முதல்வரை விமர்சிக்க நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை: ஆர்க்காடு வீராசாமி கடும் தாக்கு
சென்னை, பிப். 5: தமிழ்நாட்டையே ஆள வேண்டும் என்று நீதிபதிகள் நினைப்பது சரியல்ல. முதல்வரை விமர்சிக்க நீதிபதிகளுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கடுமையாக விமர்சித்தார்.
முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் தபேதார் ஏழுமலை இல்ல திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:
நீதிபதிகள் எல்லாம் ஏதோ ஆகாயத்திலிருந்து குதித்தவர்களைப் போல் சில பேர் நடந்து கொள்கிறார்கள். நான் எந்த நீதிபதியையும் பற்றி குறிப்பிட்டு குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்கின்றது. அந்த எல்லையோடு அவர்கள் நிற்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விமர்சிப்பதற்கு, அரசாங்கத்தைப் பற்றி தேவையில்லாமல் விமர்சித்து யோசனை கேட்பதற்கு சட்டப்படி அதிகாரம் கிடையாது.
ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிக அதிகாரம் பெற்றவர்கள் என்று நான் எண்ணவில்லை.
ஓமலூர் பள்ளி விவகாரம் தொடர்பாக மக்கள் முறையிட்டதன் காரணமாக ஒரு விசாரணை கமிஷன் அமைக்க முதல்வர் உத்தரவிடுகிறார். அதற்கு அந்த நீதிபதி என்ன சொல்கிறார், எப்படி நீதிபதிகளைக் கேட்காமல் ஒரு கமிஷனை அமைக்கலாம் என்று கேட்கிறார். முதலமைச்சரின் அதிகாரத்தை எல்லாம் நீதிபதிகள் எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? முதலமைச்சருக்கு இல்லாத பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளதா? முதல்வர் அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றமோ சட்டப்படி உள்ள விதிமுறைகளின்படி தீர்ப்புகள் வழங்க வேண்டும். அதைவிடுத்து தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பார்களேயானால் அது சரியல்ல என்றார் ஆர்க்காடு வீராசாமி.
நீதிமன்றம் கட்டைபஞ்சாயத்தாக ஆகிவிடக் கூடாது: அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி
சென்னை, பிப். 5: நீதிமன்றங்கள் கட்டைப் பஞ்சாயத்துக்களாக ஆகிவிடக் கூடாது என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கடுமையாக விமர்சித்தார்.
முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் தபேதார் ஏழுமலையின் இல்ல திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:
நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கக் கூடிய உரிமை நமக்கு இருக்கிறது. அவர்களைத் தனிப்பட்ட முறையில் குறை கூறக் கூடாதே தவிர, தீர்ப்புகளைப் பற்றி விமர்சிக்கலாம்.
சென்னை மாநகராட்சித் தேர்தலை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்தார்கள். அந்தத் தீர்ப்பில் ஒரு நீதிபதி, இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. தேர்தல் நடந்து முடிந்துவிட்ட காரணத்தால் மொத்தத்தில் தேர்தலை விசாரிப்பது என்பது தவறு என்று சொன்னார். மற்றொரு நீதிபதியான இப்ராஹிம் கலிபுல்லா, 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சொன்னார். 99 வார்டுகளில் என்னென்ன தவறுகள் நடைபெற்றன என்று ஒவ்வொரு வார்டுக்கும் அவர் காரணம் எழுத வேண்டும். ஆனால் அவர் அப்படி காரணங்களை எழுதினாரா என்றால் இல்லை. அவர் மொத்தத்தில் என்ன சொல்கிறார் என்றால் பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்த்து இந்த 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிடுவதாகக் கூறினார்.
பத்திரிகைளில் வருகின்ற செய்திகளின் அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்பு கொடுக்கக் கூடாது என்று 21 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. ஆனால் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் 99 வார்டுகளில் மறு தேர்தல் என்று சொல்லியிருக்கிறார். அது முடிவான தீர்ப்பா என்றால்- இல்லை. இரண்டு நீதிபதிகள் இரண்டு விதமான தீர்ப்பு அளித்தனர். இருப்பினும் முதல்வர் கருணாநிதி ஜனநாயகத்தைப் பெரிதும் மதித்து, 99 கவுன்சிலர்களையும் ராஜிநாமா செய்ய சொல்லிவிட்டு நாங்கள் தேர்தலைச் சந்திக்கிறோம் என்று சொன்னார்.
இந்த நிலையில், இந்த தேர்தல் ஆணையர் தேர்தலை நடத்தக் கூடாது. அவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக வழக்கு போட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி, இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தடை விதிக்க எனக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையரை மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட்டு, அரசாங்க வழக்கறிஞர் கலிபுல்லாவை பார்த்து, தேர்தல் பார்வையாளர்களை நியமிப்பதற்கு அரசு ஒத்துக்கொள்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறுகிறார்.
சட்டம் என்ன சொல்கிறதோ, அந்த சட்டத்தின்படி நீதிபதி நடக்க வேண்டுமே தவிர நீதிபதியே, இந்தத் தேர்தலுக்கு தடை விதிக்க எனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு, தமிழக அரசிடம் என்ன யோசனை கேட்பது? சமரச உடன்பாடு என்ன காண்பது எனக்குள்ள கவலையெல்லாம் நீதிமன்றங்கள் கட்டைப் பஞ்சாயத்துக்களாக ஆகிவிடக் கூடாது என்பதுதான்.
இப்படி நீதி மன்றங்கள் தமிழகத்திலே தொடர்ந்து செயல்படுமேயானால் மக்களுக்கு நீதிமன்றங்களின் மீதுள்ள நம்பிக்கை போய்விடும் என்ற நிலை தான் ஏற்படும். அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்றார் ஆர்க்காடு வீராசாமி.
ீதித்துறையை ‘அவமதிக்கும்’ வகையிலான அமைச்சரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
![]() |
![]() |
நீதித்துறை அவமதிப்பு? |
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சமீபத்தில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய விமர்சன கருத்துக்கள், நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டில் அரசியல்வாதிகள் தலையிடுவதை காட்டுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர்.
பெரும்பாலான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர். அதேசமயம் அரசு வழக்கறிஞர்கள் வழக்கம்போல் நீதிமன்றத்தில் வாதாட வந்தனர். ஆனால், வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் ஊர்வலமும் கண்டன கோஷங்களும் நீதிமன்றங் களின் செயல்படுகளை பெருமளவு ஸ்தம்பிக்கச்செய்தது. இதையும் மீறி சில நீதிமன்றங்களில் இன்று காலை வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. ஆனால் அங்கும் கூட மதியத்திற்குள் வழக்கறிஞர்களின் புறக்கணிப்பு காரணமாக விசாரணைகள் நடக்கவில்லை.
அதிமுக வழக்கறிஞர் அணியைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது அவர்களுக்கும் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் இடையில் மோதல்
சூழல் ஏற்பட்டு பின்னர் நிலைமை தணிந்ததாக
காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றத்தை போலவே, சென்னையின் சைதாப்பேட்டை,
எழும்பூர்,ஜார்ஜ்டவுன் நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள்
நீதிமன்றங்களை புறக்கணித்தனர். தமிழகத்தின் மாவட்ட அளவிலான நீதிமன்றங்களிள் நீதிமன்ற புறக்கணிப்பு விடயத்தில் தி.மு.க. அ.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கிடையே வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநராட்சிக்கான உள்ளாட்சித்தேர்தலில் நடந்ததாகக்
கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இருவேறு வழக்குகளில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு குறித்து தெரிவித்திருந்த கருத்துக்களை எதிர்த்தும், கடுமையாக விமர்சித்தும் ஆற்காடு வீராசாமி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதே மேடையில் பேசிய முதல்வர் மு கருணாநிதியும் இதை மறைமுகமாக ஆமோதிக்கும் விதத்தில் பேசியிருந்தார்.
இது நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.