புதுப்பிக்கப்பட்ட நாள்: 26 ஏப்ரல், 2008
குண்டுவெடிப்பை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே பிலியந்தளை என்னும் இடத்தில், பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துவிட்டது. தற்போதைய நிலவரம் தொடர்பாக இலங்கை துணை பொலிஸ்மா அதிபர் இலங்க கோன் அவர்கள் கூறும் போது, இந்த சம்பவம் தொடர்பாக இது வரையில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் அவர்கள் யார் என்பது குறித்து தற்போது கூற முடியாது என கூறினார்.
அத்தோடு இந்த சம்பவங்கள் விடுதலைப்புலிகளால் தான் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்று தாங்கள் தெளிவாக நம்புவதாகவும், புதிய பாதுகாப்பு திட்டங்கள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், இதற்கு காரணம் நீதவான் தாமதமாக வந்ததே என கொழும்பு கலுபோவில் மருத்துவமனையில் உள்ள குண்டுவெடிப்பில் சிக்கியவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
உரிய பொருட்கள் இருந்தால் மடுமாதா தேவாலயத்தை விரைவில் சீரமைக்கலாம் – பாதிரியார்
 |
|
மடு தேவாலயம் |
மன்னார் மடு வளாகத்தை தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ள நிலையில், மடு கோயில் வளாகத்துக்கு இன்று சென்ற மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை அங்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட அவர், தேவாலயம், குருக்கள் வாழும் இடங்கள் ஷெல் வீச்சினால் சேதம் அடைந்திருப்பதாகவும், குறிப்பாக திருஇருதய ஆண்டவர் ஆலயம் முற்றாக சேதம் அடைந்திருப்பதாக கூறினார்.
மேலும் இராணுவத்தின் காவலரண்கள் எதுவும் தேவாலய வளாகத்திற்குள் இல்லை என்றும், இன்னும் ஒரு சில நாட்களில் தேவாலயத்தை சீரமைக்க சில மதகுருமார்களையும், பணியாளர்களை அனுப்புவதை பற்றி தாங்கள் யோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு உரிய பொருட்கள் கிடைத்தால் விரைவாக சீரமைக்க கூடிய நிலையிலே தேவாலயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை பாதுகாப்பு வலயமாக அறிவித்து விடுதலைப்புலிகளும், இராணுவத்தினரும் எப்போது செயற்படுகின்றார்களோ அப்போது மடுமாத திருச்சொரூபத்தை தேவாலயத்தில் மீண்டும் வைப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை தெரிவித்தார்.
இலங்கையில் பெண்கள் பிரசவிக்கும் போது அவர்களது கணவரும் உடனிருக்க ஏற்பாடு
 |
|
பச்சிளங்குழந்தை |
இலங்கையில் பெண்கள் பிரசவிக்கும் போது அவர்களது கணவரும் உடனிருப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என அறிவித்துள்ள இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இது தொடர்பாக வைத்திய சேவை அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபடும் என்றும் கூறியுள்ளார்.
இது ஒரு வரவேற்க்கதக்க திட்டம் என கூறியுள்ள பிரபல டாக்டர் ராணி சிதம்பரப்பிள்ளை, ஆனால் இலங்கையில் உள்ள 99 சதவீதமான தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளில் இதற்கான வசதி கிடையாது என கூறினார்.
இது குறித்து கொழும்பு செய்தியாளர் பி.கருணாகாரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 ஏப்ரல், 2008
இலங்கை பேருந்து குண்டு வெடிப்பில் 24 பேர் பலி
இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே பிலியந்தளை என்னும் இடத்தில், பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்ததாகவும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.
பேருந்து நிலையம் ஒன்றை இந்தப் பேருந்து அடைந்தவேளை அதிலிருந்த பார்சல் குண்டு வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது, இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நானயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் வெளியேறியதை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் முதல் அங்கு வன்செயல்கள் அதிகரித்துள்ளன.
இலங்கை இராணுவத்தினர் வசம் மன்னார் மடுக்கோவில்
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க மடுக்கோவில் பகுதி தற்போது இராணுவத்தின் வசமாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
மோதலில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அரசியல், இராணுவ ரீதியில் முக்கியத்துவம் மிக்க கேந்திர தளமாக விளங்கிய மடுக்கோவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தின் கைகளுக்குத் தற்போது மாறியிருக்கின்றது.
வடக்கில் தீவிரமடைந்த சண்டைகளினால் இந்த ஆலயத்திற்குப் பேரழிவு ஏற்படும் என்று பலராலும் அச்சம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்த மாதா சொரூபம் பாதுகாப்பு கருதி ஆலய குருக்களினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்காரா, இராணுவத்தினர் சென்றபோது விடுதலைப் புலிகள் ஆலய வளாகத்தில் இருக்கவில்லை எனக் கூறினார்.
மடுக்கோவில் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து புலிகள் தரப்பிலிருந்து கருத்து எதுவும் வெளியாகவில்லை.
மடுமாதாவின் திருச்சொரூபம் மீண்டும் மடுக்கோவிலுக்கு எப்போது கொண்டுவரப்படும் என்பது குறித்து மன்னார் ஆயர் ராயப்பு ஜோசஃப் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
யுத்த சேதம் செய்தி வழங்க ஊடகவியலாளருக்கு மறைமுகத் தடை: சுதந்திர ஊடக இயக்கம் குற்றச்சாட்டு
 |
|
அண்மைய காலமாக மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன |
இலங்கையில் மோதல்களில் காயமடைந்த இராணுவத்தினர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைகள் மற்றும் உயிரிழந்த படையினர் வைக்கப்பட்டுள்ள மலர்ச் சாலைகள் ஆகியவற்றுக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் செல்வதை அரசாங்கத்தினர் தடுத்துள்ளனர் என்று இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் மீது அரசாங்கத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக நடந்துவரும் யுத்தம் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்துகொள்வது தொடர்பில் மக்களுக்கு இருக்கும் உரிமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவ்வியக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
கொல்லப்பட்டோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டு யுத்தம் குறித்து துல்லியமான செய்திகளை பக்கச்சார்பற்ற ஊடகங்கள் வழங்க அரசாங்கத்தினரும் விடுதலைப் புலிகளும் இடம்தர மறுக்கிறார்கள் என்று சுதந்திர ஊடக இயக்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவ்வமைப்பின் சார்பாகப் பேசவல்ல சிவகுமார் மற்றும் இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார ஆகியோர் தமிழோசைக்கு தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
வெளியேற்றத்தை நினைவுகூரும் மூதூர் அகதிகள்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னமும் 2 வாரங்கள் இருக்கும் இவ்வேளையில், திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கிலிருந்து 2006ம் ஆண்டு யுத்த அகதிகளாக வெளியேறிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வெளியேற்றத்தின் 2வது ஆண்டு நிறைவை வெள்ளியன்று அகதி முகாம்களிலும் உறவினர்கள்-நண்பர்கள் வீடுகளிலும் நினைவுகூர்ந்தனர்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் இடம்பெயர்வின்போது உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்காகவும் தீபங்கள் ஏற்றப்பட்டு சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்ட அமைதிப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
மட்டக்களப்பு சாகிரா முகாமில் பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதான வைபவத்தில் உரையாற்றிய இடம்பெயர்ந்தோருக்கான நலன் புரி சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன், 2006ம் ஆண்டு இதேநாளில் மது பிரதேசத்தை நோக்கி ஏவப்பட்ட எறிகணை வீச்சுக்களும் விமானக் குண்டு தாக்குதல்களுமே தமது இடப்பெயர்வுக்கு அடித்தளமாக அமைந்ததாகக் கூறினார்
சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு உதவியுடன் அனல் மின் உற்பத்தி நிலையமொன்று அங்கு அமைக்கும் முயற்சியை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 ஏப்ரல், 2008
இலங்கையின் வடக்கே நடைபெற்ற மோதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தகவல்கள்
 |
|
செஞ்சிலுவைச் சங்கத்திடம் உடல்கள் ஒப்படைப்பு |
இலங்கையின் வடக்கே நேற்று(புதன்கிழமை) முகமாலை-கிளாலி முன்னரங்க பகுதிகளில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம் பெற்ற கடுமையான மோதல்களில் இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்த மோதல்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் 28 உடல்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதை இராணுவத்தினரும் செஞ்சிலுவைச் சங்கமும் உறுதிப்படுத்தியுள்ளன.
கடைசியாக கிடைத்த தகவல்களின்படி இந்த மோதல்களில் இராணுவத் தரப்பிலிருந்து 43 கொல்லப்பட்டுள்ளதாகவும், 33 பேரை காணவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார். விடுதலைப் புலிகள் தரப்பில் 149 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 196 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவிக்கிறார்.
 |
|
வடக்கே கடும் மோதல்கள் |
தாம் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் ஆறு உடல்கள் இன்னமும் யாழ்ப்பாணத்திலேயே இருக்கின்றன எனவும் அவை இன்னமும் கையளிக்கப்படவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் மேலும் கூறுகிறார்.
இதனிடையே நேற்று தமிழக சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே அவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேறியுள்ளதாக தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கே தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது
 |
|
இலங்கையின் வடக்கே தாதிகளுக்கு பற்றாக்குறை |
இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச பொது மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரச வைத்தியசாலைகளில் தாதியர்களுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுவதாக அரச தாதியர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இந்தக் குறைபாடு காரணமாக இந்த வைத்தியசாலைகளில் நோயாளர்களைச் சரியான முறையில் பராமரிக்கவும் அவர்களுக்குச் சரியான சிகிச்சையளிக்க முடியாமலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
வவுனியா வைத்தியசாலையில் மாத்திரம் 170 தாதியர்கள் தேவையாக இருக்கின்ற போதிலும் 64 பேரே தற்போது கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பற்றாக்குறை காரணமாக மேலதிகக் கடமையில் ஈடுபடும் தாதியர்கள் 16 மணித்தியாலங்கள் வரையில் கடமையாற்ற நேர்ந்திருப்பதாகவும் இதனால் அவர்கள் உள-உடல் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிட்டிருப்பதாகவும் தாதியர் சங்கத்தின் வன்னிப்பிராந்திய இணைப்பாளர் எஸ் பாலநாதன் கூறுகின்றார்.
இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 23 ஏப்ரல், 2008
முகமாலை மோதலில் இரு தரப்பிலும் பலத்த இழப்பு
இலங்கையின் வட போர்முனையில், முகமாலைப் பகுதியில் நடந்த மோதல்களில் இரு தரப்பிலும் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
முகமாலை முன்னரங்கப் பகுதியை ஒட்டி நடந்த இந்த மோதல்களில் இரு தரப்பிலுமாக 90 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறுகின்ற இலங்கை இராணுவத்தினர், அதில் 52 பேர் விடுதலைப்புலிகள் என்றும், 38 பேர் இராணுவத்தினர் என்றும் தெரிவித்துள்ளனர். 84 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இந்த மோதல்களின் போது விடுதலைப்புலிகளின் பீரங்கி நிலைகளை இலங்கை விமானப்படையினர் அழித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த மோதல்களை உறுதி செய்துள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், ஆனால், அதில், நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், விடுதலைப்புலிகள் தரப்பில் 16 பேர் பலியானதாகவும் தெரிவித்துள்ளார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக சட்டசபை தீர்மானம்
 |
|
தமிழக முதல்வர் மு. கருணாநிதி |
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் சுமூகத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோருகின்ற தீர்மானம் ஒன்று இன்று தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதல்வர் மு. கருணாநிதியே அந்த தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார். இலங்கையில் மோதலில் ஈடுபடுகின்ற இரு தரப்புக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தையை இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோருகிறது.
ராஜிவ் கொலையாளிகளுக்கு சோனியா காந்தியும், அவரது குடும்பத்தினரும் காட்டிய மனித நேயத்தை, மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காண்பிக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய கருணாநிதி கூறியிருக்கிறார். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்தை குறைகூறிப் பயனில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இலங்கை தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புக்களிடையில் ஒற்றுமை இல்லாத காரணத்தினாலேயே, அந்தப் போராட்டம் வெற்றிபெறாமல் போய்விட்டது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 22 ஏப்ரல், 2008
கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமான தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை: தேர்தல் கண்காணிப்பு அமைப்பு
இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், அங்குள்ள நிலைமையை அவதானிக்கும்போது, சுதந்திரமான நியாயமான தேர்தலொன்ரை நடத்தக் கூடிய சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை என “கஃபே” எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நிமல்க்கா பெர்னான்டோ கூறுகின்றார்.
தேர்தல் கண்காணிப்பிற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கஃபே இயக்கத்தின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட நிமல்க்கா பெர்னான்டோ, “மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், அங்கு ஓரு வித மோசடி நிலை உள்ளது. ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் உள்ளது. இரு தரப்பு மோதல் நிலமையும் காணப்படுகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.
“பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் மாகாண சபைத் தேர்தலில் குதித்துள்ளதால், பிரச்சார நடவடிக்கைகளின் போது சகலருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. ” என்றும் நிமல்க்கா பெர்னான்டோ கூறினார்.
பெர்னான்டோ அம்மையார் தெரிவித்த கருத்துகள் அடங்கிய செய்திக் குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 ஏப்ரல், 2008
இலங்கையில் அரசின் அரிசி விலைநிர்ணயத்திற்கு இணங்குவதென வியாபாரிகள் முடிவு
இலங்கையில் கடந்த புதன்கிழமை திடீரென அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதிஉச்ச விலை நிர்ணயத்தினை அரசாங்கம் அறிவித்ததனை அடுத்து கொழும்பிலுள்ள அரிசி மொத்த வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்ததோடு, கதவடைப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் இன்று அவர்கள் அரசின் நிர்ணயவிலையின் அடிப்படையில் அரிசி விற்பனையில் எதிர்காலத்தில் ஈடுபடத் தயாராகவிருப்பதாக இணக்கம் தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து சற்றுமுன்னர் பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட கொழும்பு அத்தியாவசியப் பொருட்க்கள் இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. சாமி, திங்கள் மாலை வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில், நிதியமைச்சில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்திலேயே, அரிசி ஆலை உரிமையாளர்களும், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளும் பரஸ்பரம் அரசின் விலைநிர்ணயத்திற்கு இணங்கியதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் இன்று தமது கையிருப்பிலிருந்த அரிசியை வழமைபோல, ஆனால் நிர்ணயவிலையின் அடிப்படையில் விற்பனை செய்தனர். ஆனாலும் அவர்கள் இருப்பு பற்றாக்குறை காரணமாக மிகவும் குறைந்த அளவு தொகை அரிசியையே தமக்கு விற்பனை செய்ததாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கொழும்பு செய்தியாளர் பி.கருணாகரன் தயாரித்து வழங்கும் செய்திப் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 ஏப்ரல், 2008
இலங்கையின் வடக்கே இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் அருட்தந்தை பலி
இலங்கையின் வடக்கே மாங்குளம் மல்லாவி வீதியில் இன்று இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கிளிநொச்சியில் செயற்பட்டு வரும் வடக்குகிழக்கு மனித உரிமைகள் பிரதேச செயலகத்தின் தலைவராகிய அருட்தந்தை கருணரத்னம் அடிகளார் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தகவல் யாழ் ஆயர் இல்லத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். ஆனால் தங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அவர்களே இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் உத்தரவை பின்பற்ற தயார் – அரிசி வியாபாரிகள்
இலங்கையில் அரிசியின் உச்ச விலையை இலங்கை அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளதை அடுத்து கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து கதவடைப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போது அரசின் நிர்ணயவிலையின் அடிப்படையில் அரிசி விற்பனையில் ஈடுபடத் தயார் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட கொழும்பு அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. சாமி, அரசாங்கம் நாட்டின் நன்மை கருதி எடுக்கும் முடிவிற்கு ஆதரவு கொடுக்கவேண்டியது பொறுப்புள்ள வியாபாரிகளின் கடமையென்றும், அரசினால் விதிக்கப்படும் சட்டவரம்புகளை மீறுவதென்பது அசாத்தியமான விடயம் என்றும் தெரிவித்தார்.
பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் கே.பழனியாண்டி, இவ்வாறு பிறிதொரு வியாபாரிகள் சங்கம் எடுத்த முடிவினை தாமும் பிற்பற்றவேண்டிய நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இது குறித்த விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 ஏப்ரல், 2008
வியாபாரம் செய்ய மறுத்த அரிசி வியாபாரிகள் மீது இலங்கை நடவடிக்கை
இலங்கையில் அரிசியை வியாபாரம் செய்ய மறுத்த சில வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு, வணிக மற்றும் நுகர்வோர் நலன் அமைச்சின் செயலாளரான ஆர். எம். கே. ரட்ணாயக்கா தெரிவித்துள்ளார்.
அரிசி விற்பனைக்கு உச்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், எந்த வியாபாரியும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்த ரட்ணாயக்கா அவர்கள், எந்த வியாபாரிக்கும் நட்டஈடு வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் விவசாயிகளுக்கு உர மானியம் போன்றவை வழங்கப்படுவதாகவும், ஆகவே இதனால், விவசாயிகளுக்கும் இதனால், எந்த விதமான பாதிப்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
அரிசியை குறித்த விலைக்கு விற்க வேண்டும் என்று அரசாங்கம் நிர்ணயித்திருக்கின்ற வேளையில், ஆலை உரிமையாளர்கள் அவற்றை தாம் விரும்புகின்ற வெவ்வேறு விலைகளுக்கு விற்க விரும்புவதாகக் குற்றஞ்சாட்டுகின்ற ரட்ணாயக்கா அவர்கள், புறக்கோட்டையில் இருக்கின்ற கடைக்காரர்கள் அவர்களது தரகு முகவர்களாகவே செயற்படுவதாகவும், புறக்கோட்டையில் இருக்கின்ற சில கடைகளில், வெள்ளியன்று விற்பனை செய்ய மறுக்கப்பட்ட அரிசி இன்று பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மருந்துகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஒரு தொகுதி மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியில் மருந்துப் பொருட்களுக்கு பெரிய அளிவில் தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக தமிழோசையில் கருத்து வெளியிட்ட கிளிநோச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் டி.சத்யமூர்த்தி, பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால், மூன்று மாதங்களாக மருந்துகளைக் கொண்டுவர முடியாத நிலை உருவானது என்றார். இதன் விளைவாக மருந்து தட்டுப்பாடு நிலவியது என்றும் அச்சமயம் தனியார் மருந்துக் கடைகளிலிருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்க முடியாத சூழ்நிலைகூட நிலவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தற்போது ஒப்புதல் கிடைத்து ஒரு தொகுதி மருந்துகள் எடுத்துவரப்பட்டுள்ள நிலையில், அவை உடனடியாக விநியோகிக்கப்படும். இதனால் மருந்து தட்டுப்பாடு நீங்கும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
டாக்டர்.சத்யமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
 |
|
கே. இராமகிருஷ்ணன் |
உலக சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையிலும் பெற்றோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும்படி இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை விற்பனைசெய்துவரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
உலக சந்தையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பிற்கேற்ப இலங்கையில் தற்போது நிலவும் டீசலின் விலையை சுமார் 31 இலங்கை ரூபாய்களினால் உடனடியாக உயர்த்தும்படி தாம் கோரியிருப்பதாகவும், இல்லாவிடில் அடுத்த மாத முடிவில் தமது நிறுவனம் சுமார் 750 மில்லியன் ரூபாய்கள் நட்டத்தினைச் சந்திக்கவெண்டியிருக்கும் என்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே. இராமகிருஷ்ணன் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இவருடனான செவ்வியினை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
அம்பாறையில் ஜே.வி.பி. வேட்பாளர் தாக்குதல்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர் ஒருவரும் இரண்டு ஆதரவாளர்களும் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் வியாழன் இரவு தாக்குதலுக்கு இலக்கானதாக ஜே.வி.பி. கூறுகின்றது
தமது கட்சியின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வேட்பாளரான எம்.ஐ.அபு சகீத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தனக்கு தெரியாது என்று கூறும் அவர், தாக்குதலுக்கு இலக்காகிய தானும் 2 ஆதரவாளர்களும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
சம்பவம் தொடர்பாக விசாரனைகள் நடைபெற்றுவருவதாகக் கூறும் அக்கரைப்பற்று பொலிசார் தேர்தல் வன்முறைகளை தடுப்பதற்குரிய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 ஏப்ரல், 2008
புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு
இலங்கையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக, வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அடிப்படை மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செஞ்சிலுவவைச் சங்கம் கூறியுள்ளது.
வடபகுதிகளுக்கு தொடர்ந்து பொருட்களை எடுத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலே இதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம், அரசுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்படி தேவையானவற்றை கொண்டுவரும் நடவடிக்கையை ஓரளவு செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆட்பற்றாக் குறையும் ஒரு முக்கியமான விடயம் எனவும், இதன் காரணமாக வழக்கமாக வரும் நோயாளர்களுடன் நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக காயமடைந்தவர்களையும் கூடுதலாக கவனிக்க வேண்டியிருப்பதால் மருத்துவமனைகள் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது எனவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை கூறுகிறது.
இலங்கை அரசு நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு
 |
|
சோனகத்தெருவில் மூடப்பட்டுள்ள கடைகள் |
இலங்கையில் அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதிஉச்ச விலை நிர்ணயத்தினை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதனை கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு மொத்த அரிசி வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருப்பதோடு, கதவடைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
அரசின் இந்த நள்ளிரவு அதிரடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமக்கு நீதி வழங்கவேண்டுமென்றும் அவர்கள் அரசிடம் கோரியிருக்கிறார்கள். கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரக் கடைகள் பல இன்று மூடப்பட்டிருந்தன.
இதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் கே.பழனியாண்டி, அரசாங்கம் இவ்வாறு முன்னறிவித்தல், கலந்துரையாடல் ஏதுமின்றி அரிசி விலைநிர்ணயம் செய்திருப்பது தவறான நடவடிக்கை என்றும், இதற்கு ஒரு சுமுகமான தீர்வினைக்காணும் வரைக்கும் மொத்தவியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அரிசி விற்பனையில் ஈடுபடுவதில்லை என்றும் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் இந்தத் தொழிலின் இணைத்தொழிலில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களும் தொழிலில்லாது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு இவ்வாறு விலைநிர்ணயத்தினை புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலிற்கு கொண்டுவருவதாக அறிவித்திருந்த போதிலும், இதனை மீறுவோர் மீது நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று எச்சரித்திருந்தபோதிலும் இன்று கொழும்பிலுள்ள சில்லறைக் கடைகளில் அரிசி மிகவும் அதிகமாக பழையவிலைப்பட்டியல்களின் அடிப்படையிலேயே விற்கப்பட்டது.
இது குறித்து கொழும்பிலிருந்து செய்தியாளர் பி.கருணாகரன் வழங்கும் செய்திப் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
BBCTamil.com: “போர்நிறுத்தம்: சாதனைகள், பின்விளைவுகள்”
BBCTamil.com: “கிழக்கு மாகாண சபை தேர்தல்”
BBCTamil.com: “ஜே.வி.பி.யில் உட்கட்சிப் பூசல்”
BBCTamil.com: “இலங்கை- 60 ஆவது சுதந்திர தினம்”
BBCTamil.com: “முஸ்லிம்கள் வெளியேறி ஒர் ஆண்டு நிறைவு”
BBCTamil.com: “தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி”
BBCTamil.com: “கர்ணல் கருணாவுக்கு சிறைத் தண்டனை”
BBCTamil.com: “இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் 20 வருடங்கள்”
புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஏப்ரல், 2008
அரிசி விற்பனைக்கு அதிகபட்ச விலையை இலங்கை அரசு நிர்ணயித்துள்ளது
 |
|
இலங்கைத் துறைமுகத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது |
இலங்கையில் அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதி உச்சபட்ச விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி சம்பா அரிசி ஆகக்கூடுதலாக கிலோ ஒன்றுக்கு 70 ரூபாவாகவும், நாட்டரிசி 65 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 65 ரூபாவாகவும், வெள்ளைப் பச்சை 55 ரூபாகவும் மாத்திரமே ஆகக்கூடுதலாக விற்பனை செய்ய முடியும் என்று இலங்கையின் வணிக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதனை எவரும் மீறும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று பிபிசியின் சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மடு பகுதியை மோதலுக்குள் இழுத்து விட்டது மஹிந்த அரசுதான் என்று ஜயலத் ஜயவர்த்தன குற்றம் சாட்டுகிறார்
இலங்கையில் மடு தேவாலயப் பகுதியை மோதலில் இழுத்துவிட்டது மஹிந்த ராஜபக்ஷவின் அரசுதான் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன குற்றங்சாட்டியுள்ளார்.
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயப் பகுதியை அமைதிப் பிராந்தியமாக பேண வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், புனித பாப்பரசரும், மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்களும் கேட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
தமது கட்டுப்பாட்டில் மடு தேவாலயம் இருக்கின்ற போதிலும், விடுதலைப்புலிகள் அந்த ஆலய வளாகத்தில் இருக்கவில்லை என்பதை தன்னால் கூறமுடியும் என்று தெரிவித்த ஜயலத் அவர்கள், ஆனால், அரச படைகளின் தாக்குதலுக்கான எதிர்வினை நடவடிக்கையாகவே அவர்கள் அங்கு சென்று சண்டையிடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மடு தேவாலயம் அனைத்து இன மக்களின் மதிப்பைப் பெற்ற ஒரு வழிபாட்டிடமே ஒழிய, அதற்கு இராணுவ ரீதியாக எந்தவிதமான முக்கியத்துவமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
அவர் தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
அனைத்துக் கட்சிக் குழுவின் 90 சதவீதப் பணிகள் பூர்த்தியாகிவிட்டன: இலங்கை அமைச்சர் திஸ்ஸ விதாரண
 |
|
அமைச்சர் திஸ்ஸ விதாரண |
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்ற சர்வகட்சிக் குழு தனது 90 வீதமான பணிகளை பூர்த்தி செய்துவிட்டதாகவும், நிலைமை சுமூகமாகச் செல்லுமானால், இன்னும் சில மாதங்களில் தமது பணி முழுமையாக பூர்த்தியடைந்துவிடும் என்றும், அந்த குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
லண்டனுக்கு விஜயம் செய்திருந்த அவர், இன்று தமிழோசைக்கு நேரடியாக வந்து வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அனைத்துக்கட்சி குழுவின் நடைமுறைகளில் இருந்து விலகிச் சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகியவை குறித்து கருத்துக் கூறிய அவர், ஏற்கனவே அதிகாரபூர்வமற்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இந்த விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் இந்த நடைமுறைகளில் இணைய வரும்போது, ஜே.வி.பி.யையும், அதில் இணைந்துகொள்ள வருமாறு தான் அழைப்புவிடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடரும் நிகழ்வுகளால் விடுதலைப் புலிகள் அமைதி நடைமுறைகளுக்குள் வர முன்வராத நிலை ஏற்படுமானால், அப்போது ஒருவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த அனைத்துக் கட்சி குழுவில் இணைந்து செயற்படுவதற்கான அவசியம் குறித்து ஆலோசிக்கலாம் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் திஸ்ஸ விதாரண அவர்கள் கூறினார்.