எட்டு பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு சிரியா கண்டனம்
![]() |
![]() |
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது |
சிரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹெலிகாப்டரிலிருந்து நடத்தப்பட்டிருந்த ஒரு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென அமெரிக்காவிடமும் இராக்கிடமும் சிரியாவின் வெளியுறவு அமைச்சர் வாலித் அல்மொஅல்லம் வலியுறுத்தியுள்ளார்.
எட்டு பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கர்கள்தான் நடத்தியதாக சிரியா பழிசுமத்தியுள்ளது.
இத்தாக்குதல் ஒரு குற்றச்செயல் என்றும் ஒரு பயங்கரவாத அடாவடித்தனம் என்றும் லண்டனில் பேசிய அமைச்சர் மொஅல்லம் வருணித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல் மறுபடியும் நிகழுமானால், தனது நிலப்பரப்பை சிரியா தற்காத்துக்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் குறித்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றாலும் பெயர் வெளியிட விரும்பாத இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாஷிங்டனிலிருந்து வெளியாகும் தகவல்கள், இத்தாக்குதல் அல்கைதாவினருடன் தொடர்புடைய வெளிநாட்டு போராளிகளை இலக்குவைத்து அமெரிக்க விசேடப் படையினரால் நடத்தப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன.