தேவைப்பட்டால் ராஜினாமா செய்வோம் – த.தே.கூ
இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் திமுக வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமாவை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் பட்சத்தில் தங்களது பதவிகளை துறக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதாக அதன் தலைவர் இரா.சம்மந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் தாங்கள் இராஜினாமா செய்தால், அவ்விடங்களுக்கு தங்களுடைய கைப்பாவைகளை இலங்கை அரசு நியமிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதன் மூலம் உலகை ஏமாற்ற இலங்கை அரசு முயற்சிக்கும் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையின் கிழக்கே வட்டமடுவில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை – அமைச்சர்
 |
|
இலங்கை வரைப்படம் |
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வட்டமடு பகுதியில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பான சூழ்நிலை இன்னமும் அங்கு இல்லை என கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சரான நவரட்னராஜா கூறியுள்ளார்.
இப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை 4 விவசாயிகள் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ள அச்சநிலை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,
சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு தரப்பினரால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டாலும் அது சாத்தியப்படக் கூடியது அல்ல என்றும் தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடகே தொடரும் மோதல்
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் மீது இருமுனைகளில் சனிக்கிழமை காலை இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் அதி தீவிர பாதுகாப்புக்குள் இருந்த முக்கிய நீண்ட பெரும் மண் அரணின் 3 கிலோ மீட்டர் பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த விடுதலைப்புலிகளின் பலத்த பாதுகாப்புமிக்க 13 பதுங்கு குழிகளையும் இராணுவத்தினர் தமது வசப்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
அக்கராயன்குளத்திற்கு மேற்குப் புறமாக முன்னேறிய படையினர் விடுதலைப் புலிகளின் மண் அரணின் 2 கிலோ மீட்டர் பகுதியையும், கிழக்குப் புறத்திலிருந்து முன்னேறிய இராணுவத்தினர், இந்த அரணின் ஒரு கிலோ மீட்டர் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.
இந்த முன்னகர்வின்போது இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்றதாகவும் இதன்போது படைத்தரப்பில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இதேபோல விடுதலைப் புலிகள் தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் மற்றும் உடைமைச் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
எனினும் இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
இலங்கை தமிழ் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது – இந்திய பிரதமர் கோரிக்கை
இலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்ததுவரும் சண்டையில் சாமானியத் தமிழர்கள் பாதிக்கப்படாதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர், இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமானச் சூழல் மோசமடைந்துவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு செல்லும் சாலையை சீர்திருத்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு
 |
|
ஒமந்தை சோதனைச்சாவடி |
இலங்கையின் வடக்கே, ஓமந்தை சோதனைச்சாவடிக்கு அப்பால் புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி வழியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வன்னிப்பிரதேசத்திற்குச் செல்லும் வீதியில் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு அரசு 30 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கியுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.
புளியங்குளத்தில் இருந்து நெடுங்கேணி ஊடாக ஒட்டுசுட்டான் வரையிலான பகுதியில் சுமார் 20 கிலோ மீட்டர் நீளமான வீதி மோசமாக இருப்பதாக அரசாங்கத்தின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டுவந்திருந்தனர்.
புளியங்குளத்திற்கு அப்பால் பாலம் ஒன்று உடைந்ததனால் கடந்த வாரம் முதற்தடவையாக இந்த வீதிவழியாக உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ட்ரக் வண்டிகள் பிரயாணத்தை மேற்கொள்ள முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற கடும் சண்டைகளில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த மோதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
வன்னிப் பகுதிக்கான இரண்டாவது தொகுதி ஐ.நா. உணவு உதவிப் பொருட்கள் சென்றடைந்துள்ளன
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐ.நா.வின் உலக உணவுத் தி்ட்டத்தினால் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 டிரக் வண்டிகளும் வெள்ளியன்று எவ்வித பிரச்சனையும் இன்றி அப்பகுதிகளுக்கு சென்று உணவுப் பொதிகளை அங்கே இறக்கியுள்ளன.
முல்லைத் தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்கும் பணிகளை கண்காணித்துவரும் உலக உணவுத் திட்டத்தின் அதிகாரி மார்க் வைல்ட் ஸ்டிரக், எடுத்துவரப்பட்ட 750 டன்களில் உணவுகளில் 300 டன்கள் முல்லைத் தீவுக்கும், 450 டன்கள் கிளிநோச்சிக்கும் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தாங்கள் வழங்கும் பொருட்கள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டு பல்நோக்கு கூட்றவு சங்கங்கள் மூலமாகவிநியோகிக்கப்படுகின்றன. ஆதலால் அப்பொருட்கள் விடுதலைப் புலிகளுக்கு செல்கின்றன என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவரிடம் இராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்
தமிழகத்தில் ஆளும் திமுவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இராஜினாமா கடிதங்களை கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியிடம் அளித்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
இலங்கை விவாகாரத்தில் இந்தியா தலையிட்டு அக்டோபர் 29ஆம் தேதிக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி, நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை ஏற்கனவே கருணாநிதியிடம் கொடுத்துவிட்டார். வெள்ளியன்று அமைச்சர்கள் உள்ளிட்ட பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை கருணாநிதியிடம் அளித்துள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திமுகவைச்சேர்ந்த தயாநிதி மாறன் ராஜினாமா கடிதம் கொடுத்தாரா என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்திய சட்டப்படி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதங்களை மக்களவை சபாநாயகருக்கும், மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்த அவையின் தலைவருக்கும் அனுப்ப வேண்டும்.
இலங்கை நிலவரம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது
 |
|
இந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன் |
இந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன் அவர்கள் இந்தியாவுக்கான இலங்கை தூதர் குணசிங்கே அவர்களை தமது அலுவலகத்திற்கு அழைத்து இலங்கை நிலவரம் குறித்து இந்தியாவின் கவலைகளை தெரியப்படுத்தியுள்ளார்.
வெள்ளியன்று நடந்த இந்த சந்திப்பின்போது, இந்த விவகாரத்தில் இந்தியாவின் கவலைகளை போக்கத்தக்க முறையான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கவேண்டும் என ஷிவ்ஷங்கர் மேனன் கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொல்லைக்குள்ளாகும் சம்பவங்கள் மற்றும் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்தும் இந்தியாவின் கவலைகளையும் அவர் அப்போது தெரியப்படுத்தியிருந்தார்.
இலங்கையில் தொடரும் மோதல்களின் காரணமாக இதில் சம்பந்தப்படாத பொதுமக்கள் சந்திக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று தெரிவித்திருந்த பின்னணியில், இன்றைய இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி அவர்கள் கோரியிருந்தார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இராணுவ ரீதியிலான வெற்றிகள் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தாது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூக மக்களும் சமமாக வாழக்கூடிய அரசியல் ரீதியான தீர்வே சமாதானத்தை கொண்டுவரும் எனவும் அவர் வலியுறித்தியிருந்தார்.
இலங்கையின் வடக்கே மருத்துவ சேவையில் தட்டுப்பாடுகள்
கிளிநொச்சி நகரை ஒட்டி சமீபத்தில் அதிகரித்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் தமது சுகாதார தேவைகளுக்கு தர்மபுரம் மருத்துவ மனையை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நோயாளர்களின் அதிகரிப்பை சமாளிக்க அந்த மருத்துவமனையால் இயலவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் வயிற்றோட்ட நோயும் பாம்புக்கடியும் அதிகமாகக் காணப்படுவதாக தர்மபுரம் வைத்தியசாலையின் பதில் மருத்துவ பொறுப்பதிகாரி டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரத்தி்ல் 200 பேருக்குமேல் பாம்புக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
வயிற்றோட்டம் பாம்புக்கடி ஆகியவற்றிற்குத் தேவையான முக்கிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாக்டர் பிரைட்டன் கூறுகின்றார்.
இது குறித்து தர்மபுரம் மருத்துவமனையின் பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி பிரதாப் நாயகம் பிரைட்டன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
வன்னிக்கான உணவுத் தொடரணி மோதலால் திரும்பியது
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐநாவின் உலக உணவுத் தி்ட்டத்தினால் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியைக் கடந்து புளியங்குளம் பிரதேசம் வரையில் சென்றதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வவுனியாவுக்கே மீண்டும் திரும்பி வந்ததாக ஐ நாவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐநாவின் உதவி அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் போர் நெருக்கடிகள் சூழ்ந்துள்ள வன்னிப்பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு காரணங்களைக்காட்டி, அங்கிருந்து அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 2 ஆம் திகதி உலக உணவுத் திட்டத்தின் முதல் தொகுதியாக 51 ட்ரக் வண்டிகளில் 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் உள்ள ஐநாவின் உலக உணவுத் திட்ட களஞ்சியசாலையில் இராணுவத்தினரால் முழுமையாகச் சோதனையிடப்பட்டதன் பின்னர் இந்த 50 ட்ரக் வண்டிகளும் இன்று பகல் 12.30 மணியளவில் வன்னிப்பகுதியை நோக்கி ஐநாவின் கொடியுடன், உலக உணவுத் திட்ட அதிகாரிகளின் வழித்துணையோடு புறப்பட்டுச் சென்றன. எனினும் ஓமந்தைக்கு அப்பால் நிலவிய பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக இந்த ட்ரக் வண்டிகள் மீண்டும் வவுனியாவுக்கு சில மணித்தியாலங்களின் பின்னர் திரும்பி வந்து சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வாகனத் தொடரணி புளியங்குளம் சந்தியைக் கடந்தபோது. விடுதலைப் புலிகள் ஏவிய மோட்டார் குண்டுகள் அந்தப் பிரதேசத்தில் வந்து வீழ்ந்து வெடித்ததனால், 50 ட்ரக் வண்டிகளும் தமது பயணத்தைக் கைவிட்டு திரும்பி வந்ததாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாட்டங்களுக்கென அத்தியாவசிய உணவுப் பொருட்களை வவுனியாவிலிருந்து ஏற்றிச் சென்ற 18 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனையிடப்பட்டதன் பின்னர் புளியங்குளம் நெடுங்கேணி வீதி வழியாகத் தமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டதாக வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பு உத்திரவாதங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் இந்த வாகனத் தொடரணி வன்னிக்குச் செல்லும் என்று இலங்கையில் உள்ள ஐ நா பேச்சாளர் கார்டன் வைஸ் நம்பிக்கை வெளியிட்டார்.
புலிகளின் இரண்டு முக்கியத் தலைவர்களைக் கொன்றுவிட்டதாக இலங்கை இராணுவம் கூறுகிறது
 |
|
முகமாலை பகுதியில் உள்ள புலிகளின் நிலைகள் |
இலங்கையின் வடக்கே முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது தொடுத்த தாக்குதல் ஒன்றில் புலிகளின் இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டு, விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாக ராணுவத் தலைமையக் விடுத்துள்ள இணையச் செய்திக்குறிப்பு கூறுகின்றது.
படைத்தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் , 9 பேர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள தகவலில், மோதல்கள் நடந்ததை உறுதி செய்து, ஆனால் ராணுவத்தின் முன் நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறியிருக்கின்றனர். இந்த மோதல்களில் 15 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இரு தரப்பு கருத்துக்களையும் பக்கச்சார்பற்ற முறையில் உறுதிசெய்ய முடியவில்லை.
இலங்கைப் பிரச்சனையை முன்நிறுத்து வரும் 21 ஆம் தேதி சென்னையில் மனித சங்கிலி
 |
|
முதல்வர் கருணாநிதி |
இலங்கைத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்துக் கட்சி கூட்டதீர்மானங்களை வலியுறுத்தி, சென்னையில் எதிர்வரும் அக்டோபர் 21ஆம் நாளன்று மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என
தமிழக முதல்வர் கருணாநிதி, அறிவித்திருக்கிறார்.
தமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கருத்து வெளியிட்டுள்ள கருணாநிதி, அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையினை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஆலோசகர் பாசில் ராஜபக்சே வரவேற்றிருப்பதை சுட்டிக்காட்டி, சிங்களர்களுக்கு ஆதரவாகவே ஜெயலலிதா செயல்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இலங்கை நிலவரம் தொடர்பில் இந்தியா மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது
 |
|
இலங்கை நிலை குறிதத்து இந்தியா கவலை |
இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களின் காரணமாக பொதுமக்கள் மீது ஏற்படும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா மீண்டும் கவலை தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தீர்வு பிரச்சினைகளுக்கு தீர்வாகது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியான தீர்வே காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார்.
இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் என்று கோரியுள்ள அவர் இந்திய அரசு இதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிவந்த வண்டிகள் வழியிலேயே நிற்கின்றன
இலங்கையில் வன்னிப் பகுதிக்கு அவசரமாக உணவுப் பொருட்களுடன் அனுப்பிவைக்கப்பட்ட 20 ட்ரக் வண்டிகள் வழியிலேயே தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் வடக்கே மோதல்கள் இடம்பெற்றுவருகின்ற வன்னிப் பகுதிக்கும், வவுனியாவுக்கும் இடையிலான போக்குவரத்துப் பாதையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து, உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படுகின்ற இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அங்கு அனுப்பிவைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உணவுப் பொருட்கள் அவசரமாக அனுப்பப்பட்டிருந்தன.
புளியங்குளம் பகுதியில் அந்த வாகனத் தொடரணி தேங்கி நிற்பதாக அதனுடன் வவுனியாவிலிருந்து பிரயாணம் செய்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் அவர்கள் கூறுகின்றார்.
வவுனியாவுக்கும் வன்னிப்பகுதிக்கும் இடையில் ஏ9 வீதியில் நடைபெற்று வந்த போக்குவரத்து யுத்த மோதல்கள் காரணமாக மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதிக்கு மாற்றப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த போக்குவரத்து மார்க்கத்திலும் மாற்றம் செய்யப்பட்டு நெடுங்கேணி வழியாக பிரயாணம் செய்யுமாறு அறிவிக்கப்பட்ருந்தது. எனினும் இந்தப் புதிய வீதிவழியாக உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதில் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் உடனடியாக உடன்படவில்லை.
இந்த நிலையிலேயே அராசங்கத்தின் உத்தரவுக்கமைய இன்று வன்னிப் பகுதிக்கு 20 ட்ரக் வண்டிகளில் அவசரமாக உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகிய திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் அவர்கள் கூறினார்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
விடுதலைப் புலிகள் சரண் அடைந்து ஜனநாயக வழிக்கு திரும்பவேண்டும் – இலங்கை ஜனாதிபதி கோரிக்கை
 |
|
கூட்டத்தில் கலந்து கொண்ட த.ம.வி.பு தலைவர் கருணா, ஜனாதிபதியுடன் |
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு, படையினரிடம் சரணடைந்து, தேசிய ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சனிக்கிழமையன்று விசேட அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் கூட்டியிருந்தார்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், பயங்கரவாதத்தினை முற்றாக ஒழித்துக்கட்டி, நாட்டின் சகல பாகங்களிலும் அமைதியினையும் ஜனநாயகத்தினையும் ஏற்படுத்த தனது அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.
இந்தக் அனைத்துக்கட்சிக் கட்சிக் கூட்டத்தினை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மூன்றாவது பெரிய அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி எனப்படும், ஜே.வி.பியும் புறக்கணித்திருக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கூட்டத்தில் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் கலந்து கொண்டார்.
இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்
 |
|
உடலை பார்த்து கதறியழும் உறவினர்கள் |
இலங்கையின் வடக்கே வவுனியா நகரில், ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளராகிய மகேஸ்வரன் தவச்செல்வம் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
வவுனியா ரயில்நிலைய வீதியில் அவரது வீட்டிற்கு அருகாமையில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மோட்டார் சைக்கிளில் வந்ததாகத் தெரிவிக்கப்படும் ஆயுதபாணிகள் இவரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிசார் கூறியிருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை வன்னிக்களமுனைகளிலும், யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற வெவ்வேறு சண்டைகளில் 5 இராணுவத்தினரும், 19 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டிருப்பதாகப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனினும், இந்தச் சண்டைகள், உயிர் இழப்புகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தற்கொலை குண்டுத் தாக்குதலில் தப்பினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான பொறலஸ்கமுவ பகுதியில் வியாழன் பிற்பகல் இலங்கையின் மூத்த அமைச்சரவை அமைச்சரின் வாகனத் தொடரணிமீது மேற்கொள்ளப்பட்டுள்ள பெண் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் உயிர் தப்பியிருக்கிறார்.
ஆனாலும் அமைச்சரின் வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பாகச் சென்றுகொண்டிருந்த வாகனமொன்று இதில் சேதமடைந்திருக்கிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிற்பகல் சுமார் 1.15 மணியளவில் களுத்துறை மாவட்டத்திலுள்ள பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய விவசாய நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு
வைத்தே இந்தத விடுதலைப்புலிகள் அமைப்பின் இந்தப்பெண் தற்கொலைக் குண்டுதாரி இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆனாலும் இதிலிருந்து அமைச்சரின் வாகனமும், அமைச்சரும் எவ்வித பாதிப்புக்களுமின்றி தப்பியிருப்பதாகவும், இந்த வாகனத்தொடரணியில் பயணித்துக்கொண்டிருந்த விவசாயத்துறை பிரதி அமைச்சர் சிறிசேன கம்லத் சிறிய காயங்களிற்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த ஒருவர் பின்னர் கடுமையான காயம் காரணமாக பின்னர் உயிரிழந்ததாகவும், ஏனையோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்குடா பகுதிக்கு வெளிநாட்டு தூதர்கள் விஜயம்
 |
|
யாழ் மீனவர்கள் |
இலங்கையின் வடக்கே யாழ்குடாநாட்டிற்கு பிரித்தானியா மற்றும் நோர்வே நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் புதன் கிழமை விஜயம் செய்து, அங்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் குறித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். இந்தத் தூதுவர்களுடன் ஐநாவின் அகதிகளுக்கான தூதரகத்தின் தலைமை வெளிக்கள அலுவர் ஈடா ஷூட் அவர்களும் சென்றிருந்தார்.
இந்தச்சந்திப்பு குறித்து, தசவல் தெரிவித்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்கள், வலிகாமம் வடக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அங்கிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், முதற்கட்டமாக 24 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், மேலும் 133 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காக அவர்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானியா மற்றும் நேரர்வே நாட்டு தூதுவர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் வாழ்க்கை அங்கு சீரான முறையி்ல் இருப்பதற்குரிய தொடர்ச்சியான உதவிகள் அவர்களுக்கு வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பாக ஐநாவின் அகதிகளுக்கான தூதரக அதிகாரியிடம் எடுத்துக் கூறியதாகவும் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான உயர் மட்டக்குழுவின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்’ பீட்டர் ஹெய்ஸ், நோர்வே தூதுவர் டோ ஹெற்றரம் ஆகியோர் தலைமையில் 6 பேர் அடங்கிய இந்தக் குழுவினர் யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷ் மற்றும் யரழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோரையும், யாழ் மாவட்ட நீதிக்கும் சமாதானத்திற்குமான குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.
கிளிநொச்சிக்கு வடக்கே விமானப் படை குண்டுவீச்சு
 |
|
விமானப் படை குண்டுவீச்சில் சிறுவன் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர் |
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகருக்கு வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பரந்தன் பகுதியில் குமரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது வெள்ளியன்று விமானப் படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் ஆசிரியை ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.
அவ்வாசிரியையின் கணவனும் மற்றுமொரு மகனும் உட்பட 7 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இறந்தவர்களின் உடல்களும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
எனினும் பரந்தன் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மூன்றின் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை வடமாகாண ஆளுநராக டயல பண்டார நியமனம்
இலங்கையின் வடமாகாணத்தின் புதிய ஆளுனராக டிக்சன் டயல பண்டார அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவினால் வெள்ளியன்று நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற வைபவமொன்றின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு டயல பண்டார பதவியேற்றிருக்கிறார்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஒரு அதிகார அலகாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணம், கடந்த வருடம் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் பிரகாரம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாண அலகுககளாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுநராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி செயலக வட்டாரங்களின் தகவல்களின்படி, விக்டர் பெராவின் பதவிவிலகலினால் எழுந்த வெற்றிடத்திற்கு ரத்தினபுரி மாவட்டத்தினைச் சேர்ந்த டயல பண்டார நியமிக்கப்படிருக்கிறார்.
விக்டர் பெரேராவின் பதவி விலகலுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப்போகிறோம்: அதிமுக, மதிமுக
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கவென தமிழக முதலமைச்சர் கருணாநிதி எதிர்வரும் அக்டோபர் 14ஆம் நாளன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை புறக்கணிக்கப்போவதாக அ.இ.அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அறிவித்திருக்கின்றன.
இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என்று கூறி வியாழனன்று நீண்டதொரு அறிக்கை வெளியிட்டிருந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வெள்ளியன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒரு கண் துடைப்பு நாடகம், தமிழ் மீனவர்கள் தாக்கப்படும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கருணாநிதிக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருக்குமானால் மத்திய கூட்டணி அரசிலிருந்து விலகவேண்டும், இப்படிக் கூட்டம் நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை எனக் கூறி இருக்கிறார்.
இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக சென்னையில் பேரணி ஒன்றை வெள்ளியன்று நடத்திய ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ மற்றும் நிதி உதவி செய்வதைத் தடுத்து நிறுத்தாத கருணாநிதிக்கு இப்படி ஒரு கூட்டத்தினைக் கூட்ட உரிமை இல்லை எனக் கூறி இருக்கிறார்.
தமிழகத் தலைவர்களை சந்தித்துள்ளனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்
தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவிருக்கின்ற நிலையில், தமிழ்தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்னை சென்றுள்ளது.
அக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் கூறும்போது, தாங்கள் தமிழகத்தின் பல்வேறு முக்கிய தலைவர்களையும் சந்தித்து இலங்கை தமிழர்களின் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தாக கூறினார்.
அத்தோடு தற்போது இலங்கையில் நடைபெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா மன்றத்தின் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அனைத்துக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் நேரில் சென்று நிலவரங்களை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், யுத்தம் நிறுத்தப்பட்டு இந்தியா தலையீட்டு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழகத் தலைவர்களிடம் தாங்கள் கூறியதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறினார்.
இந்த சந்திப்பு தொடர்பான மேலதிக செய்திகளையும், இவ்வாறான முன்னெடுப்புகள் எதிர்ப்பார்த்த பலனை அளிக்குமா என்பது குறித்தும் இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்களின் கருத்துக்களையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையின் வடக்கே வன்னியில் 26 ஆயிரம் மாணவர்கள் இடம்பெயர்வு
 |
|
இடம்பெயர்வால் கல்வி பாதிப்பு |
இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
இந்த மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகக் கொட்டில்களை அமைக்க வேண்டியிருப்பதாகவும் அவற்றில் 40 கொட்டில்களை மிகவும் அவசரமாக உடனடியாக நிர்மாணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
இதற்குரிய உதவிகளைப் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் அவர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தேவைகள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்களிடம் கேட்டபோது இந்தத் தேவைகளை கொழும்பில் உள்ள சிஎச்ஏ எனப்படும் மனிதாபிமான சேவைகளுக்கான நிலையத்தின் ஊடாகப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்
 |
|
மீனவர்கள் |
கடந்த முப்பது தினங்களாக கடலில் தவித்து கொண்டிருந்த தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ஆறு மீனவர்களை திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்ந்துள்ளனர்.
திருகோணமலை நீதிபதி மனாப் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட அவர்கள், அனைவரையும் குடிவரவு திணைக்களத்தின் ஊடாக இந்திய தூதுரக அதிகாரிகளிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.
தமது நலன்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
இந்த முன்னெடுப்புகளை தமது அமைப்பு வரவேற்கிறது என்றும் இது தொடர்பில் இந்திய அரசு செவிமடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அதன் நாடாளுமன்ற உறுப்பின்ர துரை ரட்ணசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்திய அரசு ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை தரவேண்டும் என்பதே தமது கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கையும் தங்களுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
 |
|
சித்தார்த்தன் |
போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட வேண்டும் என தங்கள் அமைப்பும் விரும்புவதாக தெரிவித்த சித்தார்த்தன் அவர்கள், அவ்வாறு ஏற்படும் போது வன்னிப் பகுதியிலுள்ள மக்கள் தமது விருப்பபடி வெளியேறிச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் தாங்கள் கோருவதாகவும் கூறினார்.
மேலும் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்படுமானால், அது யுத்தம் நிரந்தரமாக முடிவுக்க வர வழிவகுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
 |
|
இலங்கை ஜனாதிபதியுடன் கருணா அவர்கள் |
தமிழகத்திலே தேர்தல் காலங்கள் நெருங்குகிற போதெல்லாம் அங்குள்ள கட்சிகள் இலங்கை தமிழர்கள் நலன் என்கிற விடயத்தை பெருமளவில் முன்னெடுப்பதை காணக் கூடியதாக இருக்கிறது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இந்த அமைப்பின் தலைவரான கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன்.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும் மக்களும் இலங்கை தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை விடுதலைப் புலிகளை காப்பாற்றும் வெளிப்பாடாக இருக்கக் கூடாது என்பது தமது அமைப்பின் கருத்தாகும் எனவும் அவர் கூறினார்.
இந்திய அரசாங்கம் தற்போது வட இலங்கையில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறுவது இலங்கைக்கு ஆபத்தாக அமையும் என தாங்கள் கருதுவதாகவும் கருணா கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் இறையாண்மையை மதித்து இந்திய தனது வெளிவிவகார கொள்கைகளை முன்னெடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.
தமிழ் மக்களுக்கு உதவு இந்தியா முன்வந்தால் அதை இலங்கை அரசின் மூலம் செய்யப்படுவதையே தாங்கள் வரவேற்பதாகவும் கருணா கூறுகிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
 |
|
ரவூஃப் ஹக்கீம் |
இலங்கை தமிழர்கள் நலன் விடயத்தில் தற்போது தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் எடுத்து வரும் முன்னெடுப்புகள் போலித் தனமானது என தாங்கள் கருதுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எனிமும் தமிழக கட்சிகளின் நடவடிக்கைகளின் மூலம் இந்திய அரசு ஏதாவது முன்னெடுப்புகளுக்கு முன்வருமாயின் அதை வறவேற்பதாகவும் அவர் கூறுகிறார்.
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய அரசு முஸ்லிம்களின் பரிமாணம் குறித்து தொடர்ந்தும் ஒரு பார்வையை கொண்டிருக்காதது பற்றி தாங்கள் வேதனைப் படுவதாகவும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான இராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட அனைவரும் வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் கவலையளிப்பதாக இருக்கின்றன: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
 |
|
மன்மோகன் சிங் |
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் புதன்கிழமையன்று இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டின் முடிவில் அந்நாட்டுத் தலைவர்களுடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, மன்மோகன் சிங் இக்கருத்தைத் தெரிவித்தார்.
இலங்கையில் இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகுவார்கள் என்று தமிழகத்தில் செவ்வாய்கிழமை மாலை திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில், அதிமுக, மதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந் நிலையில், இலங்கை நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங் அவர்கள் இலங்கையில் நிலவும் சூழ்நிலை, இந்திய அரசுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.
அங்கு அதிகரித்து வரும் மோதல்கள் குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்தும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள் அதிகரித்திருப்பது குறித்தும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது அவர்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் கொல்லப்படுவது குறித்தும் கவலை கொள்வதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை தீர்வாகாது
இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கையில் நிலவும் சூழ்நிலைக்கு ராணுவ வெற்றி தீர்வாகாது என்றும், இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியா எப்போதும் நம்புகிறது. அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்தார்.
வெளியுறவு கொள்கை குறித்து மாநில அரசுகள் மத்திய அரசை வற்புறுதக் கூடாது என்று கூறுகிறது காங்கிரஸ்
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கருத்துத் தெரிவிக்கும்போது, நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்று தெரிவித்தார்.
எங்கு தவறு நடந்தாலும் அதைக் கண்டிக்கும் அதே வேளையில், அதைவிடக் கூடுதலாக எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது. ஏனென்றால், இவை மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள். என்றார் அபிஷேக் சிங்வி.
இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும்: பாஜக
பாஜகவைப் பொருத்தவரை, இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு அமைதி ஏற்பட வேண்டும். அதே நேரத்தில், தமிழ் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடம் இந்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்.