Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Badri’ Category

Book Review Ki Veeramani: Sarvam Stalin Mayam by Kizhakku Publications

Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008

தொண்டறத்தின் முன்னே கடமையா? காதலா?

புத்தகப் பிரியன்: : “சர்வம் ‘ஸ்டாலின்’ மயம்”

சென்னையிலும், வெளியூர்களிலும் என்னைச் சந்திக்கும் நண்பர்கள் சிலர் பூச்செண்டு கொடுத்து அன்பு செலுத்தும் முறைக்குப் பதிலாக நல்ல புதிய அல்லது கிடைத்தற்கரிய பழைய புத்தகங்களைக் கொடுத்து மகிழ்விப்பது உண்டு.
இதைவிட அறிவுக்கு உணவு அளிக்கும் கருத்து விருந்தோம்பல் வேறு ஏது?
கடந்த 21.12.2007 கோவையில் ஓர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வசந்தம் கு. இராமச்சந்திரன் ஒரு பழைய நூல் – ஆங்கில நூலை தந்தார்.
அதுபோலவே, எப்போதும் புதிய புத்தகங்களைத் தரும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் கோவை மாவட்டச் செயலாளரும், சீரிய பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு கு. கண்ணன் அவர்கள் திரு. மருதன் எழுதிய சர்வம் ஸ்டாலின் மயம் என்ற புத்தகத்தைத் தந்தார்.
திரும்பி வந்த தொடர்வண்டி வழியில், மின்சார கம்பி வடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை வரவேண்டிய எல்லா வண்டிகளும் தாமதமாகவே (பல மணிநேரங்கள்) வந்தன. வழியில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு, தடைபட்டே பயணம் தொடர்ந்த நிலை அன்று இருந்தது. காலை 7.30 மணிக்கு வந்து சேரவேண்டிய வண்டி, காலை 10.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்த நிலை!
அந்தப் பயணக் களைப்பினை – அயர்வினைத் தெரியாது செய்த வழித்துணை நண்பனாக இந்நூல் பெரிதும் பயன்பட்டது.
செய்தி அறிந்து அரக்கோணம் மாவட்டக் கழகச் செயலாளர் ஜீவன்தாசு, மாவட்ட கழகத் துணைத் தலைவர் எல்லப்பன் அவர்களும் காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வந்து கொடுத்து அன்புடன் உபசரித்தனர்.
எனவே, பசியும் தீர்ந்தது – நூலை விடாமல் படிக்க சுவையாகவும் இருந்தது!
ஸ்டாலின்பற்றி அந்த ஆசிரியர் மருதன் (அது கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு) மிகவும் விறுவிறுப்பு நடையில் எழுதியுள்ளார்!
ஸ்டாலின் சோவியத் ரஷ்யாவை வல்லரசாக்கி, முதலாளித்துவ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமான பொதுவுடைமை வீரர்!
தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின்மூலம், மதவாதத்தினை விரட்டி மகத்தான சோவியத் சோஷியலிசக் குடியரசுகளின் கூட்டாட்சியை வெற்றிகரமாக நடத்தியவர். புரட்சியாளர் லெனினால் சரியாக அடையாளம் காட்டப்பட்டவர்!
அவர் பற்றிய அரிய தகவல்கள் மிகச் சிறப்புடன் தரப்பட்டுள்ளன ஆசிரியரால்!
அதன் கடைசி அத்தியாயத்தைப் படித்தபோது, பொது வாழ்வில் உள்ள தலைவர்களின் பிள்ளைகளது உணர்வு, அத்தலைவர்களின் கடமை உணர்வின் முன் எப்படி தோற்றுப் போகும் காதலாகி விடுகிறது என்பது என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது!
குடும்பம் என்பது அத்தகைய தன்னல மறுப்பாளர்களுக்கு ஒரு குறுகிய வட்டமல்ல – நாடே ஏன் உலகமேகூடத்தான்.

ஸ்டாலின் மகள் ஸ்வெத்லானாபற்றியச் செய்திகள் – உணர்வுகளை அந்நூல் கூறுவதை இதோ படியுங்கள்:

அமைதி திரும்பி விட்டது என்று எல்லோரையும்போல் ஸ்வெத்லானாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.
எப்படி முடியும்? தந்தையை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை. எப்படிப் பார்க்க முடியும்? அவர் வீட்டுக்கு வந்தால்தானே! போர், பிரச்சினை, சிக்கல்கள். ஒன்று முடிந்தால் மற்றொன்று. அது முடிந்தால் இன்னொன்று.
எங்கோ இருக்கும் சர்ச்சிலை வீட்டுக்கு அழைத்து வந்து பேசுவதற்கு நேரம் இருக்கிறது. கட்சி, பொதுக்கூட்டங்கள் என்றால் நேரம் இருக்கிறது. ஆனால், வீட்டில் இருந்தபடி சிறிது நேரம் மனம்விட்டுப் பேசலாம் என்றால், அதற்கு மட்டும் நேரமில்லை.
சமீப காலமாக இன்னமும் மோசம். போர். போர். போர். வாயைத் திறந்தால் இதைப்பற்றித்தான் பேச்சு. ஜெர்மனி, ஹிட்லர், நேச படைகள், கூட்டு நாடுகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தம், லெனின்கிராட், மாஸ்கோ, சோவியத்.
ஆனாலும், ஸ்வெத்லானா தனது தந்தையைப்பற்றி நன்றாக அறிந்திருந்தாள். அதனால்தான் ஒவ்வொரு முறை அவருடன் கோபித்துக் கொள்ளும்போதும், அது பொய்ச் சண்டையாக மாறிவிடுகிறது.
அலுவலகத்தில் அவர் ஏதோ ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தபோது (அமெரிக்கப் பிரதிநிதி ஹாப்கின்ஸிம் உரையாடிக் கொண்டிருந்த சமயம் அது) ஸ்வெத்லானா தன் தந்தையை தொலைபேசியில் அழைத்தார்.
அப்பா, நான் டிப்ளமோ பட்டம் பெற்றுவிட்டேன்.
அப்படியா? சந்தோஷம். மகிழ்ச்சி. உன்னை இப்போதே பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.
நான் அங்கு கிளம்பி வரவா?
சரி, வாயேன்.

ஸ்வெத்லானாவிடம் நீண்ட நேரம் பேசினார் ஸ்டாலின்.

அடுத்து என்ன படிக்கப் போகிறாய்?
பல்கலைக் கழகம் போகவேண்டும். மேற்படிப்பு படிக்கவேண்டும்.
என்ன படிக்கப் போகிறாய்?
கவிதைகள், கதைகள், கட்டுரைகள். இலக்கியம் படிக்கப் போகிறேன்!
வேண்டாம் ஸ்வெத்லானா. இலக்கியம் படிப்பது வீண்.
அப்படியானால் நான் என்னதான் படிப்பது?

ஸ்வெத்லானாவின் தலையை புன்னகையுடன் கோதி விட்டார் ஸ்டாலின்.

வரலாறு படி. வரலாறு பல புதிய விஷயங்களை உனக்குக் கற்றுக் கொடுக்கும்!

தனது மூத்த மகன் யாகோப் விஷயத்தில் தந்தை காட்டிய அணுகுமுறை ஸ்வெத்லானாவை மிகுதியாகக் கவர்ந்தது.

விஷயம் இதுதான்.

1935-இல் ராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 ஆவது படைப் பிரிவில் அவன் ஒரு லெஃப்டினெண்ட்.

பைலோரஷ்யப் போர் தொடங்கி மறுநாளே யாகோப் போர்களத்துக்குச் சென்று விட்டான். பிற கைதிகளுடன் சேர்த்து ஜெர்மனி, யாகோபையும் கைது செய்துவிட்டது. பின்னர், விசாரணையின்போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டையை என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

ஸ்டாலினுடன் ஜெர்மனி பேரம் பேசியது.

உங்கள் மகன் யாகோப் இப்போது எங்கள் கையில்! வில்லன் பாணியில் சொன்னது ஜெர்மனி.

இதயமே நின்றுவிடும்போல் இருந்தது ஸ்டாலினுக்கு. ஆனால், அடுத்த விநாடியே அவர் சுதாரித்துக் கொண்டார்.
சரி, சொல்லுங்கள்.
யாகோப்பை உங்களிடம் திருப்பி அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒரு நிபந்தனை. அதற்கு ஈடாக நீங்கள் சிறை வைத்திருக்கும் கைதிகளை விடுவித்துவிட வேண்டும். சம்மதமா?
மன்னிக்கவும். எனக்குப் பேரம் பேசி பழக்கமில்லை.
தொலைபேசியைத் துண்டித்துவிட்டார் ஸ்டாலின்.
தன் மகள் ஸ்வெத்லானாவிடம் பின்னர் இதுபற்றி பேசினார்.
நான் செய்தது தவறு இல்லைதானே?
இல்லை அப்பா.
**********
தன் தந்தையை ஒரு அறுபத்தைந்து வயது தாத்தாவாக ஸ்வெத்லானாவால் பார்க்க முடியவில்லை. ஆனால், உடல் தளர்ந்து படுக்கையில் அவர் சாயும்போதெல்லாம் அறுபத்தைந்து எனும் எண், அவள் நினைவுகளை அரிக்க ஆரம்பிக்கும்.
தேவைக்கும் அதிகமாகவே உழைத்துவிட்டார். இனி, அவர் நிச்சயம் ஓய்வெடுக்கவேண்டும் என்று கிரெம்ளின் மருத்துவர்கள் கறாராகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர் கேட்பதாக இல்லை. எத்தனையோ முறை சொல்லி விட்டாள், பலன் இல்லை.
**********
தன் தந்தை ஒரு கண்டிப்பான மனிதரும்கூட என்று ஸ்வெத்லானாவுக்கு நன்றாகவே தெரியும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவர் தன்னைக் கடிந்து கொண்டதையும் அவள் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வாள்.
உடலோடு ஒட்டிக்கொள்ளும்படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொதொளப்பான ஆடைகளை அணிய பழகிக் கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்!
தன்னடக்கம் போதாது. நீ இன்னமும் நிறைய வளர வேண்டியிருக்கிறது!
பல சமயம் நீ திமிருடன் பேசுகிறாய், நடந்துகொள்கிறாய். தவறு!
தன் முதல் கணவரை இறுதிவரை அவள் தந்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது ஒரு உறுத்தல்தான். அதேபோல், ஸ்வெத்லானாவின் இரண்டாவது திருமணத்தையும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் என்ன? அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே ஆயிரத்தெட்டு மன விரோதங்கள் இருக்கும். ஆயிரத்தெட்டு சண்டைகள் மலரும். இதென்ன உலகப் போரா அடித்து வீழ்த்துவதற்கு? சண்டை போடுவார். ஆனால், விரைவில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்வாரா? மாட்டாரா? அதுதானே முக்கியம்.

– இப்படி முடிகிறது அந்நூல்!

Posted in abuse, Affection, Autocracy, Badri, Blind, Books, CCP, Churchill, Citizens, Culture, Dictators, Dictatorship, Dress, Dresscode, Faith, Germany, Kilakku, Kings, Kizakku, Kizhakku, Love, massacre, people, Power, publications, Religion, Reviews, Rulers, Russia, Stalin, USSR, Veeramani, Wars, WWII | Leave a Comment »

Humble beginnings of Bhoomika Chawla – Interview

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

மின்சார ரெயில் பயணம்: ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் கடையில் வேலை பார்த்தேன்: நடிகை பூமிகா பேட்டி 

சினிமா உலகில் இன்று முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் நடிகைகள் சிலரிடம் அவர்களின் பழைய வாழ்க்கைப் பற்றி கேட்டால், தாங்கள் ஒரு வசதியான வீட்டு பெண் என்பது போலவே காட்டிக் கொள்வார்கள். சினிமாவில் நடிக்க வராவிட்டாலும் இதே அளவு வசதியோடு வாழ்ந்திருக்க முடியும் என்பது போல் காட்டிக் கொள்வார்கள். நடிகர்கள் தங்களின் பழைய வாழ்க்கையை ஒளிவுமறைவு இல்லாமல் தெரிவிப்பது போல நடிகைகள் தெரிவிப்பதில்லை.

ஆனால் பத்ரி, ரோஜாக் கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற தமிழ் படங்களில் நடித்தவரும், தென் இந்திய மொழிகளில் மட்டுமல்லாது இந்தி பட உலகிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவருமான பூமிகா இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார்.

இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அவர் ஒரு காலத்தில் மாதம் ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் ஒரு கடையில் சேல்ஸ்கேர்ளாக வேலை பார்த்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

பணம் ஏராளமாக வருகிறது என்பதற்காக நான் தாராளமாக செலவு செய்வதில்லை. பணத்தின் அருமை எனக்கு நன்கு தெரியும். காரணம் என் பழைய வாழ்க்கை அப்படி. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள்நான். என் குடும் பத்தின் கஷ்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு கடையில் மாதம் ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்த்தேன். அப்போது தினசரி மின்சார ரெயிலில் கூட்ட நெரிசலில் பயணம் செய்து சிரமப்பட்டிருக்கிறேன். வாழ்க்கை எப்போதும் ரோஜாபடுக்கையாகவே இருக்காது. யாருக்கும் எந்த நேரத்திலும் கஷ்டம் வரலாம் என்கிறார் பூமிகா.

முன்னணி கதாநாயகிகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் தங்க, வைர நகைகள், ஆடம்பர பொருட்கள் என்று லட்சக்கணக்கான ரூபாயில் பொருட்களை வாங்கிப் போடுவது வழக்கம். ஆனால் இவர் விரும்பி வாங்கும் பொருட்களின் பட்டியலில் புத்தகங்கள், டி.வி.டி.க்கள், மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் போன்றவைதான் இடம் பெறுகின்றன. பூமிகாவிடம் கிரெடிட் கார்டு கூட கிடையாதாம்.

Posted in Badri, Bhoomika Chawla, Boomika, Chillunnu oru kaathal, Credit card, Interview, Roja koottam, Salesgirl, Tamil Actress, Tamil Cinema, Tamil Movies, Telugu, Tollywood | Leave a Comment »