09 ஜுலை, 2008
இலங்கையில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஜே வி பி அழைப்பு
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவிற்கு முகம் கொடுக்கும் நோக்கில் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களிற்கு 5000 ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும், தோட்டத்துறை ஊழியர்களுக்கு நாளாந்த சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும் என்பனபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி வியாழக்கிழமை நாடுதழுவிய ரீதியில் பொதுவேலை நிறுத்தப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்த ஏற்பாடுகள் குறித்து கருத்துவெளியிட்டுள்ள ஜே.வி.பி யின் தொழிற்சங்கங்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.டி.லால்காந்த, அரச துறையிலுள்ள சுமார் 90 சதவீதமான தொழிற்சங்கங்கள் நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுவேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள சம்மதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் இது ஒரு அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் மட்டுமே எனக்கூறியுள்ள லால்காந்த இந்தப் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்காது போனால் இவ்வாறான போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பின் 14வது சரத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தினைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரசு பொய்யான பிரச்சாரங்களிலும், எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் ஜே.வி.பி குற்றஞ்சாட்டியிருக்கிறது.
ஜே.வி.பியின் இந்த பொதுவேலை நிறுத்த அழைப்பிற்கு பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கம் இதனை முறியடிக்கும்படி தனது உறுப்பினர்களிற்கு இன்று அழைப்பு விடுத்திருக்கிறது.
செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு இலங்கை இராணுவத் தளபதியே காரணம் என்று குற்றச்சாட்டு
 |
|
இராணுவத் தளபதி லெப். ஜென். சரத் ஃபொன்சேகா |
இலங்கையில் செய்தியாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு அந்நாட்டின் மிக மூத்த இராணுவ அதிகாரியே காரணம் என்று முக்கிய எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான ஜோசப் மைக்கேல் பெரேரா, இவ்வாறு செய்தியாளர்கள் மீதான தாக்குதலை நடத்துவதற்காகவே ஒரு சிறப்பு குழு இராணுவத் தளபதி லெப்டிண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக கூறியுள்ளார்.
ஆனால் இராணுவப் பேச்சாளர் இதை மறுத்துள்ளார்.
இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு முழு யுத்தத்தை அரசு நடத்தி வரும் நிலையில், ஊடகச் சுதந்திரம் குறித்து மனித உரிமை அமைப்புகளின் அதிகரித்து வரும் கவலைகளுக்கு இடையே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி மீதான இந்தக் குற்றச்சாட்டை எதிர் கட்சி உறுப்பினரான ஜோசப் மைக்கேல் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவரது இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார இது குறித்த ஆதாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வசம் இருக்குமாயின் அவர் போலீஸிடம் அதை எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கடந்த வாரம், எந்த ஒரு நிறுவனத்தையும் சாராமல், ராணுவ விவகாரங்கள் குறித்து எழுதி வரும் ஒரு தனிப்பட்ட செய்தியாளரும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியும் ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தப்போது மறைந்திருந்தவர்களால் உருட்டுக் கட்டைகளினால் தாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் செய்தியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடக்கம் இதுவரை ஊடகத்துறையைச் சேர்ந்த 12 பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
போர் செய்திகளை வெளியிடுபவர்கள் துரோகிகள்
 |
|
இலங்கையின் வடக்கே கடும் போர் இடம்பெறுகிறது |
இதனிடையே நாட்டில் நடைபெற்று வரும் போர் தொடர்பான செய்திகளை, ஒருதலைப் பட்சமாகவும் பொறுப்பற்ற வகையிலும் வெளியிடுவதாக தாம் கருதுவதற்கு எதிராக தமது கடுமையான ஆட்சேபணைகளை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
போரின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்படும் இழப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக இராணுவம் வெளியிடும் தகவல்கள் குறித்த கேள்விகளை எழுப்புவது, இராணுவத்தில் வழங்கப்படும் பதவி உயர்வுகளை வினவுவது, இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டுவது போன்ற செய்திகளை வெளியிடுபவர்களை துரோகிகள் என்றும் விரோதிகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் முத்திரை குத்தியுள்ளது.
யாழிலிருந்து கொழும்பு செல்ல புதிய கட்டுப்பாடுகள்
 |
|
யாழ் பஸ் நிலையம் |
இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ் பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்குப் படையினரால் வழங்கப்படும் பிரயாண அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றம் காரணமாக பிரயாண அனுமதி பெறுவதற்கு சுமார் 2 வாரம் காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு செல்லும் ஒருவர் தனது பிரயாணத்திற்கான காரணத்தை ஆதாரபூர்வமாகத் தெளிவுபடுத்தும் அதேவேளை, அங்கு தங்கியிருக்கப் போகும் உறவினர் அல்லது நண்பர்கள், தெரிந்தவர்களின் முழு விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பதுடன், இந்த விபரங்கள் பொலிசாரின் ஊடாக அங்கு சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்குக் கிடைத்த பின்பே பிரயாண அனுமதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் பாக்கி
 |
|
கிரிக்கெட் வாரியத்திடம் பணம் இல்லை? |
சமீபத்தில் ஆசியக் கோப்பையில் வெற்றிவாகை சூடிய, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முந்தைய ஒப்பந்தம் பிப்ரவரிமாதத்தில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதாலும், அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றிருந்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும் இந்த பிரச்சினை குறித்து வியாழக்கிழமையன்று விவாதிக்கவுள்ளனர்.
07 ஜுலை, 2008
மன்னார் படுகை எண்ணெய் அகழ்வாய்வு: இலங்கை அரசுடன் இந்திய நிறுவனம் உடன்படிக்கை
மன்னாய் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை அகழ்வாய்வு செய்யும் அனுமதிக்கான பெட்ரோலிய வள உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கமும், கெயின் இந்தியா நிறுவனமும் திங்களன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் மூத்த அமைச்சர்மார் முன்னிலையில் கைச்சாத்திட்டுக்கொண்டன.
அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட வைபவமொன்றில் இலங்கை அரசின் சார்பில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியும், கெயின் இந்தியா நிறுவனத்தின் சார்பின் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிதி அலுவலருமான இந்திரஜித் பனர்ஜியும் கைச்சாத்திட்டனர்.
பின்னர் இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய இந்திரஜித் பனர்ஜி, இலங்கைக் கடற்பரப்பில் மன்னார் படுகை அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவில்லை என்பதால் அந்த வகையில் அது ஒரு முன்னிலை பெட்ரோலிய வலயத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
அத்துடன் ஆசியப் பிராந்தியத்தில் எண்ணெய் அகழ்வாய்வு வேலையில் அனுபவம்மிக்க தமது நிறுவனம், இங்கே வர்த்தகப்படுத்தக்கூடிய அளவிற்கு ஹைட்ரோகாபன் இருக்கிறதா என்பதனை உறுதிப்படுத்த பல மில்லியன் டாலர்கள்களை முதலீடுசெய்து, சிறந்த தொழில்நுட்பங்கள், மற்றும் தொழில்துறை நடைமுறைகளை பிரயோகிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது
இலங்கையின் வடக்கே கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த ஓமந்தை சோதனைச் சாவடி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திங்களன்று பிற்பகல் திறக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சோதனைச் சாவடியில் உள்ள தமது அலுவலகத்தை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் மூடியிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.
ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு பிரதிநிதிகள் ஆகியோரின் பாதுகாப்பு உரிய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்படும் வரையில் இந்த சோதனைச் சாவடியில் இருந்து தாங்கள் தற்காலிகமாக விலகியிருக்கப்போவதாக என்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கூறியிருந்தனர்.
தற்போது ஓமந்தை சோதனைச் சாவடி தொகுதியில் பொதுமக்களினதும், தமது பிரதிநிதிகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, புதன் பிற்பகல் 3 மணிக்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தை சோதனைச் சாவடிக்குத் திரும்பியுள்ளதாக அந்தக் குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.
சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கடமைக்குத் திரும்பியதை அடுத்து திறக்கப்பட்ட ஓமந்தை சோதனைச் சாவடி திங்களன்று சுமார் ஒரு மணித்தியாலம் மாத்திரமே திறந்திருந்ததாகவும், அரச ஊழியர்கள், பொதுமக்கள் என சுமார் 50 பேர்வரையில் மாத்திரமே வன்னிப்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் ஓமந்தை சோதனைச்சாவடிக்குச் சென்று தமது பிரயாணத்தைத் தொடரமுடியாமல் மீண்டும் வவுனியா நகருக்குத் திரும்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வன்னிப்பிரதேசத்திலிருந்து எவரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இன்று வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நாளை முதல் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பிரதேசத்திற்கான அத்தியாவசிய பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து என்பன வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.