Archive for the ‘Autocracy’ Category
Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008
தொண்டறத்தின் முன்னே கடமையா? காதலா?
புத்தகப் பிரியன்: : “சர்வம் ‘ஸ்டாலின்’ மயம்”
சென்னையிலும், வெளியூர்களிலும் என்னைச் சந்திக்கும் நண்பர்கள் சிலர் பூச்செண்டு கொடுத்து அன்பு செலுத்தும் முறைக்குப் பதிலாக நல்ல புதிய அல்லது கிடைத்தற்கரிய பழைய புத்தகங்களைக் கொடுத்து மகிழ்விப்பது உண்டு.
இதைவிட அறிவுக்கு உணவு அளிக்கும் கருத்து விருந்தோம்பல் வேறு ஏது?
கடந்த 21.12.2007 கோவையில் ஓர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வசந்தம் கு. இராமச்சந்திரன் ஒரு பழைய நூல் – ஆங்கில நூலை தந்தார்.
அதுபோலவே, எப்போதும் புதிய புத்தகங்களைத் தரும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் கோவை மாவட்டச் செயலாளரும், சீரிய பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு கு. கண்ணன் அவர்கள் திரு. மருதன் எழுதிய சர்வம் ஸ்டாலின் மயம் என்ற புத்தகத்தைத் தந்தார்.
திரும்பி வந்த தொடர்வண்டி வழியில், மின்சார கம்பி வடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை வரவேண்டிய எல்லா வண்டிகளும் தாமதமாகவே (பல மணிநேரங்கள்) வந்தன. வழியில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு, தடைபட்டே பயணம் தொடர்ந்த நிலை அன்று இருந்தது. காலை 7.30 மணிக்கு வந்து சேரவேண்டிய வண்டி, காலை 10.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்த நிலை!
அந்தப் பயணக் களைப்பினை – அயர்வினைத் தெரியாது செய்த வழித்துணை நண்பனாக இந்நூல் பெரிதும் பயன்பட்டது.
செய்தி அறிந்து அரக்கோணம் மாவட்டக் கழகச் செயலாளர் ஜீவன்தாசு, மாவட்ட கழகத் துணைத் தலைவர் எல்லப்பன் அவர்களும் காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வந்து கொடுத்து அன்புடன் உபசரித்தனர்.
எனவே, பசியும் தீர்ந்தது – நூலை விடாமல் படிக்க சுவையாகவும் இருந்தது!
ஸ்டாலின்பற்றி அந்த ஆசிரியர் மருதன் (அது கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு) மிகவும் விறுவிறுப்பு நடையில் எழுதியுள்ளார்!
ஸ்டாலின் சோவியத் ரஷ்யாவை வல்லரசாக்கி, முதலாளித்துவ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமான பொதுவுடைமை வீரர்!
தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின்மூலம், மதவாதத்தினை விரட்டி மகத்தான சோவியத் சோஷியலிசக் குடியரசுகளின் கூட்டாட்சியை வெற்றிகரமாக நடத்தியவர். புரட்சியாளர் லெனினால் சரியாக அடையாளம் காட்டப்பட்டவர்!
அவர் பற்றிய அரிய தகவல்கள் மிகச் சிறப்புடன் தரப்பட்டுள்ளன ஆசிரியரால்!
அதன் கடைசி அத்தியாயத்தைப் படித்தபோது, பொது வாழ்வில் உள்ள தலைவர்களின் பிள்ளைகளது உணர்வு, அத்தலைவர்களின் கடமை உணர்வின் முன் எப்படி தோற்றுப் போகும் காதலாகி விடுகிறது என்பது என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது!
குடும்பம் என்பது அத்தகைய தன்னல மறுப்பாளர்களுக்கு ஒரு குறுகிய வட்டமல்ல – நாடே ஏன் உலகமேகூடத்தான்.
ஸ்டாலின் மகள் ஸ்வெத்லானாபற்றியச் செய்திகள் – உணர்வுகளை அந்நூல் கூறுவதை இதோ படியுங்கள்:
அமைதி திரும்பி விட்டது என்று எல்லோரையும்போல் ஸ்வெத்லானாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.
எப்படி முடியும்? தந்தையை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை. எப்படிப் பார்க்க முடியும்? அவர் வீட்டுக்கு வந்தால்தானே! போர், பிரச்சினை, சிக்கல்கள். ஒன்று முடிந்தால் மற்றொன்று. அது முடிந்தால் இன்னொன்று.
எங்கோ இருக்கும் சர்ச்சிலை வீட்டுக்கு அழைத்து வந்து பேசுவதற்கு நேரம் இருக்கிறது. கட்சி, பொதுக்கூட்டங்கள் என்றால் நேரம் இருக்கிறது. ஆனால், வீட்டில் இருந்தபடி சிறிது நேரம் மனம்விட்டுப் பேசலாம் என்றால், அதற்கு மட்டும் நேரமில்லை.
சமீப காலமாக இன்னமும் மோசம். போர். போர். போர். வாயைத் திறந்தால் இதைப்பற்றித்தான் பேச்சு. ஜெர்மனி, ஹிட்லர், நேச படைகள், கூட்டு நாடுகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தம், லெனின்கிராட், மாஸ்கோ, சோவியத்.
ஆனாலும், ஸ்வெத்லானா தனது தந்தையைப்பற்றி நன்றாக அறிந்திருந்தாள். அதனால்தான் ஒவ்வொரு முறை அவருடன் கோபித்துக் கொள்ளும்போதும், அது பொய்ச் சண்டையாக மாறிவிடுகிறது.
அலுவலகத்தில் அவர் ஏதோ ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தபோது (அமெரிக்கப் பிரதிநிதி ஹாப்கின்ஸிம் உரையாடிக் கொண்டிருந்த சமயம் அது) ஸ்வெத்லானா தன் தந்தையை தொலைபேசியில் அழைத்தார்.
அப்பா, நான் டிப்ளமோ பட்டம் பெற்றுவிட்டேன்.
அப்படியா? சந்தோஷம். மகிழ்ச்சி. உன்னை இப்போதே பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.
நான் அங்கு கிளம்பி வரவா?
சரி, வாயேன்.
ஸ்வெத்லானாவிடம் நீண்ட நேரம் பேசினார் ஸ்டாலின்.
அடுத்து என்ன படிக்கப் போகிறாய்?
பல்கலைக் கழகம் போகவேண்டும். மேற்படிப்பு படிக்கவேண்டும்.
என்ன படிக்கப் போகிறாய்?
கவிதைகள், கதைகள், கட்டுரைகள். இலக்கியம் படிக்கப் போகிறேன்!
வேண்டாம் ஸ்வெத்லானா. இலக்கியம் படிப்பது வீண்.
அப்படியானால் நான் என்னதான் படிப்பது?
ஸ்வெத்லானாவின் தலையை புன்னகையுடன் கோதி விட்டார் ஸ்டாலின்.
வரலாறு படி. வரலாறு பல புதிய விஷயங்களை உனக்குக் கற்றுக் கொடுக்கும்!
தனது மூத்த மகன் யாகோப் விஷயத்தில் தந்தை காட்டிய அணுகுமுறை ஸ்வெத்லானாவை மிகுதியாகக் கவர்ந்தது.
விஷயம் இதுதான்.
1935-இல் ராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 ஆவது படைப் பிரிவில் அவன் ஒரு லெஃப்டினெண்ட்.
பைலோரஷ்யப் போர் தொடங்கி மறுநாளே யாகோப் போர்களத்துக்குச் சென்று விட்டான். பிற கைதிகளுடன் சேர்த்து ஜெர்மனி, யாகோபையும் கைது செய்துவிட்டது. பின்னர், விசாரணையின்போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டையை என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.
ஸ்டாலினுடன் ஜெர்மனி பேரம் பேசியது.
உங்கள் மகன் யாகோப் இப்போது எங்கள் கையில்! வில்லன் பாணியில் சொன்னது ஜெர்மனி.
இதயமே நின்றுவிடும்போல் இருந்தது ஸ்டாலினுக்கு. ஆனால், அடுத்த விநாடியே அவர் சுதாரித்துக் கொண்டார்.
சரி, சொல்லுங்கள்.
யாகோப்பை உங்களிடம் திருப்பி அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒரு நிபந்தனை. அதற்கு ஈடாக நீங்கள் சிறை வைத்திருக்கும் கைதிகளை விடுவித்துவிட வேண்டும். சம்மதமா?
மன்னிக்கவும். எனக்குப் பேரம் பேசி பழக்கமில்லை.
தொலைபேசியைத் துண்டித்துவிட்டார் ஸ்டாலின்.
தன் மகள் ஸ்வெத்லானாவிடம் பின்னர் இதுபற்றி பேசினார்.
நான் செய்தது தவறு இல்லைதானே?
இல்லை அப்பா.
**********
தன் தந்தையை ஒரு அறுபத்தைந்து வயது தாத்தாவாக ஸ்வெத்லானாவால் பார்க்க முடியவில்லை. ஆனால், உடல் தளர்ந்து படுக்கையில் அவர் சாயும்போதெல்லாம் அறுபத்தைந்து எனும் எண், அவள் நினைவுகளை அரிக்க ஆரம்பிக்கும்.
தேவைக்கும் அதிகமாகவே உழைத்துவிட்டார். இனி, அவர் நிச்சயம் ஓய்வெடுக்கவேண்டும் என்று கிரெம்ளின் மருத்துவர்கள் கறாராகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர் கேட்பதாக இல்லை. எத்தனையோ முறை சொல்லி விட்டாள், பலன் இல்லை.
**********
தன் தந்தை ஒரு கண்டிப்பான மனிதரும்கூட என்று ஸ்வெத்லானாவுக்கு நன்றாகவே தெரியும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவர் தன்னைக் கடிந்து கொண்டதையும் அவள் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வாள்.
உடலோடு ஒட்டிக்கொள்ளும்படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொதொளப்பான ஆடைகளை அணிய பழகிக் கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்!
தன்னடக்கம் போதாது. நீ இன்னமும் நிறைய வளர வேண்டியிருக்கிறது!
பல சமயம் நீ திமிருடன் பேசுகிறாய், நடந்துகொள்கிறாய். தவறு!
தன் முதல் கணவரை இறுதிவரை அவள் தந்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது ஒரு உறுத்தல்தான். அதேபோல், ஸ்வெத்லானாவின் இரண்டாவது திருமணத்தையும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் என்ன? அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே ஆயிரத்தெட்டு மன விரோதங்கள் இருக்கும். ஆயிரத்தெட்டு சண்டைகள் மலரும். இதென்ன உலகப் போரா அடித்து வீழ்த்துவதற்கு? சண்டை போடுவார். ஆனால், விரைவில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்வாரா? மாட்டாரா? அதுதானே முக்கியம்.
– இப்படி முடிகிறது அந்நூல்!
Posted in abuse, Affection, Autocracy, Badri, Blind, Books, CCP, Churchill, Citizens, Culture, Dictators, Dictatorship, Dress, Dresscode, Faith, Germany, Kilakku, Kings, Kizakku, Kizhakku, Love, massacre, people, Power, publications, Religion, Reviews, Rulers, Russia, Stalin, USSR, Veeramani, Wars, WWII | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008
திருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்
எம். மணிகண்டன்
இந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.
ரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.
கென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.
சூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.
கென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.
தூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.
அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
கென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.
கென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.
ஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.
பதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.
இல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக!
கென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்
கென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
இப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி
 |
|
கென்ய அதிபர் கிபாக்கி |
கென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.
ரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.
இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.
தற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன?
 |
|
நைரோபியில் தொடர்ந்து பதட்டம் |
தலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.
அதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.
நாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.
கிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.
சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.
Posted in africa, Ancestry, Arms, AU, Autocracy, Autocrats, Britain, Cabinet, China, Citizen, Cleansing, Congo, Constituency, Democracy, Dictators, Dictatorship, Eldoret, Election, Elections, Ethiopia, fraud, Government, Govt, Kenya, Kibaki, Kikuyu, Kingdom, Kings, Kisumu, Kivuitu, Luo, margin, Military, Mombasa, Monarchy, Monitors, Murder, Mwai, Nairobi, Nigeria, Nyanza, Odinga, Opposition, people, Polls, Protest, protesters, Race, Racial, Raila, Re-election, rigging, Robbery, Somalia, Vote, voters, War, Weapons | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007
பிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்
 |
 |
பிரான்சிஸ்கோ பிரான்கோ |
ஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
பிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.
ஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.
ஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
Posted in Angel Acebes, Angels, Assassin, Assassinations, Atrocities, atrocity, Autocracy, autocrat, Autocratic, Aznar, beatification, Beatify, bishop, Catholic, Catholicsm, CCP, Ceremony, Christ, Christian, Christianity, Church, Civil, clergy, Condemn, Conservative, Conservatives, Coup, Criminal, Cruz Laplana y Laguna, Dictator, Dictators, Dictatorship, executed, executions, Fascism, fascist, Fear, Francisco, Francisco Franco, Franco, Gen. Francisco Franco, General, Germans, Germany, graves, inequality, Jose Maria Aznar, Judges, Jury, Justice, Laguna, Law, Left, legislation, massacre, Military, Militia, NCCP, Oppression, Order, parliament, Passions, PM, Popular Party, Power, President, Rebellion, Regime, Religion, repression, Republicans, Right, Ruler, Russia, sainthood, Saints, Senate, Socialism, Socialist, Soviets, Spain, Spanish, USSR, Vatican, victims, War, Wealth, Zapatero | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007
டிராகன் புகுந்த நாடு!
எம். மணிகண்டன்
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.
1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.
ஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.
ஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.
“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.
உலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
சீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹாங்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.
சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.
பல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்காய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.
ஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.
இதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
இவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.
சீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.
பொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வீர்களா தோழர்களே?
Posted in AP, Arts, Arunachal, Autocracy, Beijing, Bejing, Biz, Blair, Britain, Brown, Business, Cabinet, Casinos, Cathay Pacific, CathayPacific, Censor, China, Commerce, Communism, Communist, Communists, Country, defence, Defense, Democracy, Economy, England, Federal, Finance, Freedom, Gordon, Govt, Hongkong, HSBC, Independence, Industry, London, Macau, Manufacturing, Market, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Peking, PM, Politics, Power, Regime, Republic, Ruler, Shangai, Shanghai, Shares, Stocks, Taiwan, Tianamen, Tiananmen, Tianmen, Tibet, UK, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007
ஆட்டம் காணும் இடதுசாரி அஸ்திவாரம்
எம். மணிகண்டன்
வெனிசுலாவில் பழம்பெருமை வாய்ந்த “ரேடியோ கராகஸ்’ தொலைக்காட்சி (ஆர்சி டிவி) நிறுவனத்தின் ஒளிபரப்பு அண்மையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஹுகோ சாவேஸýக்கு எதிராக தலைநகர் கராகஸில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று வெறுமனே கூறிவிட முடியாது. ஊடகங்களைத் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கும் நாடுகள் பட்டியலில் வெனிசுலாவுக்கு எப்போதுமே 100-க்கு பின்னால்தான் இடம் கிடைக்கும். சாவேஸின் ஆட்சியில் அது இன்னும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
எதிர்கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சாவேஸýக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்பட்டு வந்தது ஆர்சி டிவி. 2002-ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்பட்டுவந்தாலும், ஆர்சி டிவிக்கும் பெரும்பங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. தற்போது இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது, சாவேஸின் பொதுவுடமை இலக்குகளை நோக்கிய வேகமான பயணத்தின் ஒரு படியே என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்களை அரசுடையமையாக்கியது, தனியார் சொத்துக்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு வழங்குதற்காக திட்டங்களை அறிவித்தது என அனைத்துமே வெனிசுலாவில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிகளே.
இதை மறைமுகமாகக் குறிக்கும் வகையிலேயே, “இந்தப் புரட்சியை யாராலும் தடுக்க முடியாது’ என கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைத்துப் பத்திரிகைகளில் ஒரு பக்கத்துக்கு விளம்பரம் செய்தார். “இந்தியா ஒளிர்கிறது’ என்பது போல.
சாவேஸýக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அண்டை நாடான பொலிவியாவின் ஈவோ மாரல்ஸ், ஓராண்டுக்கு முன்பே எரிவாயு திட்டங்களை அரசுடைமையாக்கி தனது இடதுசாரி பயணத்தைத் துவக்கிவிட்டார். இதனால், சாவேஸ் தனது சீர்திருத்தங்களை முடுக்கி விடவேண்டியதாகிவிட்டது.
லத்தீன் இயக்க விடுதலைக்கு வித்திட்ட சைமன் பொலிவருக்கு நிகரான சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர் சாவேஸ். இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்ற முறையில், கியூபாவின் ஆட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் நெருக்கமாக இருப்பவர். லத்தீன் அமெரிக்கா முழுவதையும் இடதுசாரிப் பாதைக்கு திருப்ப வேண்டும் என்பதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். சிலி, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் இடதுசாரி அரசுகளை அமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு.
பலமுறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் சாவேஸýக்கும் வெனிசுலா மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். “சாவேஸ் சர்வாதிகாரி என்று கூறப்படுவது மேற்கத்திய நாடுகள் புனைந்த கதை; புஷ்ஷைவிட சிறந்த ஜனநாயகவாதி அவர்’ என்று கடுமையாகக் கூறுவோரும் உண்டு. புஷ்ஷுக்கு எதிராக அந்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டால் அவர் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா எனக் கேட்டு, ஆர்சி டிவி தடை செய்யப்பட்ட சாவேஸின் ஆதரவாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
சீர்திருத்தங்களை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாவேஸýக்கு எதிராக நிறைய விமர்சனங்களும் உண்டு. தனக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தை திருத்தியது, தேர்தலில் முறைகேடு, அரசுக்கு எதிரானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது, பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு என சாவேஸ்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
அதேபோல், சாவேஸின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்துக்கும் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாகவும் கூறிவிடமுடியாது. பணக்காரர்களிடம் இருந்து நிலத்தை பிடுங்கி ஏழைகளிடம் ஒப்படைக்கும் திட்டம், அவரது ஆதரவாளர்களிடமே எதிர்ப்பைச் சம்பாதித்தது. இது தவிர, அரசு அதிகாரிகள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு வீடு வைத்திருப்பவர்களிடம் வீடுகளைப் பறித்துக் கொண்டு தவிக்க விட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.
ஆர்சி டிவி தடை செய்யப்பட்டதற்கு வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான பிரேசில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றி இருக்கிறது. இதற்குப் பதிலடி தரும் வகையில்,”தொழிலாளர்கள் பெயரைச் சொல்லி வோட்டு வாங்கிவிட்டு, அமெரிக்காவின் கைப்பாவையாக பிரேசில் அரசு செயல்பட்டு வருகிறது’ என்று வெனிசுலா நாடாளுமன்றம் கண்டித்திருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் வெனிசுலாவுக்கு பின்னடைவே.
எதிர்க்கட்சிக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அரசின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, குளோபோவிஷன் மற்றும் சிஎன்என் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கும் சாவேஸ் அரசு தடைவிதிக்கும் என்று கூறப்படுவதால் பிரச்னை தற்போது பூதாகரமாகியிருக்கிறது.
இதற்கிடையே, தடைசெய்யப்பட்ட ஆர்சி டிவி ஒளிபரப்பை மெக்சிகோவில் இருந்து மீண்டும் துவக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்நிறுனத்தின் தலைவர் மார்சல் கார்னியர் மெக்சிகோவில் இருக்கும் தனது “நட்பு வட்டாரத்தை’ இதற்குப் பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.
தொலைக்காட்சி, செயற்கைக்கோள், இன்டர்நெட் என ஏதாவது ஒரு வகையில் வெனிசுலா மக்களை தொடர்பு கொள்வேன் என கார்னியர் சபதம் செய்திருப்பதால் சாவேஸýக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
வட கொரியா, ஈரான், சூடான், ரஷ்யா, வெனிசுலா, பெலாரஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் “சாத்தானின் கூட்டணி’ என்றே அமெரிக்க ஆதரவுப் பத்திரிகைகள் பிரசாரம் செய்து வருகின்றன. இது வெறும் வயிற்றெரிச்சல்தான் என்றாலும், இப்பட்டியலில் வெனிசுலா சேர்க்கப்பட்டிருப்பது சரிதானோ என்ற எண்ணம் உலக உலக நாடுகளுக்கு வராமலிருக்க, சாவேஸ் கவனமாகச் செயல்படுவது நல்லது. அதுதான் லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்குச் சரியான வழி.
————————————————————————————————————————————–
இன்னொரு ஃபிடல் காஸ்ட்ரோ
எம். மணிகண்டன்
வெனிசுலாவைத் தாக்க அமெரிக்காவும் கொலம்பியாவும் சதி செய்கின்றன என அண்மையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் வெனிசுலா அதிபர் சாவேஸ். இப்போதைக்கு அமெரிக்காவால் விலை கொடுத்து வாங்கவோ, நேரடியாகப் போரிட்டு அடக்கவோ முடியாத “அச்சுறுத்தல்’களில் வெனிசுலாவும் ஒன்று என்பதால் சாவேஸின் குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. அதற்காக லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய முடியுமா என்ன?
ஒருநாடு எவ்வளவு வேகமாக வளர்ச்சியடைகிறது என்பது மட்டுமல்ல, அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை எது என்பதும் முக்கியம் என்பார் சாவேஸ். அவரைப் பொறுத்தவரையில், பொருளாதார வளர்ச்சியின் பயன் அடித்தட்டு மக்கள்வரை சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பொதுவுடமைக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்குவதுதான். இடதுசாரிகள் என்றாலே அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு சாவேஸýம் விதிவிலக்கல்ல.
அமெரிக்காவை எதிர்த்து 50 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் கியூபாவை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் சாவேஸ், தம்மையும் ஃபிடல் காஸ்ட்ரோ போன்றதொரு போராளியாக முன்னிறுத்திக் கொள்பவர். அமெரிக்காவின் அடிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் லட்சியம். இதனால் அமெரிக்காவுக்குப் போட்டியாகப் பொருளாதார, ராணுவ பலத்தைப் பெருக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலை இயக்கத் தலைவரான சைமன் பொலிவரின் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் “அமெரிக்காவுக்குப் பொலிவரிய மாற்று’ (ஆல்பா) என்ற அமைப்பின் கீழ் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் ஆதரவை சாவேஸ் திரட்டி வருகிறார். இந்த அமைப்புக்கு வெனிசுலாவும் கியூபாவும்தான் அடித்தளம் அமைத்தன.
பொதுவாக உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தடையிலா வர்த்தகப் பிராந்தியங்கள் போல் அல்லாமல், சமூக அக்கறையும் அடித்தட்டு மக்கள் மீது கரிசனமும் கொண்ட பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையிலான வர்த்தகக் கூட்டுகளைச் செய்துகொள்ளப் போவதாக இந்த அமைப்பு கூறியிருக்கிறது.
இது நிறைவேறினால், தற்போது இடதுசாரிகள் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொருளாதார வளர்ச்சி’ என்பது உலக நாடுகளில் பலவற்றைக் கவரக் கூடும். இந்தியா போன்ற நாடுகள்கூட தங்களது அமெரிக்க அடிமைத்தனத்தை விட்டுவிடுவது குறித்து யோசிக்கும்.
ஆனால், ஆல்பா அமைப்பில் கியூபாவையும் வெனிசுலாவையும் விட்டால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த நாடும் இல்லை என்பதுதான் பலவீனம். சாவேஸ் என்ன செய்தாலும் அதை இம்மி பிசகாமால் அப்படியே பின்பற்றும் பொலிவியாவும் இந்த அமைப்பில் இணைந்திருக்கிறது. ஈக்வடார், நிகரகுவா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்துவிட்ட போதிலும் உள்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்புகளால் முடிவைப் பரிசீலித்து வருகின்றன. இதுபோக, கரீபியன் கடலில் உள்ள ஆன்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட குட்டி நாடுகள் மட்டுமே ஆல்பாவில் இணைந்திருக்கின்றன.
அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் கொலம்பியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற வலுவான நாடுகளின் ஆதரவு சாவேஸýக்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
அமெரிக்க வங்கிகளில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிதியை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது சாவேஸின் மற்றொரு திட்டம். ஆசிய வளர்ச்சி வங்கி போல் பிராந்திய வங்கி ஒன்றை ஏற்படுத்தி அதில் இந்தப் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கலாம் என்பது அவரது எண்ணம்.
ஆனால் அமெரிக்காவுக்கு எதிராகக் கூட்டு ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று சாவேஸ் அழைப்பு விடுத்திருப்பது வலியச் சென்று போரை வரவழைப்பதற்குச் சமம். சமூக, பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்துவரும் பொலிவியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்குக் கூட்டு ராணுவத்தை ஏற்படுத்தி போர்புரியும் திட்டமெல்லாம் ஒத்துவராது. கெட்டதும்கூட. லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தாக்கினால் பார்த்துக் கொள்ளலாம்; அதற்காகக் கூட்டு ராணுவம் அமைப்பது என்பது பிராந்திய அமைதியைக் குலைக்கும் வேலை என நிகரகுவாவும், ஈக்வடாரும் கருதுகின்றன.
அண்டை நாடான கொலம்பியாவுடன் சேர்ந்து வெனிசுலாவைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக சாவேஸ் கூறுவதையெல்லாம் வெனிசுலா மக்களே நம்பவில்லை. அப்படியே கொலம்பியாவுடன் போர் வந்தாலும் அதை லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுவதெல்லாம் சுயநலத்தின் உச்சகட்டம். தொடர்ந்து அதிபராக நீடிக்கும் வகையில் வெனிசுலாவில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் தேர்தலில் சாவேஸýக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இந்தத் தோல்விகளை மறைத்து தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்குத்தான் சாவேஸ் இந்த அபத்தங்களைச் செய்துவருவதாகக்கூட பத்திரிகைகள் எழுதுகின்றன.
வெனிசுலாவில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரமில்லை, நாட்டின் பல பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்கூட செய்து தரப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் சாவேஸின் புரட்சியாளர் என்ற பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தனது பெயரை மீட்டெடுக்க வேண்டுமானால், அமெரிக்காவுக்கு எதிராகப் போரிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் உருப்படியாக ஏதாவது செய்யலாம், கோகோ பயிரிடுவதைத் தவிர!
Posted in America, Autocracy, Belarus, Biz, Bolivia, BP, Brazil, Bush, Business, Capital, Capitalism, Caracas, Castro, Censor, Chavez, Chile, China, Citgo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Congress, Conoco, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Cuba, Darfur, Democracy, Democratic, Development, Economy, Elections, Employment, Exchange, Exploit, Exploitation, Exxon, ExxonMobil, Fidel, Finance, Foreign, France, Freedom, GDP, Govt, GWB, Hispanic, Hugo, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Inflation, investments, Iran, Jobs, Journal, Korea, Latin America, Left, markets, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Media, Minerals, Mobil, Money, MSM, Nationalization, Newspaper, oil, Phillips, Polls, RCTV, Recession, Republic, Resources, Russia, Sudan, Union, USA, Venezuela, workers, Zine | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 3, 2007
சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை
 |
 |
ஜான் ஜாவீத் உறுப்பினர் ஒருவர் |
சூடானின் டார்பூரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.
இவற்றில் ஒன்று சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஹரூனுக்கு எதிரானதாகும்.
அவர் மீதான குற்றச்சாட்டின்படி, அவர், ஜன்ஜவீட் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கினார் என்றும், தனிப்பட்ட முறையில் ஆயுத உதவி செய்தார் என்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக அவர்களைத் தூண்டினார் என்று கூறப்படுகிறது.
யுத்த உபாயத்தின் ஒரு பாகமாக பாலியல் வல்லுறவையும் மற்றும் சித்திரவதையையும் வளர்த்ததாகக் கூறப்படும் ஜன்ஜவீட் தளபதிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அலி குசாயிப் அவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜன்ஜவீட் அமைப்புடன் தமது அமைச்சர்கள் எவருக்கும் இந்த விதமான தொடர்பும் கிடையாது என்று சூடானிய அரசாங்கம் கூறுகிறது.
இந்த நீதிமன்றத்துக்கு எந்த ஒரு சந்தேக நபரையும் அது கையளிக்காது என்றும் சூடானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது
அம்னெஸ்டி அமைப்பின் புகாரை சீனாவும் ரஷியாவும் மறுத்துள்ளன
 |
 |
அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம் |
சூடானின் டார்பூர், பகுதிக்கு ஆயுதங்களைக் கொடுக்கக் கூடாது என்ற ஐ நாவின் தடையை மீறி, சீனாவும், ரஷ்யாவும் சூடானிய அரசுக்கு ஆயுதங்களை அளித்தன என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அபயஸ்தாபனமான அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், கூறியிருந்த புகாரை சீனாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளன.
டார்பூரில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தத்தக்க ராணுவ விமானங்களை சூடான் அரசுக்கும், பிற ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கம் இந்நாடுகள் அளித்ததாக அம்னெஸ்ட்டி கூறியுள்ளது.
ஆனால் சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சுக்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ நா தீர்மானங்களை தத்தம் நாடுகள் கடைபிடிப்பதாக கூறியுள்ளன.
ஐ நாவுக்கான சூடானிய தூதரும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். திரித்துக் கூறுவதையே வரலாராகக் கொண்ட, ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தவறான அறிக்கை இது என்று அவர் இதை வர்ணித்துள்ளார்.
Posted in africa, AI, Amnesty, Arms, Arrest, Autocracy, autocrat, Berkshire, Blasts, Bombs, China, crimes, Darfur, defence, Destruction, Exports, Fidelity, genocide, ICC, Janjaweed, Law, Leader, Lord of war, Militants, Military, Militia, Order, Police, Regime, Russia, Soviet, Sudan, Supply, support, Terrorism, UN, USSR, War, Warrants, Warren, Weapons | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007
 |
 |
ஜனாதிபதிக்கு அர்ச்சகர் வரவேற்பு கொடுத்த போது எடுக்கப்பட்ட படம் |
ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை
இலங்கை ஜனாதிபதி அண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைக்குச் சென்ற போது, அங்கு அவரை வரவேற்ற இந்து அர்ச்சகர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பு மாவட்டத்தில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார்.
அப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார். அவர் அப்போது ஜனதிபதிக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.
இந்த நிலையில், நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரை வீட்டுக்கு வெளியே அழைத்து சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
 |
 |
கொலை செய்யப்பட்ட அர்ச்சகரின் குடும்பம் |
ஜனாதிபதியின் வாகரைக்கான விஜய தினத்தன்று தனது கணவரை இராணுவத்தினர் பூசைக்கென்றே அழைத்துச் சென்றதாகவும், ஜனாதிபதிக்கு மாலை அணிவித்ததன் காரணமாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் கொல்லப்பட்ட அர்ச்சகரின் மனைவி தெரிவித்துள்ளார்.
ஆயினும் கொலையாளிகளை தன்னால் அடையாளம் காணமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகள் இதனை மறுத்துள்ளார்கள்.
இந்தக் கொலை குறித்து தான் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
Posted in abuse, Assassination, Autocracy, Batticaloa, Buddhism, civil war, clergyman, Eelam, Eezham, Hindu, Hinduism, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Mahinda Rajapakse, Mattakalappu, Mattakkalappu, Military, Militia, Parameshwara Kurukkal, Power, President, priest, Sri lanka, Srilanka, Tamil Tigers, Terrorism, Tiger rebels, Vagarai, Vakarai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »