இலங்கையில் மாகாணச் சபைத் தேர்தல்கள்
 |
|
மாகாண சபைத் தேர்தல்கள் |
இலங்கையின் சபரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தல்கள் சனிக்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இதில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
சுமார் 21 லட்சம் வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தலில், சுமார் 65 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 77 பிரதிநிதிகளை தேர்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 1698 வேட்பாளர்கள் பங்கேற்றனர். இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பிரதான அரசியல் கட்சிகள் பல்வேறு விதமான வன்முறையில் ஈடுப்பட்டதாக சுயாதீன தேர்தல் அமைப்புகள் கருத்து வெளியிட்டு இருந்தன.
இலங்கையின் வடக்கே தொடரும் இடம்பெயரல்கள்
 |
|
இடம்பெயர்ந்த மக்கள் |
இலங்கையின் வடக்கே – மன்னார் மாவட்டத்தின் வடபகுதியிலிருந்தும் – முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்திலிருந்தும் – கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் ஜெயபுரம் வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் அக்கராயன் ஸ்கந்தபுரம் போன்ற பகுதிகளிலிருந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார்.
இவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை 22 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த மாதம் 8 ஆம் திகதி 3 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தக் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி வேறிடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டிருப்பதாகவும் கிளிநொச்சி அரசாஙக அதிபர் கூறியிருக்கின்றார்.
இடம்பெயர்ந்த மக்களுக்குரிய நிவாரண உதவிகளைச் செய்வதற்குத் தேவையான எரிபொருள் மற்றும் அவர்களுக்கான நிவாரண உணவு போன்றவற்றிற்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.
இதற்கிடையே, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் திடீரென பொது நிர்வாக அமைச்சுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒரு மாதகாலத்தில் எஸ்.சண்முகம் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பதும் – வவுனியா மாவட்டத்தில் சுமார் நான்கு வருடங்கள் அரசாங்க அதிபராகப் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது
இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
வட இலங்கை மோதல் நிலவரம் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் சிங்கள மாணவர் சுட்டுக் கொலை
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவரான பசன் சமரசிங்க என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.
 |
|
பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் சிங்கள மாணவர்கள் |
மறு-அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மாணவர்கள் குருநாகல் வரை விசேட வாகனங்களில் அனுப்பிவைக்கப்டப்டுள்ளார்கள்.
இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கையில் வெடிகுண்டுக்கான சாதனங்கள் மற்றும் வெடிகுண்டு கண்டெடுப்பு
 |
|
கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் |
இலங்கையில் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து தற்கொலையங்கிக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சாதனைக்களைக் கண்டுபிடித்திருப்பதாக கொழும்பு பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
கொழும்பு புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் அமைந்துள்ள புனித பிலிப்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளவினுள் இருந்து சுமார் 19 டெட்டோனேட்டர்கள், 23 ஆளிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்குண்டு அங்கியொன்றினை பொருத்துவதற்காக இவை கொண்டுவந்து மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.
இது தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
இதேவேளை, இலங்கையின் மத்திய மலைநகரமான கண்டியின் புறநகர்ப் பகுதியான பலகொல்லவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று வீடொன்றின் அருகிலிருந்த மணல்மேடு ஒன்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.
அக்குண்டு செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி உதவிகள் தேவை: யாழ் ஆயர்
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தம் காரணமாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட யாழ் ஆயர், விரைவில் மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், ஆதரவற்று திறந்தவெளியில் இருக்கும் மக்களுக்கு இருப்பிடங்களை அமைத்து தருவது உடனடித் தேவை என்று குறிப்பிட்டார்.
உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தடையற்ற முறையில் கொண்டுவருவதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம் விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற அம்னேஸ்ட்டி இன்டர்னேஷனலின் குற்றச்சாட்டு குறித்து கூறுகையில், இக்குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருப்பதாக கூறிய ஆயர், அதேநேரத்தில் இருதரப்பினரும் இச்செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குடும்பத்தில் ஒருவர் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதால், அந்தப் பகுதிகளில் இருந்து அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் அனைவரையும் புலிகளாக அரசு சந்தேகிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் நிலவும் சூழல் குறித்து யாழ் ஆயர் வெளியிட்ட கருத்துக்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
துணுக்காயைச் சுற்றிவளைத்துள்ளோம்: இலங்கை இராணுவம்
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய துணுக்காய் நகரப்பகுதியை புதன் அதிகாலை முதல் இராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
துணுக்காய் நகரத்தின் வடக்கு மற்றும் மேற்குத் திசைகளில் இருந்து நகர்ந்துள்ள படையினர், புதன் காலை இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
மாங்குளம் – வெள்ளாங்குளம் வீதியில் அமைந்துள்ள துணுக்காய் நகர் விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய இடமாகக் கடந்த 25 வருடங்களாகத் திகழ்ந்து வந்துள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ஓமந்தை பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது உலங்கு வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
ஓமந்தைக்கு வடமேற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா பகுதியில் புதன்கிழமை விடுதலைப் புலிகளின் நான்கு இலக்குகள் மீது விமானப்படையினர் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் நேற்றைய சண்டைகளில் 14 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் போர்முனைகளிலும், வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி பகுதிகளிலும் இந்த மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா நீதிமன்றத்தில் சரண்
இலங்கை நீதிமன்றம் ஒன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா வியாழனன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்றில் அவர் மீது கடந்த வாரம் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதேவேளை, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டுவதாக குற்றஞ்சாட்டியும், அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யக் கோரியும் செய்தியாளர்களின் அமைப்புகள் வியாழனன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.
ஆயினும் அந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே அமைச்சர் நீதிமன்றில் சரணடைந்துவிட்டதாக கொழும்பில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
இலங்கையின் வடமத்திய மற்றும் சப்ரகமுவ தேர்தல் பிரச்சார இறுதி தினத்தில் வன்முறைகள்
இலங்கையின் தென்பகுதியில் எதிர்வரும் சனிக்கிழமை தேர்தல் நடக்கவிருக்கின்ற இரண்டு மாகாண சபைகளான வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன.
அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் தமது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டிருந்த அதேவேளை, அந்த மாகாணங்களில் இன்று பல்வேறுபட்ட வன்முறைகள் குறித்தும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அதிலும் குறிப்பாக இன்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி தினத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட கணிசமான வன்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரும் மற்றும் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், தீவைப்புகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் என்பன உட்பட கடந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் பத்துக்கும் அதிகமான வன்செயல்கள் இந்த இரு மாகாணங்களிலும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக அநுராதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்காவின் இணைப்பதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர்.
”தமிழர்களில் கணிசமானோரின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று குற்றச்சாட்டு”
இதேவேளை இலங்கையின் தென்பகுதியில் தமிழர்களை வாக்காளர்களாக பதிவதில் காட்டப்படும் பாரபட்சத்தின் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியினர் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.
இதன்காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அந்த கட்சியின் உபதலைவரான கணபதி கனகராஜ்
தேர்தல் திணைக்களம் இந்த விடயத்தில் காட்டும் அசிரத்தையும், தோட்டத்தொழிலாளர்களின் அக்கறையீனமுமே இதற்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
வவுனியாவில் சமுர்த்தி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
 |
|
ஆர்ப்பாட்டத்தில் சமுர்த்தி பணியாளர்கள் |
இலங்கையில் மக்கள் மத்தியில் வறுமையைத் தணித்து வாழ்க்கையை மேம்படுத்தும் சமுர்த்தி அதிகார சபையின் கீழ் பணியாற்றும் வவுனியா மாவட்ட சமுர்த்தி அலுவலர்கள் பதவி மற்றும் சம்பள உயர்வு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.
இதில் வவுனியா மாவட்ட தமிழ் சிங்கள நிர்வாக பிரிவுகளைச் சேர்ந்த சமுர்த்தி அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
இது பற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்
மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்
 |
|
அமைதிப் போராட்டத்தில் மாணவர்கள் |
இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்ல மறுத்த தென்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத நிலையில், தமக்கு தென்பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் அனுமதி வழங்குமாறு பெரும்பாலான சிங்கள மாணவ, மாணவிகள் கோரியிருந்தனர்.
ஆயினும், இதுவரை அவர்களுக்கு இதுகுறித்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இவை குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களின் நலனுக்கான சட்டமூலம்
இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு குறித்த சட்டமூலம் ஒன்றினை வரைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அதனை சட்டமாக்குவதற்காக உரிய அமைச்சரிடம் கையளித்துள்ளது.
இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து அதனை ஒரு சட்டமூலமாக்குவதற்கான முயற்சிகளில் மனித உரிமைகள் ஆணையகம் ஈடுபட்டிருக்கின்றது.
பல வருடங்களாகத் தொடரும் உள்நாட்டு யுத்தம் மற்றும் சுனாமித் தாக்கம், இயற்கை அனர்த்தங்கள், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள்.
இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களில், போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்திருப்பவர்கள், நாட்டில் உள்ள ஏனைய மக்களைப் போன்று கௌரவமிக்க சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியாதவர்களாக இருப்பதாகவும், மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிடுகின்றது.
இந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்குமான சட்டமூலம் ஒன்றை அது வரைந்திருக்கின்றது.
இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் அதனைக் கையளித்திருப்பதாக மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்திருக்கின்றது.
இடம்பெயருகின்ற மக்களின் உரிமைகளைப் பல்வேறு நிலைகளிலும் பாதுகாத்து, சமூக பொருளாதார அடிப்படையில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதே இந்த சட்ட வரைவின் முக்கிய நோக்கமாகும் என்றும், இந்த வரைவு குறித்து பொது மக்களின் கருத்துகளைத் திரட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஆணையகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடக்கு அகதிகளுக்கு உதவுவது என்று கிழக்கு மாகாண சபை முடிவு
 |
|
கிழக்கு மாகாண சபை |
இலங்கையின் வடக்கே போர் இடம்பெறும் பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான தீர்மானம் ஒன்றை கிழக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது.
மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் கிளிநொச்சி மற்றும் அதனருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பது என்றும் கிழக்கு மாகாண சபை முடிவெடுத்துள்ளது.
இவை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து பேசுவது என்றும் அங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
எத்தகைய உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து பேசிய பின்னரே முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
கட்புல வலுவிழந்தோருக்கான கிரிக்கட்
இந்திய கிரிக்கட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணியுடன் விளையாடிவரும் நிலையில் போர்மேகம் சூழ்ந்துள்ள இலங்கையின் வடக்கே வவுனியாவில் பார்வையிழந்தவர்களுக்கான கிரிக்கட் விளையாட்டுப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக இந்தப் பயிற்சியை வழங்கிய கட்புல வலுவிழந்தவர்களுக்கான தேசிய கிரிக்கட் கழகத்தின் தலைவர் ரியன்ஸி பெனடிக்ட் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியை வவுனியா வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் வி.சுப்பிரமணியம் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.
”ஒருவர் பார்வை இழந்திருக்கின்றார் என்பதற்காக அவரது – விளையாட்டுத்துறை சார்ந்த திறமைகள் பண்புகள் என்பன பாதிக்கப்படக் கூடாது, அவ்வாறு கட்புல வலுவிழந்தவர்களை ஊககுவிக்க வேண்டும்” என்பதே தமது கழகத்தின் நோக்கம் என்றும் கட்புல வலுவிழந்தவர்களுக்கான தேசிய கிரிக்கட் கழகத்தின் தலைவர் ரியன்ஸி பெனடிக்ட் கூறுகின்றார்.
வட இலங்கை நிலவரம் தொடர்பில் புலிகள் பொய்ப் பிரச்சாரம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 |
|
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா |
இலங்கையின் வடக்கில் யதார்த்த நிலை வேறு விதமாக இருக்க, வெளியுலகுக்கு பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும், இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் இலங்கை அரசின் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிழக்கில் செய்தது போலவே மக்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இது தொடர்பில் அந்தப் பகுதியிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை களைவதில் அரசுக்கு மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
தற்போது வடக்கு பகுதியில் ஆயிரக்காண ஏக்கர்கள் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அந்த நடவடிக்கையும் தடைபட்டுள்ளது குறித்து கொழும்பிலிருந்து கொண்டு அரசால் மட்டுமே பெரிய அளவில் எதுவும் செய்துவிடமுடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.
விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர்: அனைத்துலக அபய ஸ்தாபனம்
விடுதலைப்புலிகள் அமைப்பினர் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிராக பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதன் மூலம், சர்வதேச சட்டங்களை மீறுவதாக மனித உரிமை அமைப்பான அனைத்துலக அபய ஸ்தாபனம் கூறுகிறது.
இலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வகையில், விடுதலைப்புலிகள் மக்களை பலவந்தமாக தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுத்து வைத்துள்ளது குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக அபய ஸ்தாபனத்தின் ஆய்வாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கமும் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் நீண்ட காலமாக தொடரும் மோதலில், இராணுவ இலக்குகளை எட்டுவதற்காக இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற இரண்டு தரப்பினரும் பொதுமக்களை ஆபத்தில் விடுவதாக அபய ஸ்தாபனம் கூறியுள்ளது.
அபய ஸ்தாபனத்தின் தற்போதைய அறிக்கை குறித்து அந்நிறுவனத்தின் இலங்கை விவகார ஆய்வாளர் யோலாண்டா ஃபாஸ்டர் தமிழோசைக்குத் தெரிவித்தக் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மன்னார் மடு ஆலயத்தில் ஆவணித் திருவிழாவை ஒட்டி திருப்பலி பூசை
இலங்கையின் வடமேற்கே இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருநாளையொட்டி வெள்ளியன்று எளிமையான முறையில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கின்றது.
நான்கு மாதங்களின் பின்னர் இந்த ஆலயத்தை திருச்சபையினரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள் இங்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆயினும் வெள்ளிக்கிழமை விசேட தினமாதலால் நாட்டின் தென்பகுதியில் இருந்து 700 பேர் அங்கு வந்திருந்ததாக மடு பரிபாலகர் அருட்திரு எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.
வடபகுதியில் இருந்து யாத்திரிகர்கள் எவரும் இன்று வரவில்லை என்றும் அவர் கூறினார்.
சேதமடைந்திருந்த மடுக்கோவிலின் கட்டிடங்கள் திருத்தப்பட்டுள்ள போதிலும், பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியிலேயே தாங்கள் அங்கு தங்கியிருப்பதாக அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவிக்கின்றார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சித் தளத்தை கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஜீவன் தளம் எனப்படும் முக்கிய பயிற்சித் தளத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் பிரசித்தி பெற்ற தளமாகிய ஒன்ஃபோர் தளம் எனப்படும் முகாமின் முக்கிய பகுதிகளில் ஜீவன் தளமும் ஒன்று என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.
கைப்பற்றப்பட்டுள்ள இந்த தளத்தில் 1250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நான்கு கட்டிடங்களும், 100 பதுங்கு குழிகளும், 35 கழிப்பறைகளும் இருப்பதாகவும், இந்தப் பகுதியில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் 69 பேரின் கல்லறைகள் காணப்பட்டதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்iயில் தெரிவித்திருக்கின்றது.
எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
வவுனியா பாலமோட்டை, துணுக்காய், வெலிஓயா ஆகிய களமுனைகள் உட்பட்ட வன்னிப் போர்முனைகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 38 விடுதலைப் புலிகளும் 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
எனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள் இங்கு இராணுவத்தினருடன் இடம்பெற்ற சண்டைகளில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.
வன்னியில் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அல்லப்படுவதாக புகார்
 |
|
இடம்பெயர்ந்த மக்கள் |
இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அந்தப்பிரதேசத்தினுள் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வீதியோரங்களில் மர நிழல்களில் பொது இடங்களில் தங்கியுள்ள இவர்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருவதாகவும் இவர்களுக்குத் தேவையான அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவது கடினமாகியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டுத் தாக்குதல்கள் காரணமாகவும் வேறு பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
வன்னிப்பிரதேசத்து நிலைமைகள் குறித்து அவர் எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகத்திடம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
வன்னி பகுதிக்கு மனிதாபிமான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை
 |
|
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரத்தினம் |
இலங்கையில் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்விற்குள்ளாகியிருக்கும் மக்களின் துயர் துடைக்க, கிழக்கு மாகாண சபை அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை முன் வைத்து கடிதமொன்றை தமிழ் ஜனநாயக தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரத்தினம் அனுப்பி வைத்துள்ளார்.
வன்னிப் பிரதேசத்தில் ஏற்கனவே இடம் பெயர்ந்தவர்களும், நிரந்தர வசிப்பாளர்களும் என ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்விற்கு உள்ளாகி அல்லல்படுவதாகவும், உணவு, உடை, குழந்தைகளுக்கான பால்மா உட்பட இவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பது குறித்து அக் கடிதத்தில் தான் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.
அத்தோடு மக்களை வெளியேறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்து மனிதக் கேடயமாக பயன்படுத்துவார்களானால் அது கண்டிக்க வேண்டியது என்றும்,
அதே போல மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது அரசாங்கத்தினால்
மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பெரும்போக விவசாயம்
 |
|
பெரும்போக விவசாயத்திற்கு இலக்கு |
இலங்கையின் கிழக்கு மாகாணப் பகுதியில் தற்போது சிறுபோக வேளாண்மைச் செய்கை முடிவடைந்து, பெரும்போக விவசாயச் செய்கையினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.
இந்த நிலையில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒரு இலட்சம்
ஹெக்டேர் விவசாய விளைநிலத்தில் விவசாயம்
செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்திருக்கின்றார்.
அத்தோடு விவசாயிகளுக்கு நிதி உதவி, விதை நெல் உதவி, நில மேம்பாடு மற்றும் இதர வசதிகளை விவசாய அமைச்சு செய்து கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விளைப்பொருட்களை சந்தைபடுத்தல் என்பது சுலபமான விஷயமாக தான் இருக்கும், என்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்திருக்கின்றார்.
கல்விளான் மற்றும் முழங்காவில் ஆகியவற்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்விளான் சிற்றூரையும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள முழங்காவில் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து அரச படைகள் இன்று கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய துணுக்காய்க்கு தென்மேற்கில் உள்ள கல்விளான் பகுதியை நோக்கி முன்னேறிய படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் கடுமையான பலநாள் எதிர் தாக்குதல்களுக்குப் பின்னர், இந்தப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியிருப்பதாகக் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம், நேற்று இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
 |
|
விடுதலைப்புலிகள் |
ஆயினும் வவுனியா நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் நேற்று இராணுவத்தினருக்கு எதிராக தாங்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
ஆனால், வவுனியா பாலமோட்டை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகளில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
வவுனிக்குளம் மற்றும் வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேற்று மேற்கொண்ட தாக்குதல்களில் 5 விடுதலைப் புலிகளும், 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
நலன்புரி நிலையத்தில் மீண்டும் தீ
 |
|
இரண்டாவது தடவையாக தீ விபத்து |
வவுனியா, பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் இன்று பகல் ஏற்பட்ட தீயினால் அந்த நலன்புரிநியைத் தொகுதியின் இரண்டு பிரிவுகளில் உள்ள 80 வாழ்விடங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியிருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் 70 குடும்பங்கள் வசிப்பிடங்களை இழந்துள்ளதாகவும், சுமார் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த மாதம் 17 ஆம் திகதியும் இதே இடத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டதும், அதிலும் நூற்ருக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும், இந்த நலன்புரிநிலையத் தொகுதியில் உள்ள பாடசாலை மண்டபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு இந்த குழும்பங்களுக்குத் தேவையான அடுத்த கட்ட உதவிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார்.
கிழக்கு இலங்கையில் ஆட்கடத்தல்கள், கொலைகள்
அம்பாறை மாவட்டம் கல்முனையில் ஒரு தாயும் மகனும் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் மட்டக்களப்பு கொத்தியாவளை கிராமத்தில் புதன் நள்ளிரவு கடத்தப்பட்ட விவசாயியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் இக்கடத்தல்கள் மற்றும் கொலைக்கான பின்னனியோ, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ இதுவரை கண்டறியப்படவில்லை என்று பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப் பகுதியில் உள்ள காட்டுப் பிரதேசத்தில், புதன் மாலை விறகு வெட்டச் சென்ற இருவர் சுட்டுக்கொல்லபட்டுள்ளார்கள்.
விடுதலைப்புலிகளே இவர்களை சுட்டுக்கொன்றதாக ஆரம்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இது குறித்து கருத்துக்கள் எதுவும் வரவில்லை.