Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Education’

Finland’s gun culture: Gunman murders 10 of his fellow students: School Shooting – Armed student opens fire at college

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 24, 2008

ஃபின்லாந்தில் பள்ளிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்

ஃபின்லாந்து நாட்டில் சமையல் கலை மற்றும் தொழிற்பயிற்சிக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், ஒரு துப்பாக்கிதாரி சுட்டதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.

தன்னைத்தானே துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்ட அந்த துப்பாக்கிதாரி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.

தான் ஒரு துப்பாக்கி பயிற்சியிடத்தில் இருப்பதான வீடியோவை இணையத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது திங்கழன்று கைது செய்யப்பட்ட அந்த நபர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்ட போதிலும், கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கௌகாஜோகி நகரில் நடந்த இந்த சம்பவம், கடந்த ஒரு வருடத்தில், ஃபின்லாந்தில் நடந்த இதுபோன்ற இரண்டாவது சம்பவமாகும்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

C Vezhavendhan: The need for quality Instructors – Teacher Training Schools

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

தேவை தரமான ஆசிரியர்களின் சேவை

சி. வேழவேந்தன்

தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன.

எனவே, அப்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் நிலை இருந்தது.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அங்கே இடம் கிடைக்காத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவது வழக்கம்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 18 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு மேலும் குறைத்துள்ளது.

இதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் (குறைந்த மதிப்பெண்கள் பெற்றால்கூட) பொறியியல் கல்லூரிகளில் அரசின் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்கும் நிலை உள்ளது.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் (ரூ. 2 லட்சம் வரை) சீட் கிடைக்தாத நிலையே இருந்துவந்தது.

ஆனால், தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதன்மூலம் ஆண்டுதோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் உள்ள 40 ஆயிரம் இடங்களில் 25 ஆயிரம் இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.

மீதம் உள்ள 15 ஆயிரம் இடங்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.

அரசின் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் அரசு ஒதுக்கிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

போட்டி அதிகமாக இருந்தபோது தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் தானாக நிரம்பின.

ஆனால் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கே மாணவர்கள் இல்லாமல் இடத்தை காலியாக வைத்துள்ளன.

எனவே தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முன்னர் ரூ. 2 லட்சத்திற்கு விலை போன இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான இடம், தற்போது ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் என குறைந்துள்ளது.

இதையும் தவணை முறையில் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மாணவர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் குறைந்த பட்ச கட்-ஆப் மதிப்பெண் 470.

இதேபோல, மாணவிகள் பொதுப் பிரிவில் அறிவியல் பிரிவுக்கு 835, கலைப் பிரிவுக்கு 952, தொழில் பிரிவுக்கு 971 என கட்-ஆப் மதிப்பெண் இருந்தது.

பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர் அரசு ஒதுக்கீட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவாகவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தரமான ஆசிரியர்களால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆங்கில மோகத்தாலும், தரமான கல்வி கிடைக்குமா என்ற சந்தேகத்தாலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,208 அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.

ஆனால், அரசிடம் அனுமதிபெற்று இயங்கிவரும் 4622 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.

300, 400 மாணவர்கள் படித்துவந்த சில தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட்டுவரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்க ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிப் பள்ளிகளிலும் கற்றல் முறைகளை மாற்றவேண்டும். அதோடு தரமான ஆசிரியர்களின் சேவையும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது.

மேலும், நமது அண்டை மாநிலமான புதுச்சேரியைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடங்கி ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கலாம்.

இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதைத் தடுக்க முடியும்.

மேலும், பணக்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துவரும் தரமான கல்வி சாமானிய ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவும், கணினி அறிவும் அவசியம் என்பதால் அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.

Posted in Economy, Finance, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Primary School Education: Nursery kids admission – Tamil Nadu, Children

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

இது விதியல்ல, சதி!

சமீபத்தில் சென்னை முகப்பேரில் நடந்த சம்பவம் ஒன்று நமது சமுதாயத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் ஏன் நம்மீதே நமக்குக் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. 24-வயது அனிதா என்ற பெண்மணி தனது மூன்று வயதுப் பெண் குழந்தையை நர்சரி பள்ளியில் சேர்க்க நன்கொடை கொடுக்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டாள் என்பதுதான் அந்தத் திடுக்கிடும் செய்தி.

அனிதா தற்கொலை செய்து கொண்டு விட்டாள். ஆயிரக்கணக்கான அனிதாக்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்குப் பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டும், வெளியில் சொல்ல முடியாத நரக வேதனையை மனதில் சுமந்து கொண்டும், கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவமானத்தை மென்று விழுங்கிக் கொண்டும் வாழ்கிறார்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல. பள்ளிக்கூடம் திறக்கிறது என்கிறபோதே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பதைபதைக்கும் பெற்றோரும், உற்றார், உறவினர், நட்பு என்று அனைவரிடமும் கைநீட்டிக் கெஞ்சும் பெற்றோரும் ஏராளம் ஏராளம்.

“தம்மிற் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ என்பது வள்ளுவப் பேராசானே எழுதி வைத்த குறள். அக்கம்பக்கத்துப் பெண்டிரும், உற்றார் உறவினரும் தத்தம் குழந்தைகளைப் பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு அனுப்பும்போது, தங்களது குழந்தைகளுக்கும் அந்தக் கல்வி தரப்பட வேண்டும் என்று எந்தவொரு பெற்றோரும் விழைவது இயல்பு. அப்படித் தர முடியாத நிலையில், விரக்தியும் வேதனையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான்.

கிராமப்புறங்களிலிருந்து படித்துப் பட்டம் பெற்றுத் தங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்ட கையோடு, தத்தம் குழந்தைகளை மிகப்பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க வைக்க, தங்களுக்கு இயலாமல் போன கனவுகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பலர் துடிக்கிறார்கள். அதற்காக எந்த விலையையும் கொடுக்க அவர்கள் தயாராகிறார்கள் என்பதைத்தான் மேலே கூறிய செய்தி உறுதிப்படுத்துகிறது.

சமச்சீர் கல்வி, உயர்கல்வி, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் என்றெல்லாம் பேசுகிறோமே தவிர, இந்தத் தனியார் பள்ளிகளின் கட்டணத்தையும், நன்கொடையையும் முறைப்படுத்த நமது அரசு ஏன் முன்வருவதில்லை என்பது புதிராகவே இருக்கிறது. காளான்கள் போலத் தனியார் பள்ளிகள் ஆங்காங்கே முளைக்கின்றன. இந்தப் பள்ளிகள் நன்கொடை வசூலித்துத் தங்களது கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றன. கேள்வி கேட்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், இது தனியார் முயற்சி என்றும் கூறுகிறார்கள். நாமும் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கிறோம்.

தனியார் பள்ளிகளை விடுங்கள். அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் அரசின் உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளில் அதிகாரபூர்வமற்ற வகையில் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா நடைபெறுகிறது? இத்தனைக்கும் தமிழக அரசின் 1972ஆம் ஆண்டு சட்டப்படி இந்த நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தடுக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள், இன்னொருபுறம் பள்ளிக் கல்வியில் தனியார் தலையீட்டை அதிகரித்து சமூக ஏற்றத் தாழ்வு என்கிற நஞ்சைப் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கின்றனர். பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்கும் தனியார் பள்ளிகள் ஒருபுறம், ஏழைகள் மட்டுமே படிக்கும் அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துப் பள்ளிகளும், அரசு உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளும் மறுபுறம்.

பசி, வறுமை, ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாமல் வளரும் சமுதாயம் ஒருபுறம். கல்வியில்கூட வறுமையே கதி என்கிற விதியை வரித்துக் கொண்ட குழந்தைகள் மறுபுறம். இட ஒதுக்கீட்டால் ஏற்படும் சமூகநீதிகூட பணக்காரப் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கைகொடுக்கும் துர்பாக்கிய நிலை. ஏழையாகப் பிறந்த குற்றத்திற்காக அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையைப் பெற்ற குற்றத்திற்காக அந்தப் பெற்றோரும் இதையெல்லாம் விதியென்று கருதி வாளாவிருப்பதுதான் சமுதாய நீதியா?

மேலே எழுப்பிய கேள்விகளைப் பெருந்தலைவர் என்று அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் கு. காமராஜ் உணர்ந்திருந்தார். அதனால்தான் கட்டாயக் கல்வி என்கிற பெயரில் அனைவருக்கும் கல்வி அளித்தது மட்டுமல்லாமல் பள்ளிக் கல்வியை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தனியார் பள்ளிகளும் அரசின் சட்ட மற்றும் பாடத்திட்டங்களுக்கு உள்பட வைத்தார். தமிழகத்தில் சாதி பேதம் மறைந்து சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் குறைந்ததற்குக் காமராஜின் கல்விக் கொள்கைதான் தலையாய காரணம்.

பள்ளிக் கல்வியை தனியாரிடமிருந்து அகற்றி அரசே ஏற்று நடத்துவது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வு. அதைச் செய்யாத வரையில் சமூக நீதியும் சமச்சீர் கல்வியும், அனைவருக்கும் கல்வியும் உதட்டளவு உபந்நியாசமாகத்தான் தொடரும்!

Posted in Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Viduthalai Editorials: The skimming of the creamy layer – Complains against stringent parameters

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

கிரீமிலேயரா?

உச்சநீதிமன்றம் நேற்று (10.4.2008) அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படாத பொருளாதார அளவு கோலைத் திணித்ததுமூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒரு இடியைப் போட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதா இல்லையா? என்று தீர்மானிப்பதுதான் நீதிபதிகளின் பணியே தவிர, அரசமைப்புச் சட்டத்தின் எல் லைக்கு வெளியே குதித்து, தம் மனப்போக்கில் ஆணைகளைப் பிறப்பிப்பது மிகவும் ஆபத்தானதாகும். இது வேலியே பயிரை மேயும் செயலாகும்.

இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் தனித்தனியே அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அளவுகோல் என்று வரும்பொழுது இரு தரப்பினருக்கும் ஒன்றுபோலவே அமையக்கூடியது.
ஆனால், இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு அளவு கோலும், பிற்படுத்தப்பட்டோருக்கு இன்னொரு அளவுகோலும் வைத்திருப்பது அசல் பிரித்தாளும் தன்மையுடையதாகும்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள கிரீமிலேயர் என்ற வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது – மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு நியாயம்போல இடமாறு தோற்றப் பிழையாகத் தோன்றலாம்.

ஆண்டாண்டுகாலமாகக் கல்வியையும், உத்தியோக வாய்ப்புகளையும் தங்கள் வசமே வைத்துக்கொண்டுள்ள ஆதிக்க ஜாதியினருடன் எதிர்த்துப் போட்டியிடக் கூடிய பகுதியினரை கிரீமிலேயர் என்று கூறி வெளியே தள்ளி விடுவதன்மூலம் ஏற்கெனவே அத்துறைகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர்களுக்குப் பேருதவி செய்ததாக ஆகாதா என்பதை மெத்த படித்த நீதிபதிகள் சிந்திக்காமல் போனது வருந்தத்தக்கதே!

அவர்கள் சொல்லும் அந்த விவாதத்தையே எடுத்துக்கொள் வோம். மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் முதலிய ஆகிய நிறுவனங் களில் சேர்ந்து படிக்க ஆகும் செலவு என்ன?

எடுத்துக்காட்டாக அகமதாபாத் அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்கும் ஒரு மாணவனுக்கு ஆகக்கூடிய செலவு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழை, எளிய மக்களுக்காகத்தான் இந்தக் கிரீமிலேயர் நீக்கம் என்பது உண்மையானால், பிற் படுத்தப்பட்ட மக்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்க முடியுமா? என்ற பொது அறிவு கேள்விக்கு நீதிபதி கள் தரப்பில் என்ன நியாயமான பதிலை வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பொருளாதார அளவுகோலைக் கொண்டே பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்களையும் முட்டித்தள்ளி, பொருளாதாரத்தில் ஏழை, எளிய பகுதியைச் சேர்ந்தவர்களையும் உள்ளே புக முடியாமல் செய்த – ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்திய ராஜதந்திரத்தை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.

மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியாகிய பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான ஆணை யினை சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிறப்பித்தார். அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் (ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட ஆயம்) கிரீமி லேயர் என்ற பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து திணித்தது. அதன் விளைவு என்ன தெரியுமா?

மத்திய அரசுத் துறையில் 12.5 விழுக்காடு அளவுக்கு இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை பத்து ஆண்டுகளில் 5.3 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.

இந்த அனுபவத்துக்குப் பிறகும்கூட, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயர்களை வெளியேற்றுவது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமுண்டோ?

பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அரசமைப்புச் சட்டப்படி இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு என்ற வகையில், உச்சநீதிமன் றம் நடந்துகொண்டது என்பதிலே ஒரு வகையில் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு வகையிலே அதனைத் தட்டிப் பறிப்பது என்பது மகிழ்ச்சிக்குரியதல்ல என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்தின் அடிப்படையில், இந்தியா முழுமையும் உள்ள சமூகநீதிச் சக்திகள் அணிதிரண்டு போராடுவது அவசியமாகும்.

சமூகநீதிக்காக இன்னும் எத்தனை எத்தனைக் களங் களைச் சந்திக்க வேண்டுமோ தெரியவில்லை. என்றாலும், போராடுவோம் – வெற்றி பெறுவோம் – வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!

இடைநிலையில் மட்டும் ஏன் கிரீமிலேயர்?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் கிரீமிலேயர் என்பதை வலியுறுத்தும் உச்ச நீதிமன்றம் இதை ஏன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் வலியுறுத்த வேண்டும்?

மேலே உள்ள, திறந்த போட்டியில் பங்கேற்கும் முன்னேறிய ஜாதியினருக்கும் (Forward Communities)பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அடுத்துள்ள S.C., S.T சமுதாயப் பிரிவினருக்கும் வைக்கப்படாத கிரீமிலேயர் – இடையில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மட்டும் வைக்கப்படுவது எவ்வகையில் நீதி, நியாயம், நேர்மை?

இக்கேள்வியின் அடிப்படை, அவர்களுக்கும் கொண்டு வரப்படவேண்டும் என்பது அல்ல; மாறாக, அவர்களுக்கு வைக்கப்படாதது போல் இடைத் தட்டாக உள்ள பிற்படுத்தப் பட்டவர் களுக்கும் அதை ரத்து செய்ய வேண்டும் என்பதற் காகவே!

வருமானம் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களால் தங்கள் பிள்ளைகளை அய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் படிக்க வைக்க இயலுமா?


அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்திலேயே நிராகரிக்கப்பட்டது பொருளாதார அளவுகோல்

1. இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது அரசியல் சட்டத் திருத்தமே, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் ஏற்பட்ட கிளர்ச்சியின் விளைவாக வந்தது என்பது அன்றைய பிரத மர் நேரு அவர்களால் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்யப்பட் டுள்ளது!

1951 இல் நிறைவேறிய அந்த முதலாவது அரசியல் சட்டத் திருத் தத்தின்மூலம் 15(4) என்ற புதுப்பிரிவு இணைக்கப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காட்டும் வகையில், “சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்” (Socially and Educationally) என்ற சொற்றொடர்களைப் போட்டு திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது சட்ட அமைச்சர், டாக்டர் அம்பேத்கர், பிரதமர் நேரு முதலியோர் அங்கம் வகித்தனர்.

(பழைய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைந்த அவை அது. முதலாவது பொதுத் தேர்தல் 1952 இல் தான் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்).

Founding Fathers of Constitution அரசியல் சட்டத்தை உருவாக் கிய கர்த்தாக்களையே கொண்டது அந்த அவை என்பது உச்சநீதி மன்றம் போன்றவைகளால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

நேருவும் – அம்பேத்கரும் ஏற்கவில்லை

அன்று சிலர், பொருளாதார ரீதியாக “Economically” என்ற சொற்றொடரும் இடம்பெறுவது அவசியம் என்று சில திருத்தங் களைத் தந்தனர். அதை சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரோ, பிரதமர் நேருவோ ஏற்கவில்லை.


இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல!

2. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; சமூக நீதிக்கான வாய்ப்பினை காலங்காலமாக மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஓர் ஏற்பாடு என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

நரசிம்மராவ் அரசு உயர்ஜாதியினரில் 10 சதவிகிதம் ஏழை களுக்கு அளித்த இட ஒதுக்கீட்டினை உச்சநீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்தது இந்த அடிப்படையில்தான்!

3. இதைவிட முக்கியமான ஒரு கருத்து, பிற்படுத்தப்பட்டவர் களுக்கு மத்தியக் கல்வி நிலையங்களில் கதவே இதுவரை திறக்கப்படவில்லை; இப்போதுதான் திறக்கப்படவிருக்கிறது. அதற் குள்ளே, ஏதோ 27 சதவிகிதத்தினை உயர் வருமான வசதி படைத் தோர் அபகரித்துவிட்டனர் என்ற கூச்சலுக்கு அடிப்படை உண்டா?

பந்திக்கு உட்கார வைப்பதற்கு முன்பே, இதை மற்றவர்கள் சாப்பிட்டு விட்டனர்; எனவே, இதைத் தரம் பிரிக்க வேண்டும் என்று கூறுவது நியாயமா? தேவையா? மோசடி அல்லவா?


‘கிரீமிலேயர்’ அளவுகோலுக்கு உச்சநீதிமன்றம் வைத்திருக்கும் ஆதாரம் என்ன?

உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு வரவேற்கத் தக்கதே! இடஒதுக்கீடு என்பதே அரசியலமைப்புக் சட்டத்துக்கு விரோதம் என்பதுபோல உருவாக்கப்பட்ட கருத்து இந்தத் தீர்ப்பு மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இது வரவேற்கத்தக்க தீர்ப்பேதான்.

கிரீமிலேயர் என்ற ஒன்றைப் புதிதாகக் கொண்டு வந்து திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கமே தகர்க்கப்பட்டுள்ளது. மண்டல் குழு பற்றி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட தீர்ப்பில் திணிக்கப் பட்ட ஒன்றாகும் இந்தக் கிரீமிலேயர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதியிலும் காணப்படாதது இது. பொருளாதார அளவுகோல் என்பது 1951-இல் நடைபெற்ற விவாதத்திலேயே நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, பொருளாதார அளவுகோல் பற்றி விவாதிக்கப் பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு, ஏற்காமல் தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்றைக் கொண்டு வந்து உச்சநீதிமன்றம் திணிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகும்.

பொருளாதார அளவுகோல் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறக் கூடியது. இந்த ஆண்டு வருமானம் அடுத்த ஆண்டு இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஒரு குடும்பத்துக்குள்ளேயே ஒரு வீட்டுக்குள்ளேயேகூட ஒருவர் பிற்படுத்தப்பட்டவராகவும் இன்னொருவர் அது அல்லாதவராகவும் ஆக்கப்படக் கூடிய ஒரு நிலைமையை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் என்பதில் நிரந்தர வருமானக்காரர்கள் உண்டு – அவர்கள் அலுவலர்கள்; விவசாயத் தொழிலில் ஈடுபடக் கூடியவர்களை நிரந்தர வருமானக்காரர்களின் பட்டியலில் சேர்க்க முடியாது. இயற்கைத் தொல்லைகளால் பாதிக்கப்படக் கூடியது விவசாயத் தொழில்; இன்னும் சொல்லப் போனால் இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமும் அல்ல. இந்தக் கருத்து மண்டல் குழுவின் அறிக்கையிலே தெளிவுபடுத் தபட்டுள்ளது.

ஏழையாக இருப்பவர்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்யலாமே தவிர கல்வியில் கொண்டு வந்து அதனைத் திணிக்கக் கூடாது.
பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் வசதி வாய்ப்புள்ளவர்கள் எல்லாம் கல்வியில் முன்னேறியுள்ளனர் என்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் ஆதாரமோ புள்ளி விவரமோ இருக்கிறதா? எந்த அடிப்படையில் கிரிமீலேயரை வெளியேற்ற வேணடும் என்று கூறுகிறார்கள்?

முதன் முதலாக மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இப்பொழுதுதான் பிற்படுத்தப்பட்டோர் நுழைகிறார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் கல்வியில் வளர்ந்து விட்டார்கள் என்று அவர்களில் ஒரு பிரிவினரை வெளியேற்றுவது நியாயமாக இருக்க முடியுமா?
வாய்ப்பைக் கொடுத்து விட்டு அதற்குப் பிறகு 5 ஆண்டு கழித்தோ, பத்தாண்டு கழித்தோ ஆய்வு செய்யலாமே – 20 ஆண்டுகள் கழித்து பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றுதான் மண்டல் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பந்தியிலேயே உட்காரவில்லை; அதற்குள்ளாகவே அவர்கள் தின்று தீர்த்து விட்டனர் என்று நீதிமன்றம் கூறுலாமா? இதில் இன்னொரு கருத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது – என்று புகார் செய்ய வேண்டியவர்கள் யார்? பிற்படுத்தப்பட்டோரில் ஏழைகளாக இருக்கக் கூடியவர்கள்தானே! அவ்வாறு யாரும் வழக்குத் தொடுக்கவில்லையே! உயர்ஜாதிகாரர்கள்தானே வழக்குத் தொடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் இன்னொரு ஆபத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர தகுதியானவர்கள் பிற்படுத்தப்பட்டோரிலிருந்து கிடைக்கவில்லையானால் அந்த இடங்களை திறந்த போட்டிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுவது – யாருக்கு லாபம்? உயர் ஜாதிக்காரர்களுக்குத் தானே இப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்குகிறது?

பிற்படுத்தப்பட்டோர் பட்ட மேற்படிப்புக்குச் செல்லக் கூடாதா
பட்ட மேல் படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என்று ஒரு சில நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது தீர்ப்பா? கருத்தா? கட்டாயமா? என்பவை தெளிவாக் கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் பட்ட மேற் படிப்புக்கு செல்லக் கூடாதா? இது சமூகநீதியின் அடிப் படையைத் தகர்க்கக் கூடியதாகும்.

– செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி (சென்னை 12.4.2008)


இடஒதுக்கீடு வசதி படைத்தவர்கள் யார்?

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிற்படுத்தப் பட்டவர்களில் வசதி படைத்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.
மண்டல் ஆணைய வழக்கில் கடந்த 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்கள் பிரிவு முதன் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டது.

அரசியல் சட்ட அதிகார பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய பொதுத் தோர்வாணைய உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் ஏ, பி அல்லது குரூப் 1, குரூப் 2 அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவன அதிகாரி களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டு இருந்தது.

ராணுவம் மற்றும் துணை ராணுவப் பணியில் சுலோனியல் அல்லது அதற்கு மேல் பதவி வகிக்கும் அதிகாரிகளின் குழந்தைகளும் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அத்துடன் வழக்கறிஞர்கள், சார்ட்டர்டு அக்கவுண்டண்ட், மருத்துவர்க,ள நிதி மற்றும் நிர்வாக ஆலோசகர்கள், பல்மருத்துவர்கள், கட்டடக் கலைஞர்கள், கணினி பொறியாளர்கள், வசனகர்த்தா, விளையாட்டு வீரர்கள், விளையாட்டுத் துறை பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் ஊடக அதிகாரிகள், வசதி படைத்த பிரிவினர் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது.

பொதுவாக ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது. விவசாயத்தில் ஈடுபட்டவர்களில், நில உச்சவரம்பு சட்டப்படி ஒருவர் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ள பாசன வசதியுள்ள நிலத்தில் 85 விழுக்காடும் அதற்கு மேலும் உள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வசதி படைத்தவர்கள் பட்டியல் பற்றி மத்திய அமைச்சரவை இறுதி முடிவெடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | 2 Comments »

Reservations: Supreme Court upholds 27 per cent quota for OBCs – In pursuit of inclusive education

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பின்படி 64 மத்திய அரசின் உயர்கல்வி நிலையங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படவிருக்கிறது.

  1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
  2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்
  3. தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் (20)
  4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு,
  5. இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (சுரங்கங்கள்)
  6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி மற்றும் ஆராய்ச்சி
  7. ஸ்கூல் ஆஃப் பிளானிங் மற்றும் ஆர்கிடெக்சர்
  8. அய்.அய்.அய்.டி.,கள்

முதலிய பல்வேறு நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.
சென்ற ஆண்டு இந்த நிலையங்களில் 1,24,377 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இடைக்காலத் தடை இல்லாமல் இருந்திருந்தால், பிற்படுத்தப்பட்டவர்கள் 33,581 பேர்கள் சேர்ந்து படித்துக் கொண்டிருக்க முடியும். இதே எண்ணிக்கை மாணவர்கள் இந்த ஆண்டு படிக்கக் கூடிய வாய்ப்பு இந்தத் தீர்ப்பினால் கிடைத்துள்ளது.


இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி
அய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும்

27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அய்.அய்..டி., அய்.அய்.எம். உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை அய்அய்..டி.யில் மட்டும் 150 பேர் சேரலாம். மண்டல் கமிஷன் பரிந் துரைப்படி மத்திய அரசு பணியிலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு பணியில் இந்த 27 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், அய்.அய்.டி., அய்.அய்..எம். உள் ளிட்ட உயர்கல்வி நிறுவனங் களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இதை அமல்படுத்து வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றம் ஏராளமான வழக் குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு 27 சதவீத இடஒதுக் கீட்டை அமல்படுத்த உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகை யில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் இந்த கல்வி ஆண்டில் 27 சதவீத ஒதுக் கீட்டை நடைமுறைப்படுத்தும் சூழநிலை உருவாகி இருக் கிறது.

இந்தியாவில் சென்னை, மும்பை, டில்லி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, கவுஹாத்தி ஆகிய 7 இடங்களில் அய்அய்.டி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.டெக். படிப் பில் சுமார் 4,000 இடங்கள் உள்ளன. ஜெ.இ.இ. என்று அழைக்கப்படும் சிறப்பு நுழை வுத்தேர்வு மூலம் ஐ.ஐ.டி.க்கு மாணவர்கள் சேர்க்கப்படு கிறார்கள்.

அய்.அய்..யைப் போல இந்தியாவில் அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, கோழிக்கோடு, இந்தூர், லக்னோ ஆகிய 6 இடங்களில் ஐ.ஐ.எம். மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி களில் 1,500 எம்.பி.ஏ. இடங்கள் இருக்கின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை கேட் என்ற பொது நுழைவுத்தேர்வு அடிப் படையில் நடைபெறுகிறது.

27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன் றத்தை அடுத்து அய்அய்.டி., அய்.அய்..களில் பிற்படுத்தப் பட வகுப்பினருக்கு சுமார் 1500 சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அய்.அய்..டி கல்வி நிறுவனங்களில் 1080 இடங் களும், அய்.அய்.எம்.களில் 405 இடங்களும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு கிடைக்கும். சென்னை அய்.அய்.டி.யில் மொத்தம் 550 சீட்டுகள் உள் ளன. எனவே, இங்கு மட்டும் 150 ஓ.பி.சி. மாணவர்கள் சேர முடியும்.

அய்.அய்.டி. கல்வி நிறுவனங்களிலும், பெங்க ளூரில் உள்ள அய்.அய்.எஸ்சி. (இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்) எம்.எஸ்சி., எம்.டெக். உள்ளிட்ட முதுநிலை படிப்பு களும் வழங்கப்படுகின்றன. இவற்றிலும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்.

அய்.அய்.டி.,யில் ஆதி திராவிடர்களுக்கு 15 சதவீத மும், பழங்குடியினருக்கு 7 சதவீதமும், உடல் ஊனமுற் றோருக்கு 3 சதவீத இடஒதுக் கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலிருந்து பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக் கும் இடஒதுக்கீடு வழங்குவ தால் இந்த வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அய்.அய்.டி. கல்வி நிறுவனங்களில் சேருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »