Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘MP’

Kalki Therthal Editorial: India Parliament Elections 2009

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 15, 2009

அச்சுறுத்தும் இரட்டை அபாயம்! – கல்கி தலையங்கம்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுள் ஒன்றுகூட, நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை களைக் குறித்துப் பேசவில்லை. முதல் பிரச்னை பொருளாதார வளர்ச்சியில் அபாயகரமான பின்னடைவு. இரண்டாவது பிரச்னை, அண்டை நாடான பாகிஸ்தானில் வளர்ந்து வரும் தலிபான் ஆதிக்கம்.

உலகம் முழுவதுமே பொருளாதார நலிவைச் சந்தித்து வருவதால் அது குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என நம் அரசியல் கட்சிகள் முடிவு செய்துவிட்டன போலும்! அதனால்தான் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பற்றியோ வேலை வாய்ப்பு பெருக்கத்துக்கான திட்டங்கள் குறித்தோ பேசுவதற்குப் பதிலாக, மேலும் பல இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் பற்றி அறிக்கைகள் வருகின்றன.

கடந்த பிப்ரவாி மாதத்தில் மட்டுமே ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 22 சதவிகிதம் குறைந்துள்ளன. ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் அடைந்து வரும் நஷ்டத்தால் இதுவரை பத்து மில்லியன் நபர்கள் வேலை இழந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை மேலும் துாிதமாக அதிகாிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதமாகக் குறையும் என்றும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதல பாதாளத்துக்குச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இவை யாவுமே, சராசாி இந்தியனின் வாழ்க்கை, சொல்ல முடியாத அளவுக்குக் கடினமாகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள். ஆனால் இவை பற்றியெல்லாம் ஆலோசிக்க நமது அரசியல்வாதிகளுக்கு ஏது நேரம்? அவர்கள் தங்களுடைய சகிப்புத்தன்மையற்ற பேச்சிலும் நடத்தையிலும் தலிபானுடன் போட்டி போடத் தயாராகிவிட்டார்கள்!

தலிபான், பாகிஸ்தானில் காலூன்றியிருப்பதால் நாம் எதிர்கொள்ளப் போகும் அபாயம் என்னவென்று நம் அரசியல்வாதிகள் சிந்திக்காவிட்டாலும் நாம் விழிப்புற்று எச்சாிக்கை கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் தலிபான் கை ஓங்கினாலும் இந்தியாவுக்கு ஆபத்து (ஏற்கெனவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதியில் அவர்கள் ஊடுருவி விட்டார்கள்); அந்நாட்டில் தலிபான் ஒடுக்கப்பட்டாலும் நமக்கு ஆபத்து – அங்கிருந்து விரட்டப்படுவோர் அண்டை நாடான இந்தியாவுக்குத்தான் வேகமாக வந்து சேர்வர்.

சகிப்புத்தன்மைக்கே இடங்கொடாத, அடிப்படைவாதமும் பிற்போக்குச் சிந்தனையும் வன்முறையும் காட்டுமிராண்டிச் சட்டங்களும் கொண்ட தலிபான், இந்த நாட்டின் அழகான மதச்சார்பின்மை கவசத்தை நொடியில் தகர்த்துவிடும். இங்கு தழைக்கும் பலமத கலாசாரத்தை நாசமாக்கிவிடும்.

ஒரு பக்கம் பொருளாதாரச் சீர்குலைவு அச்சுறுத்தல்; இன்னொரு பக்கம் இந்தத் தலிபான் அபாயம். இதை உணர்வதற்கு, பாிெய தீர்கதாிசனமெல்லாம் தேவையில்லை; சராசாி கவனமும் எச்சாிக்கை உணர்வும் போதும். ஆனால், நம் அரசியல்வாதிகளிடம் அதைக்கூட இனி எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.

ஒரே தீர்வுதான் உள்ளது: இந்தியாவெங்கிலும் உள்ள மூத்த சான்றோர்கள் ஒன்றுகூடி, நாட்டு நலனில் அக்கறை உள்ள ஐம்பது தனி நபர்களை, அரசியல் ஆதாய நோக்கு இன்றி தேர்தலில் நிறுத்தி, அவர்கள் மூலம் நாட்டுக்கான நல்ல திட்டங்களை எடுத்துரைக்கலாம். அந்த நேர்மையாளர் களுள் 25 பேர் வென்றால்கூட அது இந்திய அரசியலில் திருப்புமுனையாக அமையும். ஊழலில் ஊறிப்போன சுயநல அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சாிக்கையாகவும் விளங்கும்.

Posted in Economy, Govt, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை?

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 7, 2009

கருணாநிதி விளக்கம்

ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுமுகம்

2009-ம் ஆண்டு மே திங்கள் 13-ம் நாள் நடைபெறும் 15-வது நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற 21 வேட்பாளர்களின் பட்டியலை-பரபரப்பு எதுவுமின்றி-பத்திரிகையாளர் சந்திப்பு இன்றி-தட்டச்சு செய்து ஏடுகளுக்கு அனுப்பப்பட்டு-அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. நமது அணியின் தோழமைக் கட்சிகள் சார்பில் மற்ற 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுவதும்- செய்தியாளர்கள் அதனை ஒரு கேள்வியாகக் கேட்பதும்- புது முகங்களும் இருப்பார்கள் என்று பதில் சொல்வதும் வாடிக்கையான ஒன்று. இந்த முறையும் அந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டு, புது முகங்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு அளிக்கப்படும் என்று பதில் கூறியிருந்தேன்.

தேர்தலையொட்டி நான் கூறிய இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதை பட்டியலைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆமாம், 21 பெயர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் 13 பேர் 14-வது நாடாளுமன்றத்தில் இடம் பெறாதவர்கள்- கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 15 பேர்களில் 8 பேர்கள் மட்டுமே தற்போதைய பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். அதாவது பழைய முகம் 8 – புதிய முகம் 13.

வருத்தம் அளிக்கிறது

கடந்த முறை பட்டியலிலே இடம் பெற்றிருந்த ஏழு பேர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப் படவில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தம்தான். இதற்கும் அண்ணா கூறிய உவமையைக் கூற வேண்டுமென்றால்- பீரோ நிறைய ஏராளமான பட்டுப் புடவைகள் இருந்த போதிலும்- இன்று செல்லும் இந்தத் திருமணத்திற்கு இந்தக் கலர் பட்டுப் புடவையை எடுத்துக் கட்டிக்கொள்கிறேன் என்றால், அடுத்து இன்னொரு திருமணத் திற்குச் செல்லும்போது மற்றொரு புடவையை எடுத்துக் கட்டிக்கொள்வேன். இன்று இதனைக்கட்டிக்கொள்வதால் மற்றது எல்லாம் பிடிக்காது என்று அர்த்தமல்ல என்று சொன்னதைப் போல இந்தத் தேர்தலுக்கு இவர்கள் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த முறை உறுப்பினர்களாக இருந்த ஏழு பேர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவில்லை என்று எழுதியதில்- தம்பி ரகுபதி, தம்பி வேங்கடபதி, தங்கை சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கை ராதிகா செல்வி ஆகியோர் அமைச்சர்களாகவே பங்கேற்று திறம்பட செயல்பட்டவர்கள்.

இவர்களில் தங்கை சுப்புலட்சுமி ஜெகதீசன் தேர்தலுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே என்னைச் சந்தித்து- “இந்த முறை குடும்ப சூழ்நிலை காரணமாக நான் போட்டியிடவில்லை, வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம்” என்று கைப்பட கடிதமே எழுதி கொடுத்தபோது-இப்படியே ஒவ்வொருவரும் இருந்தால் என்று ஒரு கணம் நினைத்தேன்.

அமைச்சராக இருந்த தம்பி ரகுபதியின் புதுக்கோட்டை தொகுதியே இந்த முறை காணாமல் போய்- புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியே திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குப் போய்விட்டது. அதோடு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி- தம்பி வேங்கடபதி போட்டியிட்ட கடலூர் நாடாளுமன்றத் தொகுதி- தங்கை ராதிகாசெல்வி கோரிய திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி ஆகிய மூன்றும் தொகுதி உடன்பாட்டின்போது காங்கிரஸ் கட்சிக்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்டது.

பெண்களுக்கு முக்கியத்துவம்

இவர்கள் தவிர கடந்தமுறை நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் தலைவர்- பாட்டாளிகளின் நம்பிக்கை நட்சத்திரம் தம்பி குப்புசாமிக்கு; வயது, உடல் நிலை காரணமாகவும்-ஒரு பெண்ணுக்கு இத்தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக தம்பி கிருஷ்ணசாமிக்கும் – புதியவர் ஒருவருக்கு ராமனாதபுரம் தொகுதியிலே வாய்ப்பு தர வேண்டுமென்பதற்காக; தங்கை பவானி ராஜேந்திரனுக்கும் இம்முறை வாய்ப்பளிக்க முடியாமல் போய் விட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் இப்போது பயன்படுத்தப்படாவிட்டாலும், வருங்காலத்தில் அடுத்தடுத்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இவர்கள் வாய்ப்புக்கு உரியவர்களாவார்கள். குறிப்பாக தம்பி கிருஷ்ணசாமி நேற்று காலையில் என்னை சந்தித்து வாய்ப்பு கேட்டபோது- இந்தமுறை பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க முடியாமல் இருக்கிறது, உன் தொகுதியிலாவது உனக்குப் பதிலாக ஒரு பெண்ணை நிறுத்தலாம் என்று நினைக்கிறேன், யாரை நிறுத்தலாம் என்று நீயே யோசனை கூறு என்று சொன்னவுடன், சரி அண்ணே, அழைத்து வருகிறோம் என்று கூறி அவரும் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சிவாஜியும் சென்று- தற்போது நிறுத்தப்பட்டுள்ள சகோதரி காயத்ரி ஸ்ரீதரனை அழைத்து வந்தார்கள்.

அந்தக் காயத்ரி யார் தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும், பிறகு என்னுடனே சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பழம்பெரும் கழக நண்பர் கிண்டி கோபாலின் பேத்தி என்கிறபோது நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எந்த அளவிற்கு தம்பி கிருஷ்ணசாமி பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் என்பதை எண்ணி நான் எனக்குள்ளேயே பெருமைப்பட்டுக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவரது செயல்பாட்டில் எனக்கோ, கழகத்திற்கோ எந்தவிதமான குறைபாடும் இல்லை. இருந்தாலும் தனக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்பதை அவர் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார்.

தூத்துக்குடி

இது போலவே தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பெரியசாமியின் புதல்வர் போட்டியிட மனு செய்திருந்தார். அந்தத் தொகுதியிலிருந்து வந்திருந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் எல்லாம் அவரைத்தான் பரிந்துரையும் செய்திருந்தார்கள். அதற்குப் பக்கத்து தொகுதியான திருநெல்வேலிக்கு மனு செய்திருந்த சகோதரி ராதிகா செல்விக்கு அந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்குப் பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்ட காரணத்தால்-தூத்துக்குடி தொகுதியிலாவது வாய்ப்பு தரலாமா என்றும் யோசிக்கப்பட்டது. அவரிடமும் அதுபற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

அவர் தனக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பதைவிட, அந்தத் தொகுதியிலே கழகம் வெற்றிபெற வேண்டியது முக்கியம் என்பதை நினைவூட்டினார். பின்னர் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பெரியசாமியை வரவழைத்துப் பேசினேன். அப்போது அவர் அண்ணே, நானோ மாவட்டக் கழகச் செயலாளர், என் பெண்ணோ அமைச்சராக இருக்கிறார், இதிலே என் மகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்றால் ஒரு சிலர் அசூயை கொள்ள நேரிடும் என்று அவரே முன்வந்து கூறியதோடு எழுதியும் கொடுத்தார்.

வாய்ப்பு

பின்னர் நான் அவரிடம் நீயே யோசனை சொல், யாரை நிறுத்தலாம் என்று கேட்டபோது, அவரே ஒருவரை அழைத்து வந்து, இவரை நிறுத்தலாம், வெற்றிக்கனியைக் கொண்டு வருகிறேன் என்று சொன்னதின் பேரில்-தன் குடும்ப நலனைவிட, கழகத்தின் நலனைப் பெரிதாகக் கருதிய அந்தத் தம்பியை வாழ்த்திவிட்டு, அவர் அழைத்து வந்தவரையே அந்தத் தொகுதியிலே வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம்.

அவரைப் போலவே வாய்ப்பு கிடைக்காத மற்றவர்களும் பெருந்தன்மையாக இந்தமுறை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அடுத்தமுறை நிச்சயம் கிடைக்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் 1999-ம் ஆண்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தம்பி ஆதிசங்கருக்கு 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக தம்பி வேங்கடபதிக்கு அந்தத் தொகுதியிலே வாய்ப்பு தரப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார்.

கடந்தமுறை வாய்ப்பு தரப்படவில்லை என்பதற்காக தம்பி ஆதிசங்கர் கோபித்துக் கொண்டு சோர்வுற்றுவிடவில்லை. முறையாக கழகப் பணிகளை ஆர்வமுடன் தொடர்ந்து ஆற்றி வந்தார். இப்போது மீண்டும் ஆதி சங்கருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. எனவே அண்ணா சொன்னதைப் போல மாறி மாறி வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும்.

தாங்க முடியாத வலி

நேர்காணல் பணிக்காக இரண்டு நாட்கள் காலை முதல் இரவு வரை சக்கர நாற்காலியை விட்டு நான் இறங்காமல் உட்கார்ந்திருந்ததை உடன்பிறப்பே, நீ நன்கறிவாய். பேராசிரியர் போன்றவர்கள், நீங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பார்க்கிறோம் என்று சொன்னபோது கூட, நான் கேட்கவில்லை. ஏனென்றால் தகுந்தவர்களை தேர்வுசெய்து வேட்பாளர்களாக உன்முன் கொண்டு வந்து நிறுத்தினால், நீ மக்களிடம் சென்று அவர்களுக்காக வாக்குகளை முறையாகச் சேர்க்க முடியுமென்பதற்காகத் தான் என் சிரமத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அமர்ந்திருந்தேன்.

அப்படி அமர்ந்திருந்ததின் விளைவை நேற்று அதிகாலை 3 மணி அளவில் என்னால் உணர முடிந்தது. ஆமாம், அறுவை சிகிச்சை செய்துகொண்ட இடத்திற்கு கீழே இடுப்பு மற்றும் கால் பகுதியில் கடுமையான வலி. வீட்டாரிடமும், மருத்துவரிடமும் வலி பற்றி கூறினால்- தொடர்ந்து பலமணி நேரம் உட்கார்ந்திருந்ததைக் கூறி; அவர்கள் நம்மைத் தான் கோபிப்பார்கள் என்பதற்காக வலியைப் பொறுத்துக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. வலியையும் பொறுத்துக் கொண்டு-இரண்டு மூன்று தொகுதிகளுக்கு சரியான வேட்பாளரை நிர்ணயிக்க முடியவில்லையே என்பதற்காக அந்த இரவு நேரத்தில் தம்பி துரைமுருகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரையும், சில மாவட்டக் கழகச் செயலாளர்களையும் வரச்செய்து பேசினேன். தொடர்ந்து அதே நேரத்தில்தான் திருவள்ளூர் தொகுதி பற்றி சிந்தித்து, மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சிவாஜியையும், தம்பி கிருஷ்ணசாமியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை நேரில் வரச்செய்து, அந்த தொகுதி பற்றி முடிவெடுத்து அறிவித்தோம்.

பட்டதாரிகள்

கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 21 வேட்பாளர்களில் ஒருவரைத் தவிர அனைவருமே பட்டதாரிகள்- ஒரு சிலர்பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். கழகத் தலைமையின் சார்பில் தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி தொகுதி உடன்பாடு கண்டு-தேர்தல் அறிக்கை வெளியிட்டு-வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்துவிட்டோம். வாக்காளர்களிடம் சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளைப் பட்டியலிட்டு-இத்தகைய சாதனைகள் மேலும் தொடர்ந்திட இந்த அணியினை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டு வெற்றியைத் தேடித்தர வேண்டிய பொறுப்பு கூட்டணிக் கட்சிகளின் முன்னணி தோழர்களுக்கும் இருக்கிறது. அந்தப் பணியிலே அவர்கள் எல்லாம் ஈடுபட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கான உந்து சக்தியை நமது தோழமைக் கட்சிகளான அனைத்துக் கட்சி உடன்பிறப்புகளுக்கும் வழங்க வேண்டிய பொறுப்பு உனக்கு உண்டு என்பதை மறவாதே – தேர்தல் களம் அழைக்கிறது, புறப்படு!

இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Election 2009 caste vote: Tamilnadu MPs forced to find new constituencies after delimitation

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2009

மறுவரையறை தொகுதிகளால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அரசியல்வாதிகள்

தொகுதி மறுவரையறைப்படி உருவாக்கப்பட்டுள்ள புதிய தொகுதிகளால் அரசியல்வாதிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வாக்காளர்களின் எண்ணிக்கை சரிசமமாக இருக்கும் வகையில் சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் மறுவரையறை செய்துள்ளது.

இதனால் இதுவரை இருந்த

  1. செங்கல்பட்டு,
  2. திருப்பத்தூர்,
  3. வந்தவாசி,
  4. திண்டிவனம்,
  5. ராசிபுரம்,
  6. திருச்செங்கோடு,
  7. கோபிசெட்டிபாளையம்,
  8. பழனி,
  9. பெரியகுளம்,
  10. புதுக்கோட்டை,
  11. சிவகாசி,
  12. திருச்செந்தூர்,
  13. நாகர்கோவில்

ஆகிய மக்களவைத் தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. திருவண்ணாமலை,
  4. ஆரணி,
  5. விழுப்புரம்,
  6. கள்ளக்குறிச்சி,
  7. நாமக்கல்,
  8. ஈரோடு,
  9. திருப்பூர்,
  10. தேனி,
  11. விருதுநகர்,
  12. தூத்துக்குடி,
  13. கன்னியாகுமரி

ஆகிய மக்களவைத் தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 7 தனித் தொகுதிகளில்

  1. ஸ்ரீபெரும்புதூர்,
  2. பொள்ளாச்சி,
  3. பெரம்பலூர்,
  4. ராசிபுரம்

ஆகிய தொகுதிகளுக்குப் பதிலாக

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. விழுப்புரம்,
  4. நீலகிரி

ஆகிய தொகுதிகள் புதிதாக தனித் தொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

  1. சிதம்பரம்,
  2. நாகை,
  3. தென்காசி

தொகுதிகள் தொடர்ந்து தனித் தொகுதிகளாகவே நீடிக்கின்றன.
இப்படி பல தொகுதிகள் உருமாறியுள்ளதால் தாங்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற தொகுதிகளில் போட்டியிட முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைப்பதே அரிதாகியுள்ளது.

மத்திய அமைச்சர் ஆ. ராசா வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதி தற்போது பொதுத் தொகுதியாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். நீலகிரி தனித் தொகுதியானதால் அங்கு 5 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். பிரபு வேறு தொகுதி தேட வேண்டிய நிலையில் உள்ளார்.

  • மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்ற கோபிசெட்டிப்பாளையம்,
  • வைகோவுக்கு சாதகமான சிவகாசி,
  • முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் செங்கல்பட்டு,
  • பாஜக தலைவர் சு. திருநாவுக்கரசருக்குச் சாதகமான புதுக்கோட்டை

ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இவர்கள் புதிய தொகுதிகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாமகவுக்கு சாதகமான

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. விழுப்புரம்,
  4. சிதம்பரம்

ஆகிய தொகுதிகள் தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளதால் கூட்டணியில் எந்தத் தொகுதியை கேட்டுப் பெறுவது என்று அக்கட்சி தடுமாற்றத்தில் உள்ளது.
புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிகளால் அரசியல்வாதிகளில் பலர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Posted in Govt, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Attack on UNP Headquarters in Anuradhapura Sri Lanka takes the Life Of Major General Janaka Perera, his Wife & 26 Others – Tamil Tiger rebel commander TMVP Karuna in parliament, JVP going to Court

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 7, 2008

அநுராதபுரத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக்க பெரேரா உட்பட 28 பேர் பலி

இலங்கையின் வடமத்திய மாகாணத் தலைநகராகிய அநுராதபுரத்தில் திங்களன்று காலை இடம்பெற்ற நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா வைபவம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மாகாண மட்டத்திலான முக்கிய அரசியல்வாதிகள் 3 பேர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

வடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய முன்னாள் இராணுவ அதிகாரியாகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவும் அவரது மனைவியாரும், மேலும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக அநுராதபுரம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் உள்ளுர் செய்தியாளராகிய ரஷ்மி மஃறூப் அவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் 84 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்திருக்கின்றார்கள். காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அநுராதபுரம் மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.

ஜானக்க பெரேரா

வடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா அவர்களுக்கான புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்று முடிந்து, முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்தபோது அங்கு அவசர அவசரமாகக் கூட்டத்தினுட்புகுந்து வந்துசேர்ந்த தற்கொலைக் கொலையாளியே இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


இலங்கை தமிழர்கள் பாதிப்புகுள்ளாவது குறித்து இந்திய அரசு கரிசனை

இலங்கையின் வடபகுதியில் இடம்பெறும் தற்போதைய மோதல்களில் தமிழ் பொதுமக்கள் பலியாவது அதிகரித்துவருவதாக விபரித்து, அது தொடர்பாக புதுதில்லிக்கான இலங்கை துணைத் தூதரை அழைத்து, அவை தொடர்பிலான தமது கரிசனைகளை இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கும், இலங்கை இராஜதந்திரியான பாலித கனேகொடவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பில், இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை தமிழ் மக்களிடையே அதிகரித்துவரும் பாதுகாப்பற்ற உணர்வுகளைப் போக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று கூறுகின்றது.

வடக்கில் தற்போது நடக்கும் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இரு நாடுகளையும் பிரிக்கும் பாக்குநீரிணை பகுதியில், இலங்கை கடற்படையினர் என்று கூறப்படுபவர்களால், இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்வதாகவும் இந்திய அதிகாரிகள் கடுமையான கவலையை வெளியிட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து தெற்காசிய அரசியல் விவகார ஆய்வாளரான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் வழங்கும் ஆய்வுக் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.

பிரதமருடன் தமிழக முதல்வர் தொலைபேசி உரையாடல்

முன்னதாக, தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைத் தமிழர் பாதிக்கப்பட்டுவருவது குறித்து இந்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்து தனது கவலையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டுமென்று கோரி தமிழக மக்கள் இந்தியப் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டுமென கருணாநிதி ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஞாயிறன்றைய அறிக்கையிலும் திங்களன்றைய தொலைபேசி உரையாடலிலும் இலங்கையில் நடப்பதை ‘இனப்படுகொலை’ என்று கருணாநிதி வருணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்

கருணா

கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான விநாயக மூர்த்தி முரளிதரன், நாட்டை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்திருந்த ஜே.வி.பி. என்றழைக்கப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததால் உருவான வெற்றிடத்திற்கே தற்போது கருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருணா தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் மீண்டும் ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவரின் படுகொலையை அடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த விரிவுரைகள் திங்களன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இரவு பல்லைக்கழக வளாகத்திற்குள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மறுஅறிவித்தல் வரை அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இப்பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கபட்டிருந்த சகல சிங்கள மாணவர்களும் தற்காலிகமாக வேறு பல்கலைக்கழகங்களில் இடம்பெயர்ந்த மாணவர்களாக அனுமதி பெற்றுள்ளதாக உபவேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் தமிழோசைக்கு தெரிவித்தார்.

திங்களன்று பல்கலைகழகத்திற்கு சமூகமளித்திருந்த மாணவர்கள் பொலிசாரின் சோதனையோடு அடையாள அட்டை சமர்ப்பித்து பதிவுசெய்த பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் திங்களன்று மாணவர் வரவு குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in DMK, Law, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Thuglaq – Cover Image on Congress Govt’s Parliamentary Practices

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2008

Thanks: http://aruvaibaskar.blogspot.com/2008/07/blog-post_23.html

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

JVP call for the island wide strike in Sri Lanka; Opposition MP Joseph Michael Perera blames army for attacks on media

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2008

09 ஜுலை, 2008

இலங்கையில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஜே வி பி அழைப்பு

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவிற்கு முகம் கொடுக்கும் நோக்கில் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களிற்கு 5000 ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும், தோட்டத்துறை ஊழியர்களுக்கு நாளாந்த சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும் என்பனபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி வியாழக்கிழமை நாடுதழுவிய ரீதியில் பொதுவேலை நிறுத்தப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த ஏற்பாடுகள் குறித்து கருத்துவெளியிட்டுள்ள ஜே.வி.பி யின் தொழிற்சங்கங்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.டி.லால்காந்த, அரச துறையிலுள்ள சுமார் 90 சதவீதமான தொழிற்சங்கங்கள் நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுவேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள சம்மதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இது ஒரு அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் மட்டுமே எனக்கூறியுள்ள லால்காந்த இந்தப் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்காது போனால் இவ்வாறான போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பின் 14வது சரத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தினைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரசு பொய்யான பிரச்சாரங்களிலும், எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் ஜே.வி.பி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஜே.வி.பியின் இந்த பொதுவேலை நிறுத்த அழைப்பிற்கு பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கம் இதனை முறியடிக்கும்படி தனது உறுப்பினர்களிற்கு இன்று அழைப்பு விடுத்திருக்கிறது.


செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு இலங்கை இராணுவத் தளபதியே காரணம் என்று குற்றச்சாட்டு

இலங்கை இராணுவத் தளபதி ஃபொன்சேகா
இராணுவத் தளபதி லெப். ஜென். சரத் ஃபொன்சேகா

இலங்கையில் செய்தியாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு அந்நாட்டின் மிக மூத்த இராணுவ அதிகாரியே காரணம் என்று முக்கிய எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான ஜோசப் மைக்கேல் பெரேரா, இவ்வாறு செய்தியாளர்கள் மீதான தாக்குதலை நடத்துவதற்காகவே ஒரு சிறப்பு குழு இராணுவத் தளபதி லெப்டிண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக கூறியுள்ளார்.

ஆனால் இராணுவப் பேச்சாளர் இதை மறுத்துள்ளார்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு முழு யுத்தத்தை அரசு நடத்தி வரும் நிலையில், ஊடகச் சுதந்திரம் குறித்து மனித உரிமை அமைப்புகளின் அதிகரித்து வரும் கவலைகளுக்கு இடையே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி மீதான இந்தக் குற்றச்சாட்டை எதிர் கட்சி உறுப்பினரான ஜோசப் மைக்கேல் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவரது இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார இது குறித்த ஆதாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வசம் இருக்குமாயின் அவர் போலீஸிடம் அதை எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த வாரம், எந்த ஒரு நிறுவனத்தையும் சாராமல், ராணுவ விவகாரங்கள் குறித்து எழுதி வரும் ஒரு தனிப்பட்ட செய்தியாளரும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியும் ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தப்போது மறைந்திருந்தவர்களால் உருட்டுக் கட்டைகளினால் தாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் செய்தியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடக்கம் இதுவரை ஊடகத்துறையைச் சேர்ந்த 12 பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போர் செய்திகளை வெளியிடுபவர்கள் துரோகிகள்

இலங்கையின் வடக்கே கடும் போர் நடைபெற்றுவருகிறது
இலங்கையின் வடக்கே கடும் போர் இடம்பெறுகிறது

இதனிடையே நாட்டில் நடைபெற்று வரும் போர் தொடர்பான செய்திகளை, ஒருதலைப் பட்சமாகவும் பொறுப்பற்ற வகையிலும் வெளியிடுவதாக தாம் கருதுவதற்கு எதிராக தமது கடுமையான ஆட்சேபணைகளை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

போரின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்படும் இழப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக இராணுவம் வெளியிடும் தகவல்கள் குறித்த கேள்விகளை எழுப்புவது, இராணுவத்தில் வழங்கப்படும் பதவி உயர்வுகளை வினவுவது, இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டுவது போன்ற செய்திகளை வெளியிடுபவர்களை துரோகிகள் என்றும் விரோதிகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் முத்திரை குத்தியுள்ளது.


யாழிலிருந்து கொழும்பு செல்ல புதிய கட்டுப்பாடுகள்

யாழ் பஸ் நிலையம்
யாழ் பஸ் நிலையம்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ் பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்குப் படையினரால் வழங்கப்படும் பிரயாண அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றம் காரணமாக பிரயாண அனுமதி பெறுவதற்கு சுமார் 2 வாரம் காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு செல்லும் ஒருவர் தனது பிரயாணத்திற்கான காரணத்தை ஆதாரபூர்வமாகத் தெளிவுபடுத்தும் அதேவேளை, அங்கு தங்கியிருக்கப் போகும் உறவினர் அல்லது நண்பர்கள், தெரிந்தவர்களின் முழு விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பதுடன், இந்த விபரங்கள் பொலிசாரின் ஊடாக அங்கு சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்குக் கிடைத்த பின்பே பிரயாண அனுமதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் பாக்கி

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பனம் இல்லை
கிரிக்கெட் வாரியத்திடம் பணம் இல்லை?

சமீபத்தில் ஆசியக் கோப்பையில் வெற்றிவாகை சூடிய, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முந்தைய ஒப்பந்தம் பிப்ரவரிமாதத்தில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதாலும், அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றிருந்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும் இந்த பிரச்சினை குறித்து வியாழக்கிழமையன்று விவாதிக்கவுள்ளனர்.


07 ஜுலை, 2008

மன்னார் படுகை எண்ணெய் அகழ்வாய்வு: இலங்கை அரசுடன் இந்திய நிறுவனம் உடன்படிக்கை

மன்னாய் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை அகழ்வாய்வு செய்யும் அனுமதிக்கான பெட்ரோலிய வள உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கமும், கெயின் இந்தியா நிறுவனமும் திங்களன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் மூத்த அமைச்சர்மார் முன்னிலையில் கைச்சாத்திட்டுக்கொண்டன.

அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட வைபவமொன்றில் இலங்கை அரசின் சார்பில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியும், கெயின் இந்தியா நிறுவனத்தின் சார்பின் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிதி அலுவலருமான இந்திரஜித் பனர்ஜியும் கைச்சாத்திட்டனர்.

பின்னர் இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய இந்திரஜித் பனர்ஜி, இலங்கைக் கடற்பரப்பில் மன்னார் படுகை அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவில்லை என்பதால் அந்த வகையில் அது ஒரு முன்னிலை பெட்ரோலிய வலயத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

அத்துடன் ஆசியப் பிராந்தியத்தில் எண்ணெய் அகழ்வாய்வு வேலையில் அனுபவம்மிக்க தமது நிறுவனம், இங்கே வர்த்தகப்படுத்தக்கூடிய அளவிற்கு ஹைட்ரோகாபன் இருக்கிறதா என்பதனை உறுதிப்படுத்த பல மில்லியன் டாலர்கள்களை முதலீடுசெய்து, சிறந்த தொழில்நுட்பங்கள், மற்றும் தொழில்துறை நடைமுறைகளை பிரயோகிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

இலங்கையின் வடக்கே கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த ஓமந்தை சோதனைச் சாவடி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திங்களன்று பிற்பகல் திறக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சோதனைச் சாவடியில் உள்ள தமது அலுவலகத்தை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் மூடியிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு பிரதிநிதிகள் ஆகியோரின் பாதுகாப்பு உரிய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்படும் வரையில் இந்த சோதனைச் சாவடியில் இருந்து தாங்கள் தற்காலிகமாக விலகியிருக்கப்போவதாக என்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கூறியிருந்தனர்.

தற்போது ஓமந்தை சோதனைச் சாவடி தொகுதியில் பொதுமக்களினதும், தமது பிரதிநிதிகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, புதன் பிற்பகல் 3 மணிக்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தை சோதனைச் சாவடிக்குத் திரும்பியுள்ளதாக அந்தக் குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கடமைக்குத் திரும்பியதை அடுத்து திறக்கப்பட்ட ஓமந்தை சோதனைச் சாவடி திங்களன்று சுமார் ஒரு மணித்தியாலம் மாத்திரமே திறந்திருந்ததாகவும், அரச ஊழியர்கள், பொதுமக்கள் என சுமார் 50 பேர்வரையில் மாத்திரமே வன்னிப்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் ஓமந்தை சோதனைச்சாவடிக்குச் சென்று தமது பிரயாணத்தைத் தொடரமுடியாமல் மீண்டும் வவுனியா நகருக்குத் திரும்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வன்னிப்பிரதேசத்திலிருந்து எவரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இன்று வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நாளை முதல் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பிரதேசத்திற்கான அத்தியாவசிய பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து என்பன வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »