தேவை தரமான ஆசிரியர்களின் சேவை
சி. வேழவேந்தன்
தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன.
எனவே, அப்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் நிலை இருந்தது.
மருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அங்கே இடம் கிடைக்காத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவது வழக்கம்.
ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 18 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு மேலும் குறைத்துள்ளது.
இதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் (குறைந்த மதிப்பெண்கள் பெற்றால்கூட) பொறியியல் கல்லூரிகளில் அரசின் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்கும் நிலை உள்ளது.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் (ரூ. 2 லட்சம் வரை) சீட் கிடைக்தாத நிலையே இருந்துவந்தது.
ஆனால், தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதன்மூலம் ஆண்டுதோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் உள்ள 40 ஆயிரம் இடங்களில் 25 ஆயிரம் இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.
மீதம் உள்ள 15 ஆயிரம் இடங்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.
அரசின் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் அரசு ஒதுக்கிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.
போட்டி அதிகமாக இருந்தபோது தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் தானாக நிரம்பின.
ஆனால் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கே மாணவர்கள் இல்லாமல் இடத்தை காலியாக வைத்துள்ளன.
எனவே தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முன்னர் ரூ. 2 லட்சத்திற்கு விலை போன இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான இடம், தற்போது ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் என குறைந்துள்ளது.
இதையும் தவணை முறையில் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மாணவர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் குறைந்த பட்ச கட்-ஆப் மதிப்பெண் 470.
இதேபோல, மாணவிகள் பொதுப் பிரிவில் அறிவியல் பிரிவுக்கு 835, கலைப் பிரிவுக்கு 952, தொழில் பிரிவுக்கு 971 என கட்-ஆப் மதிப்பெண் இருந்தது.
பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர் அரசு ஒதுக்கீட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவாகவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தரமான ஆசிரியர்களால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆங்கில மோகத்தாலும், தரமான கல்வி கிடைக்குமா என்ற சந்தேகத்தாலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,208 அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.
ஆனால், அரசிடம் அனுமதிபெற்று இயங்கிவரும் 4622 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.
300, 400 மாணவர்கள் படித்துவந்த சில தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட்டுவரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிப் பள்ளிகளிலும் கற்றல் முறைகளை மாற்றவேண்டும். அதோடு தரமான ஆசிரியர்களின் சேவையும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது.
மேலும், நமது அண்டை மாநிலமான புதுச்சேரியைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடங்கி ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கலாம்.
இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதைத் தடுக்க முடியும்.
மேலும், பணக்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துவரும் தரமான கல்வி சாமானிய ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யலாம்.
இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவும், கணினி அறிவும் அவசியம் என்பதால் அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.