Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Batticaloa’

Dec: Sri Lanka, LTTE, Eezham: News Updates: War, Attacks, Dead

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2008

இலங்கையை விட்டு வெளியேற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஞாயிறு காலை தான் இந்தியாவிற்கு பயனம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகல்வு தினைக்களத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார்.

தான் ஏற்கனவே தீர்மானத்திபடி வைத்திய சிகிசைக்காக செல்லவிருந்ததாகவும், அனால் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டட நிலையில் தனது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கின்றார்.

விமான நிலையத்தில் அனுமதி மறுத்த அதிகாரிகள் தன்னை குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் அழைத்துச் சென்றதாகவும், அங்கிருத்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி இது மேலிடத்து உத்தரவு என தனக்கு தெரிவித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன குறிப்பிடுகின்றார்


இலங்கையின் அம்பாறையில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள்

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

பாதுகாப்பு காரணங்களக்காக இக்கட்டுப்பாடு என பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களைப் பொறுத்த வரை இதனால் தாம் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இக்கட்டுப்பாடு காரணமாக ஒருவரின் உறவினர்கள் உட்பட பெயரில் பதிவு செய்யப்ப்டுள்ள மோட்டார் சைக்கிளை மற்றுமொருவர் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக பொலிஸ் மா அதிபதிக்கு அவசர கடிதமொன்றை தான் அனுப்பி வைத்துள்ளதாக கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராஜா, இது மனித உரிமை மீறல் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலேயே இக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறுகின்றார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

புளியங்குளத்தில் அரசப்படையினர்
புளியங்குளத்தில் அரசப்படையினர்

இலங்கையின் வடக்கே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாகிய வன்னிப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 7 படையணிகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்திய வண்ணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி முன்னேறி வருவதாகவும், கடந்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் விடுதலைப் புலிகளின் 14 சடலங்களைப் படையினர் ஆயுதங்களுடன் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

பரந்தனுக்கு மேற்குப் பகுதி, அடம்பன், இரணைமடுவுக்கு மேற்குப்புறம், திருமுறிகண்டி, கொக்காவில், கனகராயன்குளம், புளியங்குளம், ஒலு மடுவின் வடகிழக்குப் பகுதி மற்றும் அலம்பில் ஆகிய முனைகளில் இருந்து அரச படையணிகள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

வவுனியா நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதியில் இராணுவம் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே உள்ள கொக்காவில் வரையிலான பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இந்த மோதல்கள் காரணமாக யுத்த பிரதேசத்திலிருந்து இதுவரையில் 225 குடும்பங்களைச் சேர்ந்த 654 பேர் இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.


மன்னம்பிட்டியில் பயணிகளில் விபரங்கள் பதியப்படும் புதிய நடைமுறை

மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)
மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தின் ஊடாக பயணம் செய்பவர்கள் மன்னம்பிட்டி என்னும் இடத்தில் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமலுக்கு வந்ததால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இப்படியாக விபரங்கள் ஒவ்வொருவராக பதியப்படுவதால், பெரும் காலதாமதம் ஏற்படுவதாகவும், அத்துடன் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மாத்திரமே இவ்வாறு பதியப்படுவதாகவும் பயணிகள் குறை கூறுகிறார்கள்.

மன்னம்பிட்டியில் பயணிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதாகவும், அதன் மூலம் சிறிது காலதாமதம் ஏற்படுவதாகவும் ஒப்புக்கொள்ளும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான ரஞ்சித் குணசேகர அவர்கள், ஆனால், தமிழர்களும், முஸ்லிம்களும் மாத்திரந்தான் அப்படியாக பதிவு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன

லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் இந்திய நிவாரணப் பொருட்கள்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தினுள் போர்ச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு, கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு எடுத்துவரப்பட்டுள்ள நிவாரண உணவுப் பொருட்களின் முதல் தொகுதி 60 ட்ரக் வண்டிகளில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் வன்னிப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

இதுபற்றி கருத்து தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள், இந்தப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.

வரும் வியாழக்கிழமை மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களைத் தங்கவைப்பதற்காக ஓமந்தை பாடசாலையில் புதிய இடைத்தங்கல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிளிநொச்சியை ஒட்டிய கொக்காவிலை கைப்பற்றியிருப்பதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே வன்னிக்கள முனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச படைகள் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே முறிகண்டி பிரதேசத்தில் ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் முன்னேறி கொக்காவில் பிரதேசத்தை கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், இதுகுறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

கிளிநொச்சி நகருக்கு மேற்கில் உள்ள அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று தளங்களின் மீது விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றியும் விடுதலைப் புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

ஆயினும் கிளிநொச்சி நகருக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பகுதியை நோக்கி இராணுவத்தினர் நடத்திய எறிகணை தாக்குதலில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டும், 31 வயதுடைய ஆண்மகன் ஒருவர் காயமடைந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கையின் வடக்கே வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது

இலங்கையின் வடக்கே சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்வதற்கு காரணமான வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் இந்த மழை, வெள்ளம் காரணமாக 9 பேர் பலியாகியுள்ளனர், கிட்டத்தட்ட 800 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருவதாக கூறும் இலங்கை அரசு, வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளது.

1918ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இலங்கையின் வடபகுதியில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்று இலங்கை அரசின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உலக எய்ட்ஸ் தினம்: இலங்கையில் விழிப்புணர்வு ஊர்வலம்

வெலிக்கடை சிறையின் முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளுடன் கைதிகள்

எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினமான திங்களன்று கவனயீர்ப்பு ஊர்வலமொன்றினை மேல் மாகாணத்தில் நடத்தியது.

பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவினால் பெருமளவில் ஏற்படும் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திற்கு இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும், சுமார் 200 பேர் வரை மரணத்தினைத் தழுவியிருப்பதாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் வைத்திய நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் தழிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனாலும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவித்த டாக்டர் ஜனகன், இலங்கையில் எயிட்ஸ் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலேயே வசித்துவருகிறார்கள் எனவும், இவர்களில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு காரணமாகவே எச்.ஐ.வி கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கே மழைவெள்ளம்

இலங்கையில் வடக்கே மழை வெள்ளம்
இலங்கையின் வடக்கே மழை வெள்ளம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நீரினால் அடித்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்ததனாலும், மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும், 12 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதிகளில் வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள போதிலும், வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் நேயர்கள் கேட்கலாம்


மட்டக்களப்பில் சந்தேக நபர்களிடம் விசாரணை

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 12 மணி நேரத்திற்கு பிறப்பிக்கப்பிட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் சிவிலியன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என 2000 க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் சுமார் 4103 வீடுகள், 56 வாகனங்கள் மற்றும் 11963 பேரை சோதனையிட்டுள்ளனர்.

இவர்களில் 123 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 117 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் நிலவும் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்டங்களின் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை வெளியிட்டுள்லார். அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உரையை தணிக்கை செய்ததாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வருடாந்திர உரை குறித்த செய்திகளை வழங்கியபோது பிபிசியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை ஒலிபரப்புகளை இலங்கை அரசு தணிக்கை செய்ததாக இலங்கையின் ஊகட அமைப்புகள் ஐந்து குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை அன்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்த செய்தித் தணிக்கை நடவடிக்கையானது, இலங்கை மக்களின் தகவல் அறியும் உரிமையையும், ஒரு முக்கிய விடயம் குறித்த மாற்றுக் கண்ணோட்டங்கள் தடையின்றி பரிமாறப்படுவதையும் தெளிவாக மீறியுள்ளது என்று கூறியுள்ளது.

பிரபாகரனின் உரை குறித்த செய்திகள் சென்ற வருடமும் தணிக்கை செய்யப்பட்டிருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் தரவில்லை.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 Comments »

Amid war, United Peoples Freedom Alliance – Rajapaksa’s coalition, Sri Lankan ruling party wins local elections: North Cenral and Sabaragamuwa Polls

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008


புத்தபிக்குகள் குழுவுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் கண்டனம்

தனது விகாரையிலிருத்து இரவில் ஒலிபரப்பெருக்கி மூலம் ஒலிபரப்பி ஒலிமாசடைதல் நடவடிக்கையில் ஈடுபட்டார்  என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த மதகுரு ஒருவரை பிணையில் செல்ல அனுமதிக்கக்கோரி சக மதகுருமார் குழுவொன்று சமர்பித்திருந்த விண்ணப்பத்தினை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்திருப்பதோடு, நீதிமன்றத்திற்கு அந்த சக மதகுருமார் குழு அபகீர்த்தி விளைவித்தனரென்றும் அவர்கள் மீது தனது  கண்டனத்தையும்  அதிருப்தியையும் வெளியிட்டிருகிறது.

இலங்கை உயர்நீதிமன்றம்
இலங்கை உயர்நீதிமன்றம்

கொழும்பின் புறநகர்பகுதியான ராஜகிரியவில்  அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றின் பன்னல பஞ்ஞாலோக தேரரே இவ்வாறு தனது விகாரையிலிருத்து இரவில் ஒலிபரப்பெருக்கி மூலம் ஒலிபரப்பினார்  என்ற குற்றச்சாட்டின்பேரில் நீதிமன்ற விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கினை பிரதம நீதியரசர் தலைமையிலான மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மன்றே விசாரணை செய்தது.

உயர் நீதிமன்ற வட்டாரங்களின் தகவல்களின்படி, இவரது பிணை மனுவை இன்று விசாராணைக்கு எடுத்துக்கொள்ள பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர்நீதிமன்றத்திற்கு வருகைதந்தபோது பிணைமனுத்தாக்கல் செய்யவந்திருந்த சுமார் நூறு பௌத்தபிக்குகள் ஆசனத்திலிருந்து எழுந்துநிற்கவில்லை என்றும் இது நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தும் செயல் என்று கூறிய பிரதம நீதியரசர் இவர்களை நீதிமன்றக்கட்டிடத்திற்கு வெளியே சென்று மீண்டும் உள்நுழையும் படி அவர்களது சட்டத்தரணி மூலமாக அறிவுறுத்தல் விடுத்திருக்கிறார்.

ஆனால் பிரதம நிதியரசரின் இந்த அறிவுறுத்தலை இந்த பௌத்த பிக்குமார்கள் உதாசீனம் செய்தனர். இந்தச் செயல் உயர் நீதிமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலென்றும் இதனால் இவர்கள் சார்பில் முன்வைக்கப்படும் பிணை மனுவினை ஏற்க முடியாது என்று தெரிவித்த  பிரதம நீதியரசர்,  பன்னல பஞ்ஞாலோக தேரரை எதிர்வரும் 15ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


வன்னி, யாழ் மோதல்களில் 36 புலிகள், 5 ராணுவத்தினர் பலி, 16 ராணுவத்தினர் காயம்

இலங்கையின் வடக்கே வன்னி மற்றும் யாழ்ப்பாணம் களமுனைகளில் வியாழக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் முப்பத்தி ஆறு விடுதலைப் புலிகளும், ஐந்து இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் எட்டு சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

வன்னிக் களமுனைகளில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் மேலும் பதினாறு படையினர் காயமடைந்திருப்பதாகவும்
இராணுவ தலைமையகம் தனது இணைய தள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சடலங்களில் நான்கு சடலங்கள் நேற்று மாலை வவுனியா வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

வடக்கே கடும் மோதல்கள் இடம் பெறுகின்றன
இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள் தொடர்கின்றன

இதற்கிடையில் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த 48 மணிநேர காலப்பகுதியில் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் இராணுவத்தினரின் முப்பது சடலங்களை ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் உள்ள படை அதிகாரிகளிடம் கையளித்திருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், கடந்த நான்கு தினங்களாக கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பிரதேச களமுனைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற உக்கிரச் சண்டைகளில் காணாமல் போயிருந்த படையினர் சிலரது சடலங்களும் இவற்றிலிருந்து அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றது.

இரண்டாவது தொகுதியாக நேற்று மாலை ஓமந்தை படையதிகாரிகளிடம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் கையளிக்கப்பட்டிருந்த பதினோறு சடலங்களும் அடையாளம் காண்பதற்காக அனுராதபுரம் மாவட்டம் பதவியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்தச் சடலங்களில் பல உருக்குலைந்தும், சிதைந்தும் இருப்பதனால் உரிய இராணுவத்தினரை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம் தனது இணைய தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

வடபகுதி மோதல்களில் பலரை காணவில்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுடன் நடக்கும் கடும் மோதல்களில் மேலும் 18 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

நாச்சிகுடாப் பகுதியில் இடம் இடம்பெற்றுவரும் மோதல்களில் பல இராணுவத்தினரை காணவில்லை என்றும் அவர்கள் விரைவில் தமது சக்காக்களுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இவ்வாறு காணாமல் போயுள்ள இராணுவத்தினருக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது இன்னமும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாகர்கோவில், முகமாலை போர் முனைகளில் மூன்று விடுதலைப் புலிகள் இராணுவத்தினரின் தாக்குதல்களில் பலியாகியுள்ளதாகவும் இராணுவம் கூறுகிறது.

முறிகண்டிப் பகுதிக்குள் இராணுவம் முன்னேறியுள்ளதாகத் தகவல்

வடக்கே கடும் மோதல்கள்
வடக்கே கடும் மோதல்கள் இடம் பெறுகின்றன

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கடும் எதிர் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இராணுவத்தினர் வன்னிப்பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக முன்னேறி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இத்தகைய முன்னேற்றத்தின் மேலும் ஒரு படியாக முறிகண்டி பொதுப்பிரதேசத்தினுள் இன்று இராணுவத்தினர் முன்னேறியிருப்பதாகவும் அந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் 4 விடுதலைப் புலிகளின் சடலங்களைப் படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இராணுவம் அக்கராயன்குளம் பகுதியில் ஏற்கனவே நிலைகொண்டிருப்பதாகவும், அக்கராயன்குளத்தின் தெற்கில் உள்ள முறிகண்டி பொதுப்பிரதேசத்தினுள் இராணுவம் இன்று முன்னேறியிருப்பதாகவும் கூறினார்.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


வன்னிப் பகுதியில் பல பாடசாலைகள் திறக்கப்படவில்லை

ஆளில்லா பாடசாலை
ஆளில்லா பாடசாலை

இலங்கையில் இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைக்காலம் முடிவடைந்து, மூன்றாம் தவணைக்காக இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும், இலங்கையின் வடக்கே போர்ப் பதட்டம் நிலவுகின்ற வன்னிப்பிரதேசத்தில் பாடசாலைகள் முழுமையாக இன்று ஆரம்பிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வன்னிப்பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளும் சுமார் 40 ஆயிரம் வரையிலான மாணவர்களும் இடம்பெயர்ந்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தின் வடக்கு கல்வி வலயத்தில் 55 பாடசாலைகள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தஞ்சம் புகுந்திருப்பதனால் இந்தப் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகவில்லை என வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அருளம்பலம் வினாயகமூர்த்தி கூறுகின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 2000 குடும்பங்கள் 32 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இவர்களுக்கு மாற்றிடங்களில் வாழ்விட வசதிகள் செய்து கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் முடிவடைந்ததும் இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகும் என்றும் கூறுகிறார் கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள்.

இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


பதுளைப் பகுதியில் பல சிறுவயதுப் பெண்கள் கர்பம்

ஒரு இளம் கர்பிணி
ஒரு இளம் கர்பிணி

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் பாடசாலை செல்லும் மாணவ பருவத்துடைய சுமார் 30 இளவயது பெண்கள் கர்பமாக இருப்பதாகவும், இது அப்பகுதியில் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறிவருவதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண திசாநாயக்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரச் சூழல் காரணமாக இவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை என்பது மட்டுமல்லாமல், சிறுவயதிலேயே காதல் வயப்பட்டு மதுப்பழக்கத்துக்கும் அடிமையாவதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் பல வகையான ஊடகங்கள் மூலமும் இவர்கள் வழிதவறிச் செல்வதைக் காணக் கூடியதாகவும் இருப்பதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் சுகாதர அமைச்சகம் மற்றும் இதர அரச நிறுவனங்கள், போலீசார் ஆகியோருடன் இணைந்து ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹன திசாநாயக்க கூறினார்.


இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள்: இருதரப்பிலும் பெரும் இழப்புகள் என்று அறிவிப்பு

இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் கடும் மோதல்களில் இருதரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செவ்வாய்கிழமை நடைபெற்ற மோதல்களில் மட்டும் 46 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது.

இதனிடையே திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இருதினங்களில் இராணுவத்தரப்பில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள்.

வடக்கே நடைபெறும் மோதல்களில் இறந்தவர்களின் உடல்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக இருதரப்பினராலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் 22 சடலங்களும், இராணுவத்தினரின் 19 சடலங்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் அதிகாரியான சரசி வியேரட்ண தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.


வன்னிப் பகுதியில் மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என ஐ நா கூறுகிறது

வன்னி மக்களுக்கு உதவ ஐ நா முன்வந்துள்ளது
வன்னி மக்களுக்கு உதவ ஐ நா முன்வந்துள்ளது

இலங்கையில் வடக்கே கடுமையான மோதல்கள் நடந்துவருகின்ற வன்னி பெருநிலப்பரப்பில் தங்கியிருப்போருக்கும், அங்கிருந்து வெளியேறுவோருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய சகல முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவினை வழங்க ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐ.நாவின் அலுவலகம் புதன்கிழமையன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

வன்னிப் பகுதியிலிருந்து பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நகர்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அறிவித்துள்ளதையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வரவேற்றுள்ளது.

புலிகளுக்கும் கோரிக்கை

இட்ம பெயர்ந்த நிலையில் ஒரு குடும்பம்
இடம் பெயர்ந்த நிலையில் ஒரு குடும்பம்

பொதுமக்கள் சகல தருணங்களிலும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் சுதந்திரமாக செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் பற்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடமும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தனது அவசரமான கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பிற்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆயுத நெருக்கடியில் சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்பான சர்வதேச கடப்பாடுகளின்படி, தாம் எங்கெங்கே உதவிகளையும் பாதுகாப்பினையும் தேடவேண்டும் என்பதனை மக்களே தனிப்பட்டரீதியிலும் சுதந்திரமாகவும் தேர்வு செய்ய அனுமதிப்பது என்பது மிகமுக்கியமானது என்பதனையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது.


‘மல்லாவியை கைப்பற்றியது இலங்கை இராணுவம்’

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க மல்லாவி நகரப்பகுதியை இலங்கை இராணுவத்தினர் செவ்வாயன்று முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

பல வாரங்களாக விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியிலும் இராணுவத்தினர் முன்னேறிச் சென்று மல்லாவி நகரப்பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகவும், கடந்த மாதம் 22ஆம் திகதி துணுக்காய் பகுதியைக் கைப்பற்றியதன் பின்னர் இராணுவத்தினர் அடைந்துள்ள முக்கிய வெற்றியாக இதனைக் கருதுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மல்லாவி கைப்பற்றப்பட்டது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

ஆயினும் கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா பகுதியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினரை எதிர்த்து நேற்று பிற்பகல் 2 மணிமுதல் இன்று அதிகாலை 2 மணிவரையில் தாங்கள் நடத்திய கடும் தாக்குதல்களில் 34 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களில் 7 சடலங்களும் இராணுவ தளபாடங்களும் தங்களால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

எனினும், கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா உட்பட்ட வன்னிக்களமுனைகளில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 44 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. நாச்சிக்குடா பகுதியில், விடுதலைப் புலிகளுடன் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இன்று அந்தப் பகுதியில் விமானக்குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இதற்கிடையே இலங்கையின் கிழக்கே அப்பாறை மாவட்டத்தில் பொத்துவில்- பாணமை வீதியில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை பாதுகாப்புப் படையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.


இலங்கையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு தண்டனை

பிரிகேடியர் உதய நாணயக்கார
பிரிகேடியர் உதய நாணயக்கார

இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடிய முன்னூறுக்கும் மேற்பட்டோருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 106 பேர் செவ்வாய்கிழமை தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமையன்று மேலும் 199 பேர் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

இராணுவத்தில் இருந்து தப்பி ஒடியவர்கள் மீண்டும் தங்களுடைய ராணுவ ரெஜிமெண்டுகளுக்கே வந்து சரணடையக் கூடிய ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர்கள் சரணடையாததன் காரணமாக இராணுவமும் போலீசாரும் அவர்களைக் கைதுசெய்து இராணுவ சட்ட நடைமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களை தண்டிப்பது இது முதல் முறையல்ல என்றாலும் கிட்டத்தட்ட 300 பேர் ஒரே நேரத்தில் தண்டிக்கப்படுவது இது தான் முதல் முறை என்றும் பிரிகேடியர் உதய நாணயகார தமிழோசையிடம் தெரிவித்தார்.

இராணுவத்தில் இருந்து தப்பி ஒடியவர்கள் தங்களுடைய ரெஜிமெண்களுக்கு வந்து சரணடைந்தால் அவர்களை வரவேற்கப்படுவார்கள் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.

இன்று தண்டிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் இருந்து ஒடியவர்கள் என்றும் அவர் கூறினார்.


மல்லாவியின் முக்கால்வாசியை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தின் முக்கால் வாசிப்பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், கடந்த ஒருவாரமாக நடத்தப்பட்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையின் மூலம் இது நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

மல்லாவி ஒரு சிறிய நகரந்தானே, அதில் முக்கால் வாசியைப் பிடித்ததாகக் கூறுகிறீர்களே என்று கேட்டதற்கு பதிலளித்த, பிரிகேடியர் உதய நாணயக்கார, அது ஒரு பெரிய நகரம், அங்கு மல்லாவி ஆதார வைத்தியசாலை சில வங்கிகள், பீங்கான் தொழிற்சாலை, பெரிய வெதுப்பகம் மற்றும் புலிகளின் முக்கிய அலுவலகம் ஒன்று ஆகிய அனைத்தும் அங்கு இருக்கின்றன என்று கூறினார்.

விடுதலைப்புலிகளின் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகள் பற்றிய அரசாங்க அறிவிப்பு குறித்துக் கேட்டதற்கு பதிலளித்த பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், தற்போதைக்கு பொதுமக்கள் வவுனியாவுக்கு வரவேண்டுமானால், ஏ 9 பாதையூடாகத்தான் வரவேண்டும் என்றும், ஆனால், தற்போது தாம் பாதுகாப்பான வழி ஒன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அவை பூர்த்தியானதும் அதுபற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.


வட இலங்கையில் தொடரும் மோதல்கள்

இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்)
இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் மிகவும் மும்முரமான மோதல்கள் இடம்பெறும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எறிகணைத்தாக்குதல்களில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாக வவுனியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

வவுனியா ஓமந்தைக்கு வடக்கே ஏ9 வீதியில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் ஞாயிறு மாலை இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் 53 வயதுடைய சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த எறிகணைத் தாக்குதலை இராணுவத்தினரே நடத்தியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

ஆனால், இதனை இராணுவத்தினர் மறுத்திருக்கிறார்கள்.

இராணுவ சடலங்களைக் கையளித்ததாக புலிகள் அறிவிப்பு

வன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் 4 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் ஊடாக இராணுவத்தினரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இதனிடையே, வன்னிப்பகுதியில் தற்போது பெய்யத் தொடங்கியுள்ள மழை காரணமாக வீதியோரங்களில் கொட்டில்களிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்களை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பிரதேசத்திற்குள் வருமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்ற போதிலும், அந்த அழைப்பையேற்று எவரும் வவுனியா அல்லது மன்னார் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வந்ததாக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

பதுங்கு குழிகளை அமைக்குமாறு புலிகள் வலியுறுத்தல்

அதேவேளை, வன்னிப்பகுதியில் இருக்கின்ற மக்கள் எறிகணை வீச்சுக்களில் இருந்து தம்மைத் காத்துக்கொள்வதற்காக பதுங்குகுழிகளை அமைத்து அவற்றில் தங்கியிருக்குமாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை ஒன்று கோருகிறது.

அனைத்து இடங்களிலும் பதுங்குகுழிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்ற அந்த அறிக்கையில், எறிகணைவீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல் நிகழும் சந்தர்ப்பங்களில் உடனடியாகவே மக்கள் பதுங்குகுழிகளில் பாதுகாப்புத் தேட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கையின் வடக்குக் களமுனைகளில் நேற்று இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 42 விடுதலைப்புலிகளும், 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களில் 17 படையினர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

எனினும் வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 12 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இலங்கை கிளிநொச்சியில் எறிகணை தாக்குதலில் பொதுமக்கள் பலி

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் புதுமுறிப்பு என்னுமிடத்தில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில், குழந்தைகள் உட்பட 5 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி நகரில் இருந்து சுமார் 4 கிலோ மீ்ட்டர் தொலைவில் இடம்பெற்றிருப்பதாகக் கூறியிருக்கும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், பொதுமக்கள் மீதான இந்த எறிகணை தாக்குதலை இராணுவத்தினரே நடத்தியிருப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றது.

இந்த குற்றச்சாட்டுக்கான பதிலை இலங்கை இராணுவத்தினரிடம் இருந்த பெற முடியவில்லை.

மன்னார் மாவட்டம் மடு பிரதேசத்தில் உள்ள பரப்புக்கடந்தான் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் தஞ்சமடைந்திருந்த இடத்திலேயே இநத அசம்பாவித சம்பவம் நடைபெற்றிருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.

பலியானவர்களின் உடல்கள் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


கொழும்பு குண்டுவெடிப்பில் 45 பேர் காயம்

கொழும்பு குண்டுவெடிப்பு
கொழும்பு குண்டுவெடிப்பு

இலங்கையின் சனசந்தடி நிறைந்த கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் 45 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட புறக்கோட்டை பொலிசார், இன்று சுமார் 12.15 மணியளவில் புறக்கோட்டைப் பாதையோரத்தில்  அரசமரதடிப்பகுதிக்கு சற்றுத்தொலைவில் அமைந்துள்ள கடிகாரம் விற்கும் சிறிய கடையொன்றில்  இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுமார் 45 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் ஒரு சிலருக்கே பாரிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த வைத்தியசாலையின் விபத்துக்கள் சேவைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.


புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் பிரசுரங்களை கிளிநொச்சியில் வீசியுள்ளனர் விமானப் படையினர்

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை இலங்கையின் விமானப் படையினர் வானிலிருந்து வீசத்துவங்கியுள்ளனர். இறுதிப்போர் என்று நம்பப்படும் தாக்குதலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இரவு நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கிளிநொச்சி நகரப்பகுதியில் தாழப்பறந்து ஆயிரக்கணக்கான இந்த துண்டுப்பிரசுரங்களை வீசியதாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சியிலிருக்கும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.

தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்த துண்டுப்பிரசுரங்களில், விடுதலைப்புலிகள் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வருவதாகவும், எனவே பொது மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு அரசு கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்வதன் மூலம் தங்களின் உயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பு சிறையில் குண்டுவெடிப்பு

மட்டக்களப்பு சிறை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 5 பேர் உட்பட 7 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தனியாக வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடத்திற்குள் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறும் பொலிசார், அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மற்றுமொரு கைக்குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தைக் கைதிகள் தப்பியோடுவதற்கான முயற்சியாகவே தாம் சந்தேகிப்பதாகக் கூறும் சிறைச்சாலை அத்தியட்சகரான லால் விக்கிரமசிங்க, சிறைச்சாலைக்குள் குண்டுகள் எப்படி கொண்டு வரப்பட்டன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக ஈ.பி.டி.பி குற்றம்சுமத்துகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அதனை மறுத்துள்ளனர்.



நளினி விடுதலையை எதிர்ப்பது ஏன்? – தமிழக அரசு விளக்கம்

நளினி – பழைய படம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் நளினி விடுதலை செய்யப்படுவதற்கு எதிரான ஆட்சேபணைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றின் மூலம் விளக்கியிருக்கிறது.

ஆயுட்தண்டனை என்பதை பொதுவாக 14 ஆண்டுகள் என்ற ரீதியில் புரிந்துகொண்டு, தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருவதை சுட்டிககாட்டி, நளினி விடுதலை கோரி மனுதாக்கல் செய்தார்.

மாநில ஆலோசனை வாரியம் முதற்கட்டத்தில் அவரது கோரிக்கையினை நிராகரித்தது. அந்நிராகரிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நளினி மனுச்செய்தார்.

இந்நிலையில் தமிழக அரசு ஆலோசனை வாரியத் தீர்ப்பில் தனக்கு முழு உடன்பாடுதான் என்றும், நளினி விடுதலையை கோரப்போவதில்லை என்றும் கூறியது. அது குறித்த விளக்கமான மனு இன்று தாககல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்க்லாம்.

இன்று நீதிபதி நாகமுத்து முன் நளினியின் மனு பரிசீலனைககு வந்தபோது விளக்கமான மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்தது.


திருகோணமலை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளின் விமானம் குண்டுவீசியுள்ளது

இலங்கையின் கிழக்கே திருகோணலை துறைமுகத்தை இலக்குவைத்து விடுதலைப் புலிகளின் விமானம் செவ்வாய் இரவு ஒரு தாக்குதலை நடத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை வீசி விட்டுச் சென்றதில் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல படையினர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.

இந்த தாக்குதல் குறித்து இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கருத்து வெளியிடுகையில், “விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் திருகோணமலை துறைமுகப் பகுதியில் இரண்டு குண்டுகளை வீசியது. இரண்டு குண்டுகளும் வெடித்தன. இதில் பத்து கடற்படையினர் காயமடைந்தனர். ஆனால் கப்பல் தளத்தில் உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித சேதமும் இல்லை” என்றார்.

“சிறிய விமானத்தில் வந்து குண்டுகளை வீசுவது என்பது பெரிய அச்சுறுத்தல் கிடையாது. விடுதலைப் புலிகளின் நோக்கம் நாட்டு மக்களை பீதியடையச் செய்வதுதான்.ஆனால் இந்த தாக்குதல்களில் அவர்கள் இலக்குகளை அழிக்கமுடியவில்லை.” என்றும் அவர் குறிபிப்பிட்டார்

அவர் தெரிவித்த பிற கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கையில் கடும் மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கை படையினர்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் குறைந்தது 32 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இலங்கையின் படைத்துறைத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

வவுனியா, முல்லைத்தீவு, வெலிஒயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்க்கு வடக்கிலும் இராணுவத்தினர் தமது பகுதிக்குள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள விடுதலைப் புலிகள், இங்கு இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலத்தையும் ஆயுதத் தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் புத்துவெட்டுவான் பகுதியில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லபட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை கடற்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை இரவு 9.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம், கடற்படைத்தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் விடுதலைப்புலிகளின் விமானங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் அந்தத்தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் கூறியுள்ளது.

அதேவேளை, திருகோணமலை துறைமுகப் பகுதியில் ஒரு பெரிய குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் பீரங்கி வேட்டுக்கள் ஆகியன தொடர்ந்து வெடித்ததாகவும் திருகோணமலை வாசிகள் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் காயத்துக்கு இலக்கான கடற்படையினர் குறைந்தது 10 பேர் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலையடுத்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் விமானங்களை தேடியழிப்பதற்காக வன்னி பிரதேசத்துக்கு விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் சென்று வந்ததாக வடபகுதியிலிருக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப் படையின் இந்த வான்வழித் தாக்குதல்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.


கிழக்கிலங்கை பல்கலைக்கழக பாதுகாப்பு பொலிஸாரிடம்

கிழக்கு பல்கலைக்கழகம்
கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு பொலிஸாரின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் சிங்கள மாணவரொருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பும் இன்று முதல் பொலிசாரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்றுக் கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸாரால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் 60 பொலிஸாரை உள்ளடக்கிய பொலிஸ் காவல் நிலையமொன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது

பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கும் சகலரும் இனிமேல் சோதனையின் பின்பே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இப் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்

இப்புதிய பாதுகாப்பு நடைமுறையின் கீழ் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதன் திருகோணமலை வளாகம் அம்பாறை தென் கிழக்கு பல்கலைகழகம் ஆகியவற்றின் பாதுகாப்பை இன்று முதல் பொலிஸார் பொறுப்பேற்றூள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



வட இலங்கை மோதல்களில் 7 இராணுவத்தினர் பலியானதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதி மோதல்களில் இலங்கை இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 18 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தமது படையினர் அங்கு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், விடுதலைப்புலிகள் தரப்பில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

முல்லைத்தீவின் மேற்கு முனை, கிளிநொச்சியின் தென்பகுதி, நாச்சிக்குடா, முல்லைத்தீவு கிழக்கு, ஆண்டான்குளம் ஆகிய இடங்களில் பல மோதல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணைய அறிக்கையில் கூறியுள்ளது.

இருந்தபோதிலும், இவை குறித்து விடுதலைப்புலிகளின் கருத்துக்களை உடனடியாகப் பெறமுடியவில்லை.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களை வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள வேறு பல்கலைக்கழகங்களுடன் தற்காலிகமாக இணைக்க உயர் கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பல்லைக்கழக வளாகத்திற்குள் சிங்கள மாணவரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலையையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப் படுகொலைச் சம்பவமானது துரதிர்ஷ்டவசமானது என பி.பி.சி தமழோசைக்கு கூறிய உயர் கல்வி அமைச்சரான பேராசிரியர் விஸ்வ வர்ணபால, அங்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதாகவும், இதன் காரணமாகவே பெற்றோர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில் தற்காலிகமாக இம் மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மற்றும் வெலிஓயா பிரதேச போர்முனைகளில் ஞாயிற்றுகிழமையன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா பிரதேசத்தில் ஞாயிறு காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 10 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இந்தப் பிரதேசத்தில் வேறோரிடத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்களில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 3 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.



இலங்கையில் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி

இலங்கை ஜனாதிபதி
மக்களுக்கு கிடைத்த வெற்றி – இலங்கை ஜனாதிபதி

இலங்கையின் சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சனிக்கிழமை இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு வெற்றி பெற்று இரண்டு மாகாணசபைகளிலும் தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

ஞாயிற்றுகிழமை தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் பிரகாரம், இருமாகாணங்களிலுமாக மொத்தமுள்ள 77 இடங்களில் 45 இடங்களை ஆளும் கூட்டணி கைப்பற்றியுள்ளது. வெற்றி பெறும் கட்சிக்கும் வழங்கப்படும் போனஸ் இடங்களும் இதில் அடங்கும். ஆளும் கூட்டணி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 7,80,246.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மொத்தம் 29 இடங்களையும், ஆளும் கூட்டணியின் முன்னாள் பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. 38,425 வாக்குகளை மாத்திரம் பெற்று மூன்று இடங்களையும் மட்டும் பெற்றன.

இந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தோல்விபெற்றிருக்கின்ற போதிலும், கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது, இம்முறை அந்தக் கட்சி நான்கு மேலதிக இடங்களை பெற்றுள்ளது.அதேவேளை, ஆளும் கட்சி நான்கு இடங்களை இழந்திருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் வெற்றி குறித்துக் கருத்துவெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, இந்தத் தேர்தல் வெற்றியானது நாட்டுமக்கள் அனைவரிற்கும் கிடைத்தவெற்றியென்றும், இந்த வெற்றியானது பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு அளவிடமுடியாத சக்தியினையும், ஊக்கத்தினையும் வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.


இலங்கையின் மட்டக்களப்பில் தேசிய நல்லிணக்க செயலகம்

செயலகம் திறப்பு
செயலகம் திறப்பு

இலங்கையில் மூவினங்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில், மாகாண முதலமைச்சரின் கீழ் அமையவிருக்கும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலான இன நல்லிணக்கச் செயலகத்தின் முதலாவது செயலகத்தை, மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தார்

மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து சமய, சமூக தலைவர்கள் உட்பட பல்வேறு பிரமுகர்கள் முன்னிலையில் இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண முதலமைச்சர், காணி, மீள் குடியேற்றம், தொழில் மற்றும் கல்வி உட்பட பல்வேறு விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை அரசியலுக்கு அப்பால் காண்பதே இச்செயலகத்தின் நோக்கம் என்றார்.

மூவினங்களையும் சேர்ந்தவர்கள் மாவட்ட மற்றும் மாகாண ரீதியாக செயல்படவிருக்கும் இந்த இன நல்லிணக்கச் செயலகத்தில் அங்கம் வகிப்பார்கள் என்றும், முதலமைச்சரின் செயலகத்தில் இதற்கென தனியான நிறைவேற்றுப் பணிப்பாளரொருவர் நியமிக்கப்ப்டுள்ளார் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டு இது பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டது.


இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களிலும் வெலிஓயா பிரதேசத்திலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 28 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவி்த்திருக்கின்றது. இந்த மோதல்களில் மேலும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாக இராணுவம் கூறியிருக்கின்றது.

வவுனியா பாலமோட்டை – கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்திய எதிர்த்தாக்குதல்களில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் யாழ்குடாநாட்டில் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 833 இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவது என இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உயர் மட்டக்குழு முடிவு செய்துள்ளது.


இலங்கையில் வெடிகுண்டுக்கான சாதனங்கள் மற்றும் வெடிகுண்டு கண்டெடுப்பு

கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள்

இலங்கையில் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து தற்கொலையங்கிக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சாதனைக்களைக் கண்டுபிடித்திருப்பதாக கொழும்பு பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பு புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் அமைந்துள்ள புனித பிலிப்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளவினுள் இருந்து சுமார் 19 டெட்டோனேட்டர்கள், 23 ஆளிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்குண்டு அங்கியொன்றினை பொருத்துவதற்காக இவை கொண்டுவந்து மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேவேளை, இலங்கையின் மத்திய மலைநகரமான கண்டியின் புறநகர்ப் பகுதியான பலகொல்லவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று வீடொன்றின் அருகிலிருந்த மணல்மேடு ஒன்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.

அக்குண்டு செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.


துணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வட இலங்கை மோதல் நிலவரம் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் சிங்கள மாணவர் சுட்டுக் கொலை

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவரான பசன் சமரசிங்க என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.

பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் சிங்கள மாணவர்கள்

மறு-அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மாணவர்கள் குருநாகல் வரை விசேட வாகனங்களில் அனுப்பிவைக்கப்டப்டுள்ளார்கள்.

இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



மௌலவி ஆசிரியர்களை நியமிக்க இலங்கை அரசு மீண்டும் முயற்சி

இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளில் சேவையாற்றுவதற்கு சுமார் 15 வருடங்களின் பின்பு மௌலவி ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் முடிவுசெய்து அதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இஸ்லாம் பாடம் கற்பிப்பதற்கு முக்கியமான நியமனம் என கருதப்படும் இந்நியமனம் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளினாலும் அமைப்பகளினாலும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தபோதிலும் தற்போது தான் இது தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் விடுத்துள்ளது.

இஸ்லாம் என்பது அரபு மொழியுடன் தொடர்புடையது என்பதால், அரபு மொழியை உச்சரிக்கக் கூடியவர்களே அப்பாடத்தை கற்பிக்க வேண்டும் என ஜாமியத்துல் உலமா சபைகளின் பொதுவான கருத்தாகும்.

மௌலவி அல்லாத ஏனைய பாட ஆசிரியர்கள் இஸ்லாம் கற்பிப்பதால், அரபு மொழியை சரியாக உச்சரிக்க தவறுவதாக கூறும் அரபு மொழி உதவிக் கல்விப் பணிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல்.எம்.முபாரக் மௌலவி.

இதன் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் கூட பாதிக்கப்படுகின்றது என்கிறார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும் சுமார் 425 ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க செயலாளரான எம்.அனஸ் சுட்டிக் காட்டுகின்றார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

Touring British Minister Lord Malloch-Brown meets President; Neil Buhne, United Nations (UN) representative & Humanitarian coordinator, on a fact finding visit to Batticaloa

Posted by Snapjudge மேல் ஜூலை 16, 2008

இலங்கையில் பிரிட்டிஷ் அமைச்சர் மலக் பிறவுண்

பிரித்தானியாவின் ஆபிரிக்க, ஆசிய மற்றும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மலக் பிறவுண் அவர்கள் இன்று மூன்று நாள் அரசமுறை பயணமொன்றினை மேற்கொண்டு இலங்கையின் தலைநகர் கொழும்பு சென்றிருக்கிறார்.

அங்கு அவர் அரச மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகளையும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மற்றும் சமயத் தலைவர்களையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேசி வருகிறார்.

இவரது விஜயம் குறித்துக் கருத்துவெளியிட்ட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், அமைச்சர் பிறவுண் தனது சந்திப்புக்களின்போது குறிப்பாக இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கலந்துரையாட இருப்பதாகவும், மனித உரிமை ஆணைக்குழு, அதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற மனித உரிமை மீறல் நிலைமைகளை கண்காணித்துவரும் அமைப்புக்களை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றினைக்காணுவதற்கு ஊக்கமளிக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு தனது இந்த விஜயத்தினைப் பயன்படுத்தவுள்ள பிரித்தானிய அமைச்சர் பிறவுண், அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் வளர்ச்சிப்போக்கு குறித்தும், அக்குழுவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால விதந்துரைகளின் நடைமுறைப்படுத்தல்கள் குறித்தும் இலங்கை அரச தலைவர்களுடன் பேசவிருப்பதாகவும், பிரித்தானிய தூதரகம் தெரிவித்திருக்கிறது.


மட்டக்களப்பில் ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி

நியூ பொனே
நியூ பொனே

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்புக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் மற்றும் மனிதாபிமான பணிக்கான இணைப்பாளருமான நியூ பொனே அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளார்.

ஐ.நா.வின் முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் சிவில் அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரை சந்தித்து இது பற்றி ஆராய்ந்த அவர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த மாவட்டத்தில் காணப்பட்ட சூழ்நிலையுடன் தற்போதைய சூழ்நிலையை ஒப்பிடும் போது தமது பணிக்கு முன்னேற்றகரமானதாகவும்,சாதகமானதாகவும் நிலைமைகள் தற்போது இருப்பதாகக் கூறினார்


தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு இலங்கையிடம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்-திமுக கோரிக்கை

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவரை அழைத்து தொடரும் அச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் என திமுகவின் உயர்நிலைக்குழு கேட்டுககொண்டிருக்கிறது.

தவிரவும் விரைவில் நடைபெறவிருக்கிற தெற்காசிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மன்மோகனசிங், அச்சமயத்தில் இலங்கை அதிபரிடம் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி அமைதியான சூழல் திரும்புவதை உறுதி செய்யவேண்டும் எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி இயற்றப்பட்ட தீர்மானங்களை செய்தியாளர்கள் மத்தியில் படித்தார்.

இன்னொரு தீர்மானம் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படையும் கடலோரப்படையும் இணைந்து பாதுகாப்பளிக்க வேண்டும் எனக் கோரியது.

இன்றைய தீர்மானங்களை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் ஜூலை 19ஆம் நாள் மாநிலம் முழுதும் ஒரு நாள் உண்ணாநோன்பு இருப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

முதல்வர் கருணாநிதி கடல் எல்லையை மீறுகின்ற தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை இலங்கை கடற்படை தவிர்க்க வேண்டும் எனக் கூறினார்.

கடற்கரையில் மீனவர்கள்
கடற்கரையில் மீனவர்கள்

தவிரவும் முதல் கச்சதீ¢வு ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருந்ததையும், பின்னால் அப்பிரிவுகள் நீக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி மீண்டும் அவ்வுரிமைகள் நிலைநாட்டப்படும் நேரம் வந்திருப்பதாககூறினார்.

இதனிடையே இன்று காலை முதல்வர் கருணாநிதியையும் உயர் அரசு அதிகாரிகளையும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சந்தித்தபோது, பாதிக்கப்ட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு ஐந்துலட்சரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்கப்படும், மற்றும் தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு மீனவர்களின் பிரச்சினை பற்றி மத்திய அரசிற்கு எடுத்துக்கூற புதுடெல்லி செல்லும் என்ற வாக்குறுதிகளின் பேரில் தங்களது வேலைநிறுத்தத்தினை முடித்துக் கொள்வதாக கூறினர்.


மட்டக்களப்பில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் போலீசார் விசாரணை
மட்டக்களப்பில் போலீசார் விசாரணை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடிப் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு ஈபிடிபி அமைப்பினரால் கடத்தப்பட்டாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவரது சடலம் அடிகாயங்களுடன் அந்தப் பகுதியிலுள்ள ஈபிடிபி காரியாலயத்துக்கு அருகிலுள்ள காணி ஒன்றிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

36 வயதான தேவதாசன் சுரேஷ் குமார் எனும் இந்த வர்த்தகர், கடந்த மாதம் 19 ஆம் தேதி கடத்தப்பட்டு காணாமல் போனதாக உறவினர்களால் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பெயரில் அந்த அமைப்பின் பிரதேச அமைப்பாளர் உட்பட நான்கு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

விசாரண நடவடிக்கைளை அடுத்து மேலும் இரு ஈபிடிபி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் கொடுத்த தகவலையடுத்தே இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஏறாவூர் போலீசார் கூறுகிறார்கள்.

அந்த வர்த்தகர் ஈபிடிபி அலுவலத்தில் வைத்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்பு அருகில் ஈபிடிபியின் பாவனையிலுள்ள காணியில் புதைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பில் இதுவரை சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கும் தமது அமைப்புக்கும் தொடர்புகள் இல்லை என்று ஈபிடிபி கட்சியின் தலைவரும் இலங்கை அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.


வவுனியா நலன்புரி நிலையத்தில் தீ விபத்து

வவுனியா நலன்புரி நிலையத்தின் தீ விபத்து
தீக்கிரையான வவுனியா நலன்புரி நிலையம்

இலங்கையின் வடக்கே வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நலன்புரி நிலையத்தில் 2500க்கும் கூடுதலானவர்கள் தங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீ விபத்தின் காரணமாக குறைந்தபட்சம் 400 பேர் வாழ்விட வசதிகளை இழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிசாரும், இராணுவத்தினரும், விமானப்படையினரும் தீயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு வழங்கவும் மாற்று வசிப்பிட வசதிகளை வழங்கவும் ஏனைய நிவாரண உதவிகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நலன்புரி நிலையங்கள் சரிவர பராமரிக்கப்படாததையே இந்த தீ விபத்து எடுத்துக்காட்டுவதாக அந்த நலன்புரி நிலையத்தைச் சேர்ந்தவர்கள் கருதுகின்றார்கள். இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திப் பெட்டகத்தில் கேட்கலாம்.


கொழும்பு கொம்பனி வீதியில் அமைந்திருந்த சட்டரீதியற்ற வீடுகளை பொலிசார் அகற்ற முற்பட்டதால் களேபரம்

கொம்பெனி வீதியில்ரயில் தண்டவாளத்தை ஒட்டிய குடியிருப்புகள்

கொழும்பு கொம்பனி வீதி ரயில் பாதைக்கு அண்மையில் பல வருடங்களாக அமைந்திருந்த சட்டரீதியற்ற குடிசைப் பகுதி வீடுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தரவின் பேரில் பொலிசார் அகற்ற முற்பட்டதால் வெள்ளியன்று பிற்பகல் அப்பகுதி வாசிகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டினையொட்டி எடுத்துவரும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக கொழும்பு கொம்பனி வீதியில் கிளேனி பிளேஸ் பகுதியில் ரயில்வேக்கு சமீபமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் 350 சட்டரீதியற்ற குடிசைகளில் வசிப்போரை அங்கிருந்து குறித்த காலப் பகுதிக்குள் வெளியேறும்படி நகர அபிருத்தி அதிகாரசபை இவ்வார முற்பகுதியில் முன்னறிவித்தல் உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

ஆனால் அங்கிருந்து மக்கள் வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவிற்குள் வெளியேறாததால் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தரவின் பேரில் பொலிசார் அகற்ற முற்பட்டனர். இதேவேளை, இப்பகுதி மக்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், இப்பகுதிமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடைநிறுத்திவைக்குமாறு உத்தரவொன்றினை பிறப்பித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த நீதிமன்ற உத்தரவு தமக்குக் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்த நகர அபிவிருத்தி அதிகாரசபையினர், அங்குள்ள குடிசைகள் சிலவற்றை அகற்றமுற்பட்டபோது ஆத்திரமுற்ற அப்பகுதிவாசிகளுக்கும் அவர்களுக்குமிடையில் தகராறு ஏற்பட்டது.

இதனால் நிலைமையைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர பொலிசார் கண்ணீர்புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். ஆனாலும் பொலிசாரின் உத்தரவிற்கு இணங்க சிலர் வெளியேறியதையும் காணமுடிந்தது.

இங்கு பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சிலர், இந்திய தூதரகம் சென்று மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.


திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

திருகோணமலை நகர மணிக்கூட்டுக் கோபுர பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் கலந்து கொண்டன.

மீன் பிடிப்பதற்கான இந்தக் கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும், அல்லது அதனால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பம் ஒவ்வொன்றுக்கும் நஷ்டஈடாக மாதாந்தம் இருபதினாயிரம் ரூபாய்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை நாடாளுமன்றத்துக்கான ஜே.வி.பி. உறுப்பினர், ஜயந்த ஜயசேகர மற்ரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ ஆகியோரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.


தமிழக மீனவர் தாக்கப்படும் விவகாரம்: மத்திய அரசுக்கு திமுக கடிதம்

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, இன்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி தலைமையில், திமுகவின் உயர்நிலைச் செயல் திட்டக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் விவாதித்தது. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் மேலும் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியது.

அந்தத் தீர்மானத்தின் நகலை, வெள்ளிக்கிழமையன்று பிரணாப் முகர்ஜியிடம் வழங்கினார் டி.ஆர். பாலு. இந்தப் பிரச்சினையில் அரசு முன்னுரிமை கொடுத்து, உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரணாப் முகர்ஜி உறுதியளித்திருப்பதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.

மேலும, வரும் 20-ம் தேதி திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இநதப் பிரச்சினை தொடர்பாக பிரதமரைச் சந்திக்க இருப்பதாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

GoSL Military: 37 LTTE Rebels, 1 Soldier Killed in Fighting; Sri Lankan Security Chiefs Try to Stop Rebel Resurgence in East

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2008


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

விமான தாக்குதல்
விமான தாக்குதல்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பகுதியில் ஞாயிற்றுகிழமை பிற்பகல் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத்தினர் சந்திப்பு நடத்தும் முக்கிய இடத்தின் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இரணைமடுகுளத்திற்கு வடகிழக்கே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வட்டக்கச்சி பிரதேசத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

எனினும், வட்டக்கச்சி மக்கள் குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுகிழமை மதியம் இரண்டு குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தியதாகத் கூறியிருக்கும் விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதலில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

3 வீடுகள் தரைமட்டமாகியிருப்பதுடன் 15 வீடுகள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில், மன்னார், வவுனியா, வெலிஓயா ஆகிய பிரதேசங்கள் அடங்கிய வன்னிக்களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


இலங்கையின் வடக்கே மோதல் தொடர்கிறது

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கான ஒரேயொர நுழைவாயிலாகத் திகழும் ஓமந்தை சோதனைச்சாவடி இன்று சனிக்கிழமை நான்காவது நாளாக மூடப்பட்டிருந்த போதிலும், வன்னிப்பிரதேசத்தில் இருந்து அவசர மேல் சிகிச்சைக்கான 18 நோயாளிகள் இந்த சோதனைச்சாவடியின் ஊடாக வவுனியா மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, வெலிஓயா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் அரச படையினர் விடுதலைப் புலிகளின் மைக்கல் தளம் எனப்படும் முக்கிய தளம் ஒன்றினை நேற்று கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் இணையத்தள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது. இந்த நடவடிக்கையின்போது விடுதலைப் புலிகளுடன் மூன்று தினங்களாக இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது,

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மன்னார், வவுனியா வெலிஓயா மற்றம் முகமாலை முன்னரங்க பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மற்றைய வெவ்வேறு தாக்குதல்களில் 37 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு உட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சனிக்கிழமை கரும்புலி தின வைபவங்கள் பரவலாக அனுட்டிக்கப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மட்டக்களப்பில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாவலடியில் சோதனைச்சாவடி
நாவலடியில் சோதனைச்சாவடி

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு மேலதிகமாக தற்போது இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் சில இடங்களில் புதிதாக இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.வீதித் தடைகளும் நிரந்தர வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்திற்கிடமான இடங்களில் சுற்றி வளைப்பு தேடுதல்களும் அங்கு இடம் பெற்று வருவதாக தகவல்கள் மூலம் தெரிகின்றது.

இம்மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக மேற்கொள்ளபடப்ட சில தாக்குதல்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என பாதுகாப்பு தரப்பு இது பற்றி கூறுகின்றது.

ஆனால் பொது மக்களைப் பொறுத்த வரை பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் இந்நடவடிக்கைகளினால் தமது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் தங்களிடையே ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

June 23, 24: Eezham, Sri Lanka, LTTE, Refugees in Tamil Nadu, Batticaloa Updates

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

தமிழகத்தில் சொத்து வாங்கிய இலங்கை அகதிகளின் விவரம் திரட்டப்படுகிறது

தமிழகத்தில் நிலம், வீடு அல்லது மோட்டார் வாகனங்கள் வாங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த விவரங்களை தமிழக அரசு சேகரிக்கத் தொடங்கியிருககிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி, அகதிகள் இவ்வாறு சொத்துகள் வாங்குவது குற்றம், அனுமதிக்கப்படக்கூடாது, உண்மையான அகதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம், ஆனால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தார்.

ஆனால், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக நிறுவனர் சந்திரஹாசன், இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துகளை சில நியதிகளுக்கு உட்பட்டு வாங்கமுடியும் என்கிறார்.

ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அட்டை போன்றவற்றை அகதிகள் பெறுவதாகக் கூறப்படுவது தவறு என்ற அவர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால் இலங்கைத் தமிழர்கள் நலனை பாதிக்கும் வகையில் தமிழக அரசு நடந்துகொள்ளாது என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கிளேமோர் தாக்குதலில் பொலிசார் 3 பேர் பலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியில் திங்கள் மாலை இடம்பெற்ற கிளெமோர் குண்டுத் தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மற்றுமொரு பொலிஸ்காரர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறுகிறார்கள்.

ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இந்தப் பொலிஸ்காரர்கள் அங்குள்ள நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றுக்கு குளிக்கச் சென்றிருந்தபோது, குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் இந்தக் குண்டு அங்கு பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதி ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கைப் படையினரால், கடந்த ஆண்டில் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் காவலிலிருந்த சந்தேக நபரொருவர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடமொன்றை காட்டுவதற்காக இன்று அதிகாலை கிளாலிவெட்டைக்கு இந்நபர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு விடுதலைப் புலிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டதாக சமப்வம் தொடர்பாக பொலிசார் கூறுகின்றனர்.


வட இலங்கை மோதல்கள்

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் போர்முனைப் பிரதேசங்களில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண்கள் மீது ஞாயிறன்று மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து இடம்பெற்ற மோதல்களில் 33 விடுதலைப் புலிகளும், 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இராணுவச் சிப்பாய் ஒருவரைக் காணவில்லை என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

இதேவேளை, வவுனியா பாலமோட்டை பகுதியில் ஞாயிறு காலை 3 முனைகளில் தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இந்தச் சண்டைகளின்போது 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இராணுவத்தினரின் 3 சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். நல்ல நிலையில் இருந்த ஒரு சடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 7 விடுதலைப் புலிகளின் சடலங்களை இன்று பிற்பகல் புளியங்குளம் சோதனைச்சாவடியில் விடுதலைப் புலிகளிடம் தாங்கள் கையளித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.


பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இடைக்காலத் தீர்வுக்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் சர்வ மதத்தலைவர்கள் வேண்டுகோள்

இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள்
இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள்

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை ஆராய்கின்ற சர்வகட்சிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஒரு இடைக்காலத் தீர்வாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வமத தலைவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்தக் குழுவில் இடம்பெற்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு கூறியுள்ளார்.

இலங்கையில் நடக்கின்ற மனித உரிமை மீறல்கள், கொலைகள், காணாமல் போதல்கள், குறிப்பாக வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவை குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சர்வமதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் பொதுமக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் சிக்கி துன்பப்படுகின்ற நிலைமைகளை அறிந்து, மக்களுக்கு நிவாரணம் செய்ய வேண்டும் என்று மதத்தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரியதாகவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.


Posted in Govt, India, Law, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Batticaloa Abductions: EPDP vs TMVP

Posted by Snapjudge மேல் ஜூன் 23, 2008

மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள்; ஈ.பி.டி.பி – டி.எம்.வி.பி. பரஸ்பர பழிசுமத்தல்

இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில் ஈ.பி.டி.பி. கட்சியினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்கடத்தல் தொடர்பாக பொலிசார் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக கடத்தப்பட்ட தேவதாசன் சுரேஷ்குமாரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை மாலை, தனது தாயாரைக் காண்பதற்காக இரு குழந்தைகளின் தந்தையாகிய தேவதாசன் சுரேஷ்குமார் வீட்டிலிருந்து கிளம்பியபோது, வாகனம் ஒன்றில் வந்த ஈ.பி.டி.பி. கட்சியினர் அவரைக் கடத்திச் சென்றதாக தேவதாசனின் மனைவி தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த இருபதாம் தேதியன்று தேவதாசனும் வேறு இரண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களும் ஈ.பி.டி.பி. பிரதேச பிரதிநிதி ஒருவர் சென்ற வாகனத்தின் மீது கல்லெறிந்ததால் அவர்களைப் பிடித்து எச்சரித்துவிட்டு விடுவித்துவிட்டதாகவும், தற்போது டி.எம்.வி.பி.யினரின் வற்புறுத்தலின் பேரில் தேவதாசனின் மனைவி பொலீசில் பொய் புகார் கொடுத்திருப்பதாகவும் தமிழோசையிடம் பேசிய மட்டக்களப்பு மாநகர சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினரான அருமைலிங்கம் தெரிவித்துள்ளார். அதேநேரம் காளியப்பன் குணசீலன் என்ற ஈ.பி.டி.பி. உறுப்பினரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கடந்த இருபதாம் தேதியன்று கடத்திச் சென்றுள்ளதாக அருமைலிங்கம் குற்றம்சாட்டினார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை டி.எம்.வி.பி. சார்பாகப் பேசவல்ல ஆஸாத் மௌலானா மறுத்துள்ளார். இவர்களது கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பு வன்முறையில் நால்வர் பலி

இலங்கையில் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச படையினர் இருவர் கண்ணிவெடியில் கொல்லப்ட்டுள்ளனர்.

இந்தக் கிளெமோர் கண்ணியை வைத்தது புலிகள் என அரசு கூறுகிறது. ஆனால் விடுதலைப் புலிகள் அது குறித்து கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

களுதாவளைப் பகுதியில் காலை வேளை சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் மற்றும் அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட பொதுக் குடிமகன் ஒருவர் இந்த சைக்கிள் கண்ணி வெடியில் காயமடைந்துள்ளார்.

இதைத் தொடாந்து அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது படையினர் இரண்டு உள்ளூர்வாசிகளைச் சுட்டுக்கொன்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

களுதாவளைப் பகுதியில் பதட்டம் நிலவுவதாகவும், அங்கே பொதுமக்கள் சிலர் தாக்கப்பட்டு, உடமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் மேலதிக செய்திகள் கூறுகின்றன.

அரச படைகள் இந்தக் குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளன.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Sri lanka: Ambarai District – Two policemen murdered

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2008

அம்பாறையில் இரு போலீசார் கொலை

அம்பாறை நகர்
அம்பாறை நகர்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் கல்முனை நகரப் பகுதியில் இன்று காலை இரண்டு பொலிஸ்காரர்கள், அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர்கள் இருவரும், கல்முனை நீதிமன்றத்துக்கு கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், தரவை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி தாரிகளினால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீதே பொலிஸார் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், அதாவது கடந்த 40 நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பேருமாக மொத்தம் 9 பொலிஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, திருகோணமலை மாவட்டம், மூதூர் மணற்சேனை என்னும் இடத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தாம் சுட்டுக்கொன்றதாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றின்போது, கொல்லப்பட்டவர், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்டத்துக்கான தென்பிராந்திய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான, தங்கன் என்று அழைக்கப்படும் சௌந்திரராஜன் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Canada adds World Tamil Movement to terror list; Action Contre la Faim (ACF); Sri Lankan Appeal Court decides to inquire Batticaloa election petition

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கனடா உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டது

உலகத் தமிழர் இயக்க அலுவலகம்
உலகத் தமிழர் இயக்க அலுவலகம்

கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் என்ற பெயரில் செயற்பட்டுவந்த அமைப்பு ஒன்றை, அது விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டி, அந்த நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு கனடாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கனடிய அமைச்சரவை நேற்று இந்த முடிவை எடுத்திருந்தது. இந்த நடவடிக்கையானது கனடாவில் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை முடக்கும் அந்த நாட்டு அரசாங்கத்தின் மிகவும் கடுமையான ஒரு நடவடிக்கையாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, உலகத் தமிழர் இயக்கத்தின் கணக்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நிதி நிறுவனமும் அது குறித்து கனடிய அரசாங்கத்துக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமது அமைப்பைத் தடை செய்வதற்கான கனடிய அரசாங்கத்தின் முடிவு தவறானது என்றும் அதனை கனடிய சட்டங்களின் அடிப்படையில் எதிர்க்கப் போவதாகவும் கூறும் உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவரான சின்னத்தம்பி சிற்றம்பலம், தமது அமைப்பு கனடாவிலும், இலங்கையிலும் அகதிகளுக்கு உதவும் பணிகளில் மாத்திரமே ஈடுபட்டு வந்ததாகவும் கூறினார். விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்றும் அவர் கூறினார்.


கிழக்கு மாகாண தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

கிழக்கு மாகாண சபை
கிழக்கு மாகாண சபை

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கென நடத்தப்பட்ட தேர்தல் நீதியானதும் நியாயமானதுமான முறையில் சுதந்திரமாக நடத்தப்படவில்லை என தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவினை இன்று நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்
கொண்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை ஜூலை மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்கப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினர் இருவர் சார்பில் இந்த தேர்தல் ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருள்பிரகாசம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் புகுந்து வாக்களிப்பு மோசடியில் ஈடுபட்டதாகவும், இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பினை செல்லபடியற்ற தாக்குமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


மூதூர் கொலைகள் குறித்து ஏசிஃப் சர்வதேச விசாரணை கோருகிறது

மூதூரில் கொல்லப்பட்ட உதவிப் பணியாளர் ஒருவரின் சடலம்
மூதூரில் கொல்லப்பட்ட உதவிப் பணியாளர் ஒருவரின் சடலம்

இலங்கையின் கிழக்கே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையைக் கோரி உலகளாவிய ஒரு முன்னெடுப்பை பிரான்ஸ் நாட்டின் உதவி அமைப்பான ஏசிஃப் ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசின் விசாரணைகள் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்று அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநரான பிராண்சுவா டேனல் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாததே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏசிஃப் அமைப்பைச் சேர்ந்த இந்த பணியாளர்கள் மூதூரிலுள்ள தமது அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

2006 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்தக் கொலைகள் இடம்பெற்றன.

இந்தக் கொலைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் செய்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுவதை இலங்கை அரசு மறுக்கிறது.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sakthi TV journalist killed; Outcry as Sri Lanka’s defence chief Gotabhaya urges censorship: Colombo & Sri Lanka

Posted by Snapjudge மேல் மே 28, 2008

கோதபய ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு இலங்கை ஊடக அமைப்புகள் எதிர்ப்பு

கோதாபய ராஜபக்ஷ

இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ கூறியதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு இலங்கையின் ஊடக அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் குறித்து பக்கசார்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதற்கு பாதுகாப்பு செயலரின் பேச்சு அச்சுறுத்தலாக உள்ளதாக ஊடக அமைப்புகள் கருதுகின்றன.

பத்திரிக்கையாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு அடித்துத் துன்புறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த இரண்டு மூத்த பத்திரிக்கையாளர்களை கோதாபய ராஜபக்ஜசே தன்னைக் காணவருமாறு பணித்ததாக ஐந்து ஊடக குழுமங்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளன.

அரசாங்க ஊடகத்தில், இராணுவம் மற்றும் இராணுவத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் ஏற்புடையவையல்ல என்று பாதுகாப்பு ஆலோசகருடனான இந்தச் சந்திப்பின்போது இவர்களுக்கு கூறப்பட்டதாகவும், அவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து இலைமறைகாயாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ஊடக குழுமங்கள் தெரிவித்துள்ளன.


யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் வெட்டிக் கொலை

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கல்லுண்டாய்வெளியில் புதன் மாலை 4.30 மணியளவில் சக்தி தொலைக்காட்சி சேவையின் யாழ் மாவட்ட செய்தியாளராகிய 32 வயதுடைய பரநிருபசிங்கம் தேவகுமாரன் அடையாளம் தெரியாத ஆட்களினால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக யாழ்பபாணம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இவருடன் சென்றதாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் செயலக சிற்றூழியராகிய 38 வயதுடைய மகேந்திரன் வரதன் என்பவர் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய மல்லாகம் மாவட்ட நீதிபதியின் உத்தரவையடுத்து, செய்தியாளர் தேவகுமாரனின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


இலங்கை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில்

இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் கச்சதீவுக்கு அருகில் செவ்வாய் இரவு தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 இந்திய மீனவர்களை வியாழன் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது.

இலங்கைக் கடற்பரப்பில் 4 படகுகளில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தலைமன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.

தங்கச்சிமடம், இராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிசார் கூறியிருக்கின்றனர்.

இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் நேற்று விடுதலை செய்திருக்கின்றது.

இவர்களை கொழும்பு மீரிஹானையில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி அங்கிருந்து அவர்களை அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் அதிகாரிகளுககு உத்தரவிட்டிருக்கின்றது.


மட்டக்களப்பில் தமிழர்-முஸ்லிம் இடையிலான பதற்றத்தைத் தணிப்பது தொடர்பில் கூட்டம்

கிழக்கு மாகாண முதல்வர்

இலங்கையின் கிழக்கே கடந்த சில தினங்களாக வழமைநிலை பாதிக்கப்ப்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் வியாழன் முதல் வழமைநிலையை ஏற்படுத்தவது என புதன் மாலை பொலிஸ் நிலையத்தில் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அமீர் அலி, மாகாண சபை உறுப்பினர்கள், சமய சமூக பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு அதிபாரிகள் உட்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் எல்லைப் பிரதேசமான ஆறுமுகத்தான் குடியிருப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்டுவரும் காவலரனை அகற்றுமாறு முஸ்லிம்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும், ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அச்சமின்றி மீளக் குடியமர்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை முஸ்லிம் பிரதிநிதிகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சமாதானத்தை வலியுறுத்தி கொழும்பில் பெண்கள் பேரணி

இலங்கை தலைநகர் கொழும்பில் புதனன்று நூற்றுக்கணக்கான பெண்கள் அமைதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நாட்டில் நடந்துவரும் கொடிய யுத்தத்தினை நிறுத்தவேண்டும், அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சமாதானத்தை நிலைநிறுத்த புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும், உலக மயமாக்கல் அடிமைத் தனத்திற்கு பணியக்கூடாது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து, சம்பந்தப்பட்ட தரப்பினர்மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கும் நோக்கில் போராட்டம் நடத்தப்பட்டது.

சமூக நீதிக்கான பெண்கள் இயக்கம், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்குமான மக்களுக்கிடையிலான கலந்துரையாடல் போன்ற அமைப்புக்களின் ஏற்பாட்டில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு எதிரில் இடம்பெற்ற இந்த அமைதிப் பேரணியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் கலந்துகொண்டனர்.


Posted in Govt, Law, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Earaavoor tense, Police imposes curfew & Consecration of Deputy Bishop held in Batticaloa

Posted by Snapjudge மேல் மே 25, 2008

ஏறாவூரில் பதட்டம் தொடர்கிறது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கிழக்கு மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலாநிதி. வெள்ளைதம்பி அமீரூதின் அவர்கள், காணாமல் போன இருவரும் பணி நிமித்தமாக மட்டக்களப்புக்கு சென்று மீண்டும் ஏறாவூர் திரும்பும் போதே காணாமல் போனதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டப்போது, இரண்டு தினங்களாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தமிழோசையிடம் தெரிவித்தார். மேலும் தற்போது இருக்கின்ற நிலையில் எந்த அமைப்பின் மீதும் சந்தேகப்பட கூடிய நிலையில் இல்லை என்றும் அவர் கூறினார்.


இலங்கையில் கிழக்கிலிருந்து முதலாவது ஆயர் நியமனம்

துணை ஆயர் பொன்னையா ஜோசப்
துணை ஆயர் பொன்னையா ஜோசப்

இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் கிழக்கு மாகாணத்திலிருந்து முதலாவது ஆயராக நியமனம் பெற்ற மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்த பேரருட் திரு பொன்னையா ஜோசப் அவர்கள் சனிக்கிழமை திருகோணமலை மறை மாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் விசேட திருப் பலிப்பூசை
நடைபெற்று திருநிலை ஒப்புக் கொடுத்தல் நிகழ்வு சனிக்கிழமையன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான வாட்டிகன் பிரதிநிதி வண.மரியோ செனாரி மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கத்தோலிக்க ஆயராக
முதற்தடவையாக நியமிக்கப்பட்டுள்ளமை அம்மாகாண கத்தோலிக்கர்களை பொறுத்தவரை சிறப்பு வாய்ந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது.

இம்மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் வாழ வேண்டும் யுத்தத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதே மக்களுக்கு தான் விடுக்கும் செய்தி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட ஜோசப் பொன்னையா ஆண்டகை குறிப்பிடுகின்றார்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »