Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Desecration’ Category

Statue Politics, idol Worship, Religious Followers: Op-ed

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 11, 2007

தமிழரின் சிலை மோகம்

க.ப. அறவாணன்

தமிழர்கள் பலவற்றில் மோகிகளாக உள்ளனர். திரைப்படப் பைத்தியம், கிரிக்கெட்டை வேடிக்கை பார்த்தல், வெற்றிலை போடுதல், சுவரொட்டி ஒட்டுதல், லாட்டரிச்சீட்டு வாங்குதல், அயல்நாட்டுப் பொருள்களில் ஆர்வம், திரை நடிகர், அரசியல் தலைவர்களைக் கிட்டத்தட்ட தெய்வமாக வணங்குதல், பல கட்சிக் கொடியேற்றுதல் இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மேற்கண்ட பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய இன்னொரு மோகம் சிலை வைக்கும் வேகம். சிலை வைத்தல் என்பதன் பன்முக விரிவாக்கமே கட் – அவுட் படம் வைத்தல், சுவர்ப்படம் வரைதல் முதலான இன்ன பிற. இவை காளான் போலத் தோன்றிக் காட்சி தந்து சில நாளில் அழிபவை. ஆனால் சிலை வைப்போ, குறைந்த அளவு அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும் வரை கவனிக்கப்படுபவை.

எனவே, சிலை வைப்பின் நோக்கம், பயன், மோகத்திற்கு உரிய காரணங்கள் ஆகியவற்றை ஆராயத் தோன்றியது. சென்னை, புதுவை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களை மையமாக வைத்து ஆராயத் திட்டமிடப் பெற்றது.

இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு சிலையின் வைப்பிடத்திற்கும் சென்று – அரை மணி முதல் ஒரு மணி வரை அங்கே நின்று கூர்ந்து கவனித்து பின்கண்ட விவரங்கள் திரட்டப் பெற்றன:

அரசியல்வாதிகளின் சிலைகளே மிகுதி. சிலைக்கும், கட்சிகளுக்கும், சாதிகளுக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அந்தக் கட்சி தத்தமக்குரிய அரசியல் தலைவர்களுக்குச் சிலை வைக்கிறது.

கொள்கைக்காக வாக்கு, கட்சிக்காக வாக்கு என்ற நிலை மாற்றப்பட்டுச் சாதிக்காக வாக்கு என்று நிலைமை வந்துவிட்டது. எனவே சாதியின் பங்கு முன்னிடம் வகிக்கிறது.

சிலை திறப்பாளர்கள் அனைவரும் அரசியல் கட்சியினரே.

அனைத்துச் சிலைகளும் காக்கைக் குருவிகளின் கழிப்பிடங்களாக இருந்து வருகின்றன. ஒரு சில சிலைகள் கவனிக்கப்படுவதற்குக் காரணம் சிலை இருக்கும் இடம் திறந்தவெளியா, கூரையா என்பதைப் பொருத்தும், பிறந்தநாள் வருவதைப் பொருத்தும் பராமரிப்பு அமையும். சிலையைப் பார்ப்போர், பீடத்தைப் படிப்போர் பொதுவாகக் குறைவு. நூற்றுக்கணக்கில் மக்கள் குறுக்கும் நெடுக்குமாகச் சென்றாலும் சிலையால் மக்கள் பாதிப்புறுதல் பெரிய அளவில் இல்லை.

இன்றைய சூழலில் தமிழரிடையே சிலை வைப்பிற்குத் தலைமை மூலாதாரங்களாகத் தெரிவன:

அரசியல் / கட்சி காரணங்களுக்காக ஏற்படும் போட்டியும், பொறாமையும்.

கணிசமாக வாக்கு வங்கிகளை உடைய சாதிகள் காரணம். ஊரில், நகரில், சுற்றுப்புறங்களில் வட்ட மாவட்டங்களில் தத்தம் கட்சி, சாதி ஆகியவற்றை முன்னிறுத்திக் குழு சேர்த்துக் கொள்ளவும், எதிர்க்கட்சி / மாற்றுச் சாதியினரிடமிருந்து விலகி ஒன்றுபட்ட உணர்வைக் கூட்டிக் கொள்ளவும், தம்மை எதிர்க்கட்சி – சாதியினரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் சிலை வைப்பு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கூட்டமாக, கூட்டத்துள் ஒருவராக – கூட்டுக்குள் ஒருவராக இருக்க விரும்புவது மக்கள் இயல்பு. எனவே, சாதிக் கூட்டும் முதன்மையானது, மதக்கூட்டு மேலும் விரிந்தது. கட்சிக்கூட்டு – ஒருவனை எளிதே பிணைத்துக் கொள்கிறது. இதில் எது எளிதோ அது முன்னிலை வகிக்கிறது. சாதியே கட்சி, கட்சியே சாதி என்ற நிலையும் தோன்றுவதுண்டு. இந்த நிலை மாற்றங்களைச் சிலை வைப்பதிலும் காணலாம்.

சிலை வைக்கும் மோகம், தமிழரை எப்படிப் பற்றிக் கொண்டது?

பொதுத் தொண்டுக்காகவும், நாட்டு நலனுக்காகவும், தன்னுயிரை இழக்கும் மறவனுக்கு நடுகல் எடுப்பதும் நடுகல்லில் மறவனின் பெயரையும் – அவன் செய்த அரிய செயலையும் பொறிப்பதும் வழக்கமாக இருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்தம் வரவிற்குப் பிறகு பழைய தமிழர்தம் பழக்கம் புதுவேகம் பெற்றது.

உலகில் இஸ்லாம் மட்டுமே சிலை வைப்பையும், உருவ வணக்கத்தையும் ஏற்பதில்லை.

பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல், ஹாலந்து நாட்டினர் – இந்தியாவைப் பங்கிட்டுக் கொண்டபோது – தம் நாட்டவர் சிலையை இந்தியாவிலும் ஆங்காங்கே வைக்கத் தொடங்கினர். 1947இல் ஐரோப்பியர் வெளியேறிய பின், சுதந்திர இந்தியாவிலும் மேற்கண்ட பழக்கம் தொடர்ந்தது.

வெள்ளைக்காரர்களுக்குப் பதிலாக, உள்ளூர் அரசியல்வாதிகளின் சிலைகள் அதிகமாக வைக்கப்ப்பட்டன. காந்தி, நேரு சிலைகள் நாடெங்கும், மூலை முடுக்குகளில் வைக்கப்பட்டன. 1960 வாக்கில், இந்திய அரசியல், மாநிலங்களில் காங்கிரசிடமிருந்து கைமாறத் தொடங்கியது.

கேரளத்தில் தொடங்கிய இம்மாற்றம் 1967-இல் தமிழகத்தில் நிகழ்ந்தது. காந்தி, நேருவிற்கு மாற்றாக, அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலைகள் காணும் இடமெல்லாம் வைக்கப் பெற்றன. அடிப்படைக் காரணம்: அரசியலே என்பது தெளிவு.

அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகச் சாதி வளர்க்கப்பட்ட சூழலில், சிலை வைப்பிற்குப் பின்னணிக் காரணங்களுள் ஒன்றாகச் சாதியும் முன்னிடம் பிடித்துக் கொண்டது.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்).

Posted in Actors, Actress, Caste, Cinema, Community, Desecration, Disciples, Election, Faith, Famous, Films, Flag, Followers, Hate, Idol, Kerala, Leaders, Lunatics, Mad, Movies, narcissism, Neta, Netha, Op-Ed, Party, people, Politics, Recognition, Religion, Star, Statue, Street, Symbol, Vote | Leave a Comment »