புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 மே, 2008
வட மாகாணத்துக்கு சிறப்புச் செயற்பாட்டுக்குழு
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கென்று புதிய சிறப்பு செயற்பாட்டுக்குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் முன்வைத்த பிரேரணை ஒன்றுக்கு, நேற்று புதன்கிழமை கூடிய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்தக் குழுவில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.
அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால பரிந்துரைகளில் வட மாகாணத்திற்கு என்று ஒரு இடைக்கால சபை ஒன்றை நிறுவ வேண்டும் என்ற பரிந்துரைப்படி, நிறுவப்படக் கூடிய இடைக்கால நிர்வாக சபைக்கான ஒரு முன்னோடியாக இந்தக் குழு அமையும் என்று இந்தக்குழுவின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசைக்குத் தெரிவித்தார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல பணிகளை இந்தக்குழு நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார்.
இவை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
சம்பூர் அனல் மின் நிலையத்துக்கு அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எதிர்ப்பு
 |
|
இடம்பெயர்ந்த மக்கள் |
இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு அந்த பிரதேச குடியிருப்பாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
2006 ஆம் ஆண்டு அந்த பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இன்னமும் தங்கியிருக்கின்றார்கள்.
தாங்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், தமது குடியிருப்புப் பகுதிகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் இவர்கள், இந்தியா இதற்கு உதவுவது குறித்து இந்தியா மீது தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்கள்.
விசேட நிபுணர்களின் குழுவின் தீர்மானத்தின் படியே இந்த இடத்தை தாம் தெரிவு செய்ததாகக் கூறும் இலங்கை மின்சக்தி எரி பொருட்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த பகுதி, தற்போது சுற்றுலாப் பயணத்துறைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அது பொருத்தமற்றது என்கின்றார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
‘இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிட வேண்டும்’- பண்ருட்டி ராமச்சந்திரன்
 |
|
பண்ருட்டி ராமச்சந்திரன் |
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங் அவர்கள் கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயெ ராமச்சந்திரன் அவர்களின் இந்தக் கருத்தும் வந்துள்ளது.
இன்று இலங்கையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடக்கும் நிலையில், அங்கு ஒரு அரசாங்கமே மக்களின் மீது தாக்குதலை நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டும் ராமச்சந்திரன் அவர்கள், இந்த விடயத்தில் தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கூட பிரச்சினையின் முழுமையை உணர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக இல்லை என்று கூறியுள்ளார்.
இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஏப்ரல், 2008
வட இலங்கையில் கடுமையான மோதல்
 |
|
இரு தரப்பாலும் கடுமையான எறிகணை வீச்சுகள் நடத்தப்பட்டுள்ளன |
இலங்கையின் வடக்கே மன்னார், வெலிஓயா பகுதிகளில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மற்றும் எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றை இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
மன்னார் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் -18 எனப்படும் முக்கிய தளம் உட்பட்ட வேப்பங்குளம், கள்ளிக்குளம் பிரதேசம் முழுமையாக இராணுவத்தினரால் இன்று கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 40 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
இப்பகுதியில் இராணுவத்தினருக்கு உதவியாக எம்.ஐ தாக்குதல் உலங்கு வானூர்திகளும் விடுதலைப் புலிகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இதேவேளை, வெலிஓயா எனப்படும் மணலாறு பகுதியில் இன்று காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக இரு தரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர்.
இதன்போது, விடுதலைப் புலிகளினால் சிறிபுர பகுதிமீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் நெடுங்கேணி பகுதி மீது நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இளம் தாய் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
யுஎன்டிபி ஊழியர் கைத்துப்பாக்கியுடன் கைது
இதனிடையில் யுஎன்டிபி எனப்படும் ஐநாவின் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊழியர் எனக் கூறுப்படும் ஒருவர் இன்று மாலை வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் மைக்ரோ பிஸ்டலுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் கிளிநொச்சியில் இருந்து மட்டக்களப்பிற்குச் செல்லும் வழியில், ஈரப்பெரியகுளம் வீதிச்சோதனையில் இவரை சோதனையிட்ட பொலிசார் இவரிடமிருந்து இந்த கைத்துப்பாக்கியைக் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவரை வவுனியா பொலிசார் விசாரணை செய்து வருவதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
பிரபாகரன் திரைப்பட வழக்கை ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை
 |
|
பிரபாகரன் திரைப்படத்தின் இயக்குனர் |
பிரபாகரன் திரைப்படத்துக்கான தடை குறித்த வழக்கை சென்னை முதலாவது உரிமையியல் உதவி நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னதாக விசாரிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் படச் சுருள்களை ஜெமினி கலர் லாப் நிறுவனத்தில் இருந்து எடுத்துச் செல்லவும், அந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு தடை விதிக்கவும் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் சென்னை முதலாவது உரிமையியல் உதவி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஜூன் மாதம் 9 ஆம் திகதி விசாரிக்கப்படும் என்று முன்னர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதுவரை படச்சுருள்களை எடுத்துச் செல்லவும் அது தடை விதித்திருந்தது.
ஆனால், அந்த வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று அந்த திரைப்படத்தின் இயக்குனரான துஷார பீரிஸ் பதில் மனு தக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், வழக்கை இன்று ஏப்ரல் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கவிருந்தது. ஆனால், அதனை எதிர்த்து திருமாவளவன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து திருமாவளவனின் சார்பிலான வழக்கறிஞர் ஆர்வலனின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
நளினிக்கு முதிரா விடுதலை கோரி மனுத்தாக்கல்
 |
|
தனது கணவர் முருகனுடன் நளினி |
ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியான நளினியை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது.
வழமையாக ஆயுட்தண்டனைக் குற்றவாளிகள், 14 வருட சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் நளினி ஏற்கனவே 17 வருடங்களை சிறையில் கழித்த நிலையில், அவர் தற்போது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனக்கு முதிரா விடுதலை வழங்கப்பட வேண்டும் என்று 2005ஆம் ஆண்டு முதல் நளினி அரசாங்கத்தைக் கோரி வந்துள்ளார். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டு விட்டன. ஆனால், அவ்வாறு நிராகரித்தமை தவறு என்று கூறியே தற்போதைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவை குறித்து நளினியின் சார்பிலான வழக்கறிஞரான துரைசாமி அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஏப்ரல், 2008
திருகோணமலை பிரச்சாரக் கூட்டத்தில் ரணில்
 |
|
பிரச்சார மேடையில் ரணில் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் |
திருகோணமலை மாவட்டத்தில், இந்திய உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் அனல் மின்நிலையத்தை, சம்பூரில் அல்லாமல், ஏற்கனவே திட்டமிட்டபடி பவுல் பொயிண்டில் அமைக்க முயற்சி எடுக்கப்போவதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்திய அதிகாரிகளுடன் பேசி ஏற்கனவே திட்டமிட்டபடி அனல் மின்நிலையத்தை பவுல் பொயிண்டில் அமைப்போம் என்றும், சம்பூரையும் அதனை அண்டிய 23 கிராமங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த பதினேழாயிரம் மக்களையும் அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்வோம் என்றும் கூறினார்.
அத்தோடு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அனைத்து சமூகங்களும் ஏற்கக் கூடிய ஒரு தீர்வையே தாம் முன்வைப்போம் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் களம்
இலங்கையின் கிழக்கு மாகாண தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் தமது பிரச்சாரக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளன.
தமது கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான நோக்கம், கட்சியின் கொள்கை உட்பட தமது பலவிதமான கருத்துக்களையும் அந்த பிரச்சாரங்களின் போது அந்தந்தக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் முன்வைத்து வருகிறார்கள்.
இவை குறித்து எமது மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் குறித்த விசாரணைக்காக மூவர் கைது
 |
|
படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் |
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் இருவர் வேல்சில் கைது செய்யப்பட்டதாகவும் மூன்றாவது நபர் லண்டனில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
வெளிநாடுகளில் தீவிரவாதச் செயல்களை, ஏற்பாடுகளை செய்ய முற்பட்டது, தீவிரவாத செயல்களை தூண்டியது அல்லது தீவிரவாத செயல்களுக்காக தயார் செய்தது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு 2001 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 ஏப்ரல், 2008
மடு தேவாலயப் பகுதி சமாதான வலயமாக அறிவிக்கப்படுகின்ற உத்தரவாதம் கிடைத்த பின்னரே மடு மாதா திருச்சொரூபம் ஆலயத்துக்கு கொண்டுவரப்படும் என மன்னார் மறை மாவட்ட குருமார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு பகுதியை ராணுவம் சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றியதை அடுத்து, மடு மாதா தேவாலயத்திலிருந்து சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்ட மடுமாதாவின் திருச்சொருபத்தை மீண்டும் அங்கு கொண்டுவரவேண்டும் என்ற பிரச்சினை குறித்து ஆராய திங்களன்று மன்னார் மறை மாவட்ட குருக்கள் மன்னாரில் கூடினர்.
மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாக அறிவித்து, அங்கு இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வதற்கு அனுமதியளிக்க இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் எழுத்துமூல உத்தரவாதம் வழங்கிய பின்னரே மாதா சிலையை மீண்டும் மடுவுக்கு கொண்டுவருவது என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
படையினர் அனுமதிக்கும் பட்சத்தில் தற்போதைக்கு மூன்று குருமார்களை ஆலயத்திற்கு அனுப்பி அதனை மீண்டும் வழிபாட்டுக்குரிய ஒரு இடமாக ஒழுங்கு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை தமிழோசையிடம் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கையில் மழை, வெள்ளம், மண் சரிவுக்கு குறைந்தபட்சம் 7 பேர் பலி
 |
|
இரத்னபுரியில் மழை வெள்ளம் |
இலங்கையில் பல்வெறு பகுதிகளில் இன்று கடுமையான மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் இந்த அனர்த்தங்கள் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.
இரத்தினபுரி பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதுடன், அங்கு பல பகுதிகளில் அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, யட்டியாந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்து மகாசமுத்திர பிரந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த கடுமையான மழை பெய்வதாகவும், களுகங்கைப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், கரையோரத்தில் வாழும் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் இலங்கை வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீண்டும் வான்தாக்குதல்
 |
|
வான் தாக்குதல் |
இலங்கையின் வடக்கே வெலிஓயா எனப்படும் மணலாறு இராணுவ முன்னரங்க பகுதிகள் மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுகிழமை அதிகாலை விமான குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.
இந்தத் தாக்குதல் குறித்து தகவல் வெளியிட்ட இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள்,
ஞாயிற்றுகிழமை அதிகாலை 1.43 மணியளவில் விடுதலைப்புலிகளின் இரண்டு விமானங்கள் வெலிஓயா பகுதியில் உள்ள இராணுவ முன்னரங்குகள் மீது 3 குண்டுகளை போட்டதாகவும், அங்கு தரையில் இருந்த படையினர் அந்த விமானங்களை நோக்கித் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் கூறினார்.
விடுதலைப்புலிகளின் விமானங்களை ராடர் கருவிகளும் காட்டியதையடுத்து, விமானப்படையினர் விடுதலைப்புலிகளின் விமானங்களைத் தடுத்து தாக்கும் தமது விமானங்களைச் செலுத்தினார்கள் என்றும், எனினும் விடுதலைப்புலிகளின் விமானங்கள் முல்லைத்தீவு பகுதியை நோக்கித் தப்பிச் சென்று விட்டதாகவும், இந்த சம்பவத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மடு மாதா ஆலய நிர்வாகத்தை திரும்ப எடுப்பது குறித்து திங்கட்கிழமை ஆலோசனை – மன்னார் ஆயர்
 |
|
மடுமாதா தேவாலயம் |
மடுமாதா ஆலயத்தின் நிர்வாகத்தை ஏற்குமாறு இலங்கை இராணுவம் தங்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தப்போதிலும், இது குறித்து திங்கட்கிழமை நடைபெறவுள்ள குருமார்களின் ஆலோசனைக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார். அத்தோடு இராணுவத்தின் இணையத்தளம் கூறுவது போல தாங்கள் இன்னும் ஆலயத்தின் பொறுப்பை ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆலயத்தை பொறுப்பேற்பதும், மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு ஆலயத்தில் நிறுவுவது ஆகியவை இரண்டு வெவ்வேறு விடயங்கள் என்றும், திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆலயத்தை பொறுப்பேற்பது மட்டுமே ஆலோசிக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், ஆலய வளாகத்திற்குள் சீருடையில் ஆயுதம் தாங்கிய துருப்புகளின் நடமாட்டத்தை தாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும், ஆலயம் அமைந்திருக்கும் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவிக்க இராணுவம் முயற்சி எடுத்தால் அதற்கு தாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்றும் கூறினார்.
அனுராதபுரம் மற்றும் காலி ஆயர்களுடன் தாம் விடுதலைப் புலிகளை சந்தித்து மடுமாதா ஆலயத்தில் மீண்டும் மாதாவின் திருச்சொரூபத்தை நிறுவுவது தொடர்பாக பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் எந்த வழியாக எடுத்து வருவது என்பது இருதரப்பாரின் நிலைப்பாடு மற்றும் ஒத்துழைப்பை பொறுத்தே அமையும் என்றும் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.