்பிடத்திற்கும் சென்று – அரை மணி முதல் ஒரு மணி வரை அங்கே நின்று கூர்ந்து கவனித்து பின்கண்ட விவரங்கள் திரட்டப் பெற்றன:

அரசியல்வாதிகளின் சிலைகளே மிகுதி. சிலைக்கும், கட்சிகளுக்கும், சாதிகளுக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அந்தக் கட்சி தத்தமக்குரிய அரசியல் தலைவர்களுக்குச் சிலை வைக்கிறது.

கொள்கைக்காக வாக்கு, கட்சிக்காக வாக்கு என்ற நிலை மாற்றப்பட்டுச் சாதிக்காக வாக்கு என்று நிலைமை வந்துவிட்டது. எனவே சாதியின் பங்கு முன்னிடம் வகிக்கிறது.

சிலை திறப்பாளர்கள் அனைவரும் அரசியல் கட்சியினரே.

அனைத்துச் சிலைகளும் காக்கைக் குருவிகளின் கழிப்பிடங்களாக இருந்து வருகின்றன. ஒரு சில சிலைகள் கவனிக்கப்படுவதற்குக் காரணம் சிலை இருக்கும் இடம் திறந்தவெளியா, கூரையா என்பதைப் பொருத்தும், பிறந்தநாள் வருவதைப் பொருத்தும் பராமரிப்பு அமையும். சிலையைப் பார்ப்போர், பீடத்தைப் படிப்போர் பொதுவாகக் குறைவு. நூற்றுக்கணக்கில் மக்கள் குறுக்கும் நெடுக்குமாகச் சென்றாலும் சிலையால் மக்கள் பாதிப்புறுதல் பெரிய அளவில் இல்லை.

இன்றைய சூழலில் தமிழரிடையே சிலை வைப்பிற்குத் தலைமை மூலாதாரங்களாகத் தெரிவன:

அரசியல் / கட்சி காரணங்களுக்காக ஏற்படும் போட்டியும், பொறாமையும்.

கணிசமாக வாக்கு வங்கிகளை உடைய சாதிகள் காரணம். ஊரில், நகரில், சுற்றுப்புறங்களில் வட்ட மாவட்டங்களில் தத்தம் கட்சி, சாதி ஆகியவற்றை முன்னிறுத்திக் குழு சேர்த்துக் கொள்ளவும், எதிர்க்கட்சி / மாற்றுச் சாதியினரிடமிருந்து விலகி ஒன்றுபட்ட உணர்வைக் கூட்டிக் கொள்ளவும், தம்மை எதிர்க்கட்சி – சாதியினரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் சிலை வைப்பு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கூட்டமாக, கூட்டத்துள் ஒருவராக – கூட்டுக்குள் ஒருவராக இருக்க விரும்புவது மக்கள் இயல்பு. எனவே, சாதிக் கூட்டும் முதன்மையானது, மதக்கூட்டு மேலும் விரிந்தது. கட்சிக்கூட்டு – ஒருவனை எளிதே பிணைத்துக் கொள்கிறது. இதில் எது எளிதோ அது முன்னிலை வகிக்கிறது. சாதியே கட்சி, கட்சியே சாதி என்ற நிலையும் தோன்றுவதுண்டு. இந்த நிலை மாற்றங்களைச் சிலை வைப்பதிலும் காணலாம்.

சிலை வைக்கும் மோகம், தமிழரை எப்படிப் பற்றிக் கொண்டது?

பொதுத் தொண்டுக்காகவும், நாட்டு நலனுக்காகவும், தன்னுயிரை இழக்கும் மறவனுக்கு நடுகல் எடுப்பதும் நடுகல்லில் மறவனின் பெயரையும் – அவன் செய்த அரிய செயலையும் பொறிப்பதும் வழக்கமாக இருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்தம் வரவிற்குப் பிறகு பழைய தமிழர்தம் பழக்கம் புதுவேகம் பெற்றது.

உலகில் இஸ்லாம் மட்டுமே சிலை வைப்பையும், உருவ வணக்கத்தையும் ஏற்பதில்லை.

பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல், ஹாலந்து நாட்டினர் – இந்தியாவைப் பங்கிட்டுக் கொண்டபோது – தம் நாட்டவர் சிலையை இந்தியாவிலும் ஆங்காங்கே வைக்கத் தொடங்கினர். 1947இல் ஐரோப்பியர் வெளியேறிய பின், சுதந்திர இந்தியாவிலும் மேற்கண்ட பழக்கம் தொடர்ந்தது.

வெள்ளைக்காரர்களுக்குப் பதிலாக, உள்ளூர் அரசியல்வாதிகளின் சிலைகள் அதிகமாக வைக்கப்ப்பட்டன. காந்தி, நேரு சிலைகள் நாடெங்கும், மூலை முடுக்குகளில் வைக்கப்பட்டன. 1960 வாக்கில், இந்திய அரசியல், மாநிலங்களில் காங்கிரசிடமிருந்து கைமாறத் தொடங்கியது.

கேரளத்தில் தொடங்கிய இம்மாற்றம் 1967-இல் தமிழகத்தில் நிகழ்ந்தது. காந்தி, நேருவிற்கு மாற்றாக, அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலைகள் காணும் இடமெல்லாம் வைக்கப் பெற்றன. அடிப்படைக் காரணம்: அரசியலே என்பது தெளிவு.

அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகச் சாதி வளர்க்கப்பட்ட சூழலில், சிலை வைப்பிற்குப் பின்னணிக் காரணங்களுள் ஒன்றாகச் சாதியும் முன்னிடம் பிடித்துக் கொண்டது.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்).

Posted in Actors, Actress, Caste, Cinema, Community, Desecration, Disciples, Election, Faith, Famous, Films, Flag, Followers, Hate, Idol, Kerala, Leaders, Lunatics, Mad, Movies, narcissism, Neta, Netha, Op-Ed, Party, people, Politics, Recognition, Religion, Star, Statue, Street, Symbol, Vote | Leave a Comment »

Karunanidhi: ‘I opened jails during Rahu Kaalam’ – Superstition?

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

“மஞ்சள் துண்டு யார் அணியலாம்’ கருணாநிதி விளக்கம்

சென்னை, நவ. 27: முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மஞ்சள் துண்டு அணிவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

“சேறு படிந்த சிந்தனைகளும் நிறைந்த ஏமாற்றும் துணிவும் கொண்டவன் மஞ்சள் ஆடை அணிவது பொருந்தாது என்றும், தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவன் எவனோ அவன் மஞ்சளாடை அணியலாம் என்று புத்தர் சொன்னதாக “ஓஷோ’ வின் “தம்மபதம்’ எனும் நூலில் குறிப்பிட்டிருப்பதை நான் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன்’ என்று கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

ராகு காலத்தில் திறப்பு: தாம் திரை மறைவில் கடவுளை வணங்குவதாக ஒரு பேட்டியில் வந்துள்ளதை சுட்டிக்காட்டி, தாம் பகுத்தறிவுவாதி என்பதற்கு யாரும் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்று கடுமையாக கூறியுள்ளதோடு, பலர் வேண்டாம் என்று கூறிய பிறகும் புழல் மத்திய சிறையை ராகு காலத்தில் திறந்து வைத்ததாக கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Posted in Buddhar, Buddhism, Correctional facility, Ema gandam, Faith, Image, Jail, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manjal, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Play of words, Politics, Quote, Rahu Kalam, Religion, Spiritual, Superstition, Yellow | 1 Comment »