அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு -குறைந்தது 60 பேர் பலி
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புக்கள், பெரும்பாலும் தலைநகர் குவாஹாட்டியில் நடந்துள்ளன. அவற்றில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
இந்தச் சம்பவங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா மீது போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனால் இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று உல்ஃபா மறுத்திருக்கிறது.
முற்பகல் 11 மணிக்குப் பிறகு, குவாஹாட்டி, கோக்ரஜார், பார்பேடா சாலை மற்றும் பொங்கைகான் ஆகிய இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன.
![]() |
![]() |
குண்டுவெடிப்பு நடந்த இடம் |
குவாஹாட்டியில் துணை கமிஷனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முதல் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டார்கள். மாநில தலைமைச் செயலகம் அருகே நடைபெற்ற இரண்டாவது சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். மத்திய குவாஹாட்டியில் பான்பஜார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். அதேபோல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குண்டிவெடிப்புக்கள் நடந்துள்ளன.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி ஒருவர் கூறும்போது, தான் பயணம் செய்துகொண்டிருந்த பேருந்துக்கு முன்பு பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்ததில், பஸ்ஸின் முன்பகுதியில் தீப் பிடித்துக் கொண்டதாகவும், பலருக்கு குண்டு காயமும் பலருக்கு தீ்க் காயமும் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பொதுமக்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டார்கள். போலீசார் மீதும் போலீஸ் மற்றும் தீயணைப்புபத்துறை வாகனங்கள் மீதும் மக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். தீயணைப்புத்துறையினரும் போலீசாரும் உதவி செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினார்கள்.
![]() |
![]() |
பல குண்டுகல் காரில் வைக்கப்பட்டிருந்தன |
பெரும்பாலான குண்டுகள் கார்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும், உல்ஃபா அமைப்பைத் தவிர வேறு யாரும் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார் அஸ்ஸாம் மாநில காவல்துறைத் தலைவர் ஆர்.என். மாதூர். ஆனால், உல்ஃபா அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், தங்களுக்கு இன்றைய சம்பவங்களில் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்குத் தொடர்பு இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது என்ற அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் அவர்கள், பல அண்டை நாடுகள் அஸ்ஸாமின் எல்லையில் இருப்பதால் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறினார்.
இதனிடையே, நிலைமையை நேரில் ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங் நாளை குவாஹாட்டி செல்கிறார். மன்மோகன் சிங், அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.