அன்பின் திருவிழா!
கிருஸ்து பிறந்த தினத்தையொட்டி டிச.20 முதல் 28 வரையான எட்டு தினங்களை “அன்பின் காலம்’ என்று கொண்டாடுகிறது தமிழ் மையம் அமைப்பு. இந்தத் திருநாளின் மைய அம்சம் கிருஸ்து பிறந்த நாளாக இருந்தாலும் இதை ஒரு தமிழ்த் திருவிழாவாக- எல்லோருக்குமான விழாவாகக் கொண்டாடுவதுதான் இதில் சிறப்பம்சம்.
அட என்று ஆச்சர்யப்படுகிறவர்களுக்கு இதோ மேலும் ஆச்சர்யங்கள்…
“”சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த அன்பின் திருவிழாவில் முதல் நாள் விழாவில் இறைவாழ்த்தாக அங்கு இசைக்க இருப்பது திருவள்ளுவரின் “அகரமுதல எழுத்தெல்லாம்’.
இரண்டாவது, மண் வாழ்த்து. உலகுக்கே முதலில் ஒற்றுமையை வலியுறுத்திய “யாதும் ஊரே யாவரும் கேளிர்’. அடுத்தது உழைப்பவர் வாழ்த்து… கம்பர் எழுதிய ஏரெழுபது பாடல்.. மார்கழி மாதம் என்பதால் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் அரங்கேறுகிறது” என்கிறார் விழா ஒருங்கிணைப்பாளர் ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ்.
பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக் பாடிய பிரத்யேக ஆடியோ சி.டி. ஒன்றும் வெளியிடப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய “ப்ரே ஃபார் மீ, பிரதர்’, 100 கிருஸ்துமஸ் தாத்தாக்கள் தமிழகம் முழக்கச் சென்று பரிசுப் பொருட்கள் வழங்குகிறார்கள். பதிலாக நாம் பரிசுப் பொருட்கள் வழங்கினாலும் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று செய்தி வெளியாகியிருந்தது. அதை என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டோம் காஸ்பர் ராஜிடம்.
“”அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு வழங்குகிறோம். இதைத் தவிர கட்டடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கான திட்டம் ஒன்றும் இந்த விழாவுடன் சேர்ந்து செயல்பட இருக்கிறது. கட்டடத் தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. இடம் மாறிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்குக் கல்வி பயில வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது. அதனால் அவர்களைப் பள்ளிக்கு அழைப்பதைவிட அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஆசிரியரை அனுப்பிப் பாடம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு அந்தந்த கட்ட உரிமையாளர்கள், பில்டர்களின் தயவு தேவை. அவர்கள் கட்டடம் கட்டும் இடத்திலேயே சற்று இடம் ஒதுக்கித் தந்தால் நாங்களே ஆசிரியர் அனுப்பி பாடம் நடத்தத் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் ஓரளவுக்குக் கல்வி கிடைக்க வசதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.”
“”இது தவிர வேறு திட்டங்கள் உண்டா?” என்றோம்.
“”சென்னை நகரத்தில் வீடடற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமப்புரத்தில் இருந்து வாழ்வாதாரம் இழந்து நாள்தோறும் சென்னைக்கு வந்த வண்ணமிருக்கிறார்கள். சாலையோரங்களில், நகரத்துச் சேரிகளில் வாழும் அவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறும் காஸ்பர், கணக்கெடுப்பு முடிந்த பின்னர் இது சம்பந்தமாக என்ன செய்ய முடியும் என்று அரசாங்க ரீதியாக கோரிக்கை வைப்பது சமூக ரீதியாக ஆதரவு திரட்டுவது என செயல்படுவோம் என்கிறார்.
திருவிழா நடைபெறும் இந்த எட்டு தினங்களும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நாட்டுப்புற கலைகள் பயிற்சிப் பட்டறை ஒன்றும் நடத்தப்பட இருக்கிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கம்புச் சண்டை, சிலம்பு ஆகியவை அங்கு பயிற்றுவிக்கப்பட இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாகவே பயிற்றுவிக்கப்படும் என்பதுதான் இதன் சுவாரஸ்ய அம்சம்.
இது தவிர 70 அடி உயர கிருஸ்துமஸ் மரம், 100 மீட்டர் நீளமுள்ள கேக், 100 கிருஸ்மஸ் தாத்தாக்கள் என்று விழாவைக் கலகலக்க வைக்கும் அம்சங்கள் ஏராளமிருக்கிறது இந்த நிகழ்ச்சியில்.
தமிழ்மகன்