Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Famous’ Category

Writer Tha Naa Kumarasamy – Biosketch, Profile: Charukesi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

தொடர்கட்டுரை  – எழுதுங்கள் ஒரு கடிதம்!

சாருகேசி

தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

த.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.

“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது!” என்றார் சா. கந்தசாமி.

இன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.

வங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.

ஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.

நேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)

அவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்!)

காந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.

“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.

“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே? “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை!” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.

காஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.

சுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.

தேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.

தாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.

இத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.

“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.
———————————————————————————————————————————————-

சாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.

லட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.

ஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்!

இரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.

மூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.

புரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன?)

ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்!

Posted in artists, Arts, Author, Biosketch, Chaarukesi, Charukesi, Coomarasaami, Coomarasaamy, Coomarasami, Coomarasamy, Devan, Display, Exhibitions, Faces, Famous, Gallery, Gandhi, Kumarasaami, Kumarasaamy, Kumarasami, Kumarasamy, Kumaraswami, Kumaraswamy, Mahatma, names, Painters, Paintings, people, profile, Translations, Translator, Works, Writer | Leave a Comment »

Stars & salaries – TV, Media Ads and Promotion Prices – Compensation details

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2007

  • ஷாரூக்குக்கு ரூ. 8 கோடி;
  • அமிதாப்புக்கு 6 கோடி;
  • சச்சினுக்கு 3 கோடி!
  • ஆமீர் கான்  ரூ. 5 கோடி;
  • ராகுல் டிராவிட்  ரூ. 2.5 கோடி;
  • யுவராஜ் சிங்  ரூ. 2 கோடி;

டிவி’ விளம்பரங்களில் நடிக்க

இதெல்லாம், இவர்களுக்கு ஒரு படத்தில் நடிக்க ஊதியமா… ஒரு கிரிக்கெட் பந்தயத்தில் சதம் அடிக்க கிடைத்த பணமா… பத்து விநாடி வந்து போகக்கூடிய, “டிவி’ விளம்பரத்தில் நடிப்பதற்காக கிடைக்கும் ஊதியம் இது.

பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் நடித்து வெளிவரும், “டிவி’ விளம்பரங்கள், 60 சதவீதம் அதிகரித்துள்ளன. கடந்த 2005ம் ஆண்டு, கிரிக்கெட் சரிவுகளால், கிரிக்கெட் வீரர்கள் தோன்றும் விளம்பரங்கள் ஓரளவு குறைந்தாலும், பாலிவுட் நட்சத்திரங்களின் விளம்பரங்கள் அதிகரித்தன. கடந்தாண்டு, மீண்டும், கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரங்கள் அதிகரித்தன. முந்தைய ஆண்டை விட, கடந்தாண்டு, 60 சதவீதம் அளவுக்கு அதிகமாக கிரிக்கெட் வீரர்கள் தோன்றும் விளம்பரங்கள் வெளியாயின. இந்தாண்டு, அதை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, “டாம் மீடியா’ நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள்:

பேனா முதல் கார் வரை, இந்தியாவில், 9,000 பிராண்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில், 250 பிராண்டுகள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை நடிக்க வைத்து விளம்பரம் வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு, பாலிவுட் நட்சத்திரங்களை நடிக்கவைத்து, 53 விளம்பரங்கள் வெளிவந்தன. கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரங்கள் எண்ணிக்கை 191.

இவர்கள் நடித்தது எல்லா விளம்பரங்களும், பெரிய நிறுவனங்களுடையவை. இதனால், கோடிக்கணக்கில் இவர்களுக்கு ஊதியம் தரப்பட்டுள்ளது. “டிவி’ விளம்பரங்களால், பாலிவுட் நடிகர்களும், கிரிக்கெட் வீரர்கள் எக்கச்சக்கமாக அள்ளுகின்றனர். அவர்களை அடுத்து, பிரபல மாடலிங் தொழிலில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது.

பிரபல மாடல் அழகி யானா குப்தா, பத்து விநாடி “டிவி’ விளம்பரத்தில் நடிக்க, ஒன்று முதல் இரண்டு கோடி வரை ஊதியம் வாங்குகிறார். மற்றவர்கள் சில ஆயிரம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வாங்குகின்றனர். இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.

Posted in Aamir, Ad, Ads, Advt, Advts, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Bollywood, Cinema, Compensation, Cricket, Dravid, Fame, Famous, Films, Khan, Media, Movies, people, Prices, Promotions, Sachin, Salary, Shahrukh, Sports, Stars, Tendulkar, TV, Yuvraj | Leave a Comment »

Theodore Bhaskaran, Thamizharuvi Manian, Vasanthidevi, Ra Nallakkannu, Judge Chandru & Kunrakkudi Ponnambala Adigalaar

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

என்று சொன்னார்!

ஆர். நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
ஒரு வெள்ளைக்கார அழகியின் ரோஸ் நிற கன் னத்தில் அழகு ததும்பும் மச்சம். இரண்டு கவிஞர் களுக்கிடையில் அந்த மச்சத்தை வர்ணிக்கிற போட்டி. “செழித்து வளர்ந்திருக்கும் ரோஜாத் தோட்டத்தில் ஒரு கறுப்பு வண்டு தேன் அருந்து கிறது’ என்றார் வெள்ளைக்காரக் கவிஞர்.
“வெள்ளைக்காரன் தோட்டத்தில் அடிமையாக வேலை செய்தே களைத்துப்போன ஒரு கறுப்ப னைப் போல இருக்கிறது அந்த மச்சம்’ எனச் சொன்னார் கறுப்பர் இனக் கவிஞர்.
————————————————————————————————————————————-

தமிழருவி மணியன்.

பூனை குட்டி போட்டால், தாய்க்கு அதிகக் கவலை, பொறுப்பு! பத்திரமாக, வலிக்காமல் நம் மைத் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் தாய் என்கிற தைரியத்தில் இருக்கும் பூனைக்குட்டி! ஆனால் குரங்கினம் அப்படியில்லை. “தன்னைப் பெற்றவள் எந்த நேரத்திலும் எந்த மரத்துக்கும், எந்தக் கிளைக்கும் தாவிவிடுவாள்; உஷாராக இருக்க வேண்டியது நம் பொறுப்பு’ என்று தாய் மடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் குரங்குக்குட்டி. குரங்கிலிருந்து வந்த மனிதன், பூனை மனோபாவத்துக்கு வந்துவிட்டான். எல் லாவற்றையும் அடுத்தவர்கள் பார்த்துக் கொள் வார்கள் என்கிற பொறுப்பின்மையை வளர்த்துக் கொண்டுவிட்டான்.
————————————————————————————————————————————-

வசந்திதேவி, கல்வியாளர்.

தேவையற்ற அநாகரிகங்களை மேலைநாடுகளி லிருந்து காப்பியடிக்கிற நாம், அவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைக் கற்பதில்லை.

முதலாளித்துவ நாடுகளின் சிறப்பே, எல்லோ ருக்கும் சமமான கல்வி முறை என்பதுதான். மந் திரியின் மகனுக்கும், மாடு மேய்ப்பவரின் மக னுக்கும் ஒரே வகுப்பறைதான். அனைவருக்கும் தரமான, கல்வி கிடைக்க அரசுதான் செலவு செய் யும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தனி யார் பள்ளிகள் என்று சொன்னாலே சிரிக்கிறார் கள். “கல்வி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், பிறகு எதற்காக அரசாங்கம்” என்று கேட்கிறார் கள்.

————————————————————————————————————————————-

தியோடர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் ஆர்வலர்.

இன்றைய குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டால் “ஆம்லெட்’ என்று சிரிக்கி றது. முட்டை ஓர் உயிர் வளர்கிற இடம் என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவதே இல்லை. டால்பினை வெளிநாட்டிலிருந்து இறக்கு மதியான உயிராகப் பார்க்கிற நமக்கு, அதை “ஓங் கில்’ என்று நம் முன்னோர்கள் அழைத்த விவரம் தெரியாது. காட்டில் வாழ்கிற உயிரினங்களைக் குறிப்பிடும்போது “கொடிய விலங்கு புலி’ என்று அறிமுகப்படுத்தபட்டால் எப்படிக் குழந்தைக ளுக்கு விலங்குகள் மேல் நேசம் வரும்? “கொடூரக் காடு’ என்று கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் கதா சிரியர்கள். சென்னையில் சாலையில் ஓரமாக நடந் துபோனால், உயிருடன் திரும்புவதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை.
————————————————————————————————————————————-

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

தொலைக்காட்சி பெட்டியை நாக்கூசா மல் “இடியட் பாக்ஸ்’ என்று அழைக்கி றோம். புத்திசாலித்தனமான அந்த அறி வியல் கண்டுபிடிப்பைத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளாமல், ராசிக்கல் பலன் பார்ப்பது நாம்தானே தவிர, அந் தக் கண்டுபிடிப்பு அல்லவே! இப்படி நாம் செய்யும் தவறுகளுக்குக்கெல்லாம் மற்றவர்களின் மீது பழிபோட்டு, நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதே நம் வழக்கமாக இருக்கிறது. ஆன்மிகத் தைப் புரிந்துகொள்ளாமல் சடங்குக ளின் பின்னால் சென்று சடங்குகளையே ஆன்மிகமாக்கி விட்டோம்.
————————————————————————————————————————————-

நீதிபதி சந்துரு. 

பொது இடங்களில் கழிப்பிடங்களில் செல்லும்போது “ஆண்கள்-பெண்கள்’ என்று தமிழில் எழுதியிருப்பதையே படிக்கத் தெரியாமல் வரைந்திருக்கும் ஆண், பெண் படங்களைப் பார்த்து தெரிந்துகொள்கிற மக்கள் இருக்கிற நாட்டில், மக்களின் மொழியை நீதிமன் றமே புறக்கணிக்கிறது. தன் வழக்கு பற்றி என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைப் பாமரன் புரிந்துகொண்டால் வாய்தா வாங்குவதும், இழுத்தடிப்பதும் பெருமளவு குறையும்.

Posted in Authors, Comparisons, Courts, Education, Environment, Evolution, Famous, Fun, Impress, Incidents, Interesting, Judge, Justice, Law, Life, Metaphors, Observations, Order, Quotes, Read, Religion, Rituals, Society, Speech, Study, Wow, Writers | Leave a Comment »

Famous People & Tidbits – Life Incidents: Sunday Dinamani

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

துணுக்குத் தோரணம்

பொறுமையாளன்

“”சின்ன வயதில் எனக்குப் பெரிதும் பொறுமை கிடையாது. திருமணத்திற்குப் பின்தான் நான் பொறுமையாளன் என்று பலராலும் பாராட்டப்பெற்றேன். பொறுமை பொலிவது உண்மையானால், அது இயற்கையில் அரும்பியதாகாது. அது கமலாம்பிகையினின்று இறங்கிக் கால் கொண்டது என்றே சொல்வேன்”- என்று சுயவிமர்சனம் செய்துகொண்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., அமைதிக் கொள்ள வைத்த கமலாம்பிகை யார் தெரியுமா? அவர் மனைவி.

மதிநுட்பம் இல்லாத மாநிலம்?

எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது.

இவ்வாறு முதல் மாணவராகவே படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டே அந்த மாணவர் வந்ததில் ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலம் வங்காள மாநிலத்தில் சேர்ந்திருந்தது. பீகார் மாநில மாணவர்கள் எல்லோரும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்.

வங்க மொழி பேசுவோர் பீகாரிகளைப் படிப்பறிவு இல்லாதவர்கள், மதிநுட்பம் இல்லாதவர்கள் எனப் பேசுவார்கள். இப்படி கேவலமாய்ப் பார்ப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வெறியோடுதான் அந்த மாணவர் படித்து முதல் மாணவராக வந்திருக்கிறார்.

அந்த மாணவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்.

கோர்ட்டுக்குப் போன குதிரை!

நீதிமன்றத்திற்கு தினமும் இராஜாஜி தனது குதிரை வண்டியில் செல்வது வழக்கம். ஒருநாள் நீதிமன்றத்திற்குப் புறப்படும்போது வண்டியில் பூட்டிய குதிரையின் மீது புழுதியும் சாணமும் படிந்திருப்பதைக் கண்டார். குதிரையைக் குளிப்பாட்டி வரும்படி கூறினார்.

வண்டிக்காரன் குதிரையைக் குளிப்பாட்டி வண்டியில் பூட்டினான். இராஜாஜி ஏறி அமர்ந்தார். குதிரைக்காரன் ஏறி உட்கார்வதற்குள் குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இராஜாஜியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏதாவது ஓர் இடத்தில் குதிரை களைப்படைந்து நிற்கத்தானே போகிறது என்ற நம்பிக்கையில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

குதிரை ஓடி கடைசியாக ஓரிடத்தில் போய் நின்றது. அது எந்த இடம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இராஜாஜி வழக்கமாகச் செல்லும் நீதிமன்றம்.

பிரதமரைச் சந்திக்க மறுத்த ஜனாதிபதி?

மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். “”பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்” என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.

கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: “”நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது” என்றார்.

அதற்கு தவான், “”உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்” என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.

பற்று அற!

“”என்ன செய்கிறாய்?” என்று வேதனையோடு கேட்ட தாய்க்கு சாதாரணமாகச் சொன்னான் சிறுவன் “”வேறொன்றுமில்லை, என்னுடைய மெட்ரிகுலேஷன் சான்றிதழ்களை எரிக்கிறேன்”

“”ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்ட தாய்க்குச் சொன்னான்: “”இவற்றால் ஒன்றும் பயனில்லை. அம்மா, சூர்யாஜி போன்று பந்தக் கயிறுகளை அறுக்கவேண்டும். ஆசைகளை வேரிலேயே களைய வேண்டும். எனது அகங்காரம் ஒழிய வேண்டும்” என்றான் சிறுவன்.

சரி.. யார் அந்த சூர்யாஜி?

மராட்டிய சிவாஜியின் தளபதியான தானாஜி தம்பி.

சிம்மகட் என்ற பகுதியில் நடந்த யுத்தத்தில் தொடர்புடையவன். போரின் போது உறுதியான கயிற்றைக் கோட்டைமேல் கட்டிவிட்டு, அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு போர் வீரர்கள் கோட்டை மேல் ஏறிக் கடந்துகொண்டிருந்தனர். கடுமையாகப் போரிட்ட தானாஜியின் வீரர்கள் களைப்பு அடைந்தனர். தன் வீரர்கள் பின்வாங்கிவிடுவார்களோ என்று தானாஜி பயந்தார். அப்போது தானாஜியின் தம்பியான சூர்யா, “”அஞ்ச வேண்டாம். கயிற்றை முன்பே அறுத்து விட்டேன். இனி வீரர்கள் திரும்பிச் செல்லமுடியாது. போரிட்டுத்தான் தீரவேண்டும்” என்றார்.

சரி… இந்தக் கதையைத் தன் தாயிடம் சொன்ன அந்த சிறுவன் யார் என்று தெரியுமா? வினோபா பாவே.

Posted in APJ, Bave, Bengal, Bhave, Bihar, Dinamani, Education, Faces, Famous, Freedom, Horse, Incidents, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Kalam, Kalyanasundaram, Kalyanasundaranar, Kalyanasuntharam, Kalyanasuntharanar, Life, Maharasthra, Marathi, people, President, Rajaji, Rejendra Prasad, Shivaji, Sivaji, State, ThiruViKa, Vinoba, Vinobha, Vinobha Bhave, War, WB | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

VOC Chidhambaram Pillai’s Son – Reminiscences from the History: Dinamani Kathir

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007

நினைவலைகள்

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மகன் வ.உ.சி.சுப்பிரமணியம். இவர் தொழிலாளர் நல ஆய்வாளராகப் பணியாற்றினார். அப்போது ஒரு மளிகைக் கடைக்காரர் விதிமுறைப்படி நடந்துகொள்ளவில்லை. பலமுறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. கடைசிமுறை எச்சரிக்கையாக, “”இனி விதிமுறைப்படி நடந்துகொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று கடுமையாக எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மளிகைக் கடைக்காரர் காவல்நிலையத்தில் வ.உ.சி.சுப்பிரமணியம் லஞ்சம் கேட்பதாகப் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி சுப்பிரமணியத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் நிதானமாகவும் பொறுமையாகவும் பதிலளித்தார் சுப்பிரமணியம். ஒருகட்டத்தில் சொந்தவூர் பற்றி பேசுகிறபோது, “”தூத்துக்குடியைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம்” என்று பதலளித்தார். அதைக்கேட்ட காவல் அதிகாரி, “”அது வ.உ.சிதம்பரனார் பிறந்த ஊராயிற்றே” என்றிருக்கிறார். அப்போதுதான் சுப்பிரமணியம், “”வ.உ.சியின் மகன்தான் நான்” என்று சொல்லியிருக்கிறார். பதறிப்போன அதிகாரி, சுப்பிரமணியத்திடம் தவறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டு “போலீஸ் சல்யூட்’ அடித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

Posted in Arrest, Chidhambaram, Dinamani, Famous, Freedom, History, Humbleness, Humility, Incidents, Independence, Influence, Police, Ship, Son, VOC | 4 Comments »

Ilaiyaraja’s son & Music Director Yuvan Shankar Raja files for Divorce

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2007

Yuvan shankar raja marriage Wedding snapஇளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா விவாகரத்து வழக்கு : விருப்பத்துடன் பிரிகிறார்கள்

சென்னை, ஆக. 7-

இசைஞானி இளையராஜா வின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா. இவரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

யுவன்சங்கர் ராஜா 2002-ம் ஆண்டு லண்டனில் `பிரண்ட்’ என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த லண்டனை சேர்ந்த சந்திரன் சுஜாயா என்ற பெண்ணுடன் யுவன்சங்கர் ராஜாவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க

தொடங்கினார்கள்.வீட்டிற்கு தெரியாமலே இருவரும் 3.9.03-ம் ஆண்டு லண்டனில் பதிவுத்திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விஷயம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இரு வீட்டாரும் பேசி முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி 21.3.05-ம் ஆண்டு இந்து வைதீக முறைப்படி சென்னையில் திருமணம் நடந்தது.

யுவன்சங்கர் ராஜா-சந்திரன் சுஜாயா தம்பதிகளுக்கு இது வரை குழந்தை இல்லை.

கடல் கடந்து தொடங்கிய இவர்கள் காதல் இரண்டு ஆண்டுகளிலேயே கசந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.

பிரபல இசை அமைப்பாள ராகதிகழும் யுவன்சங்கர் ராஜா வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய சினிமா பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் சமரச முயற்சி வெற்றி பெறவில்லை. இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.

இருவரும் பிரிய விரும்புவ தாக பரஸ்பர புரிந்துணர்வுபடி விவாகரத்து பெற முடிவு செய்து இன்று ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தார்கள். விவாகரத்து கோரி இருவரும் ஒன்றாக சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.

கோர்ட்டுக்கு வந்த யுவன் சங்கர் ராஜாவும் அவரது மனைவி சந்திரன் சுஜாயாவும் கோர்ட்டுக்குள் ஒன்றாகவே அமர்ந்து இருந்தனர். அப்போது எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் சிரித்து பேசியபடி இருந்தார்கள்.

Posted in Affair, Alimony, Arranged, Audio, Celebrity, Cinema, Divorce, Faces, Famous, Films, Ilaiaraja, Ilaiyaraaja, Ilaiyaraja, IR, Isai, Legends, London, Love, Marriage, MD, Movies, music, Music Director, Notable, people, Raja, Reception, ShankarRaja, UK, Wedding, YSR, Yuvan, Yuvan Shankar Raja | Leave a Comment »

Statue Politics, idol Worship, Religious Followers: Op-ed

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 11, 2007

தமிழரின் சிலை மோகம்

க.ப. அறவாணன்

தமிழர்கள் பலவற்றில் மோகிகளாக உள்ளனர். திரைப்படப் பைத்தியம், கிரிக்கெட்டை வேடிக்கை பார்த்தல், வெற்றிலை போடுதல், சுவரொட்டி ஒட்டுதல், லாட்டரிச்சீட்டு வாங்குதல், அயல்நாட்டுப் பொருள்களில் ஆர்வம், திரை நடிகர், அரசியல் தலைவர்களைக் கிட்டத்தட்ட தெய்வமாக வணங்குதல், பல கட்சிக் கொடியேற்றுதல் இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மேற்கண்ட பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய இன்னொரு மோகம் சிலை வைக்கும் வேகம். சிலை வைத்தல் என்பதன் பன்முக விரிவாக்கமே கட் – அவுட் படம் வைத்தல், சுவர்ப்படம் வரைதல் முதலான இன்ன பிற. இவை காளான் போலத் தோன்றிக் காட்சி தந்து சில நாளில் அழிபவை. ஆனால் சிலை வைப்போ, குறைந்த அளவு அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும் வரை கவனிக்கப்படுபவை.

எனவே, சிலை வைப்பின் நோக்கம், பயன், மோகத்திற்கு உரிய காரணங்கள் ஆகியவற்றை ஆராயத் தோன்றியது. சென்னை, புதுவை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களை மையமாக வைத்து ஆராயத் திட்டமிடப் பெற்றது.

இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு சிலையின் வைப்பிடத்திற்கும் சென்று – அரை மணி முதல் ஒரு மணி வரை அங்கே நின்று கூர்ந்து கவனித்து பின்கண்ட விவரங்கள் திரட்டப் பெற்றன:

அரசியல்வாதிகளின் சிலைகளே மிகுதி. சிலைக்கும், கட்சிகளுக்கும், சாதிகளுக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அந்தக் கட்சி தத்தமக்குரிய அரசியல் தலைவர்களுக்குச் சிலை வைக்கிறது.

கொள்கைக்காக வாக்கு, கட்சிக்காக வாக்கு என்ற நிலை மாற்றப்பட்டுச் சாதிக்காக வாக்கு என்று நிலைமை வந்துவிட்டது. எனவே சாதியின் பங்கு முன்னிடம் வகிக்கிறது.

சிலை திறப்பாளர்கள் அனைவரும் அரசியல் கட்சியினரே.

அனைத்துச் சிலைகளும் காக்கைக் குருவிகளின் கழிப்பிடங்களாக இருந்து வருகின்றன. ஒரு சில சிலைகள் கவனிக்கப்படுவதற்குக் காரணம் சிலை இருக்கும் இடம் திறந்தவெளியா, கூரையா என்பதைப் பொருத்தும், பிறந்தநாள் வருவதைப் பொருத்தும் பராமரிப்பு அமையும். சிலையைப் பார்ப்போர், பீடத்தைப் படிப்போர் பொதுவாகக் குறைவு. நூற்றுக்கணக்கில் மக்கள் குறுக்கும் நெடுக்குமாகச் சென்றாலும் சிலையால் மக்கள் பாதிப்புறுதல் பெரிய அளவில் இல்லை.

இன்றைய சூழலில் தமிழரிடையே சிலை வைப்பிற்குத் தலைமை மூலாதாரங்களாகத் தெரிவன:

அரசியல் / கட்சி காரணங்களுக்காக ஏற்படும் போட்டியும், பொறாமையும்.

கணிசமாக வாக்கு வங்கிகளை உடைய சாதிகள் காரணம். ஊரில், நகரில், சுற்றுப்புறங்களில் வட்ட மாவட்டங்களில் தத்தம் கட்சி, சாதி ஆகியவற்றை முன்னிறுத்திக் குழு சேர்த்துக் கொள்ளவும், எதிர்க்கட்சி / மாற்றுச் சாதியினரிடமிருந்து விலகி ஒன்றுபட்ட உணர்வைக் கூட்டிக் கொள்ளவும், தம்மை எதிர்க்கட்சி – சாதியினரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் சிலை வைப்பு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கூட்டமாக, கூட்டத்துள் ஒருவராக – கூட்டுக்குள் ஒருவராக இருக்க விரும்புவது மக்கள் இயல்பு. எனவே, சாதிக் கூட்டும் முதன்மையானது, மதக்கூட்டு மேலும் விரிந்தது. கட்சிக்கூட்டு – ஒருவனை எளிதே பிணைத்துக் கொள்கிறது. இதில் எது எளிதோ அது முன்னிலை வகிக்கிறது. சாதியே கட்சி, கட்சியே சாதி என்ற நிலையும் தோன்றுவதுண்டு. இந்த நிலை மாற்றங்களைச் சிலை வைப்பதிலும் காணலாம்.

சிலை வைக்கும் மோகம், தமிழரை எப்படிப் பற்றிக் கொண்டது?

பொதுத் தொண்டுக்காகவும், நாட்டு நலனுக்காகவும், தன்னுயிரை இழக்கும் மறவனுக்கு நடுகல் எடுப்பதும் நடுகல்லில் மறவனின் பெயரையும் – அவன் செய்த அரிய செயலையும் பொறிப்பதும் வழக்கமாக இருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்தம் வரவிற்குப் பிறகு பழைய தமிழர்தம் பழக்கம் புதுவேகம் பெற்றது.

உலகில் இஸ்லாம் மட்டுமே சிலை வைப்பையும், உருவ வணக்கத்தையும் ஏற்பதில்லை.

பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல், ஹாலந்து நாட்டினர் – இந்தியாவைப் பங்கிட்டுக் கொண்டபோது – தம் நாட்டவர் சிலையை இந்தியாவிலும் ஆங்காங்கே வைக்கத் தொடங்கினர். 1947இல் ஐரோப்பியர் வெளியேறிய பின், சுதந்திர இந்தியாவிலும் மேற்கண்ட பழக்கம் தொடர்ந்தது.

வெள்ளைக்காரர்களுக்குப் பதிலாக, உள்ளூர் அரசியல்வாதிகளின் சிலைகள் அதிகமாக வைக்கப்ப்பட்டன. காந்தி, நேரு சிலைகள் நாடெங்கும், மூலை முடுக்குகளில் வைக்கப்பட்டன. 1960 வாக்கில், இந்திய அரசியல், மாநிலங்களில் காங்கிரசிடமிருந்து கைமாறத் தொடங்கியது.

கேரளத்தில் தொடங்கிய இம்மாற்றம் 1967-இல் தமிழகத்தில் நிகழ்ந்தது. காந்தி, நேருவிற்கு மாற்றாக, அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலைகள் காணும் இடமெல்லாம் வைக்கப் பெற்றன. அடிப்படைக் காரணம்: அரசியலே என்பது தெளிவு.

அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகச் சாதி வளர்க்கப்பட்ட சூழலில், சிலை வைப்பிற்குப் பின்னணிக் காரணங்களுள் ஒன்றாகச் சாதியும் முன்னிடம் பிடித்துக் கொண்டது.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்).

Posted in Actors, Actress, Caste, Cinema, Community, Desecration, Disciples, Election, Faith, Famous, Films, Flag, Followers, Hate, Idol, Kerala, Leaders, Lunatics, Mad, Movies, narcissism, Neta, Netha, Op-Ed, Party, people, Politics, Recognition, Religion, Star, Statue, Street, Symbol, Vote | Leave a Comment »

Kalki & Nellai Su Muthu – Women’s Day Special

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

பெண் தெய்வங்கள் இருக்கும் திக்கு நோக்கி, பயபக்தியுடன் தண்டம் சமர்ப்பிக்கும் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிச் சிறிது
காலமாயிற்று.

என்னைப் பொருத்த அளவில், உலகில் சாதாரண ஸ்திரீகள் யாருமே
கிடையாது. எல்லாரும் மாதரசிகள், பெண்மணிகள், ஸ்திரீ ரத்தினங்கள், பெண் தெய்வங்கள், இன்ப விளக்குகள், இளங்குயில்கள், பொன்
மயில்கள்தான். உலகம் இத்தகைய ஆனந்தக் காட்சியாக அடியேனுக்குத் தோற்றம் அளிப்பதற்கு முக்கியக் காரண புருஷர்கள் கவி சுப்பிரமணிய பாரதியும், திரு.வி.கலியாண சுந்தர முதலியாருமேயாவர். படிக்கப் படிக்க, மிகவும் சாதாரண ஸ்தீரிகளெல்லாம் என் கண்முன்னே தெய்வ மகளிராகக் காட்சி தரலாயினர்.

ஆரம்பத்தில், மேற்கூறிய பெரியார்களுடனே நான் முற்றும் மாறுபட்ட குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.

‘‘நல்ல
காதல் புரியும் அரம்பையர்
போலிளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு’’

எனும் பாரதியார் பாட்டின் அடிகளை முதன்முதலில் நான் கேட்டபோது, இதைப் போன்ற வெள்ளைப் புளுகு அல்லது பச்சைப் பொய் – உலகில் வேறொன்றும் கிடையாது என்று எண்ணினேன். தற்கால தமிழ்நாட்டின் இளங்கன்னியர் அரம்பைகளல்லர் என்பது சர்வ நிச்சயம். அவர்கள் காதல் புரிவதில்லையென்று கோயிலில்
விளக்கு வைத்து அணைப்பேன்.
தமிழ்நாடு மற்ற எத்தனையோ
துறைகளில் மேன்மை பெற்றிருக்கலாம். ஆனால், பெண்களின் அழகுக்கு நமது நாடு பெயர் போனதல்ல. இச் சிறப்பை கேரளம், சிந்து, காஷ்மீரம் போன்ற நாடுகளுக்குக் கொடுத்து விடத் தான் வேண்டும். மேலும், இந் நாளில் நமது பெண்களுக்குக் கன்னிப் பருவத்தில் காதல் புரியும் சந்தர்ப்பம்தான் ஏது? ‘பாரதியார் ஏன் இவ்வளவு பச்சைப் பொய் சொல்கின்றார்?’ என்று இவ்வாறு சிந்திக்கலானேன்.

ஸ்திரீகளைப் ‘‘பெண்மணிகள்’’ என்றும், ‘‘பெண் தெய்வங்கள்’’ என்றும் ‘‘மாதரசிகள்’’ என்றும் திரு.வி.க. முதலியோர் புதுத் தமிழில்
சொல்கின்றார்கள் என்னும் சந்தேகமும் முதலில் எனக்கிருந்தது.
ஆண்களைப் பற்றிச் சொல்லுங்கால், ‘‘ஆடவ தெய்வங்கள்’’ என்றாவது, ‘‘ஆண்மணிகள்’’ என்றாவது, ‘‘ஆணரசர்கள்’’ என்றாவது சாதாரணமாகச் சொல்கிறோமா? கிடையாது. பழைய நூல்களிலே ‘‘புருஷ வியாக்ரம்’’, ‘‘ஆண் சிங்கம்’’, ‘‘இளங்காளை’’ போன்ற சொற்றொடர்கள் வருவது உண்மை. ஆனால் ஆண்மகனுக்கு இவையெல்லாம் சிறப்பா, இழிவா என்பதே ஐயத்துக்கிடமானது. அறிவுக்கே சிறப்பு மிகுந்த இந்நாளில் யாரையாவது பார்த்து ‘‘அடே ஆண் புலியே! ஏ இளம் மாடே!’’ என்று அழைப்போமாயின் அவன் உண்மையிலேயே புலியின் குணமும், மாட்டின் குணமும் பெற்று அறையவோ, முட்டவோ வந்தால்
ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்ல வேளையாக, இவ்வழியில்
ஆண்களைச் சிறப்பிப்போர் இந் நாளில் யாரும் கிடையாது.

பாரத நாட்டில் நான் அறிந்த வரையில் புருஷர்களுக்குள்ளே
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒருவர்தான் ‘‘தேவர்’’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளார். ஆனால் ஸ்திரீகளிலென்றால், எல்லாரும் கமலாதேவி, விமலாதேவி, லக்ஷ்மிதேவி, பார்வதி தேவி, ருக்மணி தேவி, சகுந்தலா தேவிதான். ஏன்?

பெண் தெய்வங்காள்! மன்னியுங்கள். இந்தச் சந்தேகங்களெல்லாம்
பின்னால் எனக்குப் பூரணமாய் நிவர்த்தியாகிவிட்டனவென்று
தெரிவித்துக் கொள்கிறேன். எப்படியிருந்தாலும் தமிழ்நாடு நமது நாடு. தமிழ்நாட்டுப் பெண்கள் நமது சகோதரிகள். எனவே, பாரதியார்
பாடியதில் தவறு என்ன? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? ‘‘மணி’’ என்றால் பொன் மணியாய்த்தான் இருக்க வேண்டுமா? கருமணி அல்லது நீலமணியாகவும் இருக்கலாமன்றோ? பார்க்கப் போனால், ரூப சௌந்தரியத்தில் என்ன இருக்கிறது? குண சௌந்தரியமன்றோ உண்மை சௌந்தரியமாகும்! கல்வியழகே யழகு! கற்பின் புகழே புகழ்! நமது இளங்கன்னியர் புரியும் காதலைப் பாடியபோது, பாரதியார் கேவலம் கீழ்த்தர நாவல்களில் காணப்பெறும் இழிவான காதலையா குறிப்பிட்டார்? இல்லை; இல்லை. தமிழ்ப் பெண்களின் காதல், இல்வாழ்க்கையோடியைந்த உயர் காதலாகும் _ என் உள்ளத்திலே பெரியதொரு புரட்சி உண்டாயிற்று. எவ்வளவு பெரிய புரட்சியெனில் வங்கத்தின் பிரபல நாடகாசிரியரான துவிஜேந்திரலால் ராய் என்பவர் ஓரிடத்திலே,

‘‘பகவானே! பெண் தெய்வங்களைப் படைத்து இவ்வுலகை இன்பமயமாக்கிய நீ, அவ்வின்பத்தைக் கெடுப்பதற்கு இந்த ஆண்
மிருகங்களை ஏன் படைத்தாய்?’’

என்று எழுதியிருந்ததைப் படித்தபோது, ‘‘உண்மை! உண்மை!’’ என்று கதறினேன்.

ஏ! ஆண் மிருகங்காள்! பெண் தெய்வங்களைப் போற்றுங்கள்.

– ‘பெண் தெய்வங்கள்’
வானதி வெளியீடு

======================================================

அறியாப் பெண்களின் அறிவியல் முகங்கள்

நெல்லை சு. முத்து

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நோபல் பரிசு பெற்ற உலகின் முதலாவது பெண் விஞ்ஞானி மேரி ஸ்கலோதோவ்ஸ்கா கியுரி (1867 – 1934). ரேடியம், பொலோனியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்தவர்.

முதன்முறையாக இரண்டு தடவை பரிசு வென்ற முதல் பெண்ணும் இவர்தான். இயற்பியலுக்கும் (1903) வேதியியலுக்கும் (1911) பரிசுகள். இத்தனைக்கும் நான்கு வயதிலேயே தாயை இழந்தவர்.

ஆனால், உலக வரலாற்றில், அறிவியல் துறையில், முதல் “முனைவர்’ பட்டம் பெற்றவரும் இவரே. பாரீஸ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியர். இவரது கணவர் பியரி கியுரியும் நோபல் விருது பெற்றவர். மகள் ஐரின் கூட 1935 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் வென்றவர். உன்னத நோபல் குடும்பம்.

பிரெஞ்சு அறிவியல் அகாதமிக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது போட்டியாளர் எட்வார்டு பிரான்லி என்கிற கத்தோலிக்க வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். காரணம் அவர் ஒரு யூதப் பெண்மணியாம். நிறுவன அதிபர் எம். அமாபாத், “பெண்கள் பிரெஞ்சு நிறுவனத்தில் அங்கம் வகிக்கக் கூடாது’ என்றே அறிவித்தார். ஆயினும் மேரி கியுரி தன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார். நீண்டகாலமாக கதிர்வீச்சுப் பொருள்களுடன் ஆய்வு நடத்தியதால் கண்புரை, விரல் சிதைவு, ரத்தசோகை போன்ற நோய்கள் பாதித்து மரணம் அடைந்தார்.

இன்னொரு வகையில் ஆராய்ந்தால் நோபல் பரிசைப் பொருத்தமட்டில் ஆணாதிக்கம் சொல்ல வேண்டியது இல்லை. 671 முறை ஆண் விஞ்ஞானிகள். வெறும் 29 முறை மட்டுமே பெண் விஞ்ஞானிகள். இவர்களில் கூட சமாதானத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் முறையே 10, 9 பெண்மணிகள் புகழ் பெற்றனர். ஏனையோரில் 5 பேர் மருத்துவம், இருவர் வேதியியல், ஒருவர் இயற்பியல், ஏற்கெனவே குறிப்பிட்ட கியுரி அம்மையார் மட்டும் இரண்டு முறை.

ஏனோ தெரியவில்லை. இன்றுவரை பொருளாதாரத் துறைக்கு நோபல் பரிசு பெறவில்லை என்பது ஒரு வினோதக் குறிப்பு.

உலக அளவிலும் பெண் விஞ்ஞானிகள் ஓரங்கட்டப்படுவது ஓர் அதிர்ச்சித் தகவல். நோபல் தகுதி கொண்டு இருந்த ராச்சேல் கார்சன் என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர் பெண்ணை யாருக்கும் தெரியாது. அணுகுண்டு சோதனைக்குத் தடை விதிக்கப் பாடுபட்டு 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் தெரியும். அவருடன் ஊர்ஊராகப் பிரசாரம் செய்த துணைவியார் அவாஹெலன் தனியே சிறப்புப் பெறவில்லை.

பிரான்சிஸ் எச்.க்ரிக், ஜேம்ஸ் டி வாட்சன், மௌரிஸ் எச். வில்கின்ஸ் ஆகியோர் கண்டு துலக்கிய டி.என்.ஏ. மரபணுவின் ஏணித் தோற்றம் மரபியலில் பிரபலம். மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு உடலியங்கியல் அல்லது மருத்துவம் என்கிற பிரிவின்கீழ் நோபல் பரிசு வழங்கப் பெற்றது.

ஆனால் டி.என்.ஏ. கட்டமைப்பு குறித்த எக்ஸ்கதிர் படிகவியல் நிரூபணம் வழங்கியவரை உலகம் அறியாது. உண்மையில் 1962 ஆம் ஆண்டின் நோபல் பரிசு ரோசலிண்ட் எல்சி ஃப்ராங்ளின் என்னும் பெண் விஞ்ஞானிக்கும் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் அவரும் அதற்குள் 37ஆம் வயதிலேயே புற்றுநோயால் இறந்து போனார்.

விண்வெளியில் அண்டக் கதிர்வீச்சு மற்றும் துடிப்பு விண்மீன்களைக் கண்டறிவதற்காக அந்தோனி ஹூவிஷ், மார்ட்டின் ரைல் ஆகியோருக்கு 1974 ஆம் ஆண்டு நோபல் பரிசு. அவர்களின் முன்னோடியாக முதலில் இவற்றைக் கண்டுபிடித்த மாணவி ஜோசிலைன் பெல் நிலை கேள்விக்குறிதான்.

அது மட்டுமா; 1944 ஆம் ஆண்டு அணுக்கருப் பிளவு குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கு நோபல் பரிசு வென்றவர் ஓட்டோ ஹான். அமெரிக்காவின் மன்ஹாட்டன் திட்டத்தில் அவருடன் பணியாற்றிய லீஸ் மெய்த்னர் அங்கீகாரம் பெறவே இல்லை.

நம் நாட்டிலோ நோபல் பரிசு பெற்ற இந்தியக் குடிமக்கள் நால்வர். சர் சி.வி. ராமன் (இயற்பியல், 1930), ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம், 1913), அமார்த்திய சென் (பொருளாதாரம், 1998), அன்னை தெரசா (சமாதானம், 1979) ஆகியோர். அதிலும் இந்தியாவின் ஒரே ஒரு நோபல் பரிசுப் பெண் என்ற பெருமைக்கு உரியவர் துருக்கியில் பிறந்தவர். இந்தியக் குடியுரிமை பெற்றவர். இவர்கள் நால்வருக்குமே பெரும்பாலும் வங்காளம் அல்லது கோல்கத்தாதான் பணிக் களம்.

எப்படியோ, சர்வதேச அளவில் இன்னோர் உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் சார்ந்த பருவங்கள், நோய் சார்ந்த மருந்துகள், மூளை சார்ந்த எண்ணங்கள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உண்டு.

இதனாலேயே 1991 ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் “மகளிர் உடல்நல முன்நடவடிக்கை’ என்கிற தொலைநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் ஐம்பதுக்கும் எண்பதுக்கும் உள்பட்ட 1.61 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டு விட்டனர். நம் நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.

ஐரோப்பாவின் வாலென்டைன் நினைவுதாம் முக்கியமா? இந்த வாலென்டைன் யார் என்றுதானே. ரோம் நாட்டில் இரண்டாம் கிளாடியஸ் அரசருக்குத் தெரியாமல் உள்ளூர் வாலிபர்களுக்குத் திருட்டு விவாகம் நடத்தி வைத்த புண்ணியவான். ராஜத் துவேஷச் செயலில் ஈடுபட்டவர்தான் இந்த வாலென்டைன்.

அவர் நினைவு 1700 ஆண்டு நீள் உறக்கத்தில் இருந்த இந்தியக் காதலர்களுக்கு இப்போதுதான் பொத்துக் கொண்டு வந்தது. இன்று நாய்க்குட்டியிடம் அன்பு செலுத்தவும் வாலென்டைன் ஆசீர்வாதம் வேண்டிக் காத்து இருக்கிறோம். உயிர்களிடத்து அன்பு வேணும் என்கிற பாரதி தெரியாது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடிய வள்ளலார் அன்பு தினம் அறியோம். மக்கள்தொகைப் பெருக்கும் காதலர் தினம் மட்டும் கடற்கரையில் கற்போம். வேறு வழியே இல்லை பாருங்கள்.

இளைஞர்களே, இரவில் கண்விழித்துப் பாடம் படித்தால் உழைப்பு. படம் பார்த்தால் கொழுப்பு. நடுமூளையில் பீனியல் சுரப்பி ஒன்று ஒவ்வொருவர் மண்டைக்கு உள்ளும் இருக்கிறது. அதில் இருந்து சுரக்கும் மெலாட்டோனின் ஹார்மோன் நீர் பெருகினால் உறக்கம் கண்ணைச் சொக்கும். விடலைப் பருவத்தினருக்கு அது நடுராத்திரியில் தாமதமாகச் சுரக்கிறதாம். அதனாலேயே இரவு எல்லாம் கண் துஞ்சாமல் காலையில் உறங்குகிறார்கள் என்றோர் ஆய்வு.

ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் வருகிறது. ஆனால் “ராமன் விளைவு’ பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டு கொண்டதாக இல்லை. “வாலென்டைன் விளைவு’ காதலர் தினம் கொண்டாடினால் தான் அன்பு மலர்கிறதாம். சின்னக் கடைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வியாபாரம்.

சொந்தச் செலவில் வெளிநாட்டுப் “பெரிய சகோதரர்கள்’ வீட்டில் தங்கி அவமானப்படுவதே நம் பாரத வீராங்கனைகளின் சாதனை. மானம் கெட்டுப்போய் பரிசு வாங்குவதுதான் இனவெறித் தாக்குதலுக்கு எதிரான வெற்றியாமே.

பொதுவாக, ஆண்கள் தங்களை ஒரு பெரும் சமூக அமைப்பின் அங்கமாகக் கருதுவர். சராசரி விகிதாசார அளவில் ஆண்களே மதம், கட்சி, மொழி என்று ஒரு சமூக ஆதாரம் சார்ந்து தான் கூடுதல் ஆவேசப்படுகிறார்களாம். பெண்கள் குடும்பச்சூழல் அடிப்படையிலேயே இயங்குகின்றனர். அமெரிக்காவில் சார்லோத்தெஸ்வில்லி நகரில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மனநோய் மருத்துவர் ஆண்டர்சன் தாம்சன் கருத்து இது.

ஜே.அண்டர்சன் தாம்சன் ஜூனியர் அறிவித்த ஆய்வு முடிவு பெண்கள் மனத்தில் பொறி கிளப்புகிறது. உலகின் பல்வேறு தீவிரவாதத் தற்கொலைப் படைகளில் பெரும்பான்மை பெண்களாம். மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராயிட் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மனித இனவியல் கழக மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்து இது.

அறியா விடலைப் பருவத்தில் கற்பு இழப்பு, கனவு கண்ட திருமண வாழ்க்கை அமையாத ஏமாற்றத்தால் விவாகரத்து, எதிரிகளால் கணவர் அல்லது சகோதரர்கள் கொலையுண்ட பரிதவிப்பு என ஏதேனும் ஒரு காரணம் போதும். பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுதல் எளிதாம்.

(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).

Posted in Analysis, Awards, Backgrounder, Chauvinism, Discoverer, Doctor, Equal Opportunity, Facts, Famous, Females, History, Information, Inventor, Kalki, Lady, male, Men, Nobel, Ph.d, Prizes, Professor, Research, Science, scientist, Scientists, Woman, Women | Leave a Comment »