Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Faces’ Category

Soundaram Ramachandran, Dr. Rajammal Devadas, Sigappi Aachi, Veerammal, Veena Artist Dhanammal, Dr S Dharmambal

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2008

Thiruvengimalai Saravanan

இந்த வார சாதனை மங்கை ஒரு வீரமங்கை. வீரம் என்றதும் வாள் சண்டை, கத்திச் சண்டை, போர் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். இந்த மங்கை சங்கீதத்தில் வீரத்தையும் தீரத்தையும் காட்டிய மங்கை.

இந்த சம்பவத்தைப் பாருங்கள். ஒருமுறை ஒரு நாதஸ்வர கச்சேரி நடந்துகொண்டிருந்தது. வாசித்துக் கொண்டிருந்தவர் நாதஸ்வர மாமேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. மிகப் பெரிய இசை மேதைகளெல்லாம் முன்வரிசையில் அமர்ந்து நாதஸ்வர இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வீணை தனம்மாளும் அமர்ந்திருக்கிறார். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திலிருந்து ‘தர்பார்’ ராகம் தவமாய் வந்து கொண்டிருந்தது. அதில் லேசாக ‘நாயகி’ ராகமும் கலந்துவிட்டது. சட்டென்று எழுந்துவிட்டார் வீணை தனம்மாள். தர்பாரில் எப்படி நாயகியைக் கலப்பது என்று அவருக்கு கோபம். எல்லோருக்கும்

அதிர்ச்சி. ராஜரத்தினம் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘தர்பாரில் நாயகிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாதா?’ என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சமாளித்தார். பிறகு தனம்மாளுக்காக சுத்தமான தர்பாரை வாசித்தார். இது வீணை தனம்மாளின் கோபத்துக்கு ஓர் உதாரணம். அவரது கோபம் எப்போதும் சங்கீதத்தின் அடிப்படையில் வருவது. கர்நாடக சங்கீதத்தின் மேல் அத்தனை காதல். பாசம். சங்கீதத்துக்கு எந்தவித

சங்கடமும் வந்துவிடக்கூடாது.

இவரது கச்சேரிக்குச் செல்பவர்கள் எப்போதும் சற்று கவனத்துடன் இருப்பார்கள். அரங்கில் சின்ன பேச்சு சத்தம் வந்தால்கூட தனம்மாளுக்குப் பிடிக்காது. வாசிப்பதை நிறுத்திவிடுவார். அரங்கில் சங்கீதம் மட்டுமே

கேட்க வேண்டும் என்பது அவர் விருப்பம். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவரது இசையைக் கேட்க கூட்டம் அலைமோதும். காரணம் அவரிடமிருந்த இசைக்கலை.

வீணை தனம்மாள் பிறந்தது 1868_ல். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரது பெயரை மிகுந்த மரியாதையுடன்தான் கர்நாடக சங்கீத மேதைகள் உச்சரிப்பார்கள்.

இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த தனம்மாளுக்கு சிறு வயதிலேயே இசைமீது ஆர்வம் வந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது குடும்பம். இவரது பாட்டி காமாட்சி அந்தக் காலத்தில் சிறந்த வாய்ப்பாட்டு வித்தகி. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷ்யாமா சாஸ்திரிகளின் சிஷ்யை. இவரது பெண் வழிப் பேத்திதான் தனம்மாள். இவரது தாயார் சுந்தரம்மாளும் நல்ல இசைக்கலைஞர்.

இசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டதால் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. என்றாலும் அன்றைய காலத்தில் பெண்கள் இசைத்துறைக்கு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். வீட்டைவிட்டே பெண்கள் வெளியே வரக்கூடாது என்றிருந்த சமயத்தில், வீணை தனம்மாளுக்கு வீணை மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் வீட்டில் தாயாரும், பாட்டியும் வாய்ப்பாட்டுதான் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் மிகச்சிறு வயதிலேயே அருமையாகப் பாடுவார் தனம்மாள்.

இந்த வாய்ப்பாட்டே அவருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுத்தந்தது.

வீணை தனம்மாளின் தாயார், மாணிக்க முதலியார் என்ற பெரிய செல்வந்தர் வீட்டில் பூஜைப் பாத்திரங்களை கழுவிக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். தாயுடன் தனம்மாளும் அவரது வீட்டுக்குச் செல்வ துண்டு. ஒருமுறை அங்கே தனம்மாள் பாட, மாணிக்க முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. தனம்மாளின் தாயாருக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு தனம்மாள் வீணை பயில ஆரம்பித்தார்.

வீணை தனம்மாளின் முதல் கச்சேரி ஏழு வயதில் நடந்தது என்றால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. சகோதரி ரூபாவதியுடன் தனம்மாள் வாய்ப்பாட்டு பாட, வயலின் இசைத்தது தம்பி நாராயணசாமி. இந்த சிறுசுகளின் கச்சேரி மெல்ல பிரபலமடையத் துவங்கியது. தனம்மாளின் திறமை வெளிஉலகுக்கு தெரிய ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில் மயிலை சவுரியம்மாள்தான் வீணை வாசிப்பில் மிகப் பிரபலம். அவரைப் போல வரவேண்டும் என்பதுதான் தனம்மாளின் லட்சியம். அதற்காக வீணைக் கலையை ஒரு தவம் போலவே கற்றார். சவுரியம்மாளின் சீடரான பாலகிருஷ்ணனிடம் வீணை வாசிப்பின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.

சங்கீதம் பாடுவதில் இளம் வயதிலேயே நிறைய புதுமைகள் செய்யத் துவங்கினார் வீணை தனம்மாள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா என்று அனைத்து பாடல்களையும் மேடையில் சீராகப் பாடி சங்கீத ரசிகர்களின் மனம் கவர்ந்தார். எட்டயபுரம் குமார எட்டேந்திரரின் சாகித்யங்களைப் பாடியதில் அவருடைய புகழ் மேலும் பரவியது.

வீணை தனம்மாளின் மிகப் பெரிய புதுமை அவரே பாடி, வீணை வாசித்தது. பொதுவாக கர்நாடக சங்கீத மேடைகளில் பாடுபவர் ஒருவராகவும் வீணை வாசிப்பவர் வேறொருவராகவும்தான் இருப்பார்கள். ஆனால் தனம்மாள் இந்த இரண்டு கலைகளிலும் வித்தியாசமாக இருந்ததால் பாடிக்கொண்டே வீணை வாசிப்பார். இரண்டிலுமே அவரது இசை மேதாவிலாசம் வெளிப்படும். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் பயணித்து இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவரது கச்சேரிகள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் நிறைய இருக்கும். யாரும் பேசக்கூடாது, ‘இந்தப் பாடல் வேண்டும்’ என்று துண்டுச்சீட்டு கொடுப்பது, கை தட்டுவது, ‘பேஷ்’ என்று சொல்வது போன்ற பல சங்கதிகளுக்கு அங்கே தடை. இசை ஒன்றே அங்கே ஆட்சி செய்யவேண்டும்.

1916_ல் பரோடாவில் நடந்த இந்திய இசை மாநாட்டில் கச்சேரி செய்ததும்; 1935_ம் ஆண்டு காங்கிரஸ் இல்லத்தில் பத்தாயிரம் பேர் சபையில் கச்சேரி செய்ததும் இவரது வாழ்க்கையில் திருப்புமுனைகள். கொலம்பியா நிறுவனம்தான் அன்றைய இசைக்கலைஞர்களின் இசைத் தட்டுகளை வெளியிட்டு வந்தது. ஆனால் ஒரு சமூகத்து இசைக்கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வீணை தனம்மாளின் எழுச்சியைக் கண்டு, தவிர்க்க இயலாமல் அவரது இசைத்தட்டுகளையும் வெளியிடத் துவங்கியது.

தனக்குப் பிறகு தனது இசை நின்றுவிடக் கூடாது என்பதற்காக தனது வாரிசுகளுக்கும் இசை அறிவை போதித்தார் தனம்மாள். ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம் என்ற அவரது மூத்த மகள்கள் சிறந்த பாடகிகளாக உருவானார்கள். ஜெயம்மாள், காமாட்சி என்ற அடுத்த இரண்டு பெண்களையும் ‘இரண்டாவது தனம்மாக்கள்’ என்று இசையுலகத்தினர் அழைத்தார்கள். இவர்களில் ஜெயம்மாளின் மகள் பாலசரஸ்வதி பிற்காலத்தில் மிகப் பெரிய நாட்டிய மேதையாக உருவானார். தனம்மாளின் இரண்டு மகன்களில் ரங்கநாதன் மிருதங்கத்திலும், விஸ்வநாதன் புல்லாங்குழலிலும் கெட்டிக்காரர்கள்.

வீணையிலும் வாய்ப்பாட்டிலும் இசை ரசிகர்களுக்கு சந்தோஷப் பரவசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தனம்மாளின் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக அமையவில்லை. பெரிய குடும்பம். சம்பாதிக்கும் பணம் முழுவதும் குடும்பச் செலவுக்கே சரியாக இருந்தது. தனம்மாளுக்கு நிரந்தர பணக்கஷ்டம்தான். உடல் தளர்ந்து போன காலத்தில் உறவினர்கள் எல்லோரும் தனம்மாளைக் கைவிட்டார்கள். அப்போதும் கக்சேரிகள் செய்தார். இசை ஆர்வத்தால் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை அந்தக் கஷ்டமான சூழலிலும் கற்றார். பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போக, தனம்மாளின் வீடு ஏலத்தில் போனது. தனது இறுதிக் காலத்தை பேத்தி பாலசரஸ்வதியுடன் கழித்தார்.

1938_ம் வருடம் தனது அறு பதாவது வயதில் தனம்மாள் காலமானார். கர்நாடக இசையுலகம் தனது பேரரசிகளில் ஒருவரை இழந்தது.

ஆனால் அவரது இசை அவரை மறக்கமுடியாத மங்கையாக்கியிருக்கிறது..

நன்றி: டாக்டர் பக்கிரிசாமிபாரதி.

அரசு இசைக்கல்லூரி. சென்னை_28.

பைம்பொழில்மீரானின் ‘தலை சிறந்த தமிழச்சிகள்’ ‘தோழமை’ வெளியீடு. சென்னை_78.


தமிழ் கூறும் நல்லு லகம் அதிகம் அறி யாத பெயர். ஆனால், அறிய வேண்டிய பெயர். வீரம்மாள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ்க்கையை வீரத்துடன் எதிர்கொண்டவர்.

பள்ளியில் படிக் கும்போது விடு முறைக் காலங்களில் கூலி வேலை செய்த, குப்பை சுமந்த, களை எடுத்த, சித்தாள் வேலை செய்த ஒரு பெண், தன் வாழ்க்கையில் செய்த அற்புதமான காரியங்களைத் திரும்பிப் பார்க்கையில் பிரமிப்பாய் இருக்கிறது.

திருச்சி வானொலியில் மிகப் பிரபலமான நிலையக் கலைஞர், ஆதரவற்ற பெண்களுக்காக திருச்சியில் ‘அன்னை ஆசிரமத்தைத் துவக்கி யவர், பெண்கள் தங்கிப் படிக்க ‘நாகம்மை இல்லத்தை நிறுவியவர்… இப்படி அவரது பிற்கால வாழ்க்கையில் சாதித்தவை பல.

சரி, யார் இந்த வீரம்மாள்?

திருச்சி மாவட்டம். திருப்பராய்த்துறையில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட சமுதாயத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தவர் தான் அந்த வீரம்மாள். வேம்பு _ பெரியக்காள் என்ற தம்பதியரின் ஏழாவது குழந்தை. 1924_ம் ஆண்டு மே மாதம்

16_ம் நாள் பிறந்தவர். அப்பா வேம்பு சாதாரண விவசாயத் தொழிலாளி.

வீரம்மாளுக்கு வீட்டில் வைத்த பெயர் வீராயி. குழந்தைக்கு ஏழு வயதாகியும் பள்ளிக்கு அனுப்ப யாரும் முயற்சிக்கவில்லை. அண்ணன்மார்களும் அண்ணிமார் களும் ‘பெண்குழந்தை எதற்குப் படிக்கவேண்டும்’ என்று அலட்சியப்படுத்திவிட்டார்கள். அந்தத்தெரு பையன்கள் எல்லோரும் பக்கத்து ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளிக்குச் செல்வதைக் கண்டு அவர்களோடு வீரம்மாளும் வீட்டார் யாருக்கும் தெரியாமல் போய்விட்டார். 52 பிள்ளைகள் படித்த அந்த ஆரம்பப் பள்ளியில் வீரம்மாள் மட்டுமே பெண் குழந்தை. அதற்காக வீரம்மாள் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை.

வீரம்மாளின் கல்வி ஆர்வம் வெளியில் தெரிந்ததும் பெற்றோரும் தடை சொல்லவில்லை. அந்தக் காலத்தில் படிப்பில் ஆர்வமும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் மட்டும் கல்வி கிடைத்துவிடாது. அதற்கு வேறு சில தடைகளும் அந்தச் சமயத்தில் உண்டு. இந்தத் தடையைப் பாருங்கள்.

ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்காக நடுநிலைப் பள்ளியில் சேர்க்க வீராயியை அவரது தந்தை அழைத்துச் சென்றார். ‘‘இது பிரா மணக் குழந்தைகளும், சாதி இந்துக் குழந்தைகளும் படிக்கும் பள்ளி. இங்கு ஹரிஜனக் குழந்தையான வீராயியைச் சேர்த்தால், தனியாகத்தான் உட்கார வைக்க முடியும். குழந்தைகள் அவளை கல்லால் அடித்து விரட்டினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.’’ என்று கிராம முன்சீப்பும், தலைமை ஆசிரியரும் சொல்லிவிட்டார்கள். அதனால் அருகில் உள்ள ஜீயபுரத்தில் சேர்ந்து. தினமும் 8 கி.மீ. நடந்தே போய் படிக்க வேண்டியதாகிவிட்டது.

பள்ளியில் இப்படியரு பிரச்சினை என்றால் வீட்டில் ஒரு சிக்கல். வீட்டு வேலைகளைச் செய்தால்தான் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள், அதையும் செய்ய வேண்டிய கட்டாயம் அந்தப் பிஞ்சுக் குழந்தை வீராயிக்கு நேர்ந்தது.

ஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் மகாவீரர், புத்தர் ஆகியோர் பற்றிய பாடம் ஆசிரியரால் நடத்தப் பெற்றது. அதில் வரும் 1.பொய் சொல்லக் கூடாது. 2. திருடக் கூடாது. 3. உயிர் வதை செய்யக்கூடாது 4. மது அருந்தக் கூடாது. 5. ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது என்ற புத்தரின் பஞ்சசீலத்தை வீரம்மாள் பள்ளிப் பருவத்திலேயே கற்று மனதில் பதித்துக் கொண்டார். அவர் இறக்கும்வரை அதைக் கடைப்பிடித்தும் வந்தார். புலால் உண்ணக்கூடாது என்று அன்றே முடிவு செய்து கடைசிவரை அதில் உறுதியாக இருந்தார். தினசரி பள்ளிக்கு நீண்டதூரம் நடந்து செல்லும்போது பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டே போவார். காலுக்குச் செருப்புகூட கிடையாது. எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை வீரம்மாள் ஊரிலிருந்து பன்னிரண்டு கி.மீ. தூரம் உள்ள குளித்தலைக்கு ரயில்மூலம் சென்று படித்து வந்தார்.

பள்ளியில் படிக்கும்போதே விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையிலும் கூலி வேலைக்குச் செல்வார். மண் சுமப்பது, வயலுக்கு குப்பை சுமப்பது, வாழைக்கு களை வெட்டுவது, சித்தாள் வேலை என்று செய்து காசு சேர்த்துதான் தன் பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடிந்தது.

பள்ளி இறுதி வகுப்பு படித்து முடிந்தவுடன் வீரம்மாளுக்குத் திருமணம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலங்கையைச் சேர்ந்தவரை மணம் முடித்தார்கள். திருமணத் திற்குப் பின்பும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் கணவர் இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் வீரம்மாள் ஆறு மாத கர்ப்பிணி ஆனார். வீட்டில் பல தொல்லைகளுக்கு இடையேயும் தொடர்ந்து படித்தார். ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கி.மீ. நடந்து வந்து படிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் பயிற்சிப் பள்ளி ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கத் துவங்கினார். இந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நாள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அழைப்பு அவருக்கு வந்தது. ‘யுத்தத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசச் சொல்லி யிருந்தார்கள். வானொலி நிலையத்தில் பத்து நிமிடம் பேசிவிட்டு வந்தார். பிறகு இரண்டுமுறை வெவ்வேறு தலைப்புகளில் ‘பெண் உலகம்’ நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

1945 மே மாதம் 10_ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதே நேரம் திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞர் பணியும் கிடைத்தது. வீரம்மாள் அந்த வேலையில் சேர்ந்துகொண்டார். தொடர்ந்து, இரண்டா வதாக ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போதுதான் தன் கணவருக்கு ஏற்கெனவே ஒரு இலங்கைப் பெண்னோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது.

வானொலியில் ஈரோடு, கோவை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சென்னை ஆகிய பகுதி மக்கள் பேசும் பாணியிலே பேசி நாடகங்களில் நடித்தார். வீரம்மாளின் பல குரல் திறமை இங்கு உதவியது. பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த கிராம சமுதாயப் பகுதியான ‘ஆப்பக்கார அங்காயி’ என்ற ஒரு நிகழ்ச்சியில், வீராயி ஆப்பக்கார அங்காயி ஆக இருந்து ஆப்பக்கடைக்கு வரும் பலதரப்பட்ட மக்களுடன் பேசி, வானொலி ரசிகர்களை அசத்தினார்.

வானொலி நிலையக் கலைஞர் வேலைக்கு இடையிலும் தாழ்த் தப்பட்ட _ தீண்டப்படாத மக்கள் முன் னேற்றத்திற்காக கிராமம் கிராமமாய் சென்று சமூக சேவை புரிந்தார்.

அந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தமிழகத்தில் வேகமாய் பரவிக் கொண்டிருந்தது. வீரம்மாள் தந்தை பெரியாரின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பெரியார் திருச்சிக்கு வரும் போதெல்லாம் அவர் தங்கி இருக்கும் வக்கீல் வீட்டிற்கு வீரம்மாளை வரும்படி சொல்லி அனுப்புவார். அவரும் தவறாமல் போய் சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவார்.

பேச்சோடு மட்டும் தனது சமுதாயப் பணிகள் நின்றுவிடக் கூடாது என்று நினைத்த வீரம்மாள், கிராமப்புற ஏழை எளிய மாணவிகளுக்கு உதவ நினைத்தார்.

அப்போது கிராம ஆரம்பப் பள்ளிகளில் எங்கோ ஒன்றிரண்டு ஆதிதிராவிட பெண் குழந்தைகள்தான் படித்து வந்தார்கள். அவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு கிடையாது. காரணம், அந்தக் காலத்தில் ஏராளமான கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது.

அதனால் திருச்சியில் தாழ்த்தப் பட்ட பெண்கள் தங்கியிருந்து உயர் நிலைப்பள்ளியில் படிக்க ஏதுவாக ஒரு விடுதி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக பல இடங்களில் ஆதரவு திரட்டினார். இப்படி உருவானதுதான் ‘நாகம்மையார் மாணவியர் விடுதி’. அத்துடன் அவரது சேவை நிற்க வில்லை.

திருச்சியில் ‘அன்னை ஆசிரம’த்தை நிறுவி ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள் என்று பலருக்கும் அடைக்கலம் கொடுத்த வேடந்தாங்கல் அவர். திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ‘அன்னை’ என்றால், அது வீரம்மாள் தான் என்று போற்றும் அளவிற்கு சேவை புரிந்தவர். அதனால் தென்னகத்து அன்னை தெரஸா என்றே அழைக்கப்பட்டார்.

பலதரப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து இன்று தமிழ் உலகம் பேசும் சரித்திரமாக மாறியிருப்பதுதான், அவர் உருவாக்கிய ‘தமிழ்நாடு பெண்கள் நலச்சங்கம்’. சின்னஞ்சிறிய திண்ணை ஒன்றில் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்த்துக்களுடன் பெருந்தலைவர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் தற்போதைய வயது அறுபதுக்கு மேல்.

கணவனை விட்டுப் பிரிந்த பின்னர் வெள்ளை ஆடை அணிய ஆரம்பித்தவர் கடைசிவரை, வெள்ளை ஆடையுடனேயே வாழ்ந்தார். சேவை மனப்பான்மைக்கு அந்த வெள்ளை உடை ஒரு குறியீடாக அமைந்தது.

2006_ல் வீரம்மாள் மறைந்தார். அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள பல நலப் பணிகள் இன்றைக்கும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சோகங்களும், சோதனைகளும், துன்பங்களும், போராட்டங்களும் நிறைந்தது வீரம்மாளின் வாழ்க்கை. இத்தகைய சோகங்களின் சோதனை களிலும் துவண்டு விடாது, மற்றவர்களின் வாழ்க்கையிலாவது அத்தகைய சோகங்கள், துயரங்கள் வராமல் பாடுபட்ட வீரம்மாள் உண்மையிலேயே வீர _ அம்மாதான்..


செல்வச் செழிப்பில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் எளிமைவாதிகளாகவும் இருப்பது மிக அரிது. இந்த அரிதான குணங்களுடன் கல்வி சேவையும் ஆன்மிக சேவையும் கலந்தால்… அப்படியரு ஆச்சரியமான, அபூர்வமான குணங்களுடன் வாழ்ந்தவர்தான் சிகப்பி ஆச்சி. செட்டிநாட்டு அரசர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமியின் மனைவி.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு என்பதை நாம் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். ஆனால் கண்கூடாகப் பார்ப்பது டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமியின் வாழ்க்கையில்தான். அவரது ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்பும் சற்று உற்று நோக்கினால் சிகப்பி ஆச்சியின் கைவண்ணம் இருக்கும்.

கைவண்ணம் என்று சொல்லும்போது இங்கே ஒரு சோகமான, அதேநேரம் தன்னம்பிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.

சிகப்பி ஆச்சிக்கு இடதுகை பாதி செயலிழந்து விரல்கள் மூடியேதான் இருக்கும். அதேபோல் இடது கால் பலவீனமடைந்து சற்று விந்திவிந்திதான் நடப்பார். ஆனால் சாதாரணமாய் பார்ப்பவர்களுக்கு இது தெரியாது. இந்த சோகம் அவருக்கு பக்கவாத நோயால் ஏற்பட்டது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்தக் குறைகளுடன்தான் அத்தனை காரியங்களையும் செய்திருக்கிறார் என்றால், அவர் மறக்க முடியாத மங்கைதானே?

சிகப்பி ஆச்சி பிறந்தது 1938_ம் வருடம். செட்டிநாட்டு பள்ளத்தூரில் இவரது குடும்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராணி மெய்யம்மையின் உடன்பிறந்த தம்பி உ.அ.உ.க.ராம.அருணாசலம்தான் சிகப்பி ஆச்சியின் தந்தை. மிக செல்வச் செழிப்பான குடும்பம். செல்வம் குவிந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தினர் அதிகம் தேடியது கல்விச் செல்வத்தை. பெண்களை பள்ளிக்கு அனுப்பத் தயங்கிய காலகட்டம் அது. ஆனால், நகரத்தார்கள் பொருட்செல்வத்தைத் தேடியது மட்டுமில்லாமல் எப்போதும் கல்விச் செல்வத்தையும் சேர்த்தே தேடினார்கள். சிகப்பி சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளிக் கல்வியை முடித்து, பிறகு ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இங்கே இன்னொரு முக்கிய விஷயம், பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பில் சிகப்பி ஆச்சிதான் முதலிடம்.

சிகப்பி ஆச்சியின் முறைமாப்பிள்ளைதான் எம்.ஏ.எம்.ராமசாமி. சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாய் விளையாடி வளர்ந்தவர்கள். இவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது எம்.ஏ.எம்.முக்கு இருபத்தொரு வயது. சிகப்பி ஆச்சிக்குப் பதினாறு. கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். செட்டிநாட்டு அரசரின் குடும்பத்தில் மருமகளாய் அடியெடுத்து வைத்த பிறகும் தனது படிப்பைத் தொடர்ந்தார். இதற்கு அவரது கணவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள்.

ராஜா வீட்டின் மருமகள் என்பது சாதாரண விஷயமல்ல. நிறைய குடும்பப் பொறுப்புகள் உண்டு. செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கு இரண்டு மகன்கள். குமாரராஜா முத்தையா மூத்தவர். இவரது மனைவி குமார ராணி மீனா முத்தையா. எம்.ஏ.எம். ராமசாமி இளையவர். இவரது மனைவிதான் சிகப்பி ஆச்சி.

ஒரே வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தாலும் இருவருக்குள்ளும் எந்த சச்சரவோ சண்டையோ வந்தது கிடையாது. இருவரும் மிக ஒற்றுமையாக குடும்பக் காரியங்களைக் கவனித்தார்கள். அவர்களின் ஒற்றுமை செட்டிநாடு முழுவதும் பிரசித்தி பெற்றது.

குடும்பப் பொறுப்புகள் இருந்தாலும் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. பொதுவாய் ‘தாயைப்போல பிள்ளை’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இங்கு மாமியாரைப் போல் மருமகள். மாமியார் ராணி மெய்யம்மைக்கு கல்வி சேவையில் ஆர்வம் அதிகம். ஏழை மக்களுக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்பது அவர்களது தீராத ஆசை. அந்த சேவை மனப்பான்மை சிகப்பி ஆச்சிக்கும் வந்தது.

சென்னை அடையாறிலுள்ள ராணி மெய்யம்மை பள்ளி இவரது முயற்சியில் உருவானதுதான்.

1973_ம் வருடம் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியின் செயலாளராக தனது இறுதி மூச்சு வரை இருந்தார் சிகப்பி ஆச்சி. இந்தப் பள்ளியைத் தொடர்ந்து ஏழு பள்ளிகளையும் சென்னையில் துவக்கினார். இந்தப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளைத் துவக்கியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று அன்றாடப் பணிகளைக் கவனிப்பார். பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தையும் நிர்வகித்துக்கொண்டு பள்ளிகளைக் கவனித்துக் கொள்வது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. ஆனால் சிகப்பி ஆச்சிக்கு அது எளிதாய் வந்தது. காரணம் அவர் நேரத்தை மிகவும் திட்டமிட்டு பயன் படுத்துவதில் கெட்டிக்காரர்.

அதிகாலை ஐந்து மணிக்கு அவரது தினசரி வாழ்க்கை துவங்கும். இரவு படுக்கச் செல்லும் நேரம் பதினொன்று. ஆறு மணி நேரம்தான் தூக்கம். பல செல்வந்தர் பெண்களைப் போல் மதியம் உறங்குவது, தோழிகளுடன் அரட்டையடிப்பது போன்ற பழக்கங்கள் சிகப்பி ஆச்சிக்குக் கிடையாது. உழைப்பு, எளிமை இவைதான் அவர் அதிகம் நம்பிய இரண்டு விஷயங்கள்.

நேரத்தை உபயோகமாய் செலவழிப்பது போன்று இன்னொரு நல்ல பழக்கமும் சிகப்பி ஆச்சியிடம் இருந்தது. அது, டைரிக் குறிப்புகள் எழுதுவது. உறவினர்கள், நண்பர்கள், முக்கியமானவர்கள் பற்றிய அத்தனை விவரங்களையும் அதில் எழுதி வைத்திருப்பாராம். கிட்டத்தட்ட முப்பது டைரிகளில் இந்தக் குறிப்புகள் இருந்தனவாம். இந்த டைரிகள் மூலம் எந்த உறவினர், நண்பர் பற்றிய விவரங்களையும் சட்டென்று தெரிந்துகொள்ள இயலும்.

பள்ளிகளைத் துவக்கிய சிகப்பி ஆச்சி சமூகத்துக்குப் பயன்தரும் இன்னொரு காரியத்தையும் செய்தார். சென்னைக்குப் படிக்க வரும் பெண்கள் தங்க ஒரு பெண்கள் விடுதியையும் எத்திராஜ் சாலையில் முப்பது வருஷத்திற்கு முன்பு துவக்கினார். ராணி மெய்யம்மை ஹாஸ்டல் என்றழைக்கப்படும் அந்தப் பெண்கள் விடுதி, இன்றும் சென்னையில் மிகப் பிரபலமானது.

கல்விப் பணி ஒருபுறமிருக்க, ஆன்மிகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. கணவர் எம்.ஏ.எம். ராமசாமி ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வருவார். அதனால் சென்னையில் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டவேண்டும் என்று தீர்மானித்தார் சிகப்பி ஆச்சி. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவுதான், ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஐயப்பன் கோயில். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலைபுரத்திலும் ஐயப்பன் கோயிலைக் கட்டினார்.

கல்விப் பணி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிகப்பி ஆச்சி. அவரும் குமாரராணி மீனாவும் இணைந்து சென்னைக்கு அருகே உள்ள நாவலூர் கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்துக்கு வேண்டிய சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

சென்ற மாதம் கேளம் பாக்கத்தில் நூறு ஏக்கர் பரப் பளவில் ‘செட்டிநாடு ஹெல்த் சிட்டி’ என்ற ஒரு மருத்துவ நகரத்தின் திறப்புவிழா நடந்தது.

மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் பயிற்சிக் கல்லூரி, மருத்துவமனை, மருந்தியல் கல்லூரி என முழுக்க முழுக்க மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவ நகரம் அது. இந்த நகரம் வருவதற்கு மிக முக்கியக் காரணமாயிருந்தவர் சிகப்பி ஆச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் திட்டம் துவக்கப்படும்போது உயிரோடு இருந்தவர், அது முடிக்கப்படும்போது நம்முடன் இல்லை. சென்ற வருடம் சிகப்பி ஆச்சி காலமாகிவிட்டார்.

அவர் காலமாகிவிட்டாலும் அவர் உருவாக்கியவை காலம் காலமாக அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.றீ

மாமியார் மெச்சியவர்!

மாமியார் ராணி மெய்யம்மையார் வெளிநாட்டிற்குச் செல்லும் போதெல்லாம் கூடவே தனது சின்ன மருமகள் சிகப்பி ஆச்சியை அழைத்துச் செல்வது வழக்கம். மாமியாருக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார். ஆங்கில இலக்கியம் படித்ததால் மாமியாருக்கு அழகாக மொழி பெயர்த்துச் சொல்வது அவருக்கு எளிதாக இருந்தது. தங்கள் பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்கள் பணியில் ஓய்வு பெறும் நாளில் ஆச்சியே வீட்டிலிருந்து குறைந்தது பத்து வகையான பலகாரங்களைச் செய்துகொண்டு வந்து அனைவருக்கும் விருந்து படைப்பது இவருடைய வழக்கமாக இருந்தது. பெண்களுக்கென்று உருவான பள்ளிகளுக்கு தன் மாமியார் பெயரையும், ஆண்களுக்கென்று உருவாக்கிய பள்ளிகளில் தன் மாமனார் பெயரையும் சூட்டுவது இவரது வழக்கம்.

‘‘அய்த்தான் எனக்கு ஒண்ணுமில்ல!’’

சிகப்பி ஆச்சியைப் பற்றி அவரது கணவர் செட்டிநாட்டரசர் டாக்டர். எம்.ஏ.எம்.ராமசாமியிடம் கேட்டோம். ‘‘நாங்கள் கணவன் மனைவியாக 42 வருடங்கள் வாழ்ந்தோம். அதற்கு முன்னால் சிறுவயதிலிருந்தே எனக்கு நல்ல பழக்கம். ஒருமுறை நாங்கள் திருப்பதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமாய் அதிகாலைப் பயணங்களின்போது கார் டிரைவர் குளித்துவிட்டுத்தான் வண்டி எடுப்பார். ஆனால் அன்று அவர் தூக்கக் கலக்கத்துடனே வண்டி ஓட்டியிருக்கிறார். திருப்பதி மலையில் ஏறும்போது ஒரு திருப்பத்தில் கார் தலைகீழா கவிழ்ந்து மலையில் உருளத் துவங்கியது. இரண்டாயிரம் அடி பள்ளம். எங்கள் புண்ணியம் கார் மரத்தில் சிக்கி அப்படியே தொங்கியது. எல்லோருக்கும் நல்ல காயம். சிகப்பிக்கு படுகாயம். மேலெல்லாம் ரத்தம். மெல்ல அவரை மேலே தூக்கினோம். என்மேல் உள்ள ரத்தத்தைப் பார்த்துவிட்டு என் ரத்தத்தைக் கழுவப் பார்த்தாங்க. நான் தடுத்து, ‘உனக்குத்தான் ரொம்ப காயம்’ என்றேன். அதற்கு சிகப்பி, ‘அய்த்தான் எனக்கு காயமில்லை. உங்களுக்கு இப்படியாகிவிட்டதே’ என்று சொல்லிக்கொண்டே மயங்கி விழுந்துவிட்டாங்க. ஒரு வாரம் சுயநினைவு இல்லாம இருந்தாங்க. என்னுடைய உலகமாய் இருந்தாங்க. இப்போது நான் தனி உலகமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லும்போது வார்த்தைகள் தடுமாறுகிறது. அது தடுமாற்றம் அல்ல மனைவி மேல் அவர் வைத்துள்ள பாசம்.


பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களில் இரண்டு வகையினர் உண்டு. எல்லா வசதிகளும் இருந்து பொதுத் தொண்டில் ஈடுபடுவது ஒரு ரகம். எந்த வசதியும் இல்லாமலேயே பொதுப்பணிகளில் தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்திக்கொள்வது மற்றொரு ரகம்.

இதில் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் தருமாம்பாள்.

பணம், பதவி எதுவுமே இல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய வீரத்தமிழன்னைஅவர். தனது இறுதிக் காலம் வரை பொதுத் தொண்டிற்காக கடுமையாக உழைத்தவர். மனிதாபிமானத்தை மூலதனமாக வைத்து, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத புனிதமான தொண்டுள்ளம் அவருடையது. அதனால்தான் மறக்கமுடியாத மங்கையாக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்திருக்கிறார் டாக்டர் தருமாம்பாள்.

தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடிதான் இவரது சொந்த ஊர். அப்பா சாமிநாதன். அம்மா நாச்சியார். வேளாண் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த இவரது தந்தை சாமிநாதன் மிகப் பெரிய அளவில் துணி வியாபாரம் செய்தவர். கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை நண்பர். இவரது தாத்தா திவான் பேஷ்கராக இருந்தவர்.

இவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் சரஸ்வதி. இவரது பூர்வீகம் கருந்தட்டாங்குடியாக இருந்தாலும், இவர் பிறந்தது திருவையாறு. ஆண்டு 1890. இவ்வூர் இறைவன் பெயர் அய்யாறப்பன். இறைவி அறம் வளர்த்தாள். இறைவியை தர்மசம்வர்த்தினி என்று பேச்சு வழக்கில் அழைப்பதுண்டு. அதைத்தான் பின்னர் தருமாம்பாள் என்று சுருக்கி அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தப் பெயரே இவருக்கும் நிலைத்துவிட்டது. தருமாம்பாள் இளம்வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிட்டதால், ‘லக்குமி’ என்ற பெண்தான் இவரை வளர்த்தார். பெற்றோரை இழந்ததால் அவர் பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டது. இருந்தாலும், தருமாம்பாள் சும்மா இருந்துவிடவில்லை. தானாகவே கல்வி கற்கத் தொடங்கினார். தமிழ் மீது இருந்த அளவுகடந்த பற்றின் காரணமாக வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியம், திருநாவுக்கரசு முதலியார், பண்டித நாராயணி அம்மையார் ஆகியோரிடம் சென்று தமிழ் கற்றார். இன்னும் சில பண்டிதர்களைத் தேடிப்போய் தெலுங்கில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பேசும் திறனை வளர்த்துக்கொண்டார்.

நாடகத் தமிழ் மீது இவருக்கு இருந்த பற்றினால், அந்நாளில் நாடக நடிகராக இருந்த குடியேற்றம் முனுசாமி நாயுடுவைக் காதலித்து மணந்துகொண்டார். முனுசாமி நாயுடு ராஜபார்ட் வேஷம் போடுவதில் வல்லவர். கணவரோடு ஆரம்பத்தில் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தாலும் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்.

மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறவியிலேயே அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது. அதற்குப் பயன்படும் விதத்தில் அவர் சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தார்.

1930_களின் தொடக்கத்தில் சென்னையில் மருத்துவர்கள் மிகமிகக் குறைவு. வேப்பேரி கங்காதர தேவர், தியாகராய நகர் எஸ்.எஸ்.ஆனந்தன், சைதாப் பேட்டை தணிகாசல வைத்தியர், தங்கசாலை சி.த.ஆறுமுகம்பிள்ளை போன்ற ஒரு சில சித்த வைத்தியர்களே புகழ்பெற்ற மருத்துவர்களாக அறியப்பட்டனர். அந்த வரிசையில் பெத்துநாய்க்கன் பேட்டையில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தவர்தான் டாக்டர் தருமாம்பாள். மருத்துவ சேவைதான் இவருக்கு மக்கள் தொடர்பை அதிகளவு ஏற்படுத்திக் கொடுத்தது.

தருமாம்பாள் மருத்துவத்தோடு நிற்காமல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்கள் உயர்வு, விதவை மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என்று பல தரப்பட்ட பொதுத்தொண்டில் ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்கினார். நோய்க்காக மட்டும் தேடி வராமல் பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவும் இவரைத் தேடி பலர் வரத் தொடங்கினர். நேரடியாக அவரே தலையிட்டு பல பிரச்னைகளைத் தீர்த்து வைக்கத் தொடங்கினார். இதனால் அவரது புகழ் பரவத் தொடங்கியது.

தந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்ட தருமாம்பாள் அவரைப் போலவே விதவைத் திருமணம், கலப்பு மணம் ஆகியவற்றைத் துணிச்சலாக நடத்தி வைத்தார். வேலை கேட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களுக்கு விதவைகளைத் திருமணம் செய்து வைத்தார். எந்த ஒரு பிரச்னை என்றாலும் தருமாம்பாளிடம் சென்றால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனை பெற்றார். இதில் பெண்கள் பலரும் கலந்துகொள்ள முன் உதாரணமாக இருந்ததே தருமாம்பாள்தான். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து மக்கள் முன்னேற்றப் பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

தருமாம்பாளுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் எவ்வளவோ வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொருளாசை அற்றவராக இருந்தார். தமது வீட்டை மகளிர் சரணாலயமாகவே மாற்றியிருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களை மீண்டும் அவரவர் கணவர்களோடு சேர்ந்து வாழ வைத்திருக்கிறார். ஏராளமான பெண்களுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்தார். படிக்க வசதியற்ற பெண்கள் கல்வி பயில செல்வந்தர்களை உதவ வைத்திருக்கிறார். ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். இப்படி அவரது தொண்டுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

புகழின் உச்சியில் இருந்தவர்கள்கூட தருமாம்பாளின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் அளவிற்கு அவரது பண்பு வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி காதில் விழுந்த தவறான செய்திகளைக் கேள்விப்பட்டு, அவரை அழைத்து புகழுக்கும் உடலுக்கும் கேடு வராமல் நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூற, அவரும் அதன்படி மாறி நடந்தது பலரை வியப்பால் ஆழ்த்தியது.

1944_ல் ‘இந்து நேசன்’ பத்திரிகையை நடத்தி வந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்தமான் தீவில் தண்டனையைக் கழிக்க வேண்டும் என தீர்ப்பானது. கலைவாணரின் மனைவி டி.ஏ.மதுரம் செய்வதறியாது தருமாம்பாளை அணுகினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இது சாதாரண காரியமல்ல என்றாலும், டாக்டர் தருமாம்பாள் சென்னையில் உள்ள பலரை அணுகி பொருள் திரட்டி, அந்த வழக்கினை நடத்தி வெற்றியும் பெற்றார். அப்போது கலை உலகமே தருமாம்பாளை எழுந்து நின்று வணங்கியது.

தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ் அறிஞர்களுக்காகவும் தருமாம்பாள் பல வழிகளில் உதவியுள்ளார். கருந்தட்டான் குடியில் இருந்த தனது வீட்டை கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 1940_க்கு முன்பு வரை தமிழ் ஆசிரியர்களுக்கு சமூகத்திலும் அரசியலிலும் ஒரு பெரிய மரியாதையே இல்லாமல்தான் இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் இரண்டாந்தரமாக ஒதுக்கப்பட்ட நிலை. ஊதியத்திலும் அவர்களுக்கு அந்த நிலை இருந்ததை எதிர்த்து பெரிய போராட்டமே நடத்தினார். பல கூட்டங்களில் பேசினார்.

‘‘தமிழாசிரியர் களுக்கு சம்பளம் கூட்டவில்லை என்றால், பெண்களை எல்லாம் ஒன்று கூட்டி, ‘இழவு வாரம்’ கொண்டாடுவோம்’’ என்று அரசுக்கே எச்சரிக்கை விடுத்தார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் தருமாம்பாளின் கோரிக்கையையும் போராட்டத்தின் நியாயத்தையும் உணர்ந்து ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இது தருமாம்பாள் மூலம் தமிழுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

தருமாம்பாள் திராவிட இயக்கங்களில் பங்கு கொண்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். என்றாலும், பொதுத்தொண்டு என்று வரும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நின்றே தொண்டு செய்ய விரும்பினார். பொதுப் பிரச்னைகளுக்காக மற்ற அரசியல் இயக்கங்களுடன் அனுசரணையாகவே சென்றார்.

இரண்டாம் தமிழிசை மாநாட்டிற்கு தருமாம்பாள் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்து பணி ஆற்றினார். இன்று தமிழிசைப் பாடல்கள் மேடையில் முழங்குகிறது என்றால், அதில் அம்மையாரின் பங்கும் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் தனக்காக வாழாமல், தனது உழைப்பு, சிந்தனை அனைத்தையும் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இசை, தமிழ் மக்கள் இவற்றுக்காகவே அர்ப்பணித்த தருமாம்பாளுக்கு 1951_ல் திரு.வி.க. தலைமையில் நடந்த மணி விழாவில் தமிழறிஞர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார் ‘வீரத்தமிழன்னை’ என்ற பட்டத்தை வழங்கினார்.

வீரத் தமிழன்னை பட்டம் பெற்ற தருமாம்பாள்தான் ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தையும், எம்.எம். தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ பட்டத்தையும் வழங்கினார்.

மக்கள் தொண்டு ஒன்றை மட்டுமே தன் இறுதி மூச்சுவரை கொண்டு போராடி வெற்றி கண்ட இந்த வீரமங்கையின் மூச்சு 1959_ம் ஆண்டு தனது 69ஆவது வயதில் நின்று போனது.

பெரும் பதவிகளை விரும்பாமல், பண வசதி ஏதுமின்றி அம்மையார் செய்த பல மக்கள் பணிகள் பதிவு செய்யப்படாமலேயே போய்விட்டன. அவற்றை வெளி உலகிற்குக் கொண்டு வருவது ஒன்றே அம்மையாருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றிக் கடனாக இருக்கும்..

நன்றி : க. திருநாவுக்கரசு, எழுதிய ‘திராவிடஇயக்க வேர்கள்’
நக்கீரன் பதிப்பகம், சென்னை_23.
பைம்பொழில் மீரானின்
‘‘தலை நிமிர்ந்த தமிழச்சிகள்’’ தோழமை வெளியீடு, சென்னை_78.


பிறந்தோம். படித்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோம். என்று சிலர் வாழ்க்கை இருக்கும்.

ஆனால் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை அப்படியிருப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் சரித்திரங்களாகி விடுகின்றன.

அப்படி ஒரு சரித்திரப் பெண்தான் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்.

எல்லோரும்தான் கல்லூரி சென்று பாடம் படிப்பார்கள். ஆனால், எத்தனைபேர் தான் படித்த பாடத்துக்காகவே ஒரு தனிப்பட்ட கல்லூரியைத் துவக்கியிருக்கிறார்கள்? அது ராஜம்மாள் ஒருவர்தான்.

கல்வி. இதுதான் ராஜம்மாளின் இலட்சியம், ஆர்வம், ஆசை, கனவு எல்லாம்.

ஒரு சின்ன சம்பவம். ராஜம்மாளுக்கு திருமணம் நடக்கிறது. அப்போது அவருக்கு வயது பதினெட்டு. பள்ளி இறுதி வகுப்பு படித்திருந்தார். திருமணமானதும் தன் கணவரிடம் அவர் முதலில் பேசியது தனது மேற்படிப்பு பற்றித்தானாம். தன்னை கல்லூரி சென்று படிக்க அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறார். கணவர் பெருந்தன்மைக்காரர். மனைவியின் மனம் நோகாமலிருக்க கல்லூரி படிப்புக்காக மனைவியை சென்னை அனுப்பினார். இப்போது படிக்கும்போது இந்த விஷயங்கள் சாதாரணமானதாய் தெரியலாம். ஆனால், இந்த சம்பவம் நடந்தது 1937_ல் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

ராஜம்மாளுக்கு படிப்பின் மீது அத்தனை ஆர்வம். நிறையப் படிக்க வேண்டும். நிறைய பட்டங்கள் பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை. அதற்கு அவர் தந்தையும் ஒரு காரணம்.

ராஜம்மாளின் தந்தை பெயர் பாக்கியநாதன் மைக்கேல். வனத்துறை அதிகாரி. பூர்வீகம் நாங்குநேரி அருகிலுள்ள பார்கவி நேரில் கிராமம் என்றாலும், அவர் பணிபுரிந்து கொண்டிருந்தது, திருவண்ணாமலை அருகிலுள்ள செங்கம் பகுதியில். ராஜம்மாள்தான் மூத்த பெண். அவரைத் தொடர்ந்து எட்டு குழந்தைகள். பாக்கியநாதனுக்கு ஒரு விருப்பம். தனது பிள்ளைகள் அனைவரும் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்று. இந்த விருப்பம் சாதாரணமாய் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால் இதைத் தொடர்ந்து வரும் விஷயத்தில் அதிசயம் இருக்கிறது. தனது பிள்ளைகளுக்குப் படிப்பறிவு இல்லாத குடும்பங்களில்தான் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று. விரும்பினார். படிப்பறிவு இல்லா குடும்பங்களிலிருந்து மருமகள், மருமகன் அமையும்போது, அந்தக் குடும்பங்கள் தன் குடும்பத்துடன் இணையும். படிப்பறிவு பெறும். அந்தக் குடும்பத்தினரும் அவர்களது உறவினரும் கல்வியின் அருமையை உணர்வார்கள் என்பது பாக்கியநாதனின் எண்ணம். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சொந்த ஊரில் வேலை பார்த்தால் அங்கே உறவினர்கள் கட்டாயப்படுத்தி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விடு வார்கள். படிக்க விடமாட்டார்கள் என்று அஞ்சியே சொந்த ஊருக்கு வராமல் இருந்தாராம். அந்த அளவு படிப்பின்மேல் பிரியம். இப்போது புரிகிறதா மகள் ராஜம்மாளுக்குக் கல்வி மீது வந்த காதலுக்கான காரணத்தை.

எப்போதுமே நல்லவர்களை விதி அதிகம் சோதிக்கும். அந்தப் பொல்லாத விதி ராஜம்மாளின் வாழ்க்கை யிலும் பொய்க்கவில்லை. திடீரென நோய்வாய்ப்பட்டார் அவரது தந்தை. தான் இறப்பதற்கு முன் தன் மூத்த மகள் ராஜம்மாளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அதனால் பள்ளிப் படிப்பு படித்ததுமே ராஜம்மாளின் திருமணம் நடந்தது. சொந்த தாய்மாமன்தான் மாப்பிள்ளை. திருமணமான சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட, குடும்பம் கஷ்டத்தில் தத்தளிக்கத் துவங்கியது. தாயின் நகைகள்தான் குடும்பத்தைக் காப்பாற்ற உதவியது.

கணவரின் உதவியுடன் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்தார் ராஜம்மாள். வேதியியல் பிரிவில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சியடைந்தார். அதன்பின் மேற்படிப்புக்கு ‘மனையியல்’ பிரிவுக்கு மாறினார். இப்போது ‘ஹோம் சயின்ஸ்’ என்று ஸ்டைலாக அழைக்கப்படும் படிப்புதான் மனையியல். அந்தக் காலத்தில் இதுவும் ஒரு சாதனைதான். எல்லோரும் இயற்பியல், வேதியியல், என்று படித்துக்கொண்டிருக்க, மனையியல் படிக்க முன்வந்தார் ராஜம்மா. இந்தப் படிப்பை அவர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இது புதிய அறிவியல் என்பதால்.

நாட்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த சூழல் அது. மாணவியாக இருந்த ராஜம்மாள் தானே கை ராட்டையில் நூல் நூற்று, அதனால் தயாரிக்கப்பட்ட கதராடையேதான் அணிவார்.

மேற்படிப்பு முடிந்ததும் படித்த கல்லூரியிலேயே பேராசிரியை வேலை கிடைத்தது. இதில் ராஜம்மாளுக்கு மகிழ்ச்சி. இப்போதாவது தனது குடும்பத்தினருக்கு உதவ இயலுமே என்று தனது சம்பளத் தில் பாதியைத் தனது அம்மாவுக்குக் கொடுத்து விடுவார்.

இந்தியா சுதந்திரமடைந்த வருடம். அமெரிக்காவில் மனையியல் குறித்து ஆராய்ச்சி செய்ய ராஜம்மாளுக்கு வாய்ப்பு வந்தது. அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அன்றைய கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கத்தைச் சென்று சந்தித்தார். அமைச்சருக்குச் சந்தோஷம். அப்போதெல்லாம் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு என்பது மிகப் பெரிய விஷயம். அமெரிக்காவில் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் ராஜம்மாளின் ஆராய்ச்சிப் படிப்புத் துவங்கியது. மூன்று ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். மூன்றாண்டுகளில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றது இன்னொரு சாதனை. மனையியல் படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய முதல் இந்தியப் பெண் ராஜம்மாள் தேவதாஸ்தான்.

இன்று நமது பள்ளி மாணவர்களுக்கு மதியம் இலவச சத்துணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல் சுழி போட்டவர் ராஜம்மாள் தேவதாஸ் என்பது இன்னொரு ஆச்சர்யமான செய்தி, ஏழை, எளிய மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு சமச்சீர் சக்தி கொண்ட உணவு கிடைப்பதில்லை, பள்ளியிலேயே மதியம் சத்தான உணவு கிடைத்தால் கல்வியும் வளரும், கற்பவர்களும் வளர்வார்கள் என்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இவரது திறமைகளை அறிந்து அவிநாசிலிங்கம், மனையியல் படிப்புக்காகவே கோவையில் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியைத் துவக்கினார். அதற்கு ராஜம்மாள் தேவதாஸை முதல்வராக்கினார். அந்தக் கல்லூரி வளர்ந்து இன்று பல்கலைக்கழகமாக மாறி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பின்பு வேந்தராகவும் பணியாற்றினார். கல்லூரியில் படித்த காலத்தைப் போலவே எப்போதும் கதராடைதான். எளிமை, வார்த்தைகளில் இனிமை. இதுதான் ராஜம்மாள்.

வாரம் ஒருமுறை மாணவியர்கள் கதர் சேலை அணிய வேண்டும். வாரம் இரண்டு முறை கைத்தறிச் சேலை அணிய வேண்டும் என்று மாணவிகளுக்கு உத்தரவிட்டார். அந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இந்தச் சின்ன உத்தரவினால் பல நெசவாளர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவருடைய பெண் கல்விச் சேவை, மனையியல் துறைச் சேவை இவற்றைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐ.நா.சபையில் சத்துணவு குறித்து பேசியிருக்கிறார். எழுபத்தொன்பதாவது வயதில்கூட டெல்லியில் நடந்த உலக வங்கிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். எங்கோ தமிழகத்தின் தென்கோடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் சாதனைகளைப் பாருங்கள்.

‘அம்மா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், 2002ஆம் வருடம் 83_வது வயதில் காலமானார்.

அவர் இன்று இல்லை. ஆனால் அவரது கல்விச் சேவை இன்றும் அவரது சாதனைகளைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றது..


திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பத்தா வது கி.மீ.இல் உள்வாங்கியிருக்கிறது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம். பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராம மக்களின் கல்லூரிக் கனவுகளை நனவாக்கிய கல்விக்கூடம் அது. அனாதைகள், அபலைகள், ஆதரவற்ற பெண்கள், ஏழைகள் என்று சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்த அத்தனை மக்களுக்கும் இன்றைக்கும் கல்வி கொடுத்து, சுயதொழில் கற்றுக்கொடுத்து ஆதரித்து வரும் அறக்கட்டளை அது.

இன்று பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இந்தியாவின் முதுகெலும்பாய் விளங்கும் பல ஆயிரம் கிராமங்களுக்குக் கல்விக்கண் திறந்துகொண்டு இருக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய சௌந்தரம் ராமச்சந்திரனின் போராட்ட வாழ்க்கை பல தமிழ்ப் பெண்களுக்கு வழிகாட்டி.

நசுக்கப்பட்ட_ ஒடுக்கப்பட்ட_ புறக்கணிக்கப்பட்ட சமூகம் அல்ல அவரது சமூகம். அவருக்காகவோ அவர் பிறந்த சமூகத் திற்காகவோ அவர் போராட வேண்டிய கட்டாயமும் இல்லை. சூழலும் இல்லை. அப்படியரு செல்வச்செழிப்புமிக்க குடும்பம் அவருடையது. ஆனாலும் சௌந்தரம் ராமச்சந்திரன் போராடினார். ஏழைப் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் படும் துயர் கண்டு அவரால் சும்மா இருக்கமுடியவில்லை. தன் கண் முன்னால் பல சமுதாய மக்கள் குறிப்பாகப் பெண்கள் நசுக்கப் படுவதையும் _ ஒடுக்கப்படுவதையும் _ புறக்கணிக்கப்படுவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தன் குடும்பத்தின் ஆச்சாரங்களை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். தன் சமூகத்தின் கட்டுப்பாடுகளை அறுத்துக்கொண்டு கல்வி கற்று சமூக சேவையில் ஈடுபட்டார். அதற்காக அவர் பட்ட துயரங்கள், இழந்த இழப்புகள் ஏராளம்.

நெல்லை மாவட்டத்திலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருக்குறுங்குடி. வேதநெறி தவறாமல் வாழ்ந்த வைதீக பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்த அந்த அழகிய கிராமத்தில்தான் பெருமைமிகு டி.வி.எஸ். நிறுவனத்தார் குடும்பமும் வாழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சௌந்தரம்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே மோட்டார் தொழிலில் ஆர்வம் ஏற்பட, அதனையே தனது குடும்பத் தொழிலாக மாற்றி, இந்திய மோட்டார் வாகன உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டி.வி.சுந்தரம்அய்யங்கார். அவரது துணைவியார் லட்சுமி அம்மை யாரோ சமூக சேவைகள் மூலம் அவரளவிற்குப் புகழ் பெற்றிருந்தவர். இந்த உன்னதமான தம்பதியருக்கு மகளாக 1905_ல் பிறந்தவர்தான் சௌந்தரம். பேரழகியாக பெண் குழந்தை இருந்ததால் சௌந்தரம் (அழகானவள்) என்றே பெயர் வைத்துவிட்டார்கள் பெற்றோர். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். பத்து வயதிலேயே வீணை வாசிப்பதிலும் வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்று வீணைவித்வான் முத்தையா பாகவதர் போன்றோரை வியப்பில் ஆழ்த்தினார்.

சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலம். நன்கு வளர்ந்து கொண்டிருந்த மோட்டார் தொழிலை மட்டும் டி.வி.சுந்தரம் அய்யங்கார் கவனித்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை அவரை காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட வைத்தது. அதனால் தேசிய தலைவர்கள் நட்பு கிடைத்தது. பொதுப் பணியில் ஈடுபடுவதில் அவரது துணைவியார் லட்சுமியும் அவருக்கு இணையாகச் செயல்பட்டார்.

இதனால் பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இவர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து தேசிய பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதுண்டு. விவாதத்தின்போது சிறுமி சௌந்தரமும் அருகில் இருப்பார். இதனால் சின்ன வயதிலேயே அவர் மனதில் தேசப்பற்று ஆழமாகப் பதிந்துவிட்டது.

அந்தக் காலத்தில் வைதீக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவது வழக்கம். அதன்படி, டி.வி.சுந்தரம் அய்யங்காரின் சகோதரியின் மகன் சௌந்தரராஜனுக்கும் சௌந்தரத்திற்கும் 1918_ல் திருமணம் நடந்தது. அப்போது சௌந்தரத்திற்கு 12 வயது. கணவருக்கு 16 வயது.

திருமணமான கையோடு அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்கள். 1922_இல் சௌந்தரத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குறைப்பிரசவம் என்பதால் குழந்தை இறந்தே பிறந்தது. துன்பம் என்பதே தெரியாமல் செல்வச் செழிப்பில் வாழ்ந்த சௌந்தரத்திற்கு இதுதான் முதல் சோகம். அதை மறக்க அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இந்தச் சோகத்திற்கு மத்தியிலும் கணவர் சௌந்தரராஜன் மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று மருத்துவர் பட்டம் பெற்றது சௌந்தரம் அம்மையாருக்குப் பெரிய ஆறுதல்.

இங்கிருந்துதான் சௌந்தரத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனை விழுகிறது. பட்டம் பெற்ற கணவர் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராகிறார். கூடவே தனியாக மருத்துவமனை ஒன்றைத் திறந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கும்போது சௌந்தரம்தான் கணவர்கூட இருந்து அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து வந்தார். கூடவே அங்குள்ள மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர பொதுப்பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

இந்த இடத்தில்தான் அவரது வாழ்க்கையில் இரண்டாவது திருப்பு முனை விழுகிறது. மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் பிளேக் நோய் தாக்கியது. பிளேக் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, கணவரும் மனைவியும் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். தொடர்ந்து பிளேக் நோய்க்கு வைத்தியம் பார்த்ததில் கணவருக்கும் அந்த நோய் வந்து விட்டது. இனி பிழைப்பது கடினம் என்ற நிலையில், ‘‘நான் இறந்த பின்னர் நீ விதவைக் கோலம் பூணக் கூடாது. என்னைப் போல் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய். விரும்பினால் மறு மணம் செய்துகொள். பிற்காலத்தில் நீ சிறந்த சேவகியாக வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றபடி அவரது உயிர் பிரிந்தது. கணவர் இறந்த துக்கம் தாளாமல், சௌந்தரம் விஷத்தைக் குடித்துவிட்டார். மருத்துவர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்தார்கள்.

அன்று சௌந்தரம் முடிவு செய்தார். நாம் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம். நம் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் நம் லட்சியம் என்று முடிவு செய்து மதுரையில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். கணவர் எண்ணம்போல் டில்லி சென்று மருத்துவப் படிப்பு படித்தார். படிப்பு ஒரு புறம் என்றாலும் சமூக சேவையில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அவரே பாடமும் கற்றுத்தர ஆரம்பித்தார். இவரது சமூக சேவையில் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் தனி மருத்துவரான சுசிலா நய்யார் நட்பு கிடைத்தது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்ற சுசிலா நய்யாரின் நட்பு கிடைத்ததால் பல தேசத் தலைவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு சௌந்தரம் அம்மையாருக்குக் கிடைத்தது. சுசிலா நய்யார் காந்தியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சௌந்தரத்தையும் அழைத்துச் செல்வார். அப்போது மகாத்மா காந்தி சேவாசிரமத்தில் சேர்ந்து பணிபுரிந்த தென்னிந்திய இளைஞரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

சௌந்தரம் மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியாக தேர்வு பெற்று, சென்னையில் ஒரு மருத்துவமனை தொடங்கி சேவை செய்யத் தொடங்கினார். அப்போது தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். டெல்லியில் ஆரம்பித்த அவர்களது நட்பு சென்னையிலும் தொடர்ந்தது. கணவரின் விருப்பத்தை நிறை வேற்றும் விதமாக மதுரை அரசு மருத்துவமனையில் கௌரவ உதவி மருத்துவராகச் சேர்ந்தார். தனியாக ஒரு மருத்துவமனை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். மதுரையில் மருத்துவராக சேவை செய்த முதல் பெண்மணி இவர்தான்.

தனி மனுஷியாக இனி இயங்க முடியாத சமூகச் சூழல். அதனால் ஒரு ஆண் துணையைத் தேடினார். காந்தி வழியைப் பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தார். ஆச்சாரம்மிக்க அவரது குடும்பம் அதனை எதிர்த்தது. பிராமணப் பெண்கள் மறுமணம் செய்வது பாவம் என்று கருதப்பட்ட காலம் அது.

ராஜாஜிதான் முதலில் இவர்கள் திருமணத்தைப் பற்றி சுந்தரம் அய்யங்காரிடம் பேசினார். அவர் சம்மதிக்கவில்லை. இந்தச் செய்தி காந்தியடிகளுக்குச் சென்றது. உடனே காந்தி அழைத்தார். இருவர் விருப்பத்தையும் கேட்டார். சுந்தரம் அய்யங்காருக்கு கடிதம் எழுதினார். ‘‘சௌந்தரம் ராமச்சந்திரன் திருமணத்தை நடத்தி வையுங்கள். இல்லா விட்டால் நானே நடத்தி வைப்பேன்’’ என்றார். இதற்குப் பெற்றோர் சம்மதிக்காததால், சேவாசிரமத்தில் காந்தி முன்னிலையில் அவர்கள் திருமணம் நடந்தேறியது.

காந்தி இராட்டையில் தன் கையால் நூற்ற நூலில் செய்யப்பட்ட தாலிக் கயிற்றை ராமச்சந்திரன் சௌந்தரம் கழுத்தில் கட்டினார். காந்தி நெய்த நூலில் செய்யப்பட்ட வேட்டியை மணமகனும் கஸ்தூரிபாய் நூற்ற நூலில் செய்யப்பட்ட சேலையை சௌந்தரமும் ஆடையாக அணிந்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப்பின் சென்னை வந்தனர். சௌந்தரம் டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து கிராம மருத்துவ சேவையில் ஈடுபட்டார். ராமச்சந்திரன் புகழ்பெற்ற ஒரு ஆங்கில தினசரிக்கு ஆசிரியரானார். இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றனர்.

திண்டுக்கல் பகுதியில் காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கினார். கிராம சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

கிராம சேவைக்கென்றே சின்னாள பட்டியைத் தேர்வு செய்து 1947_ல் ஒரு தொடக்கப்பள்ளி, கிராம சேவை பயிற்சிப் பள்ளி கிராம மருத்துவ விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். இன்று அவைதான் காந்தி கிராமிய பல்கலைக்கழகமாகவும், கிராமிய அறக்கட்டளைகளாகவும் நிமிர்ந்து நிற்கின்றன.

1956_ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்த போது இந்தியாவே சௌந்தரம் அம்மை யாருக்கு நன்றி சொல்லியது.

எங்கு வறுமை தாண்டவமாடு கிறதோ, எங்கு சாதி, மதக் கலவரம் உருவாகிறதோ அங்கு சௌந்தரம் அம்மையார் ஓடோடிச் சென்று அவர்களை நல்வழிப்படுத்துவார். கிராம மருத்துவ சேவைதான் தன் இரு கண்கள் என்று நினைத்தார். இவர் வகிக்காத பதவிகளே இல்லை. 1962_ல் இவரது சேவைக்காக ‘பத்மபூஷண்’ விருது வழங்கப்பட்டது.

காந்தி கிராமத்தில் தயாரிக்கப்படும் எளிய உணவு, எளிய உடை இவற்றையே இறுதிக் காலம் முழுதும் அணிந்தார். 1984 அக்டோபர் 2_ம் தேதி அந்தச் சமூக சேவையின் ஜோதி அணைந்தது. தன் உடல் மீது மலர் அணிவிக்கக் கூடாது. எளிய கதர் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். யாரும் தொட்டு வணங்கக் கூடாது என்ற அவரது கடைசி கட்டளையை நிறைவேற்றிய மக்கள், அவர் வழி இன்றும் கிராம சேவையில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களுக்கு ஒரு ஊன்றுகோல் சௌந்தரம் அம்மையார் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..

நன்றி: பைம்பொழில் மீரானின்

‘தலைநிமிர்ந்த தமிழச்சிகள்’ தோழமை வெளியீடு, சென்னை_78.

Posted in Aachi, Achi, artists, Arts, Carnatic, Chettinad, Classical, Devadas, Devdas, Dhanammal, Dharmaambal, Dharmambal, Faces, Females, Ladies, MAM, music, people, Rajammal, Ramasami, Ramasamy, Segappi, Sekappi, Sevappi, She, Sigappi, Sikappi, Sivappi, Thanammal, Tharmambal, Veena, Veenai, Veerammal | Leave a Comment »

Parimalam – Adopted son of late TN CM Arinjar Annadurai: Ira Sezhiyan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

பரிமளத்தைப் பறிகொடுத்தோம்

இரா. செழியன்

அறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம் திடீரென மறைந்தது என்னைப் போன்றோர்க்கு சோகம் மிக்க தாங்கொணாத அதிர்ச்சியைத் தந்துள்ளது.

1944இல் அண்ணாவுடன் நான் முதலில் காஞ்சிபுரம் சென்றபொழுது பரிமளம் மூன்று வயதுச் சிறுவனாக இருந்தான். அவனுடைய தம்பிமார்களாக இளங்கோவன், கௌதமன், பாபு ஆகியோர் இருந்தனர். பரிமளம் அண்ணாவினாலும், எங்களாலும் “பரி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டான். உற்சாகமான, பொறுப்புள்ள மகனாக, மாணவனாக, பிறகு மருத்துவராக பரிமளம் வளர்ந்தான். அண்ணா ஈடுபடும் ஒவ்வொரு காரியத்திலும், “திராவிட நாடு’ இதழாக இருந்தாலும், நூல் வெளியீடாக இருந்தாலும், அண்ணாவின் நாடகமாக இருந்தாலும், ஒவ்வொன்றிலும் பரிமளத்தின் பங்கு இல்லாமல் போகாது.

மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு நாடுகளுக்கு அண்ணாவுடன் நானும் சென்றிருந்தபொழுது, அங்கிருந்து அவனுக்காக ஒரு “ஸ்டெதாஸ்கோப்’ வாங்கி வந்தோம். பரிமளம் அப்பொழுது மருத்துவக் கல்லூரியில் மாணவன். அவன் டாக்டராக ஆவதில் அண்ணாவுக்குப் பெரும் மகிழ்ச்சி. பரிவும், பண்பும், பாசமும், நேசமும் உள்ள ஒருவராகவே பரிமளம் வளர்க்கப்பட்டார். அவரும் வளர்ந்து வந்தார்.

அண்ணாவின் காலத்திலேயே பரிமளம் அரசியல் கட்சியில் நேரடியாக ஈடுபாடு காட்டவில்லை. அண்ணாவும் அந்த முறையில் அவரை வளர்க்கவில்லை. அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு கூட நான்கு மாதங்கள் கழித்துத்தான் சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அண்ணாவின் அறைக்குப் பரிமளம் சென்றார். அரசாங்க நிர்வாகத்திலும், அதிகாரிகளிடமும் எந்த வகையிலும் அவர் தொடர்பு கொண்டதில்லை.

அண்ணா மறைந்த பிறகு, ஓரிரு ஆண்டுகள் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய நிகழ்ச்சிகளின்பொழுது, நானும் கடற்கரைக்கு மற்ற கழகத் தலைவர்களுடனும், தோழர்களுடனும் சென்று அண்ணாவின் சமாதி முன் அஞ்சலி செலுத்துவதுண்டு. ஆனால், வர வர சமாதிக்குச் செல்லும் ஊர்வலத்தில் முந்திச் செல்வதற்கும், முன் நிற்பதற்கும் நடைபெறும் நெருக்கடியை என்னால் ஈடுகொடுக்க முடியாமல் அவ்வாறு செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன். ஆனால், ஒவ்வோராண்டும் அண்ணாவின் பிறந்த நாள் – நினைவு நாள் அன்று அண்ணி ராணி அம்மையாரைக் காண பரிமளம் அல்லது இளங்கோவன் இல்லங்களுக்குச் சென்று வருவேன். அண்ணா வாழ்ந்த இடத்தில் அவர்களுடன் இருந்தவர்களைக் காண்பதில், அண்ணாவைப் பற்றிப் பேசுவதில் ஒருவகை ஆறுதல் இருந்தது.

ராணி அம்மையார் மறைந்த பிறகு, ஆண்டுதோறும் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று நுங்கம்பாக்கம் அவென்யு சாலையிலுள்ள அண்ணாவின் தாயகத்திற்குத் தவறாமல் சென்று பரிமளத்தையும், அவர் குடும்பத்தினரையும் நான் காண்பது வழக்கம். பரிமளம் ஒரு முறை கூறினார்: “”நான் கூட அண்ணா சமாதிக்கு இப்பொழுது செல்வதில்லை.”

அண்ணாவின் கட்டுரைகள், கதைகள் ஆகியவற்றில் பல வெளியிடப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து வெளியிடுவதில் பரிமளம் ஈடுபட்டிருந்தார்.

புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளைத் தேடி எடுக்கும் அகழ்வாராய்ச்சியாளர்களைப் போல, மறைந்து கிடக்கும் அண்ணாவின் இலக்கியப் படைப்புகளை வெளிப்படுத்துவதில் அரிய அகழ்வாராய்ச்சியாளராக பரிமளம் விளங்கினார். அதன் விளைவாக, இதுவரை மறைந்து கிடந்த அண்ணாவின் பல கட்டுரைகள், பேச்சுகள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன.

சென்ற மாதம் அண்ணா நினைவு நாளன்று வழக்கம்போல் அவரது இல்லத்தில் பரிமளத்தைச் சந்தித்தேன். அப்பொழுதும் இதுவரை வெளிவராமல் உள்ள அண்ணாவின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடுவது பற்றி ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் அவர் பேசினார்.

அண்ணாவின் குடும்பத்துடன் கலந்திருந்த நம்மில் பலருக்கு பரிமளத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அன்னாரைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Posted in Anjali, Anna, Annadurai, Biosketch, Faces, Foster, Memoirs, Parimalam, people, Sezhiyan, Son | Leave a Comment »

Aadhimoolam – Anjali by Ku Pugazhendhi

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஆதிமூலம் – ஓவியர் கு. புகழேந்தி

ஓவியர் ஆதிமூலம் ஒரு சிறந்த மனிதர், சிறந்த கலைஞர். நவீன ஓவியம் தமிழ்ச் சூழலில் பரவலாக, அதாவது இதழ்களில் வெளிவருவதற்கு அவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. “எழுத்து’ போன்ற சிற்றிதழ்களில் அவருடைய ஓவியங்கள் வெளிவந்தது, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

அதேபோல் வணிக இதழ்களில், கதை, கவிதை, கட்டுைர போன்றவற்றிற்கான ஓவியங்கள், விளக்க ஓவியங்களாக மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில், அதை மட்டுமே வெளியிட்டு வந்த இதழ்களும், அதுபோன்ற ஓவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன வாசகர்களும் நவீன ஓவியத்தைப் பார்க்க, பயன் படுத்தத் தொடங்கி னார்கள் என்றால் அதைத் தொடங்கி வைத்தவர் ஆதிமூலம் அவர்கள்தான்.

ஒரு ஓவியம் கதை, கவிதைக்கான விளக்கப்படம் என்ற நிலையிலிருந்து, அந்தக் கவிதை, கதையின் ஒட்டுமொத்த சாரத்தை, ஓவியத்தில் வெளிப்படுத்தி, ஓவியத்தை தனித்துவமான படைப்பாக நிலைநிறுத்தியவரும் ஆதிமூலம் அவர்கள்தான். அவர் ஓவியங்கள் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அதன் மூலம் நல்ல அடித்தளமும் போடப்பட்டது.

அந்த அடித்தளம் தான் என்னைப் போன்றவர்களை வணிக இதழ்கள் துணிந்து பயன்படுத்தியதற்கு துணை புரிந்தது.

அவருடைய கோடுகளுக்குத் தனி அடையாளம் இருக்கிறது. அவருடைய கோடுகள் வலிமையானவை, வீரியமானவை, அழுத்தமானவை. அவற்றை அவருடைய கருப்பு வெள்ளை ஓவியங்களில் நாம் பார்க்கலாம். தமிழ்த் தொன்மங்கள் என்று சொல்லக் கூடிய அய்யனார் போன்ற நாட்டுப்புற வடிவங்களை கோட்டோவியங்களில் வெளிப் படுத்தியவர். அவருடையக் கோட்டோ வியங்கள் தனித்துவமானது. பார்ப்பவர் களை எளிதில் ஈர்க்கக் கூடியது.

நடிகர்களுடைய நடிப்பைப் பார்க்கும் போது “சிவாஜியைப் போன்று’ நடிப்பு இருக்கிறது என்று சொல்வது போல, சில ஓவியர்கள் எப்படி வரைந்தாலும் அதில் “ஆதிமூலம் போன்று’ இருப்பதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவருடைய ஓவியங்கள் தனி அடையாளத்தோடு விளங்குகின்றன.

அதேபோல் அவருடைய அரூப வெளிப்பாடான வண்ண ஓவியங்களும், தனித்துவமான அடையாளத்தோடு விளங்குகிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ஓவியரான அவர், புதிய தலைமுறைக் கலைஞர் களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர். நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பவர்.

என்னுடைய “உறங்காநிறங்கள்’ ஓவியக்காட்சி நடைபெற்ற பொழுது அழைப்பு அனுப்பியிருந்தேன். அவர் ஊரில் இல்லை. வந்ததும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நான் அவரிடம் “ஓவியங்களின் ஒளிப் படங்களை ஒரு நாள் உங்களிடம் எடுத்து வருகிறேன்’ என்றேன்.

“”இல்லை, வேண்டாம் அந்த நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்றார்.

பணிச்சுமை, காலமாற்றம் இவை களால் இல்லத்திற்குச் சென்று சந்திப்பது குறைந்துவிட்டது. இலக்கிய அரங்குகள், சில கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒரு சிலவற்றில் சந்திப்பதும் குறைந்துவிட்டது.

அவ்வப்போது தொலைபேசி உரையாடல்கள். அப்படி ஒருநாள் அவைரத் தொலைபேசியில் அழைத்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். “இல்லை புகழேந்தி, நான் வெளியில் எங்கும் வருவதில்லை, இனிமேல் நீங்கள் எல்லாம் தான் அவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.

அவர் வெளியில் வராமல் இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவர் ஓவியங்கள் செய்வதில் இயங்கிக் கொண்டே இருந்தார். 2008 சனவரி 27 ஞாயிறு அதிகாலை அவருடைய இயக்கம் நின்று விட்டது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது படைப்புகளாலும் பலரது நினைவுகளிலும் தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் ஆதிமூலம் அசைக்க முடியாத ஒரு பெயர்.

Posted in Aadhimoolam, Aadhymoolam, Aathimoolam, Adhimoolam, Anjali, artists, Arts, Athimoolam, Faces, Icons, Lit, Literature, Memoirs, Notable, Painters, Paintings, Pugalendhi, Pugazendhi, Pugazhendhi, Pugazhenthi, Sculpture, Works | Leave a Comment »

Angayarkkanni – Faces: Thiruchi Uraiyur Panchavaransamy Temple – Muthiah Vellaiyan

Posted by Snapjudge மேல் மார்ச் 24, 2008

முகங்கள்: நான்கு காலமும் ஓதும் குயில்!

முத்தையா வெள்ளையன்

திருச்சி- உறையூர் பஞ்சவர்ணசாமி திருக்கோயில். வைகறைப் பொழுது. கணீரென்று ஒலிக்கிறது தேவாரப் பாடல். “இதிலென்ன ஆச்சரியம்?’ என்று நினைக்கலாம். அந்தக் கோயிலில் தேவாரத்தைப் பாடிக் கொண்டிருந்தது ஒரு பெண்.

அவர் பெயர் அங்கயற்கண்ணி. திருப்பள்ளி எழுச்சி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்… எனப் பஞ்சவர்ணசாமி கோவிலின் நான்குகால பூஜையிலும் தேவாரம் ஒலிப்பது இவரின் குரலில்தான்!

இறைப்பணியைச் செய்து கொண்டிருக்கும் முதல் பெண் ஓதுவாரான அங்கயற்கண்ணி, இந்தப் பணியின் மேன்மை குறித்தும், அவர் இந்தப் பணிக்கு எப்படி வந்தார் என்பதைக் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”திருச்சிக்குப் பக்கத்திலே இருக்கும் செம்பட்டு கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். என் கூடப் பிறந்தவங்க ஆறு பேர். நான் நான்காவதா பிறந்தேன். அப்பாவுக்குத் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணி. அவருடைய வருமானத்துக்கு ஏற்ப எங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டோம். நான் பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு, மேல் படிப்பு படிக்க ஆசைப்பட்டேன். குடும்ப சூழ்நிலையை நினைத்து செலவில்லாமல் படிக்க என்ன செய்யறதுன்னு தேடியபோது, சிலர் திருச்சி மாவட்ட இசைப் பள்ளியில் சேரலாம்னு சொன்னாங்க. என்னோட சின்ன வயசுலே தினமும் எங்க வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற அங்களம்மாள் கோவிலுக்குப் போவேன். அங்கு ஒரு பெரியவர் வந்து தினமும் தமிழில் கணீரென்று பாடுவார். எங்களைப் போன்ற பிள்ளைகளையும் பாடச் சொல்லிக் கேட்பார். அந்த அனுபவம்தான் இசைப் பள்ளியில் சேர்வதற்கு எனக்குக் கை கொடுத்தது.

இசைப் பள்ளியில் மூன்றாம் வருடம் படிக்கும் போதுதான், இந்தப் படிப்பை முடித்தவர்கள் தமிழிசை கச்சேரி செய்யலாம் அல்லது கோவிலில் ஓதுவாராகப் பணியாற்ற முடியும்னு தெரிந்தது. சிறிது நாட்கள் கழித்து ஓதுவார் பணியில் சேர்வதற்கான முயற்சியை செய்து கொண்டிருந்தேன்.

எனது ஆசிரியர் சரவணன் மாணிக்கம் ஐயாதான் படிக்கும் போதும் சரி, நான் பணியைத் தேடிக் கொண்டிருந்த போதும் சரி எனக்கு நல் வழிகாட்டினார். நான் சோர்ந்து போன போது எல்லாம் பல கதைகளைச் சொல்லி என்னை உற்சாகப்படுத்துவார்.

இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அரசு இசைப் பள்ளி மாணவிகளை ஓதுவாராக அனுமதிக்க வேண்டும் என்று எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார் எனது ஆசிரியர்.

என் ஆசிரியரைப் போன்றவர்களின் தொடர் முயற்சியினால், 2006-ம் ஆண்டு அரசு உத்தரவு மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரானேன். இந்த உத்திரவு வருவதற்கு முன் தினமும் கோவிலுக்குச் சென்று திருமுறைகளைப் பாடி வந்தேன். அந்த பயிற்சியின் போது ஓரளவுக்கு இருந்த பயமும் தெளிந்தது.

திருப்பள்ளி எழுச்சி, கால சந்திக்குப் பிறகு பாராயணம், உச்சிக்காலம்… என்று பாடிய பிறகு வீட்டுக்கு சாப்பிடப் போய்விடுவேன். மாலையில் சாயரட்சை, அதற்குப் பிறகு பாராயணம், அர்த்த ஜாமம்… என்று பாடிய பிறகுதான், ஒருநாள் முழுவதும் இறைவனைப் பாடிய திருப்தியோடு வீட்டிற்குப் போவேன்!

கோவிலில் நான் பாடும்போது, அதைக் கேட்கும் பெண்கள், “”சாமி சன்னதியில் பாடுவதற்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்மா… எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது..” -என்று சொல்வார்கள். எல்லாம் இறைவன் செயல் என்று நினைத்துக் கொள்வேன்.

பொதுவாக கோவிலில் ஆண் பணியாளர்கள் அதிகம் இருந்தாலும் என்னை மரியாதையோடுதான் நடத்துகிறார்கள்.

தேவாரமும், திருவாசகமும் முன்பு எல்லோர் வீடுகளிலுமே பெண்கள் பாடிய காலம் உண்டு. நாளடைவில் இந்தப் பழக்கம் பெண்களிடம் குறைந்துவிட்டது. மீண்டும் பெண்கள் தேவாரம், திருவாசகத்தைப் பாடவேண்டும்!” என்கிறார் அங்கயற்கண்ணி.

Posted in Angayarkanni, Angayarkkanni, Faces, Females, Hindu, Hinduism, Interview, music, people, She, Singer, Temple, Trichy | Leave a Comment »

Tamil Cinema Faces – Ku Sa Krishnamoorthy: Biosketch (Dinathanthy)

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

திரைப்பட வரலாறு 873
எம்.ஜி.ஆர். நடித்த “அந்தமான் கைதி”
கதை, வசனம், பாடல் எழுதிய கு.சா.கிருஷ்ணமூர்த்தி


எம்.ஜி.ஆர். நடித்த “அந்தமான் கைதி” படத்துக்கு கதை, வசனம், பாடல் எழுதி புகழ் பெற்றவர் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. “ரத்தக்கண்ணீர்” படத்தில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய “குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது” என்ற பாடல் இவர் எழுதியதே.

ma-po_si_kalainjar.jpg

நாடக உலகிலும், பிறகு சினிமா துறையிலும் புகழ் பெற்று விளங்கியவர், கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி.

இவர், 1914-ம் ஆண்டு மே 19-ந்தேதி கும்பகோணத்தில் பிறந்தார். பெற்றோர் சாமிநாதபிள்ளை – மீனாட்சி அம்மாள்.

நாடக ஆசை

கிருஷ்ணமூர்த்தி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, நாடக ஆசை தொற்றிக்கொண்டது. எனவே, படிப்பை விட்டு விட்டு, பாய்ஸ் நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்ந்தார்.

இவர் நாடக நடிகராக இருந்தபோது, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், விஸ்வநாததாஸ், வேலுநாயர் போன்றோர், நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கினார்கள். இவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்த இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்றபோது, கு.சா.கிருஷ்ணமூர்த்தி அந்தக் குழுக்களிலும் இடம் பெற்றார். ஒரு காலகட்டத்தில், கிருஷ்ணமூர்த்திக்கு நாடக வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது. அதனால் புதுக்கோட்டையில் ஒரு பதிப்பகத்தையும், படக்கடையையும் தொடங்கினார்.

அந்தமான் கைதி

இந்த சமயத்தில், வயதான ஒருவருக்கு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி, கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் நடந்தது. அந்த சம்பவம் அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “அந்தமான் கைதி” என்ற நாவலை எழுதினார். அதை நாடகமாக்கி, நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி வந்தார்.

நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அதை புத்தகமாக அச்சடித்து, 11/2 ரூபாய் விலை போட்டு விற்பனை

செய்தார்.டி.கே.எஸ்.சகோதரர்கள், நாடக உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. டி.கே.சண்முகத்துக்கு, “அந்தமான் கைதி”யின் நாடகப் பிரதி ஒன்றை கிருஷ்ணமூர்த்தி அனுப்பி வைத்தார்.

அதைப்படித்த டி.கே.சண்முகம், “எடுத்தேன்; படித்தேன்; முடித்தேன். அற்புதம், அற்புதம், அற்புதம்!” என்று கிருஷ்ணமூர்த்திக்கு பதில் எழுதினார். “இந்த நாடகத்தை, என் நாடக சபை மூலம் மேடை ஏற்ற விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு கிருஷ்ணமூர்த்தி சம்மதம் தெரிவித்தார். “ஒருநாள் நாடகத்துக்கு, ராயல்டியாக (ஆசிரியருக்கான சம்பளம்) நாலணா கொடுத்தால் போதும்” என்றும் குறிப்பிட்டார்.

மூன்று வார ஒத்திகைக்குப்பின், “அந்தமான் கைதி” நாடகத்தை டி.கே.எஸ்.சகோதரர்கள் அரங்கேற்றினர்.

நாடகம் பெரிய வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், எழுத்தாளர்கள் “கல்கி”, “வ.ரா” போன்றோர், நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினர்.

சினிமா

“அந்தமான் கைதி” நாடகத்தை, 1952-ம் ஆண்டில் ராதாகிருஷ்ணா பிலிம்சார் படமாகத் தயாரித்தார்கள்.

எம்.ஜி.ஆர். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்திருந்த நேரம் அது. அவர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். “அந்தமான் கைதி” நாடகத்தில் கதாநாயகியாக நடித்த எம்.எஸ்.திரவுபதி, திரைப்படத்திலும் கதாநாயகியாக (எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக) நடித்தார்.

மற்றும் பி.கே.சரஸ்வதி, எஸ்.டி.சுப்புலட்சுமி, திக்குரிச்சி சுகுமாரன் நாயர், டி.எஸ்.பாலையா, கே.சாரங்கபாணி ஆகியோரும் நடித்தனர். லலிதா – பத்மினி – ராகினியின் நடனமும் இப்படத்தில் இடம் பெற்றது.

இந்தப் படத்துக்கு கதை, வசனம், பாடல்களை கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதினார். அக்காலத்து பிரபல இசை அமைப்பாளர் ஜி.கோவிந்தராஜ×லு நாயுடு இசை அமைத்தார்.

“அந்தமான் கைதி”, ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. கதையின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் பெரிதும் பாராட்டப்பட்டன.

இந்தப் படத்தில் ஒரு பாடல். ஒரு பெரிய பை நிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு வரும் பி.கே.சரஸ்வதி, “அஞ்சு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி, மிச்சமில்லே. காசு மிச்சமில்லே. கத்திரிக்காய் விலை கூட கட்டு மீறலாச்சு; காலம் கெட்டுப்போச்சு” என்று பாடுவார்!

இது அன்றைய விலை நிலவரம். இப்போது அந்தக் காட்சியை எடுத்தால், “நூறு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி…” என்றுதான் பாடலை மாற்றவேண்டும்!

ரத்தக்கண்ணீர்

தொடர்ந்து, பல படங்களுக்கு கு.சா.கிருஷ்ணமூர்த்தி பாடல்கள் எழுதினார்.

எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படத்தில் சிதம்பரம் ஜெயராமன் இசை அமைத்துப் பாடிய “குற்றம் புரிந்தவன், வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது!” என்ற பாடல் கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியதுதான்.

இந்தப்பாடல் பெரிய `ஹிட்’ ஆகி, கு.சா.கிருஷ்ணமூர்த்திக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. இதில் பலருக்கும் தெரியாத ஒரு செய்தி: கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் ஏற்கனவே இசை அமைத்துப்பாடி, அது தனி இசைத்தட்டாகவும் வந்துவிட்டது! அதையேதான், “ரத்தக்கண்ணீர்” படத்திலும் பயன்படுத்திக் கொண்டார்கள். இடையிடையே எம்.ஆர்.ராதா பேசும் வசனத்தை சேர்த்துக் கொண்டார்கள். அது மட்டுமே புதிது.

சின்னப்பா நடித்த “மங்கையர்க்கரசி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கு.சா.கிருஷ்ணமூர்த்திக்குத்தான் வந்தது. ஆனால், இளைஞரான சுரதாவை பட அதிபரிடம் அழைத்துச் சென்று, “இவர் திறமைசாலி. இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதனால், வசனம் எழுதும் வாய்ப்பு சுரதாவுக்கு கிடைத்தது. கு.சா.கிருஷ்ணமூர்த்தியும், கம்பதாசனும் பாடல் எழுதினார்கள்.

ku_saa_krishnamoorthy.jpg
750 பாடல்கள்

கு.சா.கிருஷ்ணமூர்த்தி திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் சுமார் 750. அவற்றில் மிகவும் பிரபலமான பாடல்கள்:-

* “நிலவோடு வான் முகில் விளையாடுதே…” (“ராஜராஜன்” படத்தில் ஏ.பி.கோமளாவும், சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடிய பாடல்)

* எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்… (“தை பிறந்தால் வழி பிறக்கும்” படத்தில் டி.எம்.சவுந்தரராஜன் பாடும் பாட்டு)

* “சொல்லாலே விளக்கத் தெரியலே” (“சக்ரவர்த்தி திருமகன்” படத்தில் பி.லீலா பாடிய பாட்டு)

* “அகில பாரத பெண்கள் திலகமாய்…” (ஏவி.எம். “பெண்” படத்தில் வைஜயந்திமாலா பாடுவதுபோல் அமைந்த காட்சி. பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி)

* “காதல் கனிரசமே” (“மங்கையர்க்கரசி” படத்தில் பாடியவர் பி.யு.சின்னப்பா.)

அனுபவங்கள்

கு.சா.கிருஷ்ணமூர்த்தி, தன் கலை உலக அனுபவங்கள் பற்றி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

“திரை உலகில், நான் முதன் முதலில் பாடல் ஆசிரியனாகத்தான் நுழைந்தேன். “ஆண்டாள்”, “போஜன்” முதலிய படங்களுக்கு பாடல் எழுதினேன்.

“அந்தமான் கைதி” நாடகம் படமானபோது, கதை, வசனம், பாடல் எழுதினேன்.

நான் சென்னை வர காரணமாக இருந்தவர், ஜுபிடர் அதிபர் சோமு. அவர் என்னிடம் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து, என்னை நிரந்தரமாக சென்னையில் குடியேறச் சொன்னார். ஜுபிடர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தேன்.

ஜுபிடர் பிக்சர்சார் “சந்திரகாந்தா” கதையை படமாக்க ஏற்பாடு செய்தனர். அதில் சுண்டூர் இளவரசன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், நம்மாழ்வார் என்ற நடிகரை நடிக்க வைக்க இருந்தார்கள். நாடகங்களில் நடித்து வந்த பி.யு.சின்னப்பாவைத்தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் வாதாடி, வெற்றியும் பெற்றேன். சின்னப்பாவுக்கு முதன் முதலாகப் புகழ் தேடித்தந்த படம் சந்திரகாந்தா.

வகீதா ரஹ்மான்

டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், “ஒன்றே குலம்” என்ற படத்தைத் தயாரித்தார். அதற்கு கதை – வசனம் எழுதியது

நான்தான்.அப்போது ஒரு சிறு பெண், தன் தாயாருடன் வந்தார். “ஒரு சிறு வேடமாக இருந்தாலும் எனக்கு வாங்கிக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படத்தில் நர்ஸ் வேடம் வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பெண்தான், பிற்காலத்தில் அகில இந்தியப் புகழ் பெற்ற நடிகை வகீதா ரஹ்மான்!

மெட்டு

பொதுவாக, நான் எழுதும் பாடல்களுக்கு நானே மெட்டமைத்து, பாடிக்காட்டுவேன். பிரபல இசை அமைப்பாளரான ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், சுதர்சனம் போன்றோர், நான் போட்ட மெட்டையே `ஓகே’ செய்வதுண்டு.

டி.கே.எஸ். சகோதரர்களின் “அவ்வையார்” நாடகத்தில், நான் எழுதிய “பெருமை கொள்வாய் தமிழா” என்ற பாடலை டி.கே.சண்முகம் உணர்ச்சி பொங்கப் பாடுவார். நாகர்கோவிலில் இந்த நாடகம் நடந்தபோது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வந்திருந்தார். இந்தப்பாடல் பாடப்பட்டபோது, அதை எழுதியது நான்தான் என்று கவிமணியிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். அவர் என் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். மெய்சிலிர்த்துப்போனேன்.”

இவ்வாறு கு.சா.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம்

கு.சா.கிருஷ்ணமூர்த்தி, 1943-ல் புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி அமைப்பாளராக இருந்தார். அப்போது, புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக (மன்னர் ஆட்சியில்) இருந்தது. அங்கு மக்கள் ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கிய பங்கு கொண்டார்.

“சிலம்புச் செல்வர்” ம.பொ.சி.யின் நெருங்கிய சீடர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர். தமிழரசு கழகத்தை ம.பொ.சி. தொடங்கியது முதல், அதில் செயற்குழு உறுப்பினராக அங்கம் வகித்தார். எல்லைப் போராட்டங்களில் பங்கு கொண்டார்.

சுரதா, கு.மா.பாலசுப்பிரமணியம், ஏவி.எம்.ராஜன், அவிநாசிமணி ஆகியோரின் திரை உலகப் பிரவேசத்துக்கு உறுதுணையாக இருந்தவர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி.

“தமிழ் நாடக வரலாறு”, “அருட்பா இசை அமுதம்”, “என் காணிக்கை”, “அந்தமான் கைதி” முதலான நூல்களை எழுதியுள்ளார்.

1966-ல் தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற கு.சா.கிருஷ்ணமூர்த்தி, 1990-ம் ஆண்டு மே 13-ந்தேதி தமது 76-வது வயதில் காலமானார்

Posted in Biosketch, Cinema, Dinathanthi, Dinathanthy, Faces, Films, Krishnamoorthy, Krishnamurthy, Movies, people | 1 Comment »

How to be successful in the Tamil Film Industry – Tips & Backgrounders: Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

நேர்மை வேண்டும்

புரொடக்ஷன் மேனேஜர் கம் புரொட்யூஸர் பாபுராஜா

“”சினிமா…. ஒரு நல்ல தொழில். மற்ற எல்லா தொழில்களிலும் லாபத்தை மட்டும்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் சினிமாவில் மட்டுமே லாபத்துடன் சேர்த்து நல்ல பெயரையும் சம்பாதிக்க முடியும்” என்றார் தயாரிப்பாளரான ஆர்.பி.செüத்ரி.

ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஆக வேண்டுமெனில் பெருமளவு முதலீடு போட வேண்டியிருக்கும். பணமிருந்தால் புரொட்யூஸராகி விடலாம். ஆனால் அந்த பணத்தைக் கொண்டு வராதவர்களும் கூட தயாரிப்பாளர் ஆகிவிடும் அதிசயம் சினிமாவில் மட்டுமே சாத்தியப்படும்! தொடர்ந்து நான்கு படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக (புரொடக்ஷன் மேனேஜர்) வேலை பார்த்தால் போதும். திறமையும், நேரமும் கூடும்பட்சத்தில் அவர்கள் தயாரிப்பாளர் ஆவது சகஜமானதுதான்.

ஆர்.பி. செüத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸில் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக புரொடக்ஷன் மேனேஜராகவும், ஜெ. ஜெ. குட் ஃபிலிம்ஸின் அதிபராகவும் இருந்து வருபவர் பாபுராஜா.

புரொடக்ஷன் மேனேஜரின் அசிஸ்டெண்ட் ஆக நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி இங்கே நமக்கு வழிகாட்டுகிறார் அவர்.

இந்த இதழில் பாபுராஜா சொல்வதைக் கேட்போம்.

“”நான் உதவி இயக்குனரா வரணும்னு நினைச்சேன். ஆனா வந்த இடத்தில் அப்படி ஆக முடியல. மலேசியா வாசுதேவன் சார் எடுத்த முதல் படமான “நீ சிரித்தால் தீபாவளி’யில் ஆஃபீஸ் பையனா வேலை பார்த்தேன். 1991-ம் வருஷம்னு நினைக்கிறேன். அப்புறம் ஒரு சில படங்கள் வொர்க் பண்ணிக்கிட்டிருந்தேன்.

டைரக்டர் ராஜகுமாரன் சார் மூலமா விக்ரமன் சார் நட்பு கிடைச்சது. அவர் என்னை செüத்ரிசார்கிட்டே அறிமுகப்படுத்தி, “பூவே உனக்காக’ படத்தில புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ண வச்சார். என்னோட வொர்க்கைப் பார்த்த செüத்ரி சார், விக்ரமன்கிட்டே, “இவரு இங்கேயே இருக்கட்டும்’னு கேட்டுக்கிட்டார். அதிலிருந்து இருபத்தி அஞ்சு படங்களுக்கு மேல சூப்பர் குட்ல புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ணிட்டிருக்கேன்.

“விண்ணுக்கும் மண்ணுக்கும்’ ஷூட்டிங் நடந்துகிட்டிருந்தபோதுதான் சரத்குமார் சாரும், செüத்ரி சாரும் நீங்க புரொட்யூஸர் ஆகிடுங்க’ன்னு சொன்னாங்க. “அரசு’ படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளரா அறிமுகமானேன். அப்புறம் “சத்ரபதி’ தயாரிச்சேன். இப்போ “நினைத்து நினைத்து பார்த்தேன்’னு ஒரு படம் பண்றேன்.

தயாரிப்பு நிர்வாகின்னா ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும் பாலமா இருக்கிறவர். சினிமாவைப் பொறுத்தவரை எல்லாத்துக்கும் திறமை முக்கியம். இந்த வேலைக்கு மிகமிக முக்கியம் நேர்மை. அது இருந்தால்தான் லாங் லைஃப்பா நீடிக்க முடியும். சரியான உழைப்பும் அவசியம்.

உங்க மேல நம்பிக்கை இருந்தால்தான் நீங்க நிரந்தரமா ஒரு கம்பெனியில வொர்க் பண்ண முடியும். நம்பிக்கை இல்லைன்னா நீங்க யார்கிட்டேயும் வொர்க் பண்ண முடியாது. புரொடக்ஷன் மேனேஜர்னா நடுநிலைமை வகிப்பது நல்லது.

அதாவது நீங்க புரொட்யூசருக்கும் சப்போர்ட் பண்ணக்கூடாது. டைரக்டர், டெக்னீஷியன், ஆர்ட்டிஸ்ட்கள்னு யாருக்கும் சப்போர்ட்டா இருக்கக்கூடாது. ஒரு நடிகருக்கு இவ்வளவுதான் சம்பளம்னா அதை கரெக்ட்டா வாங்கிக் கொடுக்கணும். யாருக்காகவும் ஒருதலைபட்சமா செயல்பட்டால் பேர் கெட்டுப் போயிடும். நடிகர்- நடிகை, டெக்னீஷியன்கள் எல்லார்க்கும் சம்பளம் ஃபிக்ஸ் பண்றதும் நாங்கதான்.

எல்லா விஷயங்களையும் தயாரிப்பாளருக்கு சொல்வோம். ஒரு சில தயாரிப்பாளர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பாங்க. செüத்ரி சாரெல்லாம் ஒரு படத்துக்கு அதிகபட்சமே நாலஞ்சு தடவைதான் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பார். úஸô, நாங்க ஒரு தயாரிப்பாளர் மாதிரிதான் அங்கே வொர்க் பண்ணிட்டிருப்போம்.

நாங்க சரியா வொர்க் பண்ணலைன்னா அன்னிக்கு ஷூட்டிங்கே நடக்காதுன்னா பார்த்துக்குங்களேன். எங்களுக்கு அடுத்தபடியா அதிக நேரம் வொர்க் பண்றது டிரைவர்கள்தான்.

ஒரு படத்துக்கு, புரொடக்ஷன் மேனேஜர் மினிமம் மூணுபேரையாவது அசிஸ்டெண்ட்டா வச்சிருப்பார். எல்லார்க்கும் ஒவ்வொரு வேலைகள் இருக்கும். ஒருத்தர் கார் புரோக்ராம் பண்ணுவார். அதாவது ஆர்ட்டிஸ்ட்களுக்கு வண்டி அனுப்பி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவைக்கிறது. அப்புறம் ஷூட்டிங் முடிஞ்சதும் அவங்களை ரூம்ல கொண்டு போய் ட்ராப் பண்ற வொர்க்கை கவனிப்பார்.

இன்னொருத்தர், லொக்கேஷனை பார்ப்பார். அதாவது மறுநாள் ஷூட்டிங்குக்கு… ஹீரோயின் கோவில்ல சாமி கும்பிடுற சீன் இருக்குதுன்னு டைரக்டர் எங்ககிட்டே சொல்லியிருப்பார். நாங்க, அதற்குத் தகுந்த மாதிரி கோவில் தேடி அதை டைரக்டர்கிட்ட காட்டி முதல்ல ஓ.கே. வாங்குவோம். அப்புறம் அது செட் ஆச்சுதுன்னா அங்கே பெர்மிஷன் சரியா ஏற்பாடு பண்ணி வச்சிருப்போம்.

சில நேரங்கள்ல என்னால வொர்க்கைக் கவனிக்க முடியலைன்னா ஆர்ட்டிஸ்ட்களுக்கு புரோக்ராம் சொல்றதிலிருந்து என்னோட வொர்க்கை எல்லாம் மூணாவது ஆள் கவனிச்சிக்குவார். பெரிய பட்ஜெட் படம்னாலும் மூணே மூணு அசிஸ்ட்டெண்ட் போதும்.

டைரக்டர்களுடைய தேவைகள் எல்லாத்தையுமே முழுமையா, அவர் கேட்ட நேரத்தில் அதாவது சரியான நேரங்களில் நடிகர்- நடிகைகளின் தேதிகள், டெக்னீஷியன்களின் தேதிகள், லொக்கேஷன் பெர்மிஷன் என எல்லாவற்றையும் அமைத்துக் கொடுப்பதுதான் எங்களின் வேலை.

ஆனால் டைரக்டர் சொல்வதை மட்டுமே கேட்டு, அதன்படி நடப்பது மட்டுமே வேலையின்னு நினைக்கக் கூடாது. படத்தோட முழுக்கதையையும் நாங்க தெரிஞ்சிருந்தால்தான் டைரக்டர் திருப்திபடக்கூடிய அளவிற்கு எங்களால் வொர்க் பண்ண முடியும்.

உதாரணமா, டைரக்டர் எங்ககிட்டே ஒரு லொக்கேஷன் கேட்கிறார்னா, நாங்க அவர் நினைக்கிற மாதிரியான ஏதாவது ஒரு லொக்கேஷனைத்தான் காண்பிக்க முடியும். ஆனா படத்தோட கதை எங்களுக்கும் தெரியும்போது, சரியான லொக்கேஷனை டக்குன்னு காண்பிச்சிடலாம். இப்ப உள்ள டைரக்டர்கள் யாரும் பாகுபாடு பார்க்கறதில்ல. அதனால எல்லாருமே அவங்களோட படத்தோட முழுக் கதையையும் எங்ககிட்ட சொல்லிடுறாங்க. அப்பத்தானே ஒரு கேரக்டருக்கு இவரை மாதிரி ஒரு ஆள் வேணும்னு டைரக்டர் கேட்கிறப்ப கொண்டு வர முடியும்?

புரொடக்ஷன் மேனேஜர் வேலைங்கறது ஒரு சின்ன வேலை கிடையாது. தயாரிப்பாளர் பணம் போடுறதோட சரி! சிலர் ஷூட்டிங் நடக்கற இடத்துக்கே வரமாட்டாங்க.
காலையில ஏழு மணிக்கு ஷூட்டிங் நடத்தணும்னா நாங்க அதிகாலை மூணு மணிக்கு எழுந்திரிச்சால்தான் அந்த ஷூட்டிங்கை நடத்த முடியும்.

புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ், புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்ஸ் என நாங்க எல்லாம் மூணு மணிக்கே எழுந்திரிச்சு, எல்லார்க்கும் வண்டிகள் அனுப்பிச்சிடுவோம். நடிகர்- நடிகைகள் எல்லாரையும் ஸ்பாட்டுல அசம்பிள் பண்ண வேண்டியிருக்கும். அப்படி கரெக்ட்டா ஷூட்டிங் ஏழு மணிக்கு தொடங்கிடுச்சின்னா, பல பிரச்சினைகளும் தொடங்க ஆரம்பிக்கும். சில ஆர்ட்டிஸ்ட்டுகள் மதியம் பனிரெண்டு மணிக்கு வரச் சொல்லியிருப்பாங்க.

அவங்களுக்கு தகவல் சொல்லி ரெடி பண்ணனும். அப்புறம் மறுநாள் ஷூட்டிங்கிற்கு தேவையானதையும் ரெடி பண்ணனும். கிட்டத்தட்ட நைட் பதினோரு மணி வரைக்கும் எங்க வொர்க் போயிக்கிட்டு இருக்கும்.

காலையில மூணு மணிக்கு எழுந்திரிச்சதிலிருந்து நைட்டுல பதினோரு மணிக்கு படுக்கப் போறவரைக்கும் நடைமுறை சிக்கல்களாகத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். நிம்மதியான சாப்பாடு சாப்பிட முடியாது. நிம்மதியா தூங்கிட முடியாது. டென்ஷன் இருந்துட்டே இருக்கும்.

டைரக்டர்தான் கேப்டன் ஆஃப் த ஷிப்னு சொல்லுவாங்க. úஸô, படம் ஜெயிக்கணும்ங்கற டென்ஷன்ல டைரக்டர் இருப்பார். ஒரு டைரக்டருக்கு அடுத்தபடியா அத்தனை டென்ஷன்களும் எங்களுக்குத்தான் இருக்கும். சரியான டயத்துல சரியா எடுக்கணுமேங்கற டென்ஷன் அவருக்கு… ஒரு ஆர்ட்டிஸ்ட் வர்றதுக்கு பத்து நிமிஷம் லேட் ஆனாக்கூட டைரக்டருக்கு நாங்க பதில் சொல்லி ஆகணும்.

காலையில உள்ள ஷூட்டிங்கிற்கு வர வேண்டிய நடிகருக்கு நாங்க கார் அனுப்பிச்சிருப்போம். ஆனா அது போய் எங்கேயாவது பிரேக் டவுன் ஆகி நிற்கும். அந்த நடிகர் வரலைன்னு டைரக்டர் எங்க மேல டென்ஷனாயிடுவார். அதுக்கு பதில் சொல்லணும்.

ஒரு லொக்கேஷனை ஃபிக்ஸ் பண்ணி வச்சிருப்போம். அங்கே ஏதோ ஒரு குழப்பத்துல வேற யாருக்காவது அன்னிக்கு அந்த லொக்கேஷனை கொடுத்து வச்சிருப்பாங்க. அதை க்ளீயர் பண்ணி வாங்க வேண்டியிருக்கும். úஸô, எல்லா வகையிலும் எங்களுக்கு டென்ஷன் இருக்கும்.

யூனிட்ல உள்ள யாராவது ஒருத்தர் வர லேட்டானாக்கூட சிரமம்தான். ஒரு படத்துக்கு நூறு பேர் வொர்க் பண்றாங்கன்னா அத்தனை பேரும் ஸ்பாட்டுல இருந்தால்தான் வொர்க் நடக்கும். டைரக்ஷன், எடிட்டிங், கேமரான்னு எல்லாத்தையும் நீங்க இன்ஸ்ட்டியூட்ல படிச்சிட்டு, இல்ல புத்தகங்களை படிச்சு தெரிஞ்சுகிட்டோ வந்திடலாம்.

ஆனா இதுக்கு அப்படி கிடையாது. அனுபவம்தான் அவசியம். இந்த தொழிலுக்கு மெமரி பவர் ரொம்ப முக்கியம். ரொம்பப் பேச வேண்டியிருக்கும். உதாரணமா, நமக்கு தேவைப்படுற லொக்கேஷனுக்கு ரொம்ப அமெüண்ட் கேட்பாங்க. பேரம் பேசி கம்மியான அமெüண்ட்ல அதை முடிக்கணும். செலவை சுருக்கணும்.

டைரக்டர் தன்னோட ஸ்கிரிப்ட் ரெடியானதும், அதை எத்தனை நாள்ல முடிச்சிடலாம்னு ப்ளான் பண்ணிட்டார்ன்னா… அந்த ஸ்கிரிப்ட்டுக்கு எவ்வளவு செலவு பண்ணவேண்டியிருக்கும்னு நாங்க கரெக்டா சொல்லிடுவோம். முன்னாடியெல்லாம் பட்ஜெட் போட்டு, படங்கள் பண்ணினாங்க. ஆனா இப்ப பட்ஜெட்ங்கறது யாரு கையிலேயும் கிடையாது. ஆனா டைரக்டர் நினைச்சா சாத்தியம்.

டைரக்டர் நினைச்சால்தான் பட்ஜெட்டை ஏத்தவோ, இறக்கவோ முடியும். புரொடக்ஷன் மேனேஜர் ஓரளவுதான் செலவுகளை மிச்சப்படுத்த முடியும். பட்ஜெட் அதிகமாகுறதும், கம்மியாகுறதும் டைரக்டர் கையிலதான் இருக்கு. இப்ப யாரும் பட்ஜெட் பத்தி பேசுறதில்ல. டைரக்டர்கிட்டே கதையை கேட்கிறப்பவே, இதை நம்பளால பண்ண முடியுமான்னு புரொட்யூசர்கள் யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. டைரக்டர் சொன்ன கதைக்கு தகுந்த செலவுகளை பண்ணினால் மட்டுமே குவாலிட்டியை எதிர்பார்க்க முடியும்.

அதனால இப்ப செலவு பண்ணிதான் ஆகவேண்டிய கட்டாயம் இருக்கு. நியாயமா ஒரு படத்தோட கதைக்கு என்னென்ன தேவையோ அதற்கு செலவு பண்ணித்தான் ஆகணும். ஆனால் எங்கே பட்ஜெட்டைக் குறைக்க முடியும்னா…. நெகட்டிவ், அப்புறம் ஷூட்டிங் டேட்ஸ் இதுலதான் செலவை கம்மி பண்ண முடியும்.

அதாவது ஒரு படத்துக்கு பதிமூணாயிரம் அடி ஃபிலிம் போதும். ஆனா சிலர் லட்சக்கணக்கான அடி ஃபிலிமை வீணடிப்பாங்க. ஐம்பது சீன் இருக்கிற ஒரு ஸ்கிரிப்ட், கதையைப் பொறுத்து எழுபது நாளைக்குள்ள மொத்த ஷூட்டிங்கை முடிச்சிடலாம். ஆனா அதுக்கு மேல நாட்கள் போறப்பத்தான் பட்ஜெட்டும் மீறிப்போகுது.

ஒரு ஸ்கிரிப்ட் பக்காவா இருந்து, தேவையில்லாத எதையும் (பாட்டு, சீன்கள்) எடுக்காமல் இருந்தால் படத்தோட பட்ஜெட் பக்காவா குறையும். இந்த கேரக்டருக்கு குறிப்பிட்ட நடிகர்தான் வேணும்னு டைரக்டர் நினைச்சார்னா அந்த நடிகருக்கான சம்பளத்தை கொடுத்துத்தான் ஆகணும். எல்லாமே டைரக்டர் கையில தான் இருக்கு.

ஒரு நடிகருக்கு 5 லட்ச ரூபாய் சம்பளம்னு வச்சுக்குங்க. அதுக்குப் பதில் அவரை போடாமல் புதுமுகம் யாரையாவது நடிக்க வச்சுகூட அந்த அஞ்சு லட்ச ரூபாயை மிச்சப்படுத்துறது டைரக்டர் கையிலதான் இருக்கு. தொடர்ந்து படங்கள் எடுத்து வரும் கம்பெனிகள்ல புரொடக்ஷன் மேனேஜர் இருப்பாங்க.

ஆனா புதுசா படம் பண்ண வர்றவங்ககிட்டே படத்தோட டைரக்டர்தான் புரொடக்ஷன் மேனேஜரை சொல்லுவாங்க. காரணம் டைரக்டர்தான் அந்த புரொட்யூஸரை இண்டஸ்ட்ரிக்குக் கூட்டிட்டு வந்திருப்பார். அதனால யார் நல்லா வொர்க் பண்ணு வாங்கறது டைரக்டருக்குத் தெரியும்.

லொக்கேஷன்கள் சரியா ஃபிக்ஸ் பண்ணனும்னா, ஸ்கிரிப்ட், புரோக்ராம் லிட்ஸ்கள் பக்காவா இருக்கணும். புரோக்ராம் லிஸ்ட் சரியில்லைன்னாத்தான் கொஞ்சம் தடுமாற்றங்கள் இருக்கும். லொக்கேஷன்கள் கிடைக்கிறதில ஒருநாள், ரெண்டு நாள் தள்ளி போகலாம்.

கவர்மென்ட் லொக்கேஷன்கள் எல்லாம் முன்கூட்டியே சொல்லி, பெர்மிஷன் வாங்கணும். ரெயில்வே பெர்மிஷன் எல்லாம் ரெண்டு மாசத்துக்கு முன்பே அப்ளை பண்ணினால்தான் கிடைக்கும். அதை வாங்கி வச்சிருப்போம். ஆனா அன்னிக்கு யாராவது ஒரு ஆர்ட்டிஸ்ட்டோட டேட்ஸ் குழப்பமா வரும்.

úஸô, ஷூட்டிங்கை தள்ளிப்போடமுடியாது. காரணம் அப்ப அந்த லொக்கேஷன் பெர்மிஷனை வேற யாருக்காவது கொடுத்து வச்சிருக்கலாம். இந்த மாதிரி நடைமுறை சிக்கல்கள் வரும். அதே சமயம் பிரைவேட் லொக்கேஷன்னா சரி பண்ணிக்கலாம். ரெயில்வே, ஏர்போர்ட் லொக்கேஷன்கள்னா பெர்மிஷன் வாங்கறது கஷ்டமானது. இதெல்லாம் எங்களோட வேலைகள். இதுல குளறுபடி வந்தா ஷூட்டிங் கேன்சலாகக்கூட ஆயிடும்..

சினிமாவைப் பொறுத்தவரை எதற்குமே கல்வித் தகுதி தேவையில்லைன்னுதான் நான் சொல்லுவேன். அதுக்காக எழுதப் படிக்க தெரியாதுன்னு சொல்லக்கூடாது. தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில உறுப்பினரா சேர்ந்தால்தான் நீங்க புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்டாக சேரமுடியும். ஒரு தயாரிப்பாளர் அல்லது டைரக்டரோட சிபாரிசு இருந்தால் மட்டுமே உங்களை புரொடக்ஷன் பாயாகவோ / எக்ஸிகியூட்டிவ்வாகவோ சேர்த்துக் கொள்வார்கள்.

அதாவது அதில் மெம்பரானால்தான் நீங்க படத்துக்கு வொர்க் பண்ண முடியும்.
நாங்க வொர்க் பண்ற படத்தோட அசிஸ்டெண்ட் டைரக்டர் தனியா படம் பண்ணும்போது எங்களை கூப்பிட்டுக்குவாங்க. அதனால எங்களுக்கு தொடர்ந்து வொர்க் பண்றதுக்கான வாய்ப்புகள் வரும். கிட்டத்தட்ட பதினேழு வருஷமா சூப்பர்குட்லதான் நான் வொர்க் பண்றேன்.

ஒவ்வொரு படத்துக்கும் நாங்க சிரமப்பட்டுத்தான் ஆகணும். படத்தோட டெக்னீஷியன்கள் படம் ஆரம்பிக்கிறதுக்கு நாலு நாளைக்கு முன்பிருந்து… படம் முடிஞ்சு, பூசணிக்காய் உடைச்சதுக்கு அப்புறம் போயிடலாம். கேமராமேன்னா ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு பத்து நாளைக்கு முன்பே லொக்கேஷன் பார்க்க அப்படி இப்படின்னு வொர்க் இருக்கும்.

ஆனா எங்க புரொடக்ஷன் வொர்க் எப்படின்னா நாங்க படம் தொடங்கறதுக்கு 3 மாசத்துக்கு முன்பே எங்க வொர்க்கை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி படம் முடிஞ்சும் போஸ்ட் புரொடக்ஷன் அது இதுன்னு 3 மாசம் வொர்க் இருக்கும். ஒரு தயாரிப்பு நிர்வாகிக்குத்தான் அதாவது எங்களுக்குத்தான் சினிமாவில வேலை ஜாஸ்தி.

நான் சரியா வொர்க் பண்ணினதினாலதான் இன்னிக்கு நான் புரொட்யூஸரா புரொமோஷன் ஆகியிருக்கேன். பெரிய முதலீட்டோட வந்தால்தான் படத்தயாரிப்பாளர் ஆக முடியும். ஆனா என்னை மாதிரி மேனேஜர்கள் தயாரிப்பாளர்கள் ஆகுறதுக்குக் காரணம் எக்ஸ்பீரியன்ஸ்களும், சின்ஸியாரிட்டியும் தான்”.

Posted in Actors, Actress, Backgrounders, Chowdhry, Cinema, Directors, executives, Express, Faces, Films, Industry, Kollywood, Life, Managers, Movies, people, Producer, success, Supergood, Tips | Leave a Comment »

Chitra Lakshmanan: Kalainjar Karunanidhi & Kaviarasu Kannadasan – Sivaji, MGR, Mu Ka Muthu: Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

‘வசனக் காதல்’

கலைஞர் அவர்களை நேரில் காணாமலேயே அவர் மீது பெரும் காதல் கொண்டவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அதற்குக் காரணம் “அபிமன்யூ’ படத்தில் கலைஞர் எழுதியிருந்த அற்புதமான வசனங்கள்.

“அபிமன்யூ’ படத்தின் வசனச் சிறப்பு காரணமாக ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல ஆறு நாட்கள் தொடர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தார் கவியரசர்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல “அபிமன்யூ’ படத்தின் வசனங்களை கலைஞர் எழுதியிருந்தபோதிலும் திரைப்படத்தில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

எம்.ஜி.ஆர். அவர்களது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணிதான் சேலம் அம்பிகா தியேட்டரில் கவியரசு கண்ணதாசன் “அபிமன்யூ’ படத்தைப் பார்க்க போனபோது, அந்தப் படத்தின் வசனங்களை எழுதியவர் கலைஞர் என்ற தகவலை கண்ணதாசன் அவர்களிடம் கூறினார். “அபிமன்யூ’ படம் பார்த்த அனுபவத்தை தனது “வனவாசம்’ நூலில் கீழ்க்கண்டவாறு உணர்ச்சிகரமாக எழுதியுள்ளார் கவியரசர்.

“”அபிமன்யூ’ படத்தில் அவன் கேட்ட தமிழ் என்றும் மறக்கமுடியாத இன்பத் தமிழாகும்.

“ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்’.

“அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை’.

“கண்ணன் மனமும் கல் மனமா?’

“அர்ச்சுனனால் கூட துளைக்க முடியாத சக்ரவியூகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதானிருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண வேலை.’

இந்த வசனங்கள் இன்றுவரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அம்பிகா தியேட்டரின் சுவையான காப்பியும், “அபிமன்யூ’வில் கண்ட கருணாநிதியின் கைவண்ணமும் அவன் நெஞ்சிலே நிலைத்தன.

“”காணாமலே காதல்” என்பார்கள். அந்தக் “காதலே’ பிறந்து விட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது.

“”எப்படியாவது கருணாநிதியைக் கூட்டி வாருங்கள்” என்று அவன் சக்கரபாணியைக் கேட்டான்.

“மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு அவரை வரவழைக்க வேண்டுமென்று அவரிடம் சொன்னான்.

அன்று அவன் “மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு சொல்லியிருந்தால் எடுப்பட்டிருக்காது.

சக்கரபாணி சொன்னார். அவனும் கூட சேர்ந்து பாடினான்.
கருணாநிதியை வரவழைக்க டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார்.
ஒரு நாள் கருணாநிதியும், சக்கரபாணியும் சேலம் வந்து சேர்ந்தார்கள்.

திறமை என்பதை யாரிடம் கண்டாலும் நேருக்கு நேரே பாராட்டிவிடுவது அவனது சுபாவம்.

தன்னை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்த்துவான்.
அதுதான் திறமைக்கு தரும் மியாதை என்றே அவன் கருதினான்.
அன்று கருணாநிதியை அவன் முதன்முதலாக கோயம்பத்தூர் லாட்ஜில் சந்தித்ததும் ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனக்கு ஏற்பட்டது.

சக்கரபாணி அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துவைத்தார்.

அன்று முதல் கருணாநிதியும் அவனை உயிருக்குயிராக நேசிக்கத் தொடங்கினார்.

“மாடர்ன் தியேட்டர்’ஸில் மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்கமர்ந்தார்.

ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறி கொடுத்தது போலிருக்கும்.

ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகிற அளவுக்கு பாசம் வளர்த்தது.

அவர்கள் இருவருக்கிடையே ரகசியம் என்பதே இல்லாமலிருந்தது.
அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசிவிட்டால் அவனால் பொறுக்க முடியாது. அவருக்கும் அப்படியே”.

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் கவியரசு. தன்னைப் பற்றி எழுதும்போது “அவன்’ என்று தன்னடக்கத்தோடு இந்த நூலில் குறிப்பிட்டிருந்தார் கவியரசர்.

இப்படி நெருக்கமான நட்போடு பழகிய அவர்களுக்கு நடுவே பயங்கரமான விரிசல் ஏற்பட்டதும், பின்னர் அந்த இடைவெளி முழுவதுமாக மறைந்து இருவரும் இணைந்ததும் தமிழகம் அறிந்த வரலாறு.

“மணமகள்’ படத்தைத் தொடர்ந்து கலைஞரின் எழுத்தாற்றலில் திரை உலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படமாக “பராசக்தி’ அமைந்தது.

புரட்சிகரமான கருத்துக்களோடு அடுக்கு மொழியில் கலைஞர் அவர்கள் எழுதியிருந்த வசனங்கள் பின்னாளில் தமிழ்த் திரைப் படங்களின் வசன பாணியையே மாற்றி அமைத்தது என்றால் அது மிகையில்லை.

கலைஞர் அவர்களது வசனத்திற்கு தனது அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பால் உயிர் கொடுத்தார் சிவாஜி. ஏற்ற இறக்கங்களோடு அவர் கலைஞரின் தமிழை உச்சரித்தது கண்டு தமிழ்நாடே பரவசப்பட்டது.

சிவாஜி தனது முதல் படத்திலேயே தமிழ் நாட்டு திரைப்பட ரசிகர்கள் மனதை ஒட்டுமொத்தமாகக் கொள்ளை கொண்டார் என்றால் அதில் கலைஞர் அவர்களுக்கு கணிசமான பங்கு உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

1952-ல் வெளியான “பராசக்தி’க்குப் பிறகு இந்த 55 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் படங்கள் வெளியாகியிருந்தாலும் இன்றும் “பராசக்தி’ தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு கலைஞர் -நடிகர் திலகம் ஆகிய இருவரின் கூட்டணியே முக்கிய காரணம்.

“பராசக்தி’ படத்தைத் தொடர்ந்து “பணம்’, “திரும்பிப்பார்’, “நாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரை உலகை திசை திருப்பிய படமான “மனோகரா’ வெளியானது.

சிவாஜியின் நவரச நடிப்பு, கண்ணாம்பாவின் உணர்ச்சி மிக்க நடிப்பாற்றல், கலைஞர் அவர்களின் வீர வசனங்கள் எல்லாம் சேர்ந்து அப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியது.

நடிப்புப் பயிற்சி பெற விரும்பிய எவரும் “பராசக்தி’, “மனோகரா’ போன்ற படங்களின் வசனத்தை விலக்கிவிட்டு அந்தப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியது.

தமிழில் வசனங்கள் என்றால் கலைஞர் அவர்கள் மட்டுமே என்ற நிலை உருவானது. இந்த நிலைக்கு இவர் உயரக் காரணம் தமிழ்த்தாய் அவரிடம் கொஞ்சி விளையாடினாள் என்பது மட்டுமல்ல, எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முழு ஈடுபாட்டோடு நிறைவேற்றக் கூடிய அவரது ஆற்றலுக்கும் அதில் உரிய பங்குண்டு.

கலைஞரின் எழுத்தாற்றல் குறித்து தனது “வியப்பூட்டும் ஆளுமைகள்’ புத்தகத்தில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார் நூலாசிரியர் வெங்கட் சாமிநாதன்.

“”பராசக்தி’ படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் ஒரு குற்றவாளி கோர்ட்டில் சொல்லும் பதில் அல்ல. கோர்ட்டை நோக்கிய பதிலும் அல்ல. தமிழ் மக்கள் பல கோடிகள் அனைவரையும் நோக்கிவிடும் அறை கூவல். அது ஏதோ திருப்புமுனை, புதிய அத்தியாயம் என்றெல்லாம் பேசப்பட்டது.

அவர் எழுதிய நாடகங்கள் திரைப்படமானதும், திரைப்படமாகவே எழுதப்பட்டதுமான ஒரு பட்டியல் மாத்திரம் நமக்கு கிடைத்துள்ளது.

அதிலும் 1948-லிருந்து 1990 வரையிலான ஒரு பட்டியலை 1990-ல் பிரசுரமான ஒரு புத்தகம் தருகிறது. இந்த எண்ணிக்கை மொத்தம் 57. 1990-க்குப் பின் எழுதியவை எல்லாம் தொலைக்காட்சிப் படைப்புகள். அவை பற்றிய குறிப்புகள் இதில் இல்லை.

1947-லோ எப்போதோ “ராஜகுமாரி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத ஏ.எஸ்.ஏ.சாமி அழைத்தபோது (அப்போது கருணாநிதிக்கு வயது 23) “”என் கழக வேலைகளுக்கு இடையூறு இல்லாது முடியுமானால் எழுத ஒப்புக் கொள்கிறேன்” என்று நிபந்தனை விதித்து எழுதுகிறார்

-இத்தனையையும் வைத்துக்கொண்டு நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்று வேறு -இவற்றிற்குப் பிறகுதான் 40 வருடங்களில் 57 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் சிலவற்றிற்குப் பாடல் எழுதுவதும் என்றால் -இது அலிபாபாவின் அற்புத விளக்கும் விளக்கை உரசினால் “ஹூகும் ஆக்கா’ என்று எதிர் நிற்கும் பூதமும் பணி செய்யக் காத்திருந்தால்தான் சாத்தியம்.

திரைக்கதை, வசனம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தப் போவதில்லை என்று அதிலேயே முழு மூச்சாக ஆழ்ந்தால்கூட 40 வருடங்களில் 57 படங்கள் சாத்தியமா? தெரியவில்லை. நான் என் ஆயுசில் எழுதிய ஒரே ஒரு திரை நாடகத்திற்கு எழுத உட்காரும் முன் அதைப் பற்றி யோசித்து உள்வாங்கிக் கொள்ள இரண்டு மாதங்கள் பிடித்தன.

பின் எழுத உட்கார்ந்து 15 நாட்களுக்கும் மேல் எதுவும் எழுது ஓடவில்லை. பின்னர் ஒன்றிரண்டு மாதங்கள் ஒதுங்கியிருந்து பின் உட்கார்ந்தால் 15 நாட்கள் ஆயின எழுதி முடிக்க. இந்த மாதிரியெல்லாம் யோசித்திருக்க, மனம் ஆழ்ந்திருக்க, ஓடவில்லை” என்றெல்லாம் கருணாநிதிக்கு சாத்தியப்பட்டு வராது, கட்டி வராது.

ஸ்விட்சைத் தட்டிவிட்டால் ஓடும் யந்திரம் போலத்தான் அவர் உட்கார்ந்தால் எழுதிய காகிதங்கள் மடியிலிருந்து விழுந்துகொண்டே இருக்கவேண்டும். உதவியாளர் பொறுக்கி அடுக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

“ஓர் இரவு’, “வேலைக்காரி’க்குப் பிறகு சினிமாவுக்குக் கதை வசனம் எழுதாத தி.மு.க. தலைவர் யாரும் உண்டா? தெரியவில்லை. தேடிப் பார்த்தால் ஓரிருவர் கிடைக்கலாம். ஆனால் அண்ணாவையும், கருணாநிதியையும் தவிர வேறு யாரும் நிலைக்கவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை.

மற்ற எல்லோரையும் பின்தள்ளி கருணாநிதியைத்தான் அண்ணாவுக்கு அடுத்த பெருந்தலைவராக காலம் முன் வைத்துள்ளது என்றால் அதில் கணிசமான பங்கு கருணாநிதியின் நாடகம், சினிமா, கற்பனைத் திறன் தந்த எழுத்து இவற்றிலிருந்து பெற்றதாகச் சொல்ல வேண்டும்.”

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமிநாதன்.

——————————————————————————————————————————————————–

தி.மு.கழகத்தில் உறுப்பினராக இருந்த சிவாஜி கணேசன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக தி.மு.க.வை விட்டு விலக வேண்டி வந்தது என்றாலும், அதனால் அறிஞர் அண்ணா மீது கொண்ட பாசத்தில் இம்மியளவு கூட சிவாஜி அவர்களிடம் குறையவில்லை.

அதே போன்று கலைஞர் மீதும் மாறாத பற்று கொண்டிருந்தார் சிவாஜி. அதன் காரணமாகத்தான் தனது ஆரூயிர் நண்பன் நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் பல எதிர்ப்புகளுக்கு இடையிலேயும் சிலை எடுத்து பெருமைப் படுத்தினார் கலைஞர்.

தனது சுயசரிதையில் பல இடங்களில் கலைஞர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் சிவாஜி. “திரும்பிப் பார்’ படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “”திரும்பிப் பார்’ படத்திற்கு எழுதிய வசனங்களைப் போல கலைஞர் கருணாநிதி அவர்கள் மற்ற எந்தப் படங்களிலும் எழுதவில்லை என்று நான் நினைக்கிறேன்.

அவ்வளவு அருமையான வசனங்களையெல்லாம் அந்தப் படத்தில் எழுதியிருந்தார். அந்தப் படம் ஒரு அருமையான திரைக்காவியம்” என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் நடிகர் திலகம், “மனோகரா’ பட அனுபவத்தைப் பற்றி விவரிக்கும்போது, “”எனக்கு “மனோகரா’ படம் புது அனுபவமாகத் தெரியவில்லை.

நாடகத்தின்போது நான் சம்பந்த முதலியாரின் வசனத்தைப் பேசினேன். அது படமாக எடுக்கும்போது கலைஞர் அவர்களின் வசனத்தைப் பேசினேன். அருமையான வசனங்கள். அது வசனம் பேசும் காலம். “மனேகரா’வில் வசனங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். இப்போது கூட அப்பட வசனங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.

பொன்னும் மணியும்
மின்னும் வைரமும்
பூட்டி மகிழ்ந்து
கண்ணே! முத்தே!
தமிழ்ப் பண்ணே!
என்றெல்லாம் குலவிக் கொஞ்சி
தங்கத்தில் ஆன கட்டிலிலே
சந்தனத் தொட்டினிலே

என்றெல்லாம் வசனம் இடம் பெற்ற அந்தப் படம் அந்தக் காலத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படமாகியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் திலகம் அவர்களது சுயசரிதையைப் போலவே கலைஞர் அவர்களின் சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி’ நூலிலும் பல இடங்களில் சிவாஜி அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

கலையுலகில் தனது வளமான வசனங்களால் சிவாஜி அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கலைஞர் அவர்களின் வாழ்க்கையை நடிகர் திலகம் காப்பாற்றிய ஒரு சம்பவத்தை உணர்ச்சி பொங்க தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.

“”ஒரு முறை நானும், கருணானந்தமும், சிவாஜி கணேசனும் காஞ்சிபுரம் சென்று அண்ணாவைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறோம். அப்போதுதான் “பராசக்தி’ படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது.

காரின் வெளிச்சம் வேறு மங்கலாகி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் ஒரு பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மாற்று வழிக்கு குறிப்புப் பலகை வைத்து சிவப்புத் துணி கட்டியிருந்தார்கள்.

விளக்கு வெளிச்சம் போதாதால் கார் டிரைவர் அதைக் கவனிக்காமல் மாற்று வழியில் செல்வதற்குப் பதிலாக நேராகச் சென்று விட்டார். உடனே நண்பர் கணேசன் கூச்சல் போடவே கார் டிரைவர் திடீரென்று பிரேக்கை அழுத்திவிட்டார். பிரேக் போடப்பட்ட வேகத்தில் மழைத் தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் காரின் சக்கரங்கள் வழுக்கி ஒரு சுற்றுச் சுற்றி நின்றது.

கார் எப்படியிருக்கிறது என்பதைக் காருக்குள்ளிருந்த நாங்கள் கவனித்தோம். கார் சக்கரம் ஒரு அங்குலம் நகர்ந்தால் நாங்கள் செங்குத்தான ஒரு பள்ளத்தாக்கில் காரோடு விழுந்து நொறுங்கிப் போய்விடுவோம்.

அப்படிப்பட்ட ஆபத்தான விளிம்பில் கார் நின்று கொண்டிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர். தனக்கும் சிவாஜிக்கும் இடையே நிலவி வந்த பாசப் பிணைப்பு எத்தகையது என்பதற்கு எடுத்துக் காட்டாக சிவாஜி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“”எனக்கும் சிவாஜிக்கும் இருந்த நட்பு யாராலும் விலக்க முடியாத பாசமாக உருவெடுத்தது. அந்தப் பாசம் எப்படிப்பட்டது என்பதை 1963-ஆம் ஆண்டு என் தாய் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது வெளியிடப்பட்ட ஒரு மலரில் சிவாஜியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

“”சிறு வயது முதல் எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் உண்டு. இதற்கு எத்தனையோ காரணம். கலையோ, அன்போ, கொள்கையோ, குணமோ, எதுவோ எங்களை உயிராக இணைத்து வைத்திருந்தது. நாளடைவில் அது வளர்ந்து வலுப்பெற்றது. அவர்! அது யார்? வாய் நிறைய “மூனா கானா’ என்று நான் இனிமையோடு அழை க்கும் அவர்தான்.

அந்தக் காலத்தில் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் அஞ்சுகம் அம்மையார் அநேக நாட்கள் ஒன்றாகவே உணவு படைப்பது உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறுவதில் கொஞ்சம் பாரபட்சமாக நடந்து கொண்டதை நான் கவனிப்பதும் உண்டு. நல்ல பண்டங்களை ஒருவருக்கு அதிகமாகவும், ஒருவருக்கு குறைவாகவும் போடுவார்கள்.

“”இப்படிச் செய்யலாமா? இது நீதியா?” என்று நான் கேட்பேன்.
“”நீ செல்லப்பிள்ளை. உனக்கு அதிகம்தான்” என்பார்கள் அந்தத் தாய்.

அந்தச் செல்லத்தை மறந்து விட்டுப் போய்விட்டார்கள். நான் என்றும் அந்த அன்புச் செல்லத்தை மறக்க முடியாது. எனக்கு அஞ்சுகம் அம்மையாரும் ஒரு தாய்”.

இது அந்த மலரில் சிவாஜி எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.

“மனோகரா’வைத் தொடர்ந்து “ரங்கூன் ராதா’, “ராஜாராணி’, “புதையல்’ என்று கலைஞர் அவர்களும் சிவாஜியும் இணைந்து பணியாற்றிய பல படைப்புகள் வெளிவந்தன.

ஆரம்பக் கட்டங்களில் சிவாஜி கணேசன் அவர்களோடு இருந்த அளவு நெருங்கிய நட்பு எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் கலைஞர் அவர்களுக்கும் இருந்தது குறித்தும், “ராஜகுமாரி’ படத்தில் எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் கலைஞர் மிகவும் பிடிவாதமாக இருந்து ஜெயித்தது குறித்தும் ஏற்கனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

“ராஜகுமாரி’யைத் தொடர்ந்து “மந்திரிகுமாரி’, “மருதநாட்டு இளவரசி’, “நாம்’, “மலைக்கள்ளன்’, “புதுமைப்பித்தன்’, “காஞ்சித் தலைவன்’ என்று பல படங்களில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் இணைந்து பணியாற்றினர்.

எம்.ஜி.ஆருக்கு கலைஞர் கதை வசனம் எழுதிய கடைசிப் படமாக “காஞ்சித் தலைவன்’ அமைந்தது. இவர்கள் இருவர் உறவு மற்றும் பிரிவு குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்.

கலைஞர் அவர்களின் கைவண்ணத்தில் வெளியான படங்களில் “பூம்புகார்’ மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பு. இந்தக் கதையை கலைஞரின் “மேகலா பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

ஆனால் முதலில் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்க திட்டமிட்டவர் ஏவி.எம்.அவர்கள் ஆவார்கள். ஏவி.எம்.அவர்கள் அப்படத்தை ஏன் கைவிட்டார் என்பது குறித்து தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயாணன்.

“”கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி மு.கருணாநிதி மத்திய சிறைச் சாலையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக டைரக்டர் கிருஷ்ணன் போயிருந்தபோது, “”என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“”சிலப்பதிகாரம் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் கருணாநிதி.
சிறையில் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வந்த கிருஷ்ணன் தன் சகா பஞ்சுவிடம் சொன்னார். “”கண்ணகி படம் வந்து ரொம்ப நாட்களாகின்றன. மு.க. சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படித்து வருகிறார். அந்தக் காவியத்தை மீண்டும் சினிமாவாக்கினால் நன்றாக இருக்கும்”.

இருவரும் புறப்பட்டுச் சென்று ஏவி.எம்.செட்டியாரிடம் சொன்னார்கள்.

“”அவர் இப்பொழுது அரசியலில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறாரே! எப்படி வசனம் எழுதித் தருவார்?” மேனா கேட்டார்.

அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஒரே சமயத்தில் அவரிடமிருந்து ஒட்டு மொத்தமாக எழுதி வாங்கி வந்து விடுகிறோம்.”

மு.கருணாநிதி விடுதலையாகி வந்தார். அவரிடம் நடந்த விஷயங்களைச் சொன்னார்கள் கிருஷ்ணனும், பஞ்சுவும்.
“”எழுதித் தருகிறேன். இதோ படத்தின் தலைப்பு. “பூம்புகார்”.
அன்றைய தினம் நள்ளிரவிலேயே “முரசொலி’ அலுவலகத்திற்கு மெய்யப்பச் செட்டியார் கிருஷ்ணன் பஞ்சுவுடன் வந்தார்.

பேசினார். முன் பணம் கொடுத்தார். 1959-ல் “தங்கப் பதுமை’ படம் வெளி வந்ததும் “பூம்புகார்’ திட்டத்தைச் செட்டியார் கைவிட்டு விட்டார். காரணம் “கண்ணகி’ கதை மாதிரியே “தங்கப் பதுமை’ திரைக்கதை அமைந்திருந்ததுதான்.

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.

——————————————————————————————————————————————————–
பண்பிற்கரசோன்

“பூம்புகார்’ திரைப்படத்தில் சிவாஜிகணேசனை கோவலனாகவும், சாவித்திரியை கண்ணகியாகவும், பத்மினியை மாதவியாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் ஏவி.எம். “தங்கப்பதுமை’ காரணமாக அவர் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்கத் தயங்கியதும், தன் சொந்தத் தயாரிப்பில் “பூம்புகார்’ திரைப்படத்தை எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜஸ்ரீ ஆகியோர் நடிக்க தயாரித்தார் கலைஞர். கெüந்தி அடிகள் வேடத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடித்தார்.

படம் முடிந்தவுடன் ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார் கலைஞர். படத்தை வெகுவாக ரசித்தாலும் பட வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்குமாறு கலைஞரிடம் கேட்டுக் கொண்டார் ஏவி.எம். அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான்.

“”இந்தக் கதையை சிறு மாறுதல்களுடன் டைரக்டர் ஸ்ரீதர், “கலைக்கோயில்’ என்ற பெயரில் மிகப் பிரமாதமாக எடுத்திருக்கிறார். நான் கூட படத்தைப் பார்த்து விட்டு அவரைப் பாராட்டினேன். தங்களது “பூம்புகார்’ படமும் மிகச் சிறப்பாக இருக்கிறது, என்றாலும் இப்போது வெளியிட வேண்டாம்” என்றார் ஏவி.எம். “கலைக்கோயில்’ படத்தோடு வெளியானால் “பூம்புகார்’ திரைப்படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்பது எவி.எம். அவர்களின் கருத்தாக இருந்தது.

“பூம்புகார்’ திரைப்படத்தைப் பற்றியும், அதன் வெற்றி குறித்தும் கலைஞர் அவர்களுக்கு மிகச் சிறந்த அபிப்ராயம் இருந்தாலும் அனுபவசாலியான ஏவி.எம்.அவர்களது பேச்சு கலைஞரை சோர்வடையச் செய்தது. அந்த மனந்தளர்ச்சியோடு வந்த கலைஞர் முரசொலி மாறனிடம் செட்டியார் சொன்னதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

மாறன் கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்காமல் “பூம்புகார்’ படத்தைப் பொறுத்தவரை கதை சொல்லப்பட்டிருக்கிற முறைக்காகவும், உங்கள் வசனத்திற்காகவும் கண்டிப்பாக அது வெற்றி பெறும். நாம் தைரியமாக படத்தை வெளியிடுவோம். அதுவும் “கலைக்கோயில்’ படம் வெளியாகின்ற நாளன்றே வெளியிடுவோம்” என்று கூறியதோடு மட்டுமின்றி அதே தேதியில் படத்தை வெளியிடவும் செய்தார்.

“கலைக்கோயில்’ மிகப் பெரிய தோல்வியைக் கண்டது. ஆனால் “பூம்புகார்’ படமோ நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

“பூம்புகார்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் கலைஞருக்கு ஃபோன் செய்த ஏவி.எம், “”என்னுடைய கணக்கு தவறு என்பதை உங்கள் படத்தின் வெற்றி நிரூபித்துவிட்டது. உங்களையும், மாறனையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதே போன்று ஒரு சம்பவம் கலைஞர் வாழ்க்கையில் எல்.வி.பிரசாத் அவர்களாலும் நடைபெற்றிருக்கிறது. அது குறித்து “கலை உலகச் சூரியன் கலைஞர்’ என்ற பாராட்டு விழாச் சிறப்பு மலரில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் அமிர்தம்.

“”மாபெரும் இயக்குனர் எல்.வி.பிரசாத் கலைஞரின் கதை வசனத்தில் “இருவர் உள்ளம்’ என்றொரு படத்தைத் தயாரித்தார். சிவாஜிகணேசன், சரோஜாதேவி ஜோடியாக நடித்த இப்படத்தின் தனிக்காட்சி முக்கியமான கலை உலகப் பிரமுகர்களுக்காக ரேவதி ஸ்டூடியோவில் நடைபெற்றது.

படம் முடிந்ததும் இயக்குனர் பிரசாத், “”படம் நிறைவாக இல்லாதது போன்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?” என்று கலைஞரிடம் கேட்டார். அதற்கு கலைஞர், “”இந்தப் படம் நிச்சயமாக 100 நாட்கள் ஓடும். மக்கள் பேசக் கூடிய படமாக இது அமையும்” என்றார்.

உறுதியாகத்தான் சொல்கிறீர்களா என்று கேட்ட பிரசாத், “”இந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றால் உங்களுக்கு சன்மானமாக பத்தாயிரம் ரூபாய் வழங்குகிறேன்” என்றார்.
படம் சென்னை வெல்லிங்டன் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைத் தொட்டது. நூறாவது நாள் முடிந்த மறுநாள் இயக்குனர் பிரசாத், கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கலைஞரைச் சந்தித்தார்.

“”நீங்கள் சொன்னபடி படம் நூறு நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. உங்கள் கணிப்பு எதிலும் சரியாக இருப்பது போல் “இருவர் உள்ளமும்’ வெற்றி பெற்றுள்ளது. என் வாக்குப்படி இதாங்க ரூபாய் பத்தாயிரம் என்று சொல்லி பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்” என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குனர் அமிர்தம், “மலைக்கள்ளன்’ படத் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தையும் அந்த மலரில் கீழ்க் கண்டவாறு வர்ணித்துள்ளார்.

“”மலைக்கள்ளன்’ படம். கலைஞரின் உயிரோட்டமான வசனங்கள். எம்.ஜி.ஆர். கதாநாயகன். படம் முடிந்த நிலையில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலுவுக்கும் கலைஞருக்கும் இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலில் இந்தப் படத்தில் திரைக்கதை, வசனம் கருணாநிதி” என்று என் பெயரைப் போடக் கூடாது என்று கடுமையாகக் கூறிவிட்டு கலைஞர் திருவாரூர் போய் விட்டார்.

எம்.ஜி.ஆருக்குப் பெரிய கவலை வந்து விட்டது. இன்றைய நிலையில் கலைஞர் பெயரில்லை என்றால் படம் வெற்றி பெறாது. ஏற்பட்டிருக்கிற இந்த ஊடலை எப்படித் தீர்ப்பது என சிந்தித்த எம்.ஜி.ஆர். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை அழைத்துக் கொண்டு திருவாரூருக்குச் சென்றார்.

திருவாரூரில் கலைஞரின் இல்லத்தில் அவரைச் சந்தித்த கே.ஆர்.ஆர். கலைஞரிடம் நீண்ட நேரம் பேசி அவரைச் சமாதானப்படுத்தினார். எம்.ஜி.ஆரோ, “”உங்கள் பெயர் படத்தின் டைட்டிலில் வரும்போதே கைதட்டல் அரங்கை அதிர வைக்கிறது. உங்கள் பெயர் இல்லை என்றால் படம் வெற்றி பெறுவது சந்தேகமே. நான் நடித்த படங்கள் எல்லாம் உங்கள் வசனச் சிறப்புகளாலேயே வெற்றி பெறுகின்றன.

இந்தப் படமும் வெற்றி பெற வேண்டும். அதற்குத் திரையில் உங்கள் பெயர் வந்தே ஆக வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டினார். கலைஞர் ஒருவாறு சம்மதிக்க, கலைஞர், கே.கே.ஆர்., எம்.ஜி.ஆர். மூவரும் சென்னை வந்தனர். மகிழ்ச்சியான சூழலில் ஸ்ரீராமுலு அவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஸ்ரீராமுலு, “”எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி! மன நிறைவான உங்கள் ஒப்புதல் இல்லாமல் “மலைக்கள்ளன்’ படத்தை நான் வெளியிடுவதில்லை என்ற முடிவோடு இருந்தேன்” என்றார்.

அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர். அவர்கள் நெகிழ்வோடு கண் கலங்கிய நிலையில் ஸ்ரீராமுலு -கலைஞர் இருவரது கரங்களையும் ஒன்றாக இணைத்து முத்தமிட்டார்.
பின்னாளில் கலை உலகில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய மூவருடனும் ஆரம்ப காலம் முதலே நெருங்கிய நட்பு கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு காலச் சூழ்நிலை காரணமாக கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் பலமான கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் அவர் கொண்ட கருத்து வேற்றுமை அளவிற்கு சிவாஜி அவர்களோடு அவர் மாறுபடவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதன் காரணமாகத்தான் கலைஞர் அவர்களது பவள விழாவையொட்டி கலை உலகம் நடத்திய பாராட்டு விழாவில் கலைஞர் அவர்களைப் பாராட்டி நடிகர் திலகம் பேசிய பேச்சு அத்தனை உணர்ச்சிப் பூர்வமாக அமைந்தது. சிவாஜி, கலைஞர் ஆகிய இருவருடைய கண்களும் அந்தப் பாராட்டு விழாவின்போது கலங்கியதைக் கண்ட அனைவரும் அவர்கள் நட்பின் ஆழத்தை அன்று உணர்ந்தனர்.

அரசியல் காரணமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், கலைஞருக்கும் இடையே இருந்த உறவில் எத்தனை பெரிய விரிசல் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஆனாலும் எம்.ஜி.ஆர். இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் அன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய கலைஞர் செய்த முதல் காரியம் எம்.ஜி.ஆருக்கு இறுதி மரியாதை செலுத்த ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றதுதான்.

ஸ்ரீராமுலு நாயுடு அவர்களுடன் ஏற்பட்ட வருத்தத்தைக் களைந்தது போல தனது நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதை மறந்து அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுகின்ற மாபெரும் பண்புக்குச் சொந்தக்காரராக கலைஞர் இன்றளவும் விளங்கி வருகிறார். அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

மலையளவு நெஞ்சுறுதி
வானளவு சொற்பெருக்கு
கடலளவு கற்பனைகள்
கனிந்துருகும் கவிக்கனிகள்

இலை தலையாய் ஏற்றமுற்று
இளந்தலைகள் வாழ்த்தொலிக்க
அவைத்தலைமை ஏற்றிருக்கும்
அன்புமிகு என் தோழ!

கூட்டத்தைக் கூட்டுவதில்
கூட்டியதோர் கூட்டத்தின்
நாட்டத்தை நாட்டுவதில்
நற்கலைஞன் நீயிலையோ

அந்தச் சிரிப்பலவோ
ஆளையெல்லாம் கூட்டி வரும்
அந்தச் சிறு மீசை
அப்படியே சிறைப்படுத்தும்!

சந்திரனைப்போலத்
தக தகவென்று ஒளிரும்
அந்த வழுக்கையில்தான்
அரசியலே உருவாகும்.

எந்தத் துயரினிலும்
இதயம் கலங்காதோய்!
முத்தமிழ்த் தோழ!
முனை மழுங்கா எழுத்தாள!

திருவாரூர்த் தேரினையே
சீராக்கி ஓட விட்டுப்
பரிசாகப் பெற்றவனே!
கருணாநிதித் தலைவ!
கவிதை வணக்கமிது

என்று கலைஞரைப் பாராட்டி கவிதை பாடிய கண்ணதாசனுக்கும் கலைஞருக்கும் இடையே எழுந்த விரிசல் பலமானது என்றாலும், அந்த விரிசலை மீறி ஒருவர் மீது ஒருவர் மாறா நட்பு கொண்டிருந்தனர்.
——————————————————————————————————————————————————–
கவிஞருக்கு கலைஞரின் கவிதை

“இல்லற ஜோதி’ படத்திற்காக எழுதப்பட்ட “அனார்க்கலி’ நாடகம்தான் கலைஞருக்கும் கவியரசருக்குமிடையே முதல் விரிசலை ஏற்படுத்தியது. அந்த விரிசலை ஒரு அகழி அளவுக்கு விரிவாக்கியதில் இரு தரப்பிலுமிருந்த “நல்ல’ நண்பர்களின் பங்கு அதிகமாக இருந்தது.

பத்திரிகைகளில் பத்து கவிதைகளும், சினிமா படங்களுக்காக 5 பாடல்களும் மட்டுமே எழுதியிருந்த நிலையில் கண்ணதாசனை “கவிஞர்’ என்று மேடயில் அழைத்து பெருமைப்படுத்தியவர் கலைஞர்தான் என்பதை நான் ஏற்கனவே இக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

கலைஞர் அவர்களோடு கருத்து வேற்றுமை வந்த காலங்களில் கூட அதை மறக்காமல் பல பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். “”கருணாநிதியும் நானும் எழுதத் தொடங்கியது ஏறக்குறைய ஒரே காலத்தில்தான்.

நான் அவரது எழுத்தைத்தான் முதலில் காதலித்தேன். என்னுடைய எழுத்துக்களில் அவருக்குள்ள ஈடுபாடுகள் போலவே அவரது எழுத்துக்களில் எனக்கு ஈடுபாடு உண்டு.

அரசியலில் பதவிகள் வரலாம். போகலாம். ஆனால் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் “ரிக்கார்டு’ எழுத்துதான். எழுத்துத் துறையில் கருணாநிதியை மிஞ்சக் கூடியவர் எவரும் இல்லை. பதவி போய் விட்டாலும் அவர் நிலைத்து நிற்கப் போவது அவரது எழுத்துக்களில்தான்.

முதல் முதலாக பொள்ளாச்சி கூட்டத்தில்தான் என்னைப் பேச வைத்து பேச்சாளனாக அரங்கேற்றினார் கருணாநிதி. பேசத் தெரியாத நான் பேசப் பழகிக் கொண்டேன். ஆமாம். என்னை அரசியல் மேடையில் பேச “ஆதிமுதலாய்’ அரங்கேற்றி வைத்தவரே அவர்தான்.

அவரோடு பல சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவரோடு போகும் நான் ஆரம்பத்தில் மேடைகளில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டேன். அப்படிக் குறுகிய நேரம் நான் பேசுவதற்கே கலைஞர் என்னைக் கேலி செய்வார் ஆனால் அதற்கடுத்தக் கூட்டத்திலும் என்னைக் கட்டாயம் பேச வைப்பார்.

அப்படி வற்புறுத்தி பேச வைத்தே என்னை அவர் அரை மணி நேரம், முக்கால்மணி நேரம், சில நேரங்களில் ஒரு மணி நேரம்கூடத் தயங்காமல் பேசும் ஒரு வழக்கமான கழகப் பேச்சாளராக்கி விட்டார்.

நான் அரசியலுக்கு வந்தது, பேச்சாளரானது இதெல்லாம் பாவமோ, புண்ணியமோ அவரைத்தான் சேரும்” என்று பல கால கட்டங்களில் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசனது இந்தத் திறந்த மனதை கலைஞர் பல முறை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். “”எனக்கும் அவருக்கும் ஆயிரம் மனவேறுபாடுகள், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் வந்த பிறகும்கூட எந்த ஒரு இடத்திலும் முதன்முறையாக நான்தான் அவரை “கவிஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தேன் என்பதை கண்ணதாசன் என்றைக்கும் சொல்ல மறந்ததில்லை. அப்படி நன்றி உள்ளவர் கண்ணதாசன்.

பல பேர் நன்றியை மறந்துவிடுவார்கள். அதுவும் என்னுடைய வாழ்க்கையில் நன்றி மறந்தவர்கள் ஏராளமானவர்கள். ஆனால் அரசியலில் தனிப்பட்ட முறையில் சில நேரங்களில் அவர் எனக்குப் பகையாக மாறியும்கூட அந்த நன்றியைக் கடைசி வரை மறக்காமல் “என்னை முதன்முதலில் கவிஞர் என்று அழைத்தவர் கருணாநிதிதான்’ என்று கூறுவார் கண்ணதாசன்.

அதை மகிழ்ச்சியான நேரத்தில் மட்டுமல்ல! என்னைத் திட்டி எழுதிய புத்தகத்தில் கூட அதை மூடி மறைக்காமல் மனம் திறந்து அவர் எழுதியிருக்கிறார்” என்று பலமுறை கலைஞர் பரவசப்பட்டதுண்டு.

கவிஞர் மறைந்தபோது கலங்கிய கண்களுடன் அவருக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கற்பா அந்த இருவரின் நட்பின் ஆழத்துக்கு சாட்சியாக இன்றும் விளங்குகிறது.

“”என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே! உன்
இதயத் துடிப்பை, ஏன் நிறுத்திக் கொண்டாய்!

தென்றலாக வீசியவன் நீ- என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! -அப்போதும்
அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதேயில்லை நண்பா!

கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ -உன்னைக்
காலமென்னும் பூகம்பம் தகர்த்துத்
தரை மட்டம் ஆக்கி விட்டதே!

கை நீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியினிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ;
அமைதிப் பால் அருந்தித் தூங்கிவிட!

இயக்க இசைபாடி களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முள்ளை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை

திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்- சுவைப்
பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;
தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றுவிட்டாய்?

அடடா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!
ஆயிரங் காலத்துப் பயிர் நம் தோழமையென
ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்!

அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்!
நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலை பெற்ற புகழ் உனக்கு!

இந்த அதிசயத்தை விளைவிக்க -உன்பால்
இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்
என் நண்பா! இனிய தோழா!

எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத் தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?

எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!”

என்று கலைஞர் எழுதிய கவிதாஞ்சலி கவிஞரின் பிரிவு எந்த அளவு கலைஞர் அவர்களைப் பாதித்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

“”தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் பெயர்களுக்கு இணையாக சுவரொட்டிகளில் வசனகர்த்தாவின் பெயரும் இடம்பெற முன்னோடியாக இருந்தவர் கருணாநிதி.

கதை – வசனம் மு.கருணாநிதி என்று ஒரு படத்தின் விளம்பரம் வந்தாலே அதன் வெற்றிக்கு உத்திரவாத முத்திரை குத்தப்பட்டது” என்று தனது “திரை வளர்த்த தமிழ்’ நூலின் முதல் தொகுதியில் “பேசும் படம்’ ஆசிரியர் ஆசிரியர் திரு. ராம்நாத் அவர்களால் பாராட்டப்பட்ட கலைஞர், “பூம்புகார்’ திரைப் படத்தைத் தொடர்ந்து “மணிமகுடம்’, “மறக்க முடியுமா’, “அவன் பித்தனா’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.

அவரது வாழ்க்கையில் அரசியல் -சினிமா என்று வரும்போது அரசியலுக்கே முதலிடம் என்ற திடமான சிந்தனையோடு திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் என்பதால் 1967-ல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அவரது கலை உலகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது என்பது உண்மை.

1967-ல் வெளியான “தங்கத் தம்பி’ “வாலிப விருந்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 1970-ல் “எங்கள் தங்கம்’ திரைப்படம் வெளிவந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸில் இணைந்த அந்த இரு மாபெரும் கலைஞர்களும் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படம் “எங்கள் தங்கம்’தான். எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டதையும், அதில் அவர் உயிர் மீண்டதையும் குறிக்கும் வகையில்,

“நான் செத்துப் பொழச்சவன்டா-எமனைப்
பார்த்துச் சிரிச்சவன்டா
வாழை போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா’

என்று தொடங்கும் அப்பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
1972-ல் தனது மகன் மு.க.முத்துவை “பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர். “அஞ்சுகம் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் உருவான இப்படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கு பெற எம்.ஜி.ஆர் வந்திருந்தார்.

“”புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்தான் என் ஆசான்” என்று மு.க.முத்து பேசியதைப் பற்றி தனது உரையில் குறிப்பிடும்போது, “”துரோணாச்சாரியாரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில் வித்தையிலே தேர்ச்சிப் பெற்றதைப் போல இங்கே எம்.ஜி.ஆரை ஆசான் என்று கூறிய முத்து அப்படிப்பட்ட புகழையும் சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார் கலைஞர்.

இறுதியாக மு.க.முத்துவை வாழ்த்திப் பேச வந்த எம்.ஜி.ஆர், “”என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி மு.க. முத்து பேசினார். அதைக் கேட்டுப் பெருமைப்படுகிறேன்.

ஆனால் முத்து ஒரு நாள் கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன்.

ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை- நடிப்பு இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும்” என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

தி.மு.கழகத்தில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் இணைந்து செயலாற்றி பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வல்லமை படைத்த இரு ஆற்றல் மிகுந்த சக்திகளான கலைஞர் அவர்களுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவிற்கு குறுக்கே முதல் கோட்டை இழுத்தது மு.க.முத்துவின் திரையுலகப் பிரவேசம்.

Posted in ADMK, Anna, AVM, Biosketch, Chettiyar, Cinema, dialogues, DMK, Express, Faces, Films, Ganesan, History, Incidents, Kalainjar, Kannadasan, Kannadhasan, Kannathasan, Karunanidhi, Kaviarasu, Kavidhai, Kavithai, Life, MGR, Movies, Muthu, people, Poems, Shivaji, Sivaji, Sridhar, Tidbits, Trivia | 1 Comment »

Burmese Human Rights Activist Daw Aung San Suu Kyi – Myanmar: Biosketch

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

புரட்சிப் பெண்: வீட்டுச் சிறையில் “இரும்புப் பெண்மணி’!

முத்தையா வெள்ளையன்

சின்னத் திரைச் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலிருக்கும் ஆங் சூயியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங் சூயியின் போராட்டச் சுருக்கம் இது:

ஜெனரல் ஆங் சாங்கின் மகள் ஆங் சூயி. இரண்டாவது வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர் இவர். 1940 ஆம் ஆண்டில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் இவருடைய தந்தை பங்கேற்றவர்.

1945-ம் ஆண்டு பிறந்த ஆங் சூயி புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் படித்தது கிறிஸ்துவ கத்தோலிக்க பள்ளியில். 1960-ம் ஆண்டில் இவருடைய தாய் இந்தியாவில் பர்மாவின் தூதுவராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வசித்துள்ளார் ஆங் சூயி.

தம்முடைய உயர் கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அங்கு மைக்கேல் ஆரிச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸôண்டர், கிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இங்கிலாந்தில் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருந்தார். பர்மாவில் இராணுவ ஆட்சி பல கொடுமைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சுதந்திரமாக மியான்மருக்குப் போய்விடமுடியாது. மிகவும் பழைமையும், மூடநம்பிக்கையும் உள்ள மக்களாக பர்மிய மக்கள் இருந்தனர். தெற்காசியாவில் 45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக பர்மா விளங்குகிறது. “இம்’ என்றால் சிறைவாசம், “ஏன்’ என்றால் வனவாசம்… என்ற நிலைமை பர்மாவில் இருந்த சூழ்நிலையில்தான் ஆங் சூயியின் அன்னையான டான் கிம்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைப் பார்க்க இங்கிலாந்திலிருந்து 1988-ல் கணவரையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பர்மாவுக்குத் திரும்பினார் ஆங் சூயி.

தாய்நாடு திரும்பிய ஆங் சூயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. பர்மாவில் அப்போது சுதந்திர ஜனநாயக இயக்கம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் வெகுவாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தில் ஆங் சூயி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் அப்போது ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை அறிவித்தது. ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போயினர்.

போராட்டம்…

1990-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பர்மாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆங் சூயி என்.எல்.டி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை இராணுவ அரசு ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி பெற்ற ஆங் சூயி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அன்றையிலிருந்து இன்னமும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு 1991-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருக்கும் ஆங் சூயியின் விடுதலையை பர்மா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

வீட்டிற்குள்ளேயே ஆங் சூயியைப் பூட்டி வைத்தாலும், அடக்குமுறையை மீறி அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திய சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் இதுதான்:

உலகப் பெண்கள் மாநாடு 1995-ல் பீஜிங்கில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுக்க ஆங் சூயியிக்கு பர்மிய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் ஆங் சூயி தன்னுடைய பேச்சைப் பதிவு செய்து, அந்த வீடியோவை ரகசியமாக வெளியே அனுப்பினார். அந்த வீடியோ, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சின் சாரம்சத்தை அரசியல் பார்வையாளர்கள் பின்வருமாறு கூறினர்:

அவருடைய பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், புத்தமத, காந்திய தன்மையை இருந்தது. அவரின் பேச்சில் “”எந்தப் போரையும் பெண்கள் தொடங்கவில்லை; ஆனால் போரின் கொடுமைகளை அனுபவிப்பது பெண்களும், குழந்தைகளும்தான்” என்றார். அவரின் முழுப் பேச்சும் ஆளும் எஸ்.எல்.ஓ.ஆர்.எஸ். அமைப்பை மறைமுகமாகத் தாக்குவதாக இருந்தது.

கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கூட மனிதாபிமானத்தோடுதான் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆங் சூயியின் விஷயத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. 1999-ல் ஆங் சூயியின் கணவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் தன் மனைவியைப் பார்ப்பதற்கு பர்மிய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அதற்கு பர்மிய அரசு, “”நீங்கள் இங்கு வந்தால், உங்கள் நோய்க்கான சிகிச்சை வசதிகள் எங்கள் நாட்டில் இல்லை. உங்கள் மனைவியை வேண்டுமானால் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்” என்றது.

இதற்கு ஆங் சூயி, “”ஒருமுறை பர்மாவை விட்டு வெளியேறினால் திரும்ப பர்மாவுக்குள் வர எனக்கு அனுமதி கிடைக்காது. அதனால் நான் செல்லப் போவதில்லை” என்று உறுதியாக இருந்தார். அவருடைய கணவர் தம் 54-ம் வயதில் மரணமடைந்தார். கடைசிவரை அவருடைய கணவரின் ஆசை நிறைவேறவே இல்லை. இப்போது அவருடைய மகன்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பர்மாவுக்கு சுதந்திரம் வேண்டும். ஆங் சூயி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை ஐ.நா. சபையில் வைத்துள்ளது. ஐ.நா.வின் தூதர் நேரடியாக பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

அங்குள்ள புத்தபுக்குகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆங் சூயி என்ற “இரும்பு பெண்மணி’ விடுதலை செய்யப்படுவாரா, பர்மாவுக்கு ஜனநாயகம் கிடைக்குமா? 1992-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைதிப் பரிசு இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆங் சூயி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவருவதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும்தானே அவரின் அமைதிக்கான உரிய பரிசாக இருக்கமுடியும்?!

Posted in Activist, Activists, AngSan, Arrest, AungSan, Biosketch, Buddhism, Burma, Democracy, Faces, Fight, Freedom, Gandhi, Independence, Liberation, Mahatma, Mandela, Myanmar, names, Oppression, people, SuKyi, SuuKyi, Violence | Leave a Comment »

List of Firsts – Tidbits, Trivia on Women achievements

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சுவடுகள்: பெண்கள் முதல் முதலாய்…

யுகன்

திரும்பிப் பார்ப்பது எப்போதுமே சுகமான விஷயம்தான். அது தனிப்பட்டவர்களின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வரலாற்றின் பக்கங்களாக இருந்தாலும் சரி. இன்றைக்குப் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். இந்தியாவில் பல துறைகளில், பொறுப்புகளில் முதல் முதலாய் இடம்பிடித்த சிலரைப் பற்றிய ஞாபகங்கள் இங்கே…

1905

சுஸôன்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.

1916

தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? ஐந்து பேர்!

1927

அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

1951

டெக்கான் ஏர்வேஸில் பயணிகள் விமானத்தை செலுத்திய முதல் பெண் விமானி பிரேம் மாத்தூர்.

1959

அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

1966

கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய “மகசேசே’ விருதைப் பெற்றார். இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.

1970

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.

1972

இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.

1989

முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதவியேற்றார்.

1997

கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.

2005

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.

2007

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.

Posted in Achievements, Faces, Females, first, History, Ladies, Lists, names, people, She, Trivia, Woman, Women | Leave a Comment »

Remembering a hero of liberty: Justice Hans Raj Khanna, former Supreme Court judge passes away – TJS George

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சுதந்திர இந்தியாவின் துணிச்சல் மிக்க நீதிபதி

டி.ஜே.எஸ். ஜார்ஜ், பத்திரிகையாளர்

சுதந்திர இந்தியாவின் மிகத் துணிச்சலான நீதிபதி யார்? அந்தச் சிறப்புக்குத் தகுதியான நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாதான். அவரது துணிச்சலை மதிப்பிடுவதற்கு, நெருக்கடிநிலைக் கால பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.

காவல் துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; சித்திரவதை செய்யலாம்; கொலைகூடச் செய்யலாம்; ஆனால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சூழ்நிலை நிலவிய நாள்கள் அவை.

கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய தகவலையும் நாம் தெரிந்துகொள்ள முடியாது; ஏனென்றால், அப்போது செய்திகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன; தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் சந்தித்துப் பேசுவதற்கே மக்கள் அச்சப்பட்ட காலம் அது. நாடெங்கிலும் அச்சம் பரவி இருந்தது; அனைத்து இடங்களிலும் போலீஸýக்கு உளவு சொல்பவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவியது என்பதை இன்றைய தலைமுறையால் நம்பக்கூட முடியாது. அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்ததோடு மட்டுமல்ல; இந்திரா காந்தியின் அன்றைய இந்தியா, அதை மூடிமறைக்காமல் பகிரங்கமாகவும் செய்தது.

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார் அன்றைய குடியரசுத் தலைவர். ஸ்டாலினின் ரஷியாவிலும் பினோசேவின் சிலியிலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் போன்றது அது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆனால், அதை எதிர்த்து அப்போதும் பலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். “ஆள்கொணர் மனு’க்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) விசாரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 9 உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறின. ஆனால், உச்ச நீதிமன்றம் வேறு விதமாகத் தீர்ப்பளித்தது. அரசாங்கத்தின் யதேச்சாதிகாரத்தை அது நியாயப்படுத்தியதுடன், நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான குடிமக்களின் உரிமையைப் பறித்ததையும் நியாயப்படுத்தியது.

5 நீதிபதிகள் அடங்கிய அந்த உச்ச நீதிமன்ற பெஞ்சில், 4 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். ஆனால், ஒரேயொரு நீதிபதி மட்டும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். அவர்தான் நீதிபதி எச்.ஆர். கன்னா.

1978, ஆகஸ்ட் 28-ல் வழங்கப்பட்ட அத் தீர்ப்பு, நமது வரலாற்றின் களங்கமான ஆவணமாகவே இருந்துகொண்டிருக்கும். சட்டவிரோதமான சர்வாதிகார அரசைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பினால், அந்த 4 நீதிபதிகளும் உள்ளார்ந்த நீதிநெறிப் பார்வையை வெளிப்படுத்தத் தவறும் அளவுக்கு தமது பகுத்தறிவின் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.

“”கைதிகளை நல்ல அறைகளில் அடைத்துவைத்து, அவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்து, நல்ல முறையில் நடத்திவரும் அரசின் பரிவும் அக்கறையும் ஒரு தாயின் பரிவுக்கு இணையாக இருக்கிறது” என்னும் நீதிபதி எம்.எச். பெக்-கின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

தாயுள்ளத்தின் உன்னதப் பண்புகளை அவமதிக்கும் வகையில் அந்த வரிகளை அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுதுதான், கர்நாடகத்திலே ஜார்ஜ் பெர்னாண்டஸின் சகோதரர் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்; கேரளத்தில் பொறியியல் மாணவரான ராஜன் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் இதைப்போல ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள் நடைபெற்றன.

அதற்குச் சில மாதங்கள் கழித்து, எவ்வித வெட்கமும் இன்றி இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார் நீதிபதி பெக். பணிமூப்பின்படி அப் பதவிக்கு உரியவரல்லர் அவர். நீதிபதி எச்.ஆர். கன்னாதான் அனைவரையும்விட மூத்த நீதிபதி. ஆனால் வரலாற்றில் படுமோசமான முறையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு நொடியினிலே, படுமோசமான முறையில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த ஒரு நீதிபதி தனது துரோகத்துக்கான பரிசை ~ 30 வெள்ளிக்காசுகளை யூதாஸ் பெற்றதைப்போல ~ பெற்றுக்கொண்டார். ஆனால், யேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக பின்னாளில் வருந்தினார் யூதாஸ் இஸ்காரியோத். அந்த நாகரிகமாவது நீதிபதி பெக்-க்கு இருந்ததா என்பது தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து கன்னாவும் தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவரால் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தது; ஏனென்றால், நீதித் துறையில் நாட்டின் குடிமக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, தனது மனசாட்சியின் குரலை, பதவியேற்கும் பொழுது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிலைநாட்டுவதற்கான துணிச்சலை, ஐந்து நீதிபதிகளில் தனியொருவராகக் காட்டியவர் அவர். வாழ்வதற்கான, சுதந்திரத்துக்கான மனிதனின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தவர் அவர். “”ஒரு நீதிமன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மாறான கருத்தை ஒரு நீதிபதி பதிவு செய்கிறார் என்றால், அது, நீதிமன்றம் தவறாக அளித்துவிட்டதாக அவர் கருதும் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் திருத்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், எதிர்கால மேதைமைக்கும், நீதிநெறி உணர்வுகளுக்கும் அவர் விடுக்கும் முறையீடாகும்” என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டினார் நீதிபதி கன்னா.

எச்.ஆர். கன்னாவைப் போன்றோரின் நீதிநெறி உணர்வுகளின் காரணமாக இன்று நாம் சுதந்திரத்தை பெருமிதத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 95 வயதான நீதிபதி கன்னா, கடந்த வாரம் உறங்கிக்கொண்டிருந்த பொழுது அமைதியாக நல்மரணமடைந்தார். அவரை இறைவன் ஆசீர்வதித்தான். அவரது ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நொடிப் பொழுது மெüனம் கடைப்பிடிப்போம்.

Posted in abuse, Arrest, Attorneys, Biosketch, Conservative, Correctional, Courts, Faces, HansRaj, HR, Interrogation, Jail, Judge, Justice, Khanna, Law, Lawyers, legal, Liberal, Liberty, names, Obituary, Order, people, rights, SC, Torture | 1 Comment »

Writer Tha Naa Kumarasamy – Biosketch, Profile: Charukesi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

தொடர்கட்டுரை  – எழுதுங்கள் ஒரு கடிதம்!

சாருகேசி

தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

த.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.

“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது!” என்றார் சா. கந்தசாமி.

இன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.

வங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.

ஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.

நேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)

அவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்!)

காந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.

“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.

“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே? “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை!” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.

காஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.

சுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.

தேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.

தாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.

இத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.

“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.
———————————————————————————————————————————————-

சாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.

லட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.

ஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்!

இரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.

மூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.

புரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன?)

ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்!

Posted in artists, Arts, Author, Biosketch, Chaarukesi, Charukesi, Coomarasaami, Coomarasaamy, Coomarasami, Coomarasamy, Devan, Display, Exhibitions, Faces, Famous, Gallery, Gandhi, Kumarasaami, Kumarasaamy, Kumarasami, Kumarasamy, Kumaraswami, Kumaraswamy, Mahatma, names, Painters, Paintings, people, profile, Translations, Translator, Works, Writer | Leave a Comment »

Star Vijay TV’s ‘Neeya? Naana??’: Interview with Moderator Gopinath

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

சண்டே சினிமா

எத்தனை மனிதர்கள்… எத்தனை எண்ணங்கள்?

வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் மட்டுமல்ல… சமூகப் பிரச்னைகளை முன் வைத்து உருவாக்கப்படும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளாலும் நேயர்களைப் பெரிதளவில் ஈர்க்க முடியும் என உணர்த்தி வரும் சில அரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருப்பது விஜய் டி.வி.யின் ‘நீயா? நானா? இதில் சமூகப் பிரச்னைகளோடு மக்கள் எதிர்கொள்ளும் தனிநபர் பிரச்னைகளுக்கும் உரியவர்களைக் கொண்டு உளவியல் ரீதியாகத் தீர்வு காணுவது சிறப்பு. ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி, மெúஸஜ் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களும் சரியான அளவில் இடம்பெற்றிருப்பதும் இந்த நிகழ்ச்சியை நேயர்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பதற்கு ஒரு காரணம். நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகவும் நடுநிலைமையோடும் வழங்கி வரும் கோபிநாத்திடம் அவர் பாணியிலேயே ‘சரி உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்…’ என்று தொடங்கினோம்…

பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில். திருச்சியில் படிப்பு. பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. தற்போது சென்னையில் அப்பா, அம்மா, அண்ணனுடன் வசித்து வருகிறேன். அப்பா பிஸினஸ்மேன். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். அண்ணன் விளம்பரப் பட ஒளிப்பதிவாளராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இந்தத் துறைக்கு வந்தது எப்படி?

பி.பி.ஏ. முடித்தவுடனேயே சென்னைக்கு வந்துவிட்டேன். 1996-ல் இருந்து மீடியாவுடன் எனக்குத் தொடர்பு. ‘யு’ டி.வி.யில் ஆரம்பித்து ராஜ் டி.வி., ஜெயா டி.வி., இந்தியா டி.வி., ஸ்டார் விஜய் டி.வி. என என்னுடைய கேரியர் தொடருகிறது. தற்போது ‘ரேடியோ சிட்டி’ எஃப்.எம்.மிலும் ரேடியோ ஜாக்கியாக இருக்கிறேன்.

‘ரேடியோ சிட்டி’ எஃப்.எம்.மில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்குகிறீர்கள்?

ரேடியோ சிட்டி ‘ட்ரைவ் டைம்’-இல் (டி.வி.யில் ப்ரைம் என்றால் ரேடியோவில் ட்ரைவ் டைம்’) ‘ஜாய் ரைடு’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். இது ஒரு நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி. இதில் திங்கள் முதல் வெள்ளி வரை ஏடிஎம் (வினாடி வினா நிகழ்ச்சி), சிட்டி கிரிக்கெட் (ஓர் இடத்தின் பெயரைச் சொன்னால் அதற்கு மிகப் பொருத்தமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்), பிரமிடு (வார்த்தை கட்டமைப்பு), எஸ் கார்னர் (இதில் நேயர்கள் ‘நோ’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் பதிலளிக்க வேண்டும்) போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளையும் சனிக்கிழமை பிரபலங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியையும் ஞாயிற்றுக்கிழமை ‘சினிமா சினிமா’ என்ற விமர்சன நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறேன். இவை அனைத்தும் ‘நீயா? நானா?’ போல விறுவிறுப்பாகவே இருக்கும்.

ரேடியோவில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் டி.வி.யில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் உள்ள வித்தியாசம்..?

டி.வி.யை ஒப்பிடும்போது ரேடியோவில் நிகழ்ச்சி நடத்துவது கொஞ்சம் சிரமம்தான். டி.வி.யில் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பார்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட சம்பவங்களையோ இடங்களையோ காட்சி வடிவில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் ரேடியோ நேயர்களுடன் நாம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது அதைப் பற்றிய காட்சி வடிவம் அவர்களுடைய மனதில் அப்படியே பதியுமாறு பேச வேண்டும். அப்போதுதான் தொகுப்பாளருக்கும் நேயருக்கும் இடையே ஒரு நெருக்கம் ஏற்படும். குரலில் ஏற்ற இறக்கமும் அவசியம்.

‘நீயா? நானா?’ நிகழ்ச்சி பற்றி..?

தொலைக்காட்சி நேயர்கள் விரும்பிப் பார்ப்பது விவாத மேடை நிகழ்ச்சி. இதில் இதுவரை சுமார் 70 தலைப்புகளுக்கு மேல் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறோம். விரைவில் 100 வது எபிúஸôடைத் தொடவுள்ளோம்.

நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகளில் உங்களுக்குச் சிரமமாக அமைந்து ‘இதை ஏன்தான் தேர்ந்தெடுத்தோம்?’ என வருத்தப்பட்ட தலைப்பு இருக்கிறதா?

அப்படிக் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை. எல்லாத் தலைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையே. மிகுந்த கவனத்தோடும் அவற்றின் பின்புலத்தை அறிந்தும்தான் தேர்ந்தெடுக்கிறோம். சிரமம் என்று சொன்னால் எல்லாத் தலைப்புகளுமே சிரமத்தை ஏற்படுத்தியவைதான். அதனால்தான் ஒரு நிகழ்ச்சி சூப்பர்; இன்னொன்று சுமார் என்ற பேச்சு வரவில்லை.

இந்த நிகழ்ச்சி மூலம் பெற்றது? இழந்தது?

இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. கற்றதுதான் அதிகம். எத்தனையோ மனிதர்கள்; எத்தனையோ எண்ணங்கள்; விதவிதமான பிரச்னைகள்; வித்தியாசமான சம்பவங்கள் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ள முடிகிறது. நாம் தவறு என நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் சரியாகவும் சரி என நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் தவறாகவும் தோன்றுகின்றன. மக்கள் மனதில் இருந்து பிரவாகமாக சில விஷயங்கள் வெளிப்படும்போது அதற்கு உண்டாகும் வலிமையே தனி. பலதரப்பட்ட மக்களுடைய வாழ்க்கையின் பின்புலங்களை என்னோடு விஜய் டி.வி. நேயர்களும் அறிந்துகொள்ள முடிவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம் என நீங்கள் நினைப்பது?

மக்களின் குரலை மக்களே பிரதிபலிப்பதுதான்!

உங்களுக்குப் பிடித்த இதர விஷயங்கள்?

புத்தக வாசிப்பு மிகவும் பிடிக்கும். அதிலும் உலக வரலாறு தொடர்பான புத்தகங்கள் என்னுடைய ஃபேவரைட். கவிதைகளில் அதிக ஈடுபாடு உண்டு. சமகாலக் கவிஞர்கள் அனைவரின் கவிதைகளையும் விரும்பிப் படித்து வருகிறேன். நான் கூட கவிதைகள் எழுதுவேன். சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் கல்லூரி நாட்களில் நண்பர்களுக்காக நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளேன்.

ரோல் மாடல் என நீங்கள் கருதுவது?

ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. சிறு வயதில் இருந்து என்னைப் பாதித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற படைப்பாளிகளையே எனது ரோல் மாடல்களாகக் கருதுகிறேன்.

டி.வி., ரேடியோ, புத்தகமும் எழுதியாகிவிட்டது… அடுத்த இலக்கு?

இப்போது எனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி இயன்றவரை மக்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான். மற்றபடி நாளைய பெரிய திட்டம் என குறிப்பாக எதுவும் இல்லை. இந்த எண்ணம் கூட நாளையே மாறலாம். ஒரு புதிய விஷயத்தைச் செய்துபார்க்கலாம் என்று தோன்றும்போது அதில் முழு கவனத்துடன் ஈடுபடுவேன்.

Posted in Faces, FM, Gobinath, Gopinath, Interview, Media, Moderator, MSM, people, Radio, Radio city, Radiocity, Star, Star Vijay, TV, Vijai, Vijay, Visual | 19 Comments »

Former TN Assembly Speaker K Rajaram passes away: Anjali, Memoirs

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 10, 2008

மூத்த அரசியல் தலைவர் க. ராசாராம் காலமானார்

சென்னை, பிப். 8: தமிழகத் தின் மூத்த அரசியல் தலைவர்க ளில் ஒருவரான க.ராசாராம் (82) வெள்ளிக்கிழமை மாலை சென் னையில் காலமானார்.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகி யோரின் நம்பிக்கையையும், நன்ம திப்பையும் பெற்றவராக ராசா ராம் திகழ்ந்தார்.

ஆரம்பகாலத்தில் பெரியாரின் செயலாளராக இருந்தார்.

தமது கடுமையான உழைப்பால் சட் டப் பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும், சட்டப் பேரவைத் தலைவராக வும், மாநில அமைச்சராகவும், தில்லியில் தமிழக அரசின் சிறப் புப் பிரதிநிதியாகவும் நிலை உயர்ந்தார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம் பெற் றிருந்தார். தாம் சார்ந்திருந்த கட் சியினரிடம் மட்டுமின்றி, அனைத்துக் கட்சியினரிடமும் அன்புடன் பழகி, நல்லுறவு கொண்டிருந்தார். வட மாநிலத் தலைவர்கள், பல்வேறு துறைப் பிரமுகர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தார்.
ஆத்தூரில் 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தார். பி.ஏ. பட்டம் பெற்றார்.

1962 முதல் 1967 வரையிலும், 1967 முதல் 1971 வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1971 முதல் 1976 வரை திமுக ஆட்சியிலும், 1985 முதல் 1989 வரை அதிமுக ஆட்சியிலும் அமைச்சராகப் பதவி வகித்தார்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1980 முதல் 1984 வரை சட்டப் பேரவைத் தலைவராக இருந் தார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில், 1978 முதல் 1979 வரை தில்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநி தியாகச் செயல்பட்டார் ராசா ராம். அப்போது, மாநில அரசுக் கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாகத் திகழ்ந் தார். 1991-ல் ஜெயலலிதா முதல் வரானபோது, குறுகிய காலம் அமைச்சராக இருந்தார் ராசா ராம்.

தீவிர அரசியலில் இருந்து… அதன்பின்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி இருந் தார். ஆன்மிக -சமூகப் பணிக ளில் ஈடுபட்டு வந்தார். இலக்கி யம் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந் தார்.

சமீபகாலமாக, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந் தார். வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.

எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் தந்தவர்

சென்னை, பிப். 8: 1980 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. படு தோல்வி அடைந்தபோது எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய ஆறு தலை அளித்தவர் ராசாராம்.
அந்தத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகு திகள், புதுவை மக்களவைத் தொகுதி ஆகிய 40 தொகுதிகளில் இரண்டே தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வென்றது. மற்ற தொகுதிகளில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

மக்களவைத் தேர்தலுடன் இணைத்து பனைமரத்துப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்த லில் அ.தி.மு.க. வேட்பாளரான ராசாராம் வென்றார். அதன்மூ லம் எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய ஆறுதலை அளித்தார்.
மக்களின் நம்பிக்கையை அ.தி.மு.க. இழந்து விட்டது என்று தி.மு.க. அணி விமர்சித்தபோது, அதை எதிர்கொள்ள ராசாரா மின் வெற்றியைக் கேடயமாக அ.தி.மு.க. பயன்படுத்தியது.

“மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இடம் பெற்ற அணியை ஆதரித்து மக்கள் வாக்களித்தனர். ஆனால், சட்டப் பேரவை இடைத் தேர்தலைப் பொருத்தவரை அ.தி.மு.க.வையே மக்கள் ஆதரித்து உள்ளனர்.

அ.தி.மு.க.வுக்கே மக்களின் ஆதரவு தொடருகிறது’ என அ.தி.மு.க.வினர் அப்போது வாதிட்டனர்.


ரகுபதி ராகவ ராசாராம்!
இரா செழியன்

சென்னை, பிப். 8: நான்கு வாரங்க ளுக்கு முன்னர் க. ராசாராமை தற் செயலாகச் சந்தித்தபொழுது, எப் படி இருக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். உடனே, “நாமெல்லாம் ஆயிரம் பிறைகளைத் தாண்டியவர் கள், இன்னமும் எவ்வளவு பிறை கள் நமக்கு தோன்றுமோ தெரிய வில்லை!’ என்று வேடிக்கையாகச் சொன்னார் என்று ராசாராமைப் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் மூத்த நாடா ளுமன்றவாதி இரா. செழியன்.

இளம் வயதில் இருந்தே அவருக் குப் பொது வாழ்வில் பிடிப்பு உண் டாகியிருந்தது. அவருடைய தந் தையார் கஸ்தூரிபிள்ளை நீண்ட காலமாக ஜஸ்டிஸ் கட்சியில் தீவிர மாக விளங்கியவர். பெரியாரும் மற்ற பெருந்தலைவர்களும் சேலம் வந்தால், கஸ்தூரிபிள்ளையின் வீட்டில்தான் தங்குவார்கள். அண் ணாவுடன் சேலம் வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தால், நிச்சய மாக ராசாராம் வீட்டில்தான் தங்கு வோம். எங்களுடன் சுற்றுப் பய ணத்தில் ராசாராம் இருப்பது கலக லப்பாக இருக்கும்.
1962-ல் கிருஷ்ணகிரியில் திமுக வேட்பாளராக ராசாராம் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். அடுத்தப டியாக, 1967-ல் சேலத்தில் நின்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1962-ல் அண்ணா மாநி லங்களவை உறுப்பினராக வந்து விட்டார். அப்போது மக்களவை யில் இருந்த 8 திமுக உறுப்பினர்க ளும் எப்போதும் அவரைச் சூழ்ந்த படி இருப்போம். ராசாராமைப் பார்த்தால் அண்ணா, “ரகுபதி ராகவ ராசாராம்’ என அழைக்கத் தொடங்கிவிடுவார்.

சபையில் ராசாராம் உற்சாகமா கப் பணியாற்றக்கூடியவர். ஒரு பிரச்னை என்று வந்துவிட்டால், கடுமையாக வாதிடுவார், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உரத்த குரலில் தமது கருத்தைச் சொல்லத் தயங்கமாட்டார். நாடா ளுமன்ற மைய மண்டபத்தில் அவ ரின் குரல் பலமாக ஒலித்தபடி இருக்கும்.

உதவி என்றால், ராசாராம் உடன டியாக முன்வந்துவிடுவார். கட்சி சார்பில் ஏதாவது பொறுப்பு கொடுக்கப்பட்டால், அதை முனைந்து நின்று நிறைவேற்று வார். மக்களவையில் கட்சி மாறு பாடு இல்லாமல் எல்லோரிடமும் நட்பும் பரிவும் அவருக்கு இருக் கும். ஆனால், பொது மேடையி லும், நாடாளுமன்றம், சட்டப்பேர வைக் கூட்டங்களிலும் தாம் சார்ந்த கழகக் கொள்கைகளுக்காக வும் திட்டங்களுக்காகவும் தீவிரமா கப் பேசுவார்; போராடுவார்.

திமுகவில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை யில் அவர் இடம் பெற்றிருந்தார்.

பின்னர் அதைவிட்டு விலகி அதிமு கவில் சேர்ந்தபொழுது எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டப் பேரவைத் தலைவராகவும், அமைச் சராகவும் பணியாற்றினார். அதன் பிறகு ஜெயலலிதா அமைச்சரவை யிலும் ராசாராம் இடம் பெற்றிருந் தார்.

தில்லியில் இருந்த காலத்தில் “நார்த் அவென்யு’வில் காலையில் தவறாமல் ராசாராம் நடந்து செல் வதைக் காணலாம். அதேபோல், சென்னையில் கடற்கரை நடையி னர் சங்கத்தின் தலைவராக அவர் இருந்தார்.

நடப்பதில் அவர் செலவழித்த நேரத்தைவிட வழியில் நின்று பேசு பவர்களிடம் செலவழிக்கும் நேரம் தான் அதிகம் இருக்கும். 1940-ல் இருந்து 20 ஆண்டுகளாக அவர் திராவிடக் கழகத்தில் பெரியா ருக்கு உற்ற துணைவராக இருந் தார். வெளிநாடுகளுக்கு பெரியார் பயணம் சென்றபோது ராசா ராமை துணைக்கு அழைத்துச் செல்வார்.
திமுகவை அண்ணா தொடங்கி யதும், அவர் மிகுந்த ஈடுபாட்டு டன் செயல்பட்டார். கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பின ராகவும், சட்டப்பேரவை அவைத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த போதும் பெரியாரிடத்தில் அவர் வைத்திருந்த மதிப்பும், மரி யாதையும் குறையாமல் இருந்தது.
கொள்கையின் அடிப்படையில் மற்றவர்களுடன் அவர் மாறுபட் டாலும், மனித நேயத்துடன் தலை வர்களை மதிக்கும் பண்பாடு இருந் தது.
சேலத்தில் இரும்பு உருக்கு ஆலை உருவானதில் முக்கிய நப ராக இருந்தவர் ராசாராம்.

1969-க்கு பிறகு காங்கிரஸில் பிளவு ஏற்பட்டதும் பிரதமர் இந்திரா காந்திக்கு திமுக ஆதரவு தந்தது.

1971 பொதுத் தேர்தலிலும் தமிழ கத்தில் திமுகவின் ஆதரவை இந்தி ராகாந்தி பெற்றிருந்தார்.

அந்த காலகட்டத்தில் ராசாராம், இந்திரா காந்தியை அடிக்கடிச் சந் தித்து 1981-ல் சேலத்தில் ஸ்டெ யின்லெஸ் ஸ்டீல் உற்பத்திக்கான இரும்பு உருக்கு ஆலை அமைப்ப தில் முக்கியப் பங்காற்றினார்.

இதில் அவர் ஆற்றிய பணி பாராட் டிற்கு உரியதாகும்.

ராசாராம் நல்ல நண்பர். எப் போதும் சிரித்துப் பேசும் பண்பு உடையவர். சலியாது உழைத்து ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றுபவர். அவருடைய மறைவு தமிழக அரசியலில் ஒரு பெரும் இழப்பு ஆகும். துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத் துக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
——————————————————————————————————————–
எல்லோருக்கும் நல்லவர்

கே. வைத்தியநாதன்


அப்போது க.ராசாராம் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக தில்லியில் இருந்த நேரம். ஒருபுறம் ஆளும் ஜனதா அரசுடன் இணக்கமாக இருக்கவேண்டிய கட்டாயம். மறுபுறம், எதிர்க்கட்சியாக இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் நல்லுறவைத் தொடர வேண்டிய சூழ்நிலை.

அவருடன் அந்த காலகட்டத்தில் நான் நெருக்கமாகப் பழகவில்லை என்றாலும், பலமுறை சந்திக்க நேர்ந்தது. இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதால் தில்லியிலுள்ள அத்தனை இடங்களும் அவருக்கு அத்துப்படி. முக்கியமான தலைவர்களும் சரி, அதிகாரிகளும் சரி அவரது நண்பர்களாக இருப்பார்கள்.

ராசாராம் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக இருந்தபோதுதான், ஒரு மிகப் பெரிய முயற்சி நடந்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த பிஜு பட்நாயக்கின் விருப்பத்துக்கு ஏற்ப, திமுகவையும் அதிமுகவையும் இணைக்கும் முயற்சிக்குத் துணைபுரிந்தவர் ராசாராம்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த முயற்சியைத் தான் மேற்கொண்டதே, ராசாராம் தனக்குத் துணைபுரிவார் என்கிற நம்பிக்கையில்தான் என்று பிஜுபாபுவே என்னிடம் கூறியிருக்கிறார்.

என் பத்திரிகை நண்பர்களான ராணி மைந்தனும், லேனா தமிழ்வாணனும் அவரிடம் கொண்டிருந்த அளவுக்கு எனக்கு ராசாராமிடம் நெருக்கம் கிடையாது. ஆனால், நான் சாவி வார இதழில் உதவி ஆசிரியராக இருந்தபோது, பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர் சாவியுடன் அப்போது அமைச்சராக இருந்த ராசாராமை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதிலும் குறிப்பாக அவரது மணிவிழா மலர் ஒன்றை “சாவி’ இதழில் நாங்கள் தயாரித்தபோது அவரை நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவரது மணிவிழா மலருக்குத் திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்த்துரை என்பது நினைத்துப் பார்க்க முடியுமா? முடியும். அந்த நபர் க.ராசாராமாக இருந்தால்.

“”எந்தப் பதவியில் எப்படியிருக்கிற வாய்ப்பினை எந்த முறையில் அவர் பெற்றாலும், அப்பதவியின் காரணமாக என்றுமே அவர் எல்லோரிடமும் எளிமையாக -அன்பாகப் பழகுகிற அந்தப் பண்பாட்டை எப்போதுமே மறந்ததில்லை” என்றும், “”சேலத்து கஸ்தூரிப் பிள்ளைக் குடும்பத்துப் பிள்ளை என்ற சிறப்பும் -பெரியாரிடம் சுயமரியாதைப் பாடத்தையும், அண்ணாவிடம் தமிழின உணர்வையும் பெற்ற பெருமைக்குரியவர் இனிய நண்பர் இராசாராம் அவர்களுக்கு இன்று அவர் ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படையின் தொடர்பாக “சஷ்டியப்த பூர்த்தி’ நடைபெறுகிறது” என்றும் கருணாநிதியின் வாழ்த்துச் செய்தியில் இருந்த வரிகளைப் படித்து, அதில் இழையோடிய கேலியையும், எதிரணியில் இருந்தாலும் அவரைப் பாராட்ட முன்வந்த பண்பும் என்னைத்தான் கவர்ந்தது என்று நினைத்தேன். அன்று மாலையில் ஆசிரியர் சாவியை சந்திக்கவந்த அமைச்சர் ராசாராம் அதைப் படித்துவிட்டு சிரித்து ரசித்ததையும், “கலைஞரால் மட்டும்தான் இப்படி எழுத முடியும்’ என்று நெகிழ்ந்ததையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆரிடம் அவருக்கு எந்த அளவுக்கு நெருக்கம் இருந்ததோ அதே அளவு நெருக்கமும், நட்பும், மரியாதையும் திமுக தலைவர் கருணாநிதியிடமும் இருந்தது என்பதை எங்கள் ஆசிரியர் சாவியின்கீழ் என்னுடன் பணிபுரிந்த சி.ஆர்.கண்ணன், ராணி மைந்தன் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் க.ராசாராமை சந்தித்தபோது, நான் “தினமணி’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருப்பதில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த கையோடு, “எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துடனும், குறிப்பாக காலம்சென்ற ராம்நாத் கோயங்காவுடன் தனக்கிருந்த நட்பையும் நெருக்கத்தையும் விவரித்தார்.

அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்கு அமெரிக்கா செல்வதற்கும், சிகிச்சைப் பெறுவதற்கும் எல்லா உதவிகளையும் செய்தவர்கள் ஜி.பார்த்தசாரதியும், ராம்நாத் கோயங்காவும்தான் என்கிற தகவலை தெரிவித்தார். ராம்நாத் கோயங்காவிடம் அவர் செலவழித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, அதை வாங்க மறுத்துவிட்டார் என்றும், அரசு செலவழித்த தொகையை திமுக கட்சி கொடுத்துவிட்டது என்றும் தெரிவித்தார். தனது மருத்துவச் செலவைக்கூட அண்ணா அரசின் தலையில் கட்டவில்லை என்று கூறி நெகிழ்ந்தார் அவர். அதேபோல, ராம்நாத் கோயங்காவின் ஒரே மகன் பகவான்தாஸ் கோயங்கா காலமானபோது, முதல் நபராக ஆஜரானவர் ராசாராம்தான். “”பெரியவர் ராம்நாத் கோயங்காவுக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்தபோது அதை நான் அண்ணாவுக்கு அவர் செய்த உதவிக்குச் செய்த நன்றிக்கடன் என்று கருதினேன்” என்று கூறினார்.

நகமும் சதையும்போல என்பார்களே, அதுபோல நெருக்கமாக இருந்தவர்கள் ராசாராமும் எனது எழுத்துலக ஆசான் ஆசிரியர் சாவியும். ராசாராமின் பொன் விழா மலர் கட்டுரையில் தனக்கு ஏன் ராசாராமைப் பிடிக்கிறது என்பதற்கு ஆசிரியர் சாவி சொல்லி இருக்கும் காரணம், ராசாராமின் முழுமையான பரிமாணத்தை நமக்கு உணர்த்தும். “”இருபத்து நான்கு மணி நேரமும் “நான் ஓர் அரசியல்வாதி’ என்ற பிரக்ஞையோடு அவர் இல்லாமல் இருக்கும் காரணத்தாலேயே அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.”

சினிமாத் துறையில் அவருக்குத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அவர் பார்க்காத படங்களே இருக்காது. நல்ல திரைப்படமாக இருந்தால் முதல் விமர்சனம் ராசாராமிடமிருந்துதான் வரும் என்பார்கள் அவரது நண்பர்கள். பத்திரிகைத் துறையில் பலர் குடியிருக்கும் வீடுகள் அவரது உதவியுடன் வாங்கியதாக இருக்கும். ஆன்மிகவாதிகள், பகுத்தறிவாளர்கள், இசைக் கலைஞர்கள், இலக்கியவாதிகள் என்று எல்லோருக்கும் நல்லவராக ஒருவர் இருக்க முடியுமா? முடியும். அதை நிரூபித்துக் காட்டியவர் க.ராசாராம்.

Posted in ADMK, AIADMK, Anjali, Assembly, Biosketch, DMK, EVR, Faces, JJ, K Rajaram, Ka Rajaram, Kalainjar, Karunanidhi, KK, Life, Memoirs, MGR, Minister, MK, people, Periaar, Periar, Periyaar, Periyar, Rajaram, Rasaram, Speaker, TN | Leave a Comment »

Chief Minister’s secretary – Ko Shanmuganathan: Biosketch, Memoirs by Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

கோ.சண்முகநாதனை எனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி?
கருணாநிதி வெளியிட்ட தகவல்

All in the Family - Prodigal Sons and Daughters of DMK: Mu Karunanidhi, MK Azhagiri, MuKa Stalin, Kanimozhi Karunanidhy
சென்னை, பிப்.4-

கோ.சண்முகநாதனை தனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி? என்பது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கினார்.

திருமண நிகழ்ச்சி

முதல்-அமைச்சர் கருணாநிதியின் செயலாளர் கோ.சண்முகநாதனின் தம்பி கோ.ராமதாஸ்-அமுதா மகள் ரா.மலர்விழி-போரூர் மு.கலைமணி-சுப்புலட்சுமி மகன் மு.க.அருண் ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் கி.கதிரேசன்-தங்கை மகாலட்சுமி மகன் வ.க.சிவக்குமார்-சென்னை சு.குமார்-சுப்புலட்சுமி மகள் கு.கவிதா ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் டாக்டர் ம.ராசேந்திரன்-தங்கை மைதிலி மகள் ரா.எழில்-சென்னை ஜா.லெனார்டு மகன் லெ.ஜான் சாலமன் பிரேம்குமார் ஆகியோரது திருமணமும் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம்- கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை ஏற்று திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோபம் வந்தால்

40 ஆண்டு காலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். சண்முகநாதன் இன்றைக்கு நீங்களெல்லாம் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல நான்தான் அவர், அவர்தான் நான் என்கின்ற அளவிற்கு பெருமை பெற்றிருக்கிறார். 40 ஆண்டுகாலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். அப்படியும் சொல்லலாம். சண்முகநாதனோடு நான் இருக்கிறேன் என்றும் நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் இரண்டும் ஒன்றையொன்று சகித்துக்கொள்வதென்பது சாதாரண காரியம் அல்ல. அனுபவபூர்வமாக நான் சொல்கின்றேன். நீங்கள் அதற்காக சண்முகநாதனை கொடுமையாகக் கருதிவிடக் கூடாது. எனக்கு கோபம் வந்தால் அவருக்குக் கோபம் அடங்கிவிடும். அவருக்கு கோபம் என்று தெரிந்தால் நான் அந்த பக்கமே திரும்ப மாட்டேன்.

இது என்னுடைய வீட்டிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு செயலாளர் 40 ஆண்டுகாலமாக அவரோடு நான் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.

எண்ணி பார்க்கவில்லை

எப்படி சண்முகநாதனை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன் என்பது ஒரு புதிர். தி.மு.க. இப்பொழுது ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறது. 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி. அண்ணா தலைமையில் எதிர்க்கட்சி, அதற்கு முன்பு பெரியார் தலைமையில் திராவிடர் கழகமாக இருந்தபோதும், திராவிடர் கழகத்தினுடைய பேச்சாளர்களிலே நானும் ஒருவன்.

அந்த நேரத்தில் நான் மாநிலத்திலே எங்கே சென்று பேசினாலும், மாவட்டத் தலைநகரமாக இருந்தாலும், வட்டத் தலைநகரமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒன்றிய நிலையிலே உள்ள இடமாக இருந்தாலும், அங்கெல்லாம் ஒருவர் உட்கார்ந்து என்னுடைய பேச்சை எழுதிக் கொண்டேயிருப்பார்.

மூன்று வழக்குகள்

என்னுடைய நண்பர் திருவாரூர் தென்னனைப் பார்த்து கேட்டேன், யார் இந்தப் பையன், நான் போகின்ற கூட்டத்திற்கெல்லாம் தவறாமல் வந்து எழுதிக் கொண்டிருக்கிறானே, இவன் யார் என்று கேட்டேன். தென்னன் சொன்னார், இவர் சொந்த ஊர் திருக்கண்ணமங்கை. நன்றாகப் படித்திருக்கிறார். இவர் போலீசினுடைய சுருக்கெழுத்தாளராக இருக்கிறார். அவரை ஸ்பெஷலாக நீங்கள் போகிற இடங்களுக்கெல்லாம் அனுப்புகிறார்கள். உங்களுடைய பேச்சை எழுதி போலீசுக்கு கொடுக்கிறார். நீங்கள் ஏதாவது சர்க்காரைப் பற்றி தவறாகப் பேசியிருந்தால் வழக்கு போடுவதற்கு அந்தப் பேச்செல்லாம் பயன்படும் என்று சொன்னார்.

நான் அதிலிருந்து சண்முகநாதனிடத்திலே ஒரு கண்ணாகவே இருந்தேன். நான் பேசிய பேச்சைப் பற்றி இரண்டு, மூன்று வழக்குகள் அப்பொழுது என்மீது வந்தன. சண்முகநாதன் அந்த பேச்சிற்கு நீதிமன்றங்களுக்கு சாட்சி சொல்ல வருவார் என்றுகூட எதிர்பார்த்தேன். அதற்குள் அரசு மாறிவிட்ட காரணத்தால் அந்த வழக்குகள் நடைபெறவில்லை. சண்முகநாதனை நான் நீதிமன்றத்திலே அப்பொழுது சந்திக்க இயலவில்லை. சட்டமன்றத்திலே சந்திக்க வேண்டும் என்றிருக்கும்போது நான் நீதிமன்றத்திலே எப்படி சந்தித்திருக்க முடியும்.

திறமையானவர்

இப்படி அவர் திறமையாக, எந்தத் தலைவருடைய பேச்சையும் எழுதக்கூடிய ஆற்றல்பெற்றவர் என்று அறிந்தபிறகு, அந்தச் சூழலிலே அண்ணா தலைமையிலே 1967-ம் ஆண்டு ஆட்சி உருவாயிற்று. அண்ணா யார் யார் எந்தெந்த துறைக்கு அமைச்சர் என்று குறித்து வெளியிட்டபிறகு, நான் என்னுடைய துறையை கவனிக்க என்னுடைய செயலாளராக யாரை நியமித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபோது, சண்முகநாதன் நினைவுக்கு வந்தார்.

ஒரு பையன் உட்கார்ந்து நான் பேசும்பொழுது எழுதுவானே அவனை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டால் என்ன என்று யோசித்து சுருக்கெழுத்தாளராக வைத்துக்கொண்டேன். இப்படி 40 ஆண்டுகாலமாக ஒரு போலீஸ் துறைக்கு தி.மு.க.வின் பேச்சுக்களை எழுதிக்கொடுத்து, இதில் ஏதாவது தவறு இருந்தால் மாட்டவிடுங்கள் என்று யார் எழுதிக் கொடுத்தாரோ அவரை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன்.

அப்படி செயலாளராக வந்தவர்தான் இன்றைக்கு உங்களால் புகழப்படுகிறார்; பாராட்டப்படுகிறார் என்றால் அவ்வளவு பெருமையும் சண்முகநாதனுக்கு அல்ல, அவரை நியமித்துக் கொண்ட என்னைத்தான் அந்த பெருமை சாரும் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

மாதச் சம்பளம்

ஒரு எளிய குடும்பத்தில், சாதாரண, சாமான்ய குடும்பத்திலே பிறந்து, இரண்டு மூன்று சகோதரர்களுடன் பிறந்து, சில உற்றார் உறவினர்கள், அவர்களும் மிட்டா மிராசுகள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு சாதாரண சூழ்நிலையில் என்னைப் போலவே, என்னுடைய குடும்பத்தாரைப் போலவே இருந்த தம்பி சண்முகநாதன், இன்று என்னோடு இருக்கிறார்.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஆட்சி மாறிய பிறகு நான் இந்த பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக் கொண்ட பிறகு, அவரை அழைத்து நீ என்னோடு இருக்கின்றாயே, மாதச் சம்பளம் எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன்.

எவ்வளவு வேண்டும், எவ்வளவு தர என்று கேட்கவில்லை. எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன். நான் உங்களிடத்தில் சம்பளம் வாங்கப் போவதில்லை. கடைசி வரையிலே என்னை உங்களிடத்திலே ஒப்படைத்து விட்டேன் என்று சொன்னார் சண்முகநாதன்.

40 ஆண்டு காலமாக

அப்படி சம்பளமே வேண்டாம் என்று தன்னையே என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிற தம்பியிடத்தில் எனக்கு இருக்கிற அன்புக்கும், பாசத்திற்கும் காரணம் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட தம்பி சண்முகநாதன் சாதாரண, சின்ன குறிப்புகளைக்கூட விடாமல் எனக்கு எழுதித்தந்து, தேடித்தந்து, அப்படிப்பட்ட தேடலுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்து, அவைகள் எனக்கு கிடைக்குமாறு செய்து நான் பேச, எழுத, செயல்பட இந்த 40 ஆண்டுகாலமாக என்னோடு இருந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.

நான் அரசியல் காரணங்களுக்காக எழுதுவது மாத்திரமல்ல, இலக்கியங்கள்எழுதச் சென்றாலும், மாமல்லபுரத்திற்குச் சென்று எழுதினாலும், கோவாவிற்குச் சென்று எழுதினாலும், வேறு எந்த ஊருக்குச் சென்று எழுதினாலும், அங்கெல்லாம் அமர்ந்து எழுதுவது திருக்குறள் உரையானாலும், குறளோவியமானாலும், தொல்காப்பியப் பூங்காவானாலும் அங்கெல்லாம் அந்தப் பன்முகப் பணிக்கு தானும் அந்தப் பன்முகப் பணியாளரைப் போல விளங்கி எனக்கு உதவி செய்து கொண்டிருப்பவர் தம்பி சண்முகநாதன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன், பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி ஆகியோர் மணவிழாவிற்கு முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், திராவிட கழக தலைவர் வீரமணி, போட்டி ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் எம்.பி., கவிஞர் வைரமுத்து, ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் மத்திய மந்திரி ராசா, அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், பொங்கலுர் பழனிச்சாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், தங்கபாலு எம்.பி., நடிகர்கள் நெப்போலியன், பிரசாந்த், நடிகை மனோரமா, தலைமை செயலாளர் திரிபாதி உள்பட பலர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

முடிவில் மு.க.அழகிரி நன்றி கூறினார்.

வரவேற்பு நிகழ்ச்சி

முன்னதாக நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:-

மத்திய மந்திரி ரகுபதி, பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக்கழக தலைவர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கோ.சி.மணி, கே.பி.பி.சாமி, மொய்தீன் கான், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சுப.தங்கவேலன், `தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நடராஜன், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சுந்தரதேவன், கால்நடை துறை செயலாளர் லீனா நாயர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆதி சேஷையா, சென்னை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன், சமூகநலத்துறை செயலாளர் என்.எஸ்.பழனிச்சாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அருள்மொழி,

அதிகாரிகள்

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, கடல்சார் வாரிய இயக்குனர் முத்துக்குமாரசாமி, செய்தித்துறை இயக்குனர் மோகன்தாஸ், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரமவுலி, உள்துறை செயலாளர் மாலதி, தமிழ்நாடு கனிம நிர்வாக இயக்குனர் நந்தகிஷோர், திட்டக்குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் பாரதி, ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன், வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சக்தி காந்ததாஸ், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.சேகர், உளவு துறை ஐ.ஜி. ஜாபர்சேட், போலீஸ் ஐ.ஜி. முத்துக்கருப்பன்,

செ.குப்புசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காயத்ரி தேவி, சிவபுண்ணியம், பன்னீர்செல்வம், காமராஜ், டாக்டர் ராமன், நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் கங்கை அமரன், சினிமா பாடகர் மலேசியா வாசுதேவன், கவிஞர் வாலி, கவிஞர் மேத்தா, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம், சிறுசேமிப்பு துறை துணை தலைவர் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைசெயலாளர் பூச்சி முருகன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

Posted in aide, Anna, Anna Arivalayam, Arivalayam, Assistant, associate, Biosketch, Chief Minister, CM, Compatriot, Compensation, DMK, Faces, family, Government, Influence, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Marriages, Memoirs, Minister, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, names, partner, people, Power, Receptions, Salary, Sanmuganadhan, Sanmuganathan, Sanmukanadhan, Secretary, Shanmuganadhan, Shanmuganathan, Shanmukanadhan, Shanmukanathan, Sidekick, Stalin, Wedding | 1 Comment »

Farmer suicides – Turning risk into an opportunity: Case study of a Agriculture Success Story

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

முகங்கள்: பத்து லட்சம் கடன்… முப்பது லட்சம் வட்டி!

ந.ஜீவா

“கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது கம்பராமாயண வரிகள். ஆனால் கடன் பெற்றவர்கள் கலங்கினால் அது தற்கொலையில்தான் முடியும். நாடெங்கும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கடன்… வட்டி… விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை அல்லது தண்ணீர்ப் பஞ்சம், பூச்சிகளினால் விவசாயம் பாதிக்கப்படல் இன்னும் பல.

ஆனால் கோவை ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த சுப்பையன் என்கிற விவசாயி கலங்கவில்லை. வட்டியும் கடனுமான நாற்பது லட்சம் ரூபாயைத் தனது கலங்காத மன உறுதியாலும் தெளிவாகத் திட்டமிடும் திறனாலும் கடுமையான உழைப்பாலும் திருப்பி அடைத்து வெற்றிகரமாக கடன் தொல்லையில் இருந்து மீண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்…

நாற்பது லட்சம் ரூபாய் கடன் எப்படி ஆனது?

நான் நான்கு வருடத்துக்கு முன் கோவையில் இருந்து மைசூர் அருகே உள்ள குண்டன்பேட்டைக்குப் போய் 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினேன். அதற்காக எங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் நான்கு வட்டிக்கும் மூன்று வட்டிக்குமாகப் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மைசூர்-குண்டன்பேட்டைக்குப் போனோம். அங்கே போய் வெங்காயம், கனகாம்பரம், கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் விவசாயம் பண்ணின நேரம் உற்பத்தி பண்ணின பொருள்களெல்லாம் விலை குறைந்துபோனது. பத்துலட்சம் வாங்கின கடன் இரண்டு வருடத்துக்குள்ளே வட்டியெல்லாம் சேர்த்து நாற்பது லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

திரும்பி வந்து என்ன செய்தீர்கள்?

இங்கே எனக்குப் பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தது. நொய்யல் ஆற்று நீரில் கோயம்புத்தூர் நகர்க் கழிவு எல்லாம் கலந்ததால் அது ஓடுகிற எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் உப்பாகப் போய்விட்டது. செடி வளர்க்க இந்தத் தண்ணீர் ஆரோக்கியம் இல்லை.

இந்தக் கெட்டுப் போன தண்ணீரை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் பண்ணுவது? என்ன விவசாயம் பண்ணுவது? கடனையெல்லாம் எப்படி அடைப்பது? யோசனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் பகுதிக்குத் தோட்டக்கலைத்துறை, விரிவாக்கத்துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள். வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி அடிக்கடி வருவார். அவர்களிடம் கேட்டதில் எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று தெரிய வந்தது. வேறு எந்த வேளாண்மை பண்ண வேண்டும் என்று யோசித்து கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இந்தத் தண்ணீருக்குக் கீரை நன்றாக வரும். குதிரை மசால் நன்றாக வரும். தென்னை நன்றாக வரும்.

அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை என விவசாயம் செய்தேன். இதில் 30 சதம் செலவு ஆகும். 70 சதம் லாபம் வரும்.

குதிரை மசால் என்பது கால்நடைகளுக்கானத் தீனி. இது தவிர கறிவேப்பிலை இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது 10 ஏக்கர் நிலம் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தேன். 12.5 எச்பி மோட்டார் போட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து விவசாயம் பண்ணினேன். கிணற்று தண்ணீர் நாளொன்றுக்கு 3 ஏக்கர் நிலத்திற்குப் பாயும்.

எங்கள் விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் போடுவதில்லை. மண்புழு உரம், மாட்டுச்சாணம் போடுவோம். கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் நிறைய மாடுகள் வளர்க்கிறார்கள். அதனால் மாட்டுச் சாணிக்கென்று நாங்கள் அலைய வேண்டியதில்லை.

விவசாயம் செய்து விளைவித்த பொருள்களை எங்கே விற்பனை செய்கிறீர்கள்?

கீரை ஒரு நாளைக்கு 5000 கட்டிலிருந்து 10000 கட்டு வரை விற்பனையாகும். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு கீரை விற்பனையாகும். கறிவேப்பிலை ரூ.1500 க்கு விற்பனையாகும். கடைகளுக்கு வாடிக்கையாக கறிவேப்பிலையைக் கொடுத்துவிடுவோம். கிலோ ரூ.10 இலிருந்து ரூ.15 வரை போகும். குதிரைமசால் 400 கிராம் கட்டு சுமார் 3000 கட்டுவரை விற்பனையாகும்.

காலையிலே எங்கள் காட்டுக்குள்ளிருந்து இந்தப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் வெளியே போகும். எத்தனை வண்டி எவ்வளவு பொருள் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.

கால்நடைத் தீவனமாக நாங்கள் விவசாயம் செய்யும் குதிரை மசாலை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

காலையில் டெம்போவில் குதிரை மசாலை ஏற்றிக் கொண்டு கிளம்புவோம். சிட்டி பஸ் குறித்த நேரத்தில் எந்த ஸ்டாப்பில் எந்த நேரத்தில் நிற்குமோ அதைப் போல இந்த டெம்போ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அங்கு வந்து வாங்கிக் கொள்வார்கள்.

கோயம்புத்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர கொடைக்கானலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் 67 மாடுகள் வைத்திருக்கிறார்கள். 10 ரேஸ் குதிரைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக எங்களிடம் ரெகுலராக குதிரை மசால் வாங்குகிறார்கள்.

இவ்வளவு வேலைகளையும் செய்ய வேண்டுமென்றால் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே?

எங்களிடம் முதலில் 40 பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 20 பேர் பார்க்கிறார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களே ஒரு நாளைக்கு ரூ.140 வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களிடம் வேலை செய்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்துகிறோம். வாடா, போடா என்றெல்லாம் பேசுவது கிடையாது. அவர்கள் எல்லாரும் ரொம்பவும் விசுவாசமான ஆட்கள்.

வழக்கமாகப் பயிர் செய்யும் நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்யாமல் இப்படிக் கீரைகளை விவசாயம் பண்ண வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

நான் விவசாயத்துக்கு முதன்முதல் வந்த போது எங்கள் ஏரியாவில் பருத்திதான் அதிகம் போடுவார்கள். நான்தான் முதன் முதலில் கனகாம்பரம் துணிந்து பயிர் செய்தேன். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றவை விளைவிக்க நல்ல தண்ணீர் இல்லாததும் ஒரு காரணம்.

நமது அண்டை மாநிலமான ஆந்திரா, வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?

இந்தியாவில் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் படிக்கிறோம். எனக்கு மாதிரி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்திருந்தால் ஒருவேளை என்னைப் போலவே அவர்களும் கடினமாக உழைத்துக் கடனை அடைத்திருப்பார்களோ, என்னவோ. எல்லாருக்கும் எனக்கு போலவே வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே.

இப்போது மார்க்கெட் வசதி அபாரமாக இருக்கிறது. அரசாங்கம் நிறையக் கடன் கொடுக்கலாம். கந்துவட்டியை ஒழிக்கச் சட்டம் போட்டிருந்தாலும் நாடு முழுக்க கந்துவட்டி இருக்கிறது. அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் கந்துவட்டியை ஒழிக்கலாம். பத்துலட்சம் வாங்கின கடனுக்கு முப்பது லட்சம் வட்டி கட்டணும் என்றால் விவசாயி தற்கொலை பண்ணிக் கொள்ளாமல் என்ன செய்வான்?

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Case study, deaths, Economy, Faces, Farmers, Farming, Farmlands, Finance, Foodgrains, Forests, Fruits, Greens, harvest, horticulture, Incidents, Interview, Life, Loans, markets, Opportunity, Paddy, people, Persons, Prices, Real, rice, Risk, Saline, Salt, success, Suicides, Trees, Turnaround, Vegetables, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Vitharabha, Vitharba, Vitharbha, Waste, Water, Wheat | 2 Comments »