இந்திய மேலவை உறுப்பினராக திமுக சார்பில் கனிமொழி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்
நடக்கவுள்ள, மேலவைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை திமுக இன்று அறிவித்துள்ளது. தனது மகள் கனிமொழியை மேலவை உறுப்பினர் பதவிக்காக திமுக தலைவர் மு கருணாநிதி பரிந்துரை செய்துள்ளார். ஆனால் அவருக்கு உடனடியாக மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படாது என்றும் திமுக தலைவர் கூறியுள்ளார்.
திமுக தலைவரின் மகனான மு க ஸ்டாலின் ஏற்கனவே தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவரது சகோதரர் மு க அழகிரி, கட்சியிலும், ஆட்சியிலும் முறைப்படி பதவியில் இல்லாவிட்டாலும் தென் மாவட்டங்களில் திமுகவை இவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இது தவிர கருணாநிதியின் மருகமகனான, முரசொலி மாறனின் மகனான தயாநிதி மாறன் 2004 ஆம் ஆண்டு அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டு உடனடியாக மத்திய அமைச்சாரகவும் ஆக்கப்பட்டார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் தாக்கப்பட்டதை அடுத்து கருணாநிதியின் குடும்பத்துக்கும்- முரசொலி மாறனின் குடும்பத்துக்கும் இடையேயான விரிசல் அதிகமானதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு கருணாநிதி, தனது மகளான கனிமொழியை தற்போது அரசியலுக்கு கொண்டு வந்துள்ளார்.
திமுக சார்பில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவாவும் இத்தேர்தலில் களமிறக்கப்பட உள்ளார்.
கட்சியில் தான் பல ஆண்டுகளாக இருந்ததாக தமிழோசையிடம் தெரிவித்த கனிமொழி, வாரிசு அரசியல் குறித்து செய்யப்படும் விமர்சனம் தொடர்பான கேள்விகளை தனக்கு பதவி அளிக்க முடிவு செய்தவர்களிடம் தான் கேட்கவேண்டும் என்று கூறினார்.
—————————————————————————————————————————————————–
எம்.பி. ஆகிறார் கனிமொழி

தந்தை மு. கருணாநிதி, தாயார் ராசாத்தி அம்மாள், அண்ணன் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருடன், மாநிலங்களவை திமுக வேட்பாளராகத் தேர்வு பெற்ற கனிமொழி.
சென்னை, மே 27: தி.மு.க. சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் கவிஞர் கனிமொழியும், திருச்சி என். சிவாவும் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க.வுக்கு இரண்டு இடங்களிலும் வெற்றி உறுதி என்பதால் கனிமொழியும், திருச்சி என்.சிவாவும் மாநிலங்களவை எம்.பி. ஆகின்றனர்.
இதற்கான அறிவிப்பை தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.
முன்னதாக, இதுகுறித்து முடிவு எடுக்க, திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியது:
ஜூன் மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் குறித்து உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில், திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு 2 வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி என். சிவாவும், கவிஞர் கனிமொழியும் போட்டியிடுகின்றனர்.
நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
குதிரை பேரம் கூடாது:
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி போட்டு, இங்குள்ள எம்.எல்.ஏ.க்களை அங்கு இழுப்பதும் அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை இங்கு இழுப்பதுமான குதிரை பேரத்துக்கு இடமளிக்கக் கூடாது.
சுமுகமான முறையில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவுக்கு இரண்டு, எதிர்க்கட்சிக்கு இரண்டு, தோழமைக் கட்சிகளுக்கு இரண்டு என்கிற முறையில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியும், பரபரப்பும் இல்லாத தேர்தலை நடத்த விரும்புகிறேன் என்று ஒரு வாரத்துக்கு முன்பே நிருபர்களிடம் சொல்லி இருக்கிறேன்.
மத்திய அமைச்சருக்கு வாய்ப்பு இல்லை:
கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா என உடனே கேட்கிறீர்களே.
தமிழகத்தில் இருந்து 13 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அதற்குமேல், சங்கப்பலகை இடம் தராது.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிகாரியாக சட்டப் பேரவை செயலாளர் செல்வராஜை முதலில் நியமித்துவிட்டு, இப்போது அவரை மாற்றி இருக்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது, சட்ட ரீதியான காரணமா? அரசியல் ரீதியான காரணமா? எனத் தெரியவில்லை என்று பதில் அளித்தார் கருணாநிதி.
———————————————————————————————————
கனிமொழியின் சொத்து எட்டரை கோடி
சென்னை, ஜூன் 2: மாநிலங்களவைத் தேர்தலுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி மனு தாக்கல் செய்தார். அவருடன் மற்றொரு திமுக வேட்பாளரான திருச்சி என். சிவாவும் மனு தாக்கல் செய்தார்.
மாநிலங்களவைக்கான தேர்தல் இம்மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 2 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கவிஞர் கனிமொழி முதல்முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் வெள்ளிக்கிழமை அவர் மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் சென்று தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் தலைமைச் செயலகம் வந்து மனு தாக்கல் செய்தார்.
சொத்து ரூ. 8.56 கோடி:
தனது சொத்து மதிப்பு ரூ. 8.56 கோடி என வேட்புமனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ள தொகை ரூ. 6.58 கோடி.
மேலும் ரூ. 3.61 லட்சம் நகைகளும்,
ரூ. 18.70 லட்சம் மதிப்பிலான “டொயோட்டா காம்ரி’ காரும் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர அண்ணா சாலையில் ரூ. 1.61 கோடி மதிப்பிலான வர்த்தக வளாகம் உள்ளதாகவும்,
தனது கணவர் ஜி. அரவிந்தனுக்கு அத்திக்கோட்டையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஒரு ஏக்கர் வீட்டுமனை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வங்கிக் கணக்கில் ரூ. 15 ஆயிரம் ரொக்கமும், தனது கணவருக்கு ரூ. 10 ஆயிரமும் இருப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு வேட்பாளரான திருச்சி என். சிவா, தனது வேட்பு மனுவில் தனது குடும்பத்தினருக்கு வங்கி மற்றும் இதர சேமிப்பு வகையில் ரூ. 1.83 லட்சம் இருப்பதாகவும், நகை ரூ. 7.59 லட்சத்துக்கு இருப்பதாவகும், குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 59.8 லட்சம் மதிப்பில் நிலம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி மனு தாக்கல் செய்யும்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உடனிருந்தனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, தனது வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ. 61,944 என்று குறிப்பிட்டுள்ளார். தனது கையில் ரூ. 3,000 ரொக்கம் இருப்பதாகவும், தனது குடும்பத்தினருக்கு வங்கியில் ரூ. 58,944 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜா மனு தாக்கல் செய்யும்போது அமைச்சர்கள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆர். நல்லகண்ணு, சட்டப்பேரவை உறுப்பினர் வை. சிவபுண்ணியம் மற்றும் பாமக தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் உடனிருந்தனர்.
மனு தாக்கல் செய்தபிறகும் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது:
மாநிலங்களவை உறுப்பினராவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கட்சி முன்னிறுத்தும் பிரச்சினைகள் குறித்து நிச்சயம் பேசுவேன் என்றார். அதிமுக சார்பில் மைத்ரேயன் மற்றும் இளவரசன் ஆகியோர் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துவிட்டனர். எஞ்சிய இரு இடங்கள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மனு தாக்கல் செய்ய இறுதி நாள் இம்மாதம் 5-ம் தேதியாகும். அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 6 பேரைத் தவிர வேறு எவரும் மனு தாக்கல் செய்யாதபட்சத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
——————————————————————————————————–
தாலி கட்டும் பழக்கம் தொடர்வது ஏன்?: கனிமொழி கேள்வி
விழுப்புரம், மே 27: பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில்கூட தாலி கட்டும் பழக்கம் இதுவரை தொடர்வது ஏன் என்று தெரிய வில்லை என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி யின் மகளும், கவிஞருமான கனிமொழி கேள்வி எழுப்பினார்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய தலித் நாடக விழாவில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக் குமாருக்கும், பொன்னம்மாளுக்கும் சாதி மறுப்பு திருமணத்தை கனிமொழி நடத்தி வைத்தார்.
அப்போது அவர் பேசியது:
இதுபோன்ற திருமணங்களை கலப்புத் திருமணம் என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி தந்தை பெரியார் கூறுகையில், நான் ஆட்டுக்கும், மாட்டுக்குமா திருமணம் நடத்தி வைக்கிறேன். மனிதனுக்கும், மனிதனுக்கும் நடத்தி வைக்கும் திருமணம், எப்படி கலப்புத் திருமணமாகும் என்று வினவினார்.
சாதியை, மதத்தை எதிர்த்து இந்த திருமணம் நடக்கிறது. பெண்ணுக்கு வழக்கமான திருமணத்தின்போது கயிறு (தாலி) தேவைப்படுகிறது. பல பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில் கூட இன்னும் தாலியை பயன்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை.
அமெரிக்க கருப்பர் மக்களை போல, நாம் நமது போர் முறையை மாற்றிக் கொண்டு போராட வேண்டும் என்றார் கனிமொழி.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி, விடுதலைச் சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.
————————————————————————————————————
Kaalachuvadu Kannan
ஆனந்த விகடன் புத்தாண்டுச் சிறப்பிதழைச் சற்றுத் தாமதமாகவே படிக்க முடிந்தது. சினிமா சார்ந்த செய்திகளையும் தாண்டிப் பல பொருட்கள் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் ஆரோக்கியமான மாற்றம் ஆனந்த விகடனில் ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து வாசிக்க முயன்று வருகிறேன். பயணங்களிலும் வேலை நெருக்கடியிலும் சில இதழ்கள் விடுபட்டுவிடுவதுண்டு. ஆனந்த விகடனில் தொடர்ந்து படிக்கும் பகுதிகளில் ஒன்று ஞாநியின் ‘ஓ பக்கங்கள்’. வெகுஜனத் தளத்தில் மாற்றுக் கருத்துகள் புழங்கும் குறைவான தளங்களில் ஒன்று ‘ஓ பக்கங்கள்’.
மேற்படி இதழின் ‘ஓ பக்கங்கள்’ தலைப்பு “சசிகலா நிதி அமைச்சர், கனிமொழி கல்வி அமைச்சர்”. இந்த ஒப்பீடு துணுக்குற வைத்தது. உள்ளே செம்மொழிக் குழுவில் கனிமொழி இடம்பெற்றதை ஞாநி கண்டித்திருந்தார். வருங்காலத்தில் ராகுல் காந்தி உள்துறை அமைச்சராகவும் சசிகலா நிதி அமைச்சராகவும் கனிமொழி கல்வி அமைச்சராகவும்கூடும் எனும் சாத்தியப்பாட்டையும் அவர் முன்வைத்திருந்தார்.
இவை நியாயமற்ற வார்த்தைகளாகவும் கலைஞர் மீது ஞாநி சமீபகாலமாக வெளிப்படுத்திவரும் வன்மமும் கோணலும் வெளிப்படும் கண்டனங்களின் உச்சமாகவும் தோன்றின. கலைஞர்மீதான வன்மத்தை அவர் கனிமொழிமீதும் காட்டியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. கனிமொழிக்கு ஞாநியின் மனதில் ‘கலைஞரின் மகள்’ என்பதைத் தாண்டிய எந்தப் பரிமாணமும் இல்லை, அல்லது அது இங்கு வெளிப்படவில்லை என்பது அவரது பெண்ணிய ஆதரவு நிலைப்பாட்டிற்குக் களங்கம் சேர்ப்பதாக உள்ளது. ஏனெனில் கனிமொழியின் பிற தகுதிகளை ஆராய்ந்து ஞாநி தன் கருத்தைப் பதிவுசெய்யவில்லை.
ஞாநியின் எழுத்துகளில் கலைஞர் பற்றிய விமர்சன பூர்வமான மரியாதை ஒரு காலகட்டம் வரை இருந்தது. பா.ஜ.க.வுடன் தி.மு.க. உறவு கொண்ட பின்னர் ஞாநி கலைஞரைக் கருத்தியல் அடிப்படையில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். விரைவில் இக்கருத்தியல் விமர்சனங்கள் தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கின.
இதற்கு மறுபக்கமும் உண்டு. ஞாநியின் விமர்சனங்களைத் தி.மு.க.வும் அதன் ஊடகங்களும் சகிப்புத்தன்மையற்று எதிர்கொண்டன. எடுத்த எடுப்பிலேயே அவர்மீது சாதியக் குற்றச்சாட்டைச் சுமத்தின. இந்த ஆட்சியில் கண்ணகி சிலை மறுபிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஞாநி வெளிப்படுத்திய விமர்சனத்தைத் தி.மு.க. தலைமை எதிர்கொண்ட விதம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஞாநிமீது பல குற்றச்சாட்டுகளை வைக்கலாம். ஆனால் சாதி உணர்வு கொண்டவர் என நெஞ்சுக்கு நீதி கொண்டு சிந்திப்பவர்கள் சொல்ல முடியாது.
இந்தக் குற்றச்சாட்டு முன்னரும் ஞாநிமீது சுமத்தப்பட்டிருக்கிறது. கருத்து வேறுபாடு கொண்டவுடனேயே மர்ம ஸ்தானத்தில் அடிக்கும் கடைநிலைப் பண்பின் வெளிப்பாடாகவும் பல சமயங்களில் குற்றஞ்சாட்டுபவர்களின் சாதிய உணர்வின் சான்றாகவும் இவை அமைந்துவிடுகின்றன.
செம்மொழிக் குழுவில் முன்னரும் இப்போதும் பங்கு பெற்ற, பெற்றிருக்கும் உறுப்பினர்களின் பலரின் தகுதி என்ன என்பதை ஆராய்ந்து அவற்றோடு கனிமொழியின் தகுதிகளை ஒப்பிட்டு விவாதிப்பதே சரியானது. செம்மொழிக் குழுவிலும் அரசு அமைக்கும் பிற பண்பாட்டுக் குழுக்களிலும் இடம் பெற்றிருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிதான் அடிப்படையாக உள்ளதா? அல்லது வேறு காரணங்களா? அந்தக் காரணங்கள் ‘வாரிசு’ என்பதைவிட மேலானவையா? மேலும் ஞாநி ‘வாரிசு’ என்ற கோணத்தில் மூடத்தனமாக எதிர்ப்பவர் அல்ல.
ஸ்டாலினுக்குத் தி.மு.க.வில் அளிக்கப்படும் பொறுப்புகளை அவருடைய தகுதி மற்றும் அனுபவம் சார்ந்து ஞாநி ஆதரித்து எழுதியுள்ளார். எனவே கனிமொழி விஷயத்திலும் அதே அணுகுமுறையைக் கையாள வேண்டும். கனிமொழிக்குப் பதிலாக அவரைவிடத் தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பைச் சமகால அரசியலின் நியமன முறைகள் வெளிப்படுத்தவில்லை. மொழி சார்ந்த நவீனப் பார்வையும் தி.மு.க.வினுள்ளும் அப்பாலும் இருக்கும் அறிவுஜீவிகளுடனான உரையாடலும் கொண்டவர் கனிமொழி. மொழி சார்ந்த பிற்போக்கான பார்வை கொண்ட இன்னொரு தமிழறிஞரைவிட கனிமொழி இடம்பெற்றிருப்பது சாதகமானதாகவே எனக்குப் படுகிறது.
ராகுல் காந்தி மற்றும் சசிகலாவுடனான ஒப்பீடு சிறிது அளவுகூட நியாயம் அற்றது. ராகுல் காந்தி அரசியலில் இயங்கிவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவரைப் பொறுத்தவரையில் ஒரே கேள்வி ‘எப்போது?’ என்பதுதான்; ‘ஆவாரா?’ என்பது அல்ல. சசிகலா தமிழக அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் குணாம்சங்களுக்குக் கனிமொழி நேர் எதிர். இங்கே எந்த ஒப்பீட்டுக்கும் இடம் இல்லை.
ஞாநியின் இந்த ஒப்பீடுகள் புண்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவையாகவே தோன்றுகின்றன. கனிமொழி வழி அவர் கலைஞரைத் தாக்குவது, மிக நாகரிகமாகச் சொல்வது என்றால், துரதிருஷ்டவசமானது.
கண்ணன் காலச்சுவடு
——————————————————————————————————————
-அப்பா-கனிமொழியின் கவிதை
அப்பா குறித்த கனிமொழியின் கவிதை ஒன்றை ‘அகத்திணை’ என்ற அவரின் கவிதைத் தொகுப்பில் இருந்து தருகிறேன் வாசியுங்கள்.
அப்பா
சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா
காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?
விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது
வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது
உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது
அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது
இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது
பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?
-கனிமொழி
posted by சோமி at